தலித்தியம் புனிதமுமல்ல. அது தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை அடிமை தளையிலிருந்து விடுவிக்கவல்லதுமல்ல!

ரணதீபன்

தலித்தியம் புனிதமுமல்ல. அது தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை அடிமை தளையிலிருந்து விடுவிக்கவல்லதுமல்ல!

தலித்தியம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் 100 சதவித விழுக்காட்டினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதல்ல. தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து உருவாகியுள்ள 10சதவீதத்தினருக்கும் குறைவாக உள்ள நடுத்தர உயர்நடுத்தர வகுப்பினரை பிரதிநிதிப்படுத்துவதாகும்.

இட ஒதுக்கீட்டால் கிடைத்த கல்வி,வேறு பல தொழில் வாய்ப்புக்கள் மூலமாக சொற்ப அளவில் முன்னேறியுள்ள ஒரு சிறு கூட்டத்தினருக்கு பயன்படுவதே ஆகும். அம்பேத்கரியமே இத்தகு வர்க்கத்தை பிரதிநிதிப்படுத்துவதாகத்தான் அமைந்தது.

நிலவும் அரசமைப்பிற்குள்ளேயே தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது கானல் நீர்தான்.தாழ்த்தப்பட்ட மக்களில் 90சதவீதத்திற்கு மேலானவர்களான விவசாய தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையான உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற அவர்களின் கோரிக்கையை, வரலாற்றில் அம்பேத்கரிய வழிவந்தவர்கள் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.

அம்பேத்கர் வழி வந்தவரான கெய்க்வாட்,  நிலப்பகிர்வு கோரிக்கையை முதன்மையாகக் கொண்டு போராடிய போதும்,இத்தகு போராட்டங்கள் கம்யூனிச வகைப்பட்டது என்றும் அம்பேத்கரின் செயல் திட்டத்தில் இத்தகு போராட்டங்களுக்கு இடமில்லை என்றும் கடந்த காலத்தில் அம்பேத்கரியவாதிகளால் அறிவிக்கப்பட்டது.இதற்கு அடிப்படையானது "அரசியல் சட்டப்படியான ஆட்சியில் பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜக வழி.எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்ககூடாது" என்று கூறிய அம்பேத்கரின் முற்று முழுதான முடிவு இதற்கு அடிப்படை ஆகும்.

சாதியத்திற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை நாடாளுமன்ற ஜனநாயக கட்டுக் கோப்பிலிருந்து என்றும் வீழ்த்த முடியாது.அதை புரட்சியின் மூலம்தான் வீழ்த்த முடியும். அந்த புரட்சிதான் அம்பேத்கராலும் அம்பேத்கரியவாதிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத அராஜக வழியாகும்.எனவே இந்த நாடாளுமன்ற அமைப்பு முறைக்கு உட்பட்டு  தங்கள் மீது சிறு கீறலும் விழுந்து விடாமல், அன்றிலிருந்து இன்று வரை இடஒதுக்கீடு,சலுகைகள் போன்றவற்றையே கோரி நிற்கின்றனர். இப்படிப்பட்ட கோரிக்கைகள் தாழ்த்தப்பட்டோரில் உள்ள  மேற்கூறிய குட்டி முதலாளிய வர்க்கத்தினரின் நலன்களைத்தான் பிரதிப்பலிக்கிறதே ஒழிய,அடிப்படை மாற்றம் கோரும் தாழ்த்தப்பட்டமக்களுக்கான தீர்வாக இருக்கமுடியாது.அவர்கள் அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அராஜக வழி மூலமே போராடி தங்களுக்கான தீர்வை பெற வேண்டியிருக்கிறது.

உண்மையில் இன்று தனியார்மய, தாராளமய கொள்கைகளால்  பறி போகும் அற்ப சலுகைகளை கூட மீட்பதற்கு வக்கற்றவர்களாகவே மேற்சொன்ன வர்க்க பின்புலம் கொண்ட தலித்திய இயக்கங்களும் அதன் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதே மெய்மையாகும்.

இட ஒதுக்கீட்டையும் அற்ப சலுகைகளையும் கூட இன்று பறித்து, இல்லாமல் செய்கிற தனியார்மய, தாராளமய ஏகாதிபத்திய கொள்கைகளை அமல்படுத்திவரும் மத்திய மாநில அரசுகளிடம் ஒன்றிரெண்டு சீட்டுப்பெற்று

சுகங்காணும் சுகமோகிகளாகவே இவர்கள் இருக்கின்றனர்.தாழ்த்தப்பட்டோரில் உள்ள ஒரு சிறு பிரிவின் வர்க்க நலனுக்காக எத்தகைய சமரசத்தையும் செய்துவரும், செய்துகொள்ள தயாராய் இருக்கும் இவர்கள்,தங்கள் வர்க்க நலனிலிருந்தும், வாக்கு வங்கி அரசியல் நலனிலிருந்தும், பிற சாதி உழைக்கும் மக்களுடன் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் இணைந்து செல்வதிலும் தடை ஏற்படுத்துபவர்களாகவே உள்ளனர்.

மேல்சாதி, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள சாதி ஆதிக்க கும்பல்கள் எப்படி தங்கள் பின்னால் ஏதுமறியா தங்கள் சாதி உழைக்கும் மக்களை திரட்டிக்கொள்ள பல்வேறு கைங்கரியங்களை செய்து அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் ஏகாதிபத்திய, நிலவுடமை  ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கக்கூடிய கொள்கைகளை் மத்திய மாநில ஆட்சியில் இடம்பிடித்துக் கொண்டு ஆதிரித்து அமல்படுத்துகிறார்களோ, அதற்கு கொஞ்சமும் சலைத்தவர்கள் அல்ல, இந்த தலித்திய இயக்க சீமான்கள் என்பதை நிலமைகள் விளக்குகிறது. 

எப்படி ஒடுக்கும் தங்கள் சாதியின் கட்சி தலைவனின் பின்னால் சென்று, அச்சாதி உழைக்கும் மக்கள் விடுதலை பெற முடியாதோ, அதுபோலவேதான்  புதிது புதிதாக முளைத்தெழும் தலித்திய இயக்கங்களாலோ, அதன் தலைவர்களாலோ தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களும் விடுதலை பெறமுடியாது என்பதே நிதர்சன உண்மையாகும்.

தலித்தியம் புனிதமுமல்ல. அது தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை அடிமை தளையிலிருந்து விடுவிக்கவல்லதுமல்ல!

- ரணதீபன்

(முகநூலில்)