அனுபவமே ஆசான்!

சாவித்திரி கண்ணன்

அனுபவமே ஆசான்!

மூன்று நாட்கள் மவுனத்திற்கு பிறகு இன்று வாய் திறந்துள்ளார் விஜய். அவரிடமிருந்து சுய விமர்சனமும், தன்னிலை  விளக்கமும் வரும் என எதிர்பார்த்தேன்.

கரூரில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தன் மனதின் வலியை அவர் சொந்த மொழியில் யாரும் ஸ்கிரிப்ட் எழுதி தராமல் வெளிப்படுத்தினார், உருக்கமாக,. அதில் பாசாங்குத்தனம் இல்லை.

ஆனால், இந்த சம்பவத்தை தான் முறையாக எதிர்கொண்டோமோ என்பது குறித்து இந்த மூன்று நாட்களில் சுய பரிசோதனைக்கு தன்னையும், தன் கட்சியினரையும் உட்படுத்தினாரா? என்று தெரியவில்லை.

அப்படி சுய பரிசோதனை செய்திருந்தால், இந்த காணொளியில் அவர் மக்கள் மனதில் இருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பார். அரசியல் அனுபவமின்மையால் தவறுகள் நடந்துவிட்டது. அதே சமயம் இந்த அனுபவத்தில் அவர் பாடம் கற்றாரா? என்பதற்கு அவர் காணொளியை பார்த்து முடிவுக்கு வர முடியவில்லை.

# ஏழு மணி நேர காலதாமத்திற்கான தன்னிலை விளக்கம் தந்திருக்க வேண்டும்.

# கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.  விஜய் அங்கு வருவதே ரிஸ்க்கானது. ஆகவே, இதை தவிர்ப்பது நல்லது என அவர் மீது பற்றுள்ள ஒரு காவல்துறை அதிகாரி மூலம் அவருக்கு இன்சிஸ்ட் செய்யப்பட்டதை அவர் மீறியதற்கான சுய விமர்சனம் தந்திருக்கலாம்.

# தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறுகலானதா? விசாலமானதா? என்பதை கட்சி நிர்வாகிகளிடம் தீர  விசாரித்து முடிவெடுத்தாரா?

# மயங்கி விழுந்த சம்பவங்களை கண் எதிரே கண்ட விஜய்,  தன் நிர்வாகிகளை அழைத்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி அங்கே சுற்றிலும் இருந்த தனியார் மருத்துவனைகளில் பத்திரமாக கொண்டு சேருங்கள்…செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ எனக் கூறி, தன் பின்னே அணிவகுத்து வந்த கார்களை தொண்டர்களுக்கு தந்து உதவி இருக்கலாம். கரூர் சிட்டியிலேயே ரூம் போட்டு தங்கி,  நடைபெறும் நிவாரணம் குறித்து கேட்டு அறிந்து வழி நடத்தி இருக்கலாம். 

# அன்றே இது போல் காணொளியில் தோன்றி மக்களுடன் தான் இருப்பதாக நம்பிக்கை ஊட்டி இருக்கலாம் . இவை எதனையும் செய்யவில்லை. இதை தற்போதாவது உணர்ந்தாரா தெரியவில்லை.

# தன் அரசியல் எதிரிகள் மிக பலம் பொருந்தியவர்கள். மக்களோடு களத்தில் நிற்கத் தெரிந்தவர்கள். தகுந்த திட்டமிடலோடு எதையும் துரிதமாகச் செய்து, எதிரிகளை திணறடிப்பவர்கள்… என்ற புரிதலுக்காவது தற்போது வந்தாரா? என்பதும் தெரியவில்லை.

பார்ப்போம், அனுபவம் தான் யாரையும் விட பெரிய ஆசான்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/story.php?story_fbid=32515346424722839&id=100000227053317&rdid=CAey8oBPh9yMpHWQ

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு