"ஒன்றுகலத்தல்" என்பது பற்றிய தேசியவாதப் பூச்சாண்டி

லெனின்

"ஒன்றுகலத்தல்" என்பது பற்றிய தேசியவாதப் பூச்சாண்டி

ஒன்றுகலத்தலைப் பற்றிய பிரச்சினை, அதாவது தேசிய இனத் தனியியல்புகளை இழந்து வேறொரு தேசிய இனமாக மாற்றமுறுவது பற்றிய பிரச்சினை, புந்துக்காரர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் உரிய தேசியவாத ஊசலாட்டங்களின் விளைவுகளை எடுப்பாகத் தெரியச் செய்கிறது.

திரு. லீப்மன் புந்துக்காரர்களது வழக்கமான வாதங்களை அல்லது தந்திரங்களை என்றால் பொருத்தமாயிருக்கும் விசுவாசத்துடன் - தெரிவித்தும் திருப்பிக் கூறியும் வருகிறவர். குறிப்பிட்ட ஒரு நாட்டின் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுபட்ட தொழிலாளர் நிறுவனங்களில் ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டுமென்ற கோரிக்கையானது (ஸேவெர்னயா பிராவ்தா கட்டுரையின் முடிவுப் பகுதியைப் பார்க்கவும்) "ஒன்றுகலத்தலாகிய பழைய கதையே'' ஆகும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஸேவெர்னயா பிராவ்தா கட்டுரையின் முடிவுப் பகுதி குறித்துக் கருத்துரைக்கும் திரு. லீப்மன், ”ஆகவே, நீங்கள் எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்று கேட்தும் தொழிலாளியானவர், நான் சமூக-ஜனநாயகவாதி என்றே பதிலளிக்க வேண்டும்” என்பதாகக் கூறுகிறார்.

நமது புந்துக்காரர் இதனை மிக உயர்ந்த கிண்டலாகக் கருதுகிறார். ஆனால் உண்மையில் அவர், ”ஒன்று கலத்தலைப்'" பற்றிய இம்மாதிரியான கிண்டல்களையும் கூச்சல்களையும் முரணற்ற ஜனநாயக கோஷமும் மார்க்சிய கோஷமுமான ஒன்றுக்கு எதிராகக் குறிபார்த்து எழுப்புவதன் மூலம் தம்மைத் தாமே அறவே அம்பலப்படுத்திக் கொண்டு விடுகிறார்.

வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப் பிரச்சினையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று: தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா விதமான தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும். இரண்டாவது: எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும்.

இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகு தழுவிய விதியாகும். முன்னது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது முதிர்ச்சியடைந்து சோஷலிச சமூகமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும். மார்க்சியவாதிகளது தேசிய இன வேலைத்திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின் வருவனவற்றுக்காகப் பாடுபடுகிறது: முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்த விதமான தனியுரிமைகளும் அனுமதிக்கப்படலாகாது என்பதற்காகவும் (மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் இது பற்றிப் பிற்பாடு தனியே பரிசீலிப்போம்); இரண்டாவதாக, சர்வதேசியவாதம் என்னும் கோட்பாட்டுக்காகவும், பூர்ஷ்வா தேசியவாதத்தால் மிகமிக நயமானதாலுங்கூட - பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவும்.

"ஒன்றுகலத்தலை” எதிர்த்து நமது புந்துக்காரர் விண்ணதிரக் கத்துவதன் அர்த்தம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதையோ, எந்த ஒரு தேசிய இனத்துக்குமான தனியுரிமைகளையோ இங்கு அவர் மனதில் கொண்டிருக்க முடியாது, ஏனென்றால், "ஒன்றுகலத்தல்'' என்னும் சொல் இங்கு சிறிதும் பொருந்தாது; மேலும் எல்லா மார்க்சியவாதிகளும், தனிப்பட்ட முறையிலும் அதிகார பூர்வமாக ஒன்றுப்பட்ட முழுமையிலும், திட்டவட்டமாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் தேசிய இனங்களுக்கு எதிரான இம்மியளவு வன்முறையையும், அவை ஒடுக்கப்படுவதையும், அவற்றின் சமத்துவமற்ற நிலையையும் கண்டிப்பவர்கள் ஆவர்; முடிவில், புந்துக்காரர் தாக்கியுள்ள ஸேவெர்னயா பிராவ்தா கட்டுரையில் இந்தப் பொதுவான மார்க்சியக் கருத்து மிகவும் உறுதியோடு வலியுறுத்திக் கூறப்படுகிறது.

இல்லை, தட்டிக்கழிப்பது இங்கு சாத்தியமன்று. திரு. லீப்மன் "ஒன்றுகலத்தலைக்" கண்டிக்கையில் அவர் மனதில் உள்ளது வன்முறையும் அல்ல, சமத்துவமற்ற நிலையும் அல்ல, தனியுரிமைகளும் அல்ல. எல்லா வித வன்முறையும் சமத்துவமின்மையும் நீக்கப்பட்ட பின், ஒன்றுகலத்தல் என்னும் கருத்தில் உண்மையான எதுவும் எஞ்சியிருக்கிறதா?

இருக்கிறது, அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. எஞ்சியிருப்பது முதலாளித்துவத்தின் உலக வரலாற்று வழிப்பட்ட போக்கு தேசிய இனப் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்திடுதலும் தேசிய இன வேறுபாடுகளை மறையச் செய்தலும் தேசிய இனங்களை ஒன்றுகலக்க வைப்பதுமான அந்தப் போக்கு. கழிந்து செல்லும் ஒவ்வொரு பத்தாண்டையும் தொடர்ந்து இந்தப் போக்கு மேலும் மேலும் வலிமையடைந்து வருகிறது. முதலாளித்துவத்தை சோஷலிசமாக உருமாறச் செய்யும் மாபெரும் உந்து சக்திகளில் ஒன்றாகும் இது.

தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரிக்காத, அதற்காகப் போராடாத எவரும், எல்லா விதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் சமத்துவ மின்மையையும் எதிர்த்துப் போராடாத எவரும் மார்க்சியவாதி அல்ல, ஜனநாயகவாதியுங்கூட அல்ல. அது சந்தேகத்துக்கு இடமில்லாதது. ஆனால் பிறிதொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி "ஒன்றுகலத்தலை' ஆதரித்து நிற்பதாகச் சொல்லி அவரை நிந்தனை செய்யும் போலி மார்க்சியவாதி தேசியவாத அற்பரே ஆவார் என்பதும் அதே போல சந்தேகத்துக்கு இடமில்லாதது தான். புந்துக்காரர்கள் எல்லோரும், மற்றும் (விரைவில் நாம் காணப் போவது போல) திருவாளர்கள் லேவ் யுர்க் கேவிச், தொன்த்ஸோவ் வகையறாக்களை ஒத்த உக்ரேனிய தேசியவாத சோஷலிஸ்டுகள் எல்லோரும் மதிக்கத்தகாத இவ்வகையினரைச் சேர்ந்தவர்களே ஆவார்.

இந்த தேசியவாத அற்பர்களின் கருத்தோட்டங்கள் எவ்வளவு பிற்போக்கானவை என்பதை ஸ்தூலமாகத் தெரியும்படிக் காட்டுவதற்காக மூன்று வகைப்பட்ட உண்மைகளை எடுத்துரைக்கிறோம்.

பொதுவாக ருஷ்யாவிலுள்ள யூத தேசியவாதிகளும் குறிப்பாக, புந்துக்காரர்களும்தான், ருஷ்யாவின் வைதிக மார்க்சியவாதிகள் "ஒன்றுகலத்தலை" ஆதரிப்பதாகச் சொல்லி இவர்களுக்கு எதிராக மிகவும் அதிகமாகக் கூச்சலிடுகிறவர்கள். ஆயினும் மேலே தரப்பட்ட புள்ளி விவரங்கள் காட்டுவது போல், உலகெங்கும் உள்ள ஒரு கோடி ஐந்து லட்சம் யூதர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் நாகரிக உலகில், "ஒன்றுகலத்தலுக்கு” மிக அதிக அளவுக்குக் " சாதகமாக அமைந்த நிலைமைகளில் வாழ்கிறார்கள். அதே போது பாக்கியமற்றவர்களாக ஒடுக்கப்பட்டு உரிமைகள் இல்லாமல் ருஷ்யாவிலும் கலீஷியாவிலும் (ருஷ்ய, போலிஷ்) புரிஷ்கேவிச்சுகளின் காலுக்கடியில் மிதித்து நசுக்கப்படும் யூதர்கள், "ஒன்றுகலத்தலுக்கு” மிகக் குறைவாகவே அனுமதிக்கும் நிலைமைகளில், தனித்து ஒதுக்கப்படுதல் மிகுதியாகி "குடியிருப்பு எல்லை” “சதவீத நியமங்கள்” போன்ற பல புரிஷ்கேவிச் சிறப்புகளுங்கூட இருந்து வரும் நிலைமைகளில் வாழ்கிறார்கள்.

நாகரிக உலகில் உள்ள யூதர்கள் ஒரு தேசிய இனமாக இருக்கவில்லை, பெருமளவுக்கு அவர்கள் ஒன்றுகலக்கப்பட்டு விட்டார்கள் என்று கார்ல் காவுத்ஸ்கியும் ஓட்டோ பௌவரும் கூறுகின்றனர். கலீஷியாவிலும் ருஷ்யாவிலும் உள்ள யூதர்கள் ஒரு தேசிய இனமாக இருக்கவில்லை; துரதிருஷ்டவசமாக இங்கு அவர்கள் இன்னமும் ஒரு சாதியாகவே இருந்து வருகிறார்கள் (இதற்குரிய குற்றம் புரிஷ்கேவிச்சுகளைச் சாருமே அன்றி அவர்களை அல்ல). யூதர்களது வரலாற்றைச் சந்தேகத்துக்கு இடமின்றி நன்கறிந்தவர்களாகவும் மேலே கூறப்பட்ட உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வோராகவும் இருப்போர் அளித்திடும் மறுக்க முடியாத தீர்ப்பாகும் இது.

இந்த உண்மைகள் நிரூபிப்பது என்ன? என்னவென்றால், யூதப் பிற்போக்குவாத அற்பர்களால்தான், வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட வைத்து, ருஷ்யாவிலும் கலீஷியாவிலும் இருக்கின்ற நிலைமைகளிலிருந்து பாரிசிலும் நியூயார்க்கிலும் இருக்கின்ற நிலைமைகளுக்கு அல்ல, இதற்கு நேர்மாறான திசையில் அதைச் செலுத்தி வைக்க விரும்புவோரால் மட்டும்தான் "ஒன்றுகலத்தலுக்கு” எதிராகக் கூச்சலிட முடியும்.

சிறந்த யூதர்களாக இருப்போர் உலக வரலாற்றால் போற்றப்படுவோரும், ஜனநாயகத்தின், சோஷலிசத்தின் முதற்பெருந்தலைவர்களை உலகுக்குத் தந்துள்ளோருமான இவர்கள் - ஒன்றுகலத்தலை எதிர்த்து ஒருபோதும் கூச்சலிட்டதில்லை. “யூதர்களது பின்னிலையை" உயர் மதிப்புக்குரியதாகப் பார்த்துப் பரவசப்படுவோர்தான் ஒன்றுகலத்தலை எதிர்த்துக் கூச்சலிடுகிறார்கள்.

தேசிய இனங்கள் ஒன்று கலக்கும் பொதுவான நிகழ்ச்சிப் போக்கு முன்னேறிய முதலாளித்துவத்தின் இன்றைய நிலைமைகளில் அடைந்திருக்கும் வீச்சினை. உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியேற்றப் புள்ளிவிவரங்களிலிருந்து ஓரளவு தெரிந்து கொள்ளலாம். 1891க்கும் 1900க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் ஐரோப்பா 37,00,000 பேரை அங்கே அனுப்பிற்று; 1901இலிருந்து 1909 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் 72,00,000 பேரை அனுப்பிற்று, 1900ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு கோடிக்கு மேற்பட்ட அன்னியர்களைப் பதிவு செய்தது. இதே கணக்கின்படி நியூயார்க் மாநிலத்தில் 78,000க்கு அதிகமான ஆஸ்திரியர்களும், 1,36,000 ஆங்கிலேயர்களும், 20,000 பிரெஞ்சுக்காரர்களும், 4,80,000 ஜெர்மானியர்களும், 37,000 ஹங்கேரியர்களும், 4,25,000 ஐரிஷ்காரர்களும், 1,82,000 இத்தாலியர்களும், 70,000 போலிஷ்காரர்களும், ருஷ்யாவிலிருந்து வந்த 1,66,000 பேரும் (பெரும்பாலும் யூதர்கள்), 43,000 ஸ்வீடிஷ்காரர்களும் பிறரும் இருந்தார்கள். இவர்களிடையிலான தேசிய இன வேறுபாடுகளை இம்மாநிலம் அரைத்துப் பொடியாக்கி விடுகிறது. பிரமாதமான சர்வதேச அளவில் நியூயார்க்கில் நடந்தேறும் இதனை ஒவ்வொரு பெரிய நகரிலும் தொழில்துறைக் குடியேற்றத்திலும் நிகழக் காணலாம்.

தேசியவாதத் தப்பெண்ணங்களால் மூழ்கடிக்கப்படாதவர் எவரும், முதலாளித்துவமானது தேசிய இனங்களை ஒன்றுகலக்கச் செய்திடும் இந்த நிகழ்ச்சிப் போக்கு வரலாற்று வழிப்பட்ட மாபெரும் முன்னேற்றத்தைக் குறிப்பதாகும், பல்வேறு இருட்டு முடுக்குகளில், முக்கியமாக ருஷ்யாவைப் போன்ற பிற்பட்ட நாடுகளில் தேசிய இன முரட்டுப் பிடிவாதம் தகர்க்கப்படுவதைச் சுட்டுவதாகும் என்பதைக் காணத் தவற முடியாது.

ருஷ்யாவையும், உக்ரேனியர்களிடம் மாருஷ்யர்களுக்கு உள்ள போக்கையும் எடுத்துக் கொள்ளுங்கள். கண்டும் கேட்டுமிராத அளவுக்கு உக்ரேனியர்கள் இழிவுக்கு உள்ளாக்கப்படுவதை இயற்கையாகவே ஒவ்வொரு ஜனநாயகவாதியும் மார்க்சியவாதியைக் கூறவே வேண்டியதில்லை - கடுமையாக எதிர்க்கவே செய்வார், உக்ரேனியர்களுக்கு முழுநிறை சமத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனக்கோரவே செய்வார். ஆனால் தனியொரு அரசின் வரம்புகளுக்குள் உக்ரேனியத் தொழிலாளர்களுக்கும் மாருஷ்யத் தொழிலாளர்களுக்கும் இடையே தற்போது இருந்து வரும் தொடர்புகளையும் கூட்டணியையும் பலவீனப்படுத்துவதானது, சோஷலிசத்துக்கு நேரடியாக துரோகம் இழைப்பதே ஆகும், உக்ரேனியர்களது பூர்ஷ்வா "தேசிய இனக் குறிக்கோள்களின்” கண்ணோட்டத்திலிருந்து கூட ஓர் அசட்டுக் கொள்கையே ஆகும்.

திரு.லேவ் யுர்க்கேவிச் தம்மையும் ”மார்க்சியவாதியாக" அழைத்துக் கொள்கிறார் (பாவம் மார்க்ஸ்!) - மேற்கூறிய அசட்டுக் கொள்கைக்கு இவர் ஓர் உதாரணமாவார். உக்ரேனியப் பாட்டாளி வர்க்கம் முழு அளவுக்கு ருஷ்யமயமாக்கப்பட்டுவிட்டது, அதற்கு தனியே ஒரு நிறுவனம் தேவையில்லை என்று 1906இல் ஸக்கலோவ்ஸ்கியும் (பஸோக்) லுக்கஷேவிச்சும் (துச்சாப்ஸ்கி) அடித்துப் பேசியதாகத் திரு . யுர்க்கேவிச் எழுதுகிறார். சாராம்சப் பிரச்சினை குறித்து எந்த ஓர் உண்மையையும் எடுத்துரைக்காமலே திரு. யுர்க்கேவிச் அவர்கள் இருவர் மீதும் பாய்கிறார், இது 'தேசிய இனச் செயலின்மை" ஆகுமென்றும், "தேசிய இன துறவு பூணல்” ஆகுமென்றும், இவர்கள் “உக்ரேனிய மார்க்சியவாதிகளைப் பிளவுபடுத்தி விட்டார்கள்' (!!) என்றும், இன்ன பலவாறாகவும் மிகமிக இழிவான, அசட்டுத்தனமான, பிற்போக்கான தேசியவாதத்தின் மனப்பாங்கால் முழு அளவுக்குப் பீடிக்கப்பட்டவராக ஆவேசக் கூச்சல் எழுப்புகிறார். இன்று "தொழிலாளர்களிடையே உக்ரேனிய தேசிய இன உணர்வு வளர்ந்திருப்பினும்”, சிறுபான்மையான தொழிலாளர்கள் தான் "தேசிய இன உணர்வுடையோராக" இருக்கிறார்கள், பெரும்பான்மையோர் "இன்னமும் ருஷ்யக் கலாசாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்டோராகவே இருக்கிறார்கள்" என்று திரு. யுர்க்கேவிச் வலியுறுத்துகிறார். நமது கடமை "பெருந்திரளினரை நம் பின்னால் அணிதிரளச் செய்வதும், அவர்களுக்கு தேசிய இன நோக்கங்களை (தேசிய இன இலட்சியத்தை) விளக்கிக் கூறுவதுமே அன்றி, அவர்கள் பின்னால் செல்வதல்ல" என்று இந்த தேசியவாத அற்பர் கூவுகிறார் (த்ஸ்வின், பக்கம் 89).

திரு. யுர்க்கேவிச்சின் இந்த வாதம் அனைத்தும் பூர்ஷ்வா தேசியவாதமே ஆகும். ஆனால் பூர்ஷ்வா தேசியவாதிகளது கண்ணோட்டத்திலிருந்து கூட - இவர்களில் சிலர் உக்ரேனியாவின் முழுநிறை சமத்துவத்துக்காகவும் தன்னாட்சிக்காகவும் நிற்பவர்கள், ஏனையோர் சுயேச்சை உக்ரேனிய அரசுக்காக நிற்பவர்கள் இந்த வாதம் ஏற்புடையதாகாது. விடுதலை பெறுவதற்காக உக்ரேனியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை மாருஷ்ய, போலிஷ் நிலப்பிரபுத்துவ வர்க்கமும் இவ்விரு தேசிய இனங்களது முதலாளி வர்க்கமும் எதிர்க்கின்றன. இந்த வர்க்கங்களை எதிர்த்து நிற்கும் வல்லமை வாய்ந்த சமூகச் சக்தி எது? இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டு மெய் நடப்பில் இக்கேள்விக்குப் பதிலளித்தது: ஜனநாயக விவசாயிகளைத் தன்பின்னால் அணிதிரட்டிக் கொள்ளும் தொழிலாளி வர்க்கமே அன்றி வேறு எதுவுமல்ல இந்தச் சக்தி. எதனுடைய வெற்றி தேசிய இன ஒடுக்குமுறைக்கு இடம் இல்லாதபடிச் செய்யுமோ அந்த மெய்யான ஜனநாயகச் சக்தியைப் பிளவுபடுத்தவும், இவ்வழியில் அதைப் பலவீனப்படுத்தவும் முயலுவதன் மூலம் திரு. யுர்க்கேவிச் பொதுவாக ஜனநாயகத்தின் நலன்களுக்கு மட்டுமல்லாமல், தமது தாய் நாடாகிய உக்ரேனியாவின் நலன்களுக்கும் துரோகம் இழைக்கிறார். மாருஷ்யப் பாட்டாளிகள், உக்ரேனியப் பாட்டாளிகளின் ஒன்றுபட்ட செயல் இருக்குமாயின் சுதந்திர உக்ரேனியா சாத்தியமாகிவிடும்; இவர்களிடையே இந்த ஒற்றுமை இல்லையேல் அது சாத்தியமன்று.

ஆனால் மார்க்சியவாதிகள் தம்மை பூர்ஷ்வா தேசியவாதக் கண்ணோட்டத்துள் கட்டுப்படுத்திக் கொள்வோர் அல்லர். கடந்த சில பத்தாண்டுகளாக அதிவேகப் பொருளாதார வளர்ச்சியானது திட்டவட்டமான போக்காகத் தெற்கிலே, அதாவது உக்ரேனியாவில் நடந்தேறி, மாருஷ்யாவிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் முதலாளித்துவப் பண்ணைகளுக்கும் சுரங்கங்களுக்கும் நகரங்களுக்கும் கவர்ந்திழுத்து வந்திருக்கிறது. இந்த வரம்புகளுக்குள் மாருஷ்ய, உக்ரேனியப் பாட்டாளிகளது “ஒன்றுகலத்தல்” சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மையாகும். இந்த உண்மை நிச்சயமாக முற்போக்கானது. முதலாளித்துவமானது, மாருஷ்ய அல்லது உக்ரேனிய நாட்டுப்புற முடுக்குகளின் அறியாமை இருளில் மூழ்கிய, முரட்டுப் பிடிவாதம் வாய்ந்த, அசைவற்று நிலைத்து விட்ட குடியானவர்களின் இடத்தில் ஓயாமல் இடம் பெயரும் பாட்டாளிகளை உருவாக்குகிறது; இந்தப் பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமைகள் மாருஷ்யாவுக்கும் அதே போல் உக்ரேனியாவுக்கும் உரிய பிரத்தியேக தேசிய இனக் குறுகிய மனப்பாங்கைத் தகர்த்திடுகின்றன. மாருஷ்யாவுக்கும் உக்ரேனியாவுக்கும் இடையே ஒரு காலத்தில் அரசு எல்லை இருக்குமெனக் கொள்வோமாயினுங்கூட, மாருஷ்யத் தொழிலாளர்களும் உக்ரேனியத் தொழிலாளர்களும் இப்படி "ஒன்றுகலத்தல்' வரலாற்று வழியில் முற்போக்கானதாகும் என்பது, அமெரிக்காவில் தேசிய இனங்கள் அரைத்துச் சேர்க்கப்படுதல் முற்போக்கானதாகும் என்பது எப்படியோ அது போலவே சந்தேகத்துக்கு இடமில்லாதது. உக்ரேனியாவும் மாருஷ்யாவும் எந்த அளவுக்கு சுதந்திரமடைகின்றனவோ, அந்த அளவுக்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சி அதிக விரிவும் வேகமும் அடைந்து மேலும் அதிக வலிமையுடன் அரசின் எல்லாப் பிராந்தியங்களிலிருந்தும் எல்லா அண்டை அரசுகளிலிருந்தும் (ருஷ்யாவானது உக்ரேனியாவைப் பொறுத்தவரை அண்டை அரசாகிவிடுமாயின்) எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் உழைப்பாளி மக்கள் திரளினரையும் நகரங்களுக்கும் சுரங்கங்களுக்கும் ஆலைகளுக்கும் கவர்ந்திழுக்கும்.

இரு தேசிய இனங்களது பாட்டாளி வர்க்கத்தின் ஒட்டுறவாலும் இணைப்பாலும் ஒன்றுகலத்தலாலும் கிடைக்கக் கூடிய ஆதாயங்களை உக்ரேனிய தேசிய இன இலட்சியத்தின் கண நேர வெற்றிக்காக திரு. லேவ் யுர்க்கேவிச் விட்டொழிக்கையில், அவர் மெய்யான முதலாளி வர்க்கத்தவரைப் போல, அதுவும் கிட்டப்பார்வையும் குறுகிய மனப்பாங்கும் கொண்ட அசட்டு ஆளைப் போல, அதாவது குட்டி முதலாளித்துவ அற்பரைப் போல நடந்து கொள்கிறார். தேசிய இன இலட்சியமே முதலாவது இலட்சியம், பாட்டாளி வர்க்க இலட்சியம் பிற்பாடுதான் என்கிறார்கள் பூர்ஷ்வா தேசியவாதிகள்; உடனே திருவாளர்கள் யுர்க்கேவிச்சுகளும் தொன்த்ஸோவ்களும் இன்ன பிற போலி மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்கள் கூறுவதை அப்படியே திருப்பிச் சொல்கிறார்கள். பாட்டாளி வர்க்க இலட்சியமே முதலாவது இலட்சியம் என்கிறோம் நாம் ஏனென்றால் இந்த இலட்சியம் தான் உழைப்பாளரது நீடித்த அடிப்படை நலன்களையும் மனிதகுலத்தின் நலன்களையும் மட்டுமின்றி, ஜனநாயகத்தின் நலன்களையும் பாதுகாக்கிறது; ஜனநாயகம் இல்லையேல் தன்னாட்சி உக்ரேனியாவும் சரி, சுயேச்சை உக்ரேனியாவும் சரி, நினைத்துக் கூட பார்க்க முடியாதவை.

இறுதியில், மதிப்பிடற்கரிய தேசியவாத மணிகள் நிறைந்ததான திரு. யுர்க்கேவிச்சின் வாதத்தில் பின்வரும் மற்றொரு கூற்றினையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். உக்ரேனியத் தொழிலாளர்களில் சிறுபான்மையினர் தேசிய இன உணர்வுடையோராக இருக்கிறார்கள், "பெரும்பான்மையோர் இன்னமும் ருஷ்யக் கலாசாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு தான் இருக்கிறார்கள்” என்கிறார்.

பாட்டாளி வர்க்கம் குறித்துப் பேசுகையில் ஒட்டுமொத்தமாக உக்ரேனியக் கலாசாரத்தை ஒட்டுமொத்தமாக ருஷ்யக் கலாசாரத்துக்கு எதிராக வைத்திடுவதானது. பூர்ஷ்வா தேசியவாதத்தின் நலனை முன்னிட்டு வெட்கமின்றிப் பாட்டாளி வர்க்க நலன்களுக்கு துரோகமிழைப்பதே ஆகும்.

தற்கால தேசிய இனம் ஒவ்வொன்றிலும் இரண்டு தேசிய இனங்கள் உள்ளன என்று தேசியவாத சோஷலிஸ்டுகள் எல்லோரிடத்தும் நாம் கூறுகிறோம். ஒவ்வொரு தேசிய இனக் கலாசாரத்திலும் இரண்டு தேசிய இனக் கலாசாரங்கள் உள்ளன. புரிஷ்கேவிச்சுகள், குச்கோவ்கள், ஸ்துரூவேக்கள் ஆகியோரது மாருஷ்யக் கலாசாரம் ஒன்று இருக்கிறது. செர்னிஷேவ்ஸ்கி, பிளெஹானவ் பெயர்களால் குறிக்கப்படும் மாருஷ்யக் கலாசாரம் ஒன்றும் இருக்கிறது. ஜெர்மனியிலும் பிரான்சிலும் இங்கிலாந்திலும் யூதர்களிடையிலும் ஏனையவற்றிலும் இருப்பது போலவே, உக்ரேனியாவிலும் இதே இரு கலாசாரங்கள் இருக்கின்றன. உக்ரேனியத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் மாருஷ்யக் கலாசாரத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்றால், இதோடு கூட இன்னொன்றையும் நாம் நன்றாகவே அறிவோம்: மாருஷ்யச் சமயக் குருமார்களுக்கும் முதலாளி வர்க்கத்தாருக்கும் உரிய கலாசாரத்துடன் கூடவே, மாருஷ்ய ஜனநாயகத்துக்கும் சமூக-ஜனநாயகத்துக்கும் உரிய கருத்துகளும் செயல்படுவதை அறிவோம். முதல் வகைக் “கலாசாரத்தை" எதிர்த்துப் போராடுகின்ற உக்ரேனிய மார்க்சியவாதி, இரண்டாவது வகைக் கலாசாரத்தை எப்போதுமே வேறுபடுத்திக்காட்டித் தமது தொழிலாளர்களிடம் கூறுவார்: “வர்க்க” உணர்வு படைத்த மாருஷ்யத் தொழிலாளர்களோடும் அவர்களது இலக்கியத்தோடும் அவர்களது கருத்துகளின் முழு வீச்சோடும் ஒட்டும் உறவும் கொள்வதற்கு எல்லா வாய்ப்புகளையும் நாம் முழு மூச்சுடன் கைக் கொள்வதும் பயன்படுத்திக் கொள்வதும் வளர்த்துச் செல்வதும் நமது கடமையாகும்; உக்ரேனியத் தொழிலாளி வர்க்க இயக்கம், மாருஷ்யத் தொழிலாளி வர்க்க இயக்கம் ஆகிய இரண்டின் நலன்களும் இதனை அவசியமாக்குகின்றன."

உக்ரேனிய மார்க்சியவாதிக்கு மாருஷ்ய ஒடுக்குமுறையாளர்கள் மீதுள்ள வெறுப்பு முற்றிலும் நியாயமானது, இயற்கையானது. ஆனால் மாருஷ்யத் தொழிலாளர்களது பாட்டாளி வர்க்கக் கலாசாரத்துக்கும் பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கும் அவர் இந்த வெறுப்பினை - இம்மியளவுக்குத்தான் என்றாலுங்கூட, மனத்தாங்கல் என்னும் படியான அளவுக்கு மட்டும் தான் என்றாலுங்கூட எடுத்துச் செல்லும்படி இவ்வெறுப்பால் அந்த அளவுக்குத் தாம் ஆட்கொள்ளப்படுவதற்கு அனுமதிப்பாராயின், பிறகு அந்த மார்க்சியவாதி பூர்ஷ்வா தேசியவாதச் சகதிக்குள்தான் வழுக்கிச் சென்று விடுவார். இதே போலத்தான் மாருஷ்ய மார்க்சியவாதியானவர் உக்ரேனியர்களுக்கு முழுநிறை சமத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையோ, சுதந்திர அரசை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் உரிமையையோ கணமும் மறப்பாராயினும், அவர் பூர்ஷ்வா தேசியவாதச் சகதிக்குள் மட்டுமின்றி கறுப்பு நூற்றுவரது தேசியவாதச் சகதிக்குள்ளும் வழுக்கிச் சென்று விடுவார்.

மாருஷ்யத் தொழிலாளர்களும் உக்ரேனியத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்; ஒரே அரசில் அவர்கள் வாழ்ந்து வரும் வரையில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பொதுவான அல்லது சர்வதேசியக் கலாசாரத்தை நோக்கி மிக நெருங்கிய நிறுவன ஒற்றுமையும் இணைப்பும் கொண்டு பாடுபட வேண்டும், எந்த மொழியில் பிரசாரம் செய்வது என்கிற பிரச்சினையிலும் இந்தப் பிரசாரத்தின் முற்றிலும் பிராந்திய அல்லது தேசிய இனத் தன்மையதான விவரங்களிலும் முழு அளவுக்குப் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். இது மார்க்சியத்தின் அத்தியாவசியக் கோரிக்கையாகும். ஒரு தேசிய இனத்தின் தொழிலாளர்கள் மற்றொன்றின் தொழிலாளர்களிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவதையும், மார்க்சிய “ஒன்றுகலத்தல்” மீதான எல்லாத் தாக்குதல்களையும், பாட்டாளி வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒட்டுமொத்தமாக ஒரு தேசிய இனக் கலாசாரத்தை ஒருமித்ததாக இருப்பதாகப் பாவிக்கப்படும் இன்னொரு தேசிய இனக் கலாசாரத்துக்கு எதிராக வைப்பதற்கான எந்த முயற்சிகளையும், இன்ன பிறவற்றையும் எவ்விதத்திலும் ஆதரித்து நிற்பதானது. பூர்ஷ்வா தேசியவாதமே ஆகும் - இதனை எதிர்த்து ஈவிரக்கமற்ற போராட்டம் நடத்துவது அத்தியாவசியக் கடமையாகும்.

- லெனின்

(தேசிய இனப்பிரச்சனைப் பற்றிய விமர்சன குறிப்புகள் நூலிலிருந்து, செந்தளம் பதிப்பகம்)