மக்களை ஏமாற்றும் திமுக அரசும் தனியார் பள்ளி முதலாளிகளும்

சிலம்பரசன் சே

மக்களை ஏமாற்றும் திமுக அரசும் தனியார் பள்ளி முதலாளிகளும்

தனியார் பள்ளிகள் CSR மூலம் அரசு பள்ளிகளுக்கு உதவி செய்ய முடியாது...

மக்களை ஏமாற்றும் திமுக அரசும், தனியார் பள்ளி முதலாளிகளும்...

தனியார் பள்ளி கூட்டமைப்பு துவக்க விழாவில் பேசிய தமிழ் நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளின் பங்களிப்பில் அரசு பள்ளிகளின் உட்கட்மைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

அமைச்சரின் இந்த பேச்சு விவாதப்பொருளானது. புதிய கல்விக்கொள்கையை திமுக அரசாங்கம் அமுல் படுத்தாது என்று சொன்னதற்கு மாறாக பல்வேறு நடவடிக்கைகளில் புதிய கல்விக் கொள்கையை அமுல் படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பேசிய பேச்சு கண்டனத்திற்கு உள்ளானது.

மேற்கண்ட விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு விளக்கம் ஒன்றை அறிக்கையாக வெளியிட்டது. அதில் அமைச்சர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும், கூட்டமைப்பு அவ்வாறு தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் அந்த அறிக்கை கூறுவது என்னவென்றால்; "தத்தெடுப்போம்" என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தவில்லை, அமைச்சர் அவர்களும் பயன்படுத்தவில்லை மாறாக CSR மூலமாக 500 அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளி முதலாளிகள் (தாளாளர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்) உதவ முன் வந்திருக்கிறார்கள் அவர்களின் "பெருந்தன்மையை" கொச்சை படுத்தும் விதமாக அரசியல் செய்கிறார்கள் என அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

CSR FUND மூலமாக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை அதாவது நூலகம் அமைப்பது, விளையாட்டு பொருட்களை வாங்கி வழங்குவது, கணினி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுப்பது, வர்ணம் பூசுதல், பொது அறிவு நூல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தனியார் பள்ளி தாளாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை வாசிக்கும் எவருக்கும் மேற்கண்ட தனியார் பள்ளி முதலாளிகள் மீது பாசம் பொத்து கொண்டு வரும் என்பதில் மாற்று கருத்தில்லை, மேலும், அமைச்சரை திமுக அரசாங்கத்தை எதிர்க்க இந்த பிரச்சனையை ஊதி பெரிதுபடுத்துகிறார்கள் என்று எண்ண தோன்றும். ஏற்கனவே அந்த கருத்தை ஆழமாக முன் வைத்து விட்டார்  வேல் வீச்சு செந்தில் அவர்கள்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

அதென்ன "CSR"..? CSR மூலம் தனியார் பள்ளிகள் எப்படி அரசு பள்ளிகளுக்கு உதவ முடியும்..?

பார்க்கலாம்... Corporate social responsibility (CSR) என்பது பெரும் நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் லாபத்தில் 2% பணத்தை பல்வேறு உதவிகளை செய்வதன் மூலம் சமூக மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும் என்கிறது சட்டம்.. இதெற்கெல்லாம் சட்டம் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.. ஆம்.. 2013 company act corporate social responsibility குறித்து தெளிவாக வரையறைகள் வகுத்துள்ளது..

அவை என்ன..? 

Company Act -2013 section 135 கீழ் கண்டவாறு வரையறை செய்கிறது;

■ ₹500 கோடி அல்லது அதற்கு மேல் நிகர மதிப்பு கொண்ட நிறுவனங்கள்.

■ அல்லது ₹1000 கோடிக்கு மேல் விற்று முதல் செய்யும் நிறுவனங்கள் 

■ அல்லது ₹5 கோடிக்கு மேல் நிகர லாபம் ஈட்டும் நிறுவனங்கள் 

தங்களின் லாபத்தில் 2% பணத்தை CSR fund ஆக ஒதுக்கி செலவு செய்ய வேண்டும் என தெரிவிக்கிறது.

நிறுவனங்கள் நினைத்த மாத்திரத்தில் (அதாவது தனியார் பள்ளி முதலாளிகள் கூறுவது போல) இதை செய்ய முடியுமா என்றால் முடியாது என்பது தான் பதில்.

பிறகு எப்படி இந்த பணத்தை அவர்கள் செலவு செய்ய வேண்டும்..?

மேற்கண்ட நிறுவனங்கள் அவர்களின் நிறுவனத்தில் CSR policy ஒன்றை உருவாக்க வேண்டும் 

அரசு   Committee ஒன்றை உருவாக்கி  அதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குனர்களை நியமிக்க வேண்டும்.

நியமிக்க பட்ட இயக்குனர் குழு என்னென்ன தேவை என்பதை வெளிப்படுத்தும்  நிறுவனத்தின் சார்பாக CSR fund மூலம் மேற்கொள்ள இருக்கிற பணிகளை முன்மொழிந்து அவற்றிற்கான நிதியை ஒதுக்க வேண்டும். பிறகு அந்த committee வேலைகளை கண்காணிக்க வேண்டும்.

செய்யப்பட இருக்கும் பணிகளையும், செய்து முடித்த வேலைகளையும், பணிகளை செய்வதற்காக திட்டமிடப்பட்ட தொகை, செலவு செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்ளை எல்லாம் முறையாக பராமரிக்க வேண்டும். அதற்காக தனியாக வங்கி கணக்கு தொடங்கி CSR க்கு ஒதுக்கப்பட்ட பணத்தை கணக்கில் வரவு வைக்க வேண்டும். அந்த பணத்தில் ஏற்கனவே செய்து வரும் தங்களின் தொழில் சார்ந்த எந்த முதலீட்டுக்கும் பயன்படுத்த கூடாது என சட்டம் தெளிவாக கூறுகிறது..

மேலும் எந்த நிறுவனங்கள் CSR fund மூலம் பல்வேறு பணிகளை செய்து வருகிறதோ அவற்றை குறித்து அந்நிறுவனங்களின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சட்டம் கட்டளை இடுகிறது.

யாரெல்லாம் CSR FUND மூலம் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்கலாம்..?

1. Society Act ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

2. Company Act section 8- ன் கீழ் வரம்பிடப்பட்ட நிறுவனம்.

3. டிரஸ்ட்கள் 

4. பெரும் நிறுவனங்கள்.

எந்தெந்த திட்டங்களுக்கு CSR FUND ஐ செலவு செய்யலாம்..?

■ பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழித்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான குடிநீரை கிடைக்கச் செய்தல் ஆகியவற்றிற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஸ்வச் பாரத் கோஷ் திட்டத்தில் பங்களிப்பு, உட்பட preventive health care உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

■ கல்வியை மேம்படுத்துதல், குறிப்பாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் சிறப்புக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில்.

■ பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள் அமைத்தல் மற்றும் விடுதிகளை அமைத்தல்.  முதியோர் இல்லங்கள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிற வசதிகள் செய்து கொடுத்தல் மற்றும் சமூக- பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்.

■ சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் சமநிலை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பு, விலங்குகள் நலன், வேளாண் காடு வளர்ப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மண், காற்று மற்றும் நீர் ஆகியவற்றின் தரத்தை பராமரித்தல், கங்கை நதிக்கு புத்துயிர் அளிக்க மத்திய அரசு அமைக்கும் தூய்மையான கங்கை நிதிக்கு பங்களிப்பு உட்பட.

■ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் தளங்கள் மற்றும் கலைப் படைப்புகளின் மறுசீரமைப்பு உட்பட தேசிய பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு;  பொது நூலகங்கள் அமைத்தல்;  பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்களை மேம்படுத்துதல்.

■ ஆயுதப்படை வீரர்கள், போர் விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நலனுக்கான நடவடிக்கைகள்;

■ கிராமப்புற விளையாட்டு, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு, பாராலிம்பிக் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகளை ஊக்குவிக்க பயிற்சி.

■ பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி அல்லது மத்திய அரசால் அமைக்கப்படும் வேறு ஏதேனும் நிதிக்கான பங்களிப்பு.  சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நிவாரணம் மற்றும் அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள்.

■ மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தால் நிதியளிக்கப்படும் இன்குபேட்டர்களுக்கான பங்களிப்பு மற்றும் பொது நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT கள்), தேசிய ஆய்வகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் (அனுசரணையில் நிறுவப்பட்டது  இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), அறிவியல் கவுன்சில் மற்றும்  தொழில்துறை ஆராய்ச்சி (CSIR), அணுசக்தித் துறை (DAE), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), உயிரி தொழில்நுட்பத் துறை (DBT), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) ஆகியவை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் திட்டங்கள்.

■ கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள்

■ குடிசைப்பகுதி மேம்பாடு.

மேலே கண்ட துறைகளில் CSR fund மூலம் உட்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யலாம். சுருங்க சொன்னால் பள்ளி, கல்லூரி, ஆய்வு நிறுவனம், சுற்றுசூழல் பாதுகாப்பு, சாலை வசதி, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு, SC, ST, OBC மக்களின் சமூக பொருளாதார மேம்பாடு, பெண்கள், மாற்று பாலினம், முதியோர், குழந்தைகள் மேம்பாடு என அரசும் அரசாங்கமும் வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டிய எல்லா துறைகளிலும் பெரும் கார்பொரேட் நிறுவனங்கள் CSR FUND மூலம் உதவலாம்.

மேற்கண்ட விஷயங்களை படித்த பிறகு தமிழ் நாடு தனியார் பள்ளி முதலாளிகளின் கூட்டமைப்பு சொன்னது சரி என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம் அது இயல்புதான் ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.

படிக்கவும்: நம்ம ஸ்கூல் திட்டம் : கல்வியைப் பறிமுதல் செய்யும் 'கார்ப்பரேட் நீதி'

உண்மை என்ன...? 

இந்திய அளவில் தனியார் பள்ளிகள் எதுவும் இதுபோல CSR fund மூலம் அரசு பள்ளிகளுக்கு உதவவில்லை மாறாக தனியார் பள்ளிகள் தான் CSR fund மூலம் உதவி பெற அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

2016 ஆம் ஆண்டு கேரளா தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மேற்கண்டவாறு அதாவது CSR fund மூலம் donations பெற தனியார் பள்ளிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சட்டப்படி, CSR முன்முயற்சிகளில் பசி மற்றும் வறுமையை ஒழிக்க, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிப்பது ஆகியவை அடங்கும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்ய இந்த திட்டம் செயல்படக்கூடாது எனவும் தெரிவித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் csr fund மூலம் உதவி பெரும் துறைகள் அனைத்தும் அரசு சார்ந்த துறையாக இருப்பதால் அவை csr fund ஐ பெற்றுக்கொண்டு லாப நோக்கம் இல்லாமல் செயல் படும். மாறாக தனியார் பள்ளிகள் அனைத்தும் லாபம் ஒன்றே குறிக்கோள் என செயல்படுவதால் மேற்கண்ட கோரிக்கையை ஏற்க கூடாது என்று கூறப்பட்டது.

ஆனால் அரசு அந்த கோரிக்கையை ஏற்றதா இல்லையா என்ற விவரம் தெரியவில்லை.

மேலும் தனியார் பள்ளிகள் அரசின் பேச்சை கேட்பதில்லை, அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை தாண்டி பல மடங்கு வசூல் செய்கிறார்கள் என்று எழுந்த குற்ற சாட்டை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில், டெல்லி உயர் நீதிமன்றம், தேசிய தலைநகரில் உள்ள தனியார் உதவி பெறாத பள்ளிகளின் கட்டணத்தை மறுஆய்வு செய்ய, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதிபதி அனில் தேவ் சிங் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது. 1092 பள்ளிகளின் பதிவேடுகளை ஆய்வு செய்து 10 இடைக்கால அறிக்கைகளை இக்குழு வெளியிட்டுள்ளது. அக்குழு ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்  டெல்லியில் உள்ள 535 தனியார் உதவிபெறாத பள்ளிகளுக்கு பல ஆண்டுகளாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட ரூ.300 கோடி வரை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  இந்தப் பள்ளிகள் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டது. 

தனியார் பள்ளிகளின் லட்சணம் இவ்வாறு இருக்க தமிழ் நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் மட்டும் CSR மூலம் அரசு பள்ளிகளுக்கு உதவி செய்ய முன் வருவதாகவும் அதுவும் பெருந்தன்மையோடு முன் வருவதாகவும் தெரிவிக்கிறது..

CSR fund மூலம் உதவ வேண்டுமானால் குறைந்தது 5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்க வேண்டும், கம்பெனி சட்டம் சொல்லும் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்ன இந்தியாவில் உள்ள பள்ளிகள் charitable trust மூலமாக இயங்குவதாத்தான் தெரிகிறது.

ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் 500-1000 கோடி வருமானம் ஈட்டும் அல்லது 5- கோடி லாபம் ஈட்டும் கம்பெனி போல செயல்படுகிறது போல..?

உண்மையில் தனியார் பள்ளிகள் CSR fund மூலம் அரசு பள்ளிகளுக்கு எவ்வித உதவியையும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம். மேலும் தனியார் பள்ளி முதலாளிகளின் கூட்டமைப்பு அவ்வாறு அறிவிக்கவும் முடியாது...

ஒருவேளை அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் உண்மையெனில், அறிக்கையை வெளியிட்டது போல அந்த தீர்மாணத்தையையும் அவர்கள் வெளியிட வேண்டும்..

மாறாக அமைச்சர் ஆபத்தில் சிக்கி கொண்டார், தங்களின் திட்டம் வெளி வந்து விட்டது, புதிய கல்வி கொள்கையை திமுக அரசாங்கம் அமுல்படுத்துவது தெரிய வந்து விட்டது எனவே குறுக்கே புகுந்து ஒரு அறிக்கையை விட்டு அதுவும் CSR மூலம் உதவி செய்வதாகத்தான் கூறினோம் என்று மடை மாற்றுக்கிறார்கள்..

ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையெனில் இதற்கு முன்பு நீங்கள் CSR மூலம் செய்த project கள் எத்தனை, அது குறித்து உங்களுடைய கம்பெனி (பள்ளி) வெப்சைட்டில் இருக்குமல்லவா அதை பொது வெளியில் காட்டுங்கள்.

(எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்..

கருத்துப் பிழை, தகவல் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட தவற வேண்டாம்..)

- சிலம்பரசன் சே (முகநூலில்)

https://www.facebook.com/share/p/15pJfLuz4s/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு