விநாயகர் வழிபாடும் முரண்பட்ட தகவல்களின் சுருக்கமும்

இரா. முருகவேள்

விநாயகர் வழிபாடும் முரண்பட்ட தகவல்களின் சுருக்கமும்

இந்த விநாயகர் வழிபாடு பல்வேறு முரண்பட்ட தகவல்கள், விசித்திரமான ஒருங்கிணைப்புகள்,   மாயத் தன்மைகள் கொண்டது. 

விநாயகர் விவசாயம் அல்லது அறுவடைக் கடவுள் என்பது வைதீக இந்து மரபுக்கு வெளியே உள்ள மக்கள் வழிபாட்டு மரபு. எலி விவசாயத்துக்கு எதிரி. அதை அடக்கி ஒடுக்கியவர், அரிசி கொழுக்கட்டை உண்பவர், மண்ணால் உருவாக்கப் பட்டு உழவுக்கு பயன்படும் நீரில் கரைக்கப் படுபவர் மக்களின் பிள்ளையார். அவரது பருத்த வயிறு நெல் கொட்டி வைக்கும் தாழி. யானைத் தலை என்பது வைக்கோலின் உருவகம் என்று ஒரு ஆய்வு.

பண்டைய இந்தியாவின் பல பகுதிகளில் ஹஸ்தியார், ஹஸ்தி, மாதங்கம் என்று யானை பெயர் கொண்ட, யானையை குலக் குறியாகக் கொண்ட பழங்குடிகள், அரசுகள் உண்டு.  இந்தியா வந்த கிரேக்கர் கூட இவர்களுக்காக யானை உருவம் கொண்ட  நாணயங்களை அச்சிட்டனர். அதே போல மூஷிகான் அதாவது எலி பெயரில் இனங்களும் அரசுகளும் நகரங்களும் இருந்தன என்கிறார்கள்.

எனவே வழக்கம் போல எலி இனத்தை வென்ற யானை இனம் என்பதன் உருவகம் விநாயகர் என்று ஒரு ஆய்வு. கோசாம்பி, தேவிபிரசாத் போன்றவர்கள் இது போல சிந்திக்கின்றனர்.

தேவி பிரசாத் சாட்டோபாத்யாயா மகாயான பௌத்த மதம் விநாயகரை அரக்கன் என்கிறது என்கிறார். ஒரு சில ஸ்மிருதிகளிலும் விநாயகன் அரக்கன் போலவே சித்தரிக்கப் படுகிறார். விநாயகனை வென்று அடக்குவது போன்ற சிற்பங்கள் வங்கத்திலும், திபெத்திலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்கிறார் தேவி பிரசாத். பரசுராமரின் தாக்குதலால் வினாயகர் ஒரு தந்தத்தை இழந்தாக ஒரு கதை. ரிக் வேதத்தில் கணபதி பிரமன்ஸ்பதி என்றும் அழைக்கப் படுகிறார். பிரமணரான பரசுராமரை எதிர்த்தும் போரிடுகிறார். இன்று இந்துமதம் என்று கூறப் படுவதிலீயே இரண்டு வகையான கருத்து இருக்கிறது.

 ரிக் வேதத்தில் வரும் பிராமன்ஸ்பதி என்பது இந்த கணபதி தான் என்ற ஆய்வு பரவலாக  உண்டு. கணபதி என்றால் அந்தக் கால நோக்கில் குலத்தின் தலைவன் என்பது பொருள். 

எல்லாம் கலந்தது தான் இன்றைய கணபதி - வினாயகர் - பிள்ளையார் வழிபாடு. சங்கிகளுக்கு மிக முக்கியமான ஆயுதம்.

புத்தரின் தலையை உடைத்து தான் விநாயகர் தலை . . . ம் அதுவும் இருக்கும். ஆனால் அது மட்டுமே அல்ல. ஒரு கருத்து தீவிரமாக பரப்பப் படும் போது அதன் எதிர் நிலையும் தீவிர வடிவம் எடுக்கத்தான் செய்யும். 

நாம் எல்லாவற்றையும் பார்ப்போம். தமிழ் நாட்டில் முதன்மையான மதமாக இருந்தது சமணம் என்பதையும் மனதில் கொள்வோம்.

- இரா. முருகவேள்

https://www.facebook.com/1714910257/posts/10214907130547836/?rdid=TbAj1iMVlbjrmRVI

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு