அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி அப்படியே நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

சாவித்திரி கண்ணன்

அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி அப்படியே நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு?

நம்பிக்கை அளிக்கிறது, நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் துரிதமான, அக்கறையான செயல்பாடுகள்! .

இந்த வயதிலும் உடனே களத்தில் இறங்கி, சம்பவ இடத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும்  நேரடியாக சென்று அவர் விசாரணை நடத்தும் பாங்கு வியக்க வைக்கிறது. இன்னும் ஒரே மாதத்தில் அவரிடம் இருந்து தெளிவான அறிக்கை வர வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன். 

நேர்மையான முறையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வில் விசாரணை நடத்தி, அறிக்கை தந்தவர் நீதிபதி அருணா ஜெகதீசன் என்பதை நாம் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.

அந்த கொடிய துப்பாக்கி சூடு அதிகாரிகளின் அதிகார அத்து மீறலினால் ஏற்பட்ட விளைவாகும் என்றது, அவர் அறிக்கை. 

அத்துடன், சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் ஆறு பேருக்கு துப்பாக்கி குண்டுகள் பின் தலையிலும், முதுகிலும், பின் கழுத்திலும் ஊடுருவி முன்புறமாக வந்துள்ளது. அமைதியாக நடந்து சென்ற மக்கள் மீது காவலர்கள் ஒளிந்து கொண்டு சுட்டுள்ளனர் என அம்பலப்படுத்தியது.  

மேலும், அத்து மீறலில் ஈடுபட்ட   தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 காவல்துறை அதிகாரிகளை அடையாளங்காட்டி, தண்டிக்க பரிந்துரைத்தது, அருணா ஜெகதீசன் அறிக்கை.

ஆனால், என்ன காரணமோ, தெரியவில்லை. அருணா ஜெகதீசன் அறிக்கையை கிடப்பில் போட்டது ஸ்டாலின் அரசு. இந்த அரசால் பல மாதங்களாக கமுக்கமாக வைக்கப்பட்ட அந்த அறிக்கையை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்தார் பிரண்ட் லைன் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன். 

காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது  தொடர்பாக மதுரை மக்கள் உரிமை கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில்  நீதிமன்றமே திமுக அரசை கடுமையாக கேள்வி கேட்டது. 

இத்தனைக்கும் அன்று எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் அந்த நிகழ்வின் துயரத்தை வெளிப்படுத்த கருப்பு சட்டை போட்டு கை உய்ர கோஷங்கள் எழுப்பி,  ’’துரிதமான விசாரணை வேண்டும், உடனடியாக டி ஜி பி உட்பட பொறுப்பில் இருக்கும் அனைத்து காவல் அதிகாரிகளும் இடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு உரிய சன்மானம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பினார் என்பதை மறக்க முடியாது.

அதே  ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும் தென் மண்டல ஐ.ஜியாக இருந்து அத்துமீறல்களை செய்த சைலேஷ் குமார் யாதவிற்கு  டிஜிபியாக பதவி உயர்வு தந்தார் என்பது தான் முரணாகும்.

ஆக, நமக்கு நீதிபதி மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் தரவுள்ள அந்த அறிக்கை மீது  ஸ்டாலின் அரசு துணிச்சலாக, பாரபட்சமற்ற நடவடிக்கை  எடுக்குமா? என்பது தான் கேள்வியாகும்.

குறைந்தபட்சம் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி அவர்கள் விஜய் கூட்டத்திற்கு குறுகலான இடம் தரப்பட்டது தொடங்கி, அடுத்தடுத்து நிகழ்ந்த ஒவ்வொரு நகர்வுக்கும் உரிய பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தவறு இருப்பதாக தெரிய வந்தாலோ, செந்தில் பாலாஜி ஆட்கள் இதில் ஊடுருவி தீங்கு விளைவித்தார்கள் என்பது உறுதியானாலோ நிச்சயம் நடவடிக்கை இருக்குமா? என்பது தான் தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/share/p/1FaHvdXdu4/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு