வாராக் கடன்களில் 81.30 சதவீதம் வசூலிக்கப்படவேயில்லை!

செந்தளம் செய்திப்பிரிவு

வாராக் கடன்களில் 81.30 சதவீதம் வசூலிக்கப்படவேயில்லை!

Write-off செய்யப்பட்ட வாராக் கடன்களில் 81.30 சதவீதம் வசூலிக்கப்படவேயில்லை!

கொடுக்கப்பட்ட கடனிற்கு 90 நாள்களாக அசலோ அல்லது வட்டியோ பெறப்படவில்லையெனில் அதை வாராக் கடனாக/பயனளிக்காத கடனாக(Non-Performing Assets) அறிவித்துவிடுவர்.

இவ்வாறு ஒரு வங்கியில் வாராக் கடன் அதிகரித்துக் கொண்டே போகும்போது, வங்கியின் நடப்பு கணக்கிலிருந்து நீக்கப்பட்டு நஷ்டக் கணக்கில் எழுதி வைத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

Write-off செய்வதும், கடனைத் தள்ளுபடி செய்வதும் ஒன்றல்ல என்ற பச்சைப் பொய்யை திருப்பத் திருப்பச் சொன்னாலும், கடனை வசூலிப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும், நடைமுறைகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரு முதலாளிகளுக்கு சாதமானதாகவே இருக்கிறது.

நஷ்டக் கணக்கில் எழுதி வைத்துக் கொள்வதும், write-off என்ற பெயரில் வங்கியின் சொத்துக் கணக்கிலிருந்து நீக்குவதும்கூட ஒன்றல்ல. வங்கியின் வரவு-செலவுக் கணக்குப்படி 90 நாள்களாகியும் வட்டியோ, அசலோ வராத கடன்களை நஷ்டக் கணக்காக எழுதிய பிறகு, வங்கி ஈட்டிய இலாபத்திலிருந்து, இன்னப்பிற வழிமுறைகளிலிலிருந்து வாராக் கடனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடு(Provisioning) செய்யும் நடைமுறை துவங்குகிறது. அவ்வாறு வாராக் கடன்கள் மொத்தமாக ஈடு செய்யப்பட்ட பிறகு(100% Provisioning), வருங்காலங்களில் படிப்படியாக வசூலித்துக் கொள்ளும் வகையில் வங்கியின் சொத்துக் கணக்கிலிருந்து write-off செய்யப்படுகிறது. அதாவது, கடனை திருப்பித் தர மறுக்கும் பெரு முதலாளிகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்த பிறகுதான், Write-off செய்யப்படுகிறது.

இந்நிலையில்தான், அரசிடமிருந்து பெறப்படும் மக்களின் வரிப்பணத்தையோ அல்லது வங்கி சேமிப்பாளர்களின் பணத்தையோ ஈடாக வைத்து வாராக் கடன்களால் எற்பட்ட நஷ்டத்தை சரிகட்டவில்லையென்கிறபோது வங்கியின் இலாபம் ஒரே நாளில் வீழ்ச்சியடைவதும், வாடிக்கையாளர்களும் தங்களது பணத்தை காப்பாற்றிக் கொள்ள நினைத்து போட்ட பணத்தையெல்லாம் மீட்க முயல்வதும்(Bank run) நடக்கிற போது வங்கி திவாலடையும் நிலை உருவாகிறது. சென்றாண்டு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மிகப் பெரிய வங்கிகள் இதுபோன்ற காரணங்களால் வீழ்ச்சியை சந்தித்தது உலகறிந்த செய்தியாகும்.

வாடிக்கையாளர்களின் சேமிப்புகளிலிருந்து பெற்ற வட்டிகள், வங்கிக் கட்டணங்கள், குறைந்தபட்ச இருப்பை பேணத் தவறியதற்காக வாடிக்கையாளர்கள் மீது விதிக்கப்படும் தண்டத்தொகைகள் என நடுத்தர மற்றும் ஏழை மக்களை பலிக்கடாவாக மாற்றுவதன் மூலம்தான் Write-off செய்யப்படுகிறதே ஒழிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது போல வெறுமனே கணக்கை மாற்றி எழுதும் நடவடிக்கையால் அல்ல என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக்கூட பேண முடியாமல் இருக்கும் ஏழை, எளிய மக்களிடமிருந்து 8,500 கோடி ரூபாய் தண்டத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகத்தின்கீழ் தனிப்பொறுப்பிலிருக்கும் இணையமைச்சர் பங்கஜ் சௌத்திரியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

12 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு வாராக் கடன்கள் குறைக்கப்பட்டுவிட்டதாக பட்ஜெட்டில் சொல்வதெல்லாம் கார்ப்பரேட்டுகள் பெற்ற கடனை இப்படி மக்கள் தலையில் சுமத்துவதன் மூலம் குறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. புதிய திவால் சட்டத்தின் மூலமாக திவாலடைந்ததாகக் கூறி வாங்கிய கடனை தர மறுப்பவர்களுக்கு ஹேர்கட் என்ற பெயரில் சராசரியாக ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 69 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், 2018ல் 54 சதவீதமாக இருந்த கடன் மீட்பு விகிதம் இந்த நிதியாண்டில் 32 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது.

கடந்த ஜூலை 30 அன்று ஆர்.பி.ஐ. வெளியிட்டிருந்த தலைமை வழிகாட்டுரையில், கடனைத் திருப்பித் தருவதற்கு தகுதியிருந்தும் திட்டமிட்டே கடன் தர மறுப்பவர்களையும்(Wilful defaulters), ஏமாற்றுப் பேர்வழிகளையும்(Fraudsters) சமரசப் பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்து கடனை வசூலிக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. சமரசத்தின் முடிவில் எந்தளவிற்கு குறைந்த பணத்தை திருப்பிக் கொடுத்தாலும், அதைப் பெற்றுக்கொண்டு தடைப்பட்டியலிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலம் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை மறுபடியும் கடன் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக மாற்றிவிடுகிறார்கள். இந்த நடைமுறை பற்றி சென்றாண்டு அறிவிக்கப்பட்ட போதே வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்திடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும், கொஞ்சம்கூட பின்வாங்காமல், அதே மூர்க்கத்தோடு மரணப் படுக்கையிலுள்ள ஏகபோக நிதி மூலதன கும்பல்களை எப்படியாவது உயிர்ப்பித்துவிடலாமென RBI மூலமாக பாசிச வேலைகளைச் மோடி கும்பல் செய்து வருகிறது. ஒருபுறம், கார்ப்பரேட்டுகளுக்கு வரிக் குறைப்பு, தொழில் ஊக்குவிப்பு சலுகைகள் என்று பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தையும், இயற்கை வளத்தையும் பட்ஜெட் மூலமாக வாரிக் கொடுக்கப்படுகிறது என்றாலும், மறுபுறம் கடன் தள்ளுபடி மூலமாகவும் நிதி மூலதன கும்பல்களுக்கு உயிரூட்டப்படுகிறது. பாசிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கு உழைக்கும் மக்கள் தலைமயிலான பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டுவது ஒன்றே தீர்வு என்பதையே அனைத்து சமூக-அரசியல் போக்குகளும் எடுத்துக் காட்டுகிறது.

பூவுலகின் எதிரி ஏகபோக நிதி மூலதன கும்பல்கள்

உற்பத்திக்காக மூலதனம் என்றில்லாமல் மூலதனத்திற்காகவே முதலாளித்துவ உற்பத்தி என்ற தாரக மந்திரத்தில் அவதரித்த முதலாளித்துவம், சிறு மூலதனத்தை விழுங்கி பெரு மூலதனமும், பெரு மூலதனத்தை வீழ்த்தி ஏகபோக மூலதனத்தையும் உருவாக்கிக் கொண்டது; மூலதனத்தையே உற்பத்தி செய்யும் கடன் முதலாளிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, தொழிற்துறை ஏகபோகங்களும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கு வங்கி மூலதன கும்பல்களோடு கைக்கோர்த்து ஏகபோக நிதி மூலதன ஆதிக்கத்தை நிறுவிக் கொண்டது. இவ்வாறு, ஒவ்வொரு நிலையிலும் தனக்குத் தானே சவக்குழி வெட்டிக் கொண்டு, மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவத்திற்கு உயிரூட்டுவதற்காகவே உலகிலுள்ள எல்லா அரசுகளும் கொள்கைத் திட்டங்களை வகுத்து போராடி வருகின்றன.

“ஆதித் திரட்டலுக்கான வழிகளில் மிக வலுவான ஒன்றாக அரசாங்கக் கடன்கள் மாறியிருக்கிறது” என்று மார்க்ஸ் கூறினார். இந்தாண்டு(2024) பட்ஜெட்டின்படி 155 இலட்சம் கோடிக்கும் அதிகமாக பொதுக் கடன் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். உலகிலேயே அதிக கடன்சுமையுள்ள நாடாக அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இருக்கிறது. ஒருபுறம், அரசாங்கத்திடமிருந்து பெறும் வரிச் சலுகைகள், கடன்கள் வழியாக பெறுகின்ற மூலதனத்தை பங்குச் சந்தைகளில் போட்டு சூதாடுகிறார்கள்; மறுபுறம், உலக வங்கியாதிக்கத்தின் மூலமாக தங்கள் இலாப வேட்டைக்கு அரசாங்கக் கடன்கள் மூலமாக உலக மக்களின் மீது நிதி மூலதன ஆதிக்கத்தை சுமத்துகிறார்கள். 

ஏகபோக நிதி மூலதனம் மாய்வது நிச்சயம், ஏன்?

“(கடன் முதலைகள், கடுவட்டிக்காரர்கள், பங்குச் சந்தை சூதாடிகள், நிதிக் கொள்ளையர்கள்) இக்கும்பலுக்கு, பண்ட உற்பத்தி என்றால் என்னவென்றுகூட தெரியாது, அந்தளவிற்கு உற்பத்தியிலிருந்து விலகி நிற்கிறார்கள்” என்று மார்க்சும்; ஒட்டுமொத்த பண்ட உற்பத்தியின் அஸ்திவாரத்தையே தமது நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதால், “லாபங்களில் பெரும்பகுதியை நிதித் தில்லுமுல்லுக்கார ‘மேதை’கள் பறித்தெடுத்துக் கொள்கிறார்கள் என்று லெனினும் கூறியிருப்பார்கள். அதுதான் இன்று நமது கண் முன்பாகவே நடந்து வருகிறது.  பண்ட உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை(PLI) திட்டம் அறிவிக்கும் நிலையில்தான் நமது நாடு இருக்கிறதென்றால் நிதி மூலதன கும்பல்களின் வேட்டை எந்தளவிற்கு தீவிரமாக இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். இதுபோன்ற PLI திட்டங்களை செயல்படுத்தி சொன்னபடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்றாலும், எதிர்பார்த்தபடி இலாபம் ஈட்ட வேண்டுமென்றாலும் குறைந்தது 25-30 ஆண்டுகள் எடுக்கும் என்று விஸ்கான்சன்(USA) மாநிலத்தில் முதலீடு செய்யக் கிளம்பிய Foxconn நிறுவனத்தின் திட்டத்தை ஆய்வு செய்த அம்மாநிலத்தின் நிதித் தகவலகம்(Fiscal Bureau) கண்டறிந்து கூறியுள்ளது.

வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் இருப்பது ஏதோ முதலாளிகளின் கெட்ட புத்தியால் நடப்பதல்ல; மாறாக, பங்குச் சந்தை சூதாட்டத்தின் மூலம் ஊதிப் பெருக்கப்பட்ட நீர்க்குமிழி பொருளாதாரம், யதார்த்த பொருளாயாத நிலைமைகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் மோதல்களால் தவிர்க்கமுடியாதபடி வெடித்து வீழ்ச்சியை சந்திக்கிறது. Videocon Group, DHFL, Jet Airways, Amtek Auto, Nirav Modi, Bhushan Steel & Power, Reliance ADAG, Reliance Communications, Unitech Group, Essar Steel, Sahara Group, ABG Shipyard, Mehul Choksi & Gitanjali Group எனப் பல உள்நாட்டு தரகு முதலாளிகள் பங்கு சந்தையில் சூதாடி போண்டியாகியுள்ளனர். இதுபோல, The 2021 Evergrande Crisis (China), The 2021 Archegos Capital Collapse, The 2022-2023 Cryptocurrency Market Crash, The 2023 Tech Sector Layoffs (Global), The 2023 Silicon Valley Bank Collapse (USA), The 2023 UK Bond Market Crisis என உலக முழுவதும் முதலாளித்துவ நெருக்கடி பன்மடங்கு கூர்மையடைந்துள்ளது. மேற்கண்ட அத்தனை வீழ்ச்சிக்கும் பின்னால் இருப்பது ஊதிப் பெருக்கப்பட்ட ஊக வணிகம்தான்; மலட்டுப் பணம்தான்; காகித மூலதனம்தான் என்று கூறும் மார்க்சியம் வெல்லுதற்கரிய தத்துவமாக தலைநிமிர்ந்து நிற்கிறது.

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

ஒருபோதும் இனி ஏகபோக நிதி மூலதன கும்பல்களால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது என்பதையே இவை அனைத்தும் எடுத்துக் காட்டுகிறது. கீன்சிய பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக மக்கள் நல அரசு என்று வெளிவேஷம் போட்ட நிதி மூலதன கும்பல்கள் இன்று புதிய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதன் மூலம் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்கள். பெயரளவிற்கான மூலதனத்தை, மலட்டுப் பணத்தை வைத்து தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுவத்துவது மட்டுமே தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு இருக்கும் ஒரே வழி. சுதந்திரத்தை மறுக்கும், ஆதிக்கம் ஒன்றையே விரும்பும் நிதி மூலதன கும்பல்கள் இன்று உக்ரைனிலும், காசாவிலும் பச்சைப் படுகொலைகளை செய்து ஏழை, எளிய மக்களின் இரத்தம் குடித்து வாழ்கிறார்கள்.

“நவீன கால அரசின் நிர்வாக அமைப்பு என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழு என்பதைத் தவிர வேறல்ல” என்று மார்க்ஸ் ஏங்கல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது.  இன்று பூதாகரமாக வெடித்துள்ள அதானியின் பங்குச் சந்தை மோசடிகளும், SEBIயுடனான தொடர்புகளெல்லாம் நிதி மூலதன கும்பல்களின் பல்வேறு ஊக வணிக பித்தலாட்ட நடவடிக்கையின் ஒரு துளி மட்டுமே.

மிகை உற்பத்தியில் ஈடுபட்டாலும் வீழும். மிகை உற்பத்தியில் ஈடுபடாவிட்டாலும் வீழும். ஊக வணிகம், பங்குச் சந்தை சூதாட்டங்கள் மட்டுமே அவற்றிற்கு இருக்கும் ஒரே வழி. ஆனால், லெனின் கூறியபடி ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஊக வணிகம், முதலாளித்துவ நெருக்கடியை(மிகை உற்பத்தியை) முன்னெப்பதையும்விட கடுமையாக்குவதோடு, அதன் வீழ்ச்சியையும் துரிதப்படுத்துகிறது.  உண்மையில் எல்லா நெருக்கடிகளின் சுமையும் வறுமையில் வாடும் உழைக்கும் மக்கள் மீதுதான் ஏற்றி வைக்கப்படுகிறது. இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடக்கும் புரட்சிகளே, முதலாளித்துவத்திற்கான மரண சாசனங்கள்; மனிதகுல விடுதலைக்கான சுதந்திரப் பிரகடனங்கள். சோவியத் இரஷ்யாவும், செஞ்சீன வரலாறும் அதைத்தான் பறைசாற்றுகிறது. 

முதலாளிகள் இவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள்; இவ்வளவு சுரண்டி கொழுத்துவிட்டார்கள்; இந்த சாதியைச் சேர்ந்த முதலாளிகளை ஒழித்துவிட்டால் போதும்; அந்த கார்ப்பரேட்டுகளை புறக்கணித்தால் போதும்; ஏழை-பணக்காரர்களிடையிலான ஏற்றத்தாழ்வு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துவிட்டது என்று சொல்வது மட்டும் போதாது. பழைய காலனியாதிக்க காலத்திலும்கூட இந்த உண்மைகளை காங்கிரஸில் இருந்த மிதவாத தேசியவாதிகளேகூட அம்பலப்படுத்தி வந்துள்ளனர்; இன்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகளும், தொண்டு நிறுவனங்களும் ஆளும் வர்க்கத்தை விழிப்படையச் செய்வதற்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்; இவையெல்லாம் போதவே போதாது; புரட்சிகர தத்துவமான மார்க்சியம், புரட்சிகர நடைமுறையை கோருகிறது; கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்க்க மா.லெ. வழியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான புதிய வகைப்பட்ட ஜனநாயகக் குடியரசைத் தோற்றுவிக்க அணிதிரள்வோம்.

- செந்தளம் செய்திப்பிரிவு