சம்பூர்ண சுராக்ஷா கேந்திரா எனும் பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து

TANSACS அலுவலகத்தில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்திற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் அறைகூவல்

சம்பூர்ண சுராக்ஷா கேந்திரா எனும் பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து

அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்!

அரசு - தனியார் நிறுவனங்களின் ஒரே பணியை செய்துவரும் ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு காட்டக்கூடாது என தொழிலாளர் நல சட்டங்கள் கூறுகிறது. அதுதான் இயற்கை நியதியும் கூட.. அரசுத்துறை நிறுவனங்கள் அதற்கு முன்மாதிரியாக செயல்படவேண்டும். ஆனால் மாறாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு மாறாக செயல்படும் TANSACS நிர்வாகம்:-

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 10 சதவீத ஊதிய உயர்வை அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனையில் நகர்ப்புற சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 10% ஊதிய உயர்வை வழங்கியது. ஆனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு இன்றுவரை வழங்கப்படவில்லை. இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையை எதிர்த்து ஏப்ரல் 14-ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டத்தை அறிவித்தோம். அப்பொழுது TANSACS நிர்வாகம் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவின்படி TANSACS நிர்வாகக்குழு கூட்டத்தில் நிதி ஒப்புதலைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தற்பொழுது பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு மாறாக தேசிய சுகாதார குழுமத்தின் நிதியை பெறுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்று சொல்கிறார்கள். அதை சங்க நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டதாக உண்மைக்கு மாறாக சொல்கிறார்கள். அரசுத் துறைகளில் பேச்சுவார்த்தைகள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காலதாமதம் ஏற்படுவது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கையை மாற்றிப் பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. TANSACS நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகள் மற்றும் பாரபட்சமான அணுகுமுறை காரணமாக நாம் மீண்டும் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எய்ட்ஸ் தடுப்புப் பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்படும் மத்திய அரசு:-

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கடந்துள்ள நிலையில் எச்.ஐ.வி. தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை மேலும் வலுவாக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு மாறாக இந்திய அரசு எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை குறைக்க முடிவுசெய்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளால் நாட்டில் மீண்டும் எச்.ஐ.வி. தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தனியார் அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் மத்திய அரசு NACP - V திட்டத்தின்படி 2026-ம் ஆண்டிற்குள் தற்பொழுது நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 5081 ICTC மையங்களை படிப்படியாக மூடிவிட்டு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சம்பூர்ண சுராக்ஷா கேந்திரா (Sampoorna Suraksha Kendra) என்ற பெயரில் படிப்படியாக தனியார் அவுட்சோர்சிங் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என மாநில அரசுகளை வற்புறுத்துகிறார்கள். அதன்படி 50 கிலோமீட்டருக்கு ஒரு சம்பூர்ண சுராக்ஷா கேந்திர மையம் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இதனை அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் மட்டுமே செயல்படுத்தவேண்டும் என மாநில அரசுகளை நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.

முதல்கட்டமாக 2119 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 186 நம்பிக்கை மையங்கள் மூடப்படும் என தெரிகிறது. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளால் இந்தியாவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது இந்தியா முழுவதும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணிபுரியும் 25,000 ஊழியர்களை படிப்படியாக வீட்டுக்கு அனுப்பி வயிற்றிலடிக்க முடிவு செய்துவிட்டார்கள். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய நீண்டதூரம் செல்லவேண்டும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு நிதியை 5 சதவீத அளவுக்கு குறைத்துவிட்டதால் வியாதி மாத்திரைகள் மற்றும் எச்.ஐ.வி. பரிசோதனை உபகரணங்களுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், தனியார் மையங்களை துவக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்தியாவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அரசு நடத்தக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மத்திய அரசின் இத்தகைய தனியார்மயக் கொள்கைகளை போராடி முறியடிக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தமிழக அரசின் கடமை:

மருத்துவக் கல்லூரிகளில் ART மையங்களை துவக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 10 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ART தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடினால் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும். எய்ட்ஸ் தொற்றாளர்களுக்கு கிடைக்கும் ஆலோசனைகளும், உதவிகளும் தடைபடும். மத்திய அரசின் ஆலோசனைகளை ஏற்றால் 20 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்துவரும் 2500 ஊழியர்களின் வேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறந்த மருத்துவ சேவைகளை சிதைக்கிற மத்திய அரசின் தவறான போக்கிற்கு இடமளிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். மேலும், தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தபடி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்கிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோத, ஊழியர் விரோத கொள்கையை எதிர்த்து போராடுவது அவசியமான ஒன்றாகும். வருகின்ற 17-8-2023 அன்று சென்னை TANSACS அலுவலகத்தில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்திற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களையும், தோழமை சங்க நிர்வாகிகளையும், ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கின்றோம்.

மத்திய அரசே! மத்திய அரசே!!

அரசு, தனியார் பங்கேற்பு என்ற பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார் மயமாக்காதே!

இந்தியா முழுவதும் 2100 எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையை திரும்பப்பெறு!

ஏ.ஆர்.டி. மையங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துவங்க மாநில அரசுகளை நிர்ப்பந்தம் செய்யாதே!

பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு மக்களின் உயிரை பலிகொடுக்காதே!

மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையில் அவுட்சோர்சிங் முறையை கைவிடுக!

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்காதே!

தமிழக அரசே! தமிழக அரசே!!

தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்திடுக!

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிடுக!

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்கிடுக!

குறிப்பு:-

நோயாளிகளுக்கு அன்றாடம் அளிக்கும் மருத்துவ சேவையில் குறைபாடு இல்லாமல் மையத்திலிருந்து ஒருவர் மட்டும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண் - தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்

- சேரன் வாஞ்சிநாதன்

(முகநூலில்)

Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு