சிலைக்குப் பின்னால்!
துரை. சண்முகம்
ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சியத்தின் பெயரால் என்று ஒரு நூல் எழுதினார் அ.மார்க்ஸ். நூலுக்கு வெளியே கட்டுரைகளிலும் ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்!
( ஆமாம் ரஷ்ய ஸ்டாலின்தான்! முதலாளி வர்க்க சர்வாதிகார திமுக ஸ்டாலின் அல்ல)
ஸ்டாலினிடம் பிரச்சினை உள்ளது! லெனின் இடமே பிரச்சினை உள்ளது! மார்க்சியத்திலேயே பிரச்சனை உள்ளது! என்று பின் நவீவீனத்துவ அரசியலை முற்போக்கு அணிகளிடம் புகுத்தி மார்க்சியத்தின் பெயராலேயே மார்க்சியத்தை கலைப்புவாதம் செய்தவர்தான் இவர்.
அப்போது அ.மார்க்ஸ் பேசும் பின் நவீனத்துவ வாதம், விளிம்பு நிலைவாதம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் போன்றவைகளின் பின்னால் உள்ள வர்க்க சுரண்டல் அரசியலை ம.க. இ.க. புதிய கலாச்சாரம் இதழ்கள் போன்றவைகளின் வழியே எஸ். ஓ. சி இவரை அம்பலப்படுத்தியது.
உடனே பதிலடியாக வல்லபேசா! ரங்கராசா! என்று மருதையன் மற்றும் வேறு ஒரு தோழரை
ஒன்டிக்கு ஒன்டி தனி நபர் சண்டையாக்கி பேசினார்.
பிற்பாடு அமைப்பு மட்டும் அரசியலை விட்டு விலகிய பிறகு மருதையனை புகழ்ந்தும் பேசியவர். ஜெயமோகனே மருதையனுக்காக பரிதாபப்பட்டார் என்றால்! வானவில் கூட்டணியின் வர்க்க அடித்தளத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
இது மட்டுமல்ல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தவறு என்றவர்
வன்னிய சாதிவெறிக்கு அடிக்கொள்ளியாக ஆரம்பித்த பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசுக்கு இடதுசாரி மார்க்சிய ஒளிவட்டம் கட்டியவர்களில் இவரும் முதன்மையானவர்.
அமைப்பு என்பதே பெருங்கதையாடல் என்றெல்லாம் அளந்து விட்டு மார்க்சிய லெனினிய அமைப்புகளை சிதைக்கும் இந்த சித்தாந்த கர்த்தாதான்,
மிகப்பெரும் அமைப்பான திமுகவிடம் இப்போது பம்முவது.
மார்க்சியம் என்றால் விளிம்பு என்பது. திமுக என்றால் மையத்தோடு மசிவது!
இதுதான் இவர்களின்
பின் நவீனத்துவ கலகம்.
அனைத்தையும் கவிழ்ப்பது
என்று பின்னவீனத்துவ சவடால் அடிப்பது! கடைசியில் அறிவாலயத்தில் போய் கவிழ்வது! என்பதுதான் இவர்களது சந்தர்ப்பவாத அரசியலாக இருக்கிறது காலம்தோறும்.
ராமதாஸின் ரவுண்டு முடிந்து விட்டதால், இப்போது ஸ்டாலின் முற்போக்கானவர் என மார்க்ஸ் சிலையின் பெயரால் மார்சியத்துக்கு எதிரான தனது பணிகளை தகுதியாகக் கொண்டு திராவிட கம்யூனிசத்தில் இணைந்திருப்பவர்.
https://www.facebook.com/100080904177819/posts/932148082825322/?rdid=fpQEXFj5lqE6oE0j
====================================================
விசித்திரமான இடதுசாரிகளை உருவாக்கி இருக்கிறது திமுக அரசியலின் ஒட்டு ரகம். திராவிட கம்யூனிசம் அவர்களின் இடைக்கால பருவமாக இருக்கிறது.
மார்க்ஸ் சிலையை திமுக அரசு திறந்து வைப்பதை அதன் அரசியல் பொருளை விமர்சித்தால், மார்ச்சுக்கு அரசு சிலையே வைக்கக்கூடாதா? என்பது போல மடைமாற்றுவதில் கில்லாடிகளாக உலக அரசியலை உழப்பி அடிக்கிறார்கள்.
ஒருவேளை எடப்பாடி இப்படி வைத்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்? இங்கு அரசு என்பது ஆப்சென்ட் ஆகி இருக்கும். 'எடப்பாடி அரசு' என எழுந்து வந்திருக்கும். திமுக என்பதால் சிலர் முதலாளித்துவ அரசு வைக்க கூடாதா? என்று முடக்குகிறார்கள். இரண்டும் ஒன்றா? என்ற கணக்கில் இவர்களது எல்லா முட்டுக் கொடுப்பும் நடந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் கணக்குப்படியே முதலாளித்துவ அரசு என்பதால்
அதற்குரிய எல்லா விமர்சனங்களும் இருக்கத்தான் செய்யும்.
திமுக கம்யூனிஸ்டுகளின் நண்பன் என்பது போல செய்யும் பாவனைகள் சகிக்க முடியாதவை. கடந்த கால தமிழ்நாட்டின் எந்த வர்க்கப் போராட்ட வரலாற்றிலும் அது எதிர் நிலை பாத்திரமே ஆற்றி இருக்கிறது என்பது ஊர் அறிந்த விசயம்.
கடந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்க்காததும் இல்லை பேசாத பேச்சும் இல்லை. காவி பாசிசம் எனும் வரையறுப்பை தங்களுடைய இருப்பின் சந்தர்ப்பவாதத்திற்கு பயன்படுத்துவதில் திமுகவின் இளைய பங்காளிகளாக பல இயக்கங்கள் முன்னேறியுள்ளார்கள் என்பதுதான் புது விசயம்.
உண்மையில் காவிக்கும் தோழனாக கார்ப்பரேட்டுக்கும் தோழனாக தேர்தல் வீச்சு வீரனாக கார்ப்பரேட் நலன்களுக்கான வர்க்கப் பாத்திரமாற்றும் கட்சிதான் திமுக.
கடந்த காலத்திலும் கூட இதே போன்ற சிவப்பு சிங்காரங்கள் அந்த கட்சிக்கு உண்டு.
" நாங்கள் தான் மே தினத்துக்கு லீவு விட்டோம்!
நாங்கள் மே தின பூங்கா அமைத்தோம்!
கலைஞர் தாய் காவியம் படைத்தார்!
இப்போது மார்க்சுக்கும் சிலை வைத்தோம்!"
இப்படி இன்னும் நிறைய வடிவங்கள் உண்டு.
சிம்சன் தொழிலாளிகளை உதைத்தது முதல் டிவிஎஸ் ஐயங்கார் நலன்களுடன் சேர்ந்து கொண்டது முதல்
இன்றைய சாம்சங் வரை
தொழிலாளர்களுக்கு எதிரான ஆளும் வர்க்க அரசியல் நீதியே திமுக வின் சமூக நீதி.
கூலி உயர்வு கேட்டான் அத்தான்! குண்டடிப்பட்டு செத்தான்! என்று இடதுசாரி வசனத்தை பயன்படுத்திக் கொண்டு, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தை தாமிரபரணியில் தகனம் செய்ததுதான் திமுக.
இப்போதும் கூட மாஞ்சோலை பர்மா பாம்பே கார்ப்பரேஷன்
கம்பெனி கைகளை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கும்போது திமுகவின் நிலை மார்க்ஸ் சிலைக்கு மகிழ்வாக இல்லை.
எனவே எல்லோரும் சிலை மயக்கத்தில் சிலிர்க்க வேண்டும் என அவசியம் இல்லை. அரசு ஆளும் வர்க்கம் மார்க்ஸ் சிலையை வைத்து ஒரு அரசியல் செய்யும்போது, கம்யூனிஸ்டுகள் தங்களுடைய வர்க்க கண்ணோட்டத்தில் அரசியலாகத்தான் அதை அணுக முடியும். மக்களிடம் அதையும் அரசியலாகத்தான் பேச முடியும்!
பேசவும் வேண்டும்!
வைத்த சிலையை என்ன செய்வது? என்று சிலர் கேட்கிறார்கள். அதன் மூலம் புரச்சி அரசியலை வளர்க்கலாம் இல்லையா! என்றும் புரிய வைக்கிறார்கள்.
போராட்டத்தின் மூலமாக புரிய வைக்கும் மார்க்சை ஒடுக்கும் அரசு! சிலையின் மூலமாக வளர்க்க உதவும் என்பதைவிட
புரட்சிகர அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது!
மார்க்ஸ் சிலை பற்றிய விமர்சனம் செய்வதாலேயே வழக்கம்போல வேறுபட்டது என்று தெரிந்தாலும், விமர்சிப்பவர்கள் அனைவரும் சங்கிகளே என முத்திரை குத்த
திமுகவின் இடது உழவாரப்படைகள் கிளம்பி விட்டனர்.
பாஜகவும் தனியார் மயத்தை அமுல்படுத்துகிறது. திமுகவும் தனியார் மயத்தை அமல்படுத்துகிறது. இரண்டும் ஒன்று என்பார்கள் போல. உண்மையில் ஒரிஜினல் சங்கிகளுடன் உறவாடிக் கொண்டிருப்பவர்களிடம்
ஒரு தலை காதல் பேர்வழிகள் இவர்கள்.
உண்மையில் சிலையாக நின்றாலும் மார்க்ஸ் ,எளிதாக
தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டிக் கொள்ளும் வர்க்கத்தை அடையாளம் காட்டியது மகிழ்ச்சிதான்!
சிலை அல்ல விசயம்.
திமுகவுடன் சேர்ந்து சிலையாகி போனவர்கள்தான் விசயம்.
அதை திட்டமிட்டு பேச மறுத்துவிட்டு பாராட்டு உரையிலும் கரைந்து கொண்டிருக்கின்றன சிலைக்கு வெளியேயும் காக்கைகள்!
https://www.facebook.com/100080904177819/posts/931428846230579/?rdid=uMullI5JFgbGJfgH
===========================================
மார்க்ஸ் சிலை திறப்பு பற்றிய எனது அரசியல் கண்ணோட்ட பதிவுகள்,
மற்றும் இதை போன்ற சில தோழர்களின் பதிவுகளை முன்வைத்து தோழர் திருப்பூர் குணா அவர்கள் எல்லோரையும் குழப்பாதீர்கள்! என்பதாக சில விளக்கங்களை கேட்டிருந்தார்.
தொடக்கத்திலேயே சொல்லி விடுகிறேன். தோழர் திருப்பூர் குணாவை யாராலும் குழப்ப முடியாது. எமது பதிவுகளின் மீது தோழருக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகவே நான் தெளிவாக புரிந்து கொள்கிறேன்.
குறிப்பாக
*சுரண்டும் வர்க்க பிரதிநிதியான திமுக சிலை அமைத்ததை புறக்கணிக்கிறீர்களா?
*ஆளும் வர்க்கத்திற்கு இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா?
* திமுக உடனான அரசியல் கூட்டணி கட்சிகளான சி.பி.எம், சி .பி .ஐ, சி. பி .ஐ (எம் எல் ) போன்ற கட்சிகளையும் புறக்கணிக்கிறீர்களா?
என்பவை தோழர் எழுப்பிய மேற்கண்ட வினாக்கள்.
முதலில் மார்க்சுக்கு சிலை அமைப்பது எனும் கருத்தை நான் மறுக்கவில்லை.
ஆனால், அது யாரால் வைக்கப்படுகிறது! திறக்கப்படுகிறது! எந்த அரசியல் நோக்கத்திற்கு பயன்படுகிறது! என்பதன் மீதான அரசியல் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்யும் முகமாக திமுக தலைமையில் இதை ஒப்பு கொடுத்தது தவறு என்று எனது நிலைப்பாடு. இதற்கான காரணங்கள் எனது முந்தைய பதிவுகளிலேயே விமர்சனமாக உள்ளது. திமுக என்பது சுரண்டும் வர்க்க பிரதிநிதி மட்டுமல்ல கார்ப்பரேட் முதலாளித்துவ பாசிசத் திட்டங்களுக்கான பங்காளி என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த அடிப்படையில் அதை ஒரு முதலாளித்துவ ஜனநாயகவாதியாக கருதிக்கொள்ள என்னிடம் குழப்பம் இல்லை. இது எனது கருத்து என்ற வகையில் இதில் பிறரை குழப்புவதற்கு இடமில்லை, மாறுபடுவதற்கு இடம் இருக்கிறது.
தனித்தனியான வினாக்கள் என்றாலும் இதன் மையம் எது என்றால், திமுகவுடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சரியா? கூடாதா ? ஆளும்வர்க்க முரண்பாட்டை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்பதையே
மையப்பொருளாக நான் பார்க்கிறேன்.
இது தொடர்பாக எனது பழைய பதிவுகளில் பல்வேறு கோணங்களை எழுதி பதிவு செய்திருந்தாலும், தோழர் கேட்டுக் கொண்டதற்காக குறிப்பாகவும் சிறிய அளவிலும்
எனது கருத்தை கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
இடதுசாரிகள் அல்லாத பல திராவிட மாடல் கருத்தாளர்களும் 67 காலகட்டத்து திமுகவின் வாதங்களை, பேச்சுகளை, சில செயல்களை முன்னிறுத்தி
திமுக வடவர் எதிர்ப்பு கட்சி போலவும் இந்திய பெரு முதலாளிகளுக்கு எதிராக தமிழ் தேசிய உரிமை கோரும் கட்சியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலகட்ட வளர்ச்சியில் முதலாளித்துவக் கட்சிகளின் வளர்ச்சி என்பதும் இந்தியாவைப் பொறுத்தவரை
ஏகாதிபத்திய அந்நிய மூலதன தாசார்களாகவும், இதில் இந்திய பெரும் முதலாளிகளிடம் பங்கு கோரும்
பங்காளிகளாகவும் வளர்ந்து இருக்கிறார்கள். இந்த அடிப்படைக்கு மாறாக திமுக இந்திய பெரு முதலாளிகள் ஆதிக்கத்தை எதிர்க்கும் தேசிய முதலாளித்துவ கட்சியாகவோ,
ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட, மேலும் நில உடமையை சித்தாந்த ரீதியாக எதிர்த்து முதலாளித்துவ தேசியவாதம் பேசும் கட்சியாகவும் கூட இல்லை.
இன்றைய கட்டத்தில் திமுக என்பது நவ தாராளவாத , இந்திய பெரு முதலாளித்துவ பாசிசத்தின் பங்காளி கட்சியாக இருக்கிறது என்பது எனது அணுகுமுறை.
ஆளும் வர்க்கங்களுக்குள் உள்ள முரண்பாட்டை கையாள்வது என்பது இடதுசாரிகள் பார்வையிலான கொள்கை. அது சரிதான். ஆனால் அப்படி ஒரு பார்வையின் அடிப்படையில் இல்லாத திமுகவை தலைமையாகக் கொண்டு அதன் வால் பிடித்துச் சென்று
மக்களிடம் புறக்கணிக்கப்படும் நிலைக்கு இடதுசாரி கட்சிகள் தேய்ந்து அழியும் அரசியல் நிலைமைகளின் மீதுதான் எனது விமர்சனக் கண்ணோட்டம்.
ஆளும் வர்க்க பொதுநோக்கிலான முரண்பாடுகளாக இங்கே பிரச்சனை வெடிக்கவில்லை.
ஆளும்வர்க்க கட்சிகளுக்குள் பங்கு கோரும் பங்காளி சண்டைதான் வெளிப்படுவது.
இதை பாசிச எதிர்ப்புக்காக
பயன்படுத்துவது என்பதில்
நூறு ஆண்டுகளாக இடதுசாரிகள் தோல்வியை தழுவியே இருக்கிறார்கள் என்பதும் வரலாறு.
.மேலும் ஆளும் வர்க்கத்திற்கு இடையிலான முரண்பாட்டை திமுக எந்த வகையில் எந்த வர்க்க கண்ணோட்டத்தில் பயன்படுத்துகிறது! ஜனநாயகத்திற்காகவா? என்பதெல்லாம் விவாதத்துக்கு உரிய விசயங்கள்தான். மத பிற்போக்குத்தனம் எனும் பாஜகவின் படு பிற்போக்கான ஒரு அம்சத்தை தவிர, அதிலும் கூட இந்துத்துவ சனாதன கண்ணோட்டத்துடன் கூடிய சமரச நிகழ்ச்சி நிரல்கள் கொண்டதாக அந்த கட்சி இருக்கிறது. மற்ற பிற பாசிச அடித்தளத்திற்கான நிதி மூலதன ஆதிக்கம், தொழிலாளர்கள் மீதான உழைப்பை சுரண்டும் முறையிலான ஒடுக்குமுறை திட்டங்கள், போராடும் தொழிலாளர்கள் ஜனநாயக உரிமைகளை பறிப்பது அடக்குவது , பாஜக எதிர்ப்பில் ஊன்றி நிற்கும் அதற்கு சவால் விடும் மார்க்சிய லெனினிய அமைப்புகளை ஒடுக்குவது கட்டுப்படுத்துவதிலும் திமுகவிடம் இந்த மாறுபட்ட ஜனநாயக அணுகுமுறையும் இல்லை.
சிந்தூர் தேசிய வெறியூட்டிய பாஜகவுடன் சேர்ந்து கொண்டு
உலக நாடுகளுக்கு தூது போனது வரை திமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொடி பிடித்து பாசிச தேசிய வெறிக்கு இடதுசாரி கட்சியும் கூட்டணியானது தற்செயல் அல்ல.
மத்திய இந்தியாவின் பழங்குடிகள் மீது நடக்கும் கொடூர தாக்குதலை இடதுசாரிகள் கட்சிகள் கண்டித்த அளவுக்கு கூட திமுக கண்டிக்கவும் இல்லை ஒரு அறிக்கை விட கூட இல்லை.
ஒடுக்குகிற ஆளும் வர்க்க தரப்பாக சேர்ந்து கொண்டு
மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாக பார்ப்பதுதான் அதனுடைய நிலைப்பாடும்.
எடப்பாடி ஆட்சியின் போது எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியது போல இப்போதும் வெகுவாக இந்த அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் செய்பவர்கள் திமுகவின் பாசிச குணத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
திமுக அரசு என்பதால் சில விலக்கு கொடுத்திருக்கும் அமைப்புகள் இதை உணர தவறலாம் . ஆனால் உழைக்கும் வர்க்க மக்கள் அன்றாடம் பொருளாதார வகையிலான ஒடுக்குமுறைக்கும் சமூக தளத்தில் நடக்கும் சாதியவாத ஒடுக்கு வரைக்கும் எதிராக குமுறிக் கொண்டும் தெரிந்த வழியில் போராடிக் கொண்டும் இருக்கிறார்கள்.
எனவே இடதுசாரிகள் முன்வைக்கும் பாஜகவா? திமுக வா? எனும் தேர்தல் அரசியல் வரம்பிலிருந்து இதை அணுகத் தேவையில்லை என்பது எனது கருத்து. அளவு மற்றும் பண்பு விசயங்களில் இரண்டும் சமமில்லை ஒன்று இல்லை ! என்று எடை கணக்கு பார்த்தாலும், திமுக மாற்று இல்லை என்பதுதான் எனது கருத்து.
இதை சோதிக்க எனது கருத்தை கூட பெரிது படுத்த வேண்டாம்.
மற்ற கோரிக்கைகளை கூட விட்டு விடுவோம். பாசிச எதிர்ப்பு எனும் கோரிக்கைக்கான ஒரு பொது அரசியல் செயல் திட்டத்தை மாற்றை, இடதுசாரிகள் வரையறுத்து வகுத்து அதன் அடிப்படையில் ஒரு அரசியல் தேர்தல் உடன்பாடு வேண்டும் என திமுகவை நிர்ப்பந்தப்படுத்தி கேட்டுப் பாருங்கள்! கட்டாயம் திமுக இத்தகைய அரசியல் ஜனநாயக வழிமுறைக்கு வராது.
எனவேதான் நான் கருதுகிறேன்,
ஆளும் வர்க்க முரண்பாடுகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என எந்தத் திட்டத்தையும் வரையறுக்காமல், உழைக்கும் வர்க்கத்திற்கான ஜனநாயக உரிமைகளுக்கான எந்த உறுதியும் இல்லாமல் அப்படி இடதுசாரிகள் திட்டமிட்டு அமுல்படுத்தும் ஜனநாயக நடைமுறை உடன்பாடும் ஒப்புதலும் மக்களுக்கு வெளிப்படையாக திட்டமாக இல்லாமல் திமுக தலைமையில் போய் பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஏமாற்றும் வேலை அல்லது ஏமாறும் வேலை என்பது எனது திடமான கருத்து.
இந்த வகையில் சிலை அமைப்பது மட்டுமல்ல, தேர்தல் கூட்டணி அமைப்பது என்பது கூட பாஜக எதிர்ப்பு எனும் பெயரில் பாசிச அதிகாரத்தில் பங்குபெறுவது என்பதுதான் நடப்பது. இதில் மார்க்சுக்கு சிலை வைப்பது என்பது போன்ற திமுகவின் சிலை அரசியல் அதில் இடதுசாரிகளின் ஊக்கமும் ஆக்கமும், தொழிலாளர் வர்க்கம் மத்தியில் திமுக மீதான வர்க்க நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கு மட்டும்தான் பயன்படுமே ஒழிய, இடதுசாரிகள் வளர்ச்சிக்கு இதனால் ஒன்றுமில்லை.
சுருக்கமாகச் சொன்னால் திமுகவின் பயன்பாட்டு வாதத்திற்கு பலியாவது மட்டுமே நடக்கிறது.
பாஜக இருந்தால் பயங்கரமாக ஒடுக்கும். திமுக புரட்சிகர அமைப்புகளை ஒடுக்கவில்லை என்று திருப்திப்பட்டு கொள்வதும் , திமுக கடுமையாக ஒடுக்கும் அளவுக்கு இடதுசாரிகள் எழுந்து நிற்கவில்லை என்பதுதான் காரணமே ஒழிய, திமுகவின் ஜனநாயகப் பண்பு அல்ல.
திமுக ஆட்சியில் இருந்தால் இப்படியே பாஜக எதிர்ப்பை பேசிக்கொண்டு அரசு என்ற வகையில் திமுகவுடன் ஐக்கிய கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு காலம் நகர்த்த வேண்டுமானால் பயன்படுமே ஒழிய, கம்யூனிச நடைமுறைக்கு வளர்ச்சிக்கு இது உதவாது.
எந்த ஒரு அரசியல் பிரச்சினையிலும் ஆளும் வர்க்க ரீதியாக முன்னெழுப்பக் கூடிய ஆதரவா? எதிர்ப்பா?
என்று மட்டும் அரசியலை அணுக முடியாது.
பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் மூன்றாவதாக ஒன்றைக் கூட ஒருவர் வைக்கலாம்.
அப்படி வைக்கப்படுவது தான் எனது கருத்து நிலைகள்.
இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை உறுதியாக இருக்கிறேன்.
இது தவறு என்றோ! மாறுபட்ட கருத்துக்களை அரசியலாக சொல்லும் யாராக இருந்தாலும்
படித்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் பரிசீலித்துக் கொண்டும்
தான் இருக்கிறேன்.
அரசியல் புறநிலையும் உழைக்கும் வர்க்கத்தின் நடைமுறை நோக்கு நிலையும்
எனது கருத்துகளில் தவறு என மெய்ப்பிக்கும் போது கட்டாயம் திருத்திக் கொள்வேன்.
தோழர் திருப்பூர் குணா அவர்களே! இங்கு எழுப்பி வாதிக்கப்பட்ட விசயங்களில்
எனக்கு நான் முன் வைத்த கருத்தை மாற்றிக் கொள்ளும் அவசியம் ஏற்படவில்லை தோழரே.
தொகுப்பாக, தேர்தல் தேர்தல் உடன்பாடு பற்றியும் கூட எப்போதும் மாறா நிலை கண்ணோட்டத்தை நான் கொண்டிருக்கவில்லை.
அது இடதுசாரிகளின் எந்த வகை திட்டத்தை பூர்த்தி செய்கிறது பயன்படுகிறது! எனும் கண்ணோட்டத்தில் மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்களை முன்வைக்கிறேன்.
இறுதியாக இடதுசாரி கட்சிகள் என்று அறியப்பட்ட அமைப்புகள் அனைத்தையும் புறக்கணிப்பு என்ற நிலை என்னிடம் இல்லை.
கருத்தியல் அடிப்படையில் ஐக்கியமும் போராட்டமும் என்பது தான் இடதுசாரிகள் மத்தியில் கை கொள்ள வேண்டிய சரியான நிலை என்று கருதுகிறேன். அந்த அடிப்படையிலேயே இத்தகைய அமைப்புகளின் சமூக நிகழ்வுகளின் மீதான நடைமுறை போராட்டங்களில் சரியானவற்றை ஏற்கவும் அங்கீகரிக்கவும், தவறான அரசியல் சித்தாந்த கண்ணோட்டங்களை கருத்தியல் போராட்ட நோக்கிலும் கை கொள்கிறேன்.
ஆனால் திமுக எனும் கட்சியை பொறுத்த வரை புரட்சியின் எதிர்நிலை சக்தியாகவே வகைப்படுத்தி பார்க்கிறேன்.
உழைக்கும் வர்க்கம் தங்களது ஜனநாயக அரசியலை போராடி பெறும் நிலையிலையே திமுக அடக்குமுறை சக்தியாகவும இருக்கிறது என்றும் கருதுகிறேன்.
இங்குள்ள இடதுசாரி அமைப்புகள் பாசிச எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு எனும் பெயரில்
குறிப்பாக" காவி பாசிசம்" எனும்
வகைப்படுத்தலின் வழியாக
ஆளும் வர்க்க செயல் தந்திரத்திற்கு பலியாக்கப்பட்டு விட்டார்கள் என்பதே எனது கருத்து.
https://www.facebook.com/100080904177819/posts/932938666079597/?rdid=1l6IXpnwBHc1aGk6
====================================
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவர்கள் கதையாக சுரண்டும் ஆளும்வர்க்க சித்தாந்தத்தை அடித்தால் ஒரு தலைக் காதல்
அமுக்கிற முன்னணிக்கு வலிக்கிறது. திமுகவின் வர்க்க இயல்பை பாசிச எதிர்ப்பு பம்மாத்தை விமர்சித்தால் அடிப்பொடி சிலவற்றிற்கு கெட்ட கோபம் வருகிறது.
ஆம்! அரசியல் அணுகும் முறையற்ற நபர்களை இப்படித்தான் எழுத வேண்டி இருக்கிறது.
நீ எல்லாம் ஒரு ஆளா? முகநூல் ஆளு! என்று ஏசி விட்டு இதுவரை பத்து புரட்சி பண்ணிய வெத்து வேட்டுகள் நம் மீது பாய்ந்து வெடிக்கிறது.
நான் தான் ஒரு ஆளே இல்லையே! உமக்கு ஏன் இவ்வளவு வயித்தெரிச்சல்!
உங்கள் புரட்சிகர பாய்ச்சலை திமுக திணறும்படி காட்ட வேண்டியதுதானே!
எனது கருத்தை நான் எழுதுவதற்கும் பேசுவதற்குமான சுதந்திரத்தை உங்களிடம் நான் பெற வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த கால அனுபவங்களில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளாத இது போன்ற
நபர்கள் தங்களை தாங்களே புரட்சியாளராக சித்தரித்துக் கொள்ளும் தனிமைவாத
நோயிலிருந்து இன்னும் வெளியேறவில்லை என்றும் தெரிகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க உக்கிர முன்னணி வக்கிர முன்னணியாக தன்னை அடையாளமும் காட்டியும் கொள்கிறது!
தோழர் ஞானம் , துரை சண்முகம் , மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் , புரட்சிகர மக்கள் அதிகாரம் எல்லாம் ஆகாத ஆட்கள் என்று திமுகவை ஆதரிக்காதவன் எல்லாம் ரத்தம் கக்கி சாவான் என்றும் சாபம் விடாத குறையாக கதறுகிறார் பா.வ.ச. மனோகரன்.
"அரசியல் அனாதை!
அருகதை அற்ற...!"
என்று ஏக கொழுப்பில்
எனது பதிவுகளில் வந்து பாய்ந்து பிராண்டுகிறார்!
அரசியல் விவாதத்துக்குரிய அணுகுமுறை இன்றி அணுகி விட்டு என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை! என்று கிறுக்குத்தனம் வேறு.
அப்படியே பேசிட்டாலும்..!
ஐக்கிய முன்னணி என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் பற்றி எழுதியாயிற்று.
திமுக மாற்று கிடையாது, பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணிக்கான அரசியலே துவக்க புள்ளி என்றெல்லாம் பதிவுகள் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
இதை ஏற்கவில்லை. தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பதிலாக
பதிலே இல்லை என்பது போங்காட்டம். இல்லை வழக்கம் போல திமுகவை எதிர்ப்பது பாஜகவுக்கு பச்சைக்கொடி!
என்று பஜனை பாடலாம். மறுப்பான கருத்துக்களை எழுதலாம்.
தனிநபராக தரக்குறைவாக பேசுவது புதிய உடன்பிறப்புகளின் போக்காக சீரழிந்துள்ளது.
போராடும் தொழிலாளர்களை நடுரோட்டில் இழுத்து தூக்கிப் போடுகிறது அரசு!
கவின் சாதி ஆணவக் கொலைகளும்.. காவலாளி அஜித் குமார் காவல் சித்ரவதை மரணமும் ஏழை மக்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசரால் பிரித்து எறியப்படுவதும் இதற்கு எதிராக அறிவாலயத்தில் போய்
ஐக்கிய முன்னணி அடிப்படையில் ஜனநாயகம் பேச அருகதை உள்ளதா?
அங்கே போய் மாற்று திட்டம் என்ன? உடனடித் திட்டம் என்ன? என்று கேட்க துப்பில்லாத அரசியல் லேபில்கள்
தனிநபர் தாக்குதலாக
என்னிடம் வந்து எகிறுவதில்
இருந்தே தெரிகிறது,
என்ன ஒரு செயல் தந்திரம்?
https://www.facebook.com/share/14SL7p8Wnci/
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு