மார்க்சின் சிலைக்கு மகிழ வேண்டாமா?

துரை. சண்முகம்

மார்க்சின் சிலைக்கு   மகிழ வேண்டாமா?
முகநூல் படம் நன்றி: Lingam Deva

முதலில் 
விலை வைக்கும்
முடியாத போது 
உலை வைக்கும் 
முடிந்தவர் என்றால் 
சிலை வைக்கும்
இதுதான் 
ஆளும் வர்க்க அரசியல் 

"உங்களுக்கு 
பிடித்தமான வாசகம்? 
என்று கேட்டபோது, 
எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு! 
என்றார் மார்க்ஸ்!"

சந்தேகப்படத்தான் வேண்டும்!

சென்னையில் 
தொழிலாளர்கள் 
தங்கள் உரிமைக்காக 
வீதியில் திரண்டு 
போராட முடியாது 

பகுதி நேர ஆசிரியரோ 
அங்கன்வாடி ஊழியரோ 
செவிலியரோ 
தூய்மைப் பணியாளரோ
தங்கள் துயரங்களை 
வீதியில் நின்று 
பேச முடியாது 

உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைக் குரலை 
மென்னியில் நெறித்துவிட்டு
கன்னிமாரா இடத்தில் 
கார்ல் மார்க்சுக்கு சிலை
என்றால்,
எல்லாவற்றையும் 
அரசியலாக 
அறிந்து கொள்ளத்தான்
வேண்டும்.

இது தத்துவத்தின் 
வெற்றி அல்ல 
தேர்தல் 
கூட்டணியின் வெற்றி 
அரசியலால் 
சுரண்டுவது மட்டுமல்ல 
அரசியலையும் சுரண்டும் 
அருங் கலை; 
அனைவருக்கும் 
நல்லவராக 
சிலை 

மார்க்ஸ்
பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்  
முதலாளி வர்க்கத்துக்கும்  
தலைவர் அல்ல!

முதலாளி வர்க்கத்தின் கரங்களால்
பிரதிஷ்ட்டை செய்ய
அதிஷ்ட
கடவுளல்ல!

பறிமுதல்காரர்களை 
பறிமுதல் செய்யும் 
பாட்டாளி வர்க்க 
அரசியல் அவர்.

சாதி ஆணவக் கொலையை
தடுக்க தனிச் சட்டம் இயற்று!
கேட்டோம் 
கொடுத்தார்களா? 
தூய்மைப் பணிகளில் 
மருத்துவத் துறையில் 
தனியார் மயத்தை 
தடுப்போம்!
முழங்கினோம் 
கேட்டார்களா?

இதெல்லாம் 
நிலை என்றால் 
தத்துவத்தின் வெற்றி 
என மகிழலாம்,

இது, 
'நாங்களும் 
கம்யூனிசத்துக்கு ஆதரவு '
எனும் 
வித்தகத்தின் வெற்றி

இந்தியக் குழந்தைகள்
பெண்களின்
பிஞ்சு விரல்கள் 
பிரிட்டிஷ் சீமாட்டிகளுக்கான
மெல்லிய பட்டுத் துணிக்காக 
ஒடிக்கப்படுகின்றன!
என்று கவலைப்பட்ட மார்க்ஸ் 

இன்று 
உயிரோடு இருந்தால், 
பன்னாட்டு கம்பெனிகளின்
மூலதனத்திற்காக 
ஒப்பந்த கூலியாக 
உரியப்படும் உழைப்பாளர்களின்
ரத்தத்தை பார்த்து
கொதித்துதான் போயிருப்பார் 

இதையெல்லாம் பார்த்து
சிலையாக நிற்கவா
சம்மதிப்பார்!
தொழிலாளர்களை
போராடத் தூண்டி விட்டு 
நள்ளிரவு கைதுக்கு 
ஆளாகி இருப்பார். 

மார்க்சை வைத்து
போராடுவதுதான் 
பிரச்சனை, 

கொண்டாடலாம்! 
நீங்கள் வெறுப்பது என்ன?
என்று 
மார்க்சின் புதல்வியர்
கேட்டபோது ,
" மார்ட்டின் டப்பர்"
என மார்க்ஸ் 
பதிலளித்தார் 

மார்க்ஸ் 
இப்போது இருந்திருந்தால்,
"மார்க்சிய டூப்பர்"
என
வெறுத்திருப்பார்! 

மார்க்சின் சிலைக்கு 
மகிழ வேண்டாமா?
வறட்டு வாதிகள்! 
என வசை பாடலாம் 

புரட்டு வாதிகள்
மகிழ்ச்சிக்கான 
மார்க்சின் அரசியலை 
கருவறுக்கும்
அதிகாரங்களின் பீடங்களில் 
அமர்வதற்கு 
மார்க்சும் கூட
சம்மதிக்காத
வறட்டுவாதிதான்!

     - துரை. சண்முகம் 

https://www.facebook.com/100080904177819/posts/929826883057442/?rdid=OscU7UCN1b8YNNDH

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு