பிப்ரவரி 12 அன்று நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க SKM அழைப்பு
சரவணன் வீரையா
சம்யுக்த் கிசான் மோர்சா (Samyukt Kisan Morcha- SKM)
●● அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு – RSS-BJP தலைமையிலான அரசின், முழுமையான சரணடைவு !
●● வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாக பதவி விலக வேண்டும் என SKM வலியுறுத்துகிறது
●● அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலிருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்; இல்லையெனில் நாடு முழுவதும் பெருமளவிலான, ஒன்றுபட்ட போராட்டங்களை சந்திக்க நேரிடும் !
●● இந்திய விவசாயம் மற்றும் வேளாண்மையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு (MNCs) விற்றுத் தள்ளும் ஒன்றிய அரசின் செயலைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் மற்றும் வர்க்க இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என SKM அழைப்பு விடுக்கிறது !
அமெரிக்கா–இந்தியா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு (Framework for Interim Agreement) முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது. இது RSS–BJP தலைமையிலான நரேந்திர மோடி அரசு, அமெரிக்க வேளாண் பன்னாட்டு நிறுவனங்களின் முன்னால் முழுமையாக சரணடைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த கட்டமைப்பை ஒன்றிய அரசு ஏற்கனவே வரவேற்றுள்ளது.
“அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்களுக்கும், மேலும் பல்வேறு அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கும்—உலர்ந்த டிஸ்டில்லர்ஸ் தானியங்கள் (DDGs), மிருக தீவனத்திற்கான சிவப்பு சோளம் (Red Sorghum), பாதாம், பிஸ்தா,முந்திரி போன்ற கொட்டைகள், புதிய மற்றும் செயலாக்கப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், வைன் மற்றும் மது வகைகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இதுவரையிலும் இந்தியா விதித்திருந்த வரிகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும்" என்று இந்திய ல?அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB - Press Information Bureau) குறிப்பு கூறுகிறது.
இந்த கட்டமைப்பு, வேளாண்மை மற்றும் பால்வளத் துறைகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து (FTA) விலக்கப்பட்டுள்ளன; விவசாய நலன்களில் எந்த சமரசமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்த கூற்றை முழுமையாக மறுக்கிறது.
UK (United Kingdom), நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒபிபந்தங்களில் (FTA-Free Trade Agreement) பால்வளப் பொருட்கள் Dried Distillers Grains ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய தகவல்கள், வர்த்தக அமைச்சர் திட்டமிட்டு பொய்களைப் பரப்பி, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. SKM, வர்த்தக அமைச்சரின் செயலை துரோகமாக கருதி, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோருகிறது.
மேலும், இந்தியா–அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலிருந்து பிரதமர் விலக வேண்டும்; இல்லையெனில் நாடு முழுவதும் பெரும், ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என SKM எச்சரிக்கிறது.
18% அமெரிக்க வரி மற்றும் இந்தியாவின் 0% வரி — இது சுதந்திர வர்த்தகம் அல்ல.
இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி 2023–24 இல் 0% இலிருந்து 3% ஆகவும், தற்போது 18% ஆகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம், அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா விதித்திருந்த 30% முதல் 150% வரையிலான வரிகள் இப்போது பூஜ்யமாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய வேளாண்மை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் தூக்குக் கயிற்றில் தொங்க வைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால ஒப்பந்த கட்டமைப்பின்படி, வர்த்தகமற்ற தடைகள் (Non-Tariff Barriers) குறைக்கப்படும்; இதனால் அமெரிக்காவிலிருந்து பால் இறக்குமதி செய்ய வழிவகுக்கும். மாமிசம் கலந்த தீவனம் உண்ணும் மிருகங்களின் பாலை இறக்குமதி செய்யமாட்டோம் என்று RSS முன்பு கூறி வந்தது—அது ஒரு non-tariff barrier ஆக இருந்தது. இப்போது, டொனால்ட் டிரம்ப் எனும் “மாஸ்டர்” முன்னிலையில் RSS தன் சொந்தக் கூற்றையே விழுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
PIB (Press Information Bureau) செய்திக் குறிப்பின்படி, மக்காச்சோளம் (Maize) உலர்ந்த டிஸ்டில்லர்ஸ் தானியமாக (DDG - Dried Distillers Grains ) மற்றும் சோளம் (Sorghum) மிருக தீவனமாக விற்பனை செய்யப்படும். இதன் மூலம், மிருக தீவன சந்தை முழுமையாக அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் போகும்.
அமெரிக்கா ஏற்கனவே மக்காச்சோளம், சோயாபீன், பருத்தி போன்ற பயிர்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்க கோதுமை கிலோ ரூ.18.50 என்ற விலையில் இந்தியாவிற்கு வருவதால், அது இந்திய சந்தையை நிரப்பினால் இந்திய விவசாயிகள் முற்றிலும் அழிவார்கள்.
GM (மரபணு மாற்றப்பட்ட) உணவுகள் மற்றும் GM விதைகள் சுதந்திரமாக இறக்குமதி செய்யப்படும் அபாயம் உள்ளது; இது மண்ணின் இயற்கை வளத்தை அழிப்பதுடன், நமது தானிய, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள், ஆகியவைகளுக்கான சந்தைகளையும் நாசமாக்கும். சோயா எண்ணெய் முக்கிய இலக்காக உள்ளது. எத்தனால் கூட சுதந்திரமாக இறக்குமதி செய்யப்படும்.
ஆப்பிள், அன்னாசி, தேங்காய் போன்ற புதிய பழங்களும், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்களும் இறக்குமதி செய்யப்படுவதால், ஜம்மு–காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்திய தொழில் துறை, வேளாண் துறை மற்றும் பால்வளத் துறைகள் அனைத்தும் மலிவான இறக்குமதிகளால் கடும் அபாயத்தில் உள்ளன. பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், வேளாண்மை வளர்ச்சி குறைவு (3.1%) மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வீழ்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலையானது (MSP), A2 (மொத்த உற்பத்திக்கு ஆகும் செலவு) செலவுகளை விடவும் குறைவாக உள்ளது; சந்தை விலைகள் MSP-யை விடக் குறைவு; யூரியா மற்றும் DAP உரங்களின் விலை உயர்த்தப்படுகிறது; விவசாயக் கடன் அதிகரித்து வருகிறது. சமூகச் செலவுகள் (நலத் திட்டங்களுக்கான செலவுகள்) அனைத்துத் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற கூலித் தொழிலாளர்கள் மீது RSS–BJP அரசு 4 தொழிலாளர் சட்டங்கள் (4LC) மற்றும் VB-G, RAM-G மூலமாக மேற்கொண்ட தாக்குதல்கள், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவே உள்ளன. 2026–27 மத்திய பட்ஜெட், பல துறைகளில் சுங்க வரிகளை நீக்கியுள்ளது; இது MSME-களையும் உடனடியாகவும் நீண்டகாலத்திலும் நாசமாக்கும்.
அமெரிக்க வேளாண் அமைச்சர் ரோலின்ஸ், இந்தியா உலகின் மிகப்பெரிய வேளாண் சந்தை; அது அமெரிக்காவிற்கு திறக்கப்பட்டால் அமெரிக்க கிராமப்புறங்களுக்கு வருமானம் கிடைக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார். அதிகமான ஏழை மற்றும் வறிய மக்களைக் கொண்ட நாட்டை, RSS தனது விருப்பமான வெளிநாட்டு எஜமானர்களின் லாபத்திற்காக மேலும் மனிதாபிமானமற்ற நிலைக்கு தள்ளுகிறது.
மிக அதிகமாக மானியம் பெறும் அமெரிக்க வேளாண் மற்றும் பால்வளப் பொருட்களை, இந்திய சந்தையில் திணிக்க மோடி அரசு முயல்கிறது. இந்திய வேளாண்மை ஏற்கனவே அரசு மானியக் குறைப்பைச் சந்தித்து வருகிறது. 17.2 கோடி கிராமப்புற குடும்பங்களும், 86% சிறு மற்றும் குறு விவசாயிகளும், இந்திய அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த கார்ப்பரேட்டுவாத தாக்குதலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
மோடி அரசையும், தேசவிரோத இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தையும் பாராட்டும் கார்ப்பரேட் கூட்டங்களின் பிரதிநிதிகளை, SKM வன்மையாகக் கண்டிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலனைப் பற்றி அக்கறையில்லாமல், இலாப வேட்டையே இவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது.
*இந்திய நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் முற்றிலும் அவமதித்து மேற்கொள்ளப்படும், இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தேசவிரோத வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மக்கள் மற்றும் வர்க்க அமைப்புகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என SKM அழைப்பு விடுக்கிறது.*
*2026 பிப்ரவரி 12 அன்று நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்று, மக்கள் விரோத மோடி அரசுக்குத் தக்க பதிலை அளிக்க வேண்டும் என SKM அழைக்கிறது.*
வெளியிட்டது – மீடியா செல் | சம்யுக்த் கிசான் மோர்சா
வெளியீடு : *ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM), தமிழ்நாடு.*
சரவணன் வீரையா
https://www.facebook.com/100001195643749/posts/26146866021603229/?rdid=EJv5WHHXCXC9MIFM
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு