சண்டை போட்டுகொண்டே இருக்க வேண்டியது தான்’ - மீண்டும் முட்டி மோதி கொண்ட ட்ரம்ப், ஜெலன்ஸ்கி
விகடன் இணையதளம்

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப், ஜெலன்ஸ்கி மோதல், ரஷ்யா என்ன செய்துகொண்டிருக்கிறது - முழு விவரம்
'மீண்டும் மீண்டுமா?' என்பதுப்போல தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் தலைதூக்கி உள்ளது.
சமீபத்தில், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில் நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்கா முன்வைத்த இரண்டு முக்கிய அம்சங்கள்...
1. கிரிமியாவை ரஷ்யப் பகுதியாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும்.
2. உக்ரைனை நேட்டோ படையில் சேர்த்துகொள்ள முடியாது.
இந்த இரண்டையும் ஏற்றுகொள்ள உக்ரைன் தயாராக இல்லை. காரணம், இது இரண்டுமே ரஷ்யாவிற்கு சாதகமானவை.
ஜெலன்ஸ்கியின் எதிர்ப்பு
கிரிமியா குறித்து அமெரிக்கா சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெலன்ஸ்கி, "இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இது நமது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது ஆகும். இது நமது பிரதேசம். உக்ரைன் மக்களின் பிரதேசம்" என்று கூறியிருக்கிறார்.
ட்ரம்ப்பின் குற்றசாட்டு
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப், "கிரிமியா பல ஆண்டுகளுக்கு முன்பே உக்ரைன் கைவிட்டு சென்றுவிட்டது. அது பற்றி விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.
அமைதி பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் ஜெலன்ஸ்கி அதை கெடுத்துவிட்டார் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுக்குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், "உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 'தி வால் ஸ்ட்ரீட்' பத்திரிக்கையின் முன்பக்கத்தில், "ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்ததை உக்ரைன் சட்டரீதியாக ஒத்துக்கொள்ளாது. இது குறித்து விவாதிக்க ஒன்றும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
அவரின் இந்த நிலைப்பாடு அமைதி பேச்சுவார்த்தையை கெடுக்கும். அதிபர் ஒபாமா காலத்திலேயே உக்ரைன் கிரிமியாவை இழந்துவிட்டது. இது இப்போது பேச்சுவார்த்தையின் பகுதியில் கூட கிடையாது.
கிரிமியாவை ரஷ்யா பிரதேசமாக ஒப்புக்கொள்ள ஜெலன்ஸ்கியிடம் யாரும் கூறவில்லை. ஆனால், 2014-ம் ஆண்டில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் ரஷ்யா கிரிமியாவை எடுத்துகொண்ட போது உக்ரைன் ஏன் ஒன்றும் செய்யவில்லை என்பது தான் கேள்வி" என்று பதிவிட்டுள்ளார்.
சண்டைப்போட்டு கொண்டு...
மேலும், 'ஒன்று ஜெலன்ஸ்கி இந்தப் பேச்சுவார்த்தையை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையேல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உக்ரைனை முழுவதும் இழக்கும் வரை அவர் சண்டைப்போட்டு கொண்டிருக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பிற்கும், ஜெலன்ஸ்கிக்கும் ஒருபக்கம் இப்படி மோதல் போய்கொண்டிருக்க, அமெரிக்காவின் துணை அதிபர் ஜெ.டி வான்ஸ், "ரஷ்யாவும், உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தையை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்த மத்தியஸ்த்தில் இருந்து அமெரிக்கா விலகிவிடும்" என்று எச்சரித்திருக்கிறார்.
ரஷ்யா என்ன செய்து கொண்டிருக்கிறது?
இந்த சண்டை ஒருபக்கம் போய்கொண்டிருக்க ரஷ்யா உக்ரைனின் தலைநகரம் கீவ் மற்றும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- விகடன் இணையதளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு