பதற வைக்கும் சம்பவங்கள் பள்ளிகளில் தொடர்வதா?
அறம் இணைய இதழ்
பள்ளிக் கல்வித் துறை படு வேகமாக வீழ்ந்து கொண்டுள்ளது பாதாளத்தில்! அடிதடி, ரகளை, ரத்தக் களரி, போதை வஸ்து பழக்கங்கள், சாதிய மோதல்கள், பாலியல் அத்துமீறல்கள்…எனக் கல்விக் கூடங்கள் கலவரக் கூடங்களாக மாறி வருகின்றன. என்ன காரணம்? யார் பொறுப்பு? செய்ய வேண்டியவை என்ன..?
இரு மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு சாதாரண வாய்த் தகறாறு முற்றி மோதலாகி, பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஆகாஷ் சமீபத்தில் (23/08/2024) உயிரிழந்த செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இடம், நாமக்கல் மாவட்டம் வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளி!
பள்ளிக் கூடங்கள் என்பவை வருங்கால சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்பிலிருந்து தவறி வருகின்றன, என்பதற்கு மேலும் பல உதாரணங்கள் சாட்சிகளாக நம் முன்னே இருக்கின்றன. பள்ளிக் கூடங்கள் உயிர் பறிக்கும் இடங்களாக பாதுகாப்பற்று மாறி வருவது கண்கூடாகக் தெரிகிறது.
சில நாட்கள் முன்பு திருச்சியில் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பெண் குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாகி வன்கொடுமை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியில் கிங்ஸ்லி தனியார் பள்ளியில் NCC முகாம் என்ற பெயரில் போலியாக நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் 13 மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட போலி பயிற்சியாளர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது போல பல முக்கிய பள்ளிகளில் இவர் பாலியல் திருவிளையாடல்களை நடத்திய தகவல்கள் எதுவும் இனி வெளிவரப் போவதுமில்லை. விசாரணைக்கும் வழியில்லை.
வட மாநிலங்களிலும் இதே நிலை . மும்பையில் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிகள் இருவரை அங்கு பணியாற்றும் தூய்மைப்பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இப்படி அன்றாடம் பள்ளி பருவக் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.அவமானமாக இருக்கிறது.
ஆகச்சிறந்த சமூகத்தைக் கட்டமைக்கும் ஆசிரிய சமூகம் கைகளைக் கட்டிக் கொண்டு அரசு அதிகாரிகள் காலால் இடப்படும் கற்பித்தல் அல்லாத வேலைகளை தலையால் செய்திடும் நிலையில் இருக்கின்றனர்.
ஒரு புறம் சாதீய அமைப்புகள் பள்ளிகளுக்குள் ஊடுருவி தலை விரித்தாடுகிறது. அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை அரிவாளால் வெட்டுப்பட்டது ஒரு கரும் புள்ளி.
சாதி ஆதிக்கத்தால் தாக்கப்பட்ட மாணவர் சின்னதுரை
ஆசிரியர்களை மாணவர்கள் கத்தியால் குத்துவது,
வழிபாட்டுக் கூட்டத்தில் ஆசிரியரை கன்னத்தில் அறைவது , மதுபானங்களை பள்ளிக்குள் அருந்தி கலாட்டாக்கள் செய்வது,
மாணவர்களிடையே போதை வஸ்து பயன்பாடு அதிகரித்திருப்பது.
இருவேறு ஊரைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அடிதடியில் இறங்குவது,
முன்னாள் மாணவர்கள், இன்றைய மாணவர்களை சாதி மத இனத்தின் பெயரில் பிரித்து பள்ளிக்குள் கலவரம் ஏற்படுத்துவது,
பள்ளிக்குள் பெற்றோர் புகுந்து ஆசிரியரை செருப்பால் அடிப்பது,
அரசியல்வாதிகள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை அவமானப்படுத்துவது ,
ஆசிரியர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது …
என பள்ளி வளாகங்களுக்குள் படுபாதகங்கள் அரங்கேறி வருவது ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது.
ஏன் பள்ளி வளாகங்கள் இத்தகைய வன்முறைக் களங்களாக மாறி வருகின்றன? அவற்றை சீர்திருத்தி இயல்பு நிலை திரும்ப என்ன மாற்றங்கள் தேவை என்பன குறித்து அரசும், கல்வித் துறையும் தீவிரமான செயல்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
பள்ளிகள் மட்டுமே இத்தகைய சிக்கல்களுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வர முடியாது. பள்ளிக்கூடங்கள் சமூகத்தின் சிறிய மாதிரிகள் (Miniature) தான். ஆகவே, சமூகத்தின் அத்தனை சிக்கல்களும் பள்ளிகளிலும் பிரதிபலிக்கின்றன.
முதலில் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான தரமான கல்வி வழங்கப்படுகிறதா? என்பதிலிருந்து சிந்திக்க ஆரம்பிக்கலாம். தரமான கல்வி என்பதில் வெறும் பாடங்களும், தேர்வுகளும் மட்டும் அடங்காது. மாணவர்கள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் , வாசித்தல், சிந்தித்து செயல்படுதல், மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல், பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்த்தல் (empathy) சமூக அக்கறை, பொது நலன் உள்ளிட்ட ஏராளமான திறன்களையும் சேர்த்துக் கொடுப்பது தான் தரமான கல்வி என்ற வரையறைக்குள் அடங்கும். அதெற்கெல்லாம் நம் கல்விக் கூடங்கள் இடமளிப்பதே இல்லை என்பது தான் நிதர்சனம்.
தனியார் பள்ளிகளில் குறைந்த பட்சம் மாணவர்களிடம் எப்போதும் ஆசிரியர்கள் இருப்பார்கள். அங்குள்ள ஆசிரியர் மாணவர் உறவு வெறும் தேர்வு மதிப்பெண் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு இருக்கிறது. அங்கு எந்தத் தவறுகள் நடந்தாலும் மூடி மறைக்கப்படுகின்றன. ஆனால் பாதிப்புக்கு உள்ளாவதோ மாணவர்கள் தான். சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி தொடங்கி கிருஷ்ணகிரி மாவட்டம் போலி NCC பயிற்சி முகாம் மாணவிகள் பாலியல் அத்துமீறலக்ள் வரை ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம். தனியார் பள்ளிகளுக்கு அவர்கள் உருவாக்கி பேணி காக்கும் போலி கவுரத்தை காப்பாற்றுவது மட்டுமே குறிகோளாகும்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் நிரந்தரமாக ஆசிரியர்கள் இருப்பதில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கல்வித் துறையின் அறிவிப்பொன்று 700 மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு ஆசிரியர் மட்டுமே என்று கூறுகிறது. அந்தப் பள்ளியில் கூடுதலாக ஒரு விளையாட்டு ஆசிரியர் இருந்தால் அவரை வேறு பள்ளிக்கு பணி நிரவல் செய்கிறது அரசு. இது மிகப் பெரிய அநீதி.
பள்ளியின் மொத்த மாணவர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் விளையாட்டு ஆசிரியர்கள்( PET ) கையில் தான் உள்ளது. திறமையான மாணவர்களின் உருவாக்கத்திற்கு விளையாட்டு ஆசிரியரின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், இங்கு பல நூறு பள்ளிகளில் பகுதி நேர விளையாட்டு ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர்.பள்ளியின் ஒழுங்கு கட்டுப்பாடு சீர்குலைவதற்கு இதுவும் ஒரு காரணமே.
மேற் சொன்ன அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காண அரசின் பரீசீலனைக்கு சில ஆலோசனைகள்;
# தொடக்கப் பள்ளிகளில் இருந்தே பள்ளிகளில் முழு நேர விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
# மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் மட்டுமன்றி சிறப்பு விளையாட்டு பயிற்சியாளர்கள்( special event coachers) நியமனம் செய்ய வேண்டும்.
# ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாடும் நேரம் அதிகமாக வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் பல பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் கிடைக்கும்.
# மனச்சிதைவுக்கு ஆளாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆகவே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டும் எனில், பள்ளிக்குள் கட்டாயமாக உளநல வகுப்புகள் நடைபெற வேண்டும். இயன்றால், தகுதிவாய்ந்த உளநல ஆலோசகர்களை ஒவ்வொரு பள்ளிக்கும் நியமிக்க வேண்டும்.
# கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். அதை விடுத்து அலைபேசி செயலி வழியாக வகுப்பறையைக் கண்காணிப்பதை தவிர்க்க வேண்டும்.
# ஆசிரியர்கள் EMIS அப்டேட்டை மனதில் கொள்ளாமல் மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களை விவரங்கள் கேட்டு அடிக்கடி நச்சரிக்கக் கூடாது.
# கல்விப் பணியல்லாத அரசின் திட்டங்களை நிறைவேற்றும் வேலையாட்களாக ஆசிரியர்களை அரசு வேலை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை விட்டு விலகி செல்லும் வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தக் கூடாது.
# அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
# கலை இலக்கியம் சார்ந்து மாணவர்களின் திறன்களை வளர்க்க வேண்டும். அதற்காக இசைப்பாடல், கைவேலை, நெசவு, விவசாயம் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் தகுதியுள்ள ஆசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.
# மாணவர்கள் பள்ளிப் பிரச்சனைகள் குறித்து பேச பள்ளிகளில் ஜனநாயக வெளி வேண்டும்.
# தரம் தாழ்ந்த வகையில் ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டக் கூடாது. எக் காரணம் கொண்டும் மாணவர்களை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தலாகாது.
# தவறு செய்யும் மாணவர்கள் தங்கள் தவறை உணர ஏதுவான சூழலை உருவாக்கி நல்வழிப்படுத்த வேண்டும்.
# தங்கள் குழந்தைகளிடம் பெற்றோர்கள் தொடர்ந்து உரையாடும் அவசியத்தை அரசும் கல்வித் துறையும் வலியுறுத்த வேண்டும்.
# மாணவர்கள் விரும்பும் வகையில் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் உரையாடலும் விளக்கமும் என இரு வழிப் பாதையாக ஜனநாயக முறையில் கட்டமைக்க வேண்டும்.
# ஒவ்வொரு பள்ளிக்கும் வெவ்வேறு பிரச்சனைகள், தேவைகள் இருக்கலாம். அதை அந்தந்தப் பள்ளிகள் தீர்த்துக் கொள்ள தேவையான சுதந்திரப் போக்கை கல்வித் துறை வழங்க வேண்டும். பொத்தாம் பொதுவாக அரசு, ஒரு செயல் முறையைப் போட்டு அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது அவசியமற்றது.
# மாணவர்களைப் பாதுகாப்பாக வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு முன்வர வேண்டும். ஏனெனில், பொதுப் போக்குவரத்துக்காக மாணவர்களின் நேரம் நிறையவே விரையமாவதோடு பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
# பள்ளிகளில் மாணவர் மனசுப் பெட்டி செயல்பாடுகள் உண்மையான முறையில் நடைபெறுவதில்லை. ஆகவே, அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
# மாணவர் அமைப்புகள் பள்ளியளவில் உருவாக வேண்டும். தேர்தல் நடத்தி மாணவர் தலைவர்,செயலாளர்களை தேர்ந்தெடுத்து பொறுப்புகளையும், கடமைகளையும் அவர்களுக்குப் புரிய வைக்கலாம்.
# பள்ளிகளில் போதைப் பொருள் உபயோகத்திலிருந்து மீண்டுவர விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதே போல் பாலின சமத்துவம் குறித்தும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
# உண்மையாகவே வாழ்வியல் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் இடங்களாக பள்ளி வளாகங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
# இன்றைய திரைப்படங்களின் வன்முறைகள் மாணவர்களை அதிகம் பாதிக்கிறது. அரசும், திரைத் துறையும் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
# இறுதியாக பாடங்களின் அளவைக் கண்டிப்பாக குறைக்க வேண்டும். பாடங்களின் சுமை மாணவர்களுக்கு மன அழுத்தம் தருகின்றது. மாணவர்கள் புத்தகங்கள் சுமக்கும் பொதி கழுதைகள் அல்ல.
ஆசிரியர்கள் சங்கத்தினர் இவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிர்பந்திக்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களுக்கு மாணவர் நலன் சார்ந்த அக்கறை, முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாகத் தேவைப்படுகிறது.
மேற்படியான கருத்துக்களை பள்ளிக் கல்வித்துறை கனிவோடு பரிசீலித்து, விரைந்து தீர்வு காண முன் வரும் என நம்புகிறோம்.
(இளவெயினி, கல்விச் செயற்பாட்டாளர்)
அறம் இணைய இதழ்