ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா?... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
அந்திமழை இணையதளம்
கடந்த இருபது ஆண்டுகளில் நடந்திராத மிகக் கோரமான ரயில் விபத்தாக மாறியிருக்கிறது நேற்றிரவு நிகழ்ந்த கோரமாண்டல் ரயில் விபத்து. இதுவரை 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இரண்டு பெட்டிகளில் பயணித்த எவரும் தப்பவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்த விபத்து இந்திய மக்களை துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் வரிசையாக கிடத்தப்பட்டிருக்கும் காட்சிகள், ஒடிசா மாநில இளைஞர்கள் தன்னார்வத்துடன் விபத்தில் காயமடைந்தவரளுக்கு உதவ வரிசை கட்டி நிற்கும் காட்சிகள் என சமூக ஊடகங்களில் துயரமும் நெகிழ்வுமாக பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் மூன்று ரயில்கள் மோதிய இந்த கொடூர விபத்துக்கான காரணங்கள் என்ன எனவும் பலர் எழுதி வருகின்றனர். ஒன்றிய அரசை குறைகூறும் வகையில் அமையாமல் என்ன தவறு நடந்தது, எங்கே நடந்தது என விளக்கும்படியாக பதிவுகள் அமைந்துள்ளன.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, ‘ரயில்வே மோதல் தடுப்பு தொழில்நுட்பத்தை மோடி அரசு புறக்கணித்தது பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள் என ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில், ‘2011-12ல், அப்போதைய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியின் கீழ் இந்திய ரயில்வே, "Train Collision Avoidance System (TCAS)" அமைப்பை உருவாக்கியது.
மோடி அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுவாக இதை #Kavach என்று பெயர்மாற்றம் செய்தது.
2019 ஆம் ஆண்டு வரை இந்த முக்கியமான ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை, அப்போது 3 நிறுவனங்கள் ரயில்வேயில் KAVACH ஐ உற்பத்தி செய்வதற்கும் நிறுவுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய இரயில்வேயின் மொத்த பாதை நீளம் 68,043 கி.மீ. இந்த முழு வழித்தடத்திலிருந்தும், 1,445 கிமீ தூரத்தில் மட்டுமே கவாச்/மோதல் தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது மொத்த ரயில்வே வழித்தடங்களில் 2% மட்டுமே. இன்றுவரை, சுமார் 98% இந்திய ரயில்வேயில் மோதல் தடுப்பு சாதனங்கள்/அமைப்புகள் இல்லை.
இந்திய இரயில்வேயின் 98% வழித்தடங்களில் மோதல் தடுப்பு அமைப்புகள் இல்லை என்றாலும், மோடி அரசு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகமான வந்தே பாரத் அதிவேக ரயில்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்துகிறது, அவற்றில் பெரும்பாலானவை பிரதமர் மோடியால் தனிப்பட்ட முறையில் திறந்து வைக்கப்பட்டன.
புதிய அதிவேக ரயில்கள் ஒரு ரயில்வே நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படுகின்றன, அதில் 98% மோதல் தடுப்பு தொழில்நுட்பம் இல்லாமல் உள்ளது. என்ன தவறு நடக்கலாம்?
நேற்றிரவு ஒடிசாவின் பாலசோரில் நடந்த அதிர்ச்சிகரமான ரயில் விபத்தை மோதல் தடுப்பு அமைப்பு மூலம் தடுத்திருக்கலாம்.
ஆனால் பாதுகாப்புக்கு பதிலாக மோடியின் வந்தே பாரத் வெற்று விளம்பரம் மற்றும் புகைப்படக் காட்சிகளில் பாஜக கவனம் செலுத்துவதால், 233 பேர் இறந்துள்ளனர் மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
2012 முதல் ரயில்வே பாதுகாப்பு தொழில்நுட்பத்தை புறக்கணித்த பாஜக, பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் கைகளில் 233 இந்தியர்களின் இரத்தம் உள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-க்கு மனசாட்சியோ, பொறுப்புணர்வோ, அவமானமோ எஞ்சியிருந்தால், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என எழுதியுள்ளார்.
மேலும், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பொருட்டு, ரயில்வே ட்ராக்குகளை மேம்படுத்துதல், சரிசெய்ய 2022-23 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 14 விழுக்காட்டை நிதியமைச்சர் குறைத்துவிட்டதாக ஃப்ரண்ட்லைன் முன்னாள் செய்தியாளர் ஸ்ரீதர் வி கூறுகிறார்.
நரேந்திர மோடியின் அமைச்சரவை ஆண்டுக்கு ஆண்டு நிதிஒதுக்கீட்டை குறைத்ததால், ஒட்டுமொத்தமாக அனைவரும் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என தனது ட்விட்டர் பதில் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக உள்ள இந்திய ரயில்வே-யின் சீர்கேடுகள் சரிசெய்யாவிடில் அது மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் என பலரும் அறிவுறுத்திவருகின்றன.
www.andhimazhai.com /news/india/odisha-train-accident