இராமாயணத்தை மறுக்கும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள் - பகுதி - 3

சுந்தரசோழன்

இராமாயணத்தை மறுக்கும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள் - பகுதி - 3

அயோத்தியில் நகரம் இருந்ததா?

தென்னிந்தியார் தவிர்த்த இந்தியத்  துணைக்கண்ட வடபகுதியின் தொல்லியல் வரலாறு குறிப்பாகக் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளைப் பொறுத்த வரையில் தொல்லியல் அடிப்படையில் நன்கு அறியப்பட்டு விட்டது.

ஹரப்பா நாகரீகத்தின் கண்டுபிடிப்பு பண்டைய நம்பிக்கைகளுக்கு அளித்தது போன்ற அதிர்ச்சி தரும் மாற்றுச் சான்றுகள் எவையும் வெளியாகும் வாய்ப்புகள் வெகு வெகு குறைவு என்பதை நாம் உறுதிபடக் கூறலாம்.

அதிலும் குறிப்பாக ஹரப்பா நாகரீகத்திற்குப் பிந்தைய சமூகங்களின் பொருளாயத அடையாளங்கள் மிகத் தெளிவாகவே வரலாற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குதிரைகள் மற்றும் ரதம் எனப்படும் தேர்களைப் போர்களில் பயன்படுத்திய மக்கள் சமூகம் ஒன்று, உண்மையில் ரத்தமும் சதையுமாக இம்மண்ணில் வாழ்ந்தது என்பது உண்மையானால், அது உறுதியாகப் போதுமான தொல்லியல் சான்றுகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும். அதற்கும் மேலாக, அவை அந்நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் காலத்திற்கு உரியவையாகத் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்.

ஆனால் அத்தகைய சான்றுகள் ஒன்று கூடக் கிடையாது என்பதில் ஐயமில்லை. இராமாயண நிகழ்வுகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய திரேதாயுகத்தில் நடைபெற்றன, அல்லது 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றன என்றால், கி.மு. 1500 ஆண்டு அளவில் ரிக்வேத ஆரியக் குழுக்களால் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அறிமுகப் படுத்தப்பட்ட குதிரைகள் மற்றும் தேர்கள் ஆகியவை அவற்றில் இடம் பெற்றிருந்தது. எப்படி? என்ற கேள்விக்கு இராமாயணம் மிகப் பழமையானது என்று நம்புகிறவர்கள் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய பதில்கள் எதையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதில் ஐயமில்லை.

அயோத்தி நகரில் அரண்மனைகள் மட்டுமின்றி மாளிகைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் பலவும் கொண்ட அழகிய செல்வம் கொழிக்கும் நகரமாக இருந்தது என்று வால்மீகி இராமாயணம் சித்தரிக்கிறது.

அது உண்மையானால், சுட்ட செங்கற்களின் பயன்பாடு இல்லாமல் அத்தகைய பிரம்மாண்ட நகரத்தைக் கட்டியிருப்பது சாத்தியமற்றது. இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்த வரையில், ஹரப்பாவில் மட்டுமே பெரும் எண்ணிக்கை யிலான சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தி நகரம் கட்டப்பட்டது பற்றிய தொல்லியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட சான்றுகள் மூலம் அறிகிறோம்.'

அதற்கு முன்னரும் சரி, அதற்குப் பின்னரும் சரி, வெகு காலம் வரையில் அத்தகைய கட்டமைப்புகள் கிடையாது. ஹரப்பா காலத்திற்குப் பிந்தைய வேதகால மக்கள் சுட்ட செங்கற்களைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். சமஸ்கிருதத்தில் செங்கல்லைக் குறிக்கும் விதமாக இடம் பெற்றுள்ள இஷ்டகா என்ற சொல்லே காலத்தால் மிகப் பிந்தையதாக இருக்கும்.

ஹரப்பாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுமார் 900 ஆண்டுகள் கடந்த பின்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் அடுத்த நகரமயமாக்கல் நடைபெற்றது. அந்நகரமயமாக்கலும் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் அல்லாமல் வேறு இடங்களில் மட்டுமே நடைபெற்றன எனச் சான்றுகள் காட்டுகின்றன. ஆகவே, இராமாயணத்தில் குறிப்பிடப்படுவது போன்ற பிரம்மாண்ட மாளிகைகள் கொண்ட மாபெரும் நகரம் எதுவும் உண்மையில் இருந்தமைக்கான சான்றுகள் எள்ளளவும் கிடையாது.

அயோத்தியாவில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் அத்தகைய பண்டைய நகரத்தைக் குறிக்கும் இடிபாடுகள் அல்லது சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட பண்டைய சமூகத்தை அல்லது குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றைத் தொல்லியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் நிறுவ வேண்டுமானால் அந்தச் சமூகத்தின் இருப்பைக் கூறும் விதமான வசிப்பிடங்கள், புதைப்பிடங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், மண்பாண்டங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்ற சான்றுகள் அவசியமாகும். அத்தகைய சான்றுகள் கிடைத்தால், அவற்றைக் கால நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் அடிப்படையில் மட்டுமே அதன் இருப்பை உறுதி செய்ய முடியும். அத்தகைய சான்றுகள் எதுவும் கிடைக்காத வரையில் மதவியல் புனைகதைகள் மற்றும் காவியங்களில் கூறப்பட்ட கதைகளை வெறும் கற்பனைக் கதைகளாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இராமாயணம் குறித்த விசயத்தில் இது தான் உண்மையாகும்.

அயோத்தி ஒரு சிறப்பு மிக்க, எழில் பொருந்திய, செல்வ வளம் கொழிக்கும் நகரமாக இருந்தது என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆனால் இராமாயணத்துடன் தொடர்புடைய அயோத்தி மற்றும் இதர இடங்களில் இது வரையிலான அகழ்வாய்வுகளில் அத்தகைய பழமையான நகரத்தின் சுவடுகள் கூட எதுவும் கிடைக்கவில்லை!! கிடைத்த ஒரு சில தொல்லியல் சான்றுகளும் கூட, பவுத்த மற்றும் சமணத்துடன் தொடர்புடையவையாக இருந்தனவே தவிர இராமாயணத்துடன் தொடர்புடையவையாக இருக்கவில்லை.

வசிப்பிடங்கள், புதைப்பிடங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், மண்பாண்டங்கள் மற்றும் ஆயுதங்கள் போன்ற எந்தச் சான்றுகளும் இது வரை கிடைக்கவில்லை. ஆகவே தொல்லியல் ரீதியாக இராமாயணக் கதை குறித்த எவ்விதச் சான்றுகளும் கிடையாது என்பதே உண்மையாகும்.

இது தவிர இராமாயணம் ஒரு புனைகதை மட்டுமே எனக் காட்டும் வேறு பல சான்றுகளையும் நாம் முன்வைக்க முடியும்.

(சுந்தரசோழன்)

- ஜனசக்தி, பிப்ரவரி25 - மார்ச் 02 வார இதழில்  

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு