ஐந்து தலைமுறையாக உழைத்தோர் இன்று அகதிகளா?

அறம் இணைய இதழ்

ஐந்து தலைமுறையாக உழைத்தோர் இன்று அகதிகளா?

அதிகாலைத் தொடங்கி மாலை வரை கடின உழைப்பு! தேயிலை பறித்து, பறித்து மரத்து போன கைகள்! ரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டைப் பூச்சிகளின் தொல்லை!  ஓய்வற்ற உழைப்பு, அடிமாட்டுச் சம்பளம், இந்த எளிய மக்கள் இன்று அதிரடியாக வெளியேற்றப்படுவதா? காட்டைக் காப்பாற்றுவதாகச் சொல்வது உண்மையா?

மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது தான் மாபெரும் தேயிலைத் தோட்டமான மாஞ்சோலை எஸ்டேட்டாகும். தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 1929-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், அடர்ந்த இந்த மலைக் காட்டின் 8,374 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது. இந்தக் காட்டை சீர்த்திருத்தி தேயிலை, காப்பி, ஏலக்காய், மிளகு பயிரிட்டு, பணம் கொழிக்கும் எஸ்டேட்டாக உருவாக்கித் தந்தவர்கள் அந்த மலைப் பகுதியில் இருந்த பழங்குடிகளும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வரவைக்கப்பட்டத் தொழிலாளர்களும் தான்!

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தமிழக அரசு மாஞ்சோலை எஸ்டேட்டில் உள்ள 8,374 ஏக்கர் உள்பட 23,000 ஏக்கர் நிலத்தை ‘ரிசர்வ் பாரஸ்ட்’ அதாவது, காப்புக் காடாக மாற்ற உத்தரவிட்டது. இந்த நிலத்துக்கு பட்டா வேண்டும் என்று ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து குத்தகைக் காலமான 2028-க்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்து விட்டது.

சுமார் ஐந்து தலைமுறைகளாக அங்கு உழைத்து வெளி உலகத்தையே அறியாத இந்த பாமரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

தேயிலைத் தோட்ட தொழிலாளர் படும் இன்னல்களை ‘துன்பக்கேணி’ என்ற புகழ்பெற்ற சிறு கதையில் (1935) புதுமைப்பித்தன் சொல்லியிருப்பார். நூறு ஆண்டுகள் ஆனாலும் தொழிலாளர்களின் நிலை பெரிதாக மாறவில்லை என்பதை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மூலம் அறிய முடிகிறது. மாஞ்சோலை தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 40 நாட்களாக வாழ்வாதாரம் இன்றி உள்ளனர்.

இந்தச் சூழலில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  ஜுலை 16, அன்று நடந்த  பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.

மே- 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற்றக் கழக எஸ்.ஆர்.பாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.பத்ரி  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் “மாஞ்சோலை தேயிலை என்பது புகழ் பெற்றதாகும். மாஞ்சோலையில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தேயிலை உற்பத்திக்கு பிரச்சினை இல்லை. எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 8,373 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த எஸ்டேட்டின் 99 வருடக் குத்தகை இன்னும் நான்கு ஆண்டுகள் கழிந்து, அதாவது 2028 ல் முடிய உள்ளது.

ஆனால், அதற்கு முன்பாகவே, அங்கு நான்கு தலைமுறைகளாக வேலை செய்து வந்த 1000 பேருக்கு வேலை இல்லை என பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி (BBTC) கூறிவிட்டது. தொழிலாளர்களுக்கு சொற்ப தொகையை இழப்பீடாக கொடுத்துள்ளது. எனவே, தமிழக அரசு முனைப்புக் காட்டி தொழிலாளர் துறை வாயிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றத்தினால் மனநிறைவான தீர்வுவரும் எனச் சொல்ல முடியாது.   4 தலைமுறைகளாக அந்த மக்கள் சிந்திய ரத்தத்தை வீணடிக்காமல் அந்த மக்களுக்கு தலா 1/2 ஏக்கர் நிலம் மற்றும் உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு தமிழக அரசானது மனை பட்டா வழங்கியது அது தற்போது வரை அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. அதனை உரிய அதிகாரிகளிடம் மட்டுமின்றி முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம்’’ என்றார்.

தேயிலைத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் பார்த்த பி.எச்.டேனியல் அவர்கள் படும் இன்னல்களைக் கண்டு எழுதிய ‘எரியும் பனிக்காடு’ ( Red tea) நாவல் இன்றைக்கும் ஒரு முக்கியமான நாவலாகும். இதனையொத்த இன்னல்கள் இன்னமும் நிலவுகின்றன என்பதே யதார்த்தம். இங்கு தேயிலை மட்டுமின்றி காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு, போன்றவையும் பயரிடப்படுகின்றன. நிரந்தர, தற்காலிக தொழிலாளர்கள் என ஆயிரம் பேர் உள்ளனர்.

மே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி கூறியதாவது: வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து – 1919 ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக இங்கு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் கம்பெனி நுஸ்லிவாடியா என்ற வடநாட்டு மார்வாடியுடையதாகும். தேயிலைத் தோட்டத்தின் குத்தகைக் காலம் முடியும் முன்னமே, விருப்ப ஓய்வில் செல்வதாக எழுதி வாங்கிக் கொண்டு சொற்ப தொகையை நட்ட ஈடாக கொடுத்துள்ளனர். ஒருவருக்கு உச்சபச்சமாக இரண்டு இலட்ச ரூபாய் கணக்கிட்டு உள்ளனர். இது நேர்மையற்ற நட்ட ஈடாகும். போர்டு கம்பெனி மூடப்பட்டபோது தமிழக அரசின் தொழிலாளர் துறை தலையிட்டு ஓராண்டு சர்வீசுக்கு 143 நாட்கள் சம்பளம் வீதம் நட்ட ஈடு நிர்வாகத்திடம் வாங்கிக் கொடுத்தது போல இவர்களுக்கும் வாங்கித் தர வேண்டும்.

மாஞ்சோலையில் 600 குடும்பங்கள் உள்ளன. ஐந்து கிராமங்கள் உள்ளன. ஆரம்ப பள்ளி வரை தான் அங்கு படிக்க முடியும். நடுநிலைப்பள்ளியில் சேர வேண்டுமானால் கீழே சமவெளிக்கு வர வேண்டும். தினமும் மாணவர்களால் மலைக்கு வரமுடியாது. எனவே, விடுதியில் தங்கிதான் படிக்க முடியும். இதற்கு செலவாகும். தொழிலாளர்களுக்கு எந்தவிதமான மேலாண்மை பயிற்சியும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பதவி உயர்வு இல்லை. அவர்கள் எப்போதும் தொழிலாளிதான். இப்படிப்பட்ட நிலையில் தான் – அரை அடிமைகளாக உள்ளனர். வீட்டை காலி செய்யவில்லை என்றால், தண்ணீர், மின்சாரம் தரமாட்டோம் என்று நிர்வாகம் சொல்வது அடாவடி. எனவே, தமிழக அரசு உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டும். சமவெளியில் 600 குடும்பங்களுக்கும் தலா ஒரு ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும். இது சாத்தியமான கோரிக்கை தான். தமிழக அரசு நேரடியாகவோ அல்லது TANTEA என்ற கூட்டுறவு அமைப்பின் மூலமோ மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் வாழ்வுரிமை மாநாடு ஜூலை 21 ல் திருநெல்வேலியில் நடத்த இருக்கிறோம்” என்றார்.

மாஞ்சோலை தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக போராடிய போது, 1999 ல் திமுக ஆட்சியில் காவல்துறையினர் நடத்திய  துப்பாக்கிச் சூடு மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலில் தப்பித்து செல்ல முயன்று தாமிரபரணி ஆற்றில்  17 பேர் இறந்தது ஒரு ஆறாத் துயரமாக நம் மனங்களில் நிலைத்துள்ளது.

“மாஞ்சோலைத் தோட்டத்தில் இருந்து பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை தான் வெளியே செல்ல முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன” என்றார் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற்றக் கழக எஸ். ஆர்.பாண்டியன்.

” 50 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்களுக்கு 24 மாத ஊதியம், 50 வயது உள்ளவர்களுக்கு ,18 மாத ஊதியம்; இதோடு இடப் பெயர்வு படி என ரூ.10,000 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப ஓய்வூதிய திட்டம் என்பது மோசடி. தொழிலாளர்களின் அறியாமையை நிர்வாகம் பயன்படுத்தி இருக்கிறது ” என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.பத்ரி.

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என 11.7.24 அன்று சென்னையில் கூடிய தொமுச உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த 2024 ஆண்டிலுமே கூட மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் தினக் கூலி ரூபாய் 453 தான் என்பது அதிர்ச்சியாக உள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்பின் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் குமரன், எஸ்டிபிஐ அமைப்பின் அஸ்கர் அலி ஆகியோரும் உடன் இருந்தனர். மாஞ்சோலை தோட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையில்லை. அவர்களுக்கு சம்பளமும் இல்லை.

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/18575/manjolai-estate-workers/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு