எலான்மஸ்க்கின் புதிய கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதா?
அறம் இணைய இதழ்

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், தொழில் அதிபர் எலான் மஸ்க்கிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? நியாயம் யார் பக்கம் உள்ளது. எலான் மஸ்க்கின் புதிய கட்சிக்கு அமெரிக்காவில் வரவேற்பு இருக்கிறதா? எலான்மஸ்க்கின் நோக்கம் மக்கள் நலன் சம்பந்தப்பட்டதா?
உலகின் சக்தி வாய்ந்த தலைவராக வலம் வரும் டொனால்டு டிரம்ப்புடன் மோதுவதற்கு உலகின் மிகப் பெரிய பணக்கார்ர் மஸ்க் தயாராகி விட்டார் . அமெரிக்க அரசியலரங்கில் நிதம் ஒன்று கூறும் டிரம்பை மீண்டும் அமெரிக்க அதிபராக்க முனைந்து செயல்பட்ட உலகின் மிகப்பெரிய பணக்காரர் மஸ்க் , அதற்காக ஏறத்தாழ 300 மி. டாலர்கள் தனது சொந்த பணத்தை செலவிட்டார்.
தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் , எலான் மஸ்க்கை தனது நிருவாகத்தின் மையப்புள்ளியாக முன்னிறுத்தினார் . அரசின் செயல்பாட்டில் திறமையைமேம்படுத்த Department Of Government Efficiency – DOGE என்ற துறையை ஏற்படுத்தி அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமித்து , அமெரிக்க அரசின் செலவினங்களை தணிக்கைசெய்து தேவையற்ற செலவினங்களை குறைக்க வழி செய்தார் டிரம்ப்.
அரசின் கொள்கை அறிவிப்பிலும், அவற்றை நடைமுறை படுத்துவதிலும் டிரம்பும் மஸ்க்கும் நகமும் சதையும் போல இணைந்து இருந்தார்கள் .
இதனால் பொறாமையுற்ற பல சக்திகள் இவர்கள் இருவருடைய நட்பு நீண்ட நாள நீடிக்காது என்றனர். ஆனால் அமெரிக்க அதிபரின் தர்பாரில் ஓரிடம் தேடிய அனைத்து நாடுகளின் தலைவர்களும் – சீனா , ரஷயாவை தவிர- எலான் மஸ்க்கிடம் நட்பு பாராட்ட வேண்டியதும், அவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதும் அவசியம் என்றும் , டிரம்பின் கவனத்தை பெற மஸ்க்கின் ஆதரவு அவசியம் என எண்ணினர். நமது பிரதமர் நரேந்திர மோடியும் டிரம்பை சந்திக்கு முன்னர் , மஸ்க்கை – அரசியல் அலுவல் ஏதுமில்லாவிடினும்- சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசின் செயல்பாட்டில் தேவையற்ற செலவினங்களை (waste) குறைத்து, கவைக்குதவாத கட்டுப்பாடுகளை தளர்த்தி , தொழில் நுட்ப உதவியடன் பணித் திறத்தை மேம்படுத்த DOGE அமைப்பு மஸ்க் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
அரசுத் துறையாக அறியப்படாத இந்த அமைப்புற்கு கணினி ஞானம் பெற்ற இளைஞர்களை மஸ்க் பணிக்கு அமர்த்தினார். அமெரிக்க அரசு அலுவலர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பினார், அரசு துறைகள் அனைத்திலும் தலையிட்டு செலவினங்களை தணிக்கை செய்கிறேன் என்று அனைவருக்கும் “தலைவலி” கொடுத்தார்.
USAID எனப்படும் மிகப் பெரிய அமெரிக்க உதவி நிறுவனத்தை முடக்கினார். இதன் மூலம் உலகெங்கிலுமுள்ள எண்ணற்ற தொண்டு நிறுவனங்களின் சமுதாய பணிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அமெரிக்க உளவு நிறுவனங்களான சி ஜ ஏ யின் மறைமுக நிதி முறையும் இதனால் பாதிப்படைந்தது, இந்தியாவிற்கு ஜனநாயகத்தை மேம்படுத்த கொடுக்கப்பட்ட உதவியை யும் இந்நிறுவனம் ரத்து செய்ததும், மோடிக்கெதிராக டிரம்ப் இதை கூறியதும் நாம் மறந்திருக்க முடியாது.
‘மோசடிகளையும், தில்லுமுல்லுகளையும் ‘ அரசு நிர்வாகத்தில் கண்டறிந்து அகற்றுவதே டோஜின் பணி என்று டிரம்ப கூறியதை தொடர்ந்து, 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மஸ்க் கல்தா (கட்டாய ஓய்வு) கொடுத்தார்.
பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் அரவணைப்பு (Diversity,Equity and Inclusion) ஆகிய பண்புகளை வளர்த்தெடுக்க, அவற்றை நடைமுறை படுத்த அமெரிக்க அரசு ஏற்கனவே பல முயற்சிகளை எடுத்திருந்தது. அமெரிக்க சமூகத்திலும், பணியிடம் மற்றும் பொது வெளிகளில் இனப்பாகுபாடுகளை களையவும், சம வாய்ப்பை மேம்படுத்தவும், அனைத்து இன(race) மக்களை அரவணைத்து செயல்படவும், பல உதவி அமைப்புகளை அமெரிக்க அரசு ஏற்படுத்தி இருந்தது. இவற்றையெல்லாம் தேவையற்ற செலவினம் (waste) என்றார் மஸ்க். ”இதை நடைமுறைபடுத்தும் DEI , ஒரு ‘பைத்தியக்கார அமைப்பு’ என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடான 1பி. டாலர்கள் தேவையற்றது” என ரத்து செய்தார் மஸ்க்! டிரம்ப் இதை பாராட்டி , மஸ்க்கை கட்டித் தழுவிக் கொண்டார்.
இப்படி டோஜ் அமைப்பு சேமித்தது 175 பில்லியன் டாலர்கள் என மஸ்க் அறிவித்தார். ஆனால் பி பி சி நிறுவனம் இதை மறுத்து உண்மையான சேமிப்பின் அளவு 32.5 பில்லியன் டாலர்கள் தான் என கூறியுள்ளது.
அரசு செலவினங்களை குறைப்பது என்ற பெயரில் நலிந்தோருக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் உதவிகளை ரத்து செய்வது என்று டிரம்பும், மஸ்க்கும் ஓரணியில் செயல்பட்டனர். பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகள் (tax cuts) அளிப்பதிலும் இருவரும் சளைக்கவில்லை!
டோஜ் அமைப்பு வெளிப்படைதன்மை இல்லாமல் செயல்படுவதாகவும், அரைகுறை உண்மைகளையும் பொய் தகவல்களையும் மக்களிடம் பரப்புவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் கூறினர். தொழிறசங்கங்களும், மற்ற அமைப்புகளும் நீதிமன்றங்களை நாடின, நீதிமன்றங்களும் டோஜ் அமைப்பின் பல முயற்சிகளை ( ஆட்குறைப்பு மற்றும் தனிப்பட்ட தகவலகளை வெளியிடுதல்) தடை செய்தது.
டோஜ் அமைப்பின் செயல்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகிய வேளையில் மஸ்க்கின் வணிக நிறுவனங்கள் (businesses) அமெரிக்க அரசுடன் பல மில்லியன் டாலர் பெறுமான வணிக ஒப்பந்தளில் ஈடுபட்டு இருப்பதும் மக்களின கவனத்தை கவர்ந்தன, அதில் உள்ள ஆதாய முரண் (Conflict of Interest) வெளிச்சத்திற்கு வந்தது. மஸ்க்கின் அரசியல் செயல்பாடுகளின் விளைவாக, அரசு அலுவல்களின் விளைவாக , டெஸ்லா மற்றும் பல மஸ்க் நிறுவனங்களின் விற்பனையும் பங்கு சந்தை விலையும் சரிவை சந்தித்தது. மஸ்க்கின் கூட்டாளியான ஜேர்டு ஐசக்மேனை, நாசா அமைப்பின் தலைவராக டிரம்ப் நியமித்தார். ஆனால், அதே ஐசக்மான் எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு நன்கொடை வழங்கியது தெரிந்ததும் டிரம்ப் ஐசக்மேனை நாசா பதவியிலிருந்து தூக்கியடித்தார்.
இத்தாலி, அர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்க தலைவர்களுடன் எலான் மஸ்க்.
இந்த நிலையில் மே மாதாம் 27 அன்று ஒரு பெரிய அழகான சட்டம் (One Big Beautiful Bill ) என டிரம்ப்பால் அறிமுகப் படுத்தபட்ட சட்டத்தை மஸ்க் விமர்சித்து கருத்து கூறினார். மே 22ல் அமெரிக்க காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட ‘இந்த சட்ட மசோதா பற்றாக்குறையை (deficit) அதிகரிக்கிறது’ என்றும் , ‘டோஜின் பணியை இம்மசோதா வீண்டிக்கிறது’ என்றும் மஸ்க் குறை கூறினார். அடுத்தநாளே டோஜின் பணிகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டார். வெள்ளை மாளிகை அவரை வழியனுப்பி வைத்த பொழுது கூட டிரம்ப், ”உண்மையில் மஸ்க் வெளியேறவில்லை” என்று கூறினார்.
அரசு செலவினங்களை கண்காணிப்பதிலும் அவற்றை முறை படுத்துவதிலும் டிரம்புக்கும், மஸ்க்கிற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வெடித்தன.
டிரம்ப் – மஸ்க் நட்பு, நீண்டநாள் நீடிக்காது என ஆருடம் கூறுவது அடிப்படை கொள்கை வேறுபாடுகளினாலா?
என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாத போதும் இருவேறு ஆளுமைகளை ஒரே உறையில் நீண்ட நாள் வைத்திருப்பது நடைமுறைக்கு உதவாது என்பது இப்பொழுது தெளிவாகி உள்ளது.
ஜூன் மாதம் 3ந்தேதி எலான் மஸ்க், டிரம்பின் மசோதாவை ஆதரிக்கும் குடியரசு கட்சியினரை கண்டித்தார். அடுத்த ஆண்டு நவம்பரில் வரும் தேர்தலில் அமெரிக்க மக்களை வஞ்சிக்கும் அரசியல்வாதிகளை தூக்கியெறிவோம் என சூளுரைத்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப் மஸ்க்கின் நடவடிக்கை கண்டு தான் அதிருப்தி அடைவதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இருவரும் (டிரம்ப் மற்றும் மஸ்க்) ஒருவரை ஒருவர் மாறி மாறி ட்வீட்களில் தாக்கி கொண்டனர். இருவரும் கடுமையாக தாக்கி கொண்டாலும், இந்த சண்டை ஜூன் 7ந்தேதி ஒரு முடிவுக்கு வந்தது. மஸ்க் டிரம்ப் குறித்த தனது ட்வீட் பதிவுகளை திரும்ப பெற்றுக் கொண்டார். பல கூற்றுக்களை – என்னால் தான் டிரம்ப் வெற்றி பெற்றார், டிரம்பை இம்பீச்மெண்ட் செய்ய வேண்டும் போன்ற கூற்றுகளை- நீக்கினார்.
ஆனாலும் “அழகான மசோதாவை” குறை கூறுவதை மஸ்க் நிறுத்தவில்லை. இம்மசோதா சட்டமானால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறையும் , அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என எச்சரித்தார்.
டிரம்புடன் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நடந்த சந்திப்பிற்கு பிறகு, மோதல்கள் குறைந்து அமைதி சில காலம் நீடித்தது. இந்நிலையில் குடியரசு கட்சியினர் அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றாலும், இப்பொழுது டிரம்ப் கொண்டு வரும் மசோதாவினால், செலவினங்கள் 6 டிரில்லியன் டாலர்களுக்கு எகிறப் போகிறது என்பதை மஸ்க் சுட்டிக் காட்டினார்.
ஜூலை 4 அன்று அமெரிக்க செனட்டில் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை அறிந்தவுடன் , அறிக்கை ஒன்று விடுத்தார். அதில் , இம்மசோதா சட்டமானால் அமெரிக்காவின் நடுநாயகமாக உள்ள 80% மக்களின் நலன்களை பாதுகாக்க புது கட்சியை நான் தொடங்குவேன் என்று அறிவித்தார். இரண்டு கட்சிகளுமே –ஐனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுமே– ஒரே நிதி கொள்கையை தான் கடைபிடிக்கின்றனர், அமெரிக்க மக்களை வஞ்சிக்கின்றனர், எனவே, மூன்றாவது கட்சியின் அவசியம் இங்கு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். மசோதா நிறைவேறினால் அதற்கு அடுத்த நாளே “அமெரிக்க கட்சி (America Party) “ என்ற புது கட்சி தொடங்குவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், “எலான் மஸ்க் தான் உலகிலேயே அமெரிக்க அரசிடமிருந்து அதிக சலுகைகளை(subsidies) பெறும் நபராவார். இச்சலுகைகள் நிறுத்தப்பட்டால் அவர் கடையை மூடிவிட்டு தனது சொந்த ஊரான தென்னாப்ரிக்காவுக்கு நடையை கட்ட வேண்டிய நேரம் வந்துவிடும் , ராக்கெட்டுகள் இனி கிளம்பாது, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆகாது, நமது நாட்டில் பெரும்பணம் சேமிக்கப்படும், டோஜ் அமைப்பை மஸ்க் நிறுவனத்தின் நடவடிக்கைகளை நன்றாக ஆராயுமாறு நாம் உத்தரவிட வேண்டும் ஏனெனில், பெரும்பணம் அங்கு வீண்டிக்கபடுகிறது “என்று கூறினார்.
இருப்பினும் , மஸ்க் தான் அறிவித்தபடி அமெரிக்க கட்சியின் (America Party) தொடக்கத்தை ஜூலை 6 ல் அறிவித்து விட்டார்.
இந்த புதிய கட்சி – மூன்றாவது கட்சி- அமெரிக்க அரசியலில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.
எலான் மஸ்க் கடந்த 2024 தேர்தலில் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியின் வெற்றிக்காக 274 மில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளார். இதை அரசியல் நடவடிக்கை குழு (Political Action Committee) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மஸ்க் செலவு செய்தார். இனி வருங்காலங்களில் இத்தகைய செலவை (நன்கொடையை) குறைப்பேன் என்றும் 2025 மே மாதத்தில் கூறியுள்ளார். எனவே அமெரிக்க கட்சிக்கு மட்டுமே இனி மஸ்க் செலவு செய்வார் என எதிர்பார்க்கலாம்.
மேலும், கொள்கையளவில் மஸ்க் , சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுதல்,எல்லைகளை மூடுதல், சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல் ஆகியவற்றில் டிரம்புடன் ஒத்துப் போகிறார் என்பதை நாம் மறக்கலாகாது.
உள்நாட்டில் செலவினங்களை ( cutting subsidies and grants) ஏழை எளியோருக்கு, நலிந்தோருக்கு, வேலையில்லாதோருக்கு, வயோதிகர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை குறைப்பதன் மூலமும், அதனை நிருவகிக்கும் செயலை நிறுத்துவதன் மூலம் செலவினங்களை குறைப்பதும் , பெரும்பணக்கார்ர்களுக்கு (முதலாளிகளுக்கு) வரிச்சலுகைகள் கொடுப்பது ஆகியவற்றில் டிரம்பின் கட்சி கொள்கைக்கும், மஸ்கின் கொள்கைக்கும் வேறுபாடு ஏதுமில்லை.
இப் புதிய மசோதாவின் நிறைவேற்றத்தால் (செலவினங்கள் அதிகரிப்பதால்) அமெரிக்க பட்ஜெட்டில் துண்டு விழும், பற்றாக்குறை (deficit) ஏற்படும் என்றும் அதன் அளவு இப்பொழுது உள்ள 2.6 டிரில்லியன் டாலருடன் 3.2 டிரில்லியன் அளவு அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரித்து மொத்தம் 6 டிரில்லியன்களை எட்டும் இந்த பற்றாக்குறையை சமாளிக்க முடியாது என்றும் மஸ்க் கூறுகிறார்.
மின்சார ஊர்தி உற்பத்திக்கும் மற்றும் சூர்ய ஒளி சக்தி உற்பத்திக்கும் சலுகைகளை (Electric Vehicle EV and Solar Energy subsidies) இந்த மசோதா மறுத்திருப்பதால் மஸ்க் இந்த மசோதாவை எதிர்க்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், இதை மறுத்த மஸ்க், ”இந்த மசோதா , நாளைய தொழில் நுட்பம் நிறைந்த தொழில்களுக்கு சலுகைகளை மறுத்து, பழைய பத்தாம் பசலி தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்பவர்களுக்கே சலுகைகள் அளிக்கின்றன” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொள்கையளவில் புதிய அணுகுமுறைகளையோ, புதிய தேவைகளையோ, கோரிக்கைகளையோ கொண்டுவராத ஒரு கட்சியாகவே மஸ்க்கின் அமெரிக்க கட்சி இன்று காட்சி அளிக்கிறது. அமெரிக்காவில் சோசலிச கருத்துக்களை சமதர்ம கருத்துக்களை முன் வைத்து புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை மஸ்க் !
அவர் ஆரம்பித்து இருப்பது, இருக்கும் இரண்டு கட்சிகளை காட்டிலும் இன்னும் இறுக்கமான செலவினக் கொள்கையுடைய பழமைவாத கட்சி தான் (Conservative Party) என்றாலும், அதை துவங்குபவர் உலகின் மிகப் பெரிய பணக்கார்ர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
சட்ட சிக்கல்கள்;
ஆனால் அமெரிக்க நாட்டில் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவது ஒன்றிய தேர்தல் ஆணையம் (Federal Election Commission) மட்டுமின்றி , ஒவ்வொரு மாநிலத்தின் தனி விதிகளும் கட்சிகளை கட்டுபடுத்தும் . அவற்றின் அடிப்படையிலேயே ஒரு கட்சியின் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறும்.
அடுத்து கட்சிக்கு நன்கொடை அளிப்பது என்பது அமெரிக்காவில் சிக்கலான ஒன்று ஆகும் 2022 ஆண்டு சட்டம் (The McCain Feingold BiPartisan Campaign Reform Act 2022)
ஒருவர் கொடுக்கும் நன்கொடையின் அளவை குறிப்பிட்டுள்ளது. அதை மீறி எவராலும் கட்சிக்கு நன்கொடை கொடுக்க முடியாது. நம்நாடு போன்று பினாமி நன்கொடையோ, தேர்தல் பத்திர மோசடியோ அங்கு நடைபெற வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் நாடு தழுவிய ஒரு கட்சியை துவக்க எலான் மஸ்க் மட்டும் போதாது, அவரை போல் ஆயிரம் நன்கொடையாளர்கள் (பினாமிகள் அல்ல) வேண்டும்!
அடுத்து மூன்றாவது கட்சிக்கான ஆதரவாளர்களும், அனுதாபிகளும் உறுப்பினர்களும் எங்கிருந்து மஸ்கிற்கு வருவர் என்பது பெரிய கேள்வி குறியாகும். குடியரசு கட்சியினர் பெரும்பாலும் டிரம்பை சுற்றியே உள்ளனர். மஸ்க் அங்கே கடை விரிப்பது சாத்தியமில்லை!
ஜனநாயக கட்சியினர் மஸ்க்கை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள், காரணம், அவர்களது பார்வையும் , மஸ்கின் பார்வையும் வேறு வேறானவை.
எனவே, மூன்றாவது கட்சி துவக்கி அடுத்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மஸ்க் போட்டியிடலாம் என்பதெல்லாம் கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சில செனட் மற்றும் காங்கிரஸ் தொகுதிகளில் தனித்து போட்டியாளர்களை நிறுத்தி , அவர்களை மஸ்க் ஆதரித்து வெற்றி பெற செய்ய முயற்சிக்கலாம் .
இதன் மூலம் தான் விரும்பும் கொள்கைகளை நடைமைறைபடுத்த ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களின் ஆதரவை ஆட்சியாளருக்கு வழங்கி மாற்றங்களை ஏற்படுத்த மஸ்க் முயற்சிக்கலாம்.
அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள செனட் சபை மற்றும் காங்கிரஸ் சபைக்கான தேர்தல்களில், மஸ்க் யாரை ஆதரித்து வெற்றி பெற வைக்க போகிறார் என்பதை பொறுத்தே மஸ்க்கின் அரசியல் தொடரும் என்று தெரிகிறது.
அதற்கு முன்னால் எதுவும் நடக்கலாம்!
(ச.அருணாசலம்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/22115/elon-musk-vs-trump/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு