இங்கே மாசுபடுத்து அங்கே முறைப்படுத்து: இந்தியாவின் தரவு மைய பேரம்

சத்யகி தாஸ்குப்தா - தி வயர்

இங்கே மாசுபடுத்து அங்கே முறைப்படுத்து: இந்தியாவின் தரவு மைய பேரம்

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இன்றைய உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு நம் அனைவரின் வாழ்க்கையிலும் நாளுக்கு நாள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எந்தவொரு செயற்கை நுண்ணறிவும் தடையின்றி இயங்க தரவு மையங்கள் (Data Centres) மிக அத்தியாவசியமானவை. எனவே, உலகளவில் நடக்கும் செயற்கை நுண்ணறிவுப் போட்டியோடு சேர்ந்து, புதிய தரவு மையங்களை அமைப்பதற்கான போட்டியும் தீவிரமடைந்து வருகிறது; இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. தரவு மையங்களின் கொள்ளளவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் மூலம் இந்தியா மாபெரும் உருமாற்றமடையும் என்ற வாக்குறுதியுடன் இத்துறைக்கான முதலீடுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் சுமார் 250 தரவு மையங்களை அமைக்க இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.

மத்திய வரவு செலவுத் திட்டம் (மத்திய பட்ஜெட்) 2026-27, இந்தியாவில் உள்ள தரவு மைய உள்கட்டமைப்பு மூலம் இயங்கும் மேகக்கணி சேவை வழங்குநர்களுக்கு (Cloud Service Providers) வரி விலக்கு சலுகையையும் (Tax Holiday) வழங்குகிறது. தரவு மையங்களை அமைப்பதற்கான ஆதரவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, நமது பொருளாதாரத்தை உயர்த்தும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் இது நியாயப்படுத்தப்படுகிறது.

உலகின் மறுபக்கத்தில், நியூயார்க் மாநிலம் 2026 ஜூலையில் பிறப்பித்த நிர்வாக உத்தரவின் மூலம், 50 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட புதிய தரவு மையங்களுக்கு மாநில அளவிலான முதல் தற்காலிகத் தடையை (Moratorium) விதித்துள்ளது. டெக்சாஸிலும், புதிய மின்சார இணைப்புக் கோரிக்கைகளில் 474 ஜிகாவாட்டிற்கும் அதிகமான மின் சுமை முன்மொழியப்பட்டிருப்பதையும், அதில் தோராயமாக 90% தரவு மையங்களுக்கானது என்பதையும் ERCOT கண்டறிந்ததை அடுத்து, திட்டவாரி தணிக்கைக்காக நிலுவையில் உள்ள கட்டமைப்பு இணைப்பு விண்ணப்பங்களை நிறுத்தி வைத்துள்ளது.

உலகின் தொழில் நுட்ப மையமாகக் கருதப்படும் கலிஃபோர்னியாவிலும் கூட, தரவு மையங்கள் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் பல மாநிலங்கள் தரவு மையங்களை நிறுவுவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. ஆம்ஸ்டர்டாம் நகரம் பிரம்மாண்டமான ஹைப்பர்ஸ்கேல் (Hyperscale) மையங்களுக்கு நகராட்சி அளவிலான தற்காலிகத் தடையை விதித்துள்ளது; மேலும் அயர்லாந்தில், நாட்டின் மொத்த மின் நுகர்வில் ஐந்தில் ஒருங்கைத் தரவு மையங்களே எடுத்துக்கொண்டதை அடுத்து, டப்ளின் பகுதியில் 2028 ஆம் ஆண்டு வரை புதிய மின் இணைப்புகளை வழங்க அம்மாநில மின் உள்கட்டமைப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் நமது திரைகளில் செயற்கை நுண்ணறிவு நிகழ்த்தும் மாயாஜாலங்களைச் சாத்தியமாக்கத் தேவைப்படும் தரவு மையங்களின் தாக்கம் குறித்து நாம் கூடுதல் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. இந்த பிரம்மாண்ட மையங்கள் நாள் முழுவதும் தடையின்றி இயங்குவதால், தொழில்துறை அளவிலான பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகள் இவற்றிக்குத் தேவைப்படுகின்றன. இங்குத் தொடர்ச்சியாக நல்ல நீர் தேவைப்படுகிறது. நன்னீரைத் தவிர, இமையங்களை இயக்கும் மின்சாரத்தின் அளவும் மாபெரும் தொகையாகும். ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் தொடர்பான கவுன்சிலின் (CEEW) மதிப்பீட்டின்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியத் தரவு மையங்கள் தோராயமாக 150 பில்லியன் லிட்டர் நீரையும், நாட்டின் மொத்த மின் நுகர்வில் அரை சதவீதத்தையும் பயன்படுத்தியுள்ளன; இவை இரண்டும் 2030 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மின்சாரத் தேவை, தரவு மையப் போட்டியில் முன்னணியில் உள்ள ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். தேசிய அளவில் இவை சிறிய பங்காகத் தோன்றினாலும், சிக்கலே இது ஒரு குறிப்பிட்ட இடங்களில் குவிந்திருப்பதும், இதற்கான கட்டணத்தை யார் செலுத்துகிறார்கள் என்பதும்தான். இந்த மின் சுமை ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே குவிகிறது; மேலும் மகாராஷ்டிராவைப் போல ஒரு மாநிலம் தரவு மையங்களை வணிகக் கட்டண முறையிலிருந்து தொழில் துறை கட்டண முறைக்கு மாற்றும்போது, அது உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையைக் குறைத்துவிடாது. மாறாக, அந்த கட்டண வித்தியாசத்தை மற்ற நுகர்வோரே சுமக்க வேண்டும் என்று அது தீர்மானிக்கிறது. மேலும், நிலத்தடி நீர் தட்டுப்பாடு தீவிரமாக நிலவும் ஒரு சூழலில், சுத்தமான நன்னீரை இதற்காக தாரைவார்க்கும் சக்தி இந்தியாவுக்கு உண்மையில் இருக்கிறதா என்ற கேள்வியையும் இந்த தொடர் நீர் தேவை எழுப்புகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில், கூகுள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஹைப்பர்ஸ்கேல் தரவு மையத்தைக் கட்டி வருகிறது; இது 480 ஏக்கர் பரப்பளவில் இரண்டு மாவட்டங்களில் உள்ள மூன்று இடங்களில் அமைய முன்மொழியப்பட்டுள்ளது—தர்லுவாடாவில் சுமார் 200 ஏக்கர், அடவிவரம் மற்றும் முடாசர்லோவாவில் 120 ஏக்கர், மற்றும் ராம்பில்லியில் 160 ஏக்கர். இந்த மையம் கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம் மற்றும் முடாசர்லோவா நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதியில் அமையவுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆந்திர அரசிடமிருந்து 15 ஆண்டுகளுக்கு மாபெரும் ஊக்கத்தொகைகளையும் வரி விலக்குகளையும் பெற்றுள்ளது. இதன் சலுகைத் தொகுப்பு மதிப்பு சுமார் ரூ. 22,000 கோடியாகும்—இதில் 480 ஏக்கர் நிலம் சந்தை விலையில் கால் பங்கு தள்ளுபடியில் வழங்கப்படுவது, முத்திரைத்தாள் கட்டண விலக்கு, மின்சார வரி விலக்கு, 15 ஆண்டுகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட தொழில் துறை மின்கட்டணம், 10 ஆண்டுகளுக்கு 25% தள்ளுபடி விலையில் நீர் வழங்கல், மற்றும் கட்டுமானத்தின் போது ரூ. 2,245 கோடி வரை முழு மாநில ஜிஎஸ்டி (GST) மறுசெலுத்துகை ஆகியவை அடங்கும்; இதன் மூலம் அறிவிக்கப்பட்ட மொத்த முதலீடு ரூ. 87,520 கோடியாகும். இயல்பாகவே, இது மின்சாரக் கிடைப்பிற்கு மாபெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், இயற்கை வளங்களையும் மாசுபடுத்தும்.

நாடுகளுக்கு இடையேயான அதிகார உறவுகள், அந்தந்த நாடுகளில் ஏற்படும் மாசுப் பிரச்சினையைத் தீர்மானிக்கக் கூடியவை. உலகளாவிய தெற்கில் (Global South) கூகுள் நிறுவனம் தரவு மையங்களை அமைக்கும் போது, அது அந்நாட்டை வெகுவாக மாசுபடுத்துவதுடன் வளங்களின் கிடைப்பிலும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்த மாசை பன்னாட்டு வர்த்தகக் கண்ணோட்டத்தின் மூலமாக நாம் பகுப்பாய்வு செய்யலாம். வர்த்தகத்தில் உள்ளடங்கிய உமிழ்வுகள் குறித்து பீட்டர்ஸ் மற்றும் ஹெர்ட்விச் (Peters and Hertwich) ஆகியோரின் ஆய்வு கூறுவது யாதெனில், ஒரு நாட்டின் பதிவான உமிழ்வு அளவானது, அந்நாட்டு மக்கள் தொகையின் நுகர்வினால் உருவாக்கப்படும் உமிழ்வுக்குச் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதாகும்.

வளர்ச்சியடையும்டுகளில் உருவாக்கப்படும் மாசுபாட்டின் கணிசமான பகுதி, வேறெங்கோ நுகரப்படும் பொருட்களின் உற்பத்தியோடு தொடர்புடையதாகும். இது "சுற்றுச்சூழல் ரீதியான சமமற்ற பரிமாற்றத்திற்கு" (Ecologically Unequal Exchange) வழிகோலுகிறது; உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் (Global Value Chains) பணக்காரப் பொருளாதாரங்களை ஒப்பீட்டளவில் தூய்மையான, அதிக மதிப்புள்ள செயல்பாடுகளில் கவனம் செலுத்த அனுமதிக்கின்றன; அதே வேளையில், தயாரிப்புச் செயல்பாட்டில் கணிசமான சுற்றுச்சூழல் விலையைக் கோரும் உற்பத்திப் பொருட்களை அவை இறக்குமதி செய்து கொள்கின்றன. உலகளாவிய வடக்கிலிருந்து (Global North) சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உற்பத்தியை இடமாற்றம் செய்தது உலகளாவிய உமிழ்வு அதிகரிக்க வழிவகுத்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன; ஏனெனில் இந்த இடங்களில் தொடக்கத்தில் உற்பத்தி அதிக கார்பன் உமிழ்வைக் கொண்டதாக இருந்தது. எனவே, சில பணக்காரப் பொருளாதாரங்களின் வெளிப்புறப் பசுமையாக்கலை நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்: உள்நாட்டு சுற்றுச்சூழல் குறிகாட்டிகளின் முன்னேற்றமானது, பன்னாட்டு வர்த்தகத்தின் மூலம் சுற்றுச்சூழல் செலவுகளை வெளியேற்றுவதோடு இணைந்தே காணப்படுகிறது.

இந்தச் செயல்பாட்டின் பொருளாதாரத் தாக்கத்தைப் புரிந்துகொள்ள நாம் "மாசு புகலிடக் கோட்பாட்டை" (Pollution Haven Hypothesis) பயன்படுத்தலாம். அதிக மாசு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பலவீனமான சுற்றுச்சூழல் விதிகளும் தளர்வான அமலாக்கமும் கொண்ட நாடுகளில் தங்கள் உற்பத்தியை அமைக்க ஊக்கம் பெறுகின்றன. இது, சுற்றுச்சூழல் மற்றும் சமூகச் செலவுகள் உட்பட ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ச்சியடையும் நாடுகள் "மாசுபடுத்தும்" தொழில்களில் ஒப்பீட்டு நன்மையைப் பெற வழிவகுக்கிறது.

இந்த நிலைமாற்றம் ஒரு தெளிவான புதிய காலனித்துவ (Neo-colonial) பரிமாணத்தைக் கொண்டுள்ளது. காலனித்துவம் வரலாற்று ரீதியாக வளங்களைச் சுரண்டுவதையும் தொழில்துறை மையங்களுக்குப் பொருட்களை விநியோகிப்பதையும் சுற்றியே பிற்படுத்தப்பட்டப் பகுதிகளில் உற்பத்தியை அமைத்தது. முறைசாரா சந்தைப் பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தகத்தின் மூலம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் இத்தகைய படிநிலையை மீண்டும் உருவாக்குகின்றன. மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் உயர் மதிப்புச் செயல்பாடுகள் உலகளாவிய வடக்கில் குவிகின்ற வேளையில், அதிக உழைப்பு தேவைப்படும் மற்றும் "மாசுபடுத்தும்" உற்பத்தி நிலைகள் உலகளாவிய தெற்கில் நிகழ்கின்றன. உலகளாவிய தெற்கு மாசு விளைவிக்கும் பொருட்களில் கவனம் செலுத்துவது சமமற்ற வர்த்தக வடிவங்கள் மற்றும் அதன் அந்நியச் செலாவணித் தேவையின் விளைவாகும்.

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் வரம்பு மிகவும் சுருங்கியதாக உள்ளது; ஏனெனில் இந்த அளவிலான ஒரு பிரம்மாண்டமான ஹைப்பர்ஸ்கேல் மையம் இயங்கத் தொடங்கிய பின் சில நூறு பேருக்கு மட்டுமே வேலை அளிக்கிறது. இந்த முதலீடு எத்தனை பேருக்கு வேலை தருகிறது என்பதை விட, அது எதைக் காட்டுகிறது (சிக்னல் செய்கிறது) என்பதற்காகவே ஈர்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொழில்துறை புரட்சிக்கு எரிபொருளாக இந்தியாவின் பருத்தி மற்றும் நீலம் (இண்டிகோ) போன்ற மூலப்பொருட்கள் பயன்பட்டன. இப்போது இந்தியத் தரவுகளின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, இந்திய மின்சாரம் மற்றும் நீரில் இயங்கும் தரவு மையங்கள் உலகளாவிய வடக்கின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்குக் கைகொடுத்து வருகின்றன.

முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக இயற்கை வளங்களின் பெரும் சீரழிவிற்குக் காரணமாக இருந்துள்ளது. மூலதனம் மேலும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறியதால், உலகளாவிய வடக்கு இந்த வளச் சுரண்டலை உலகளாவிய தெற்கிற்கு வெளிப்புற ஒப்படைப்பு (Outsource) செய்ய முடிந்தது. புதிய யுக செயற்கை நுண்ணறிவுப் போட்டி இதை மீண்டும் நிரூபித்துள்ளது. "இங்கே மாசுபடுத்து, அங்கே முறைப்படுத்து" எனும் அரசியல் பொருளாதாரம் உணர்த்துவது என்னவென்றால், நுகர்வும் பொருளாதார லாபங்களும் பணக்காரப் பொருளாதாரங்களில் சமமற்ற முறையில் குவிகின்றன; அதே வேளையில் உற்பத்தி சார்ந்த மாசுபாடும் ஒழுங்குமுறைப் சுமைகளும் புவியியல் ரீதியாக வேறெங்கோ குவிகின்றன என்பதாகும்.

இவை எதுவும் தரவு மையங்களை அமைப்பதற்கு எதிரான வாதங்கள் அல்ல. தாமதத்தைக் குறைத்தல் (Latency), தரவு உள்ளூர்மயமாக்கல் மற்றும் இந்தியாவின் சொந்த செயற்கை நுண்ணறிவுத் திட்டம் ஆகிய அனைத்திற்கும் இந்திய மண்ணில் கணிப்பொறி செயலாக்கம் (Computing) தேவைப்படுகிறது. இது நிபந்தனைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய வாதமாகும். பின்வரும் மூன்று புள்ளிகள் இந்த சமநிலையை மாற்றக்கூடும்:

1. சலுகைகளைக் கோருவதற்கு நீர் மற்றும் மின்சாரப் பயன்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதை ஒரு நிபந்தனையாக்குதல் (பின்னர் கோரப்படும் கோரிக்கையாக இல்லாமல்);

2. ஏற்கனவே உள்ள தேவையை நிறைவு செய்ய முடியாத நீர்நிலைகளில் நீருக்கான முழுச் செலவையும் வசூலித்தல்;

3. தற்போது 2047 வரை மறுஆய்வு விதி இன்றி செல்லும் ஒப்பந்தத்தில் ஒரு மறுஆய்வு விதியைச் சேர்ப்பது.

நியூயார்க்கும் டெக்சாஸும் இந்த கேள்விகளைக் கேட்க சற்றே நின்று யோசித்துள்ளன. இந்தியா இன்னும் இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை.

சத்யகி தாஸ்குப்தா

https://thewire.in/tech/pollute-here-regulate-there-indias-data-centre-bargain

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு