தமிழ்நாட்டில் எதிர்ப்பு, கேரளாவில் ஆதரவு… கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம்… கொதிக்கும் அரசு ஊழியர் சங்க நிர்வாகி!

மின்னம்பலம்

தமிழ்நாட்டில் எதிர்ப்பு, கேரளாவில் ஆதரவு… கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடம்… கொதிக்கும் அரசு ஊழியர் சங்க நிர்வாகி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யக்கூடிய கேரள மாநிலத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கமும் அதை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த திட்டத்தை எதிர்ப்பதை முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் விமர்சனம் செய்துள்ளார். G overnment Employees Union question

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கேரள மாநிலத்தில் பட்ஜெட் தாக்கலின் போது, அம்மாநில் நிதியமைச்சர் பால கோபால் ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன்,

“தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அரசு ஊழியர்கள் ரகசிய உறுப்பினராகவும், ரகசிய கமிட்டி உறுப்பினராகவும் இருப்பார்கள். அப்படி தான் நானும் ரகசிய கமிட்டி உறுப்பினராக இருந்தேன்

இந்தசூழலில், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள், தமிழ்செல்வி தலைமையில் அரசு ஊழியர்கள் சங்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 2003-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததால் 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முடியவில்லை.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தோற்று பாஜக ஆட்சிக்கு வரும் வரை பழைய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருந்தது. திரிபுராவில் பாஜக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை சட்டமாக்கிய காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு  நடைபெற்ற கேரளா சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை கேரளாவில் அமல்படுத்தாமல், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ஆந்திரா போன்று உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் (Assured Pension Scheme) அமல்படுத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

கடந்த ஓராண்டாக உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தை கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மோசடி திட்டம் என்று எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது. கொள்கை வேறு, ஆட்சி வேறு இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டலில் செயல்படும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கங்கள், தலைமை செயலக சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த திமுக அரசுக்கு எதிராக உண்மையாக எப்படி போராட்டம் நடத்துவார்கள்?

இவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்துவது என்பது அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம்” என்கிறார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான மயில் மற்றும் மணிமேகலை இருவரையும் பல முறை தொடர்புகொண்டோம். அவர்கள் போனை எடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர்கள் விளக்கமளித்தால் அந்த செய்தியும் வெளியிடப்படும்.

(செல்வம்)

https://minnambalam.com/political-news/government-employees-union-asks-question-to-cpm/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு