ஒற்றுமை குறித்து - லெனின்

ஒற்றுமை என்பது மாபெரும் விசயம்; அதுமட்டுமல்ல, மகத்தான முழக்கமாகவும் இருக்கிறது. பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு மார்க்சியவாதிகளின் ஒற்றுமை அவசியத் தேவை; மாறாக மார்க்சியவாதிகளுக்கும், மார்க்சியத்துக்கும், அதன் எதிரிகளுக்கும் புரட்டல்வாதிகளுக்கும் இடையில் ஒற்றுமை என்பது தேவையில்லை.

ஒற்றுமை குறித்து - லெனின்
Lenin's AI image : Lingam Deva

பாரபட்சமற்றது, நடுநிலையானதென்று தானே அறிவித்துக்கொள்ளும் போர்பா பத்திரிக்கையின் மூன்று பதிப்புகள், புனித பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஒற்றுமைக்காக போராடுவதே இந்த பத்திரிக்கையின் முத்மையான நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒற்றுமை யாரோடு? கலைப்புவாதிகளோடாம்?! கலைப்புவாதிகளோடு ஒற்றுமை பேணுவதை நியாயப்படுத்தி போர்பாவின் கடைசி பதிப்பில் இரு கட்டுரைகள் உள்ளன. 

முதல் கட்டுரை நன்கறியப்பட்ட கலைப்புவாதியான ஒய்.லாரினால் (Larin.Y) எழுதப்பட்டுள்ளது. 

இதே லாரின் கலைப்புவாத பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் இவ்வாறு எழுதினார்: 

“முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பாதையில் பலாத்காரமான புரட்சி ஏதுமின்றி நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும்… இனி வரக்கூடிய காலங்களில் ‘புரட்சிக்காக’ அல்லாமல் ‘புரட்சியை’ எதிர் நோக்காமல்தான், உழைக்கும் வர்க்கத்தை அமைப்பு ரீதியாக அணிதிரட்ட வேண்டும் என்ற மையமான கருத்தை பரந்துபட்ட அளவில் கொண்டு செல்வதே உடனடியான பணியாக இருக்கிறது…”

 

போர்பாவில் எழுதும்போது இதே கலைப்புவாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார்; அது ‘கூட்டமைப்பு’ என்ற வடிவத்தையும் எடுக்கவேண்டும் என்று முன்மொழிகிறார். 

சம உரிமைகளை அனுபவிக்கும் அமைப்புகளுக்கு இடையிலான உடன்படிக்கையையே ‘கூட்டமைப்பு” என்பது குறிக்கின்றது. இவ்வாறு, பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரங்களை தீர்மானிக்கும் விசயத்தில், “உரிமைகளை விட்டுத்தராத முழக்கங்களுக்காக” நிற்கும் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பத்தையும், மேலே காட்டப்பட்ட மேற்கோளுடன் கூடுதலாகாவோ (அ) குறைவாகவோ ஒத்துப்போகும் கண்ணோட்டங்களைக் கொண்ட கலைப்புவாதிகளின் மிகச் சொற்பமான குழுக்களின் விருப்பத்தையும், சம மதிப்புடையதாக கருதவேண்டுமென கோருகிறார். கலைப்புவாதி லாரினின் சதித்தனமான திட்டத்தின்படி, செவர்னயா ரபோச்சியா பத்திரிக்கையினை நடத்தும் கலைப்புவாதிகளின் ஒப்புதலைப் பெறும் வரையில் பெரும்பான்மை தொழிலாளர்கள் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்க உரிமையற்றவர்களாக இருக்கவேண்டுமாம். 

தொழிலாளர்கள் கலைப்புவாதிகளை நிராகரித்துள்ளனர்; ஆனால், ‘கூட்டமைப்பு’ என்ற வழிமுறை மூலம் தொழிலாளர்கள் மீதான தங்களின் தலைமைப் பாத்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தற்போது, கலைப்புவாதி லாரினின் சதித்திட்டமாக இருக்கிறது. லாரினால் முன்மொழியப்படும் ‘கூட்டமைப்பு’ என்பது பாட்டாளி வர்க்க இயக்கத்தால் நிராகரிக்கப்பட்ட கலைப்புவாதிகளின் விருப்பத்தை தொழிலாளர்கள் மீது திணிக்கும் ஒரு புதிய முயற்சியே ஆகும். "நாங்கள் வாசல் வழியாக வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை, ஆதலால் சன்னல் வழியாக வலிந்து நுழைவோம்" என்பதும், “கூட்டமைப்பு மூலம் ஒற்றுமை” என்பதற்கு அறைகூவல் விடுப்போம் என்பதும்தான் கலைப்புவாதிகளது தரப்பு காரணங்களாக முன்வைக்கப்  படுகிறது; உண்மையில் இவை பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பத்தை மீறுவதாக இருக்கிறது. 

போர்பாவின் பதிப்பாசிரியர்கள் லாரினோடு உடன்படவில்லை. மார்க்சிய வாதிகளையும், கலைப்புவாதிகளையும் சம அந்தஸ்துள்ள, சம மதிப்புள்ள கட்சியாக (தரப்பாக) ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு  இடையில் படிப்படியாக ஏற்படும் ஒற்றுமை அதாவது கூட்டமைப்பு பற்றிய கோட்பாடு  அவர்களுக்கு திருப்திகரமானதாக இருக்கவில்லை. 

அவர்கள் விரும்புவது, கலைப்புவாதிகளுடன் உடன்படிக்கை அல்ல; மாறாக, “செயல்தந்திரம் பற்றிய பொது முடிவுகளின் அடிப்படையில்” அமைந்த ஒரு புதிய கலவையாகும்; அதாவது புட் ப்ராவ்தி (Put Pravdy-வாய்மையின் வழி) பத்திரிக்கையின் செயல்தந்திர வழியில் அணிதிரண்டுள்ள மிகப் பெரும்பான்மையினரான தொழிலாளர்கள் தங்களின் சொந்த முடிவுகளை, கலைப்புவாதிகளுடனான பொது செயல்தந்திர நலன் கருதி கைவிட வேண்டுமாம்.

 

கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் பரிசோதிக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டு வர்க்க உணர்வுகொண்ட தொழிலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட செயல்தந்திரங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதே போர்பா பதிப்பாசிரியர்களின் கருத்தாக இருக்கிறது. ஏன்? கலைப்புவாதிகளின் செயல்தந்திர திட்டங்களுக்கும், தொழிலாளர்களாலும், ஒட்டுமொத்த நிகழ்வுப் போக்குகளாலும் நிராகரிக்கப்பட்ட கண்ணோட்டங்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கே. 

கலைப்புவாதிகளுடனான ஒற்றுமை பற்றி போர்பாவின் பதிப்பாசிரியர்கள் பேசிவருவதெல்லாம், வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களின் கண்ணோட்டங்கள், முடிவுகள், விருப்பங்களை ஒரேயடியாக நிராகரிப்பதைத்தான் அடிப்படையாக கொண்டுள்ளது. 

தொழிலாளர்களின் விருப்பம் தெளிவாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் எவ்வகையான செயல்தந்திரங்களை ஆதரித்து நிற்கிறார்கள் என்பதை மனநலம் பாதிக்கப்படாத எவர் ஒருவரும் கூற இயலும். ஆனால் கலைப்புவாதி லாரின் இந்த இடத்தில்தான் தலையிட்டு இவ்வாறு சொல்கிறார்: பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் வழியிலிருந்து விலகி, கலைப்புவாத குழுக்களின் விருப்பமும், வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களின் விருப்பமும் ஒரே மதிப்புடையது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலைப்புவாதியை தொடர்ந்து போர்பாவிலுள்ள ஒரு சமரசவாதி இவ்வாறு சொல்கிறார்: தொழிலாளர்கள் தாங்களாகவே திட்டவட்டமான செயல்தந்திரங்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த போராடுகிறார்களா? இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; அவர்கள் கலைப்புவாதிகளுடனான பொது செயல்தந்திர முடிவுகளின் நலன் கருதி, இந்த பரிசோதிக்கப்பட்ட செயல்தந்திரங்களை கைவிடவேண்டும்.  

போர்பாவின் சமரசவாதிகள், ஒற்றுமை என்ற பெயரில், தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பத்தை நிராகரிக்கிறார்கள்; ஒற்றுமை என்ற பெயரில் கலைப்புவாதிகளின் சம உரிமையை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இந்த பெரும்பான்மை மீறலை முன்வைக்கிறார்கள்.  

ஆனால் ஒற்றுமை என்பது இதுவல்ல, இது ஒற்றுமையை இழிவுபடுத்துவதாகும், தொழிலாளர்களின் விருப்பத்தை இழிவுபடுத்துவதாகும். 

மார்க்சியவாத தொழிலாளர்கள் சொல்கிற ஒற்றுமை இதுவல்ல. 

பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பத்தை மறுக்கும் நபர்களோடு, பாட்டாளி வர்க்க இயக்கத்தினை கலைக்கும் பிளவுவாதிகளோடு, தாராளவாத தொழிற்சங்க அரசியல்வாதிகளோடு, ஒற்றுமையோ கூட்டமைப்போ (அ) மற்ற எதுவுமோ இருக்க முடியாது. கலைப்புவாதிகளை சார்ந்து நில்லாமலும், அவர்களிடமிருந்து விலகியும் நின்று உரிமைகளை விட்டுத்தராத முழக்கங்களுக்காகவும், மார்க்சியத்தை கோட்பாட்டிலும், நடைமுறையிலும் முழுமையாக உயர்த்திப் பிடிப்பவர்களுக்கு மத்தியிலும், உண்மையான, உறுதியான மார்க்சியவாதிகளுக்கு மத்தியிலும்தான் ஒற்றுமை என்பது இருக்க முடியும், இருக்கவேண்டும். 

 

ஒற்றுமை என்பது மாபெரும் விசயம்; அதுமட்டுமல்ல, மகத்தான முழக்கமாகவும் இருக்கிறது. பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு மார்க்சியவாதிகளின் ஒற்றுமை அவசியத் தேவை; மாறாக மார்க்சியவாதிகளுக்கும், மார்க்சியத்துக்கும், அதன் எதிரிகளுக்கும் புரட்டல்வாதிகளுக்கும் இடையில் ஒற்றுமை என்பது தேவையில்லை.  

ஒற்றுமை குறித்து பேசும் அனைவரிடமும் நாம் கண்டிப்பாக கேட்க வேண்டும்; ஒற்றுமை யாரோடு? கலைப்புவாதிகளோடா? அப்படியெனில் ஒருவருக்கொருவர் எவ்வித தொடர்பும் கொள்ளத் தேவையில்லை. 

ஆனால், நேர்மையான மார்க்சியவாதிகளது ஒற்றுமை பற்றிய கேள்வி எனில், நாம் சொல்வோம்: பிராவ்தா பத்திரிக்கைகள் உதித்த காலம் தொட்டு, அனைத்து மார்க்சிய சக்திகளின் ஒற்றுமைக்காகவும், கீழிருந்து மேல்வரையான ஒற்றுமைக்காகவும் நடைமுறை செயல்பாடுகளின் ஒற்றுமைக்காகவும் நாம் அறைகூவல் விடுத்து வருகிறோம். 

கலைப்புவாதிகளோடு கைகுலுக்கத் தேவையில்லை; மார்க்சிய அமைப்பை சீர்குலைக்கும் குழுக்களோடு பேச்சுவார்த்தை தேவையில்லை; ஒட்டுமொத்த மார்க்சிய கோட்பாடுகளையும், நடைமுறையையும்  மையப்படுத்தி, மார்க்சிய முழக்கங்களை மையப்படுத்தி மார்க்சிய தொழிலாளர்களை அணிதிரட்டுவதிற்கு வேண்டிய எல்லா முயற்சிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். எந்த வகையிலாவது கலைப்புவாதிகளின் விருப்பங்கள் தங்கள் மீது திணிக்கப்படுவதை வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் ஒரு குற்றமாக கருதுவார்கள்; மேலும் உண்மையான மார்க்சிய சக்திகள் துண்டாடப்படுவதையும் ஒரு குற்றமாகவே கருதுவார்கள். 

பாட்டாளி வர்க்க கூட்டு கட்டுப்பாடு, பெரும்பாண்மையினரின் விருப்பங்களை அங்கீகரித்தல், அதோடு அப்பெரும்பான்மையினரின் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொருவரும்  ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் ஒற்றுமைக்கு அடிப்படையாகும். இத்தகையதொரு, ஒற்றுமைக்காக, கட்டுப்பாட்டிற்காக, ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்காக அனைத்து தொழிலாளர்களிடமும் அறைகூவல் விடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம். 

புட் ப்ராவ்தி 59,  

April 12, 1914 

LCW Vol 20, பக்- 230-232