இன்னுமா இது பெரியார் மண்ணு நூலை வெளியிட்ட செந்தளம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

துரை. சண்முகம்

இன்னுமா இது பெரியார் மண்ணு நூலை வெளியிட்ட செந்தளம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

சென்னை புத்தகக் காட்சியில் நேற்று (15.01.2026) இந்த நூலை ( இன்னுமா இது பெரியார் மண்ணு?) செந்தளம் பதிப்பாசிரியர் தோழர் ரெட்மேன் அவர்கள் 
படிப்பதற்கு அளித்தார். 

செந்தளம் தோழர்கள் மணிவண்ணன், ரெட்மேன், புகழ்வேலன் அவர்களுடன் ஒளிப்படம்



பெரியார் மீது அரசியல் விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் ஒன்னு! எனும் அரசியல் தற்குறித்தனம் இங்கே நிலவுகிறது. 

*இந்துத்துவ ஆதிக்க நிலையிலிருந்து பெரியாரை விமர்சிப்பவர்கள் ஒரு வகை.

* தமிழ் தேசிய/ தமிழ் இனவாத கண்ணோட்டத்தில் இருந்து பெரியார் மீதான விமர்சனம் ஒரு வகை. 

* கம்யூனிச வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து பெரியார் மீதான அரசியல் விமர்சன அணுகுமுறை ஒரு வகை. 

பெரியார் மீதான விமர்சனம் என்பதனாலேயே மூன்றும் ஒன்னு என்பது பிழைபடுகடாம். 

இந்தக் குறிப்பிட்ட நூல் 25 தலைப்புகளில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இருக்கிறது. 

* ஆரிய திராவிட இனவாதத்தின் பொருளியல் அடிப்படை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் 

* ஆரிய திராவிட மொழிக் குடும்பம் மூல திராவிடம் தமிழ் பற்றிய ஆய்வு, ஆங்கிலேயர் ஆட்சி பற்றிய பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் அவர்களின் முக்கிய கட்டுரை

* முதன்முதலில் கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழில் வெளியிட்ட பெரியார் அவர்கள் கம்யூனிச காதலை நிறுத்திக் கொண்டதன் அரசியல் பின்னணி 

* மொழி மற்றும் தேசிய பிரச்சனையில் பாட்டாளி வர்க்க நிலைப்பாடும் பெரியார் மற்றும் இனவாத  அரசியலும் பற்றி 

*இந்தி எதிர்ப்பு போரின் அரசியல் பின்னணி 

* முரண்பாடுகளின் மொத்த உருவம் பெரியாரா? பாரதியாரா? எனும் கட்டுரை 

* ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் கீழவெண்மணி பெரியாரின் வர்க்கக் கண்ணோட்டம் பற்றிய கட்டுரை 

 இப்படி முக்கிய தலைப்புகளில் பெரியார் மீதான அரசியல் விமர்சனங்கள் இத்தொகுப்பில் உள்ளது. 

இழிவான முறையோ எடுத்தெறியும் போக்கோ இல்லாமல் பெரியாரின் சமூக கண்ணோட்டம் பங்களிப்பு என்ன? மூடநம்பிக்கை ஒழிப்பு இந்து மத புராண எதிர்ப்பு என்பதான பாதையை தொடர்ந்து அவரது அரசியல் எத்தகைய வர்க்க கண்ணோட்ட பின்னணியில் யாருக்கு பயன்படுகிறது என்பதான நியாயமான அணுகுமுறைகளை கொண்டதாக இந்த நூல் உள்ளது.

பாகுபாடு வேறுபாடு சமத்துவத்தை மறுக்கும் அரசியல் செயல்பாடு என்பது பார்ப்பனியம் மட்டுமல்ல, இன்றைய கார்ப்பரேட் முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பிலும் அது ஆட்சி புரிகிறது. 

இத்தகைய முதலாளித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற சமூக நீதி திராவிட மாடல் என்பது எப்படி தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்பதை இப்போது நடப்பில் பார்க்கிறோம். 

பொருளாதார அம்சங்களில் மட்டுமல்ல, திருப்பரங்குன்றம் பிரச்சனையில் கூட இப்போது சிக்கந்தர் தர்காவுக்கு கொடுக்கப்படும் சட்டபூர்வ நெருக்கடி, கல்லத்தி மரத்தில் கொடியை அகற்றுதல், ஆடு கோழி பலியிட தடை எனும் பண்பாட்டு அம்சத்திலும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கு அடி பணியும் அரசாக திராவிட மாடல் இருப்பதை பார்க்கிறோம். 

தவிர்க்க இயலாமல் இன்னுமாடா இது பெரியார் மண்ணு? என கேட்கத்தான் தோன்றுகிறது. 

இல்லை! இல்லை! பெரியார் வேறு, திராவிடம் வேறு, திமுக வேறு என சிலர் வசதிக்கேற்ப பல்லி வாலை வெட்டிவிடுவது போல கட்டு கட்டுகிறார்கள். 

உண்மையில் திராவிட அரசு தன்னை தக்க வைக்க எவ்வாறெல்லாம் ஆளும் வர்க்கத்தை அனுசரித்துப் போக வேண்டும் என்பதற்கான அடிப்படை பெரியார் சிந்தனைகளிலேயே இருக்கிறது என்பதைத்தான் இந்த நூலின் பல பக்கங்கள் நமக்கு அறியத்தருகிறது. 

பெரியாரை அரசியலாக மதிப்பிடுவதற்கு இந்த நூல் ஒரு அடிப்படையை அமைத்துக் கொடுக்கிறது. 

பெரியாரைப் புறக்கணிப்பது! 
எனும் சித்தரிப்பு வகையில் பெரியார் மீதான விமர்சனங்களை தட்டிக் கழிக்க பார்க்கிறார்கள் பலர். 

உண்மையில் பெரியார் அவரது சிந்தனையிலிருந்து புறக்கணித்த விசயங்களை, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்ட வாழ்க்கையில் சிந்திக்க வைக்க வலியுறுத்துகிறது இத்தகைய விமர்சனங்கள் .

பெரியாரின் சிந்தனையில் சரியான பார்வையை ஏற்றுக்கொள்ள கம்யூனிஸ்டுகள் தயங்கியது இல்லை. அவரையும் கம்யூனிசத்தின் பக்கம் வென்றெடுக்கலாம் எனும் நம்பிக்கையில் தோழர் ஜீவானந்தம் வரை அரசியல் உறவாடி இருக்கிறார்கள்.

பெரியார் அவர்களும் ஒரு கட்டத்தில் ரஷ்ய சுற்றுப்பயணம் போன்ற அரசியல் தாக்கத்தில் 
இனி நாம் கடவுள் மறுப்பை மட்டும் பேசிக் கொண்டிருக்க முடியாது மக்கள் வாழ்க்கைக்கான சமத்துவ அரசியலை பேச வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறோம் என்கின்ற அளவுக்கு சிந்தனைக்கு வந்ததும் வரலாறு. 

ஆனால் பிரிட்டிஷ் அரசின் அரசியல் நெருக்கடி தாக்குதலின் இலக்கு அறிந்த அடுத்த கனமே தனது முடிவிலிருந்து பின்வாங்கி சிலர் நம்மை தூற்றுவார்கள்! இருந்தாலும் சுயமரியாதை இயக்கமே நாம் நடத்துவது போதுமானது எனும் நிலைக்கு திரும்பி இருக்கிறார். 

இது எல்லாம் சேர்ந்துதான் பெரியார். 

பெரியாரை மட்டுமல்ல வேறு எந்த சமூக கண்ணோட்டம் உள்ள தலைவரையும் மதிப்பிடுவதற்கான துணிச்சலையும் வர்க்க அரசியலையும் பெறுவதுதான் உண்மையான பகுத்தறிவு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.

இத்தகைய அறிவு நிலைக்கு அடித்தளமாக இந்த நூலை வெளியிட்டு இருக்கிற செந்தளம் பதிப்பகத்தாருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! 

சென்னை புத்தகக் காட்சி அரங்க எண் 555 செந்தளம் விற்பனையகத்தில் இந்நூல் கிடைக்கிறது.

 துரை. சண்முகம்

16.01.2026

https://www.facebook.com/share/p/1Kipk6vPjo/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு