மனித நேயத்தை இழந்தது நாங்கள் அல்ல - அது நீங்கள்தான்
தமிழில்: வேல் கண்ணன்

இன்று காலை, ஒரு கல்லறையிலிருந்து விழித்தெழுவது போல் எழுந்தேன். அயர்ச்சி களையாமல் பாதாளத்திலிருந்து வந்தவனைப் போலுணர்ந்தேன். இல்லாத ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
தண்ணீர்.
பன்னிரண்டு நாட்களாக தண்ணீர் குழாய்களில் ஒரு துளி தண்ணீர் கூட இல்லை. குழந்தைகளின் நாக்குகள் பன்னிரண்டு நாட்களாக தண்ணீர் இல்லாமல் தாகத்தால் வறண்டு வீங்கி விட்டன. வலியில்லாமல் தாகத்தால் அழுத் தொடங்கிய குழந்தைகள், தாகம் அதிகமாகவே அமைதியாகத் தொடங்கிவிட்டனர் .பன்னிரண்டு நாட்களாக என் அம்மா காலியான வாளியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது தானாக இரக்கப்பட்டு நிரம்பிவிடுமோ என்ற ஏக்கத்துடன் .
நகராட்சி அதிகாரிகளால் தண்ணீர் குழாய்களை நிரப்ப முடியவில்லை. இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீண்டும் பாதைகளை மறித்துவிட்டனர். போரின் விதிகள் கடவுளின் விதிகளைப் போல மாறிவிட்ட நிலையில், யாரிடம் புகார் செய்து என்ன பயன்?
என்னுடைய கட்டிலின் விளிம்பில் அமர்ந்தேன். என் காலடியில் காலியான தண்ணீர் கேன்கள் கிடந்தன. ஒருபோதும் கேட்க நேரிடும் என்று கற்பனை செய்யாத ஒரு கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டேன்: இன்று என் நோயாளிகளைக் காப்பாற்றுவதா அல்லது என் குடும்பத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவதா?
என் உடல் ஏற்கனவே முடிவை எடுத்துவிட்டது. அது தனக்குள் எந்த விவாதத்திற்கும் இடம் கொடுக்கவில்லை. உறுதியுடன் மற்றவற்றை மறுத்துவிட்டது.
ஒரு காலத்தில் காயங்களைத் தைத்த இந்த கைகள் இப்போது பசியால் நடுங்குகின்றன.
அறுவை சிகிச்சையின் போது நின்ற இந்த கால்கள் இப்போது நீர் சத்து குறைவால் தள்ளாடுகிறது.
நான் ஒருபோதும் விரும்பாத மனிதனாக மாறினேன்: என் சொந்த வாழ்க்கைக்காக யாசிக்கத் தொடங்கும் ஒரு மனிதன்.
ஒரு தண்ணீர் லாரி இன்றும் வரக்கூடும் என்ற லேசான நம்பிக்கையுடனும் இரண்டு தண்ணீர் கேன்களுடன் வீட்டை விட்டு வெளியேறினேன்.
எரிபொருள் தீர்ந்து விட்டது. லாரிகள் மாயமாகி விட்டன. கள்ளச்சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் முப்பத்தைந்து டாலருக்கு விற்கப்படுகிறது. இங்கு யாரும் கொடுக்க முடியாத ஒரு விலை அது.
நான் தெருவை அடைந்த போது, அது ஏற்கனவே ஆட்களால் நிரம்பியிருந்தது.
நம்பிக்கை இழந்தவர்களின் கடல்.
தாய்கள். தந்தைகள். குழந்தைகள் காலி பாட்டில்களை ஜெபமாலைகள் போல பிடித்துக் கொண்டிருந்தனர்.
எல்லோரும் காத்திருந்தனர்.
யாரும் பேசிக்கொள்ளவில்லை.
பின்னர் அந்த லாரி வந்தது.
மீட்பிற்கு வாக்குறுதி கொடுத்த அந்த உலோகம்.
மக்கள் ஓடினர்.
நானும் ஓடினேன்.
அதன்பிறகு என் காதைப் பொத்திக் கொள்ள இயலாத ஒரு ஒலி.
அது குண்டு வெடிப்பு அல்ல. அலறல் அல்ல.
அதைவிடக் கொடுமையான ஒன்று.
சிமெண்ட் தரையில் ஒரு மனித உடல் சரிந்து விழுந்தது. இருபது வயதுக்கு மேல் இருக்காத அந்த இளைஞன், தன் தண்ணீர் கேனுக்கு அருகில் விழுந்திருந்தான்.
இயல்பில் அவன் வலிமையாக இருந்திருக்க வேண்டிய வயது.
அதற்குப் பதிலாக அவன் வீதியில் வீசப்பட்ட ஒரு துணி போல் மடிந்து கிடந்தான்.
அவன் அசையவில்லை.
வேறு யாரும் அசையவில்லை.
அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள்.
நான் உறைந்து போனேன்.
கொடூரத்தினால் நிற்கவில்லை. அடையாளம் கண்டுகொண்டதால்.
ஏனென்றால் அந்த மனிதன் நானாகவும் இருந்திருக்கலாம்.
நானாக இருக்கலாம்.
சரிந்து கிடக்கும் ஒரு மனித உயிரைக் கண்டும் எங்கள் கால்கள் நிற்காத அளவுக்கு நாங்கள் என்னவாக மாறிவிட்டோம்?
தண்ணீரை விட உயிர் முக்கியம் என்பதை நாங்கள் எப்போது மறந்தோம்?
நான் அவனருகே மண்டியிட்டேன். ஒரு மூதாட்டி என்னுடன் சேர்ந்து கொண்டார்.
ஒன்று சேர்ந்து, துண்டாக சிதறியிருந்த ஒரு ஆத்மாவின் சிறு துண்டுகளை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டு வர நாங்கள் முயன்றோம்.
அவன் கண்களைத் திறந்தான். ஆனால் எங்களைப் பார்த்தது ஒரு மனிதன் அல்ல.
ஒரு மனிதனுக்கு உணவும், தண்ணீரும், கண்ணியமும் இல்லாதபோது எஞ்சியிருக்கும் நிலை அது.
தண்ணீர் லாரி சென்றுவிட்டது. நான் அதை அடையவே இல்லை.
ஒரு மணி நேரம் கழித்து என் நண்பன் க*லீ*ல் அழைத்தான். நிவாரணப் பொருட்களை பெறும் முயற்சியில் அவனது தம்பி காயமடைந்திருந்தான். அவன் உதவிக்காக கெஞ்சினான்.
அப்படியே நான் மருத்துவமனைக்கு திரும்பினேன்.
என் உடல் செயல்பட மறுத்த நாளிலும், இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் இல்லத்திற்குள் என்னை நானே கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றேன்.
காயம்பட்டவர்கள் அறுவடை செய்யப்பட்ட கோதுமை மணிகள் போல தரையில் கிடந்தனர். படுக்கைகள் இல்லை. மருந்துகள் இல்லை. வலி ஏற்படுத்திவிடக் கூடிய இடமுமில்லை.
செவிலியர்கள் மக்களை திருப்பி அனுப்பத் தொடங்கியிருந்தனர்.
‘நிறைய பேர் இருக்கிறீர்கள்’ என்று வேதனையை எண்ணத் தெரிந்தவர்கள் போல அவர்கள் முறையிட்டார்கள்.
இங்கு அமர்ந்து எதையும் தாங்கிக் கொள்கிற சக்தியை இழந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்த வார்த்தைகளை எழுதுகிறேன்.
நாங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தோம்? வாழத் தகுதியில்லாதொரு மக்கள் கூட்டமாக எங்களை ஏன் இந்த உலகம் நிராகரித்தது?
எங்களுடைய இரத்தம் மிகவும் மதிப்பு குறைந்தது என்பதாலா?
இல்லை உலகம் எங்களை பார்க்க கற்றுக் கொண்டு, பின்னர் முகத்தை திருப்ப கற்றுக் கொண்டதாலா?
அப்படியானால் மனித நேயத்தை இழந்தது நாங்கள் அல்ல.
அது நீங்கள்தான்.
(பின் குறிப்பு: தினமும் இஸ்ரேலியப் படை நிவாரணம் பெறச் செல்லும் அப்பாவி மக்களை சுட்டுக் கொல்கிறது. பட்டினியால் குழந்தைகள் முதியவர்கள் தினமும் இறந்து போகிறார்கள்)
- வேல் கண்ணன் (தமிழில்)
இது கா*ஸா மருத்துவர் எ***சி***தீ*""னின் ஆங்கில பதிவின் ஐந்தாவது தமிழாக்க பதிவு
https://www.facebook.com/story.php?story_fbid=10228250395621952&id=1139738249&rdid=75T14QsndxrwIkHU
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு