சிறப்பு கட்டுரை: ஜனநாயகத்தின் புதைகுழி 'நீதிமன்ற அவமதிப்பு சட்டம்'

சவுக்கு சங்கர் - முதலும் அல்ல முடிவும் அல்ல!

சிறப்பு கட்டுரை: ஜனநாயகத்தின் புதைகுழி 'நீதிமன்ற அவமதிப்பு சட்டம்'

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு நீதிமன்ற அவமதிப்புக்காக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி ஊடகவியலாளரும், சவுக்கு யூடியூபருமான சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறைத் தண்டனையை செப்டம்பர் 15ஆம் நாளன்று அறிவித்தது. இது கருத்துரிமை பறிப்பு மட்டுமல்ல நீதிமன்றத்தின் பாசிச நடவடிக்கையுமாகும்.

தற்போது சவுக்கு சங்கரின் மீது பாய்ச்சப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியின் "முறைப்படுத்தல் சட்டம் 1773"லேயே (Regulation Act, 1773) ஒரு அம்சமாக கொண்டுவரப்பட்டிருந்தது. அதன் பிறகு தனியாகவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1926 கொண்டுவரப்பட்டது. இதை சில திருத்தங்களோடு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971ஆக இன்று அமலில் இருக்கிறது. அனைத்து அரசியல் உரிமைகளையும் பறிப்பதற்கும். பொது மக்கள் நீதிமன்றத்தின் ஒடுக்குமுறையினை, ஊழலை, நீதிமன்ற நடைமுறைகளைக் கேள்வி எழுப்புபவர்களின் வாயை மூட இந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை ஒடுக்குவதற்கு உருவாக்கிய நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை புதிய காலனிய இந்தியாவிலும் கருத்துரிமையைப் பறிப்பதற்கான கருவியாக தொடர்ந்து நீதிமன்றங்கள் பயன்படுத்தி வருகிறது. பிரசாந்த் பூஷன் வழக்கிற்குப் பிறகு மீண்டும் இந்த நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

யார் இந்த சவுக்கு சங்கர்? தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான தொலைப்பேசி உரையாடலை வெளியிட்டார் என குற்றம் சுமத்தி அவரை அரசு இடைநீக்கம் செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் விமர்சகர் என்ற முறையில் நீதித் துறையின் பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தும் வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டம், ஸ்ரீமதி படுகொலைக்கு எதிரான போராட்டம் போன்ற பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களின் மீதான அரசின் ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தியவர். ஆளும் வர்க்கத்தின் சார்புடையவர் என்றபோதும் இவரின் மீதே நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை வைத்து வாயை அடைத்து, சிறையிலடைத்திருக்கிறது. இதன் மூலம் முற்றிலுமாக ஜனநாயகத்துக்கு குழிபறித்திருக்கிறது.

சவுக்கு சங்கர் மீது ஏன் இந்த வழக்கு?

பாஜக ஐடி பிரிவைச் சார்ந்த மாரிதாசு விடுதலைப் பற்றி சவுக்கு சங்கர் விமர்சித்திருந்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு அன்று காலையில் கோயிலில் யாரை சந்தித்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த 2022 ஜூலை 22-ம் தேதி, `ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது!' என்று ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆதிக்க பார்ப்பன சாதியினருக்கு மட்டும் அதிகமான பதவிகள் ஒதுக்கப்படுவதை குறித்தும் விமர்சனம் வைத்திருந்தார். இட ஒதுக்கீட்டினை ஏற்க மறுத்து உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் நீதிபதிகளை நியமிக்கிறது, பார்ப்பனிய சாதிய மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது கொலீஜியம் என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுத்துக்கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு "யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து நீதித்துறைமீது அவதூறு பரப்பும் செயலையும், தனிநபர் தாக்குதல்களையும் செய்கிறார். கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவதூறுகளை ஏற்கமுடியாது. எனவே சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என்று சவுக்கு சங்கரை நேரில் ஆஜராக ஆணையிட்டது. அதன் பிறகு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இவ்வழக்கு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அன்று வழக்கு அழகர் கோயிலில் சந்தித்த பிரச்சினையில் தொடங்கிய விசயம் பிறகு கூடுதலாக சங்கர் மீது குற்றச்சாட்டு வனையப்பட்டது. "அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தை தங்கள் பரம்பரை சொத்தாக கருதுகிறார்கள்… ஒரு நீதிபதியும் நேர்மையில்லாதவர்கள்… பெண் ஓ.ஏ.க்களை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்… பாதுகாப்புக்காக இருக்கும் காவலர்கள்தான் கேஸ் செட்டிங்குக்கு பயன்படுத்துகிறார்கள்… பணம் இருப்பவர்களுக்குத்தான் நீதியை வழங்குகிறார்கள்..." என்று சங்கர் பேட்டி கொடுத்ததால் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றார்கள். அப்போது சவுக்கு சங்கர் "இவ்வழக்கை விசாரிக்கும் இந்நீதிமன்ற அமர்வு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. பதிலளிக்க கால அவகாசம் தேவை" எனக் கோரினார். மேலும் "இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரிக்க இயலாது... நீதித்துறையில் இட ஒதுக்கீடு என்பது முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். என்னுடைய கருத்துகளை தனியே பார்க்கும்போது பிரச்சினையை ஏற்படுத்துவதாகத் தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தை பார்த்தால் உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ என் நோக்கமல்ல... நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு" போன்ற தன் தரப்பு கருத்துகளை சவுக்கு சங்கர் தெரிவித்தார்.  மேலும், "என் மீது குற்றச்சாட்டாக புனையப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எனக்கு வழங்கப்பட வேண்டும்" என்று கேட்டதற்கு "அவையெல்லாம் பொதுத் தளத்திலேயே இருக்கிறது" என்று கூறியது நீதிமன்றம். பதில் மனு தாக்கல் செய்ய குறைந்தது 6 வார கால அவகாசம் வேண்டுமென சவுக்கு சங்கர் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தார். அப்போதும் கூட "இவ்வழக்கு விசாரணை குறித்து பொது வெளியில் விவாதிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என அமர்வு நீதிபதி கோரினார். ஆனால் "என்னால் அப்படி உத்தரவாதம் அளிக்க இயலாது" என சங்கர் பதில் அளித்தார். அதன் பிறகு இந்த வழக்கு செப். 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.

செப்டம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரால் நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் அனைத்தையும் சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து உடனடியாக நீக்க தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டனர்.

"ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு அல்லது அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ அல்லது அவற்றை மதிக்காமல், விசாரணை நடக்கும்போது குறுக்கீடு செய்து சாட்சிகளுக்கோ, இதர தொடர்புடைய நபர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடியதாகவோ அல்லது அவர் மீது தவறான எண்ணம் வரும் வகையில் நடந்து கொண்டால் அது அவமதிப்பு எனப்படும்" என்கிறது அவமதிப்பு குறித்து நீதிமன்ற அவமதிப்புச் சட்டம். இச்சட்டம் கடந்த 75 ஆண்டுகளாக விமர்சனத்துக்கு உள்ளாகியே வந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்திற்கும், மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் மட்டுமே நீதிமன்ற அவமதிப்புக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.

சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஏற்கக் கூடியதா?

நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் அவதூறு என்பதற்கான எந்த தெளிவான வரையறையும் இல்லை. அதனால்தான் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் அவமதிப்புச் சட்டத்தை "ஒரு தெளிவற்ற மற்றும் ஒருநிலையில்லாத அதிகார வரம்பைக் கொண்டிருப்பதும், ஒரு நிச்சயமற்ற எல்லைகளுடனும், பொது நலனைப் பொருட்படுத்தாமல், அறியாமலேயே சிவில் உரிமைகளை காலால் மிதிக்கப்படும் சட்டம்" என்று விமர்சனப்படுத்தினார்.

பொதுவாகவே புகார்தாரர் விசாரணை அதிகாரியாக இருக்கக் கூடாது என்பது சட்ட நியதி. விசாரணை அதிகாரி நீதிபதியாக தீர்ப்பு வழங்குவது கிடையாது. இந்த தெளிவில்லாத சட்டத்தில் புகார்தாரரான நீதிமன்றமே விசாரணை செய்வதும், நீதிமன்றமே நீதியை வழங்குவதும் என்ற மன்னராட்சி நடைமுறையாக இருக்கிறது. இயற்கை நீதிக்கு எதிரான நடைமுறையாக இருக்கிறது.

இச்சட்டத்தின் படி குற்றச்சாட்டை சுமத்தியவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்படவேண்டும் என்ற நியதியைக் கூட பின்பற்றவில்லை. போதுமான கால அவகாசமும், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக்கொடுக்க வேண்டியும் அதைக் கூட செய்யாமல் அவசர அவசரமாக இந்த வழக்கு விசாரணையை முடித்து தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.

சவுக்கு சங்கரே தனக்காக தானே வாதாடினார். பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்ஞ் நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ என் நோக்கமல்ல... நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் நோக்கம் இல்லை என்று சங்கர் கூறியதை கருத்திலேயே கொள்ளவில்லை.

6 மாத தண்டனை கொடுக்கும் போது மன்னிப்பு கோராததை ஒரு காரணமாக காட்டப்படுகிறது. அதைவிட நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அவர் அளித்த பேட்டியில் "எனக்கு குறைந்தபட்சம் 6 மாதம்தான் தண்டனை வழங்க முடியும். சிறைக்கு போய்வந்த பிறகு நான் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீதுதான் கவனம் செலுத்தப் போகிறேன்" என்று கூறியதை எடுத்துக்காட்டியே அதிகபட்ச தண்டனையை அளித்திருக்கிறார்கள். ஏன் ஒருவர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை கவனிக்கவோ கேள்வியோ எழுப்பக் கூடாது. அவர்கள் புனிதர்களா என்ற கேள்வி எழுகிறது. விசாரணையில் இருக்கும்போது அவரின் பேட்டியினை குற்றச்சாட்டு வனையும் போது வைக்காமல் அதற்குப் பதில் சொல்ல வாய்ப்பும் கொடுக்காமல் அதை தண்டனைக்கு காரணமாக காட்டுவது இயற்கை நியதிக்கு எதிரானதான தீர்ப்பு. நீதிபதிகள் பொதுவெளியில் பதியப்படும் செய்திகளை அவர்கள் தன் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானித்து கொடுக்கப்படும் தண்டனையை நீதியாக ஏற்கமுடியாதவை.

நீதிமன்றத்தின் மாண்பை தண்டனை கொடுத்தெல்லாம் காப்பாற்ற முடியாது. 1968 வாக்கில் நீதிமன்ற அவமதிப்பு குறித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆங்கிலேய நீதிபதி லார்டு டென்னிங் எம்.ஆர். சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தார். "நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பதற்கான வழிமுறை அவமதிப்புச் சட்டம் அல்ல" என்றார். அதேபோல்தான் பேசியதற்காகவே சவுக்கு சங்கருக்கு தண்டனை கொடுத்து நீதிமன்ற மாண்பினை காப்பாற்ற முடியாது. ஜனநாயகத்துக்காக போராடும் சாமானிய மக்களின் வாயை அடைத்து, சிறையிலடைப்பதால் நீதிமன்ற மாண்பமை காப்பாற்ற முடியாது.

நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக  நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள். அதுவே சாமான்ய மக்களின் வாயை மூட முயற்சித்தால் அது ஒரு நாள் வெடித்தே தீரும். அப்போது அதை எந்த அதிகாரத்தாலும் எதிர்கொள்ள முடியாது.

பிரிட்ஜஸ் எதிர் கலிபோர்னியா என்ற அமெரிக்க வழக்கில் நீதிபதி ஹ்யூகோ பிளாக் "நீதிபதிகளை விமர்சனத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் நீதித்துறையின் மரியாதையை வெல்ல முடியும் என்பது தவறான அனுமானம்ஞ் நீதிமன்ற அவமதிப்பு என்ற சாக்குப்போக்கில் அமெரிக்க பொதுக் கருத்தை மௌனமாக்க முடியாது. நீதிமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அமலாக்கப்படும் மௌனம், மரியாதையை அதிகரிப்பதற்குப் பதிலாக வெறுப்பு, சந்தேகம் மற்றும் அவமதிப்புக்கு வழிவகுக்கும்" என்று கூறினார்.

சங்கர் நீதித்துறை முழுவதும் ஊழல் மலிந்திருக்கிறது என்று சங்கர் கூறியிருந்தார். ஏற்கெனவே இதே கருத்தை பல நீதிபதிகளே கூறியுள்ளார்கள். உலகராஜ் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் "நீதித் துறையில் ஊழல் விதிவிலக்கல்ல. அரசுத் துறையில் உள்ள ஊழலைவிட அது மோசமானது. நீதித்துறையில் தற்போது உள்ள ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 இல், அப்போதைய இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பருச்சா, இந்தியாவில் உள்ள 20% நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று கூறினார்.

33% நீதித்துறை ஊழல் மலிந்துள்ளதாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சல்தான்ஹா கூறியுள்ளார்.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவராக இருந்தபோது, நீதிபதி கட்ஜு உச்ச நீதிமன்றத்தின் ஊழலைப் பற்றிப் பேசினார்.  இந்திய நீதித்துறை தனது ஊழலை மீண்டும் மீண்டும் தனது கார்ப்பெட்டின் கீழே புதைத்துவிடுகிறது என்று குற்றம் சாட்டினார். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழலுக்கு எதிராகப் பேசுவது பாசாங்குத் தனமானது. ஊழல் செய்த தனது சக நீதிபதிகளை அது தெரிந்தே பாதுகாக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

 

நீதிபதி செலமேஸ்வர் மற்றும் மூன்று நீதிபதிகள் பத்திரிகைக்குப் பேட்டி அளிக்கும் போது நீதிபதி செலமேஸ்வர் "ஊழல் இருக்கிறது... நீதிபதிகள் அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தப்படுகிறார்கள். நீதிபதிகள் அரசியலை தொடுவதில்லை என்று கூறுவது நேர்மையான பேச்சு அல்ல. மேலும், நான் கட்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. தற்போதைய அரசியல் நிகழ்வுகளை நீதிபதிகள் எவ்வளவு உணர்ச்சிவசப்படாமல் கையாள முடியும் என்பதுதான் கேள்வி....நேரடியான அழுத்தம் இல்லை, ஆனால் அழுத்தத்தை கொடுக்க நுட்பமான வழிகள் உள்ளன" என்று பகிரங்கமாகவே கூறினார்.

இப்படி பல நீதிபதிகளாலேயே நீதித்துறை ஊழல் படிந்தது என்று பேசப்பட்டிருக்கிறது. அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றமும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல என்று கூறியுள்ளார்.

பிரசாந்த் பூஷண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் யார், யார் ஊழல்வாதி என எழுதி சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில்தான் கொடுத்தார். அதன் விவரத்தை அவர் வெளியிடாமலேயே அவர் தண்டிக்கப்பட்டார். நீதித்துறையில் ஊழல் பற்றி நீதித்துறையிடம் குற்றச்சாட்டு கொடுத்தாலும் அதைக் குறித்து முழுவதும் விசாரிக்காமலேயே நீதிமன்ற அவமதிப்பிற்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

2011-ம் ஆண்டு ஊழல் குறித்து அப்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு நீதிபதி கிருஷ்ணய்யர் ஒரு திறந்த கடிதம் எழுதினார். அதில் "ஊழலைத் தண்டிக்கும் பெரும் அதிகாரங்களைக் கொண்ட புனிதமான கருவியான நீதித்துறையே ஊழல் நிறைந்தது. ஒரு ஊழல் நீதிபதி கூட பிடிபடவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை" என்று எழுதியிருந்தார்.

ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உள் அமைப்பு விசாரணை முறை நடைமுறையில் இருப்பதாக 2009 ஆம் ஆண்டு பிரசாந்த் பூஷண் மீதான அவமதிப்பு வழக்கில் நீதித்துறை கூறியது, ஆனால் இதுவரை இதன் கீழ் விசாரணை நடத்தி யாரையும் தண்டித்த வரலாறு இல்லை. அனைத்து துறைகளிலும் உள்ள உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கிற பிரதமர், ஜனாதிபதி உட்பட அனைவரையும் விசாரிக்க வழிகள் இருக்கிறது. ஆனால், நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதற்கு எந்த முகமையும் நடைமுறையில் இல்லை என்பதே உண்மை.

சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டு முறை மற்றும் சமூக நீதி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிமன்றங்களில் இல்லை கடைப்பிடிப்பதில்லை என்பதே. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்று அவர் இணையத்தில் எழுதியதையும் அவமதிப்பு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கொலீஜியம் முறைக்கு மாற்றாக மத்திய அரசு மசோதா கொண்டுவந்தது. ஆனால் அவையும் நடைமுறைக்கு வராமல் தூக்கி எறியப்பட்டுவிட்டது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, அவை சமூக நீதி அடிப்படையிலும் இல்லை என்பதை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், நீதிபதி சந்துரு போன்றவர்கள் விமர்சனம் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 75 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவிலிருந்து 6 நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்ற விமர்சனத்தை வாயை அடைத்து நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற முடியாது.

மார்கண்டேய கட்ஜு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, "நீங்கள் என் மேஜைக்கு அருகில் வந்து கட்டுகளைப் பறிக்காதவரை, உங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டேன். நீங்கள் வாதாடுங்கள்" என்று கூறினார். நீதிமன்றத்தின் நேரடி நடவடிக்கையைத் தடுக்காத வரையில் அது அவமதிப்பு குற்றமாகாது என்பதை அவர் கூறிய கருத்தாகும்.

நீதிமன்ற நடவடிக்கையை நேரடியாக இடையூறு செய்து தடுப்பதற்கான நடவடிக்கை, சட்ட ரீதியாக அமல்படுத்தும் நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாமல் தவிர்ப்பது ஆகியவை அல்லாமல் நீதிமன்றத்தைப் பற்றிப் பேசியதற்காக மட்டும் தண்டிப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகவே மாறும்.

முன்பு பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ICJ) "சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை" என்ற ("International Covenanat on Civil and Political Rights") ஐ.நா.வின் சர்வதேச பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டு இணைந்துள்ளதால் அதை மதித்து "சர்வதேச தரநிலைகளால் கருத்துச் சுதந்திரத்தின் சில கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்பட்டாலும், நீதித்துறையின் பங்கு, நீதிக்கான அணுகல் மற்றும் ஜனநாயகம் போன்ற விஷயங்களைப் பற்றிய விவாதம், நீதிமன்றங்கள் மீதான பொது கருத்து உட்பட பொதுமக்களின் உறுப்பினர்களால் குறிப்பாக பரந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கூறியது. மேலும் "மறுக்கும் போது இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் உரைந்துபோகும் விளைவை ஏற்படுத்தும்" என்று கூறியது. அந்த விழுமியங்களை சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நினைவு கூறவேண்டியுள்ளது.

சாமானிய மக்கள், போராடுபவர்கள், நீதிமன்றத்தின் ஊழல்களையும் நீதிமுறைமையினை மீறுவதையும், நீதிபதிகளின் நியமனங்களையும் கேள்விக் கேட்டதால் மட்டுமே நீதிமன்றத்தின் மாண்புகள் குலைத்துவிடுவதாக கூறுகிறார்கள். நீதிமன்ற மாண்புகள் வாயை அடைப்பதாலும், சிறையில் அடைப்பதாலும் காப்பாற்றப்படுவதில்லை. பிரிட்டன், கனடா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இப்பொழுதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்பதையே ஏற்கவில்லை. சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கிய முறைமையின் அடிப்படையில் பார்த்தாலும் சவுக்கு சங்கர் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியாது.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், சிலருக்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் பொருந்துவதே இல்லை. துக்ளக் குருமூர்த்தி பொது மேடையிலேயே "நீதிபதிகள் தகுதியின் அடிப்படையில் வரவில்லை. அடுத்தவர் காலை பிடித்தே வந்திருக்கிறார்கள்" என பேசிய போதும் அவர் மீது எந்த அவமதிப்பு நடந்ததாக நீதிமன்றங்கள் கருதவேயில்லை. சங்கி எச்.ராஜா "உயர்நீதிமன்றமாவது மயிராவது" என்று மிக மோசமாக பேசியபோதும் நீதிமன்றம் தனது மாண்புகளை இழந்துவிடவில்லை. இதே நீதிமன்றம் சவுக்கு சங்கர் வழக்கில் "கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவதூறுகளை ஏற்கமுடியாது" என்று கூறியது.

நீதிமன்றங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்ற அதிகார அமைப்பு முறையும், புகார்தாரரான நீதிபதியே நீதிபதியாக தண்டனை கொடுக்கும் இயற்கை நியதிக்கு அப்பாற்பட்ட அதன் விசாரணை அதிகாரமும் பாசிசத்துக்குச் சேவை செய்யும் வகையில் இருப்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

அடிப்படை அரசியல் உரிமையை கூட பறிக்கும் காலனிய நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்

1951ஆம் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(2)ன் படி நீதிமன்றத்தின் மீது விமர்சனம் செய்வதை தடுப்பது நியாயமான கட்டுப்பாடு என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்திற்கு அடிப்படை உரிமை பகுதியில் கொண்டுவந்து அதை பலப்படுத்தியும் விட்டார்கள். அடிப்படை உரிமைகளுக்கும் மேலான உரிமையாக அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 129 படி நீதிமன்ற அவமதிப்பை உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் பிரிவு 215ன் படி உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரிக்கும். இதையும் எளிதாக திருத்த முடியாத பகுதியான 7வது அட்டவணையில் 1வது பட்டியலில் 77வது இனமாக சேர்க்கப்பட்டு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட சட்டமாகவும் இருக்கிறது. இந்த அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பே நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை பறிக்கும், பாசிசத்தை செயல்படுத்தும் மன்றங்களாக மாறுவதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் சர்வாதிகார மன்றங்களாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதே எல்லோருடைய விமர்சனமாகவும் இருக்கிறது.

தொடக்கத்திலேயே நீதிமன்ற அவமதிப்பு சட்டம் சம்பந்தமாக அரசியலமைப்பு நிர்ணய சபையில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அம்பேத்கர் இந்த அரசியலமைப்பு பிரிவு தன்னிச்சையாக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை விசாரிக்கலாம் என்பதால் அது அவசியமாகிறது என்று நியாயப்படுத்தினார். பிறகு அம்பேத்கர் இந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் குறித்து கூறுகையில் "நடைமுறைப்படுத்தும் போது, தலைமை நீதிபதியிடம் நான் அவரது தீர்ப்புக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், ஆனால் நான் அதை மதிக்கத் தேவையில்லை" என்றார்.

பெரியார் மீதான அவமதிப்புச் சட்டம் மிகவும் பேசப்பட்ட வழக்கு. 1956-ஆம் ஆண்டு வாக்கில் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஆர்.எஸ்.மலையப்பன் அரசாங்கத்திற்காக ஒருவரின் நிலத்தை நில எடுப்புச் செய்தது தொடர்பாக வழக்கில் நீதிபதிகள் நில எடுப்புச் செய்த ஆட்சியரை நாட்டில் எங்கும் உயர் பதவிகளில் இருக்க லாயக்கற்றவர் என்றும் நில உரிமையாளர் தொடுத்த வழக்கில் கூறியிருந்தார்கள். இதை எதிர்த்து 1956ஆம் ஆண்டு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் "உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிப் பொது மக்கள் கருத்து தெரிவிப்பது கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளானதால் ஆசாபாசங்களுக்கும் சமுதாய உணர்ச்சிகளுக்கும் தவறுகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். இவர்களை நியமிக்கின்ற இந்தியத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய முதலமைச்சரையும்  கண்டிக்கவும், கொடும்பாவி கட்டிக் கொளுத்தவும் இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாக கருதப்படுகின்ற தேசியக்கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும் ஜனநாயகச் சமூகத்தில் உரிமை இருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை வேண்டாமா?" என்று பேசினார்.

"தமிழர், தமிழர் கலாச்சாரம், தமிழர் உரிமை, தமிழர் உத்தியோகம் ஆகியன தொடர்பான வழக்குகளில் இனி ஆரிய நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது" என்று பேசிய குற்றத்திற்காக பெரியார் மீதும் வெளியீட்டாளர் என்ற முறையில் மணியம்மையார் மீதும் நீதிமன்ற அவமதிப்பு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கு நடந்த விசாரணையில் பெரியார் நேரடியாக படித்து விளக்க அறிக்கையை அளித்தார். இவ்வழக்கில் பெரியாருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மணியம்மையார் எச்சரித்து விடப்பட்டார். இந்த நீதிமன்றத்தின் மீதான பெரியார் பேசிய கருத்துகள் இன்றும் விவாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

இந்த அவமதிப்புச் சட்டத்தை வைத்துக்கொண்டு தொடர்ந்து நீதிமன்றங்கள் கருத்துரிமையை பறித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல கருத்துகளைத் தெரிவிப்பதே சிறைத் தண்டனை வழங்கும் முறையை செயல்படுத்துகிறது. கடந்த 75 ஆண்டு கால அதன் வரலாறு நீதிமன்றங்களும் ஒடுக்குமுறையின் ஒரு கருவிதான். இந்த பிற்போக்கான அரசைக் காப்பாற்றும் அரசின் அங்கம்தான் என்பதை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதைக் கூட சொல்வதற்கு நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை.

1967ல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் காரல் மார்க்ஸ் சொன்னதாக ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் "இது வர்க்கரீதியான சமூகம். அரசாங்கத்தின் எல்லா பிரிவுகளுமே சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனவே தவிர, சுரண்டப்படும் வர்க்கத்திற்கு ஆதரவாக இல்லை. நீதித் துறையும் இதற்கு விலக்கல்ல என்கிறார் காரல் மார்க்ஸ்" என்று அரசியல் ரீதியாக நீதிபதிகளின் வர்க்கச் சார்பை பற்றிப் பேசியதற்கே கேரள உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துத் தண்டித்தது. உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் அபராதம் குறைக்கப்பட்டதே தவிர தண்டனையை நீக்கவில்லை.

ஆனால் இதே உயர்நீதிமன்றங்கள்தான் தொடர்ந்து தங்களின் வர்க்க சார்பை உலகறிய செய்துகொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் கீழ் வெண்மணியில் 44 பேர் குடிசையில் வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் "இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதார்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றைச் சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதார்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்துக்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது!" என்று கூறி விடுதலை செய்தது வர்க்கச் சார்பான கருத்துதானே.

நீதிமன்றத்தின் அவமதிப்புச் சட்டத்தைக் கொண்டு தண்டித்த வரலாறுகள் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதையே நிரூபித்திருக்கிறது. "அற்பமான மனு ஒன்றின் மீது உச்ச நீதிமன்றம் தேவையில்லாத அவசரம் காட்டுகிறது" என்று கடந்த 2002ஆம் ஆண்டு அருந்ததி ராய் கூறியதற்கு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டித்தது.

வி.கே.சிங் இந்திய இராணுவ தலைமைத் தளபதியாக பணியாற்றிய போது தனது பிறந்த நாளை தவறாக குறிப்பிடப்பட்டுவிட்டதை திருத்தச் சொல்லி அவர் வழக்குத் தொடுத்தார். அதற்கு ஆதாரமாக பள்ளிச் சான்றிதழையும் கொடுத்தார். இராணுவ நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை செய்தபோது அந்நீதிமன்றமும் பள்ளிச்சான்றை ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் அதே ஆண்டு டில்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் வயதை பள்ளிச் சான்றிதழின் அடிப்படையில் சிறார் என முடிவு செய்து 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கியது. "அதே பள்ளிச் சான்றிதழை என் வழக்கில் ஏன் ஏற்கவில்லை என்பது முரண்பாடாக உள்ளது" என வி.கே.சிங் பொதுவெளியில் தெரிவித்ததற்கே அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு முன் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தபோது இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் விமர்சனங்கள் எழுந்தது. அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு விலை உயர்ந்த பைக் மீது அமர்ந்திருப்பது போன்ற படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். இரண்டாவது பதிவாக கடந்த ஆறு ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலையால் ஜனநாயகம் நெரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக கடைசியாக இருந்த நால்வரே காரணம் என டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். 02.08.2020ல் பாஜக ஆட்சியின் பாசிச நடவடிக்கைக்கு நீதிமன்றம் துணை போயிருப்பதையும், பல்வேறு நீதிமன்ற ஊழல்களையும் பட்டியலிட்டு ஒரு உறுதிமொழி ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அரசியல் ரீதியான கருத்துக்கே அப்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஒரு ரூபாய் அபராதம் தண்டனையாக வழங்கி முடித்து வைத்தது. இவ்வழக்கின் தண்டனை மீது சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ICJ) "மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்திற்கு எதிரானது, ஏனெனில் இது பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தின் பொதுவான பாதுகாப்பைக் கட்டுப்படுத்துகிறது" என்று விமர்சித்தது.

நீதிமன்ற நேரடி விசாரணையை எந்த வகையிலும் தடுக்காத இந்த சிறு சிறு விமர்சனங்களைக் கூட நீதிமன்ற அவமதிப்பின் கீழ் கொண்டுவருகிறது. அவர்களை கடுமையாக ஒடுக்குகிறது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கிறது. ஜனநாயக விழுமியங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கிறது.

பொதுமக்களை மட்டுமல்ல, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் பற்றி பொதுவெளியில் பேசக் கூடாது என்றும், அதன் ஊழல்களைப் பற்றி யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்றும் அப்படி மீறி கருத்துச் சொல்பவர்களை தொழில் தடை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தையே பறிக்கும் மிகவும் கொடிய சட்டமாகவும் இச்சட்டத்தை நீதிமன்றம் பயன்படுத்துகிறது.

வழக்கறிஞர்களின் பங்கு பற்றிய ஐக்கிய நாடுகளின் அடிப்படைக் கோட்பாடுகளின் கொள்கை விதி 23 க்கு (Principle 23 of The United Nations’ Basic Principles on the Role of Lawyers) முரணாக இது உள்ளது, இது வழக்கறிஞர்கள் "சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் மனிதனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது தொடர்பான விஷயங்களில் பொது விவாதத்தில் பங்கேற்க உரிமை உண்டு" என்று சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (ICJ) கூறியதற்கு எதிரானதாக இருக்கிறது.

வழக்கறிஞர்கள் மட்டுமல்ல நீதிபதிகளைக் கூட இச்சட்டம் விட்டுவைக்கவில்லை. நீதிபதி சி.எஸ்.கர்ணன், 20 நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சீலிடப்பட்ட உறையில் வைத்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர் எந்த நீதிபதி மீதும் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை, இருப்பினும் 2017 இல் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி கர்ணன் அவரது கருத்தை பொது வெளியில் பகிர்ந்துகொள்வதற்குக் கூட அனுமதிக்கப்படவேயில்லை.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தல், பாலியல் குற்றச்சாட்டு என பல குற்றச்சாட்டுகள் சமீப காலமாக பரவலாக விவாதமாக மாறிவருகிறது. எல்லாவற்றையும் கேள்வி கேட்பவர்கள் மீதும் தொடர்ச்சியான அடக்குமுறையை சட்டரீதியாகவே அரங்கேற்றுகிறது. அதற்கு அவமதிப்பு சட்டமும் ஒரு கருவியாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை என்று கூறுகிற நீதித்துறையும் பாசிச மயமாக்கப்படுகிறது

உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், கோயில் இருந்தது என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை, எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. ராமர் அங்குதான் பிறந்தார் என்ற அவர்களின் நம்பிக்கையை மட்டுமே வைத்து அந்த இடத்தை ராமஜென்ம பூமி கமிட்டியிடம் கோயில் கட்ட ஒப்படைத்தனர். அதோடு, பாபர் மசூதியை அத்துமீறி சென்று இடித்தது மிகப்பெரிய குற்றச்செயல் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டு, இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை இது முன்கூட்டியே தீட்டப்பட்ட சதித்திட்டம் இல்லை, அவர்களின் நோக்கம் இடிப்பதும் அல்ல என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுதலையும் செய்தது.

 

1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது இனி யாரும் உரிமை கோர முடியாது என்று மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கியது. அவர்கள் வழங்கிய தீர்ப்பையே செல்லாக்காசாக்கி விட்டு உச்ச நீதிமன்றம் தற்போது கியான் வாபி மசூதி வழக்கில் மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என்று சங்கிகள் வழக்குத் தொடுத்ததை எதிர்த்து அதை  விசாரிப்பதற்கு எதிரான தடையைக் கோரிய போது, தடை விதிக்க மறுத்துவிட்டது. அது தற்போது பாபர் மசூதி வழக்கு போல் கீழமை நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்து மத பிரச்சினையை கிளறுவதற்கு வழி செய்திருக்கிறது. இதன் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும் வரலாற்றைப் பின்னோக்கி தள்ள முடியாது. ஆனால் வரலாற்றில் நடந்த வன்முறைக்கு பழி தீர்ப்பதற்கான நடவடிக்கைக்கு நீதிமன்றமே வழிவகுத்திருக்கிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற மன்னராட்சி வழிமுறைக்கு பாசிச இந்துத்துவ அரசியலுக்கு நீதிமன்றம் துணை போயிருக்கிறது.

ஏற்கெனவே, பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குரு"குற்றம் மிகப் பெரியது, கொடியது என்பதால் முழு நாடுமே இதனால் அதிர்ந்துள்ளது என்பதால் "collective conscience of the society" - ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை அப்சல் குருவிற்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் திருப்திப்படுத்த முடியும். அந்த உச்சக்கட்ட தண்டனை மரணதண்டனையாக இருக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்டம் உட்பட அனைத்துச் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டு மனசாட்சி என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கி அப்சல் குருவை தூக்கில் தொங்கவிட்டது. தொங்கியது அப்சல் குரு மட்டுமல்ல இந்திய நீதிமன்றத்தின் மாண்புகளும்தான்.

இன்னொரு விசித்திர வழக்கில் "நாங்கள் இந்த வழக்கில் இன்று தலையிடாவிட்டால், அழிவுப் பாதையின் மேல் நடந்திருப்போம்'' என்று கூறி உடனடியாக அவசர வழக்காக விசாரித்து மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அர்ணாப் கோஸ்வாமிக்கு பிணை வழங்கியது. அவரின் கைதால் தனிமனித சுதந்திரம் பறிபோய் விட்டதாகப் பதறியது உச்சநீதிமன்றம். 2002இல் நிகழ்ந்த குஜராத் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கில் முழு விசாரணை முடிந்து குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 14 பேருக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிணை கொடுத்தது. இதற்கு நேர் எதிராக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகை ஆசிரியர், பேராசிரியர்கள், போராடுபவர்கள் மீது பாய்ச்சப்பட்ட ஊபா வழக்கை விசாரணை கூட செய்யாமலும், பிணையும் வழங்காமலும் பல வருடம் சிறையிலேயே வைத்திருக்கிறது. இயற்கை வளங்கள் சூறையாட பழங்குடிகளை வெளியேற்றி ஒடுக்குவதை எதிர்த்துப் போராடிய வயதான ஸ்டேன் ஸ்வாமிக்கு கூட பிணை மறுக்கப்பட்டு சிறையிலேயே அவரது வாழ்க்கை முடித்துவைக்கப்பட்டது. பிணை என்பது விதி, பிணை மறுப்பு என்பது விதிவிலக்கு என்ற விதிகள் எல்லாம் மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு கிடையாது என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் நீதியாக இருக்கிறது.

பில்கிஸ் பானு வழக்கில் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கதறியபோது, இந்த குற்றத்தை செய்தவரும், ஊழல் மலிந்தவருமான மருத்துவரும் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்று பொய் சான்று வழங்கினார். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. உண்மையை கொண்டுவர போராடியவர்களின் குரல்வளையை நசுக்கியது. ஆனால் நீண்ட மக்கள் போராட்டத்திற்குப் பிறகு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டது. தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் பாஜக அரசாங்கம் அவர்களை குறைந்த காலத்தில் அண்மையில் விடுதலை செய்தது. இதற்கும் எல்லா அரசு உறுப்புகளும் துணை போயின.

உலகத்தின் எந்த வரலாற்றிலும் அறியாத ஒரு தீர்ப்பை அறிய நேர்ந்தால் இனி எவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடவே கூடாது என்று குலைநடுங்க வைக்கும் ஒரு தீர்ப்பு குஜராத் கலவர வழக்கில் கொடுக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இன்றைய பிரதமருமான அன்றைய முதல்வருமான மோடி உட்பட 64 பேர் மீதும் குற்றச்சாட்டு கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி அவர்கள் வழக்குத் தொடுத்தார். குற்றவாளிகளை உச்சநீதிமன்றம் எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறியதோடு புகார் செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியது. பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரி உட்பட பல பேரை குற்றவாளிகளாக மாற்றி அவர்களை சிறையிலடைத்தது. தன் கணவர் கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டுப் போராடியவரையே பாசிச கரம் கொண்டு நீதிமன்றமே ஒடுக்கியுள்ளது.

அதே போல் ஸ்ரீமதி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் மீடியாக்களில் கருத்துகளை பேசுபவது மீடியா டிரையல் (மீடியா விசாரணை) நடத்துவதாக கருத முடியும். இது போலீஸ் விசாரணையில் குறுக்கிடுவதாகும் என்று கூறி வழக்கறிஞர்கள் உட்பட மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியது. பொதுவெளியில் போலீஸ் மீதும் அரசு மீதும் அதன் செயல்பாடுகளை கேள்விகளை எழுப்பினால் கூட அவர்கள் மீது ஒடுக்குமுறை ஏவுவதற்கு நீதிமன்றத்திற்கு வானளாவ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பின் புகார் தாரரையே குற்றவாளிகளாக்கவே இப்பொழுதெல்லாம் முயற்சிக்கிறது. அதுவும் விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ள நிலையில், புகார்தாரருக்கு விசாரணையின் முழு விவரத்தை அளித்து அவரது தரப்பு வாதத்தை கேட்காமலேயே தீர்ப்புகளை எழுதுகிறது. இயற்கை நீதி முறைமையெல்லாம் தண்ணீரில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது.

 

இப்படி தொடர்ந்து பல வழக்குகளின் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் பாசிச ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு அரசு நிறுவனமாக மாறிக் கொண்டிருக்கிறது.

124ஏ, ஊபா போன்ற பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற பல்வேறு பாசிச சட்டங்களை எதிர்த்தும் மாநில உரிமைகளைப் பறிக்கின்ற, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தொடுத்த வழக்குகள் எல்லாம் நிலுவையிலேயே இருக்கிறது. இதன் மூலம் சட்டத்துக்குப் புறம்பான அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற ஆட்சி அமைப்பு முறை நீடிப்பதற்கு நீதிமன்றங்கள் துணை போகின்றன.

தனியார்மயத்துக்கு ஆதரவான தீர்ப்புகள்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேதாந்தா என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட், ஒரிசாவில் அலுமினிய ஆலை தொடங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், "அழிக்கப்படும் காடுகளுக்கு ஏற்ற சந்தை விலையைத் தீர்மானிக்கலாம்'' எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போஸ்கோ தொடங்கவுள்ள இரும்புச் சுரங்கம் மற்றும் உருக்காலையால் ஒரிசாவின் பாரதீப் பகுதியிலிருந்து துரத்தப்படும் பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்க 73.5 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்பது இரண்டாவது ஆலோசனை.

கல்வியை வியாபாரம் செய்வது அடிப்படை உரிமை என்று டி.எம்.பாய் பவுண்டேசன் (T.M.Pai Foundation) வழக்கில் 13 நீதிபதிகளின் அமர்வு கல்வியில் தனியார்மயத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது. ஆனால் கல்வியை கட்டாயமாக வழங்குவது அடிப்படை உரிமையாக நிலைநாட்டவில்லை.

"தனியார்மயம் தாராளமயம் என்பது அரசின் பொருளாதாரக் கொள்கை; அதில் நாங்கள் தலையிட முடியாது'' எனக் கூறி, தனியார்மயத்தின் அத்துணை மோசடிகளையும் இந்திய நீதிமன்றங்கள் நியாயப்படுத்தின.

தனியார் மயத்துக்கு ஆதரவான தீர்ப்புகளும், கார்ப்பரேட்டுகளின் வரி ஏய்ப்பு, மோசடி செய்தல் போன்ற வழக்குகளில் அவர்கள் கட்டவேண்டிய பல்லாயிரம் கோடி பணத்தை தள்ளுபடி செய்து சில நூறு கோடிகளை மட்டும் அபராதம் என்று சொல்லி கார்ப்பரேட்டுகளின் செல்வக் குவிப்புக்கும் வழி செய்துகொடுக்கிறது. இதுவே ஊழலுக்கும் வழிவகுக்கிறது.

தனியார் மயத்திற்குப் பிறகு அரசின் எல்லா உறுப்புகளிலும் ஊழலின் பரிமாணம் மிகப் பெரிய அளவிற்கு மாறியிருக்கிறது. ஊழலின் மூலமே இந்த பாராளுமன்றத்தையும், அரசையும் முதலாளித்துவ வர்க்கம் கட்டுப்படுத்துகிறது என்றார் லெனின். தனியார் மயத்தால் மிகப் பெரிய கார்ப்பரேட்டுகள் ஆக்டோபஸ் போல் வளர்ந்து நிற்கிறது. அது தன்னை ஊழலின் மூலமே பாதுகாத்துக் கொள்கிறது.

இன்று இந்துத்துவா மோடி ஆட்சியின் பிடியிலும், ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் பிடியில் இந்த அரசு இருக்கிறது. அதன் கொள்கையான தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் ஆதரித்து நீதிமன்றங்கள் தீர்ப்புகளை எவ்வாறு திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. நீதிமன்றங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக இயங்கும் அமைப்பு அல்ல என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தீபக் குப்தா தெளிவாகவே கூறினார். "1975ஆம் ஆண்டு எமர்ஜன்சி ஆட்சியில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு அரசின் பிடியில் இருந்தது. அதில் நீதிபதி கண்ணா மட்டுமே அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார்" என்று வெளிப்படையாக கூறினார். இதோடு அவர் "அரசு, நீதித்துறை, ராணுவத்தை விமர்சிப்பதை தேசத் துரோகமாகக் கருதக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை, அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால் நமது நாடு சர்வாதிகார நாடாகிவிடும். ஜனநாயக நாடாக இருக்க முடியாது" என்று கூறினார்.

பொருளாதாரத்தை மையப்படுத்தலும், அரசியல் அதிகார மையப்படுத்தலும் அது பாசிசமாக பலப்படுத்துவதிலும் அரசோடு சேர்ந்து நீதிமன்றங்களும் பங்காற்றுகிறது. அதன் ஒரு பகுதியாகவே சவுக்கு சங்கர் மீதான தண்டனையையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு சட்டங்கள் நடைமுறைகள் எல்லாம் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் தூக்கி எறியப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில், அதை இந்தியாவைப் போன்ற ஒடுக்கப்படுகிற சுரண்டப்படுகிற பிற்போக்கான நாடுகளில் இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுரண்டலுக்கு உகந்ததாக இது போன்ற மக்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்கள் ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்படுகிறது.

நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வானத்திலிருந்து வந்த அரசியலுக்கும், மக்களுக்கும் அப்பாற்பட்ட புனிதர்களாக கருதி கொண்டுள்ளனர். ஆனால் அது ஒரு மாயையே. நீதிமன்றம் பாசிச மயமாகி வரும் சூழலில், நீதிமன்றத்தை கேள்வி கேட்கக் கூடாது என்று கூறுவது பாசிசத்திற்குச் சேவை செய்வதாகவே மாறும். முன் எப்போதையும் விட நீதிமன்றத்தின் அநீதியான பாசிச தீர்ப்புகளையும் ஊழல்களையும், வானளாவ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நீதிபதிகளின் நியமனத்தில் மக்களின் பங்கே இல்லாத முறைகளையும் கூடுதலாக கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

அனைத்து உரிமைகளையும் நீதிமன்றத்தினை நாடி தீர்க்க முடியும் என்ற மக்களின் நம்பிக்கை வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமை நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற மாயை பல்லாண்டுகளாக இந்த அரசுகள், கட்சிகள் விதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சட்ட ரீதியான போராட்டம் என்பது மக்களுக்கான சட்டத்தையும் உருவாக்கும் போராட்டத்தையும் சேர்த்தே சொல்கிறோம். அச்சட்டங்களை நீதிமன்றங்கள் உருவாக்க முடியாது. அவை மக்கள் மன்றங்களே உருவாக்கும். உண்மையில் நீதிமன்றமும் இந்துத்துவ அரசியலை பாசிச அரசியல், பொருளாதார கொள்கைக்குச் சேவை செய்து வருகின்றன. அவை மார்க்ஸ் கூறுவது போல அரசின் ஒடுக்குமுறை கருவி மட்டுமே.

அரசுகளின் ஆட்சியாளர்களின் பாசிச நடவடிக்கைகளை மக்கள் போராட்டத்தின் மூலமே வீழ்த்த முடியும். நீதிமன்றங்கள் கூட கூட்டு மனசாட்சி, பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்றெல்லாம் கூறித்தான் தீர்ப்புகளையே எழுதுகிறது. அந்த பெரும்பான்மை உழைக்கும் மக்களை நாம் திரட்டுவதில்தான் இந்த சர்வாதிகாரம் மிக்க நீதிமன்றத்தின் மனசாட்சிகளை நாம் உலுக்க முடியும். நாம் கவுரவமான அடிப்படை உரிமைகளை எல்லாம் பெற்று வாழ்வதற்கு வழிவகுக்க முடியும். அதற்கு ஆளும் வர்க்கம் ஜனநாயகத்தின் மீது தொடுக்கும் தாக்குதல்களை எல்லாம் உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து போராடுவதின் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும். புதிய காலனிய நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை நீக்கப் போராடுவதும், அடிப்படை உரிமைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் 1951ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19(2)ம், பிரிவு 129ம், பிரிவு 215ம் நீக்குவதற்கு போராடுவது அதன் தொடக்கமாகும்.

நீதிபதிகளை இரகசிய முறையில் நியமிக்கும் அதிகாரத்தை நீக்கப் போராட வேண்டும். மாற்றாக பல்வேறு ஜனநாயக அமைப்புகள், வர்க்க அமைப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழு நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்சம் மக்களின் அனைத்து பிரிவு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களாக இருக்கும். அதே போல் நீதிபதிகளின் ஊழலையும், முறைமீறல்களையும், விசாரிக்க  அந்த  குழுவிற்கு அதிகாரம் தரப்பட  வேண்டும்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அமைப்புகள்தான் குறைந்தபட்சம் மக்கள் நலன் சார்ந்ததாகவும், மக்களுக்கு எதிரானதாக மாறும்போது அதை மாற்றியமைக்கவும் வாய்ப்பிருக்கும். தவறு செய்தவர்களை திருப்பி அழைக்கும் உரிமையும் அக் குழுவிடம் இருக்க வேண்டும்.  நீதிபதிகளின் பதவிகளை பறிக்கும் நடைமுறையில் சாத்தியமற்ற தற்போதுள்ள  முறையை ஒழித்து (இதுவரை இந்த முறையில் எந்த தவறு செய்த நீதிபதியின் பதவியையும் பறிக்கப்படவில்லை) நடைமுறைக்கு உகந்த ஒரு ஜனநாயக முறையை உருவாக்காமல் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்புகளை ஜனநாயகப்படுத்தவே முடியாது. சோவியத் வடிவிலான மக்கள் கமிட்டிகள்தான் இப்போதுள்ள அனைத்து அதிகார உறுப்புகளையும் ஜனநாயகப் படுத்தும். அதை நோக்கியே நமது இலக்குகள் இருக்க வேண்டும்.  அதை அடைய தொடக்கமாக ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ நிதிமூலதன ஆதிக்கத்தையும், இந்த கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் பிற்போக்கான பாசிச அரசையும் வீழ்த்த வேண்டும். அதற்கு அனைவரையும் ஓரணியில் அணிதிரட்டுவோம்.                                    

                                                                               

சமரன்

(செப்டம்பர் – அக்டோபர்  2022 மாத இதழிலிருந்து)