இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து

இரா முருகவேள்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம். செந்தளம் நிலைபாட்டிலிருந்து விமர்சனபூர்வமாக வாசிக்குமாறு கேட்டு கொள்கிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

நக்பா –  பேரழிவு

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி  இஸ்ரேல் நாடு, தனது முற்றுகையிலுள்ள காசா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் மூத்த தளபதியான தாய்சேர் மஹமூத் அல் ஜபாரி என்பவரை விமானத் தாக்குதல் நடத்திக் கொன்றது.  மறுநாள் இதே அமைப்பின் இன்னொரு தளபதியான காலித் மசூர் என்பவரையும் கொலை செய்தது. இஸ்லாமிக் ஜிஹாத் தரப்பிலிருந்து எந்த தூண்டுதலும், தாக்குதலும் இல்லாத நிலையிலேயே, அமைதி காலத்தில் இந்தக் கொலைகள் நடந்தன. பதிலடியாக ஜிஹாத் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. 

இதையடுத்து இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது விமானத் தாக்குதல்களை நடத்தியது.  பதினேழு குழந்தைகள் உள்ளிட்ட 49 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசாவின் ஆளும் கட்சியும் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் நட்பு சக்தியுமான ஹமாஸ் இந்தத் தாக்குதல்களின் போது இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புடன் சேர்ந்து கொள்ளவில்லை. வெறுமனே கண்டனம் தெரிவித்ததுடன் நிறுத்திக் கொண்டது. 

அதே போல இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி இஸ்ரேல் திரும்பவும் மூன்று இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பு தலைவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த கார்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தி மூவரையும் கொன்றது. இதில் பத்து சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். இஸ்லாமிக் ஜிஹாத் பலநூறு ராக்கெட்டுகளை இஸ்ரேல் நோக்கி ஏவியது. திரும்பவும் இஸ்ரேல் விமானத் தாக்குதல், சிவிலியன்களின் மரணங்கள், அழிவுகள் என்று ஒரு வட்டம் நடந்து முடிந்தது. இப்போதும் ஹமாஸ் கண்டனம் தெரிவித்ததே தவிர போரில் கலந்து கொள்ளவில்லை. 

இப்படி படுகொலைகள் நடத்துவது இஸ்ரேலுக்கு வழக்கம் தான். இப்படி கடந்த 16 ஆண்டுகளில் காசா மீது நான்கு பெரிய தாக்குதல்களும் நூற்றுக்கணக்கான சிறிய தாக்குதல்களும் நடத்தியுள்ளது. ஒவ்வொரு தாக்குதலும் காசாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. 

கடைசியாக நடந்த இரண்டு தாக்குதல்களிலும் ஹமாஸ் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் உதவிக்கு வராததைக் கண்ட இஸ்ரேல் அந்த அமைப்பு தனது போர்குணத்தை இழந்து வருகிறது. காசாமீது 16 ஆண்டுகளாகத் தொடரும் கொடுமையான முற்றுகை, தடைகள், தாக்குதல்களின் காரணமாக ஹமாஸ் பலவீனமடைந்து விட்டது. அமைதியாக காசாவை ஆட்சி செய்ய நினைக்கிறது. அரபாத்துக்கு பின்பான பி எல் ஓ போல பதவி ஆசை கொண்டு விட்டது என்று கருதியது. பல்வேறு பாலஸ்தீன அமைப்புகளும் ஹமாஸுக்கு கண்டனங்கள் தெரிவித்தன. ஹமாஸ் வாயே திறக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மிரட்டல், கொஞ்சம் ஆசை காட்டல் ஆகியவற்றைக் கொண்டு ஹமாஸை முழுமையாகப் பணிய வைத்துவிட இஸ்ரேல் நினைத்திருந்தது. 

இஸ்ரேல் அவ்வாறு நினைப்பதற்கு காரணங்கள் இருந்தன.  41 கிலோமீட்டர் நீளமும் 6 லிருந்து 10  கிலோமீட்டர் வரையான அகலமும் கொண்ட காசா பகுதியை ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்று கைப்பற்றியதும்  இஸ்ரேல் அதைச் சுற்றி இருபது அடி உயர கான்கிரீட் சுவர் எழுப்பியிருந்தது. அதையடுத்து முள்வேலிகளும் அமைத்திருந்தது. காசாவையொட்டி வரிசையாக இஸ்ரேலின் மிகவும் அனுபவம் பெற்ற வலிமை வாய்ந்த ராணுவப் பிரிவான காசா டிவிஷனின் ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தானியங்கி மெஷின்கன் நிலைகள், கண்காணிப்பு கோபுரங்கள், ஆளில்லா விமானங்கள் என்று பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து அமைக்கப்பட்டிருந்த யூத குடியேற்றங்களில் ஆயுதம் தாங்கிய பயிற்சி பெற்ற யூத மக்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். 

இது தவிர காசாவிலிருந்து வரும் ராக்கெட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இரும்பு மூடி அதாவது ஐயர்ன் டூம் என்ற மிகவும் புகழ் பெற்ற பாதுகாப்பு ஏற்பாட்டை இஸ்ரேல் செய்திருந்தது. ஒரு ராக்கெட் காசாவில் இருந்து வீசப்படுகிறது என்றால் உடனடியாக இஸ்ரேலிய ரேடார் அதைக் கண்டுபிடித்து எதிர் ஏவுகணையை வீசும். இந்த ஏவுகணை காசா ராக்கெட்டை வானிலேயே தடுத்து அழித்துவிடும். இது மிகவும் திறன் வாய்ந்த பொறியியல் அற்புதம் என்று உலகம் முழுவதும் கருதப்பட்டது. இந்தியா உட்பட பல நாடுகள் இந்த அமைப்பை வாங்கி தங்கள் நாடுகளில் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன.  

காசாவில் இருபத்தி மூன்று லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்குப் போதுமான விளைநிலங்கள் இல்லை. வேலை வாய்ப்புக்கான ஆலைகள் எதுவும் அமைக்க இஸ்ரேல் விடுவதில்லை. மீன் பிடிக்கவும் பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அனுமதி பெற்றே இங்கிருந்து வெளியே போக முடியும். கல்வி, மருத்துவம், உணவு எதுவுமே போதுமான அளவு இல்லாத மாபெரும் திறந்த வெளி சிறையாக காசாவை இஸ்ரேல் மாற்றியுள்ளது. பெரும்பாலும்  ஐநா, ஈரான் உதவியே இம்மக்களுக்கான வாழ்வாதாரமாகவிருக்கிறது. ஒவ்வொருநாள் வாழ்க்கையும் காசாவில் போராட்டமாகவே இருந்து வருகிறது.

போர்க்காலங்களில் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகள் இந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் சுரங்கம் தோண்டி இஸ்ரேலுக்குள் வந்து தாக்குதல் நடத்துவது வழக்கம். இஸ்ரேல் ஏராளமான பொருட் செலவில் இந்தத் தரையடி சுரங்கங்களை கண்டறியும் தொழில் நுட்பத்தை உருவாக்கி இப்படிப்பட்ட சுரங்கங்களை அழித்து விட்டது. எனவே தனது பாதுகாப்பு குறித்து இஸ்ரேல் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்த நிலையில் ஹமாஸ் பணிந்து விடும் என்று அது எதிர்பார்த்தது இயல்பானது.

அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்கு பேரிடியாக விடிந்தது. அதன் எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. காலை 6.30 மணியிலிருந்து இருபது நிமிடங்களில் ஹமாஸ் சுமார் 5000 ராக்கெட்டுகளை இஸ்ரேல் நோக்கிச் செலுத்தியது. பெரும் மேகம் போல ஒரே நேரத்தில் பாய்ந்து வந்த இத்தனை ராக்கெட்டுகளை அயர்ன் டூம் அமைப்பால் தடுக்க முடியவில்லை. இஸ்லாமிக் ஜிஹாத் உடனான இஸ்ரேலின் போர்களின் போது அயர்ன் டூம் எந்த அளவுக்கு தாங்கும் என்பதை ஹமாஸ் உன்னிப்பாகக் கவனித்து இருந்தது. பல நூறு ஹமாஸ் ராக்கெட்டுகள் தடுக்கப்படாமல் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவ், அஸ்கலான், ஜெடெரா போன்ற நகரங்களில் விழுந்து வெடித்தன. இஸ்ரேல் பேரதிர்ச்சியடைந்தது.

ஆப்பரேஷன் அல் ஹக்ஸா ஃபிளட் (அல் ஹக்ஸா வெள்ளம் தாக்குதல்) தொடங்கிவிட்டதாக  ஹமாஸ் அறிவித்தது. ஹமாஸை சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள் கடல் வழியாக அஸ்கலான் நகரை அடைந்து அதன் மீது கடும் தாக்குதல் நடத்தினர். அந்த நகரம் ஏறக்குறைய ஹமாஸால் கைப்பற்றப்பட்டது. இஸ்ரேல் சுரங்கங்கள் வழியாக பாலஸ்தீன போராளிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்க அவர்கள் நேரடியாக புல்டோசர்கள் கொண்டு சுவற்றை இடித்து இஸ்ரேலுக்குள் புகுந்தனர். இன்னும் பலர் பாராகிளைடர்கள் மூலம் சுவரைத் தாண்டி இஸ்ரேலுக்குள் பதிமூன்று கிலோமீட்டர் வரை ஊடுருவினர். 

இஸ்ரேல் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் ஆளில்லா விமானங்களின் தாக்குதலைத் தடுக்கும் மின்னணு கருவிகளை காசா எல்லையில் நிறுவியிருக்கவில்லை. எனவே ஹமாஸ்  அனுப்பிய ஆளில்லா விமானங்கள் மிக எளிதாக இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்காணிப்பு கோபுரங்கள், கேமராக்கள், மெஷின்கன் நிலைகள் ஆகியவற்றின் மீது குண்டு வீசி அழித்தன. 

அந்த நொடியிலிருந்து இஸ்ரேலின் ராணுவ தலைமை தன் கண்களையும் காதுகளையும் இழந்தது. போர்முனையில் என்ன நடக்கிறது என்றே அதற்குத் தெரியாத நிலை ஏற்பட்டது. காலாட்படை, விமானப்படை ஆகியவற்றின் பாதுகாப்பின்றி முன்னேறி வந்த பல இஸ்ரேலிய மெர்காவா டாங்கிகளும், ஹெலிகாப்டர்களும், கவச வாகனங்களும் நொறுக்கப்பட்டன. இவை முக்கிய இடங்களில் சுடும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்படி டாங்கிகளை நிறுத்தி வைத்து சுடுவது என்பது தொலைவில் வரும் எதிரிகளின் வாகனங்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஹமாஸ் வீரார்கள் ராக்கெட் லஞ்சர்களுடன் நெருங்கித் தாக்கும் போது டாங்கிகளால் செயல்பட முடியவில்லை. அவை மிக எளிதில் தகர்க்கப்பட்டன பல கைப்பற்றப்பட்டு காசாவுக்குள் கொண்டு செல்லப்பட்டன. 

ராணுவத் தலைமையானது முன்னேறித் தாக்குதல் நடத்தும் படி உத்திரவிடுவதற்கு பதிலாக பாதுகாப்பான பின்னணிக்கு பின் வாங்கும் படி உத்திரவிட்டது. ஹமாஸ் போராளிகள் இருபது யூதக் குடியிருப்புகளையும், பனிரெண்டு ராணுவத் தளங்களையும் கைப்பற்றினர். 

இந்த யூதக் குடியேற்றங்கள் பாலஸ்தீன மக்களால் கடுமையாக வெறுக்கப்பட்டவை. இந்தக் குடியேற்றங்களில் உள்ளவர்கள் தீவிர யூத மத நம்பிக்கை கொண்டவர்கள். ஆண்களும் பெண்களும் ராணுவப் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் ஹமாஸ் போராளிகளை எதிர்த்துப் போரிட்டனர். இந்தக் குடியிருப்புகள் பலவற்றுக்குள் சண்டை நடந்தது. இதிலேயே 1200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் காசா டிவிஷன் தலைமையகம் கைப்பற்றப்பட்டு பல மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு காசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இஸ்ரேல் தனது படைகளுக்கு சிறந்த பயிற்சியளிக்கிறது. ஜெனின் அகதி முகாம் போலவே செட் அமைக்கப்பட்டு நகரப்பகுதிகளில் தாக்குதல் நடத்த இஸ்ரேலிய வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால் இஸ்ரேலிய படைகள் எப்போதும் வலிமையான இடத்திலிருந்து பலவீனமான எதிர்களைத் தாக்கியே பழக்கப்பட்டதால் தற்காத்துக் கொள்வதில் அவர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. விமானப்பாதுகாப்பு, தொலைதொடர்பு சாதனங்கள், இல்லாமல் சமமான போரில் அவர்களால் நேருக்கு நேராக ஹமாஸ் போராளிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.

அது யோம்கிப்பூர் திருவிழாக்காலம் என்பதால் பெரும்பாலும்  கட்டாய ராணுவ சேவைக்கு வந்திருந்த 22 வயது இளைஞர்களே பணியில் இருந்தனர். இவர்களுக்குப் போர் அனுபவமே இல்லை. முதல் தாக்குதலிலேயே இவர்கள் அதிர்ந்து போய் ஓடத் தொடங்கி விட்டனர்.

ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்ததால் பல்லாயிரம் பேர் இஸ்ரேலுக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேலிய ராணுவத் தலைமை பெரும் பீதியடைந்தது. தாக்குதல் பற்றிய செய்திகளை ஹமாஸ் டெலிகிராம் சேனல்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்தது அதை மேலும் நிலைதடுமாறிப் போக வைத்தது. 

இஸ்ரேலின் அஸ்கலான் போன்ற ஒரு பெரிய நகரம் எதிரிகளால் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இஸ்ரேல் அதிர்ச்சியிலிருந்து மீண்டு எதிர்த் தாக்குதல் நடத்தத் தொடங்க ஏறக்குறைய ஒரு நாள் ஆனது. 

நெதன்யாகு காசா மீது போர்பிரகடன்ம் செய்தார். காசா மீது ஈவிரக்கமில்லாத குண்டு வீச்சு தொடங்கியது. ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசியதில் சில நிமிடங்களில் 600 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன மக்களின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மசூதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இடைவிடாமல் தாக்குதல் நடந்தது. அதே நேரம் இஸ்ரேலின் குடியிருப்புப் பகுதிகளிலும் ராணுவ தளங்களிலும், போலீஸ் ஸ்டேஷன்களிலும் மறைந்திருந்த பாலஸ்தீன போராளிகளை ஒழித்துக் கட்ட இஸ்ரேலிய ராணுவத்துக்கு ஒரு வாரம் பிடித்தது.

                                 -------------------------

இந்தத் தாக்குதலில் ஹமாஸ் புல்டோசர்கள், ராக்கெட் லாஞ்சர்கள், இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், டிரோன்கள் ஆகிய வழக்கமான ஆயுதங்களையே பயன்படுத்தியிருந்தாலும் அந்த அமைப்பு இதுவரை பாலஸ்தீன போராளிக் குழுக்களிடையையே காணப்படாத மிக உயர்ந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எட்டிவிட்டதை உணரமுடிந்தது. அரேபியர்களால் பொறுமையும் ரகசியமும் காக்க முடியாது, நுட்பமாகத் திட்டமிட்டு ஒருகிணைந்து செயல்பட முடியாது என்பது போன்ற இஸ்ரேல் பரப்பி வந்த பொய்கள் தகர்க்கப்பட்டு விட்டன. ஹமாஸ் கல் வீசும் சிறுவர்களில் இருந்து அதிநவீன ராக்கெட் சிஸ்டம் போன்றவற்றை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. டிரோன்களையும் விமான எதிர்ப்பு தானியங்கி ஆயுதங்களையும் உள்ளூரிலேயே தயாரித்தது.

  

தேவையே எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் தாயாகும் என்கிறார் மூத்த ஹமாஸ் தலைவரான அலி பராகா. 

2008 காசா போரின் போது ஹமாஸ் தயாரித்த ராக்கெட்டுகள் 40 கிலோமீட்டர் சென்று தாக்கக் கூடியவை.  இப்போது அவற்றின் வீச்சு எல்லை 230 கிலோ மீட்டர் ஆக உயர்ந்துள்ளது. 10000 ஆக இருந்த ஹமாஸின் வீரர்களின் எண்ணிக்கை 40000 ஆக உயர்ந்துள்ளது. அது இப்போது அறுபதாயிரமாக அதிகரித்திருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. ஹமாஸ் வீரர்கள் காசா தெருக்களில் பயணிக்கும் போது இஸ்ரேல் குண்டு வீசிக் கொல்வது வழக்கம் என்பதால் தரையடி சுரங்கங்கள் அமைத்து அதில் இயங்குவது என்ற செயல்தந்திரத்தை ஹமாஸும் காசா போராளி அமைப்புகளும் பயன்படுத்தி வருகின்றன. ஹமாஸுடனான போரில் இஸ்ரேலின் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2008 போரில் இஸ்ரேல் 8 வீரர்களை மட்டுமே இழந்தது. 2014 போரில் 66 வீரர்களை இழந்தது. இப்போது இந்த முன்கண்டிராத பெரும் தாக்குதல். 

இஸ்ரேல் காசாவை சுற்றி வளைத்துள்ளது. ஆனால் உண்மையில் இஸ்ரேல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரையியிலும் வடக்கிலும் போராளி அமைப்புகள் இஸ்ரேலைத் தாக்கக் காத்துக்கொண்டுள்ளன. இஸ்ரேல் காசாவைத் தாக்கியே ஆக வேண்டும். தனது பலத்தை நிரூபித்தே ஆகவேண்டும். அதனுடைய வலிமையை நிரூபிப்பதே இஸ்ரேல் உயிர்வாழ்வதற்கான அடிப்படை. இஸ்ரேல் இந்தப் போரில் வெற்றி பெறத் தவறினால் மேற்குலகம் அதனால் பலனில்லை என்று கைவிட்டுவிடும். இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்டே ஆக வேண்டிய நிலையில் பாலஸ்தீன மக்கள் உள்ளனர்.  

இந்த இடத்துக்கு இஸ்ரேலும் மத்திய கிழக்கும் எப்படி வந்து சேர்ந்தன என்பது தனிக்கதை.

இஸ்ரேலின் கதை

மோசஸ் எகிப்தில் அடிமைகளாகவிருந்த யூதர்களை காப்பாற்றி வாக்களிக்கப்பட்ட பூமியாகிய இஸ்ரேலுக்கு அருகில் அழைத்து வந்தார், டேவிட், சாலமன் ஆகியோரின் ஆட்சிகாலத்தில் இஸ்ரேல் ஒருங்கிணைந்த பெரிய வலிமை வாய்ந்த அரசாகவிருந்தது என்றெல்லாம் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பது கிருத்துவர்களாலும், யூதர்களாலும் வரலாறாகவே கருதப்பட்டு வருகிறது. 

உண்மையில் மோசஸ், டேவிட், சாலமன் போன்றோர் வாழ்ந்ததற்கு பைபிள் தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஒருசில ஆய்வாளர்கள் டேவிட்டை ஒரு பழங்குடியின தலைவர் என்ற அளவில் ஒப்புக் கொள்கின்றனர். ஜுடாயிஸம் எனப்படும் யூதமதம் எத்தியோபியாவிலிருந்து சிரியா வரையிலான பகுதியில் வாழ்ந்த சில பழங்குடியினங்களால் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு முறையாகும். பாலைவனப் பகுதிகளில் ஆண்குறியின் மேல்பகுதியில் உப்பு படிவதை தவிர்க்க மேல் தோலை நீக்கிக் கொள்ளூம் சுன்னத் வழக்கம் பல பழங்குடி இனங்களிடையே இருந்து வந்தது. இது போன்ற வழக்கங்களாலும், எகிப்து போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்த வளர்ச்சியடைந்த மத வடிவங்களிலிருந்து வேறுபட்டிருந்ததாலும் யூதர்கள் கிருஸ்து பிறப்பதாகச் சொல்லப்பட்டதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்து, கிரீஸ் போன்ற பகுதிகளில் அடக்குமுறைக்கு ஆளாகி வந்தனர் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  யூதர்களின் மீதான அடக்குமுறையை மதரீதியிலான அடக்குமுறை என்பதை விட பழக்குடியினங்களை அடிமைப்படுத்தும் முறை என்றே பார்க்கலாம். 

ரோமப் பேரரசு பாலஸ்தீனப் பகுதியைக் கைப்பற்றியதும் அப்பகுதியில் வாழ்ந்த யூதமக்கள் ரோமை எதிர்த்து கடும் போர் புரிந்தனர். மூன்று மிகப் பெரிய எழுச்சிகள் நடந்தன. முதலாவது யூத ரோமப் போரில் ஜெருசலம் அழிக்கப்பட்டு யூதர்களின் இறுதி தளமான மஸாதா கோட்டையும் வீழ்ந்தது. (இதன் பெயரிலேயே மொசாத் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது). Kitos  போர், Bar Kokba  கலகம் ஆகியவற்றுக்குப் பிறகு யூதர்கள் வாழ்ந்த பகுதிகள் கடும் சேதத்துக்கு ஆளாகின. கிராமங்கள் பேரழிவுக்கு உள்ளாகின. ஜெருசலத்துக்குள் யூதர்கள் நுழைவது தடை செய்யப்பட்டது. 

கி பி 135 ஆண்டு வாக்கில் புரட்சிகளும் கலகங்களும் ஓய்ந்து ரோமானிய ஆட்சி உறுதியாக நிலைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் தான்  கிருத்துவம் யூத மதத்திலிருந்து பிரிந்து ஒரு தனிமதமாக உருப்பெற்றது என்கிறது Chiristianity a response to Roman Jewish conflict – ( எழுதியவர் Markus Vinzent )  என்ற கட்டுரை. ரோமானிய அரசுடன் சமாதானப் போக்கை கிருத்துவ மதம் கைக்கொண்டது. போர்க்குணத்துக்கு பதில் அமைதி, மன்னித்தல், ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுதல் என்று இந்த மதம் ரோமுக்கு எதிரான போராட்டங்களில் இருந்து மக்களை வேறு பக்கம் இழுத்துச் சென்றது. 

Marcion of Sinope என்பவர் ஒரு யூத மதகுருவின் மகன். பெரிய வணிகர். பல கப்பல்களுக்கு உரிமையாளர், இவரைப் போன்றவர்கள் ரோமுடன் இணக்கத்தை வேண்டினர். இயேசுவைப் பற்றிய கதைகள் வாய்மொழிக் கதைகளாக அப்போது வரை இருந்தன. புனித பவுல் யூத மதத்தையும் கிரேக்க ரோம பண்பாட்டையும் இணைத்து ஒரு புதிய ஆன்மீக யூத சமயத்தை முன் மொழிந்து வந்தார். இதை மார்சியோன் போன்ற வணிகர்கள், செல்வந்தர்கள் முன்னெடுத்துச் சென்றனர். கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் பிடிக்காத சுன்னத் செய்யும் முறை இந்த புதிய யூத மதத்திலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஞானஸ்னானம் வழங்கும் முறை அமுலுக்கு வந்தது. கிருத்துவ மதம் பெரும் கொலைகாரனான பிலாத்துவை கிருஸ்து மீது அன்பு கொண்டவனாக சித்தரித்தது, சீசருக்குரியதை சீசருக்கும் கர்த்தருக்குரியதை கர்த்தருக்கும் கொடுங்கள் என்பது போன்ற ரோம ஆட்சியை அங்கீகரிக்கும் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஏசு கூறியதாகச் சேர்க்கப்பட்டன. 

இதை ஏற்றுக் கொள்ளாமல் பழைய வழிபாட்டு முறைகளையும் ரோமானிய எதிர்ப்பையும் தொடர்ந்த யூதர்கள் ரோம பேரரசு முழுவதும் வேட்டையாடப்பட்டனர். இஸ்லாமின் வளர்ச்சி யூதர்களுக்கு பாதுகாப்பளித்தது. யூத மக்கள் இஸ்லாம் இருந்த இடத்திலெல்லாம் பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு செல்வாக்கான நிலையை அடைந்தனர். ஐரோப்பாவின் ஸ்பெய்ன் நாட்டை இஸ்லாமியர் கைப்பற்றிய போது அங்கும் யூதர்களின் நிலை பெரிய அளவுக்கு மேம்பட்டது. 

அதே நேரம் சிலுவைப் போர்கள் தொடங்கியதும் ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரிய அளவில் தொடங்கின. யூதக் குடியிருப்புகளைத் தாக்கி சூறையாடும் பாக்ரோம் என்ப்படும் நடவடிக்கைகள் அரசு அங்கீகாரத்துடன் தொடர்ந்து நடந்தன. இந்த சிலுவைப் போர்கள் காலனியாதிக்கப் போர்கள்தான் என்று ஒரு கருத்து சில வரலாற்றாசிரியர்களிடம் உள்ளது. எது எப்படியிருந்தாலும் கிருத்துவ மதம் யூதர்களை எதிரியாக கிறிஸ்துவை கொன்றவர்களாகக் காட்டுவதால் ஜெருசலம் மற்றும் அரபு பகுதிகளைத் தாக்குவதற்காக மத அடிப்படையில் மக்களைத் திரட்ட யூதர்கள் மீதான தாக்குதல்கள் பயன்பட்டன.   

1100 முதல் சிலுவைப் போரின் போதிலிருந்து தொடர்ந்து யூதர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் போன்ற நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேறாத யூதர்கள் மஞ்சள் ஆடைகள் அணிந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது.  பொதுக் குடியிருப்புகளில் யூதர்கள் வாழ்வது தடை செய்யப்பட்டது. அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருந்தாலும் சேரிகளிலேயே வாழ்ந்தனர். தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டனர். யூதர்கள் கொடுமைக்காரர்கள், இரக்கமற்றவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் வணிகன், வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ போன்ற இலக்கியங்களில் இதைக் காணலாம்.  போலந்து நாடு உருவாகி வந்த போது பலவேறு வளர்ச்சிப் பணிகளுக்கு உழைக்க மக்கள் தேவைப்பட்டனர். எனவே அந்த நாடு இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. 

பின்பு ரஷ்யா சாம்ராஜ்ஜியத்திலும் யூதர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உச்சகட்டத்தை எட்டியதால் ஐரோப்பாவில் தொடர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற எண்ணம் யூதர்களின் நடுவே ஏற்பட்டது.  இதிலிருந்தே யூதர்களின் நன்மைக்காக ஜியோனிச இயக்கம் உருவானது. பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாயகம் அமைப்பதன் மூலம் யூதர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு முடிவு கட்டலாம் என்று இந்த இயக்கம் கூறியது. இன்னொரு பிரிவு யூதர்கள் கம்யூனிசம் போன்ற முற்போக்கு இயக்கங்களை நாடினர்.   

ஜெர்மனியைச் சேர்ந்த யூதரான தியோடர் ஹெர்ஸ்ஃப் (Theodor Herzlf ) என்பவர்  வெளியிட்ட ஜூவிஷ் ஸ்டேட் யூதர்களுக்கான நாட்டை அவர்களின் பண்டைய தாயகமான பாலஸ்தீனத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியது. அதற்கு முன்பு உகாண்டாவில் யூதர்கள் நாட்டை அமைப்பது பற்றி பரிசீலனைகள் செய்யப்பட்டன. பின்பு பாலஸ்தீனமே சரியாக இருக்கும் என்று தியோடர் போன்ற யூதர்கள் முடிவு செய்தனர். 

அப்போது பாலஸ்தீனம் துருக்கியின் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியிலிருந்தது. யூத அமைப்புகள் இது பற்றி பாலஸ்தீனத்தின் துருக்கி கவர்னரிடம் பேசிய போது அவர் அங்கே ஏற்கெனவே பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு ஒரு இனத்தை அங்கே குடியேற்றுவது என்பது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி அனுமதி மறுத்து விட்டார். நாடு அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ஐரோப்பாவைச் சேர்ந்த வயதான யூதர்கள் ஜெருசலம் சென்று தங்கள் இறுதி நாட்களைக் கழிப்பது ஒரு வழக்கமாகவே இருந்தது.  இதைத் துருக்கி அரசு தடுக்கவில்லை. 

பின்பு  இளைஞர்களும் இதில் அக்கறை கொண்டார்கள். 1909 ஆம் ஆண்டிலிருந்து 1918 வரை நாற்பதாயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு குடிபெயர்ந்தனர். இவர்களில் கணிசமானவர்கள் சோஷலிச கருத்து கொண்டவர்கள். இவர்கள் கிபுட்ஸ்க் என்ற கூட்டு வாழ்க்கை  (தனிச்சொத்துரிமை இல்லாத) குடியிருப்புகளை உருவாக்கினர். 

1914 ஆம் ஆண்டு முதலாவது உலகப் போர் தொடங்கியது. துருக்கிப் பேரரசை அழித்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது என்று பிரிட்டன் பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. இந்த நேரத்தில் தான் பிரிட்டன் இந்த யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றங்களின் மீது அக்கறை கொண்டது. பிரிட்டிஷ் பேரரசின் மிக முக்கியமான கடல்வழியான சூயஸ் கால்வாய்க்கு அருகே ஒரு ஐரோப்பிய குடியேற்றம் இருப்பது அதன் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற கருத்தை பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பேசத் தொடங்கினர்.

நவம்பர் 12, 1914 ஆம் ஆண்டில்  Weizmann என்பவர் மான்செஸ்டர் கார்டியன் இதழின் ஆசிரியரான சி.பி ஸ்காட்டுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார், “பாலஸ்தீனம் பிரிட்டிஷ் செல்வாக்கின் கீழ் வந்தால், பிரிட்டன் யூதர்கள் அங்கே குடியேற்றங்கள் அமைப்பதை ஊக்குவித்தால், இருபது முப்பது ஆண்டுகளில் பத்து லட்சம் யூதர்களை அங்கே குடியேற்றிவிட முடியும். அந்த யூதர்கள் ஒரு நாட்டை உருவாக்கி நாகரீகத்தை அந்தப் பகுதியில் மீளக் கொண்டுவருவார்கள். அந்த நாடு சூயஸ் கால்வாய்க்கு திறன்வாய்ந்த காவலாக இருக்கும்”.

‘பிரிட்டன் தனது நலன்களுக்காக பாலஸ்தீனத்தை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு யூதர்களை அணி திரட்ட வேண்டும். இதனால் சியோனிஸ்ட் இயக்கம் நல்ல நட்பு சக்தியாக இருக்கும்” (Bar-Yosel,2005,P 243).

ஹெர்பர்ட் சாமுவேல் என்ற யூதர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றத்தை ஆதரிக்க வேண்டும். யூத பாலஸ்தீனம் எகிப்தையும், சூயஸ் கால்வாயையும் கட்டுப்படுத்த உதவியளிக்கும் என்று 1915 ஆம் ஆண்டு ஒரு மனு சமர்ப்பித்தார்.  1920 ஆம் ஆண்டு சாமுவேல் பாலஸ்தீனத்துக்கான முதல் பிரிட்டிஷ் ஹை கமிஷ்னராக நியமிக்கப்பட்டார்.

“பிரிட்டனின் பாதுகாப்பில் உள்ள யூத அரசானது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

“விரோதம் கொண்ட அரபு நாடுகளுக்கு நடுவே யூத அரசானது பகைமை கொண்ட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆதரவு உல்ஸ்டர் பகுதி போல நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும் என்றார்  ஜெருசலத்தின் முதல் ராணுவ கவர்னரான ரொனால்டு ஸ்டோர்ஸ்.

                               --------------------------------

அதே நேரம் முதல் உலகப் போர் சமநிலையை அடைந்து எந்தத் தரப்பும் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதை உடைக்க வழி தேடிய பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் ஒரு முக்கியமான உண்மை புலப்பட்டது. துருக்கிப் பேரரசின் பலவீனமான பகுதி அதன் போர் முனைகள் அல்ல. அதற்கு உள்ளே இருக்கும் அரபு மக்கள் தான் என்பதை பிரிட்டனும் பிரான்சும் கண்டு கொண்டன. துருக்கியிடமிருந்து மொழியாலும் பழக்க வழக்கங்களாலும் வேறுபட்டிருந்த அரபு மக்கள் இந்த அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுதலை பெற விரும்பினர். பிரிட்டனும் பிரான்ஸும் அரபு தலைவர்களை சந்தித்து அரபு மக்கள் துருக்கியிடமிருந்து விடுதலை பெறவும், விரிந்த அரபு நாட்டை உருவாக்கவும் தாங்கள் உதவுவதாகக் கூறின. 

துருக்கிப் படைகளைத் தாக்க அரபுப் படைகளுக்கு ஆயுதங்கள் அளித்தன. அதே நேரம் அதே அரபு பகுதியில் யூதர்களுக்கு தனி நாடு அமைக்க உதவுவதாகவும் வாக்களித்தன. 

அரபுப் படைகளின் தாக்குதல் துருக்கியை பெரிய அளவுக்கு பலவீனப்படுத்தியது. இந்த நேரத்தில் ரஷ்யாவில் புரட்சி நடந்து சோவியத் அரசு ஏற்பட்டது. லெனின் தலைமையிலான சோவியத் யூனியன் ரஷ்ய ஜார் அரசும், பிரிட்டனும் பிரான்ஸ்சும் செய்து கொண்டிருந்த ரகசிய ஒப்பந்தங்களை உலகறிய அம்பலப்படுத்தியது. அப்போதுதான் யூதர்களுக்கு தனிநாடு என்ற திட்டம் உருவாக்கப்பட்டிருப்பது வெளியானது. லெனின்  யூத  ஜியோனிச இயக்கம் என்பது மக்களை அடக்கியொடுக்குவதற்கான ஒரு ஏகாதிபத்திய திட்டம் என்று எழுதினார். சோவியத் யூனியனைச் சேர்ந்த டிராட்ஸ்கி போன்ற ஐம்பது யூத தலைவர்கள் தங்கள் யூத இயக்கத்தையும்  யூத நாட்டையும் ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர். சோவியத் யூதர்கள் பாலஸ்தீனத்துக்குக் குடிபெயர பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த யூத நாடு அமைக்கவிருக்கும் செய்தியை அறிந்து கொண்ட அரபுலகம் அதிர்ச்சியடைந்தது. அரபு தலைவர்களைப் பொருட்படுத்தாமல் பலவீனப்படுத்தப்பட்டிருந்த துருக்கிப் படைகளை முறியடித்து பிரிட்டிஷ் படைகள் ஜெருசலம் போன்ற அரபு நகரங்களைக் கைப்பற்றி  முன்னேறின. ஒன்றுபட்ட அரபுத் தாயகம் அமைக்க உதவுவதாக அரேபியர்களுக்கு அளித்திருந்த உறுதியை ஏகாதிபத்தியங்கள் அடியோடு புறக்கணித்தன.

துருக்கியிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரபுப் பகுதிகள் பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டன. ஜோர்டான், பாலஸ்தீனம், ஈராக் பகுதிகள் பிரிட்டிஷ் பாதுகாப்பிலும், சிரியா, லெபனான் பகுதிகள் பிரான்ஸ் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டன. பாலஸ்தீனம் யூதர்களின் குடியேற்றத்துக்கு முழுமையாகத் திறந்து விடப்பட்டது. யூதர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்த போலந்து போன்ற நாடுகளில் சோஷலிச புரட்சி அபாயம் இருந்ததால் பெரும்பாலும் சோஷலிச கொள்கை கொண்ட யூதர்களை பாலஸ்தீனத்துக்கு அனுப்பி விடுவது புரட்சியை தடுக்கும் என்ற கருத்தும் நேச நாடுகளிடம் இருந்தது. 

பிரிட்டன் பிரான்ஸுக்கு எதிராக அரபு மக்கள் நடத்திய எழுச்சிகள் அடியோடு முறியடிக்கப்பட்டன. அரபு மக்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிராயுதபாணீயாக்கப்பட்டனர். அதே நேரம் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து யூதர்கள் ஆயுதபாணிகளாக வந்து பாலஸ்தீனத்தில் குடியேறிக் கொண்டே இருந்தனர். அரபு மக்களோடு இணக்கமாக வாழ வேண்டும், யூத மதவெறியை எதிர்க்க வேண்டும் என்ற கருத்த முன்வைத்த  Haim Ariosoroff  போன்ற யூத சோஷலிச தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். 

ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி வந்து யூதர்களுக்கு எதிராக படுகொலைகள் நடத்தத் தொடங்கிய பின்பு பாலஸ்தீனம் வரும் யூதர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பிரிட்டன் தனக்கேயுரிய நரித்தனத்துடன் தன்னை அரேபியர்களும் யூதர்களுக்கும் நண்பனாகக் காட்டிக் கொள்ள முயன்ற போது யூத குடியேறிகள் பிரிட்டிஷ் படைகள் மீதே தாக்குதல்கள் நடத்தினர். 1942 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் உறவுகளை பலப்படுத்தி அமெரிக்காவை மையப்படுத்தி இயங்குவது என்று உலக யூத மாநாடு முடிவெடுத்தது.

1947 நவம்பர் 29 இல் ஐய்க்கிய நாடுகள் சபை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தை அரபு மற்றும் யூத நாடுகளாக பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. யூதர்கள் இதை வரவேற்றனர்.

மிகவும் விசித்திரமான விதத்தில் சோவியத் யூனியன் இஸ்ரேலை ஆதரித்தது. யூதக் குடியேறிகளுக்கும் பிரிட்டனுக்கும் நடந்து வந்த சண்டை, பல யூதர்கள் இடதுசாரிகளாக இருந்தது, அரபு பகுதிகள் ஏறக்குறைய பிரிட்டனின் காலனிகளாக இருந்தது ஆகியவற்றைக் கொண்டு இஸ்ரேல் ஒரு சோஷலிச நாடாக மாறும் என்று சோவியத் யூனியன் கருதி ஆதரித்தது.  பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்கு நடுவே ஒரு சோஷலிச நாடு என்பது முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எண்ணம் கொண்டிருந்தது. பின்பு வந்த ஆண்டுகளில் இஸ்ரேல் முழுமையான அமெரிக்கா ஆதரவு வலதுசாரி நாடாக மாறியது. இதற்கு மாறாக எகிப்து, சிரியா போன்ற அரபு நாடுகள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நிற்கத் தொடங்கின. எனவே சோவியத் யூனியன் புதிதாக உருவான அரபு நாடுகளை ஆதரிக்கத் தொடங்கியது. பாலஸ்தீன மக்களின் போராட்ட அமைப்பான பி எல் ஓவை முழுமையாக ஆதரித்தது. 

 

1948 ஜனவரி முதலே தங்கள் தாயகத்தின் பல பகுதிகளை இழந்த பாலஸ்தீன மக்கள் உருவாக்கியிருந்த அரபு விடுதலைப் படைக்கும் யூத குடியேறிகளுக்கான போர் தீவிரமடைந்தது. இந்தக் காலம் மூழுவதும் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இருந்து வந்தது. 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பிரிட்டன் தனது ஆட்சியை விலக்கிக் கொண்டு வெளியேறியது. அன்றே யூதத் தலைமை இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டதாக அறிவித்தது. அதற்கு அடுத்த நாள் எகிப்து டிரான்ஸ்ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் உள்ளிட்ட அரபுநாடுகளின் படைகள் இஸ்ரேலைத் தாக்கின.

 

அமெரிக்கா சக்தி வாய்ந்த அதி நவீன போயிங் பி 17 விமானங்களை இஸ்ரேலுக்கு அளித்தது. பிரிட்டனும் பிரான்சும் அரபுப் படைகளிடம் இல்லாத நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கின.  இப்படி சிறந்த ஆயுதங்கள் தாங்கிய 35,000 இஸ்ரேலிய வீரர்களுக்கு எதிராக  அரபு படைகளில் மிகவும் பிந்தங்கிய பலவீனமான ஆயுதங்கள் ஏந்திய 23 000 வீரர்கள் இருந்தனர். இந்தப் போரில் இஸ்ரேல் Cast thy bread  என்ற தாக்குதல் நடவடிக்கையை நடத்தியது. அரபு கிராமங்களில்  டைபாய்டு பாக்டீரியாவைக்  கலந்து நீர் நிலைகளை மாசு படுத்தியது. போரால் வெளியேறிய மக்கள் அந்தப் பகுதிக்குத் திரும்ப முடியாத நிலை இந்த டைபாய்டு விஷக் கிருமிகளால் ஏற்பட்டது. இஸ்ரேல் இந்தப் போரில் அரபு வீரர்களை முறியடித்து பல பாலஸ்தீனப் பகுதிகளைக் கைப்பற்றி தனது எல்லையை பெரிய அளவுக்கு விரிவுபடுத்தியது. காசா பகுதி எகிப்தாலும், மேற்குக் கரை ஜோர்டானாலும் கைப்பற்றப்பட்டன.

இந்தப் போருக்கு பிறகு பாலஸ்தீனத்தில் 78 சதவீதம் இஸ்ரேலின் இரும்புப் பிடியின் கீழ் வந்தது. இஸ்ரேல் ஏழு லட்சம் பாலஸ்தீனர்களை பலவந்தமாக தங்கள் கிராமங்கள், நகரங்களிலிருந்து வெளியேற்றியது.  ஐநூற்றி முப்பது பாலஸ்தீன கிராமங்கள் அடியோடு தரைமட்டமாக்கப்பட்டு அங்கே காடுகளும் வயல் வெளிகளும் உருவாக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சி நக்பா - பேரழிவு என்று பாலஸ்தீன மக்களால் குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து நிரந்தமாக நாடற்றவர்கள் என்ற பாலஸ்தீன மக்கள் பிரிவு உருவானது. பாலஸ்தீனப் பகுதிகளை இரண்டாகப் பிரித்து இஸ்ரேல் பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கும் ஐநா தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனால் மேற்குக் கரை, காசா பகுதிகள் ஜோர்டான், எகிப்து ஆகிய அரபுநாடுகளின் ஆட்சியிலிருந்ததால் அங்கிருந்த பாலஸ்தீன மக்கள் அந்த நாடுகளின் முழு குடியுரிமை கொண்ட வாழ்க்கை வாழ முடிந்தது. அதே நேரம் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட பாலஸ்தீன மக்கள் நாடுநாடாக அகதிகளாக அலைந்து திரிந்தனர். கொடும் வறுமையிலும் அடக்குமுறைகளிலும் வதைபட்டனர்.

1967 ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த போரில் இஸ்ரேல் மேற்குக்கரை பகுதியையும் , காசாவையும் கைப்பற்றியது. 1973 இல் நடந்த போரில் சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகள் என்ற பகுதியைக் கைப்பற்றியது. ஜோர்டானிடமிருந்து கைப்பற்றப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் ஆறு லட்சம் யூதர்களைக் குடியேற்றி 90 சதவீத நிலப்பரப்பை ஆகிரமித்தது. காசாவிலும் ஆயிரக்கணக்கான யூதர்கள் குடியேற்றப்பட்டனர். இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தினமும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இரண்டாம் தர குடிமக்களுக்கும் கீழாகவே நடத்தப்பட்டனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் நிலங்கள் யூதக் குடியேறிகளால் ஆகிரமிக்கப்பட்டன. 1948 போரில் வெளியேற்றப்பட்ட அகதிகளைப் போலவே இந்த மக்களின் நிலையும் படுமோசமடைந்தது.

இதன் காரணமாக பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் மக்கள் திரளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு போரிலும் இஸ்ரேல் பல லட்சம் பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கி வாழ்விடங்களிலிருந்து விரட்டி வருகிறது. பலநாடுகளின் அகதி முகாம்களில் வாழும் பாலஸ்தீன மக்கள் இன்னும் தங்கள் வீடுகளின் சாவிகளையும், வீட்டுப் பத்திரங்களையும் பாதுகாத்து வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் துயரங்களில் ஒன்று.

இந்த சூழ்நிலையில் உருவான பி எல் ஓ இயக்கம் பல பாலஸ்தீன இயக்கங்கள் இணைந்த ஒரு இடதுசாரித் தன்மை கொண்ட அமைப்பாகும். இது பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியது. பல நாடுகளைச் சேர்ந்த இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இந்த அமைப்புடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போராடினர். இஸ்ரேல் உலகம் முழுவதும் இந்த அமைப்பினரையும் அதை ஆதரித்த அறிவு ஜீவிகளையும் வேட்டையாடியது. 

அரபு நாடுகளுக்கு எதிராக பெற்ற வெற்றிகளின் விளைவாக அதீத தன்னம்பிக்கை பெற்ற இஸ்ரேல் 1982இல் லெபனான் நாட்டின் மீது போர் தொடுத்தது. அங்கே அகதிகளாகத் தங்கியிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று காரணம் கூறியது. பெய்ரூட் வரை இஸ்ரேல் முன்னேறியது. லெபனானில் மேற்குலகின் ஆதரவுடன் பலாங்கிஸ்ட் படை என்ற கிருத்துவ படை உருவாக்கப்பட்டது. கிருத்துவர்கள், முஸ்லீம்கள், பாலஸ்தீனர்கள், லெபனான் படை, சிரியாவின் படை, இஸ்ரேல் படை என்று பல முனைகளில் போர் மூண்டு லெபனான் நாடு சின்னாபின்னமானது. சமாதானம் செய்வதாகவும் அமைதியை நிலைநாட்டுவதாகவும் கூறிக் கொண்டு அமெரிக்காவும் பிரான்சும் பெய்ரூட்டில் ராணுவத் தளங்களை அமைத்தன.

அராபத்தின் பாலஸ்தீன அமைப்பு வீரத்துடன் போரிட்டாலும் தோற்கடிக்கப்பட்டது. பெய்ரூட்டையும் லெபனானையும் விட்டு வெளியேறும் படி ஒரு ஒப்பந்தத்தின் மூலம் உத்திரவிடப்பட்டது. 

லெபானனை இஸ்ரேல் ஆகிரமிப்பதைத் தடுக்க யாருமே இல்லை என்ற சூழ்நிலையில் ஈரானிய ஷியா இஸ்லாமிய புரட்சியாளர்கள் லெபனான் வந்து ஷியா முஸ்லீம்களை ஆகிரமிப்பாளர்களுக்கு எதிராக அணி திரட்டினர். இதிலிருந்து உருவான ஹிஸ்புல்லா இயக்கம் நடத்திய உக்கிரமான தாக்குதல்களை சமாளிக்க இயலாமல் இஸ்ரேல் வரலாற்றில் முதல்முறையாக கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறியது. 

பி எல் ஓ லெபனானில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்தும் வெளியேறியதால் இஸ்ரேலின் ஆகிரமிப்பிலிருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் எந்த அரசியல் அமைப்பும் இல்லாத நிலை ஏற்பட்டது. இஸ்ரேல் மிக மூர்க்கமான ராணுவ சர்வாதிகாரத்தை அங்கே செயல்படுத்தியது. 

இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் 1987 டிசம்பர்  8 ஆம் தேதி பாலஸ்தீன மக்கள் தெருக்களில் இறங்கினர். இஸ்ரேலிய ராணுவத்தைக் கல்வீசித் தாக்குவதில் தொடங்கிய இந்த எழுச்சி ஓரிரு நாட்களில் அடக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் இல்லாமல், அரசியல் கட்சி தலைமை இல்லாமல் தொடங்கிய எழுச்சி ஆறு ஆண்டுகள் நீடித்தது. மொசாத்தின் அத்தனை உளவாளிகளும் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன ஆட்சிப் பகுதிகளை உருவாக்க வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்கு ஏற்பட்டது. அது தனநிலையில் இருந்து கொஞ்சம் விட்டுக் கொடுக்க முன்வந்தது. 

இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையில் காசா மேற்குக் கரைப் பகுதியில் அரபத் தலைமையில் பாலஸ்தீன அரசு உருவாகியது. கல் வீசும் சிறுவர்களால் தான் தோற்கடிக்கப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாத இஸ்ரேல் அரபத்தின் பி எல் ஓவுக்கு எதிராக இஸ்லாமிய அரசியல் கொண்ட ஹமாஸ் இயக்கம் வளர உதவியது. இஸ்ரேல் அஞ்சிய பி எல் ஓ இயக்கம் அராபத்தின் மரணத்துக்கு பிறகு முழுமையாக இஸ்ரேலிடம் சரணடைந்து விட்டது.

அடுத்து 2000 ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாவது இண்டிபதாவில் காசா, மேற்குக் கரை யூத குடியேறிகள் மீது ஏராளமான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களை ஹமாஸ் நடத்தியது. ஒருகட்டத்தில் காசாவில் யூதக் குடியேறிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமல் இஸ்ரேல் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. அடுத்த வந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்று காசாவில் ஆட்சியமைத்தது.  

ஆனால் தனக்கு உதவியாக இருக்கும் என்று இஸ்ரேல் நம்பிய ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது வரலாறு காணாத தாக்குதலை நடத்திவிட்டது. எந்த விதத்திலும் கறைபடுத்த முடியாததாக இஸ்ரேலுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கிறது.

அமெரிக்க ஆதரவு

 அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அளவுக்கு ராணுவ, நிதியுதவி அளிப்பதோடு அரசியல் ஆதரவும் அளித்து வருகிறது. இஸ்ரேலுடன் தனிச்சிறப்பான அரசியல் உறவு கொண்டுள்ளதாக அமெரிக்க ஆளும் வட்டாரங்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. ஐ நா சபையில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலை கண்டிக்கும் தீர்மானங்களை  அமெரிக்கா  42 முறை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துள்ளது. இப்போதும் இஸ்ரேல் தாக்கப்பட்டவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஓடோடி வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார். கப்பல்களிலும் விமானங்களிலும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தார்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துவரும் ஆதரவுக்கு அமெரிக்காவில் உள்ள வலிமை வாய்ந்த யூத லாபியின் செல்வாக்குதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் யூத லாபியும், யூதர்களின் உயிர்களும் அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டே இல்லை, அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு இன்னும் ஆழமான அரசியல் புவியியல் காரணங்கள் உள்ளன என்று நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர். (The Fateful Triangle:  The United States, Israel and the Palestinians –Noam Choamsky). 

இஸ்ரேல் இந்தப் பகுதியில் ராணுவ தலையீடு செய்வதற்கான தளத்தை அமெரிக்காவுக்கு அளிக்கிறது. இஸ்ரேல் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் என்று செனட்டர் ஜெஸ்ஸி ஹெல்ம்ஸ் கூறுகிறார். அமெரிக்கா ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து தனது இஸ்ரேலிய தூதரகத்தை டெல் அவீவுக்கு பதில் ஜெருசலத்தில் அமைத்துள்ளது.

எகிப்து சூயஸ் கால்வாயை தேசிய உடமையாக்கிய போது முதலில் இஸ்ரேல்தான் எகிப்தைத் தாக்கி அந்த நாட்டுக்குள் ஊடுருவியது. பின்புதான் பிரிட்டனும், பிரான்சும் எகிப்து மீது போர் தொடுத்தன.  

பனிப்போர் காலத்தில் புதிதாக விடுதலை பெற்ற அரபு நாடுகள்  சோவியத் யூனியனுடன் இணைந்து நின்ற போது இஸ்ரேலின் அபார வலிமை அரபுலகின் மேல் மேற்கு நாடுகள் கொண்டிருந்த ஆதிக்கத்தைக் காத்து நின்றது. 

 

ஈராக் மற்றும் சிரியாவின் அணுசக்தி திட்டங்களை நாசமாக்கியது இஸ்ரேல்தான். அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் அதிநவீன ராணுவ தொழில் நுட்பத்தை வளர்த்து எடுப்பதில் இணைந்து செயல்படுகின்றன.  அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் மென் பொருளையும் தயாரித்துத் தரும் களமாகவும் இஸ்ரேல் இருக்கிறது.  

அரபு நாடுகள் ஈட்டும் பெட்ரோலிய பணமானது, அமெரிக்க நிறுவனங்கள் அரபு நாடுகளில் செயல்படுத்தி வரும் உள்கட்டுமான திட்டங்கள், அமெரிக்காவிலிருந்து வாங்கும் ஆயுதங்கள், அமெரிக்க வங்கிகளில் டெபாசிட்டுகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவுக்கே வர வேண்டுமென்பதே அமெரிக்காவின் விருப்பமாகவுள்ளது. இதை அரபு நாடுகள் மீறும் போது அவற்றில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்த கலகங்கள், உள்நாட்டுப் போர்களைத் தூண்டுகிறது. இந்த அனைத்து சதி வேலைகளுக்கும் இஸ்ரேல் துணையாக இருக்கிறது. பெரும்பாலான அரபு அரச குலங்கள் மக்களால் வெறுக்கப்படுகின்றன. அமெரிக்க இஸ்ரேலிய வலிமையே அவரகளை ஆட்சியில் இருத்தியுள்ளது. இப்போதும் கூட ஈரானின் போட்டியைச் சமாளிக்க சவுதி அரேபியா இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இருந்தது. ஹமாஸின் தாக்குதல், இஸ்ரேலின் பதில் தாக்குதல் ஆகியவற்றால் அது நின்றுபோயுள்ளது. 

இதுதவிர அரபுலகின் பெட்ரோலிய உற்பத்தி, விலை நிர்ணயம் ஆகியவற்றின் மீதும் அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

 

இஸ்ரேல் இருப்பதால் அமெரிக்காவுக்கு அங்கே ராணுவத் தளங்கள் அவசியமில்லை. இஸ்ரேல் இல்லாவிட்டால் அமெரிக்கா அங்கே தன்னை ராணுவ ரீதியில் நிலை நிறுத்திக் கொள்ள இஸ்ரேலுக்கு வழங்கி வரும் நிதியுதவியை விட ஏழு மடங்கு அதிகம் செலவிட வேண்டி வரும் என்று மதிப்பிடுகிறார்கள்.

 இஸ்ரேல் அமெரிக்க ஏவுகணைகள், விமானங்கள், கருவிகள், ராணுவ மருத்துவமனைகள் ஆகியவற்றை வைத்துக் கொள்ள பாதுகாப்பான இடமாகும். அமெரிக்கா இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை யுதர்கள் தலையில் சுமத்தியுள்ளது.

சோமாலி கடற்கொள்ளையர்கள், அல் கைதா போன்றவர்களிடமிருந்து அமெரிக்காவின் வணிக மார்க்கங்களை பாதுகாக்கும் பணியை இஸ்ரேல் செய்து வருகிறது. (Israel ; A strategic asset for the united states – Robert D blackwill, Walter B. Slocmbe)

  .

 

இஸ்ரேல்   மேற்குலகின் நலன்களை பாதுகாக்கும் வலிமை வாய்ந்த அடியாளாக இருந்து அந்த நாடுகளின் ஆதரவையும் ராணுவ நிதியுதவியையும் பெற்று வருகிறது. இதற்காக  தனது வலிமையை மிக அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்கிறது. மொசாத்தின் திறன், ராணுவ பலம் ஆகியவற்றை மிகையாகக் காட்டிக் கொள்கிறது. திரைப்படங்கள், ஆய்வு நூல்கள், ஆவணப்படங்கள் மூலம் இஸ்ரேல் ராணுவ சாகசங்கள் பற்றிய வீரக் கதைகள் ஒவ்வொருவரையும் சென்றடையும் படி இஸ்ரேல் பார்த்துக் கொள்கிறது. 

 இப்போது இஸ்ரேல் தன்னையே பாதுகாத்துக் கொள்வதில் கடும் தோல்வியடைந்துள்ளது. இஸ்ரேல் இனி வர இருக்கும் போரில் ஏதாவது செய்து தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டத் தவறினால் மேற்கு நாடுகள் இந்தப் பகுதியில் வேறு அடியாட்களைத் தேடத் தொடங்கிவிடும். (The strategc implications of Operation Al aQsa Flood – Dr Mohsen M.Saleh. Middle east Monitor )  அதே நேரம் காசாவுக்குள் நுழைந்து ஹமாஸை நேரடியாகச் சந்திக்கவும் இஸ்ரேல் தயங்குகிறது. அண்மையில் மேற்குக்கரையில் உள்ள ஜெனின் அகதிமுகாமைத் தாக்கிய இஸ்ரேல் படைகள் அதனுள் நுழையாமல் திரும்பின. இஸ்ரேலிய யூதர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் போரிட விரும்ப மாட்டார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடிவிடுவார்கள் என்ற பயமும் இஸ்ரேலுக்கு உள்ளது. எனவே தனக்கு பெரிய சேதம் இல்லாமல் காசாவை தரைமட்டமாக்க முயல்கிறது. அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் தான் பெரிய வெற்றி பெற்று வருவதாக சாதிக்க முயல்கிறது.

                                                    -----------------------------------

 இந்தியா இஸ்ரேல் உறவுகள்

பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து இஸ்ரேல் அமைக்கும் ஐநா தீர்மானத்தை நேரு தலைமையிலான இந்தியா ஆதரிக்கவில்லை. எதிர்த்து வாக்களித்தது. பின்பு 1950ல்தான் இஸ்ரேல் உறுதியாக நிலை பெற்றதும் அங்கீகரித்தது. இருந்த போதிலும் மூழுமையான அரசாங்க உறவுகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.  இஸ்ரேலின் துணைத்தூதரகம் பம்பாயில்தான் இருந்தது. முழுமையான தூதரகம் டெல்லியில் அமைக்கப்பட வில்லை. 

1992 ஆம் ஆண்டுதான் இந்தியா டெல் அவீவிலும், இஸ்ரேல் டெல்லியிலும் தூதரகம் தொடங்கின.  இதற்கு முன்பே எகிப்து போன்ற அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவு கொள்ளத் தொடங்கியிருந்தன.  I2U2குழு என்ற ஒரு அமைப்பை இந்தியா, இஸ்ரேல், ஐய்க்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து தொடங்கியுள்ளன. கூட்டு முதலீடுகள், போக்குவரத்து, விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு என்பதே இதன் நோக்கம். ( இரண்டு ஐ அதாவது India Israel, இரண்டு U –Us, UAE)

2022 இல் இந்தியாதான் இஸ்ரேலில் இருந்து அதிக ஆயுதங்கள் வாங்கிய நாடு. ராணுவ பயிற்சி, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது என்று இந்த உறவு வளர்ந்து வருகிறது. மோடி அரசு இஸ்ரேலுக்கு எதிரான பல ஐ நா வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்து உள்ளது. 

காந்தி யூதர்கள் என்பது ஒரு இனம் அல்ல மதம். அவர்கள் எந்த நாட்டில் உள்ளார்களோ அந்த இனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். நேபாள இந்துக்கள் நேபாளிகள். பாகிஸ்தானி முஸ்லீம்கள் பாகிஸ்தானியர்கள், ஈரானிய முஸ்லீம்கள் ஈரானியர்கள் என்பது போல. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இஸ்ரேலை அங்கீகரிக்கப் சொல்லி நேருவுக்கு ஜூன் 13, 1947 இல் நான்கு பக்க கடிதம் எழுதுகிறார். நேரு மறுத்து விடுகிறார். 

இந்து மகாசபாவின் தலைவர் வினாயக் தமோதர் சாவர்கார் இஸ்ரேல் உருவாக்கத்தை நியாயமானது நீதியானது மற்றும் அரசியல் பூர்வமாக சரியானது என்றார். எதிர்த்து வக்களித்த நேருவை கடும் கண்டனம் செய்தார். ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் யூத தேசியவாதத்தை புகழ்ந்து போற்றினார். பாலஸ்தீனம் இயற்கையாகவே யூதர்களுக்குச் சொந்தமானது என்றார். (Hindu nationalism Jaffret Christophe, Return to swastika : hate and hysteria versus Hindu sanity –Elst, Koenraad).

இந்தியா பாகிஸ்தான் போரில் இஸ்ரேல் மத அடிப்படையில் இந்தியாவை ஆதரித்தது. முஸ்லீம் நாடுகளிலேயே வலிமை வாய்ந்த, தொழில் முறையிலான ராணுவத்தைக் கொண்டது பாகிஸ்தாந்தான். பாகிஸ்தான் விமானிகளும், அதிரடிப்படை வீரர்களும் அரபுநாடுகளின் ராணுவங்களில் முக்கிய பங்காற்றினர். எனவே பாகிஸ்தான் பிளக்கப்படுவதையும், பலவீனப்படுத்தப்படுவதையும் இஸ்ரேல் விரும்பியது. அதே நேரம் இந்தியா பி எல் ஓவை ஆதரித்தது. ஏராளமான இந்தியர்கள் அரபு நாடுகளில் பணிபுரிந்து அன்னிய செலாவணி ஈட்டினர். அரபு நாடுகளில் பாகிஸ்தானின் செல்வாக்கை கட்டுப்படுத்த இந்தியா விரும்பியது. அரபு எண்ணெய் இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. இந்தக் காரணங்களினாலும் கொள்கை அடிப்படையிலும் யூதமத அடிப்படையிலான அரசு என்பதற்கு காங்கிரஸ் எதிரானதாக இருந்தது. அரபு மக்களுக்கு ஆதரவாக இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை இருந்தது.

1999 கார்கில் போரில் இஸ்ரேல் இந்தியாவுக்கு ஆயுதங்களும் உளவுத் தகவல்களும் அளித்தது. அவ்வப்போது இந்தியாவானது இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் படுகொலைகளைக் கண்டித்தாலும் அது வாயளவிலானது, முஸ்லீம் வாக்குகளுக்கானது என்பதை இரண்டு நாடுகளுமே உணர்ந்திருந்தன.

 நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்திய இஸ்ரேல் நட்பானது மிகவும் நெருக்கமானதாகியுள்ளது.  முதல் முறையாக மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். 2014ல் ஐநா மனித உரிமை ஆணையம் இஸ்ரேல் போர்குற்றங்கள் புரிந்துள்ளது  என்று ஒரு அறிக்கை வைத்த போது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கு இஸ்ரேல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது. இந்திய பாராளுமன்றத்தில் காசாவில் இஸ்ரேல் படுகொலை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வர எதிர்க் கட்சிகள் முயன்ற போது சுஷ்மா சுவராஜ் அதை தடுத்து நிறுத்தினார். 

 இந்திய அரசு காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கொள்கை எப்படியிருந்தாலும் அரசு அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் மொசாத், இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி கம்பெனிகள் ஆகியவற்றுடன் உடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டே இருந்தனர். இவர்கள் முஸ்லீம் வெறுப்பு இந்துத்துவ தன்மை கொண்டவர்கள். 1996 ஆம் ஆண்டு யாதவ் என்ற முன்னால் ரா அதிகாரி ஆன்ந்த் குமார் வர்மா என்ற ரா தலைமை அதிகாரி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். ரா அமைப்பு இரண்டு கம்பெனிகள் தொடங்கி எட்டு சொத்துக்கள் வாங்கியது. சினிமா எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டது. அது வாங்கிய சொத்துக்களில் இரண்டு பிளாட்களும், ஒரு வீடும் உண்டு என்று பட்டியல் இட்டார். 

இதுபற்றி ஆய்வு செய்த இந்தியா டுடே இது மொசாத் அதிகாரிகளைத் தங்க வைக்கவும் அவர்களுடன் ஆலோசனை செய்யவும் பயன்படுத்தப்பட்ட கட்டடங்கள் என்று கண்டு பிடித்தது. இதெல்லாம் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரியும் என்று ரா சாதித்தது.

இப்போது இந்தியா இஸ்ரேல் உறவு எந்த அளவுக்குப் போயிருக்கிறது என்றால் 2015 நவம்பரில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி துருக்கி சென்ற போது அவருக்கு பாதுகாப்பளிக்க மொசாத் மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறையான MI5 ஆகியவை அமர்த்தப்பட்டனவாம். ரா, ஐபி இந்தியாவின் சிறப்பு பாதுகாப்பு பிரிவுகள் ஆகியவை இருந்த போதிலும் இந்த நடவடிக்கை.

2007 டெல்லியில் ஹிந்து யூத மதங்களின் கூட்டு மாநாடு நடைபெற்றது. அதில் இஸ்ரேலின் தலைமை ரபியான யோனா மெட்ஸ்கெர் உள்ளிட்ட பல யூத மதத் தலைவர்களும், அமெரிக்க யூத கமிட்டி தலைவரும் கலந்து கொண்டனர். பல இந்துத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்த மாநாடு 2008ல் ஜெருசலத்தில் நடைபெற்றது. இதற்கு இஸ்ரேல் குடியரசு தலைவர் சிமோன் பெரஸே வருகை தந்தார்.

2019 ஆம் ஆண்டு இந்து யூத பண்பாட்டு உறவுகளை மேம்படுத்த ஒரு பெரிய மாநாடு மும்பையில் கூட்டப்பட்டது. இதை இந்தோ இஸ்ரேல் நட்புறவு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் சுப்பிரமணியன் சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்திய கார்ப்பரேட்டுகள் மத்திய கிழக்கில் ஏராளமாக முதலீடு செய்து வருகின்றனர். இவற்றை காப்பாற்ற மத்திய கிழக்கில் அமைதியை நிலவச் செய்ய அமெரிக்காவின் உதவி அவசியம். அமெரிக்காவின் நம்பகமான அடியாள் இஸ்ரேல். எனவே இந்திய கார்ப்பரேட்டுகள் இஸ்ரேலுடன் நட்புக் கொள்வதில் வியப்பில்லை. இந்து மத உணர்வு கொண்ட அதிகார வர்க்கம் ஏற்கெனவே இஸ்ரேலுடன் நட்பாக உள்ளது. இந்த நலன்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே மோடி அரசு இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு ஆகும்.

மதவெறிக்கும், வணிக நலன்களுக்கு இப்போதைய இந்திய அரசானது தான் இவ்வளவு நாட்கள் கட்டிக் காத்து வந்த வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை அம்சங்களையும் அறத்தையும் சர்வ நாசம் செய்துள்ளது. 

முருகவேள் இரா