கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின்

மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த வாழக்கை வரலாற்று சுருக்கம் - முதல் பகுதி

கார்ல் மார்க்ஸ் பற்றி லெனின்

கார்ல் மார்க்ஸ் (ரைனிஷ் பிரஷ்யாவிலுள்ள) டிரியர் நகரில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று பிறந்தார். அவரது தகப்பனார் ஒரு வழக்குரைஞர், ஒரு யூதர்; 1824ம் ஆண்டில் புரோட்டஸ்டென்ட் மதத்தில் சேர்ந்தார். இக் குடும்பம் வசதியான நிலையில் இருந்தது; நாகரிகப் பண்பாடு மிக்கதாய் இருந்தது. ஆனால் புரட்சி மனப்பான்மை கொண்டதல்ல. டிரியர் நகரில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு சட்ட இயலைப் படிப்பதற்காக மார்க்ஸ் முதலில் பான் பல்கலைக்கழகத்திலும் பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஆனால் முக்கியமாய் வரலாறும் தத்துவஞானமும் பயின்றார். 1841ம் ஆண்டில் படிப்பை முடித்து. எபிக்கூரஸ் தத்துவஞானத்தைப் பற்றி பல்கலைக்கழகப் பட்டத்திற்கு வேண்டிய தமது ஆராய்ச்சியுரையைச் சமர்ப்பித்தார். அந்தக் காலத்தில் தமது கருத்துப் போக்குகளில் மார்க்ஸ் ஹெகல் வகைப்பட்ட கருத்துமுதல்வாதியாக இருந்தார்.(புரூனோ பௌவர் என்பவரும் மற்றவர்களும் சேர்ந்திருந்த) ''இடதுசாரி ஹெகல்வாதிகளின்' குழுவில் மார்க்ஸும், பெர்லினில் இருக்கையில், சேர்ந்திருந்தார். ஹெகலுடைய தத்துவஞானத்திலிருந்து நாத்திக முடிவுகளுக்கும் புரட்சிகரமான முடிவுகளுக்கும் வர இந்தக் குழுவினர் முயன்று வந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மார்க்ஸ் பான் நகருக்குச் சென்றார். பேராசிரியராய்ப் பணியாற்றலாம் என்று நினைத்துத்தான் அவர் அங்குச் சென்றார். ஆனால் ஜெர்மன் அரசாங்கத்தின் கொள்கை பிற்போக்கானதாக இருந்தது. 1832ல் அது லுத்விக் ஃபாயர்பாகைப் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கியது: மீண்டும் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு 1836ல் அவர் திரும்பி வருவதை அனுமதிக்க மறுத்துவிட்டது. இளம் பேராசிரியராகிய புரூனோ பௌவர் பான் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தாதபடி அது 1841ல் தடை செய்தது. இந்தப் பிற்போக்கான கொள்கையின் காரணமாக, மார்க்ஸ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றலாம் என்ற கருத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல்வாதக் கருத்துக்கள் ஜெர்மனியில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. குறிப்பாக 1836ம் ஆண்டுக்குப் பின் லுத்விக் ஃபாயர்பாக் இறையியலை விமர்சிக்கவும் பொருள்முதல்வாதத்தின் பக்கம் திரும்பவும் தொடங்கினார். 1841ல் அவரிடம் பொருள்முதல்வாதம் மேலோங்கி விட்டது (அவர் எழுதிய கிறித்தவ மதத்தின் சாரம் என்ற நூலைப் பார்க்க). எதிர்காலத் தத்துவஞானத்தின் கோட்பாடுகள் என்று தலைப்பிட்ட அவருடைய நூல் 1843ல் வெளியாயிற்று. இந்த நூல்களைப் பற்றி எங்கெல்ஸ் பின்னால் எழுதும் போது, இவை "தளை அறுத்து விடுவிப்பனவாய் இருந்ததை அவரவர் தாமே அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்" என்று எழுதினார். "நாங்கள் எல்லோரும்'' (அதாவது, மார்க்ஸ் உள்ளிட்ட இடதுசாரி ஹெகல்வாதிகள்) "உடனே ஃபாயர்பாக்வாதிகளானோம்'' என்கிறார் எங்கெல்ஸ். அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல்வாதிகளுடன் சில விஷயங்களில் நெருங்கியிருந்த தீவிரவாத ரைனிஷ் முதலாளித்துவக் கருத்தினர் (பூர்ஷ்வாக்கள்) கொலோன் நகரில் ஓர் எதிர்க்கட்சிப் பத்திரிகையை நிறுவினர். அதன் பெயர் ரைனிஷ் ஜைடுங் என்பதாகும் (1842 ஜனவரி 1ம் தேதி அதன் முதல் இதழ் வெளியாயிற்று). அதில் முக்கிய விஷயதானம் அளிப்பவர்களாக இருக்கும்படி மார்க்ஸும் புரூனோ பௌவரும் அழைக்கப்பட்டார்கள். 1842 அக்டோபர் மாதத்தில் மார்க்ஸ் அதன் தலைமை ஆசிரியராகி பான் நகரிலிருந்து கொலோன் நகருக்குப் போனார். மார்க்ஸ் ஆசிரியராய் இருந்த போது அந்தப் பத்திரிகையின் புரட்சிகரமான ஜனநாயகப் போக்கு மேலும் மேலும் வெளிப்படையாயிற்று. அரசாங்கம் அந்தப் பத்திரிகையை இரட்டைத் தணிக்கைக்கும் மும்முறைத் தணிக்கைக்கும் முதலில் உட்படுத்தி, பிறகு 1843 ஜனவரி 1ம் தேதியன்று அதை அடியோடு தடை செய்து விடுவதென்று முடிவு செய்தது. அந்தத் தேதிக்கு முன்பே மார்க்ஸ் தமது ஆசிரியர் பதவியை விட்டு விலக வேண்டியதாயிற்று. ஆனால் அவர் விலகியுங்கூட அந்தப் பத்திரிகையைக் காப்பாற்ற முடியவில்லை. 1843 மார்ச் மாதத்தில் அது மூடப்பட்டுவிட்டது. ரைனிஷ் ஜைடுங்குக்கு மார்க்ஸ் எழுதிய முக்கியமான கட்டுரைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளோடு கூட (பார்க்க: நூல் பட்டியல்): மோசெல் பள்ளத்தாக்கில் திராட்சை பயிரிடும் விவசாயிகளின் நிலைமையைப் பற்றிய ஒரு கட்டுரையையும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். பத்திரிகை வேலை, அரசியல் பொருளாதாரத் துறையில் அவருக்குப் போதிய பழக்கம் இல்லை என்று மார்க்ஸுக்குக் காட்டியது. அவர் அதைக் கண்ணுங்கருத்துமாகப் பயில்வதிலே முனைந்தார்.

1843ம் ஆண்டில் கிரைட்ஸ்நாக் நகரில் ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலென் என்ற மங்கையை மார்க்ஸ் மணம் புரிந்தார். பிள்ளைப் பிராயத்திலேயே அவ்விருவரும் நண்பர்களாக இருந்தவர்கள்; மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்திலேயே இருவரும் மண உறுதி ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் மனைவியார் பிரஷ்யப் பிரபுத்துவ வம்சத்தின் ஒரு பிற்போக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தமையனார் மிகப் பிற்போக்கான கட்டமான 1850-58ல் பிரஷ்யாவின் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். 1843 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பாரிஸ் நகருக்குச் சென்றார். ஆர்னால்ட் ரூகே (பிறப்பு 1802, மறைவு 1880; ஓர் இடதுசாரி ஹெகல்வாதி: 1825-30ல் சிறைவாசம்; 1848க்குப் பின் அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டவர்; 1866-70க்குப் பின் பிஸ்மார்க்கின் ஆதரவாளர்) என்பவருடன் சேர்ந்து தீவிரப் போக்குள்ள ஒரு சஞ்சிகையை வெளிநாட்டில் வெளியிடுவதற்காகத்தான் மார்க்ஸ் பாரிஸுக்குப் போனார். டேய்ச்-பிரான்சோசிஷ் யார்பூகர் என்ற இந்தச் சஞ்சிகையின் முதல் இதழ் மட்டும்தான் வெளியாயிற்று. ஜெர்மனியில் இரகசியமாக அந்தச் சஞ்சிகையை வினியோகம் செய்வதிலிருந்த கஷ்டத்தின் காரணமாகவும், ரூகேயுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாகவும் அந்தச் சஞ்சிகை நிறுத்தப்பட்டது. அதில் மார்க்ஸ் வரைந்த கட்டுரைகளில் அவர் ஏற்கெனவே ஒரு புரட்சியாளராகக் காணப்படுகிறார்.'' ஆயுதங்களின் விமர்சனம் அடங்கலாய் "நடப்பில் இருந்து வருகிற எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்ய வேண்டும்" என்று வாதிக்கிறார். பொது மக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்.

1844 செப்டம்பர் மாதத்தில் ஃபிரீட்ரிஹ் எங்கெல்ஸ் சில நாட்கள் தங்குவதற்கு என்று பாரிஸுக்கு வந்தார். அது முதலாய் அவர் மார்க்ஸின் உயிருக்குயிரான நண்பரானார். பாரிஸில் இருந்த புரட்சிகரக் குழுக்களின் கொந்தளிப்பான அன்றைய வாழ்வில் இருவரும் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டார்கள் (அந்நாளில் புருதோனின் போதனை சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது: 1847ல் வெளிவந்த மெய்யறிவின் வறுமை என்ற தமது நூலிலே மார்க்ஸ் இதைத் தகர்த்தெறிந்தார்). சிறு முதலாளித்துவ சோஷலிஸத்தின் பல்வேறு போதனைகளைத் தீவிரமாக எதிர்த்துப் போர் புரிந்தபடியே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க சோஷலிஸத்தின் அல்லது கம்யூனிஸத்தின் (மார்க்ஸியத்தின்) தத்துவத்தையும் போர்த்தந்திரங்களையும் உருவாக்கினார். நூல்பட்டியலில் 1844-48 காலப் பகுதியைச் சேர்ந்த மார்க்ஸின் நூல்களைப் பார்க்க. பிரஷ்ய அரசாங்கத்தின் உறுதியான கோரிக்கையின் பேரில் மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ல் பாரிஸ் நகரிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பிரஸ்ஸெல்ஸ் நகரம் போய்ச் சேர்ந்தார். 1847 வசந்த காலத்தில் மார்க்ஸும் எங்கெல்ஸும் "கம்யூனிஸ்டுச் சங்கம் என்ற இரகசியமான பிரச்சார சங்கத்தில் சேர்ந்தார்கள். (லண்டன் மாநகரில் 1847 நவம்பர் மாதத்தில் நடந்த) அச்சங்கத்தின் இரண்டாம் பேராயத்தில் இருவரும் மிக முக்கியமான பங்கு கொண்டு, அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் புகழ் பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை எழுதி முடித்தனர். அது 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியாயிற்று. இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும் ஒளிச் சிறப்புடனும் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விவரிக்கிறது; சமுதாய வாழ்வுத் துறையையும் அணைத்து நிற்கும் முரணற்ற பொருள்முதல்வாதம். வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமையான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய, கம்யூனிஸ்ட் சமுதாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, புரட்சிகரமான பாத்திரத்தைப் பற்றியும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலகக் கண்ணோட்டத்தில் அடங்கியவை.

1848 பிப்ரவரி புரட்சி மூண்ட போது மார்க்ஸ் பெல்ஜியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பாரிஸுக்குத் திரும்பி வந்து, மார்ச் மாதப் புரட்சிக்குப்' பிறகு அங்கிருந்து ஜெர்மனிக்கு, கொலோன் நகருக்குப் போனார். அங்கே 1848 ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து 1849 மே பத்தொன்பதாம் தேதிவரை நியூ ரைனிஷ் ஜைடுங் என்ற பத்திரிகை வெளியாகியது. மார்க்ஸ்தான் அதன் தலைமை ஆசிரியர். 1848-49ம் ஆண்டுகளில் நடந்த புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு இப்புதிய தத்துவத்தை மிகச் சிறந்த முறையில் நிரூபித்து உறுதிப்படுத்தியது. அதே போல் அக்காலம் முதல் எல்லா உலக நாடுகளிலும் நிகழ்ந்த பாட்டாளி வர்க்க, ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் அதை மெய்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளன. வெற்றி பெற்ற எதிர்ப்புரட்சி முதலில் மார்க்ஸ் மீது வழக்குத் தொடரத் தூண்டிவிட்டது (1849 பிப்ரவரி 9ம் தேதி வழக்கு தள்ளப்பட்டது); பிறகு அவரை ஜெர்மனியிலிருந்து (1849 மே 16ம் தேதியன்று) நாடுகடத்தியது. மார்க்ஸ் முதலில் பாரிஸுக்குச் சென்றார். அங்கே 1849 ஜூன் 13ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் மீண்டும் நாடுகடத்தப்பட்டார். பிறகு அவர் லண்டன் நகருக்கு வந்தார். மறைவெய்தும் நாள்வரை அவர் லண்டனிலேயே வாழ்ந்து வந்தார்.

அரசியலுக்காக நாடுகடத்தப்பட்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடுமையானது. (1913ல் வெளியான) மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதப்போக்குவரத்து' இதைத் தெளிவாகக் காட்டுகிறது. மார்க்ஸும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். எங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார். மேலும் சிறு முதலாளித்துவ போக்கான சோஷலிஸத்தின், பொதுவாகவே பாட்டாளி வர்க்கச் சார்பற்ற சோஷலிஸத்தின் போதனைகளும் தத்துவப் போக்குகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலைமையில் மார்க்ஸ் ஓர் இடையறாத, ஈவிரக்கமற்ற போர் நடத்திக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திருக்கப்பட்டார்; சில சமயங்களில் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக, வெறித்தனமாக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும்படியான தாக்குதல்களையும் (Herr Vogt)10 அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. அரசியலுக்காக நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் வட்டாரங்களிலிருந்து ஒதுங்கி இருந்து கொண்டு மார்க்ஸ் தமது பொருள்முதல்வாதத் தத்துவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களில் (பார்க்க: நூல் பட்டியல்) விவரித்தார்; அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவதில் முதன்மையாகத் தமது முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இந்த விஞ்ஞானத்தை மார்க்ஸ் புரட்சிகரமானதாக்கினார் ("மார்க்ஸின் போதனை" என்கிற பகுதியைக் கீழே பார்க்க.) அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு (1859) என்ற நூல் வாயிலாகவும், மூலதனம் (முதல் தொகுதி. 1867) என்ற நூல் வாயிலாகவும் இதைச் செய்தார்.

1850-60 வருடங்களின் இறுதிக் காலமும் 1860-70க்கு இடைப்பட்ட காலகட்டமும் ஜனநாயக இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கிய ஆண்டுகளாகும். அது மார்க்ஸை மறுபடியும் நடைமுறை இயக்க வேலைகளில் ஈடுபடும்படி செய்தது. 1864ல் (செப்டம்பர் 28ம் தேதி) லண்டன் நகரில் "சர்வதேசத் தொழிலாளர் சங்கம்” - இதுதான் புகழ்பெற்ற முதலாவது அகிலம் - நிறுவப்பட்டது. மார்க்ஸ் இச்சங்கத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் விளங்கினர். அதன் முதல் அறிக்கையையும் எண்ணற்ற தீர்மானங்களையும், பிரகடனங்களையும். கொள்கையறிக்கைகளையும் அவர்தான் வரைந்தார். பல்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியும் (மாஜினி, புருதோன், பக்கூனின், இங்கிலாந்திலுள்ள மிதவாதத் தொழிற்சங்கவாதம், ஜெர்மனியில் லஸ்ஸால்வாதிகளின் வலதுசாரிப் பக்கமான ஊசலாட்டங்கள் முதலான) பாட்டாளி வர்க்க ரீதியில் அமையாத, மார்க்ஸுக்கு முந்திய சோஷலிஸத்தின் பல்வேறு வடிவங்களைக் கூட்டு நடவடிக்கைப் பாதையில் வழிநடத்திச் செல்ல முயற்சித்தும், இந்தப் பிரிவுகள், போக்குகள் ஆகிய யாவற்றின் தத்துவங்களையும் எதிர்த்துப் போராடியும். பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கு ஒரே மாதிரியான போர்த்தந்திர முறைகளை மார்க்ஸ் உருவாக்கினார். பாரிஸ் கம்யூன்" வீழ்ச்சியுற்றதை (1871) அடுத்தும்— இக்கம்யூனைப் பற்றி மார்க்ஸ் மிகவும் ஆழமாகவும், தெட்டத்தெளிவாகவும், ஒப்பற்றவாறும், பயன்மிக்கதான புரட்சிகரப் பகுத்தாராய்வை அளித்தார் (1871ல் வெளிவந்த பிரான்ஸில் உள்நாட்டுப் போர் என்ற நூலில்)-பக்கூனின்வாதிகள்! முதலாவது அகிலத்தைப் பிளவுபடுத்தியதை அடுத்தும் இச்சங்கம் ஐரோப்பாவில் இருந்து வரச் சாத்தியமில்லாமற் போயிற்று. (1872ல்) ஹேக் நகரில் நடந்த அதன் பேராயக் கூட்டத்துக்குப் பிறகு மார்க்ஸ் அதன் பொதுக்குழு (ஜெனரல் கவுன்சில்) நியூயார்க் நகருக்கு மாற்றப்படும்படி செய்தார். முதலாவது அகிலம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை நிறைவேற்றிவிட்டது. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கம் அளவிடற்கரிய முறையில் மாபெரும் வளர்ச்சி பெறும் காலப்பகுதிக்கு அது வழிகோலிவிட்டது. இந்தக் காலப்பகுதி உண்மையிலே தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வளர்ந்த காலப்பகுதியாகும்; தனித்தனி தேசிய அரசுகளில் திரளான சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சிகள் நிறுவப்பட்ட காலப்பகுதியாகும்.

அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய கடுமையான பணியும், அதைவிடக் கடுமையாக அவர் தத்துவத் துறையில் ஆற்றிய பணியும் அவருடைய உடல்நிலையை அடியோடு பலவீனப் படுத்திவிட்டன. அவர் அரசியல் பொருளாதாரத்துக்குப் புத்துரு அளித்திடும் பணியையும், மூலதனத்தை எழுதி முடிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஏராளமான புதிய விவரங்களைச் சேகரித்தார். பல மொழிகளை (எடுத்துக் காட்டாக, ருஷ்ய மொழியை) பயின்று/வந்தார். ஆனால் அவரது மோசமான உடல்நிலை மூலதனத்தை முடிக்க முடியாதபடி தடுத்துவிட்டது. 1881ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதியன்று அவருடைய மனைவியார் காலமானார். 1883 மார்ச்சு 14ம் தேதியன்று நாற்காலியில் சாய்ந்தவாறே அமைதியோடு மார்க்ஸ் இயற்கை எய்தினார். லண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அவர் தம் மனைவியாருடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் கொடிய வறுமையால் அவர் குடும்பம் அல்லலுற்ற காலத்தில் மார்க்ஸின் குழந்தைகளில் சில இறந்து போயின. மூன்று புதல்வியர் ஆங்கிலேய, பிரெஞ்சு சோஷலிஸ்டுகளை மணந்து கொண்டனர். இப்புதல்வியர் வருமாறு: எலியனோர் ஏவ்லிங், லௌரா லபார்க், ஜென்னி லொங்கே. ஜென்னி லொங்கேயின் மகன் பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியின் அங்கத்தினராக இருக்கிறார்.

- வி.இ.லெனின்

(1914 - ஜூலை நவம்பரில் எழுதப்பெற்றது, நூல்திரட்டு, தொகுதி 26, பக்கங்கள் 43- 81லிருந்து)

(தொடரும்...)

அடுத்த பகுதியை படிக்க: கார்ல் மார்கஸ் பற்றி லெனின் - பகுதி 2