ஏழைகளை ஏய்க்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்

அறம் இணைய இதழ்

ஏழைகளை ஏய்க்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்

கந்து வட்டிக் கொடுமைகளுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் பெற்றவையாக சில மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை செய்யும் அடாவடித் தனங்களால் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு ஆளாகும் விவசாயிகளும், பெண்களும் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.

அடமானமில்லாமலும், அத்தாட்சி சொத்து பத்திரங்கள் ஏதும் இல்லாமலும் கேட்டவுனே கடன் தருபவையே மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களாகும். ஏழை, எளிய அடித்தட்டு மக்களை குறி வைத்து மட்டுமே இவர்கள் கடன் தருகிறார்கள். இந்த நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை தேடி பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பதில் தன் நிகரற்றவர்கள்.

அந்த வகையில் ட்தமிழகத்தில் ஏராளமான மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஸ்மைல், எக்விடாஸ், கிராமசக்தி, அயன் டிரஸ்ட் பவுண்டேஷன், ஆசீர்வாதம், ஃப்யூச்சர் பைனான்ஸ், சுமங்கலி எல் அன்ட் டி, சமஸ்தா, கிராம சக்தி, இதயம்-ஜீ, மகாசேமம், கிராம விடி யல், சூரியா உதயம், ஆசீர்வாதம், எக்விடாஸ், வயா, கிராமின் கூட்டா, எஸ்.பேங்க் பின் கார்ப் உஜ்ஜீவன் பைனான்ஸ், மதுரா பைனான்ஸ் உள்ளிட்ட இந்த நுண் கடன் நிதி நிறுவனங்கள் தமிழகத்தின் கிராமப் புறங்களுலும்,  சிறு, பெரு நகரங்களின் ஏழைகள் மத்தியிலும் கொடி கட்டிப் பறக்கின்றன. பல்லாயிரம் கோடிகளில் இவர்களின் பணப் புழக்கம் உள்ளது.

மதுரை, திருச்சி,தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் புற்றீசல் போல் பெருகி இயங்கும் இந்த  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களை மிரட்டியும், அவமானப்படுத்தியும் தரும் நெருக்கடிகளால் நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறதே என்ற நப்பாசையில் பெண்கள் இந்த குழுக்களில் இணைந்து கடன் வாங்குகிறார்கள். மகளிர் குழுவில் கடன் தரும் முன்பாக குழுவிற்கு 10 முதல் 15 பேர் சேர்ந்து தலைவியை தேர்ந்தெடுக்கிறார்கள். 10 ஆயிரம் தரும் போதே ஆவணச்செலவு என்று கூறி 750 ரூபாய் எடுத்துக் கொள்வார்கள். அத்துடன் கட்டாய இன்சூரன்ஸ், செய்முறைக் கட்டணம் என்றும் பணம் எடுத்துக் கொள்வார்கள்.  கடனைக் கட்டுவதில் சிறிது தாமதமானாலும் அடியாட்கள் வந்து கண்டபடி திட்டி, அபராதம் விதித்து கூடுதல் நெருக்கடிகளை தருவார் இதனால் கடன் பெறும் பெண்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.

இவர்கள் தந்திரம் என்ன்வென்றால், இந்த மகளீர் குழுவில் ஒரு பெண் கடன் கட்டத் தவறினால் அது அந்த குழுவின் தலைவியையும், குழு உறுப்பினர்களையும் சாரும் என இருப்பதால் அவர்கள் மூலமாக கூட்டமாக வந்த கடன் பெற்ற பெண் வீட்டு வாசலில் நின்று அனைவரையும் வைத்து திட்டச் செய்து நெருக்கடி தருவர். இதனால், பெண்களையே ஒருவருக்கொருவர் எதிரியாக்கியும் விடுகின்றனர். இந்த அவமானம் தாங்காமல் கூடுதல் வட்டிக்கு பிறிடொரு இடத்தில் கடன் வாங்கி இந்தக் கடனை அடித்து வேறொரு சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர் பெண்கள்.

தமிழக விவசாயப் பெருங்குடிகளின் மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்த உண்மை கண்டறியும் குழு தந்த அறிக்கையில் விவசாயிகள் பலர் தங்கள் வீட்டுப் பெண்கள் மூலமாக கடன் பெற்ற வகையில் 120 சதவித வட்டியை அவர்கள் கட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்களை தந்துள்ளனர்.

இந்த வகையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் இரண்டு கோடி ஏழைகள் இந்த மைக்ரோ பைனான்ஸ் கடன் பெற்று கந்து வட்டிக் கொடுமைகளை அனுபவிக்கின்றனர் எனத் தெரிய வருகிறது. இது ஏதோ தமிழகம் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலுமே இது நடந்து கொண்டுள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அரசின் பொதுத் துறை வங்களிலும், நபார்டு வங்கியிலும் ஆண்டுக்கு 9 சதவிகித கடன் பெற்று மகளிர் சுய உதவிகளிடம் மனம் போன போக்கில் வட்டியை வசூலிக்க்கின்றனர். ஏன் பொதுத் துறை வங்கிகள் ஏழைகளுக்கு நேரடியாக கடன் தராமல் இந்த கொடூர நிறுவனங்களின் வழியே கடன் தருகின்றனர் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். பொதுத் துறை வங்கிகளில் பெறப்படும் கடன்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அரசியலுக்காக அடிக்கடி தள்ளுபடி செய்கின்ற காரணத்தால் குறுக்கு வழியில் தள்ளுபடி செய்ய முடியாத கடனாக இதை செய்வதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இந்த மைரோ பைனான்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சியின் பின்னணியில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களின் பங்கு சட்டபூர்வமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது தான் கொடுமையாகும்.

பல வங்கிகள்  இது போன்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பின்தங்கிய ஏழை மக்களுக்கு நிதிச் சேவைகள் என்ற பெயரில் இந்தக் கொடுமைகளை அரங்கேற்றுகின்றன. இது  நுண்கடன் நிறுவனங்களுக்கு சந்தை வரம்பை கட்டற்ற வகையில் தருகிறது. சட்டமும், காவல்துறையும் இவர்களுக்கு சாதகமாக உள்ளன. சாதாரண ஒரு லேவாதேவிக் காரருக்கு பொருந்தும் கந்து வட்டிக் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் இந்த நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது தான் விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது.

பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் ஆயிரம் உரிமைத் தொகை போன்ற பலவற்றை ஓட்டு அரசியலுக்கு செய்யும் அரசியல் கட்சிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களை அதன் உன்னத நோக்கத்தை அடையும் வண்ணம்  முன்பு போல பொதுத் துறை வங்கிகள் மூலம் நேரடி கடன்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் காரணங்களுக்காக கடன் தள்ளுபடிகள் செய்யக் கூடாது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஈக்விடாஸ், ஒரு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமாகும்: சிறு தொழில்முனைவோரை மேம்படுத்துதல், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் என்ற பெயரில் சிறிய அளவிலான வணிகர்களுக்கு கடன்களை வழங்கி கறார் வசூல் செய்கின்றனர். இந்த நவீன லேவாதேவி நிறுவனம் இந்திய மாநிலங்களில் உள்ள மூன்று மில்லியன் மைக்ரோஃபைனான்ஸ் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டுள்ளது. இதில் உண்மையிலேயே பலனடைந்தவர்களும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

கடன் வாங்குவதை இயன்ற வரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாமல் வாங்க நேரிடும் போது திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகளை துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தொழில் முதலீட்டுக்கு அல்லாமல் படிப்பு, திருமணம், மருத்துவம், விவசாயம் போன்றவற்றுக்கு வாங்கிய கடன்களே பெரும் துயரங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அரசு வங்கிகளிலோ, உண்மையான அக்கறை படைத்த நட்புகளிடமோ மட்டும் கடன் பெற்றால் சிக்கல் இல்லை. வாங்கும் கடனை எப்படியும் அடைக்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்கள் மட்டுமே கடன் வாங்குங்கள்.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/18918/micro-finance-atrocities/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு