தோழர் ஜீவா! தோழனே வர்க்க அரசியல் கண்ணோட்டத்திற்கு வா! வா!
துரை. சண்முகம்
தோழர் ஜீவா அவர்களின் நீதிக்கட்சி பெரியார் மீதான வர்க்க ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ள வரும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் அந்த அடிப்படையை தவிர்த்து விட்டு, "ஜீவா கம்பராமாயண சொற்பொழிவு நடத்தினார்! பார்ப்பன ஆதரவு கம்பராமாயணத்தை ஒரு கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்யலாமா?" என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
வர்க்கக் கண்ணோட்டத்தில் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு நேர்மையாக பதில் சொல்லும் பழக்கம் இல்லாதவர்களாக இத்தகையோர் இருந்தாலும் மதத்தின் மீது இவர்கள் எழுப்பும் இந்த நியாயமான கேள்விக்கு நாம் பதில் சொல்லத்தான் வேண்டும்.
நான் அறிந்த தகவல்களின் அடிப்படையில் தோழர் ஜீவா அவர்கள் கம்பன் கழக சொற்பொழிவுகளில் கம்பராமாயணத்தின் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அறக்கருத்துகளை முன்னிறுத்துவது அதற்குள் இருக்கும் கதைக் களன்களில் இருந்து சமத்துவ நோக்கில் எடுத்துரைப்பது என்ற வகையில் தமிழ் ஆர்வத்துட னும், அங்கு பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர்களுக்கு மாறாக அரசியல் கலந்தும் பேசினார் என்று அறிய முடிகிறது.
இந்த வேறுபாடுகள் இருந்த போதும் கம்பராமாயணம் என்பது ஒரு பக்தி இலக்கியம்.
வருண சாதி அமைப்பு முறை ஆதிக்கத்தை காலம் காட்டும் கருவியாக படைத்து இதை நிர்வகிக்கும் அரசமைப்பு அதிகாரத்திற்கு நியாயம் செய்த இலக்கியம். வர்க்க சமூகத்தின் இந்த பிரதிபலிப்பை எடுத்து சொல்வது வேறு. அவ்வாறு இல்லாமல் அதற்குள் அறக்கருத்து தேடி அதை கம்யூனிசத்தோடு இணைப்பது என்பதெல்லாம் பொருத்தமற்ற ஆய்வு முறை. இந்தக் கண்ணோட்ட அடிப்படையில் இந்தத் தேவை வரம்புகளை மீறி தோழர் ஜீவாவின் கம்பராமாயண சொற்பொழிவுகள் இருப்பது குறைபாடும் அவருடைய கண்ணோட்ட பலகீனமும் என எடுத்துக் கொள்ளலாம். இந்த அரசியல் அக்கறை அணுகு முறையில் விமர்சிக்கலாம்.
அது ஏற்கத்தக்கதே.
ஆனால் இந்த ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு, தோழர் ஜீவாவுக்கு சாதி வர்ணம் பற்றிய எதிர்ப்பு இல்லை. மதம் பற்றிய எதிர்ப்புஇல்லை. ஏன்? கம்யூனிஸ்டுகளுக்கே இல்லை!என பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
ஏனென்றால் வர்ண சாதி படிநிலை அமைப்பு முறைக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய நிலவுடைமை பொருளாதார உற்பத்தி முறைக்கு அடி கொடுக்கும் போராட்டங்களை நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகளை தவிர இங்கே யாரும் இல்லை.
பண்ணைகள் கோயில் மடங்கள் நிலங்கள் இவைகளுக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் அனைத்தும் சாதி அதிகார அமைப்பு முறைக்கு எதிரான போராட்டங்கள்தான்.
நில உடமை முழுக்க பார்ப்பன மற்றும் பார்ப்பனர் அல்லாத ஆதிக்கசாதி பண்ணைகளின் கைகளில் குவிந்து இருந்தது.
படிநிலை ஒடுக்கு முறை அமைப்பை பாதுகாத்து நின்ற கயவர்கள் இவர்கள்தான்.
இவர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தையும் பெரியாரோ திராவிட இயக்கமோ நடத்தியதே இல்லை. முழுக்க முழுக்க இதற்காக உயிரைக் கொடுத்து போராடியவர்கள் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
ஜீவாவின் சொற்பொழிவு மேற்கோள்களை வைத்துக்கொண்டு மட்டும் அவரை அணுக முடியாது.
மார்க்சிய ஆசான்களே கூட பண்டைய இலக்கியத்தின் புராணக் கதைகளிலிருந்து சில கதாபாத்திரங்களை சொல்லி மக்களிடம் நம்பிக்கையூட்டும்படி அவர்கள் நாட்டு சூழலுக்கு ஏற்ப பேசியது எல்லாம் உண்டு.
அதை வைத்துக்கொண்டு அவர்களின் மதம் பற்றிய மொத்த கண்ணோட்டமே அதுதான் என்று ஒருவர் முடிவுக்கு வர முடியாது.
வர்க்கப்போராட்டத்திற்கு தொடர்புடைய பண்டைய மானுட உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டு பேசுவது என்றுதான் அதற்கு அர்த்தம்.
வர்க்கப் போராட்டத்தின் இணைவுடன் பல சாதி மக்களை திரட்டி சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான திட்டத்தோடு இயங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். இத்தகைய கண்ணோட்டம் இல்லாத நீதிக்கட்சி மற்றும் பெரியாரோடு ஜீவா முரண்பட வேண்டியதாயிற்று.
சமதர்மத் திட்டத்தையே கைவிட்ட பெரியாரை விமர்சிக்கவும் செய்தார்.
இது ஏதோ தனிநபர் தாக்குதல் விசயம் அல்ல வர்க்க போராட்டத்திற்கு எதிர் சக்தியாக நிற்கும் போது அவசியமான அரசியல் விமர்சனமாக ஆகிறது.
தனது காலப்பகுதியில் இதை தோழர் ஜீவா செய்தார். அக்கால இடதுசாரி இயக்கப் போக்கின் பலவீனங்கள் குறைபாடுகள் போன்றவற்றின் வெளிப்பாடு ஜீவாவிடமும் உண்டு. தேர்தல் அரசியலுக்கு பிறகு மெல்ல மெல்ல பொது அரசியல் போக்கில் சமரசம் செய்து கொண்டதுடன் கூடிய வெளிப்பாடு இது. வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பதன் பொருளை வர்க்க சமரச கோட்பாடுகளாக மாற்றிக்கொண்டு, பாஜக தவிர பிற அரசியல் கட்சிகளுடன் தேர்தல் சமரசங்களாக போனதன் விளைவுகளும் இதில் அடங்கும்.
ஆனாலும் வர்க்க உணர்வால் தான் மத உணர்வை வெல்ல முடியும்! என்பதை நடைமுறையில் தொழிலாளர் வர்க்க போராட்டங்களின் அணி திரட்டல்களில் சாதித்துக் காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும்தான்.
அண்ணாதுரை போல ஒன்றே குலம் ஒருவனே தேவன்! என மதத்துக்கு வால் பிடித்தவர் அல்ல தோழர் ஜீவா. கலைஞரைப் போல நான்தான் திருவாரூர் தேரை ஒட்டியவன் என்று மார்தட்டியவர்கள் அல்ல.
தளபதியைப் போல பார்ப்பன எஸ்.வி சேகருக்கு பிரம்மதேயம் எழுதிக் கொடுத்தவர்களும் அல்ல.
சட்டமன்றத்தில் எம் .ஆர். ராதாவின் நாத்திக பிரச்சார நாடகங்களுக்கு தடை சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்து கடுமையாக பேசியிருக்கிறார் தடை செய்யக்கூடாது என வாதிட்டு இருக்கிறார் இந்து மதத்தின் ஆபாச புராண மூட கருத்துகளை ஏற்க முடியாது என நையாண்டியாக விளக்கம் கொடுத்து பேசியிருக்கிறார்.
இப்படிப்பட்டவரை ஏதோ இந்து மதப் பிரச்சாரகர் போலவும் புராணப் பிரசங்கி போலவும் அவதூறு செய்வது ஏற்கத்தக்கதல்ல. மதங்களை ஜனநாயகப்படி தனிநபர் விருப்பமாக அவர் அணுகி இருக்கிறார் என்பது அவரது "மதமும் மனித வாழ்வும்" நூலில் பார்க்க முடியும். மக்களின் தனிநபர் உரிமையாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் நாத்திகர்களாக இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார். வர்க்கப் போராட்டத்தின் மூலமாக சாதி மத வர்ணப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று களத்தில் போராடியும் இருக்கிறார்.
இன்று பல இடங்களில் சாதிக் கோயில்களின் ஆதிக்கம் என்பது" எங்களுடைய தனி சொத்து " " எங்க கோயில்" என்பதன் மூலமாகத்தான் நிலைநாட்டப்படுகிறது. எனவே கோயில் மத அதிகாரங்கள் தனி சொத்துடமையுடன் தவிர்க்க இயலாமல் தொடர்பு உடையவை. இதற்கு எதிரான வர்க்க கண்ணோட்டத்தில் ஆன இந்து மதம், பிற மதங்கள் ஆன்மீக நாட்டாமை செய்யும் தனியுடைமை ஒழிப்பு போராட்டத்தைப் பற்றி வாயே திறக்காமல் , தன் பங்குக்கு கோடிகளில் திராவிட மடங்களை குவிக்கும் ஆளும் வர்க்கப் பேர்வழிகளால் சனாதன எதிர்ப்பு வாய்வீச்சு செய்ய முடியுமே ஒழிய! ஒருபோதும் அதை சாய்ப்பதற்கான திட்டங்கள் உடையவர்கள் அல்ல.
இன்றைக்கு ஜீவா அரசியலை பின்பற்றக்கூடிய யாரும் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திக் கொண்டோ! தங்கத்தேர் இழுத்துக் கொண்டோ தரையில் உருண்டு கொண்டோ! கிடக்கவில்லை.
பெரியார் மண் திராவிட மாடல் இன்று உருட்டிக்கொண்டே
தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கு கூட தகுதி இல்லாமல், பார்ப்பன வேத மந்திரங்களுக்கு கோயில்களை படையல் போட்டுக்கொண்டு
இது ஆன்மீக அரசு! என்று துணிந்து பேசிக்கொண்டு
பொருளாதாரத்தில் மக்களை ஒடுக்கும் முதலாளிகளின் கூட்டாளிகளாகவும், ஆன்மீகத்தில் மக்களை சாதி இழிவு செய்யும் இந்துத்துவத்தின் கூட்டாளிகளாகவும் இருப்பவர்கள் திராவிட சாம்பிராணிகளே!
பகுத்தறிவும் நேர்மையும் உள்ளவர்கள் முதலில் இதை எதிர்த்துப் போராடி விட்டு! தோழர் ஜீவாவை உரியவாறு விமர்சிக்கலாம் தவறில்லை.
இதில் உள்ள அட்டைப்பட நூல் தொடர்புக்கு: 7639216686. 9444670998.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/832685782771553/?rdid=ACAARONPJt1xcEaN
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு