எவ்வளவு பெரிய சோக நிகழ்வு என்றாலும் அதில் ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள்
சாவித்திரி கண்ணன்

''அப்பப்பா இந்த அரசியல்வாதிகளை அனுமானிக்கிறது தான் இருபப்திலேயே ரொம்ப ரிஸ்க்கானது. எப்ப யார் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு கணிக்க முடியலை..பாஸ்’’
‘’ சீமான் திடீர்னு ரூட் மாறுகிறாப்புல இருக்குதே..? அதை சொல்றியா''
''இது நாள் வரைக்கும் திமுகவைத் தான் சீமான் பிரதான எதிரியாகத் தாக்கி வந்தார். இப்ப என்னடான்னா, கரூர் சம்பவத்தில் திமுக ஆதரவு நிலை, பாஜக எதிர்ப்பு நிலை எடுத்து விஜய்யை வறுத்தெடுக்கிறார். அவர் திமுக ஆதரவு நிலை எடுத்தாலும் கூட அதற்கான நியாயங்களை ஏற்றுக் கொள்வது மாதிரி வைக்கிறாரே.. ஒரே குழப்பமாக இருக்குது.''
''அவர் எந்த நிலைபாட்டை எடுத்தாலும், அல்லது மாற்றிக் கொண்டாலும் அதற்கான நியாயங்களை பேசத் தெரிந்தவர். ...''
''அது உண்மை தான். ஆனால், கரூர் நிகழ்வு நடந்தவுடன் விஜய்க்கு ஆதரவாக பேசினார். இப்ப என்னடான்னா தடால்னு மாறிட்டார்...''
''கரூருக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறியவர் அன்று தன் மனதின் ஆழத்தில் இருந்து பேசிய பேச்சுகள் என்ன?''
''துடைக்க முடியாத பெரும் துயரம் நடந்துவிட்டது. ஏன் நடந்தது, எப்படி நடந்தது என ஆய்வு செய்வதற்கு முன்பு, எதிர்பாராத விபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதில் யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி பெரும் துயரம் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக தவெகவில் இருக்கக்கூடிய பிள்ளைகள், முதன்மை பொறுப்பாளர்கள், தம்பி விஜய் ஆகியோருக்கு ஆறுதலை சொல்லி கொள்கிறேன். விஜய் அனுபவமில்லாதவர். நாமெல்லாம் தான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.''
''ஆமா, அவர் மட்டுமில்லை, நாம் தமிழர் தம்பிகள் பலரும் விஜய்க்கு ஆதரவாக, திமுகவுக்கு எதிராகத் தான் அலையலையாக பாய்ந்து வந்தாங்க. உடனே அவர் சுதாரித்துக் கொண்டார்.''
''புரியலை . என்ன சுதாரிச்சுக்கிட்டார்..?''
''ஏற்கனவே தன்னோட தம்பிகளை தான் விஜய் கணிசமாக தூக்கிட்டாருன்னு கொஞ்சம் கடுப்பில் இருந்தார். இப்ப உள்ளவங்களையும் நாமே தூக்கி கொடுத்திட்டோம்னு சுதாரிச்சிருக்கலாம்.''
''அதுக்காக தன்னோட பரம எதிரியான திமுக அரசை நியாயப்படுத்தியில்லா இப்பம் பேசிக்கிட்டு இருக்கார்…’’
’’கரூர் சம்பவத்தால் விஜய் பலம் பெற்றுவிடக் கூடாது. விஜய் பலம் பெறுவது தன் ஆதரவு தளத்தை பாதிக்குது. ஆகவே, விஜய்யை எதிர்ப்பது அவரோட கட்சி நலன் சார்ந்த முடிவாகத் தான் தெரியுது.''
''அப்ப அவர் இப்ப எடுத்த முடிவால் அவருக்கான திமுக எதிர்ப்பு ஓட்டு வங்கியை இழக்க மாட்டாரா? இது திமுகவோட அவருக்கு ஒரு மறைமுக டீலீங் இருக்கோன்னு சந்தேகத்தை ஏற்படுத்தாதா?''
''ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆனால், உடனடி நிவாரணத்தை மட்டுமே அவர் யோசிச்சு இருக்கலாம். திமுகவை கடுமையாக எதிர்த்து பேசி அதை மீண்டும் பெற்றுவிடலாம் என நினைத்திருக்கலாம்.''
''பாஜக விஜய்க்கு முக்கியத்துவம் தருவதும் சீமானுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் அல்லவா?''
''அதுக்கு ஏன் இவர் கோபப்படணும்…?''
''சீமான் தங்கள் அணிக்கு வர வேண்டும் என் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த பாஜக, சீமானை அம்போவென்று விட்டுவிட்டதே..? புது ஆள் விஜய்க்காக பாஜகவினர் வரிந்து கட்டி வாதாடுறாங்களே..? அப்ப கோபம் வராதா?''
''நீ சொல்றதை பார்த்தால் கரூர் சம்பவத்தால் வேறு யாரைவிடவும் தானே அதிக பாதிப்புக்கு உள்ளானதாக சீமான் நினைக்கிறாருன்னு இல்ல சொல்ற...''
''கரூர் சம்பவத்தைக் கொண்டு விஜய்யை வீழ்த்த திமுக எல்லா வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கு. அதுக்கு அதிகாரம் கைவசம் இருப்பதும் தோதா இருக்கு.
இதுல பாஜகவும் தன் பங்கிற்கு ஆதாய அரசியல் செய்ய நினைக்குது. ஸ்டாலின் அதற்கு இடம் தராமல் தனி நபர் ஆணையம் அமைத்ததால் தேசிய மனித உரிமை ஆணையமும் தலையிட முடியாத நிலையை உடனே உருவாக்கிட்டார். போதாக்குறைக்கு நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை கமிஷன் அறிவிப்பும் திமுக அரசுக்கு சாதகமாய்விட்டது. ஐயோ பாவம், பாஜக. பாஜகவின் கூட்டணி ஆசைக்கும் விஜய் மசிந்து கொடுக்கலை.''
’’அப்ப கரூர் சம்பவத்தை 'கெய்ன்' பண்ணுவதில் ஸ்டாலின் தான் முன்னணியில் இருக்கார்ன்னு சொல்லு.’’
''யெஸ் நிகழ்வு நடந்த நிமிடத்தில் இருந்து ஒவ்வொரு நகர்விலும் அவருடைய சாணக்கியத்தனம் கண்டு டெல்லி மேலிடமே மிரண்டு போயிருக்கு. 'மெயின் ஸ்டீர்ம் மீடியாக்கள்', அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என முன்னெப்போதும் இல்லாத வகையில் தன் ஆதரவுத் தளத்தை 'ஸ்டிராங்காக்கி' நிறுவி இருக்கிறார். சீமானைக் கூட தனக்கு ஆதரவாக திருப்ப முடியும்னு காமிச்சிட்டார்’’
'' உண்மை தான். அதே சமயம் கரூர் சம்பவத்தால் த.வெ.கவின் அடிமட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுக ஆதரவை ஏற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அது தங்களை திமுகவிடம் இருந்து பாதுகாக்கும்னு நினைக்கிறாங்க. ஆக, அதிமுக ஆதாயம் அடைய வாய்ப்பிருக்கலாம் போல நிலைமை போய்க்கிட்டு இருக்கு. போகப் போகத் தான் எதுவும் தெளிவாகத் தெரிய வரும்.''
''ஆக, அரசியல் கட்சிகளை பொறுத்த அளவில் எவ்வளவு பெரிய சோக நிகழ்வு என்றாலும், அதில் தங்களின் ஒவ்வொரு நகர்விலும் அவரவரவர் ஆதாயம் அடையவே காய் நகர்த்துவார்கள்.. என்பது எழுதப்படாத விதியாகும்.''
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/share/19puTBWt9V/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு