எல்லை மீட்பு போராட்டத்தை திசை திருப்ப விநாயகர் சிலை உடைப்பு போராட்டத்தை முன்னெடுத்த ஈ.வெ.ரா.

கதிர் நிலவன்

எல்லை மீட்பு போராட்டத்தை திசை திருப்ப விநாயகர் சிலை உடைப்பு போராட்டத்தை முன்னெடுத்த ஈ.வெ.ரா.

சித்தூர் கிளர்ச்சியை விட பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டமே எனக்கு முக்கியம்  என்றவர்  ஈவெரா

ஆந்திரராகிய  பொட்டிசிறிராமுலு உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி மாண்ட பிறகு, ஆந்திராவில் தனிமாநிலக் கிளர்ச்சி வெடித்தது. அப்போது பிரதமர் நேரு சென்னை நீங்கலாக, ஆந்திராவோடு ஏனையப் பகுதிகள் சேர்க்கப்பட்டு புதிய ஆந்திரா மாநிலம் உருவாகும் என்று அறிவித்தார்.

அப்போது நேரு எல்லை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார். நேருவின் அறிவிப்பின் படி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் சித்தூர் மாவட்டம் ஆந்திராவோடு சேரும் என்பதே அதன் சூசகமாகும். 

சித்தூர் தமிழ்ப்பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் , இல்லையேல்  போராட்டம் நடத்துவோம் என்று ம.பொ.சிவஞானம்  வெளிப்படையாக அறிவித்தார்.

அப்போது தமிழ்நாட்டிற்குரிய  சித்தூர் மாவட்டம் ஆந்திராவிடம் பறிபோவதைப் பற்றி ஈ.வெ.இராமசாமி கவலைப்படா விட்டாலும் பரவாயில்லை, அதை திசை திருப்பும் விதமாக 27.5.1953இல் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். மண்ணை மீட்பதைவிட, மண் சிலைகளை உடைப்பதிலே தீவிரமாக செயல்பட்டுள்ளார். இதை விளக்கமாக தனது " எனது போராட்டம்" நூலில் ம.பொ‌.சிவஞானம் எழுதியுள்ளார். அது பின்வருமாறு;

"வடக்கெல்லைத் தமிழர்களை ஒரு கிளர்ச்சிக்கு நான் தயாரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  பிரதமர் நேருவுக்கு வடக்கெல்லைப் பாதுகாப்பு குழுவின் சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது .

அதிலே 25 .3 .1953இல் டெல்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் விடுத்த பிறகு பிரகடனத்திலே குறிப்பிட்டு இருந்த எல்லைக் கமிஷன் , சித்தூர் மாவட்டம் பற்றியும் விசாரணை நடத்துமா ?'' என்று கேட்டும் ,  "விசாரணை நடத்தும்"  என்று உறுதி கூற வேண்டுமென்று வற்புறுத்தியும் கடிதம் எழுதப்பட்டது .  இந்தக் கடிதத்திற்குப் பிரதமரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.  பதில் எதிர்பார்க்கப்படுவதாக வாரத்திற்கொரு கடிதம் எழுதியும் ஒரு கடிதத்திற்கும் பதிலில்லை .

நேருஜியின் மௌனம் 

நேருஜியின் மௌனம் எனது ஐயத்தை மெய்ப்பித்து விட்டது . புதிய ஆந்திர மாநில எல்லைப் பிரச்னை பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்படவி ருக்கும் எல்லைக் கமிஷன் சித்தூர் பற்றியும் விசாரணை நடத்தும் என்றும் நம்பிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கும் நேருவின் மௌனம் உண்மை நிலையை உணர்த்தியது.

 போதாக்குறைக்கு,  திரு. டி . பிரகாசம்,  திரு .என். சஞ்சீவி ரெட்டி ஆகிய ஆந்திரத் தலைவர்கள் மத்திய அரசின் மார்ச் 25- ஆம் தேதிப் பிரகடனப்படி,  சித்தூர் மாவட்டம் பற்றி விசாரணை நடத்த எல்லை கமிஷனுக்கு அதிகாரம் இல்லை" யென்று ஆளுக்கு ஆள் நாளுக்கு நாள் அறிக்கை விட்டனர் 

அப்போது , இந்திய குடியரசு துணைத் தலைவராகயிருந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் கூட,  சித்தூர் மாவட்டம் முழுவதுமே ஆந்திரத்தில் இணைத்து விடுவதனை வெளிப்படையாக ஆதரித்தார்.  திருத்தணி வாசியாதலால்,  வடக்கெல்லைச் சிக்கலில் இவரது கருத்துக்கு மதிப்பு இருந்தது . 

டில்லி நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவிருந்த திரு. அனந்த சயனம் ஐயங்கார் வரிந்து கட்டிக்கொண்டு ஆந்திரருக்கு ஆதரவாக வேலை செய்தார் . சித்தூர் தமிழ் ஐயங்காரான இவர் அசல் ஆந்திரரை விடவும் தீவிரமாக இருந்தார்.

 இப்படி ஆந்திரரெல்லாம்-  டாக்டர் இராதாகிருஷ்ணன்,  அனந்த சயனம் போன்ற இரு மொழி (தமிழ் - தெலுங்கு)  பேசுவோருட்பட ஒரே அணியில் இருந்தது போல , தமிழர் இருக்கவில்லை .

திரு திரு ஆர் .வேங்கடராமன் எம்.பி. "சித்தூர் மாவட்டம் ஆந்திரத்திலே சேர்க்கப்பட்டு விட்டது அதன் எந்தப் பகுதி மீதும் தமிழர் உரிமை கொண்டாடுவதற்கில்லை"  என்று அறிக்கை விட்டார் .

முதல்வர் ராஜாஜி வடக்கெல்லைக் கிளர்ச்சி பற்றி சட்டப்பேரவையில் பேசுகையில் ,

"திருப்பதி கலாச்சாரத் துறையில் இன்னமும் தமிழ் பிரதேசம் தான்.  அதை ஆந்திரர் மறுக்க முடியுமா?  ஆயினும்,  அரசியல் துறையில் நாம் ( தமிழர்)  அதை இழந்து விட்டோம் . திருப்பதி நமக்குத் திரும்பாது.  அதை கண்ணெடுத்தும் பார்க்க வேண்டாம்.  திருப்பதி ஆந்திராவில் இருக்கிறது- இருக்கும் ."

என்று கூறி,  என்னை கைவிட்டு விட்டார்.  ராஜாஜி என்னைக் கைவிட்டது திருப்பதி விஷயத்தில்தான்!  சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிற தமிழ்ப் பகுதிகளைப் பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை . ஆயினும்,  சித்தூர் மாவட்டம் முழுவதுமே ஆந்திரத்துக்குரியது என்று தமிழக முதல்வர் கூறிவிட்டார் என்று ஆந்திரத் தலைவர்கள் வியாக்கியானஞ் செய்து கொண்டு வெற்றி முரசு கொட்டினர் .

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான  வார ஏடாகிய 'ஜனசக்தி ' ராஜாஜியின் அறிக்கையை வரவேற்று,  அவருக்கு "சபாஷ்" கூறியது.  அத்துடன் இதை ராஜாஜி இப்போதுதான் சொல்லுகிறார் . நாங்கள் முன்பே சொல்லி விட்டோமே!"  என்று தற்பெருமை பேசியது .

ஈ.வெ.ரா. பெரியார் 

இதே நேரத்தில் பெரியார் ஈ.வெ.ராவும் 'தினத்தந்தி'  நிருபருக்களித்த பேட்டி ஒன்றில்,  எல்லைக் கிளர்ச்சி பற்றித் தனது நிலையை விளக்கினார். அதிலே ,

"தமிழரசுக் கழகத்தாரோடு திராவிடர் கழகத்தாருக்குக் கருத்து வேற்றுமை இருப்பதால்தான் சித்தூர் கிளர்ச்சியில் எனது கழகம் கலந்து கொள்ளவில்லை .

" மேலும் கடவுள் சிலை உடைப்பு இயக்கத்தை நான் துவக்கி இருப்பதால்,  எல்லைக் கிளர்ச்சியில் கவனஞ் செலுத்த என்னால் இயலவில்லை. அவரவர்கள் போராட்டம் அவரவர்களுக்குப் பெரிது. "

ராஜாஜி , பெரியார் ஈ.வெ.ரா.,  ஆர். வெங்கட்ராமன்,  'ஜனசக்தி'  ஆகியோரின் போக்கு சித்தூர் மாவட்டம் முழுவதையும் தங்களுடையதாக்கிக் கொள்ள விரும்பிய ஆந்திரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது . 

தமிழ் மக்களிலே பலர்,  "இவ்வளவு பெரியவர்களெல்லாம் கைவிட்ட பின்னர் சிவஞானமாவது,  வடக்கெல்லையை மீட்பதாவது ? " என்று கருதினர்.  வடக்கெல்லைக்  கிளர்ச்சியைக்  கைவிடுமாறு என்பால் நல்லெண்ணங் கொண்ட 'கல்கி' இரா. கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்களும் எனக்கு அறிவுரை கூறினர் .

எனது நிலைமை பரிதாபகரமானதாகத் தான் இருந்தது.  ஆயினும்,  நான் மனந் தளரவில்லை . நான் எந்த ஒரு தனி மனிதரையோ , தனி ஒரு அரசியல் கட்சியையோ  நம்பி எல்லைக் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை. சென்னையைக்  காப்பதிலே எனக்குக் கை கொடுத்த தமிழினப் பொதுமக்கள்,  வடக்கெல்லையை மீட்பதிலே என்னைக் கைவிட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன்.

நன்றி: ம.பொ.சிவஞானம் எழுதிய " எனது போராட்டம்" நூலிலிருந்து. பக்கம் 642, 643, 644.‌

- கதிர் நிலவன் 

https://www.facebook.com/story.php?story_fbid=122190951554297431&id=61558922956619&rdid=Am0b9LthjRIhxl2t

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு