சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் - கருத்துரிமை பறிப்பு
பால முருகன்
சவுக்கு சங்கர் மீது தேனி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தை பயன் படுத்தி தடுப்பு காவலில் சிறை படுத்தியுள்ளனர். ஏற்கனவே இவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி இரத்து செய்ய, மற்றொரு நீதிபதி ஆதரிக்க, முடிவில் மூன்றாம் நீதிபதி தீர்ப்பிற்கு பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றத்தை வழக்கை தீர விசாரிக்க உத்தரவிட்டது. அதன் பிறகு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தவறு என்றும், ஊடகத்தில் ஒரு கருத்தை பேசுவதால் சமூகத்தில் பொது அமைதி பாதிக்கப் படுவதில்லை ,அது கருத்து உரிமை எனக் கூறினர். குண்டர் சட்டம் நீக்கப்பட்டது.
அந்த தீர்ப்பு வந்த இரண்டாம் நாள் மீண்டும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு மக்களுக்கு பயன்தரக்கூடிய பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது, காவல்துறையினரும் சட்டம் ஒழுங்கு காப்பது தொடர்பான பல்வேறு வேலைகளை செய்ய வேண்டும். இவர்களின் பயனுள்ள நேரங்களை சவுக்கு சங்கர் போன்றவர்கள் மீது வழக்குக்கு மேல் வழக்கு தாக்கல் செய்து வீண் விரையம் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. முந்தைய வழக்கில் குண்டர் சட்டம் பொருந்தாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், புதிய குண்டர் சட்டம் அதே நபர் மீது தாக்கல் செய்வது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல் என பொது மக்களின் மனதில் எண்ணங்கள் உருவாகலாம். இது அரசுக்கு ஏற்புடையதல்ல.
நாட்டிலேயே அதிகமாக குண்டர் சட்டம் தமிழ் நாட்டில் தான் போடப்படுகிறது. நாட்டில் உள்ள ஒட்டு மொத்த குண்டர் சட்ட சிறைவாசிகளில் 51.2 விழுக்காடு தமிழ் நாட்டில் போடப்பட்ட வழக்குகள் ஆகும். கடந்த 2022 ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் நீதிபதி ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு தமிழக காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை சுட்டி காட்டியது.ஆனால் காவல்துறையினர் நீதிமன்றம் கவனப்படுத்திய தவறுகளை கலையாமல் தொடர்ந்து அதிகார அத்துமீறல் நடத்துகின்றனர்.
தமிழக முதல்வர் இது போன்ற அத்துமீறல்களை தடுத்தும், இவை தொடர்பாக தனது தலையீட்டை செய்தும் தனிநபர் உரிமைகளை காக்க முன் வரவேண்டும். இந்த குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
- பால முருகன் (முகநூலில்)
https://www.facebook.com/share/p/4sKnCd2k2Xdy1oS5/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு