தமிழ்நாடு வா.பட்டியலில் 74 லட்சம் பேர் நீக்கம்: அரசியல் கட்சிகள் போராடத் தவறியது ஏன்?

the hardline

தமிழ்நாடு வா.பட்டியலில் 74 லட்சம் பேர் நீக்கம்: அரசியல் கட்சிகள் போராடத் தவறியது ஏன்?

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 74.07 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகச் சுயேச்சை இளம் குடிமக்கள் கூட்டமைப்பு (Independent Young Citizens Collective) குற்றம் சாட்டியுள்ளதுடன், ‘பெருமளவிலான வாக்காளர் நீக்கம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் நவம்பர் 26ம் தேதி சென்னை அண்ணா சாலையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வெகுஜன அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய 'எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான மக்கள்' (People Against SIR) என்ற தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயல்படும் IYCC அமைப்பின் இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பிரபல அரசியல் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர், கர்நாடக இசைக் கலைஞரும் எழுத்தாளரும் ரமோன் மகசேசே விருது பெற்றவருமான டி.எம்.கிருஷ்ணா, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ மற்றும் கலாச்சார - அரசியல் செயற்பாட்டாளரும் IYCC இணை ஒருங்கிணைப்பாளருமான ராதிகா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இத்தகைய பெருமளவிலான வாக்காளர் நீக்கம், தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதிகா கணேஷ், ‘‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை எவ்வித அரசியலமைப்பு அடிப்படையும் இல்லாத பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் திட்டமிட்ட செயல்திட்டம். இந்த நடைமுறையின் விளைவாகத் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களில் சுமார் 11.5 சதவீதம் பேருக்கு இணையான 74.07 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்,’’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ‘இது ஒரு தீவிரமான ஜனநாயக நெருக்கடி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

அரசியல் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் தனது உரையில், ‘‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் பெயர்கள் நீக்கப்பட்ட தகுதியான அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 2023ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவில் ஆளும் நிர்வாகத்திற்கு 2:1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை அளிக்கும் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்,’’ என்று வலியுறுத்தினார்.

அத்துடன், ‘‘எதிர்வரும் தேர்தல்கள் இந்தத் திருத்தப்பட்ட பட்டியலுக்குப் பதிலாக, 2024ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட வேண்டும்,’’ என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இசைக் கலைஞரும் செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா பேசுகையில், ‘‘வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குழப்பத்தை உருவாக்கி வாக்காளர்களைத் திட்டமிட்டு வெளியேற்றும் நோக்கத்துடனே வடிவமைக்கப்பட்டுள்ளன,’’ என்றவர், இதற்கு எதிராக அரசியல் கட்சிகள் வலுவான எதிர்வினையாற்றாமல் இருப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் டி.எம். கிருஷ்ணா கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரம் போதுமான அரசியல் கவனத்தையோ அல்லது பொதுமக்களின் கவனத்தையோ ஈர்க்கவில்லை. இது மாநிலத்திற்கு ஏற்பட்ட ஒரு கரும்புள்ளி. ஜனநாயக அக்கறை கொண்ட ஒரு முக்கியப் பிரச்சினையாக இதனைக் கையில் எடுத்துப் போராட அரசியல் கட்சிகள் தவறிவிட்டன,’’ என்று சாடினார்.

ஜனநாயக அமைப்பில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாக இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி நீக்கப்படுவது தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் என்று குடிமக்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

நவம்பர் 26ம் தேதி சென்னை அண்ணா சாலையில் நடைபெறவுள்ள பேரணியின் மூலம், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் உள்ள குளறுபடிகளையும், வாக்காளர்களின் உரிமைப் பறிப்பையும் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தேர்தல் ஆணையத்திடம் உரிய நீதியைப் பெறுவதே தங்களது நோக்கம் என்று கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

https://thehardline.in/over-74-lakh-voters-missing-from-tamil-nadu-electoral-rolls-says-citizens-collective/?fbclid=IwdGRzaAVkDE9jbGNrBWQMSGV4dG4DYWVtAjExAHBkb2YBc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEf107wVbcsTuZRQP7hshe6xzrnbVEBqm3GUnk4tbDouJ2B_UGKbO0CXWdC7Lk_aem_3qcwACvTlwTeNOamjp-Ymg&sfnsn=wiwspwa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு