இந்தியப் பாசிசத்தின் பொருளியல் அடிப்படை
இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 2
II
இந்தியப் பாசிசத்தின் பொருளியல் அடிப்படை
இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 1
பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும் அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது
அதிகாரம் மையப்படுத்துதல்
முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் நெருக்கடி ஏற்படும் பொழுது சிறிய அளவிலான மூலதனங்கள் திவால் நிலையை அடைவதும், பெரிய மூலதனங்கள் சிறிய மூலதனங்களை விழுங்கி ஏப்பம் விட்டு மூலதனங்களை மையப்படுத்தி ஏகபோகங்களாக, மேலும் பெருகிக் கொண்டே போவதும் ஒரு பொதுத்தன்மையாகும். எனினும் இந்த பொதுத்தன்மை இந்தியாவில் சற்று வேறுபட்டதாக உள்ளது. இரண்டு அம்சங்களில் இது வேறுபட்டுள்ளது.
1. உலகம் முழுவதும் ஏகபோகங்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் ஏகாதிபத்திய கட்டத்தில்தான் இந்திய தொழில் நிறுவனங்கள் தோன்றின.
2. அதிகார மாற்றத்தின் போது ஏகாதிபத்தியங்களின் அங்கீகாரத்தோடு முதலாளித்துவத்திற்கு முதன்மை தருகின்ற பம்பாய் திட்டம் தயாரிக்கப் பட்டது. இத்திட்டம் டாடா, பிர்லாவால் தயாரிக்கப்பட்டு ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
1. பொருளாதார காரணம், 2. அரசியல் காரணம்
1. பொருளாதார காரணத்தை பொறுத்தவரை தனியார் துறைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் இன்றியமையாததாகும். அதேபோல் குறைந்த விலைக்கு கச்சாப் பொருட்களும் தேவைப்பட்டன. ஆனால் இத்துறைகளில் முதலீடு செய்ய வேண்டிய தொகை அதிகம்; லாப வீதங்கள் குறைவு. குறைவான லாப வீதங்கள் வருவதை இவர்கள் (முதலாளிகள்) விரும்பவில்லை. அங்கெல்லாம் அரசின் மூலதனம் இடப்பட்டது.
2. அரசியல் காரணம் என்னவெனில் காலனிய இந்தியா அரைக்காலனியாக மாறியபொழுது இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டை தனது கிடுக்குப்பிடியில் வைத்துக்கொள்வது ஏகாதிபத்தியத்திற்கு அவசியமாகிறது.
லெனின் குறிப்பிடுகிறார் "ஏகாதிபத்தியம் என்பது நிதி மூலதனத்தின் ஏகபோகங்களின் கட்டமாகும். அது எங்கெங்கும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபடுமே தவிர, விடுதலைக்கான முயற்சியில் அல்ல" என்கிறார். அவர் மேலும் "நிதி மூலதனம் ஒரு மாபெரும் சக்தி. உலக நாடுகளுக்கிடையிலான அனைத்து உறவுகளையும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் தீர்மானிக்கிற சக்தி என்றே கூறலாம். ஒரு முழுமையான அரசியல் சுதந்திரம் பெற்ற நாடுகளையும் கூட அடிபணிய வைக்கிற திறன் படைத்தது மட்டுமல்ல அடிபணியவும் வைக்கிறது" என்கிறார்.
ஆகவே, அரைக்காலனிய இந்தியாவில் ஒரு சிறிய வர்க்கத்தின் கைகளில் பொருளாதார அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டையும் மையப்படுத்தி வைக்கப்படுகிற அரசு மூலதனத்தின் வளர்ச்சியானது இந்தியா போன்ற நாட்டை தனது கிடுக்கிப்பிடியில் வைத்துக் கொள்வதற்காக உபயோகமுள்ள கருவியாக ஏகாதிபத்தியங்களுக்கு ஆகியது. இங்கு அரசு மூலதனம் 1960ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பெருமளவு வளர்ந்து கொண்டே வந்தது. 1970ம் ஆண்டுகளில் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் மூலம் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்தது.
அரசு நிறுவனங்களின் எண்ணிக்கை
1961 - 142
1971 - 316
1982 - 952
அரசின் மூலதனம்
1961 - 547 கோடி ரூபாய்
1971 - 2,074 கோடி ரூபாய்
1982 - 13,508 கோடி ரூபாய்
இந்த பொருளாதார மையப்படுத்துதல்தான் அரசியல் மையப்படுத்துதலாக மாறி இறுதியில் அவசர நிலைக்கு (ணினீமீக்ஷீரீமீஸீநீஹ்) இட்டுச் சென்றது. இந்த அவசர நிலைக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியும் பாதிக்கப்பட்டு எதிர்ப்பு கிளம்பியது. ஜனதா கட்சியின் கோஷங்களாக "அதிகார பங்கீடும், அரசியல் பொருளாதார சுதந்திரமும்" போன்ற கோஷங்களே இருந்தன. இந்த கோஷங்கள் பொருளாதார அதிகாரம் அரசின் கையில் மையப்படுத்துதலின் விளைவாக எழுந்தவையாகும். 1980ல் ஜனதா தோற்கடிக்கப்பட்டு இந்திரா காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பண்பு மாற்றம் அடைந்தது. அரசியல், பொருளாதாரம், சமுதாயம் மற்றும் கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் மையப்படுத்துதல் நிகழ்ந்தது.
இரு துறைகளில் மூலதனம் மையப்படுத்தப்படுதல்
1980களில் அரசுத்துறையில் மட்டுமில்லாமல் தனியார் துறையிலும் மூலதனம் மையப்படுத்துதல் நடந்தது. அரசுத்துறையில் பூதாகரமாக வளர்ந்தது. 1. கச்சாப் பொருள் உற்பத்தி 2. எந்திரங்கள் உற்பத்தி 3. நிதிநிறுவனங்கள் மட்டுமல்லாமல் நுகர்பொருள் தயாரிப்பும் அரசின் கைகளில் குவிந்தது.
அது மட்டுமில்லாமல் தனியார் துறைகளிலும் பெருமளவில் குழுமங்கள் கையில் இருக்கும் நிறுவனங்களிலும் அரசு தனது நிதி நிறுவனங்கள் மூலமாக 20 முதல் 50 விழுக்காடு வரையிலான பங்குகளை வாங்கியது. இந்த நிறுவனங்களை நிர்வகிக்கும் பெரும் வணிக குடும்பங்களின் மொத்த பங்கு தொகையே 1 லிருந்து 10 விழுக்காடு வரை தான் இருந்தது. இதன் மூலம் பெருமுதலாளிகளின் கையிலிருந்த தனியார் துறையும் கூட அரசு மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவெனில் பிரமாண்டமான அளவில் 'பொருளாதார அதிகாரம்' அரசின் கையில் மையப்படுத்தப்பட்டது என்பதை உணரலாம்.
தனியார் துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய குடும்பங்களின் கையில் அனைத்து மூலதனமும் மையப்படுத்தப்பட்டது. 22 குடும்பங்களின் கையிலிருந்து சிறிதுசிறிதாக குறைந்து குறிப்பாக 1980-ல் 4,5 குடும்பங்களின் கையில் குவிந்தது. இவற்றில் சில, தலைமையில் இருக்கும் இரண்டு பெரும் வணிக குடும்பங்களுக்கு சமமாக வளர்ந்தது. மொத்தத்தில் இந்திய தனியார் துறை டாட்டா, பிர்லா, அம்பானி, கோயங்கா, ஸ்வராஜ்பால் மற்றும் ஒரு சிலர் கைகளில் குவிந்தது. இந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களில் பொதுவான அம்சம் என்னவெனில் வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் 1. ஏகாதிபத்திய மூலதனத்துடனும் 2. அரசாங்கத்தோடு குறிப்பாக பிரதமர் வீட்டோடும் நெருக்கமான உறவைப் பேணியது. ஆக, நம் நாட்டின் தனியார்துறை மூலதனங்கள் ஒரு சிலர் கைகளில் மையப்படுவதும், பெரும்பான்மையான மூலதனம் அரசின் கைகளில் மையப்படுவதும் (அ) கட்டுப்பாட்டில் இருத்தலும் ஆகும். இவை இரண்டும் தமக்குள் நெருக்கமாக பிணைக்கப்பட்டு ஏகாதிபத்தியத்துடன் மொத்தமாக பிணைக்கப்பட்டன. அதாவது பிரதமர் வீட்டோடு நெருக்கமாக உள்ள சில பெரும் வணிகக் குடும்பங்கள், தலைமை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கும்பல் இந்தியாவில் குறிப்பாக 1980களிலிருந்து தோன்றியது. இன்னும் இந்த கும்பல்தான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் ஆட்சி அமைப்புக்கும் தலைமை போல் உள்ளது. இந்த அதிகார வர்க்க தரகு முதலாளிகள் கும்பல்தான் ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடகு வைப்பதற்கு முழுமுதற் காரணமாவர். எனவே, ஏகாதிபத்திய மூலதனம், அரசு மூலதனம், தரகு முதலாளிகளின் மூலதனம் இம்மூன்றும் பின்னிப் பிணைந்து வலிமைமிக்க ஒரு மூலதனக் குவியலாக மாறியுள்ளது. அதனையே நாம் அதிகார வர்க்க மூலதனம் என்கிறோம். இதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களை வழிநடத்தி செல்கிறது. நிலபிரபுத்துவத்துடன் இணைந்து அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்கிறது. இந்த நாட்டையும் இந்திய மக்களையும் கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கான சமுதாய தளமாகப் பயன்படுகிறது. இந்த கும்பல்தான் தேசிய முதலாளிகளை திவாலாக்கி பணக்கார விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாகி, நடுத்தர விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கி, தொழிலாளர் வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் சீரழித்து வேலையில்லாத் திண்டாட்டத்தில் ஆழ்த்தி சிறு விவசாயிகளையும் விவசாயக் கூலிகளையும் பசியிலும் பஞ்சத்திலும் வாடச் செய்து நாட்டின் வளங்கள் அனைத்தையும் சூறையாடுகிறது.
பாசிசத்தை நாடுதல்
இந்திய மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடிகளை இந்த கும்பலும் இது சேவை செய்யும் வர்க்கமும் ஒருபுறம் நாட்டின் உற்பத்தியில் பெரும் பகுதியை பறித்து கொள்வதுடனும் மறுபுறம் மற்ற வர்க்கங்கள் அனைத்தையும் ஏழ்மை நிலைக்குத் தள்ளுகின்றன. இதன் விளைவாக மக்களிடையே வெறுப்புணர்ச்சி வளர்கிறது. சரியான பாட்டாளி வர்க்கத் தலைமை இல்லாததால் பல்வேறு வடிவங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்தெழுகிறது. இவ்வாறு வெடித்தெழும் போராட்டங்களால் அமைதியின்மை வளர்ந்து விடாமல் தடுப்பதற்காகவும், தங்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் ஆளும் வர்க்கங்கள் பாசிசத்தை நாடுகின்றன. இயல்பாகவே பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துத்தலுக்கும் அரசியல் மையப்படுத்துதல் பாசத்திற்கும் இட்டுச் செல்கின்றன.
வளர்ந்து வரும் இந்தப் பாசிசத்திற்கு அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவம் தலைமை தாங்குகிறது.
ஏகாதிபத்தியத்துடன் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், நிலபிரபுத்துவத்துடனும், பெரும் அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவம் இன்று நாட்டில் வளரும் பாசிசத்திற்கு தலைமை தாங்குகிறது.
பாசிசத்தோடு தொடர்புடைய தன்மைகள்
1. பொருளாதார அதிகாரம் மையப்படுத்தப்படல்.
2. மேலும் மேலும் ஒருசிலர் கையிலேயே அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படல்.
3. அரசியல் சுதந்திரம் மறுக்கப்படுதல், வெளிப்படையான பயங்கரவாத ஆட்சி முறைக்கு செல்லுதல்.
4. இந்து மத வெறியையும் பெருந்தேசிய வெறியையும் முக்கிய ஆயுதங்களாக பயன்படுத்துதல்.
ஆகியவை வளரும் பாசிசத்தோடு தொடர்புடைய தன்மைகளாகும். டிமிட்ரோ கூற்றுப்படி பாசிசத்தின் வளர்ச்சி நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. அந்தந்த நாட்டின் வரலாற்று சமூக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்பவும், அந்த நாட்டின் தனித்தன்மைகள் உலக அரங்கத்தில் அதன் இடம் ஆகியவற்றை ஒட்டியும் அமைகிறது. இந்தியாவில் பாசிசத்தின் முக்கியத் தன்மைகள் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. தொடக்கத்திலிருந்தே ஜனநாயகமற்ற சர்வாதிகார தன்மையுடையதாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
1. சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சி இல்லை.
2. அவ்வாறு வளர்வதற்கு முன் ஏகாதிபத்தியத்தின் காலனி ஆட்சியாக மாறியதோடு அரை நிலப்பிரபுத்துவ உறவையும் நிலைநிறுத்தியது. பின்னர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தனக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் மரபு, தேசபக்தி மரபு என்று காங்கிரஸ் கட்சி பிழைத்து வருகிறது. தற்போது அந்த தேசபக்தி மரபும் வற்றிவிட்டது.
பாசிசம் எப்பொழுது வளரத்தொடங்கியது
1960 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட திலிருந்து பொருளாதார அதிகாரம் மையப்படுத்தப்படல் மிக விரைவாக தொடங்கியது. 1975 ஆம் ஆண்டு திடீரென்று வந்த அவசர நிலை பிரகடனத்திலிருந்து ஒரு திட்டவட்டமான அரசியல் வடிவம் பெற்றது. அவ்வாறு திடீரென்று பல்வேறு வடிவங்களில் மக்களை கொடுமைப்படுத்திய அவசர நிலையும் அதன் பரந்த தாக்குதலும் உழைக்கும் மக்கள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையும் தாக்கியதாலும் பாட்டாளி வர்க்கம் பலவீனமாக இருந்ததாலும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவான ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அதுவும் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றோடு சமரசம் செய்துகொள்ளும் கட்சியாகவே இருந்ததோடு மையப்படுத்தி இயங்க முடியாத அளவிற்கு உட்பூசல் மேலோங்கியிருந்தது. மேலும் பாட்டாளி வர்க்கம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முடியாத நிலை இருந்ததால் பாசிசக் கும்பல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
1975இல் கண்மண் தெரியாமல் ஓடியது போல் அல்லாமல் 1980ஆம் ஆண்டு பாசிசம் மெல்லமெல்ல திட்டமிட்டு முறையாக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது. 1975 இல் அதன் தாக்குதல் குறிப்பானதாகவும் தன்னை எதிர்த்துப் போராடும் சக்திகள் மீது மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தது. 1980இல் அரசியல் பொருளாதார இராணுவ கொள்கைகளில் பாசிசம் தன்னை மெதுவாக உறுதிப்படுத்திக் கொண்டது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அரசு எந்திரத்தின் அனைத்துத் துறைகளிலும் அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது; அத்துடன் அங்கிருந்து மக்களின் சமுதாய வாழ்க்கையை நோக்கியும் மெல்ல மெல்ல படரத் தொடங்கியது. புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வித்துறை மையப்படுத்தப்பட்டது. மக்கள் கையில் அதிகாரத்தை கொடுப்பதாக கூறிக் கொண்டு வந்த பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்றங்கள் ஆகியவற்றிற்கான 64, 65 வது திருத்த மசோதாக்கள் பாசிசத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தன. இவ்வாறு மக்களின் அனைத்து வாழ்வுத் துறைகளிலும் பாசிசம் நுழையத் துவங்கியது.
90 களுக்குப் பிறகு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற ஏகாதிபத்திய புதிய காலனியக் கொள்கைகள் மூலம் அனைத்து துைறைகளிலும் மையப்படுத்துதல் மெதுவாக வளர்ந்து பாசிசப் போக்குகள் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது.
இன்றைய மோடி கும்பலின் பாசிசம் என்பது திட்டவட்டமாக இந்துத்துவ வடிவத்தில் தன்னை நிலை நிறுத்தத் துவங்கியுள்ளது. இன்றைய பாசிசம், 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியின் விளைபொருள் ஆகும். 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய நெருக்கடி உலக முதலாளித்துவ நெருக்கடியாக பரிணமித்தது. அமெரிக்காவின் அனைத்து துறைகளும் நெருக்கடியைச் சந்தித்தன. இந்த நெருக்கடியின் சுமைகளைத் தீர்க்கவே இந்தியாவின் அனைத்து துறைகளும் மையப்படுத்தப்படுகின்றன.
காங்கிரசு ஆட்சியில் போடப்பட்ட இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் மற்றும் அணு சக்தி ஒப்பந்தங்களும் அதைத் தொடர்ந்து மோடி ஆட்சியில் போடப்பட்ட நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களும் பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் ஏகபோகத்தையும் இராணுவமயமாக்கலையும் கொண்டு வந்தது. முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இராணுவக் கொள்கையில் பாசிசம் தன்னை உறுதிப்படுத்த துவங்கியுள்ளது.
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்வித்துறையின் மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு கல்வித்துறை மையப்படுத்தப் படுகிறது.
நீட் சட்டம், புதிய மருத்துவ ஆணைய மசோதா மூலம் மருத்துவ துறை மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மருத்துவத் துறை மையப்படுத்தப்படுகிறது.
வேளாண்மைத் துறையில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 16 அம்ச திட்டம், ஒப்பந்த விவசாயம், பண்ணை விவசாயம், குத்தகை விவசாயம் எனும் பெயர்களில் நிலங்கள் கார்ப்பரேட்டுகளின் கைகளில் கொட்டிக் குவிக்கப்படுகின்றன.இவ்வாறு மாபெரும் உற்பத்தி சக்தியான நிலம் மையப்படுத்தப் படுகிறது.
தொழில் துறையில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமானது மையப்படுத்துதலை தீவிரப்படுத்தியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி,எஸ்.டி வரி விதிப்பும் சில்லரை வர்த்தகத்தை அழித்தது மட்டுமன்றி சிறு, குறு தொழில்களையும் அழித்து வருகிறது. தொழில் துறையில் கார்ப்பரேட்டுகளின் ஏகபோகம் பெருகியுள்ளது.
வங்கித் துறைகளின் நெருக்கடியானது வங்கிகள் பெரு முதலாளிகளின் வாராக் கடனால் திவால் அடைவதையும், அவை பெரும் வங்கிகளால் விழுங்கப்படுவதையும், வங்கிகளின் இணைவையும் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு நிதித்துறை மையப்படுத்தப்படுகிறது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பானது மாநில அசுகளின் வரி விதிக்கும் உரிமையைப் பறித்து, மாநிலச் சந்தைகளை மையப்படுத்தியுள்ளது.
உதான், பாரத் மாலா, சாகர் மாலா திட்டங்கள் மூலம் உள்கட்டமைப்புத் துறைகள் மையப்படுத்தப்படுகிறது.
இந்த பொருளாதார மையப்படுத்துதல் பின்வரும் அரசியல் மையப்படுத்துதலுக்கு இட்டுச் செல்கிறது :
மேற்கண்ட பொருளாதார மையப்படுத்துதல் மாநில அரசுகளின் அரசியல் உரிமைகளைப் பறித்து அதிகாரம் மையப்படுத்தப்படுகிறது.
என்.ஐ.ஏ. சட்டம் மூலம் சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டின் மீதான மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது.
ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் பெயர்களில் ஆங்கில, சமஸ்கிருத, இந்தி மொழிகளின் ஆதிக்கத்தால் தேசிய இனங்களின் மொழிகளும் பண்பாடுகளும் அழிக்கப்படுகிறது.
திட்டக் கமிசன் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டதன் மூலம் மாநில அரசுகளின் நிதி திட்டமிடல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் குடியுரிமை பற்றி தீர்மானிக்கும் அரசியல் உரிமையானது குடியுரிமைச் சட்ட திருத்தம் மூலம் பறிக்கப்பட்டு மையப்படுத்தப்படுகிறது.
அண்மையில் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, மின்சார சட்ட திருத்த வரைவு 2020, அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்த சட்டம் 2020, வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, விலை உத்திரவாதம் வேளாண் சேவைகள் மீதான பாதுகாப்பு அவசர சட்டம் 2020 போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை - இந்திய விவசாயத் துறையில் உற்பத்தி முதல் விலை நிர்ணயம் வரை அனைத்தையும் கார்ப்பரேட்மயமாக்கும் சட்டங்களை - பாசிச முறையில் ஏவியுள்ளது பாஜக ஆட்சி. இந்த புதிய காலனிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை மீதான மாநிலங்களின் உரிமையைப் பறித்து ஒரே வேளாண் சந்தை எனும் பெயரில் விவசாயத்துறை மையப்படுத்தப்படுகிறது. மேலும் உணவு தானியக் கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உணவு தானியக் கழகம் மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்துகிறது. இச்சட்டங்களை எடப்பாடி கும்பல் ஆதரிக்கின்றது.
இவை மட்டுமின்றி, இயற்கை வளங்கள் - மூலப்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஆதி திரட்டல் வடிவிலான காலனியச் சுரண்டலுக்கு வித்திடும் சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்ட வரைவை நிறைவேற்றியுள்ளது பாஜக ஆட்சி. இது இயற்கை வளங்கள் - மூலப்பொருட்கள் மீதான மாநில உரிமைகளைப் பறிக்கின்ற, மக்களின் சட்ட உரிமையைப் பறிக்கின்ற, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற, வரலாற்றுப் பொறுப்புடைமை என்கிற சர்வதேச தீர்மானத்தைக் கைவிடுகின்ற பாசிசச் சட்டமாகும்.
கல்வி, பண்பாடு, அரசு எந்திரம், நிர்வாகம் என அனைத்து துறைகளும் காவிமயமாக்கப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இராணுவப் பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தை இந்துமதவாதமாக மாற்றுவது, இந்துத்துவாவை இராணுவமயப்படுத்துவது எனும் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை நடைமுறைக்கு வர துவங்கியுள்ளது. உ.பி.யில் மனு நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1980களில் 8 அல்லது 10 தரகு வர்க்கக் கும்பலின் நலன்களுக்காகவும், அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல்களுக்காகவும் கட்டியமைக்கப்பட்ட பாசிசம், தற்போது தரகு முதலாளித்துவத் தன்மையில் ஏகபோகம் மேலும் பெருகி அம்பானி, அதானி போன்ற 2 அல்லது 3 தரகு முதலாளித்துவ வர்க்கக் கும்பலின் நலன்களுக்காகவும், அமெரிக்க ஊகவணிக, நிதியாதிக்க ஏகபோகக் கும்பல்களின் நலன்களுக் காகவும் பொருளாதாரம் மையப்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்படுவதற்கும், இந்த அதிகார மையப்படுத்துதலானது பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது. (இதனால் மாநில சுயாட்சி கோரிக்கைகள் மேலெழும்புகின்றன. தேசிய இனங்களின் இத்தகைய தன்னாட்சி கோரிக்கைகளை லெனினிய அடிப்படையில் தீர்வு காணவேண்டும்.)
புதிய காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் பாசிசம் வருமா
ஏற்கனவே கூறியவாறு 1. அந்த நாட்டின் வரலாற்று பொருளாதார சமூக நிலைமை, அந்த நாட்டின் தனித்தன்மை 2. உலக அரங்கில் அதன் இடம் ஆகியவற்றையொட்டி பாசிசம் வளர்கிறது என்றார் டிமிட்ரோவ். மேற்கண்ட அம்சங்களின் அடிப்படையில் நமது நாட்டின் 1. வரலாற்று சமூக நிலைமையைப் பொறுத்தவரை புதிய காலனிய அரை நிலப்பிரபுத்துவ சமூக நிலைமையைக் கொண்டுள்ளது. 2. அதன் தனித்தன்மையானது தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்க நலன்களுக்கு சேவை செய்வதாகும். 3. அதன் பொதுத்தன்மை நிதி மூலதனத்தைச் சார்ந்து நின்று ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்வதாகும்.
எனவே, இந்தியாவில் பாசிசம் பெரும் அதிகார வர்க்க தரகு முதலாளித்துவம், நிலபிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்களுக்குச் சேவை செய்கிறது. இந்தியாவின் பாசிசம் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவப் பாசிசமாக வெளிப்படுகிறது. நிலப்பிரபுத்துவம் தனது பொதுவான ஜனநாயக விரோதத் தன்மையாலும் ஒடுக்கும் பண்பினாலும் இந்து மதவெறியைத் தோற்றுவிப்பதற்கு அடிப்படையாக அமைவதாலும் அது பாசிசத்திற்கு முக்கிய அடித்தளமாக விளங்குகிறது. எனவே புதிய காலனிய அரை நிலபிரபுத்துவ நாட்டிலும் பாசிசம் வரும். இந்த பாசிசமானது தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவப் பாசிசமாகும். இது பெரும் அதிகார வர்க்க தரகு முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றின் நலன்களுக்குச் சேவை செய்வதாகும்.
பாராளுமன்ற ஜனநாயகம் இருக்கும் போது இந்தியாவில் பாசிசம் வருமா
பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு என்பதே இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான். இந்த அரசியல் நிர்ணய சட்டம் மத்திய அரசின் கையில் அதிகாரம் பெறுவதற்கு வழிவகை செய்வதோடு, தேவைப்படும்போது அரசாங்கங்களை தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர் போன்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கும் வழிவகை செய்கிறது. மக்களுக்கு ஓட்டுப் போடும் உரிமையைத் தவிர கலைக்கும் அதிகாரமோ, தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையோ இல்லை. சுருங்கக்கூறின் தற்போது இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் மந்திரிகள் அடங்கிய சிறு கும்பலிடம் சரியாகச் சொல்வதெனில் பிரதம மந்திரியின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ளன. இன்றைய புதிய காலனிய அரை நிலப்பிரபுத்துவ, எதேச்சதிகார ஆட்சி அமைப்பின் மேற்கூரையாக மட்டுமே பாராளுமன்ற ஜனநாயகம் இயங்குகிறது. முதல் கட்டத்தில் எதேச்சதிகாரமும் இரண்டாவது கட்டத்தில் பாசிசமும் செயல்பட்டது. எவ்வாறு எதேச்சதிகாரம் பாராளுமன்றத் திரை மறைவில் ஒளிந்துகொண்டு இயங்குகிறதோ அதேபோல் பாசிசமும் பாராளுமன்ற திரைக்குப்பின்னால் ஒளிந்து கொண்டு இயங்குகிறது. காஷ்மீர், வடகிழக்கு மாகாணங்களில் இன்றும் ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே அங்கு தேர்தல் நடத்தப்பட்டது, இதற்கு பச்சையான எடுத்துக்காட்டாகும். இன்று பெருவாரியான சர்வாதிகார எதேச்சதிகார நாடுகளில் இவ்வாறான தேர்தல் நடத்துவது வழக்கமாகிவிட்டது. ஹிட்லர் கூட தேர்தலின் மூலம் தான் அதிகாரத்துக்கு வந்தான். எனவே இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு இருந்தாலும் பாசிசம் வரும் என்று தெளிவாகிறது. இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை பாசிசத்திற்கு திரையாக மட்டுமே உள்ளது. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பாசிசம் வருகிறது என்பதுதான் உண்மை.
பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கைகள்
பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கையானது:
(1) கார்ப்பரேட்டுகள், மடங்கள், கோயில்கள், நிலப்பிரபுக்களிடமுள்ள நிலக் குவியலை பாதுகாத்தல். (2) நிதி மூலதன இறக்குமதியை சார்ந்திருத்தல். (3) ஏகபோக அதிகாரவர்க்க முதலாளித்துவ சிறு கும்பல் அதிகார தொழில் துறையில் மையப்படுத்துதலை அதிகரிக்க உதவுதல். (4) திட்ட செலவினங்களுக்காக மறைமுக வரி, பணவீக்க பொருளாதாரத்தின் மூலம் நிதி திரட்டுவதன் மூலமும் மக்களைக் கசக்கிப் பிழிதல். மேற்கண்ட திட்டங்களின் மூலம் தரகு முதலாளித்துவ நலன்களுக்கு உகந்த முறையில் திட்டமிடல் ஆகிய கொள்கைகளை வெறித்தனமாகவும் வேகமாகவும் பின்பற்றுகிறது.
பாசிசத்தின் ஆதாரக் கோட்பாடு:
வேளாண்மைத் துறையிலும் தொழில் துறையிலும் பாசிசத்தின் ஆதாரக் கோட்பாடு பின்வருமாறு உள்ளது.
1) வேளாண்மைத் துறையில் நிலத்தின் மீதான நிலப்பிரபுக்களின் ஏகபோகத்தையும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளையும் பாதுகாத்துக் கொண்டே அந்நிய மூலதனத்தைச் சார்ந்து நின்று நிலப்பிரபுக்களை முதலாளித்துவச் சாகுபடி முறைகளை மேற்கொள்ளச் செய்வதன்மூலம் முதலாளித்துவ வளர்ச்சிக்கு திட்டமிடல்.
2) தொழில் துறைகளில் அதிகாரவர்க்க தரகு முதலாளிகளின் மையப்படுத்துதலுக்கு சேவை செய்யும் பொருட்டு இடு பொருட்களை இறக்குமதி செய்வதையும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதையும் சார்ந்து உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.
மேற்கண்ட ஆதாரக் கோட்பாடுகளுக்கு இசைவாக தனது ஆட்சியை அமைத்துக் கொள்கிறது பாசிசம்.
பாசிசமயமாக்கம்
1980களில் ராஜீவ் கும்பல் நிலபிரபுத்துவம், தரகு முதலாளித்துவம் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற அந்நிய மூலதனம் குறிப்பாக இரண்டு வல்லரசுகளுக்கு (அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம்) சேவை செய்யும் பொருட்டு எதேச்சதிகார ஆட்சி முறையையும் பாசிசக் கொள்கையையும் கடைபிடித்தது. இந்திய அரசை பாசிசமயமாக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டது. இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் என்ற திரைமறைவில் இதைச் செய்தது.
தற்போது மோடி கும்பலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் பொருட்டு இந்திய அரசை பாசிசமயமாக்குவதற்கான முயற்சியை செய்துவருகிறது.
பாசிசத்தின் வெளிப்பாடுகள்
பாசிச கும்பலின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அனைத்து உழைக்கும் மக்கள், ஆட்சியில் இல்லாத தரகு முதலாளித்துவப் பிரிவினர், புதிய வகைப்பட்ட முதலாளித்துவ நிலப்பிரபுக்கள், மாநில தரகு முதலாளிகள் இந்த வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், திருத்தல்வாதக் கட்சிகள் ஆகியோரிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சந்திப்பதற்காகவும் தனது ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவும் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் குவித்துக் கொள்வதற்காகவும் மாநில அரசின் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்த அதிகார வர்க்க முதலாளித்துவப் பாசிசக் கும்பல்களும் முயல்கின்றன.
1. அரசியல் உரிமைக்காகவும் ஜனநாயகத்திற் காகவும் வாழ்நிலை மேம்பாட்டிற்காகவும் பரந்துபட்ட மக்கள் போராடிப் பெற்ற அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் கருப்புச் சட்டங்கள் போட்டு பறிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
2. மதச்சார்பின்மை அரசு என்று சொல்லிக் கொண்டே மதவெறியைத் தூண்டுதல் குறிப்பாக வேளாண்மைத் துறையில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை திசை திருப்பவும் பழைய, புதிய வகை நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை கிராமங்களில் பாதுகாப்பதற்காகவும் சாதிவெறித் தூண்டப்படுகிறது.
3. மக்களின் தேசிய மற்றும் ஜனநாயக உரிமைக்காகவும் மக்களால் நடத்தப்படும் போராட்டங்களை பழைய முறைகளில் அடக்கி ஆள முடியாததாலும், மக்களும் பழைய முறையில் அடங்கிப் போக மறுப்பதாலும், பாசிசம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
4. ஆட்சியாளர்களை எதிர்த்து நடத்தப்படும் போர்க்குணமிக்க போராட்டங்களை ஒடுக்கும் பொருட்டு போராளிகளை சுட்டுத் தள்ளுதல், போராட்டத்தையே கலவர பிரதேசமாக மாற்றி போலீஸ் ராஜ்ஜியம் நிறுவப்படுகிறது.
5. அதிகார வர்க்கத்தின் தொங்கு சதையாக செயல்பட திட்டக்கமிஷன் கலைக்கப்படுகிறது.
6. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளின் உரிமைகளைப் பறித்து தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
7. நிதித்துறை மற்றும் அரசு நிர்வாகத் துறைகள் அனைத்தையும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இது சிவில் நிர்வாகத்தின் இடத்தை சிறுகச்சிறுக போலீஸ் நிர்வாகம் எடுத்துக் கொள்வதற்கு வழி செய்கிறது. அனைத்து வாழ்வுத் துறைகளிலும் திட்டமிட்டு 'ரா' (ஸிணீஷ்), சிபிஐ (சிஙிமி), என்.ஐ.ஏ. (ழிமிகி) எனும் உளவு ஸ்தாபனம் ஈடுபடுத்தப்படுகிறது.
8. பொதுத்துறை மற்றும் நிதித் துறையைத் திட்டமிட்டு ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
9. ஏகாதிபத்தியங்களிடம் கமிஷன் பெரும் ஆட்சியாக இருப்பதால் லஞ்ச லாவண்யங்கள் ஒரு பொதுப் போக்காகவே மாற்றப்பட்டுள்ளது.
10. தேசியவாதத்தைத் தூண்டுதல்:
தேசிய இனங்களின் சமத்துவத்தை மறுப்பதற்காக தேசிய இனங்களால் ஜனநாயக உரிமைக்காக நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதற்ககாவும் இந்தி மொழியைத் திணிப்பதற்காகவும் அந்நிய உறவுகளில் தெற்காசியாவின் மீது தனது துணை மேலாதிக்கத்தை நிறுவும் கனவுகளுடன் தேசியவாதம் தூண்டப்படுகிறது.
11. பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடுதல்:
அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவித்துக் கொள்வதற்கு எதிராக மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும், தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள், சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் போர்க்குணமிக்க போராட்டங்களாக மாறும்போது அவற்றை அடக்குவதற்கும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
12. அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து புரட்சிகரமான நிலச்சீர்திருத்தம் செய்வதன் மூலம் உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தி சுயேட்சையான தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடுவதற்கும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கும் மாறாக நிதி மூலதனத்தை இறக்குமதி செய்வதன் மூலமும் உற்பத்தியைப் பெருக்கும் கொள்கைகள் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் விளைவுகளாக:
1, இராணுவத்தை வலிமைப்படுத்தும் கொள்கையையும் விஸ்தரிப்பு வாதத்தையும் தீவிரப்படுத்துகிறது.
2. தெற்கு ஆசியாவில் தனது துணை மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்திற்காகவும் அண்டை நாடுகளில் உள்ள அரசுகள் மக்கள் போராட்டங்களால் அச்சுறுத்தப்படும் போதும் ஆட்டம் காணும் போதும் தனது எஜமானர்களான ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஏவளுக்கு இணங்க அண்டை நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய எடுபிடி அரசைக் காக்கும் பொருட்டு அண்டை நாடுகளில் ராணுவ தலையீடு செய்கிறது.
3. இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு ஏற்றவாறு இராணுவ வலிமையைக் கட்டி அமைக்கிறது. மோடி கும்பல் இந்திய பொருளாதாரத்தை இராணுவப் பொருளாதாரமாகக் கட்டமைக்கிறது. மக்களின் நல்வாழ்வுத் துறைக்கு நிதி வெட்டப்படுகிறது.
4. இவற்றின் விளைவாக இந்திய அரசியல் இராணுவ அதிகார வர்க்கத்தின் செல்வாக்கை ஓங்கச் செய்வதுடன் எதேச்சதிகார முறை வலுப்பெற்று ஓங்கச் செய்வதற்கும் வழி செய்கிறது.
தொகுத்துக் கூறினால் பாசிசக் கொள்கைகள் பின்வரும் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன:
1. அனைத்து வாழ்வுத் துறைகளிலும் அதிகாரம் மையப்படுத்துதல்.
2. போலி பாராளுமன்ற அமைப்பு என்ற திரை மறைவுக்குப் பின் பாசிச ஆட்சியைக் கட்டியமைத்தல்.
3. மக்கள் போராடிப் பெற்ற அரைகுறையான ஜனநாயக உரிமைகளை கருப்புச் சட்டங்கள் மூலம் சிறுகச்சிறுக பறிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. சுயாட்சி அதிகாரம் அமைப்புகளில் அதிகாரங்களை சிறுமைப்படுத்தி அவ் அமைப்புகளை தலையாட்டி பொம்மையாக மாற்றியமைத்தல்.
4. நீதித்துறை, சுயாட்சி அதிகார அமைப்புகளின் அதிகாரங்களை நிறுவனப்படுத்தி அவ் வமைப்புகளை தலையாட்டி பொம்மையாக மாற்றி அமைத்தல்
5. பொதுத்துறை, பொது நிதித்துறை ஆகியவற்றை ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கங்ககளின் கட்டுப்பாட்டில் வைத்தல்.
6. திட்டக்கமிஷனைக் கலைத்தல்.
7. பெரும் தேசிய வெறிப் பாசிசம் மூலம் தேசிய இனங்களை ஒடுக்குதல் இந்துத்துவப் பாசிசம் மூலம் தேசிய இனங்களை மத ரீதியாக துண்டித்தல்.
8. இந்து மதவெறி.
9. வெளிப்படையான பயங்கரவாதம்.
10. மறைமுக வரி விதித்தல், பணவீக்கப் பொருளாதாரம், அந்நிய கடன்கள் மூலம் நிதி திரட்டல்.
11. நிதி மூலதனம் இறக்குமதி செய்யப் படுவதையும் இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்தலையும் உற்பத்தி பொருட்களின் பெருக்கத்தை ஏற்றுமதி செய்வதையும் சார்ந்து உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல்.
எனவே இந்தியா இன்று ஒரு வளர்ந்து வரும் பாசிசப் போக்கை கொண்டிருக்கிறது. மோடி கும்பல் இந்திய அரசை பாசிச மயமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு அடியிலும் அதை எதிர்த்துப் போராடாவிட்டால் அது மேலும் தன்னம்பிக்கை மிக்கதாகவும், கொடூரமானதாகவும், கொடுமையான தாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது. பாசிசம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அது எத்தனை சிறிய அடியாக இருந்தாலும் அதை எதிர்த்துப் போரிட்டாக வேண்டும்.
பாசிசத்தின் பொருளியல் அடிப்படை
1. நிலத்தின் மீது நிலப்பிரபுக்கள் கொண்டிருக்கும் ஏகபோகம் பாதுகாக்கப் படுகிறது.
2. விவசாயிகள் முதலாளித்துவத்திற்கு முந்தைய வார முறைகளால் சுரண்டப்படுகின்றனர், அடக்கி ஆளப்படுகின்றனர்.
3. நிலவுடைமைக் குடும்பங்களில் ஏறத்தாழ 80 சதவீதத்திற்கான சிறு நில உடைமையாளர்கள் தங்களின் சுய நுகர்வுக்காக தங்களின் குடும்ப உழைப்பின் மூலம் உற்பத்தி செய்கிறார்கள். இன்று நவீன உற்பத்தி சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மரபு வழியிலான பின்தங்கிய உற்பத்தி சாதனங்களின் பயன்பாடு குறைந்திருக்கிறது.
4. கடன் தருவதற்கான தகுதியானது நிலவுடைமையை முன்வைப்பதால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முடியாமல் நிலப்பிரபுக்கள், நுண்கடன், தனியார் நிதி நிறுவனங்கள், லேவா தேவிக்காரர்கள், வணிகர்கள் ஆகியவர்களிடம் இருந்து கந்துவட்டி பெறும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவ்வாறு பெற்ற சிறு நிலவுடைமையாளர்கள் குத்தகை விவசாயிகளால் உருவான உபரி உற்பத்தியை நிலப்பிரபுக்கள், லேவாதேவிக் காரர்கள் மற்றும் வணிகர்களும் அபகரித்து, அதனைச் சந்தையில் பெற்றதிலிருந்து கிடைத்த பயன்களைக் கொண்டு கொழுத்து வருகிறார்கள். ஆனால் எளிய சிறிய விவசாயிகள் நில வாடகையையும் வட்டியையும் கடனையும் கட்டமுடியாமல் வறியவர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த காரணங்களால் அவர்கள் புதிய தொழில் நுட்பத்தை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் விவசாயத் துறையில் மட்டுமில்லாமல் நாட்டின் பொதுவான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் தடை பெறுகின்றன.
வேளாண்துறையில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் ஆதிக்கம்
பாசிச ஆளும் கும்பல்கள் நிலங்கள் மீது நிலப்பிரபுக்களின் ஏகபோக உரிமையைப் பாதுகாத்துக் கொண்டே அந்நிய நிதி மூலதனத்தைச் சார்ந்து நின்று நிலப்பிரபுக்களை முதலாளித்துவ சாகுபடி முறைகளை மேற்கொள்ளச் செய்வதன் மூலம் ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுவதால் தேவையான உணவு தானியங்கள் மற்றும் மூலப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்களை தொடர்ந்து கடைபிடிக்கிறது. இத்திட்ட செலவினங்களுக்காக அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்தல் பணவீக்க பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்தல் ஆகியவற்றின் மூலம் நிலமற்ற விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களிடையே நிதியைத் திரட்டுகிறது. இவ்வாறு திரட்டிய நிதியிலிருந்து புதிய தொழில்நுட்பக் கொள்கையை மேற்கொள்வதற்கான கடன் வழிகளையும் மானியங்களையும் பெரும் நிலவுடைமையாளர்களுக்கே தருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் இந்திய வேளாண் துறையில் நுழைவதற்கு மேலும் மேலும் வழிவகை செய்யப்படுகிறது. தற்போது கார்ப்பரேட் வேளாண் கொள்கைகள் மூலம் ஒப்பந்த விவசாயம், குத்தகை விவசாயம், பண்ணை விவசாயம் எனும் பெயர்களில் நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொட்டிக் குவிக்கப்படுகின்றன.
மூலதன உருவாக்க நெருக்கடி:
பின்வரும் காரணங்களால் மூலதன உருவாக்கத்தின் நெருக்கடி ஏற்படுகிறது.
1. முதலாளித்துவத்திற்கு முந்தய வாரம் அல்லது கடனுக்கான வட்டி ஆகியவற்றின் அளவைவிட தாழ்ந்த மட்டத்திலுள்ள முதலாளித்துவ முறையில் செய்யப்படும் சாகுபடியில் இருந்து கிடைக்கும் லாபம் குறைவாக உள்ளது.
2. அந்நிய மூலதனக்காரர்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு சாதகமான ஒரு விலைக் கொள்கையைக் கடைபிடிப்பதால் முதலாளித்துவ முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் இடையில் நடைபெறும் பரிவர்த்தனையில் முதலாளித்துவ முறையில் விவசாயத்தை மேற்கொள்ளும் நிலப்பிரபுக்களுக்கு பாதகமாக அமைகிறது. இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் நட்டம் வேளாண்மைத் துறையின் மீது சுமத்தப்படுகிறது.
3. ஏகபோக மூலதனக்காரர்கள் அளிக்கும் உதவி என்ற பெயரில் 1. கடன் என்ற முறையில் வட்டியும், 2. மூலதனம் என்ற முறையில் லாபத்தையும் ஆகிய இரண்டின் மூலமாக வேளாண்மைத் துறையில் மூலதன உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் விவசாயத்துறையில் முதலாளித்துவ உறவுகள் வளர்ச்சி அடைவது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதனால் உழைப்பாளிகளின் உபரியை அபகரிப்பதற்காக முதலாளித்துவத்திற்கு முந்தய முறைகளை வெறித்தனமாக கையாள்கிறார்கள். இதனால் பழைய முறையிலான ஆதிக்கத்திற்கு பணிந்து போக மறுக்கும் விவசாயிகளை எதேச்சதிகார முறையில் ஒடுக்குகிறார்கள். கிராமப்புறத்தில் இத்தகையோரே பாசிசத்திற்கு ஆதரவாக அணி திரள்கிறார்கள்.
தரகு முதலாளித்துவத்தின் வளர்ச்சி:
தொழில் துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில தரகு முதலாளித்துவக் குடும்பங்கள் அனைத்து மூலதனத்தையும் தங்கள் கைகளில் மையப்படுத்திக் கொள்ள முயல்கின்றன. பெரும் தரகு முதலாளிகளின் மூலதனங்களின் இலாபங்கள் அதிகமாக இருப்பதால் சிறிய மூலதனம் உள்ள கம்பெனிகளில் மூலதனங்களும், இலாபங்களும் குறைவாக இருப்பதால் அவர்களுடன் போட்டி போட முடியவில்லை.
1) 1960-ல் தனியார் கம்பெனிகளின் மொத்த வருமானத்தில் 75 சதத்தை பெரிய மற்றும் நடுத்தர கம்பெனிகள் பெற்றன.
2) 1960களின் இறுதியில் மொத்த கம்பெனிகளின் வருமானத்தில் இந்த கம்பெனிகளின் வருமானம் 90 சதமாக உயர்ந்துவிட்டது, இத்தகைய நிலைமைகளை பயன்படுத்திக்கொண்டு கம்பெனிகளின் டைரக்ட் போர்டுகளை இணைத்தல் மூலமாகவும் சிறிய பிற கம்பெனிகளில் முதலீடு செய்வதன் மூலமாகவும் சிறிய மூலதனங்களை விழுங்கி விட்டன.
இந்திய தரகு முதலாளித்துவப் பெரும் நிறுவனங்கள்:
1. தங்களுக்குத் தேவையான உடைமைகளையும் பிற பகுதிகளையும் சிறு மூலதன உடைமையாளர்களின் தொழிற்சாலைகளில் செய்யவைத்து உபரியை அபகரித்துக் கொள்ளுதல்.
2. பிற கம்பெனிகளில் முதலீடு செய்தல் பிற கம்பெனிகளின் டைரக்ட் போர்டுகளை இணைத்தல்.
3. நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் மூலதனங்களை விழுங்கி விடுதல்.
4. தங்களுக்கு போட்டியாக உள்ள தொழில் நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது.
ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு ஏகபோக நிலைமையை அடைவதன் மூலம் இலாபத்தைப் பெருக்கிக் கொள்வதை தங்கள் நோக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள். புதிய தொழிற்சாலையை தொடங்குதல், தொழில் அபிவிருத்தி செய்தல், உற்பத்தியை பெருக்குதல் ஆகியவற்றின் மூலம் இலாபத்தை பெருக்குவதைக் காட்டிலும் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி கொண்டு இருக்கும் தொழிற்சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் இலாபத்தைப் பெருக்கி ஒரு புல்லுருவி வர்க்கமாக உருப்பெற்றுள்ளது. இன்று மொத்தத்தில் தொழில்துறை அம்பானி, அதானி, டாடா, பிர்லா மற்றும் சிலரின் கைகளில் உள்ளது. இந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் ஏகாதிபத்தியத்துடனும் அரசாங்கத்துடனும் குறிப்பாக பிரதமர் வீட்டோடு உள்ள நெருக்கமான உறவுதான் இவ்வாறு தனியார் மூலதனங்கள் மேலும் மேலும் ஒரு சிலர் கைகளில் மையப்படுத்தும் பெருமளவிலான மூலதனம் அரசின் கையில் மையப்படுத்தும். இவை இரண்டும் மொத்தமாக ஏகாதிபத்தியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏகாதிபத்திய மூலதனம், அரசு மூலதனம், தரகு பெரும் மூலதனம் இம்மூன்றும் பின்னிப்பிணைந்த வலிமைமிக்க ஒரே மூலதனம் குவியலாகியுள்ளது. இதனையே அதிகாரவர்க்க தரகு மூலதனம் என்கின்றோம்.
ஆளும் வர்க்கங்களுக்கு இடையே முரண்பாடு:
இந்திய மற்றும் உலகப் பொருளாதார நிலைமைகளில் நெருக்கடி வளர வளர இந்தக் கும்பலும் இதற்கு சேவை செய்யும் வர்க்கங்களும் நாட்டில் உபரி உற்பத்தியில் பெரும்பகுதியைப் பறித்துக் கொள்கின்றன. மற்ற வர்க்கங்கள் அனைத்தும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. தவிர பிற தரகு முதலாளித்துவ மூலதனங்களை கூட விழுங்குவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர். இதனால் பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாகின்றன. ஆகையால் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயும் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையேயும் மேலும் கடுமையான சண்டைச் சச்சரவுகள் அதிகமாகின்றன. எனவே உழைக்கும் மக்களிடமிருந்து மட்டுமின்றி ஆளும் வர்க்கப் பிரிவுகளிடமிருந்தும் அரசுக்கு அச்சுறுத்தல் வருகிறது. இவற்றால் ஏற்படும் அமைதியின்மை வளர்ந்து விடாமல் தடுப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் ஆளும் வர்க்கங்கள் பாசிசத்தை நாடுகின்றன. இயல்பாகவே பொருளாதாரத்தை மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும் அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்கிறது.
இந்தியப் பாசிசமானது நிலப்பிரபுக்களிடமுள்ள நிலக்குவியலைப் பாதுகாத்தல், நிதி மூலதன இறக்குமதியைச் சார்ந்து இருத்தல், ஏகபோக அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவ சிறு கும்பல் தொழில்துறையில் மையப்படுத்துதலை அதிகரிக்க உதவுதல், திட்ட செலவினங்களுக்காக மறைமுக வரி, பணவீக்கப் பொருளாதாரம் மூலம் நிதி திரட்டுதல் ஆகிய பொருளியலை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், இந்த அதிகார வர்க்க தரகு முதலாளித்துவம் திட்டவட்டமாக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கொள்கையின் அடிப்படையில் ஆட்சி முறையின் நடைமுறை வடிவமாக வளர்ந்து வருவதுதான் இந்தியப் பாசிசமாகும்.
அதிகார வர்க்க தரகு முதலாளித்துவ சிறு கும்பல் பிற தரகு மூலதனங்களைக் கூட விழுங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதினால் பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கங்களுக்கு இடையே கடுமையான சண்டைச் சச்சரவுகள் அதிகமாகி வருகின்றன. இதனால் ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயும் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையேயும் சண்டைச் சச்சரவுகள் கடுமையாகி ஆளும் வர்க்கப் பிரிவுகள் இடமிருந்து அரசுக்கு கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது. இந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் சில தளங்களில் ஒடுக்கப்படுகிறது. இவ்வாறு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு ஒடுக்கப்படுவதால் மட்டும் பாசிசம் என்ற முடிவுக்கு வருவது தவறானதாகும்.
பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராகவும், அமைதியின்றி பெரிய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் இயக்கத்திற்கு எதிராகவும் தாக்குதல் தொடுப்பதற்காகவே பாசிசம் ஆட்சிக்கு வருகிறது என்பதுதான் உண்மை. ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவை ஒடுக்குவது மட்டும் தான் பாசிசம் என்று பார்க்கும் கண்ணோட்டமானது தெரிந்தோ தெரியாமலோ புதிய ஜனநாயகப் புரட்சியின் வர்க்கங்களை தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்குள் நேசக் கூட்டு வைத்துக் கொள்வதற்கு தள்ளிவிடலாம். இந்தக் கண்ணோட்டமானது புதிய ஜனநாயக வர்க்கங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவதற்கு தடையை ஏற்படுத்திவிடும்.
தடையற்ற இறக்குமதிக் கொள்கை:
1) 1970களில் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் பிற தொழில் நிறுவனங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் மேலும் மேலும் அந்நிய மூலதனங்களை இறக்குமதி செய்யும் வழிமுறைகளை அரசு மேற்கொண்டது. இன்று மக்களின் நிதியால் கட்டியமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோகத்திற்கு ஒப்படைத்திருக்கிறது.
2) வேளாண் துறைக்கான இடுபொருட்களை இறக்குமதி செய்வதையும் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதையும் சார்ந்து உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் கொள்கையை அரசு கடைபிடிக்கிறது. கட்டுப்பாடற்ற இறக்குமதி செய்யும் கொள்கையை பின்பற்றி வருகிறது. அந்நிய மூலதனங்கள் நாட்டில் நுழைவதற்கு கதவைத் திறந்து விட்டிருக்கிறது.
இந்திய பாசிசத்தின்பால் சமுதாய வர்க்கங்களின் அணுகுமுறை:
ஆளும் வர்க்கங்களின் பாசிசக் கொள்கைகளால் அதாவது பொருளாதார அரசியல் மையப்படுத்துதல் கொள்கைகளால் பயன் அடைபவர்கள் யார்?. பெரும் அதிகாரவர்க்க தரகு முதலாளிகளும் பெரும் நிலப்பிரபுக்களும் பயனடைகின்றனர். இக் கொள்கைகள் ஏகாதிபத்திய நலனுக்கே சேவை செய்கின்றன.
பாதிக்கப்படும் வர்க்கங்கள்:
1. உழைக்கும் மக்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், சிறுகுறு தேசிய முதலாளிகளும், வணிகர்களும் மற்றும் பிற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரும் மிகமோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
2. பணக்கார விவசாயிகளும் தேசிய முதலாளிகளும் கூட பாதிக்கப்படுகிறார்கள்.
3. பிற பெரும் தரகு முதலாளித்துவப் பிரிவினர்.
4. புது வகைப்பட்ட நிலப்பிரபுக்கள் (பசுமைப் புரட்சியால் உருவான வர்க்கப் பிரிவு)
5. மாநில மட்டத்திலுள்ள தரகு முதலாளிகள்.
மேற்கண்ட வர்க்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரசியல் பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளது. இவர்களின் நிலைபாடு சமுதாயத்தில் தனக்குள்ள அந்தஸ்தினாலும் அரசாங்கத்தில் இவ்வர்க்கங்களுக்குள்ள அந்தஸ்தினாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆளும் பாசிச கும்பல் என்றால் பாதிக்கப்படும் வர்க்கங்களில் எந்த வர்க்கங்கள் பாசிச அரசை எதிர்த்து ஒரு முரணற்ற ஜனநாயக மாற்றத்திற்காக போராடக்கூடிய வர்க்கங்கள் என்பதுதான் அடிப்படையான கேள்வியாகும். அதிகார வர்க்க ஆளும் கும்பல் கடைபிடிக்கும் மையப்படுத்துதல் கொள்கைகளே தரகு முதலாளித்துவ பிரிவினர்களுக்கிடையே பூசல்களுக்கும் மோதல்களுக்கும் காரணமாக உள்ளது. எனினும் இந்தத் தரகு முதலாளித்துவ பிரிவுகள், பாசிச அரசை எதிர்த்து ஒரு முரணற்ற ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்களா?, இவ்வர்க்கங்களின் பொதுவான அம்சம் என்னவென்று பரிசீலிப்போம்.
(1) முதலில் பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்.
பெரும் தரகு முதலாளித்துவப் பிரிவு பாசிசக் கொள்கையால் பாதிக்கப்பட்டாலும் பாசிசத்துக்கு மாறாக ஒரு ஜனநாயக மாற்றத்தை முன்வைக்க முடியாது. ஏனென்றால்,
i) பாசிசம் அடிப்படையில் தரகு முதலாளித்துவ நலனுக்காகவும் சேவை செய்கிறது. பாசிசத்தால் ஒடுக்கப்படும் ஒரு பிரிவு பாசிசத்தை எதிர்த்தாலும் அதுவும் அந்நிய நிதி மூலதன இறக்குமதியை ஆதரிக்கிறது.
ii) ஆளும் வர்க்கங்கள் பாசிசக் கொள்கைகளில் அமெரிக்க நிதி மூலதன இறக்குமதியை மட்டுமின்றி சீன-இரசிய நிதி மூலதன இறக்குமதியையும் ஆதரிப்பதாக உள்ளது. ஆகவே தரகு முதலாளித்துவ வர்க்கங்கள் ஏதாவது ஒரு ஏகாதிபத்தியப் பிரிவை ஆதரிப்பதாக உள்ளதால் அவை பாசிசத்திற்கு மாறாக ஒரு முரணற்ற ஜனநாயகத்தை மாற்றாக முன் வைக்க முடியாது. பாசிச ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு இந்த வர்க்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அவற்றால் பாசிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஏனெனில் இந்திய பாசிசம் நிலப் பிரபுத்துவத்திற்கும் தரகு முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்கிறது. இப்பிரிவுகள் தரகு முதலாளித்துவப் பிரிவாக இருப்பதோடு நிலப்பிரபுத்துவத்தையும் ஏகாதிபத்தியத்துவத்தையும் எதிர்ப்பவர்களாக இல்லாமல் ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள்.
எனவே இவர்கள் ஆட்சியில் இல்லாதபோது உண்மையில் பாசிச நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களும் பாசிச நடவடிக்கையை மேற்கொள்பவர்களாகத்தான் இருக்க முடியும். அப்படி எனில் இப்பிரிவுகள் நிலவும் பாசிச ஆட்சியை ஏன் எதிர்க்கிறது? ஏனெனில் அவை பொருளாதாரப் பங்கீட்டுக்காகவும் அரசியல் அதிகாரப் பங்கீட்டுக்காகவும் பாசிச ஆட்சியை எதிர்க்கிறது. உதாரணமாக இந்திராவின் பாசிசத்துக்கு மாற்றாக வந்த ஜனதா கட்சியின் கோஷமே "பொருளாதாரப் பங்கீடு -அரசியல் சுதந்திரம்" என்பதாகவே இருந்தது.
(2) புது வகைப்பட்ட நிலப்பிரபுக்கள்:
திட்ட செலவினங்களுக்காக நிதி ஒதுக்குவதில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளித்துவ வர்க்க நலன்களுக்கு சாதகமான விலைக் கொள்கையாலும் புதிய வகைப்பட்ட நிலப்பிரபுக்களுக்கும் ஆளும் பாசிச கும்பலுக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. எனினும் இவர்களால் பாசிசத்தை எதிர்த்து ஒரு ஜனநாயக மாற்றை முன்வைக்க முடியுமா? இவர்களாலும் பாசிசத்தை எதிர்த்து ஒரு ஜனநாயக மாற்றை முன்வைக்க முடியாது.
ஏனெனில்,
i) நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டே நிதி மூலதனத்தை இறக்குமதி செய்வதை சார்ந்து நின்று முதலாளித்துவச் சாகுபடி முறையை மேற்கொள்ளச் செய்வதின் மூலம் முதலாளித்துவ வளர்ச்சிக்கு திட்டமிடும் பாசிசக் கும்பல்களின் பாதையை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ii) அந்நிய நிதி மூலதன இறக்குமதியை சார்ந்து நின்று முதலாளித்துவ உற்பத்தியை மேற்கொள்ள விரும்புகிறார்கள்.
iii) தவிர கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களையும் எளிய விவசாயிகளையும் சுரண்டும் ஒடுக்கும் முதலாளித்துவத்திற்கு முந்தய முறையைக் கையாளுகிறார்கள்.
iv) எதேச்சதிகார முறைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள். முதலாளித்துவ சாகுபடி முறைகளை மேற்கொள்வதற்காக தனக்கு சாதகமான நிதி ஒதுக்கீட்டிற்காகவும் விலைக் கொள்கைக்காகவும் ஏகாதிபத்தியத்தையும் அதிகாரவர்க்க தரகு முதலாளித்துவத்தையும் எதிர்ப்பது என்பது அவர்களுடன் சமரசத்தை அடைவதற்காகவே போராடுகிறார்களே ஒழிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தூக்கி எறிவதற்காக அல்ல.
எனவே இவர்கள் ஆளும் பாசிசத்திற்கு எதிராக ஒரு ஜனநாயக மாற்றை முன்வைக்க முடியாது.
(3) மாநில மட்டத்திலுள்ள தரகு முதலாளிகள்:
மாநில மட்டத்திலுள்ள தரகு முதலாளிகள் வீ) பாசிச கும்பல்களின் தேசியவாதம். வீவீ) தேசிய இனங்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, குறிப்பாக அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவித்துக் கொள்ளப்படுவதை எதிர்ப்பதற்கு காரணம் மத்திய அரசியலில் பங்கு வகிக்க வாய்ப்பு இருப்பதால்தான். ஆகவே மாநில அளவில் உள்ள தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பாசிச கும்பலை எதிர்க்கிறார்கள். இவர்களாலும் பாசிச கும்பலுக்கு எதிராக ஒரு ஜனநாயக மாற்றை வைக்க முடியாது. ஏனெனில்,
i). இவர்கள் ஏகாதிபத்திய நிலவுடைமை எதிர்ப்பாளர்கள் அல்ல.
ii). தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற ஜனநாயகக் கோரிக்கையின் ஆதரவாளர்களும் அல்ல.
iii). மாறாக இவர்கள் மாநில அளவில் உள்ள மக்களை ஒடுக்குபவர்கள். இவர்களின் எதிர்ப்பு எல்லாம் மாநில அளவில் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிக அதிகாரம் தேவை என்பதுதான். இவர்களாலும் பாசிசத்திற்கு எதிராக ஒரு ஜனநாயக மாற்றை முன்வைக்க முடியாது.
(4) பணக்கார விவசாயிகள், தேசிய முதலாளிகள்:
பணக்கார விவசாயிகளும் தேசிய முதலாளிகளும் பாசிச கும்பலின் கொள்கைகளால் ஒடுக்கப்படுகிறார்கள். இவர்கள் பாசிசக் கொள்கைகளை எதிர்ப்போராக இருப்பினும் ஒரு சுயேச்சையான அரசியல் சக்தியாக திரளாமல் கணிசமான பகுதியினர் பிற தரகு முதலாளித்துவப் பிரிவுகள் பின்னாலும், மாநில அரசியல் கட்சிகள் பின்னாலும் திரளுகின்றன. எனினும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களாக பணக்கார விவசாயிகளும் தேசிய முதலாளிகளும் தேசிய இனப் பிரச்சினையில் ஒரு ஜனநாயகத் தீர்வை ஆதரிக்கலாம். குறிப்பாக வேளாண்மைத் துறையில் பின்பற்றப்படும் கொள்கைகளால் பணக்கார விவசாயிகளும், தொழிற்துறையில் மையப்படுத்தும் கொள்கையால் சிறு மூலதனங்களும் (தேசிய முதலாளிகளும்) விழுங்கப்படுவர். பொருளாதார நெருக்கடியின் விளைவாக நொடிந்து போகும் நிலையால் தேசிய முதலாளிகளும் பணக்கார விவசாயிகளும் பாசிசத்தை எதிர்க்க ஒரு ஜனநாயகத் தீர்வை ஆதிரிக்கலாம்.
(5) உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர்
உழைக்கும் மக்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரும் பாசிசக் கொள்கையால் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இன்றும் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங்களாக இருப்பதால் பாசிசத்தை எதிர்த்து ஒரு முரணற்ற ஜனநாயக மாற்றுக்காக போராடக் கூடிய வர்க்கங்களாக உள்ளனர். எனவே பாட்டாளி வர்க்க இயக்கமானது உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பிற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரைப் பிரதானமாகச் சார்ந்து நின்று ஆளும் பாசிச கும்பலின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்து ஒரு ஜனநாயக மாற்றுக்கான திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டியுள்ளது.
அவ்வாறு போராடும்போது எந்தவொரு தரகு முதலாளித்துவப் பிரிவினரோடும் புதிய வகைப்பட்ட நிலபிரபுக்களோடும் மாநில மட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகப் போராடும் தரகு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலபிரபுக்களோடும் ஐக்கிய முன்னனி அமைப்பது என்பது சாத்தியமில்லை.
பாசிசத்தின் பால் அரசியல் கட்சிகளின் அணுகுமுறை
1) காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் பிரதான இலக்குகளாக விளங்குகின்றன.
2) பிற தரகு முதலாளித்துவப் பிரிவினரையும் புதிய வகைப்பட்ட நிலபிரபுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள்
3) மாநில மட்டத்தில் ஆட்சி செய்ய விரும்பும் ஆளும் வர்க்கப் பிரிவினர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள்
4) சி.பி.எம், சி.பி.ஐ போன்ற திருத்தல்வாதக் கட்சிகள்
5) பல்வேறு சிறு உடைமையாளர்களை பிரதிநிதித்துவப் படுத்த விரும்பும் அரசியல் சக்திகள்
6) பாட்டாளி வர்க்க நலன்களைப் பிரதிநித்துவப் படுத்தும் அரசியல் குழுக்கள்
ஆகியவை பாசிசத்தின் பால் கொண்டுள்ள அணுகுமுறையை பரிசீலிக்கும்போது..
1) பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குழுக்கள்
2) திருத்தல்வாதக் கட்சிகள்
3) தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி போன்ற மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள்
மத்திய அரசின் (மோடி அரசின்) கொள்கையை எதிர்க்கின்றன.
மேற்கூறப்பட்டவற்றில், பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குழுக்கள் தவிர பிற அகில இந்திய கட்சிகளும் 2. திருத்தல்வாதக் கட்சிகளும் 3. மாநில ஆளும் வர்க்கக் கட்சிகளும் மோடி கும்பலின் பாசிசத்திற்கு எதிராக ஒரு ஜனநாயக மாற்றை வைக்க முடியாது.
திருத்தல்வாதக் கட்சிகளைப் பொறுத்த வரையில் இவைகள் சமரசவாதக் கொள்கையைக் கடைபிடிப்பது; அந்நிய நிதி மூலதன ஆதரவு கொள்கைகளைத் தமது மாநிலங்களில் செயல்படுத்துவது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சீன-இரசிய ஏகாதிபத்திய முகாமை ஆதரிப்பது போன்ற காரணங்களால் இக்கட்சிகளாலும் பாசிசத்திற்கு எதிராக ஒரு ஜனநாயகத் திட்டத்தை முன்வைக்க முடியாது. இவைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சக்திகளாகும்.
எனவே மோடி கும்பலின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்து 1. அகில இந்திய தரகு முதலாளியக் கட்சிகளாலும் 2. மாநில ஆளும் வர்க்கக் கட்சிகளாலும் 3. திருத்தல்வாதக் கட்சிகளாலும் ஒரு ஜனநாயக மாற்றை உருவாக்க முடியாது.
பாசிசமும் பாட்டாளி வர்க்க இயக்கமும்
பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்
1) அந்நிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கம் மற்றும் அரசியல் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறும் தேசிய விடுதலை என்ற கடமை.
2) நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையிலிருந்து பரந்துபட்ட மக்களின் விடுதலை. குறிப்பாக விவசாயிகளின் விடுதலை என்ற கடமை.
3) ஒரு ஜனநாயகமற்ற நாடாக இருப்பதின் விளைவாக தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதால் தேசிய இனங்களுக்கு சமத்துவம், சுயநிர்ணய உரிமை என்ற கடமை.
4) சாதியின் பொருளியல் அடித்தளமான நிலவுடைமை உற்பத்தி முறையை ஜனநாயகப் புரட்சியின் மூலம் தகர்த்தெறியாமல் சாதியை ஒழிக்க முடியாது.
5) ஜனநாயகப் புரட்சியின் மூலம் மதத்தை அரசிடமிருந்து பிரிக்காமல் மதவெறியையும், மதவெறிப் பாசிசத்தையும் வீழ்த்த முடியாது.
6) பாசிச அரசிற்கு மாற்று மக்கள் ஜனநாயக குடியரசே ஆகும்.
ஆகிய மூன்று கடமைகளும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. மோடி கும்பலின் பாசிசக் கொள்கைகள் அதிகார வர்க்க தரகு முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்பட்டாலும், ஏகாதிபத்திய நலன்களுக்கு குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் சேவை செய்வதாக இருப்பதால் முன் கூறிய மூன்று கடமைகளும் ஒன்றுக்கொன்று இணைந்தவையாக உள்ளன.
புரட்சிகர சக்திகள்
எனவே மேற்கண்ட மூன்று கடமைகளுக்காகப் போராடுகின்ற வர்க்கங்களாலும் அவற்றை பிரதிநிதித்துவப் படுத்துகிற அரசியல் கட்சிகளாலும் மட்டும் தான் மோடியின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்து ஒரு ஜனநாயக மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே மோடி கும்பலின் பாசிசத்திற்கு மாற்று "மக்கள் ஜனநாயகக் குடியரசேயாகும்". ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த தேசிய முதலாளிகளும், பணக்கார விவசாயிகளும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற அரசியல் சக்திகளும் ஓர் ஜனநாயக மாற்றத்தை ஆதரித்து முன்வரலாம்.
எனவே, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை முழக்கங்கள்
1. பாசிச ஆளும் கும்பலைத் தூக்கி எறிவோம்!!
2. மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவோம்!!
3. தேசிய இனங்களின் சமத்துவம், சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!!!
பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள்
1. கார்ப்பரேட் நிலங்கள், மடம் மற்றும் கோயில் நிலங்கள், நிலப்பிரபுக்களின் நிலங்களை பறிமுதல் செய்து தேசவுடமையாக்குவதும், கூட்டுறவு முறைகளை உருவாக்குவதும்.
2. ஏகாதிபத்திய மூலதனத்தையும், பெரும் தரகு முதலாளிகளின் மூலதனத்தையும் பறிமுதல் செய்து புதிய ஜனநாயக அரசிடம் ஒப்படைப்பது
3. தேசிய முதலாளிகளின் தொழில்களையும், வணிகத்தையும் பாதுகாப்பது
ஆகிய மூன்றும் இப்போதைய மூன்று முக்கிய கொள்கைகளாகும்.
பாசிச எதிர்ப்பில் பாட்டாளி வர்க்கத்தின் வழி
1. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் பெரும் அதிகார வர்க்க தரகு முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை எதிரியாகக் கொண்டு 2. தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதாளித்துவ வர்க்கங்களை பிரதானமாகச் சார்ந்து நின்று 3. தேசிய முதலாளிகளையும், பணக்கார விவசாயிகளையும் ஊசலாடும் ஆதரவு சக்திகளாகக் கொண்டு பிற முதலாளித்துவச் சக்திகளைத் தனிமைப்படுத்தி செயலிழக்கச் செய்து தொழிலாளர்கள் விவசாயிகளின் கூட்டணி வழியாக அதிகார வர்க்க பெரும் தரகு முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாசிச மோடி கும்பலின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் நாம் இறங்கவேண்டும்.எனவே, இன்றையக் கட்டத்தில் நமது முழக்கம் வருமாறு:
1) பாசிச மோடி கும்பலைத் தூக்கி எறிவோம்!
2) மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவோம்!!
(தொடரும்)
இந்திய பாசிசம் மற்றும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான செயல்தந்திரம் - பகுதி - 3
- சமரன்