திமுக அரசின் வருமான வரிக் கொள்ளைக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பத்திரிக்கை செய்தி

திமுக அரசின் வருமான வரிக் கொள்ளைக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்

பத்திரிக்கை செய்தி

அன்பார்ந்த தோழர்களே..,

வணக்கம்.

களஞ்சியம் 2.0 செயலி வாயிலாக தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தில், தன்னிச்சையாகவும், எந்த ஒரு வரையறையும் இல்லாமலும் வருமானவரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிடக் கோரி எதிர்வரும்  29.05.2024 புதன்கிழமை அன்று மாவட்டக் கருவூல அலுவலங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

              --------------------

தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள களஞ்சியம் 2.0 செயலி வாயிலாக தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 2024 - 25 ஆண்டிற்கான வருமான வரியினை தானாக பிடித்தம் செய்யும் நடைமுறையினை, கடந்த 2024 ஏப்ரல் மாதம் தமிழக அரசு துவக்கியது.

 

பெரும்பான்மையான ஊழியர்களுக்கு, குறிப்பாக, வருமான வரி பிடித்தத்தில் பழைய நடைமுறையை (Old regime) தேர்வு செய்தவர்களுக்கு, அவர்களது வரி கழிவுகளை இனவாரியாக எவ்வாறு உள்ளீடு செய்வது என்பது குறித்து தெரிவிக்கமாலும், அதற்கான SOP (நடைமுறை) குறித்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்காமலும், ஊழியர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை ஈவை விட கூடுதலான பணத்தினை தன்னிச்சையாக, களஞ்சியம் 2.0 செயலி பிடித்தம் செய்து வருகிறது.

களஞ்சியம் செயலியே குறைபாடுகள் உடையது என்பதையும், IFHRMS மென்பொருள் வாயிலாக சம்பள பட்டியலை, அனைத்து துறையில் பணிபுரியும், சம்பள பட்டியல், தயாரிக்கும் ஊழியர்களுக்கும், சம்பள பட்டியலை பெற்று சரிபார்த்து, வழங்கும் கருவூலத்துறை ஊழியர்களுக்கும், ஏராளமான சிரமத்தை ஏற்படுத்தி வருவது குறித்தும் கடந்த காலங்களில், ஏராளமான கடிதங்கள் வாயிலாக, தமிழக அரசின் நிதித்துறைக்கும், கருவூல கணக்குத்துறை ஆணையாளருக்கும்  தெரிவித்துள்ளோம்.

ஆனால், IFHRMS மென்பொருள் குறைபாடுகள் குறித்து ஊழியர் சங்கங்களின் புகாரினையோ, ஆலோசனைகளையோ தமிழக அரசு கண்டு கொள்ளமாலேயே கடந்து செல்கிறது.

களஞ்சியம் 2.0 செயலி தன்னிச்சையாக ஊழியர்கள் செலுத்த வேண்டிய வருமான வரிக்கான மாதாந்திர ஈவை விட கூடுதலாக வரிப் பிடித்தம் செய்து வருவது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட ஊழியர்களது சங்கங்களும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஓய்வூதியர் அமைப்புகளும், கண்டன கடிதங்களை தமிழக அரசிற்கும், கருவூல கணக்குத் துறைக்கும் எழுதியதுடன், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டிய வருமான வரி ஈவினை முடிவு செய்யும் உரிமையை முன்பு போலவே ஊழியர்களின் விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும் என தெரிவித்திருந்தன.

குறைபாடுகள் சரி செய்யப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் 2024 மே மாதத்திற்கான ஊதியம் தயாரிக்கும் போதும், சீரற்ற வருமான வரி ஈவானது பிடித்தம் செய்யப்படுவதாக பெரும்பான்மையான ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்கள் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து கடந்த மாதமே கடிதம் வழங்கியிருந்தும், அதை சரி செய்யாமல், இம்மாதமும், அதே நடைமுறையை தொடரும், தமிழக அரசின், கருவூல கணக்குத் துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்தும்..,

முறையீடுகளுக்காக சந்திக்க வரும் சங்கப் பிரதிநிதிகளை மட்டுமல்லாது, அனைத்துப் பார்வையாளர்களையும் தொடர்ந்து சந்திக்க மறுத்து ஆணவத்துடன் செயல்பட்டு வரும் கருவூலத்துறை ஆணையர் திரு.விஜயேந்திரபாண்டியன் இ.ஆ.ப. அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும்...

எதிர்வரும்  29.05, 2024 புதன்கிழமை அன்று மாவட்டக் கருவூல அலுவலங்களுக்கு  முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை அதிகப்படியான ஊழியர்களை திரட்டி மிக சக்தியாக நடத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தோழமையுடன் கொள்கிறோம்.

தோழமையுடன்...

சு.தமிழ்ச்செல்வி, மாநிலத் தலைவர்

ஜெ.லட்சுமி நாராயணன், பொதுச் செயலாளர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)

Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு