போர் குணம் இழந்த கம்யூனிஸ்டுகள்!
அறம் இணைய இதழ்

‘கம்யூனிஸ்டுகள் என்றால் போர் குணம் மிக்கவர்கள்’ என்ற அடிப்படைப் பண்பில் இருந்து அவர்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடை பெற்ற விதமும், மாநாட்டின் தீர்மானங்களும் பறை சாற்றுகின்றன. ‘திமுக விசுவாசம்’ தான் மிகவும் தூக்கலாக வெளிப்பட்டுள்ளது;
கடந்த காலங்களில் பாதிக்கப்படும் எளிய மக்களின் பாதுகாவலனாக அறியப்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய திமுக அரசின் பாதுகாவலர்களாக தாங்கள் இருப்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு மாநாடு நடத்தியது போல உள்ளது.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அரசோடு தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. அதில் நமக்கு விமர்சனமில்லை. ஆனால், அதற்காக தமிழ்நாட்டில் மாநில திமுக அரசானது மத்திய பாஜக அரசின் அனைத்துவிதமான சட்ட திட்டங்களையும் அமல்படுத்தி வருவதைப் பற்றி, துளியளவும் காட்டிக் கொள்ளாமல், உழைக்கும் மக்களுக்கான ஒரு கட்சி மாநில மாநாட்டை நடத்தி தீர்மானங்கள் இயற்றி உள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கும் சில விவகாரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, சற்றே விரிவாக விவரித்துள்ள போதிலும், தமிழ் நாட்டரசின் மக்கள் விரோத போக்கை கண்டிக்காமல் வெறுமே கோரிக்கை வைப்பதும், அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மட்டும் கண்டிப்பதுமாக திமுக ஆட்சியாளர்களை வருடிக் கொடுத்துள்ளனர்.
உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களின் நிலைமைகளை எடுத்துச் சொல்லி விட்டு, அதற்கு முழுமையான காரணகர்த்தாவான தமிழ் நாட்டரசை கண்டிக்காமல், ”எனவே, உள்ளாட்சி பணிகளை தனியார் காண்ட்ராக்டர்களுக்கு மாற்றுகிற தவறான கொள்கையை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும்’’ என மன்றாடுகிறார்கள்!
”சமூக நீதிக்காக அற வழியில் போராடி வரும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 26 வது மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பவர்கள், நள்ளிரவில் நடத்தப்பட்ட அராஜக கைதுகளுக்கு காவல் துறைக்கு தலைமை தாங்கும் தமிழக முதல்வரை பொறுப்பாக்காமல், கவனமாக, ”காவல் துறையின் அத்துமீறல் மற்றும் மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கையை இம்மாநாடு கண்டிக்கிறது” என முடித்துக் கொள்கிறார்கள்.
இதே அணுகுமுறையைத் தான் சாதி, ஆணவப் படுகொலை விவகாரத்தை விரிவாக விவரித்துவிட்டு அதற்கு, ”காவல் துறையில் சாதி வன்மம் இருக்கிறது” என சொல்லிவிட்டு கடக்கிறார்கள். ஆக, எல்லோருக்கும் தெரிந்த உண்மையான காவல் துறைக்கு தலைமை தாங்குவது முதலமைச்சர் தான் என்ற விவரம் கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தெரியாமல் போய் விட்டது. முதலமைச்சரின் செயல் திறனற்ற போக்குகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்ட நிலையில், கம்யூனிஸ்ட்கள் மட்டும் தங்கள் கண்களை மூடிக் கொண்டு யதார்த்தங்களைப் பார்க்கவும் மறுக்கிறார்கள்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில், ஒரு தொழிற்சாலையில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எத்தனை சதவீதம் இருக்கலாம் என நிலையாணை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது திமுக ஆட்சி மீண்டும் வந்த பின்னரும், நிறைவேற்றப்பட்ட அதற்கு விதிகளை உருவாக்காதையும் , தற்போது நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டு வருவதையும், அமைப்பு சார்ந்த தொழில்களிலும் கூட காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் தொழிலாளர் எண்ணிக்கை எழுபது சதவீதத்துக்கும் அதிகமாகிவிட்ட சூழலையும் கண்டு கொந்தளிக்காமல் மிகவும் சாதுவாக வருடிக் கொடுக்கும் வண்ணம், ”ஆகவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தவிர்க்கக் கூடாத தேவையாகும்’’ என்கிறார்கள்.
”இவர்களை நிரந்தரமாக்கி ஊதியப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நலன்களும் வழங்கினால், அரசாங்கத்தின் செலவு அதிகமாகி, நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று, அனைத்து பாதுகாப்புகளோடும் லட்சக்கணக்கான ரூபாய்களை ஊதியமாகப் பெறும் அதிகாரிகள் சொல்வது தான் வேடிக்கை..’’ என ‘அதிகாரிகள் மட்டுமே காரணம், அவர்களை வழி நடத்தும் ஆட்சியாளர்களல்ல’ என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்து மாநாட்டில் பேச வைக்கும் சூழலில், எவ்வளவுக்கு எவ்வளவு அடக்கி வாசிக்க முடியுமோ, அந்த அளவுக்கு அடக்கி வாசித்து பம்முகிறார்கள்.
”விவசாயத்தில் வேலையின்மை அதிகரிப்பதால் நகர்மயமாதல் தீவிரமாகி வருகிறது. வேலையிழப்புக்கு ஆளாகி வரும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு நவீன கருவிகளை இயக்கும் பயிற்சிகள் அளித்து திறன் மேம்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதால் விவசாயத் தொழிலாளர்களுக்கு உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்க வேண்டும்” என்கிறார்கள்.
தமிழக ஊரக பகுதிகளில் விவசாயம் செய்பவர்களின் பிரதான பிரச்சினையே விவசாயக் கூலி வேலைகளுக்கு ஆட்களே கிடைப்பதில்லை என்பது தான். இதை எந்த ஆய்வுக்கும் உட்படுத்த தயாரில்லை கம்யூனிஸ்டுகள். டாஸ்மாக் கடந்த சில வருடங்களாக உழைக்கும் மக்களை முடக்கி போட்டு குடி நோயாளிகளாக்கி வீழ்த்தி போட்டுள்ள அவலத்தை பேசவே இவர்களுக்கு விருப்பமில்லை.
தொழிற்சங்க உரிமைகளை மத்திய அரசு மட்டுமா மறுக்கிறது…? தமிழக அரசும் தானே. சாம்சங் விவகாரத்தில் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டி இருந்ததே. 12 மணி நேர வேலை சட்டத்தை அராஜகமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு பிறகு, பின் வாங்கினாலும், தற்போது தமிழகத்தில் பரவலாக 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை வாங்கி தொழிலாளர்கள் பிழிந்தெடுக்கபடுவது பற்றி – தமிழக தொழிலாளர் நலத்துறை புகார்கள் தந்தாலும், நடவடிக்கை எடுக்காமல் ஒத்துழைப்பு தருவது பற்றி – கம்யூனிஸ்டுகள் கண்டு கொள்ளாமல் போகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையையே நகலெடுத்து தமிழ்நாட்டின் மாநிலக் கல்வி கொள்கையாக்கி திமுக அரசு தந்துள்ளது குறித்து கல்வியாளர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ள நிலையில், இது பற்றி எதுவுமே தெரியாதது போல பாசாங்கு காட்டி கீழ் வருமாறு மத்திய அரசை மட்டும் சாடிக் கடக்கிறார்கள்;
தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கிறது மத்திய அரசு. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி தர மறுத்து நிர்பந்திக்கிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் தரக் கூட இயலாத இக்கட்டான நிலைக்குள் மாநில அரசைத் தள்ளுகிறது.
திருவண்ணாமலையில் மேல்மா தொடங்கி, பரந்தூர் விமான நிலையத் திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் மாலிப்டினம் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தஞ்சை மண்ணுக்கடியில் மீத்தேன் திட்டம், கன்னியாகுமரியில் உள்ள கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 1,114 ஹெக்டேர் பரப்பளவில் கனிம சுரங்கம், திருவண்ணாமலைப் பகுதியை சூறையாடக் கூடிய பிளாட்டினம் எடுக்கும் திட்டம்.. என தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து, மக்கள் வாழ்விடங்களை அழிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கும், அவர்களின் நண்பர்களான அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களுக்கும் தமிழகத்தையே தாரை வார்த்து சேவகம் செய்து வரும் திமுக அரசின் கார்ப்பரேட் மோக நகர்வுகள் குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போல, கம்யூனிஸ்டுகள் மாநாடு நடத்தி கடந்து செல்வது காலக் கொடுமையாகும்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு கிளை கூட இல்லை. கட்சி செழித்தோங்கிய இடங்களிலெல்லாம் இன்று வழித்து போட்டது போல ஆளரவமற்று உள்ளது. கட்சியில் இளைஞர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகி கொண்டே உள்ளது. பழைய தலைமுறையில் பலரும் விலகி நிற்கிறார்கள். இந்த பலவீன நிலையிலும் கட்சிக்குள் குழு மனப்பான்மை, அதிகார துஷ்பிரயோகங்கள் தூக்கலாக உள்ளது…கவலையளிக்கும் அம்சமாகும்.
இந்தச் சூழலில் மாநிலச் செயலாளரைக் கூட முறைப்படி தேர்ந்தெடுக்க முடியாமல், அதிகாரச் சண்டையில் காரசார விவாதங்கள் அரங்கேறி, கைகலப்பு நடக்க கூடிய வாய்ப்பு உருவானதையடுத்து, ‘மீண்டும் பழைய மாநிலச் செயலாளர் முத்தரசனே 15 நாட்களுக்கு தொடர்வார்’ என முடிவெடுத்து கலைந்துள்ளார்கள்.
உழைக்கும் மக்களின் மாபெரும் நம்பிக்கையாக ஒரு காலத்தில் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தை பொருத்த அளவில், தற்போது, ‘திமுக தலைமைக்கு நாங்கள் கொத்தடிமை’ என்ற அடிமை சாசனத்தை வெளிப்படையாக எழுதி தரவில்லையே.. என்ற அளவுக்கு நாம் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/22530/cpi-state-conference/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு