மார்க்சியத்தைக் ''குறுக்கும்'' முயற்சிகள்!

மார்க்சியத்தைக் ''குறுக்கும் முயற்சிகளுக்கு'' எதிரான எனது சில கருத்துக்கள். வேறு ஒரு பதிவில் நான் கூறியவையே பின்கண்ட கருத்துக்கள்!

மார்க்சியத்தைக் ''குறுக்கும்'' முயற்சிகள்!

(1) மார்க்சியம் என்பது ஒரு ஒட்டுமொத்தமான தத்துவப் பார்வை. புறத்தே நீடிக்கிற இயற்கை, சமுதாயம் ஆகிய இரண்டைப்பற்றியும் இந்த இரண்டும் மனிதர்களின் மனத்தில் எவ்வாறு தங்களைப்பற்றிய கருத்துக்களை உருவாக்குகின்றன என்பதுபற்றியும் ஒரு ஒட்டுமொத்த விளக்கத்தை அளிக்கிற ஒரு அறிவியல் ஆய்வுமுறை. இந்த மூன்றின் நீடிப்பும் மாற்றமும் வளர்ச்சியும் எதனால் நடைபெறுகின்றன, எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை விளக்கும் ஒரு ஒட்டுமொத்தப் பார்வை - அதுவே இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிவியல் ஆய்வுமுறையானது இயற்கை, சமுதாயம், மனம் மூன்றுக்கும் ஒன்றுதான்! அவ்வாறு இல்லாமல் இந்தப் பார்வையை இயற்கைக்குமட்டும் செயல்படுத்துவோம், அல்லது சமுதாயத்திற்குமட்டும் செயல்படுத்துவோம், அல்லது மனதிற்குமட்டும் செயல்படுத்துவோம் என்று சொல்வது தவறானது. அவ்வாறு யாராவது கூறினால், அதற்கு அவரது தனிப்பட்ட நலன்களே காரணமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை!

(2) மேற்குறிப்பிட்ட தத்துவப் பார்வையின் அடிப்படையே இயற்கையோ, சமுதாயமோ மனதோ எதுவாகயிருந்தாலும் அதன் நீடிப்புக்கும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அதன் உள்ளார்ந்த பண்புகளே காரணம் என்பதே ஆகும். உள்ளார்ந்த எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் அதன் அடிப்படையில் அமைகிற சுருள்வளைய நகர்வே ( ஒரு வளையத்தைத் தாண்டி அல்லது மறுத்து அடுத்த உயர் வளையத்திற்கு இட்டுச்செல்வதே) ஆகும். இந்த இயங்கியல் பண்பை உணராமல் இருப்பதோ மறுப்பதோ மார்க்சியப் பார்வை இல்லை!

(3) ''இந்தப் பார்வையை இலக்கிய ஆய்வுக்குமட்டுமோ அல்லது வரலாற்று ஆய்வுக்குமட்டுமோதான் செயல்படுத்துவேன் - எனது வாழ்க்கைக்கு - எனது வளர்ச்சிக்கு நான் மார்க்சியப் பார்வைக்கு முழு எதிரான கருத்துமுதல்வாத - மத அடிப்படையிலான பார்வையை ஏற்றுக்கொள்வேன்'' என்று கூறுவது மார்க்சியத் தத்துவத்தை ஒரு ஒட்டுமொத்தமான ஆய்வுமுறை - அறிவியல் ஆய்வுமுறை என்பதை மறுப்பதே ஆகும். மேலும் ஒரு குறிப்பிட்ட துறையில் செயல்படுத்தி, அதனால் கிடைக்கும் வெற்றியைத் ''தனதாக்கிக்கொள்ளும் ஒரு தன்னலப் பார்வையே'' ஆகும்.

(4) மேலும் மார்க்சியத் தத்துவமானது நமக்கு விருப்பப்பட்ட துறைகளுக்குச் செயல்படுத்தி , அதனால் கிடைக்கும் பெருமைகளையும் புகழையும் ''தனதாக்கிக்கொள்வதற்கான'' ஒரு தத்துவம் இல்லை. மனித சமுதாயம் தனது வளர்ச்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு தத்துவம்; அதாவது வெறும் விளக்கவுரையை அளிப்பதற்கான தத்துவம் இல்லை; மாறாக, உலகைப் புறவய விதிகளுக்கேற்ப மாற்றி அமைப்பதற்கான ஒரு தத்துவம் ஆகும்.

(5) மார்க்சியத் தத்துவத்தை ஒரு ஒட்டுமொத்தமான பார்வையாக பார்க்காமல், தங்களுக்குப் ''பிடித்த'' ஒரு பிரிவுக்கான தத்துவமாகப் பார்ப்பது தவறு; அதுபோலச் சமுதாயத்தின் அனைத்துவகையான சிக்கல்களையும்பற்றியதான ஒரு தத்துவமாகப் பார்க்காமல் - இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான தத்துவமாகப் பார்க்காமல் - கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக்கொண்ட சில 'சீர்திருத்தவாத ' இயக்கங்களோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. ''சீர்திருத்த இயக்கங்களை'' ஆதரிப்பது வேறு; ஆனால் அவையே மார்க்சியப் பார்வை, மார்க்சியக்கொள்கை என்ற தவறான முடிவுக்குச் செல்வது வேறு. (அவ்வாறு செல்வதால் சிலருக்குத் தனிப்பட்ட ''மரியாதைகள்'' ''வெகுமதிகள்'' கிடைக்கலாம்; கிடைத்துக்கொண்டும் இருக்கிறது!)

மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு, அதைச் சிதைக்கமால், சமுதாயத்திற்காகப் போராடுகிற புரட்சிக்கவிஞர் வரவரராவுக்கு இன்றைக்குக் கிடைத்துள்ள ''விருது'' என்ன? தள்ளாத வயதிலும் ஜாமீன்கூடக் கொடுக்க இந்தச் சமுதாயம் தயார் இல்லை! ஆனால் . . . மார்க்சியத்திற்குத் ''தவறான விளக்கம்'' தருபவர்களுக்கு அனைத்துவகையான ''மரியாதைகளும்'' அளிக்கப்படுகின்றன! ''உன் எதிரி உன்னைப் பாராட்டினால், நீ எங்கேயோ அவனுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாய்'' என்ற ஒரு குரல் கேட்கிறது!

சமுதாயத்தின் ஏதாவது ஒரு பிற்போக்குத்தனமான கருத்தையோ செயல்களையோ எதிர்த்துநிற்கிற . . . கண்டிக்கிற . . . பகுதிப்பிரச்சினைக்கான போராட்டத்தில் ஈடுபடுகிற . . . இயக்கங்களையும் தனிமனிதர்களையும் நாம் வரவேற்கவேண்டும்; ஆதரிக்கவேண்டும்; உதவ வேண்டும். ஆனால் அதை ஒரு ஒட்டுமொத்தமான புரட்சிகரமான மார்க்சியத்தோடு ஒரே தளத்தில் இணைத்துவைத்துப் பார்க்கிற பார்வை சரி இல்லை என்பது எனது கருத்து. 

சீர்திருத்தச் சிந்தனையாளர்களை மார்க்சியப் பார்வை என்ற உயர் தளத்திற்கு ஏற்றுவதற்கு முயலவேண்டும்; மாறக, மார்க்சியப் பார்வையைச் சீர்திருத்தப் பார்வையாக கீழே இறக்கக்கூடாது. அது சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்குப் போகக்கூடாது என்று விரும்புகிற பிற்போக்குச் சக்திகளுக்கே உதவும்.

- தெய்வசுந்தரம் நயினார்

(முகநூலில் இருந்து)

https://www.facebook.com/100004424580477/posts/pfbid0sPDkqmkUU7uGimHhk74Ea3y26cyb3v6pxmSDsJjZpTA7QxA6nmasBWRobyyZa6jsl/?sfnsn=wiwspwa