எதற்காக இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு?
அறம் இணைய இதழ்

மக்கள் மீது திடீர் கரிசனமா? ஆபரேஷன் சிந்தூரின் தோல்வி, அமெரிக்க டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு ஆகியவற்றால் இமேஜ் சரிந்திருந்த மோடி, மீண்டெழுவதற்கான தந்திரமா? ஜி.எஸ்.டியால் நிகழ்ந்து முடிந்த பேரழிவை இந்த வரி குறைப்பு மீட்டெடுக்குமா? இதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் என்ன..? ஒரு அலசல்;
எட்டு ஆண்டுகளாக காங்கிரசும் மற்ற கட்சிகளும் ஜிஎஸ்டி வரி விதிப்பை – கப்பார் சிங் டேக்ஸ் வரி என கூறி, அவற்றை இலகுவாக இரண்டு மூன்று அடுக்குகள் கொண்டதாக மாற்றியமைக்க
கரடியாக கத்திய போது, மோடியோ, நிர்மலா சீத்தாராமனோ காது கொடுத்தே கேட்கவில்லை. இதனால், கடந்த எட்டாண்டுகளில் மிகப் பெரிய அளவு பாதிப்புகளை மக்கள் பெற்றுவிட்டனர்.
இதுவரை , 5%, 12%, 18%, 28%, 40% என்று இருந்த வரி அடுக்குகளை குறைத்து 5%, 18% என இரு பிரிவுகளை மட்டும் தக்க வைத்துள்ளது இந்த மாற்றம். ஆடம்பர அல்லது தீமை விளைவிக்கும் பொருட்களுக்கு (sin goods) 40% வரியை நீட்டித்துள்ள இந்த மாற்றத்தை பிரதமர் மோடி இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமென்றும்மக்களின் சேமிப்பிற்கு அடிகோலும் விழா இது என்றும் வருணித்து புளகாங்கிதமடைந்தார்.
இவ்வளவு நாள் ஜி.எஸ்.டி எனும் பெரும் சுமையால் பல பேரழிவுகளை தொழில்துறையினர் சந்தித்துவிட்டனர். இந்த வரி குறைப்பு அரசின் சாதனையாகது. தங்களை சரிவிலிருந்து மீட்க ஆட்சியாளர்கள் செய்யும் தந்தரமேயாகும்.
உண்மையா அல்லது பம்மாத்து வேலையா?
டிரம்ப் கொடுத்த அதிரடியின் விளைவாக இந்திய ஏற்றுமதி குறைவதால் இந்திய அரசின் வருமானம் குறைந்து பண வீக்கம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாகிறது. இந்த நிலையில் பொருளுற்பத்தியில் ஏற்படும் தேக்கத்தை சீராக்க மக்களிடம் ஏற்படும் வாங்குந்திறனை கூட்டிட ஒரு அரசு முயல வேண்டும்.
மக்கள் தங்கள் நுகர்வுக்காக செலவு செய்வதை கூட்ட எண்ணி, இந்த ஜி எஸ் டி வரி சீரமைப்பை அறிவித்துள்ளார் மோடி. பலசரக்கு, விவசாய பொருட்கள், துணிமணிகள், ஆயத்த ஆடைகள், மருந்துகள் மற்றும் இரண்டு , நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட கிட்டதட்ட 375 பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. .இதன் மூலம் மக்கள் தங்களது சேமிப்பை 7 முதல் 12% கூட்டலாம் என்று அரசு கூறுகிறது.
பாக்கெட்டுகளில் வரும் பிராண்டு பொருட்களின் விலையே ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை குறையுமே ஒழிய அடைக்கப்படாத (லூசாக) வரும் பொருட்களின் விலையை இது பாதிக்காது .
இதனால் மக்கள் பிராண்டட் பொருட்களை அதிகம் நாடுவதும், இதனால் அமைப்புசாரா தொழில்கள் விற்பனை குறைந்து நொடிக்கவும் வாய்ப்புள்ளது.
அடுத்து பொருட்களின் விலை குறைவால் கையில் தங்கும் சேமிப்பை மக்கள் (consumer) எப்படி செலவழிப்பர் என ஆருடம் இங்கே பார்க்கப்பட்டுள்ளது . அது எந்த அளவிற்கு சரியானது என்பதை காலம் தான் கணிக்க வேண்டும்.
இன்று நமது நாட்டில் பெரும்பான்மையான நடுத்தர குடும்பங்களில் நிலவி வரும் நிதி நெருக்கடியை ரிசர்வ் வங்கியின் தரவு மூலம் அறியலாம்.
சேமிப்பு என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023 -2024-ல் மொத்த பொருளுற்பத்தியில் (GDP) 5.1% சதவீதமாக குறைந்து இருக்கிறது என்பதையும், குடும்பங்களின் கடன் நிலவரம் மொத்த பொருளுற்பத்தியில் 32.3% மாக உயர்ந்துள்ளதையும் அறிய முடியும்.
இந்தச் சூழலில் ஜிஎஸ்டி சேமிப்பால் கிடைப்பதை மீண்டும் மக்கள் செலவிடுவார்களா என்பது கேள்விக்குறியே ஆகும். இஎம்ஐ களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 19% உயர்த்தியுள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிட்டும் சேமிப்பு மேலும் டிமாண்டை உயர்த்தும் என எண்ணுவது வேடிக்கை தான்!
கிராமபுற மக்கள் பலனடைவார்களா?
விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டருக்கான வரி வெறும் ஐந்து சதவிகிதமாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.
பதப்படுத்தப்படாத ,அல்லது அடைக்கப்படாத, பிராண்டு அல்லாத பொருட்களை, உணவுப்பொருட்களையே அதிகம் நுகரும் கிராமப்புற மக்கள் பிராண்டட் பொருட்களின் மீதான வரி குறைப்பால் பெரிதும் பயனடையப்போவதில்லை. அவர்களது கவலையெல்லாம் விவசாய இடு பொருட்களின் விலை பற்றியது தான்.
நகர்ப்புற நுகர்வோர்களுக்கு அதிக சலுகைகளும், கடன்களில் தத்தளி்கும் நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்களுக்கு ஓரளவும், கிராமப்புற மக்களுக்கு மிக மிக சொற்பமாகவும் சலுகைகள் வழங்கும் இந்த ஜி எஸ்டி சீர்திருத்தம் உற்பத்தி நிறுவனங்களை தாண்டி நுகர்வோரை சென்றடைவதே ஒரு தடுமாற்றம் நிறைந்த ஒன்றாகும் . அளிக்கப்பட்ட வரிச் சலுகைகளை நிறுவனங்கள் நுகர்வோருக்கு கொடுக்கின்றனரா? அல்லது அவர்களே ஏப்பம் விடுகின்றனரா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டி உள்ளது.
இல்லையெனில் கிடைக்கும் சொற்ப சலுகைகளையும் நிறுவனங்களே ஏப்பம் விட்டுவிடும் . 2017ல் இப்படி தான் நடந்தது இதை உறுதிப்படுத்துகிறது எனலாம். குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் இந்த ஜி.எஸ்.டி குறைப்பு பால் பொருட்களின் விலையை கணிசமாக குறைத்திருக்க வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அதை செய்யவில்லை என்பதை பால் முகவர்கள், தொழிலாளர் நலச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
என்னென்ன விலை குறையும்?
சாக்லெட், பாஸ்தா, நூடுல்ஸ் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோன்று பனீர், நெய், வெண்ணெய், உலர் பழங்கள், நொறுக்குத்தீனி ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 அங்குலத்துக்கு மேல் உள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள், டிஷ் வாஷர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால், இந்தப் பொருட்களின் விலை சுமார் 10 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இதே போன்று 350 சி.சி.க்கு உட்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 18 விழுக்காடாக குறைக்கப்பட்டதிலும் நடுத்தர வர்க்கம் பலன் அடைகிறது.
ஆனால், இவை எல்லாம் இதே மோடி அரசால் தான் தாறுமாறாக அதிக வரிவித்து இது நாள் வரை நம் சுமையைக் கூட்டின என்பதை யாரும் மறக்க முடியாது.
மாநிலங்களின் நிதி வருவாயைக் குறைப்பார்களா?
இறுதியாக இந்த ஜி எஸ் டி சீர்திருத்தம் ஏற்படுத்தவுள்ள மோசமான விளைவுகளில் முக்கியமானது மாநிலங்களின் நிதி வருவாயில் இவை ஏற்படுத்தப்போகும் குளறுபடிகள் தான்என்றால் மிகையில்லை. பீகார் தேர்தலை ஒட்டி அரசியல் லாபம் கருதி இச் சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டதே ஒழிய தீர்க்கமான பொருளாதார வழிமுறை அல்ல.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்கள் தங்களது நிதி ஆதாரத்தையும், நிதி திரட்டும் உரிமையையும் பறி கொடுத்துள்ளதை நாம் அறிவோம். மத்திய அரசிற்கு வரும் வருமானம் இச்சீர்திருத்தத்தினால் 60,000 கோடி அளவிற்கு குறையும் என்ற நிலையில் , -மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் அளவு 2012ல் 88.6% இருந்த காலம் மாறி 2021-2022ல் அதன் அளவு 78.9% மாக சுருங்கிய நிலையில் – மாநிலங்கள் மத்தியிலிருந்து பெறும் நிதி அளவு மேலும் குறைய வாய்ப்புக்கள் ஏராளம்.
இதன் மூலம் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி கிட்டாத கனவாக தொடரும். நிதி கூட்டாட்சி என்பது எட்டாத கனியாகவே தொடரும். ஒன்றிய அரசின் ஒருதலையான ஆதிக்கத்திற்கு இது மேலும் வலு சேர்க்கும் .
சுருங்கக் கூறின், இந்த சீர்திருத்தம் துணிச்சலான பொருளாதார காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல.
தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கவும், தேர்தல் வெற்றிக்குமான முயற்சிகளே இவை.
நிலங்கள், மூலதனம் அல்லது முதலீடு, தொழிலாளர் நலன் மற்றும் முதலீட்டு சந்தை போன்றவற்றில் இன்றைய இந்தியாவின் தேவையறிந்து துணிச்சலான சீர்திருத்தங்களை பற்றி கவலை கொள்ளாத மோடி அரசு, பரபரப்பாக பேசப்படும் சீர்திருத்தங்களை முன் வைப்பதன் மூலம், சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை முட்டு கொடுத்து நிமிர்த்த மோடி அரசு முயற்சித்துள்ளது.
தேர்தல் ஆதாயத்தை கருத்தில்கொண்டே மோடி அரசின் அரசியல் முன்னெடுப்புகளானாலும் சரி, பொருளாதார சீர்திருத்தங்களானாலும் சரி, வெளிநாடுகளுடனான உறவிலும் சரி மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்படுகின்றன, அறிவிக்கப்படுகின்றன, அமல்படுத்தப்படுகின்றன.
உண்மையில் ஆட்சியாளர்கள் மந்தகதியில் உள்ள இந்திய பொருளாதாரத்தை தட்டி எழுப்ப வேண்டுமெனில், முதலீட்டு சூழலை – அரசின் மீதான அச்ச உணர்வை, அரசின் பாரபட்ச நடைமுறையை- மாற்ற வேண்டும்.
அதானி அம்பானி என க்ரோனி முதலாளித்துவத்திற்கு அரசு விடை கொடுக்க வேண்டும்.
அமைப்புசாரா துறையை ஒதுக்கி வைக்கும், மாநிலங்களை ஏமாற்றும் ஜி எஸ் டி முறையை, முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும். நிலம்,தொழிலாளர், மூலதனம், சுற்று சூழல், வேலை வாய்ப்பு போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகளும், பாதைகளும் வகுக்க வேண்டும் .
இதற்கெல்லாம் மோடி கும்பல் சரிப்பட்டு வராது! இது அவர்களது திறமைக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்பு ஆகும்.
(ச.அருணாச்சலம்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/22889/gst-tax-cut-what-is-the-benifit/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு