ஆரியநாடு என பாரதியின் பாடல்களில் குறிப்பிட்டது குறித்த உரையாடல்

Lingam Deva

ஆரியநாடு என பாரதியின் பாடல்களில் குறிப்பிட்டது குறித்த உரையாடல்

தன்னிடம் இருந்த இயல்பான குறைபாடுகளை எந்த மழுப்பலும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதும். அவற்றை திருத்திக் கொண்டு முன்னகர்வதும் பாரதியின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று. 

தன் படைப்புகளுக்கு நண்பர்களும் மற்றவர்களும் தரும் விமரிசனக் கருத்துகளை ஏற்று மதிக்கும் பண்பாளராகத் திகழ்ந்தவர் பாரதியார். 'செந்தமிழ் நாடு' என்னும் பொருளிலமைந்த பாடல், ஒரு முறை பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் நல்ல விவாதத்தை ஏற்படுத்தியது. பாரதியார் பாட்டெழுதத் தொடங்கிய காலத்திலேயே அவர் தமிழின் இலக்கிய வளம் பற்றி முழுவதும் அறிந்திருக்கவில்லை. ஆண்டுகள் பல கடந்த பின்னரே அவர் தமிழின் புதுப்புது அறிவுகளைக் கண்டு உணர்ந்தார். அதனால் அவரிடம் தமிழைப் பற்றிய கருத்துகள் காலத்திற்குக் காலம் வளர்ச்சியடையும் வண்ணமாக இருந் துள்ளன. இது பற்றிச் சரியான பின்னணியை அறியும் முயற்சியில் பாரதிதாசன் ஈடுபட்டார்.

"நாவலந் தீவை ஆரியர் நாடு என்று பன்முறை கூறி யுள்ளீர்கள். நானும் பன்முறை அது பற்றிக் கேட்டதற்கு நீங்கள் தக்கவாறு விடை கூறவில்லை. இப்போது தமிழ்நாட்டை எங்கள் தந்தையர் நாடு என்று சொல்கின்றீர்கள்.

தமிழ் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் நீங்கள் எழுதியுள்ள உரைநடையில் தமிழில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய சில நூல்கள் இருப்பதாக மட்டும் கூறினீர்கள். ஆனால் இப் போது சிலப்பதிகாரம் என்றும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும் கூறியுள்ளீர்கள்.

தமிழ்நாடு இலக்கிய வளம் உடையதென்பதையும் பிற பெருமைகள் உடையது என்பதையும் கூறுகின்றீர்கள். பரிசு கருதியா இப்போது இப்படிப் பாடினீர்கள்?” என்று பாரதியாரிடம் பாரதிதாசன் கடுமையாக வினாக்களைத் தொடுத்தார்.

“என் தந்தை எட்டயபுரத்து அரசவைப் புலவர்; அவரோடு அடிக்கடி பல புலவர்கள் வந்து தமிழ் பற்றிப் பேசுவார்கள். எல்லாம் புராணங்களும் கம்பராமாயணம் போன்றவைகளு மாகவே இருக்கும். தமிழ்க்கல்வி என்பது எனக்கு அங்குக் கிடைத்ததுதான்!

இந்தப் பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள் முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை.

பண்டைத் தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூல்களில் தான் காண வேண்டும். ஆனால் போன ஆண்டு வரைக்கும் எனக்குப் பழந்தமிழ் நூல்களில் தொல்காப்பியம், அகம், புறம் பற்றிய நூல்கள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்துகொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன். தமிழர் நாடு என்பது நாவலந்தீவே என்பது என் இப்போதுள்ள கருத்து” என்று அதன் உண்மைக் காரணத்தைப் பாரதியார் தெளிவாக்கினார். (குயில் 20-9-1960)

காலம் மற்றும் குடும்பச் சூழ்நிலைகளே பாரதியின் பழந்தமிழ்ப் புலமையை ஒரு கட்டுக்குள் நிறுத்திவிட்டமையை இதனால் பாரதிதாசன் உணர முடிந்தது. சங்க அகம், புறம் பற்றிய பொருள் செறிந்த செய்யுட்களை இளமையிலேயே பாரதியார் கற்றிருந்தால் 'தமிழர் தகுதி' குறித்து அழுத்தமான சிந்தனையுணர்வினை மேலும் அவர் அடைந்திருக்க முடியும் என்று எண்ணினார்.

இவ்வெண்ணம் பாரதிதாசன் நெஞ்சைப் பிணித்துக் கொண்டிருந்ததால், பாரதியைப் பற்றி விமரிசனம் செய் வோருக்குப் 'பாரதிப் பற்றோடு' பதிலளித்துள்ளார். சான்றாக, பாவலர் த.கோவேந்தன் ஒருமுறை பாரதிதாசனிடம் பேசியிருந்த போது 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் படைப்புகளிலே எங்கேனும் கண்ணகி பற்றியோ, மாதவி பற்றியோ சேரன் செங்குட்டுவன் பற்றியோ குறிப்பிடப் பெறவில்லையே! உண்மையிலேயே சிலப்பதிகாரம் பற்றிப் பாரதியார் கொண்டிருந்த எண்ணம் இதற்கு மாறாக அல்லவா அமைந்திருக்கிறது? என்று வினவினார். அதற்குப் பாரதிதாசன். "பாரதியார் 'செந்தமிழ்' இதழில் வெளிவந்த சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையைப் படித்து மகிழ்ச்சியால் உணர்ச்சிவயமடைந்து 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்றும் இங்ஙனமே 'சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்' என்றும் பொதுப்படக் குறிப்பிட்டிருக்கிறார். 1920 ஆம் ஆண்டு தமிழிலக்கியச் சூழல் தற்பொழுதுள்ளதைப் போன்று வெளிச்சமாக இல்லை: பல இலக்கியங்கள் அச்சேற்றி வெளிக்கொணர முடியாத நிலையில் மூடிமறைக்கப்பட்டு இருந்தன. புராண இதிகாசங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நூல்கள் போன்றவை அறிமுகமாகியிருந்த அளவிற்குச் சங்க இலக்கியங் களும் மற்ற தமிழ்நிலை நூல்களும் அறிமுகமாகியிருக்கவில்லை. எனவேதான் சிலப்பதிகாரத்தைப் பற்றி ஆழமான செய்திகளைத் தெரிவிக்கப் பாரதிக்கு வாய்ப்பு ஏற்படவில்லை” என்று தமக்குப் பாரதி பதிலளித்த முறையிலேயே காரணம் காட்டியுள்ளார்.

பாரதிதாசன் பார்வையில் பாரதி (டாக்டர் ச.சு.இளங்கோ)

- Lingam Deva (முக நூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mHsubazU4JWu1s6F4pvVeZb4J69sSLjhNiANGTGTXH69XaRMdmnGTmUZqTdyY4Ril&id=100002769735269&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு