திமுக அரசிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

போனஸ் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கெதிராக குரல்

திமுக அரசிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன் ஆகிய இருவரும் இணைந்து வெளியிடும் *பத்திரிக்கை செய்தி*

* தமிழக அரசின் பொங்கல் போனஸ் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது...

* தமிழ்நாடு அரசு ஊழியர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டிக்கிறோம்...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பொங்கல் போனஸ் ரூ 7000 அறிவிக்குமாறு கோரியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 01.07.2022 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட 4 சதவித அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக 01.07.2022 முதல் வழங்குமாறு கோரியும், எதிர்வரும் 29.12.2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தயாரிப்பு பணிகளும், பிரச்சாரமும், முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக பொங்கல் போனஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் பொங்கல் போனஸ் அறிவிப்பினை முன்கூட்டியே அறிவித்து அரசு ஊழியர் நலனில் மிகவும் அக்கரை கொண்டுள்ளதைப் போன்ற போலியான தோற்றத்தை தமிழக அரசு உருவாக்க முயன்றுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட போனஸ் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 7000/- போனஸாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கும் ரூபாய் 7000/- போனஸ் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

போனஸ் என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுபடா ஊதியம் எனவும், போனஸ் அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை வசதியாக மறந்தும், மறைத்தும், கருணைத் தொகை என்றும், மிகை ஊதியம் என்றும் போனஸ் அறிவிப்பினை வெளியிடுவதோடு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று மாநில அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 7000/- போனஸ் ஆக வழங்காமல், இந்த ஆண்டும் போனஸாக ரூ 3000/- மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

1985 ஆம் ஆண்டு திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களது ஆட்சியில் முதன் முதலாக போனஸ் அறிவிக்கப்பட்ட காலம் முதல் அதன் பின்னர் தொடர்ந்து திரு.எம்.ஜி ராமச்சந்திரன், கலைஞர் திரு.மு.கருணாநிதி, செல்வி.ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த காலகட்டத்தில் A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ்  அறிவிப்பில் பணப்பலன் வழங்கப்பட்டு வந்ததது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பில் பணப்பலன் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த ஆண்டும் அதே நிலைபாட்டினை தமிழக அரசு கடைபிடித்து A மற்றும் B பிரிவு ஊழியர்களை வஞ்சித்துள்ள போக்கு ஏற்புடையதல்ல என்பதுடன் தமிழக அரசின் இத்தகைய நிலைபாட்டிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பிலான வண்மையாக கண்டணங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசுத் துறைகளில் உரிய காலங்களில் முறையான பணி நியமனம் இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கான பணியிடங்கள், தற்சமயம் காலியாக உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பணி நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பதவி உயர்வு பெற்று A மற்றும் B பிரிவு ஊழியர்களாவே , தற்சமயம் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறனர்.

காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் C மற்றும் D பிரிவு பணியிடங்கள் என்பதால் தமிழக அரசுக்கு போனஸ் அறிவிப்பின் மூலம் 221 கோடியே 42 இலட்ச ரூபாய் கூடுதல் செலவு என்பதே மிகைப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள தொகை என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழக அரசுப் பணிகளில் தற்சமயம் மிக அதிக எண்ணிக்கையில் புற ஆதார முறையிலான பணி நியமனங்களே நடைபெற்று வருகின்றன.

மிகக் குறைந்த அளவிளான கொத்தடிமை ஊதியம் பெற்று வரும் இப்பிரிவினருக்கு போனஸ் அறிவிப்பினால் எவ்வித பணப்பலனும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது வேதனையளிப்பதாக உள்ளது.

அதே போன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை கடந்த 01.07.2022 முதல் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், தொடர் போராட்டங்களை நடத்தியும் வருகிறோம்.

இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது.

மேற்கண்ட காரணங்களால் 

தமிழக அரசின், தற்போதய பொங்கல் போனஸ் அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தெரிவிப்பதுடன் பெரும்பான்மையான ஊழியர்களை வஞ்சிக்கும் வண்ணம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள தமிழக அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனங்களையும், தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு இதற்கான அரசாணை வெளியிடுவதற்கு முன்னதாக தனது நிலைபாடு குறித்து சரியான பரிசீலனை மேற்கொள்வதோடு தனது நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்யப்பட்ட போனஸ் சட்டத்தின்படி தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரூபாய் 7000/- போனஸ் வழங்க வேண்டும்.

 A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கும் பணப்பலன் கிடைக்கும் வண்ணம் அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

புற ஆதார பணி நியமணம் பெற்றுள்ள ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து பகுதி அரசு ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிப்பின் வாயிலாக உரிய பணப்பலன் வழங்கிடும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

என தமிழக அரசை, வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்...

அதேபோன்று சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட ரூ 1000/- போனஸ் என்பதையும் உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதே போன்று 01.07.2022 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்குவது குறித்த அறிவிப்பினையும் உடனடியாக வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போனஸ் மற்றும் உரிய காலங்களில் அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்க வேண்டும்.

ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் 29.12.2022 அன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

------------------------------------------------------

மேற்கண்ட பத்திரிக்கை செய்தியினை தங்களது பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

------------------------------------------------------------

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் 

- Cheran Vanjinathan

(முகநூலில்)

https://www.facebook.com/100002299824467/posts/pfbid0xeERQ1B64CUPhAF8goFcD9zPRVEcj29HG2SUsdhSBtAgDfM7DzNKtkwJR7RbdBojl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு