ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டதால் தமிழுக்கு நேர்ந்த தீமைகள்
மகுடேஸ்வரன்

தமிழுக்கு எதிராக நிகழ்ந்துவிட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின? ஆங்கிலத்தை நாம் இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டதிலிருந்து தொடங்கின.
ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டதால் தமிழுக்கு எதிராக என்னென்ன தீமைகள் காலப்போக்கில் நேர்ந்தன ?
1. பேச்சு வழக்கில் எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் கலந்தன. பத்துக்குப் பத்தும் தமிழாகப் பேசிய பழக்கம் மறைந்து பத்துக்கு ஒன்றிரண்டு சொற்கள் ஆங்கிலமாய்க் கலந்தன. தற்காலத்தில் பத்துக்கு ஐந்து என்ற சரிகலப்பாக ஆங்கிலம் கலந்துள்ளது. தண்ணீர், சோறு கூட மறைந்து எங்கெங்கும் வாட்டர், ரைஸ் (புட்) தான்.
2. வட்டார வழக்கிற்கேயுரிய தூய மொழித்தன்மைகள் அழிந்து அவற்றிலும் ஆங்கிலச் சொற்கள் நுழைந்தன. ஊர்ப்புறத்தாரிடையே பேசும் பேச்சிலும் ஆங்கிலச் சொற்கள்.
3. தற்காலத் தமிழர்களிடையே எழுதும் செயல் முழுவதும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. அஞ்சலட்டையில், மடல்களில், அஞ்சல் பொட்டணங்களில் எழுதவேண்டிய முகவரியைக்கூட யாரும் தமிழில் எழுதுவதில்லை.
4. கணக்கெடுப்பதற்காகவோ / வேறு எதற்காகவோ ஒருவரின் பெயர் கேட்டு எழுதுகின்ற சிறுசெயல்களில்கூட ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றனர். தமிழில் எழுதுவதில்லை.
5. வணிகப் பெயர்ப் பலகைகள், அறிவிப்புச் சொற்கள் என எங்கெங்கும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. அங்கே கட்டாயமாக இருக்கவேண்டிய தமிழைக் காணவில்லை. பதிவு முறைகள், சுருக்கச் சொற்கள், திட்டங்களின் பெயர்கள் என எங்கெங்கும் ஆங்கிலம்.
6. எண்களை யாரும் தமிழில் சொல்வதில்லை. எல்லாருமே ஆங்கிலத்தில்தான் கூறுகின்றனர். எண்களைத் தமிழ் எழுத்தால் எழுதும் பழக்கம் அழிந்துவிட்டது. முப்பத்து ஆறாவது வட்டம் என்று எழுதுவதற்கு யார்க்கும் (எழுத்தாளர்கள் உட்பட) துணிவில்லை. 36 என்ற எண்ணைத்தான் எழுதுவார்கள்.
7. ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுவதுதான் பெருமை என்ற மயக்கம் ஏற்பட்ட பிறகு அனைத்துத் தரப்பினரின் பேச்சு வழக்கில் தமிழ்ச்சொற்கள் அனைத்தும் ஆங்கிலமாகிவிட்டன - மார்னிங் வரேன், கரெக்டாச் சொல்லு, இப்ப டைம் என்ன, ஒரு பிராப்ளம், சிக்கன் மட்டன், ஆனியன்.
8. எங்கும் ஆங்கிலம் எல்லாம் ஆங்கிலம் என்றானதால், தமிழ்வழிக் கல்வியைவிடவும் ஆங்கிலம் கற்றால்தான் ஆயிற்று என்னும் சூழ்நிலையை மக்கள் பார்ப்பதால் - தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்விக்குத்தான் அனுப்ப விரும்புகின்றனர். தனியார் பள்ளிகளில் குவிகின்றனர். அந்தச் சந்தையை உள்ளூர் வணிகர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.
9. ஆங்கிலத்தில்தான் கல்வியும் அமைந்துவிட்டதே, ஓரளவு ஆங்கிலம் புரிகிறதே என்றான பிறகு தமிழில் கல்வித்துறைகள், அறிவுத்துறை இயல்கள் வரவேற்பிழந்தன. ஆளில்லாத கூடாரங்கள் ஆயின. தமிழ்மாநிலத்தில் தமிழ்வழிக் கல்விக்கூடங்கள் ஆளின்றித் தத்தளிக்கின்றன. மொழியரசுக்கு வேண்டிய மொழிசார் அறிவுரைகள், பரிந்துரைகளை வழங்கும் தகுதியில் இன்று யார் உள்ளனர் ? எல்லாரும் ஆங்கிலத்தையும் படித்துக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறோம். நமக்குத் தமிழென்ன, ஆங்கிலமென்ன... இரண்டும் ஒன்று என்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டோமா ?
10. இந்தத் தேக்கத்தினால் தமிழில் வந்திருக்கவேண்டிய அறிவுத்துறைத் தமிழாக்கங்கள் எவையும் வரவில்லை. அல்லது மிகக்குறைவாகவே வருகின்றன. அவையும் தனிப்பட்டாரின் ஆர்வத்தினால் விளைந்திருக்கலாம். தமிழ்ச்சொல்லாக்கங்கள் நிகழவில்லை. பிறநாட்டு அறிவியல் பேரியல்கள் தமிழ்மொழிக்கு வரவேயில்லை. இத்தனைக்கும் அத்துறைகளில் தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். வாழ்வாங்கு வாழ்கின்றனர். ஆனால், அவர்களுடைய தாய்மொழியறிவு வீட்டுப் பேச்சோடு நின்றது. எளிய முறை எழுத்தறிவோடு நின்றது. தமிழ் மொழிக்கல்வியோ புலமையோ போதவில்லை. ஆர்வம் உண்டு, உணர்வு உண்டு, அடுத்து ஆற்றவேண்டியது என்ன, தெரியவில்லை.
ஆங்கிலத்தை ஏற்றுக் கற்றதால் முன்னேறி வாழ்கிறோம், மேம்படுகிறோம், உலகம் சுற்றுகிறோம் - உண்மைதான். ஆனால், உலகின் எல்லாத் திக்குகளிலும் வாழ்க்கை ஒன்றே போலத்தான் இருக்கிறது. பஞ்சு மெத்தை இருக்கைகளும் பத்து அறைகளும் கொண்ட மாடவீடுகள் மகிழுந்துகள் நமக்கு நிறைவு தந்துவிட்டனவா ? மொழியின் ஆணிவேர் அறுந்த சல்லிவேர்ச் சொற்களைக்கொண்டு வாழ்வதே மீத வாழ்க்கை என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?
அப்படித்தான் ஆங்கிலம் கற்றோமே, நமக்கு ஆங்கிலத்தில் அனைத்தும் கைவந்துவிட்டனவா ? சேக்சுபியரைப் படித்துப் புரிந்துகொள்ள முடிகிறதா ? நம்மிடையே நூல் எழுதும் ஆங்கில ஆசிரியர், மாணாக்கர் தோன்றிவிட்டாரா ? அவ்வாறு எழுதினாலும் அவற்றை ஆங்கிலப் புலத்தார் மதிக்கிறார்களா ?
மொழி மக்களாக நாம் தமிழில் ஏதேனும் செய்யவேண்டுமா ? ஆங்கிலத்தில் ஏதேனும் செய்யவேண்டுமா ? அல்லது இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய தாழ்வினில் நிற்கிறோமா ?
இந்தப் போக்கு தொடக்கத்தில் பெரும்போக்காகவில்லை. வெறும் முப்பது அல்லது நாற்பதாண்டுகட்கு முன்னர் பரவத் தொடங்கியது. ஆங்கிலத்தை மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்ட பின்பு தமிழ்க்குமுகாயம் அடைந்துள்ள இன்றைய நிலை பாரீர் !
ஆங்கிலத்தை (வேண்டா வெறுப்பாகவே இருக்கட்டும்) இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டது என்னவோ உண்மைதான், ஆனால் மெய் சொல்லுங்கள், அந்த ஆங்கிலம் இன்று நடைமுறையில் முதன்மொழியின் இடத்தைப் பிடித்துவிட்டதா இல்லையா ?
மகுடேஸ்வரன்
https://www.facebook.com/share/p/14qfj2u9pv/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு