தியாகச் செம்மல் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சினில் ஏந்துவோம்!

அவர்கள் விட்டு சென்ற கடமையை விரைவினில் முடிப்போம்! - தமிழ் குயிலி

தியாகச் செம்மல்  பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை   நெஞ்சினில் ஏந்துவோம்!

சிறுவயதில் பகத்சிங்!

பகத்சிங் ஆரம்ப பள்ளியில் படிக்கும் போது  ஒருநாள் ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களது லட்சியம் என்னவென்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் "மருத்துவராகப் போகிறேன், வழக்கறிஞராக போகிறேன், ஆட்சியராக போகிறேன், என்றனர்.

ஆனால் பகத்சிங் "நான் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடப் போகிறேன்" என்றார். 

இளம்பருவத்தில் பகத்சிங்!

"காதலும் வாழ்வும் மகத்தானதே அதுவும் புரட்சிக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டியதே" என்று லெனின். சொன்னதற்கு ஏற்ப, காதல் குறித்து தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இவ்வாறு எழுதினார்.

"காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிளர்ச்சி. அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல், காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலைக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூற முடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே – அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில்தான் விளையாடுகிறார்கள்.

மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது. எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.

இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம். காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காம வெறிகளுக்கும் உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசு படாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்….

கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு  மனநிலையாக அமையும்.

ஒரு தனிநபருக்கு, இன்னொரு தனிநபரின் பால் ஏற்படும் காதலை, அதுவும்கூட, இலட்சியப்பூர்வமான செயல்பாடுகளைக் கோருகின்ற நிலைமைகள் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற காதலைத்தான் நான் கண்டனம் செய்துள்ளேன்.  ஒரு மனிதன், ஆழ்ந்த காதல் உணர்வு கொண்டிருக்க வேண்டும்; அது, ஒரு தனிமனிதரிடம் மட்டுமே காட்டப்படாமல்,  உலகனைத்துக்குமே உரியதாய் அமைந்திட வேண்டும்".

தியாகியாகும் போது பகத்சிங்

" உயிர் வாழ விருப்பம் என்பது இயற்கையே. அது என்னுள்ளும் உள்ளது. நான் அதை மறைக்க விரும்பவில்லை. ஆனால் அது நிபந்தனைக்குட்பட்டது ஒரு சிறைக் கைதிவாழ்வோ அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய வாழ்வோ எனக்குத் தேவையில்லை.

இந்திய புரட்சியின் அடையாளமாக என் பெயர் உருவாகிவிட்டது. புரட்சிக் கட்சியின் கோட்பாடுகளும் தியாகங்களும் என்னை அந்த உயர்ந்த இடத்தில் அமர்த்திவிட்டன. நான் உயிர் வாழ்ந்தால் அதற்கும் அப்பால் என்னால் உயர முடியாது.

ஆனால் ஒரு அம்சம் என் மனதை வாட்டுகிறது. மனித சமூகத்திற்கும் இந்த தேசத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என எனது இதயம் சில லட்சியங்களை வளர்த்திருந்தது. அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நடைமுறை படுத்த இயலவில்லை.

நான் உயிர் வாழ்ந்தால் அவற்றைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பினை நான் பெறலாம். எனது உயிர் வாழும் விருப்பம், இந்தக் கோணத்திலிருந்து வருவதுதான்.

என்னைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இறுதிச் சோதனைக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். அந்த நாள் விரைவில் வந்திட விரும்புகிறேன்".

 

பகத்சிங்கின் மரண சாசனம்:

ஏகாதிபத்தியம் வீழ்க!

புரட்சி நீடுழி வாழ்க!

- தமிழ் குயிலி