பிரபாகரன் கிரிமினல் குற்றவாளியோ பயங்கரவாதியோ அல்ல தமிழீழ தளபதியே!

ஏஎம்கே

பிரபாகரன் கிரிமினல் குற்றவாளியோ பயங்கரவாதியோ அல்ல தமிழீழ தளபதியே!

பிரபாகரன் குற்றவாளி அல்ல! விடுதலைப் போராளியே!

இலங்கை அரசு- விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் இந்திய அரசின் இராஜதந்திரத்தை முறியடிப்போம்!

ராவ் கும்பலே!

பிரபாகரன் குற்றவாளி அல்ல! ஒரு விடுதலைப் போராளியே!

அன்பிற்குரிய தமிழக மக்களே! இலங்கையில் புதிதாகப் பொறுபேற்றுள்ள சந்திரிகா அரசாங்கம், விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனச்சிக்கலுக்குத் தீர்வு காணத் தயார் என அறிவித்தது. இலங்கை ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களும், ஏராளமான படையினரும் யுத்தம் தொடர்வதை விரும்பவில்லை என்ற சூழலில், இனச்சிக்கலைப் பேசித் தீர்ப்பேன் என்று கூறி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார் சந்திரிகா, ஆட்சிக்கு வந்ததும் விடுதலை புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், தமிழ் ஈழத் தேசிய இனச்சிக்கலைத் தீர்ப்பதற்குக்கு, தெளிவான ஒரு ஜனநாயகத் திட்டத்தை இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஈழத்தமிழினத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவது - சுயாட்சி வழங்குவது என்ற சீர்திருத்தவாதமும் அமைதி வாதமும் அவருடைய செயல்தந்திரத்தின் முக்கியமான அம்சங்களாக இருப்பதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை, ஏன்?

புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கி வைக்கும் பொருட்டு, போர் ஓய்வை அமல்படுத்தினார். தடை செய்யப்பட்டிருந்த பொருட்கள் சிலவற்றை, யாழ்ப்பாணம் பகுதிக்குக் கொண்டு செல்ல அனுமதித்தார். இலங்கை அரசுக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன. தற்போது பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர முடியாமற் போனதற்குப் புலிகள் அமைப்புதான் காரணம் என்று இலங்கை அரசாங்கமும், இந்திய ஆளும் வர்க்கத்தினரின் ஊது குழல்களும் ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இந்த இழுபறி நிலை ஏற்படுவதற்கு உண்மையான காரணங்கள் என்ன? பின்வரும் கோரிக்கைகளை, இலங்கை அரசு ஏறக வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அமைப்பு வலியுறுத்துகிறது.

யாழ்ப்பானத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடையை முழுவதுமாக நீக்க வேண்டும். எல்லா பொருட்களையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்ல அனுமதிக்கவேண்டும். பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்கவேண்டும்.

சங்குப்பிட்டிப் பாதையின் வழியாக மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கு வகைசெய்யும் பொருட்டு, பூநகரி இராணுவ முகாமை அகற்ற வேண்டும்.

வடக்குக் கடற்கரைப் பகுதியில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தையும் நீக்கவேண்டும்.

வடக்குப்பகுதி புனர்நிர்மாணத் திட்டத்தை அமல்படுத்துவதற்கென, ஒரு பிரதேச வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையத்தில் விடுதலை புலிகள் அமைப்புக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர் ஓய்வு, ஒரு நிரந்தரமான போர் ஓய்வாக மாற்றப்பட வேண்டும். புலிகள் அமைப்பின் ஆயுதந்தாங்கிய ஊழியர்கள் கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரமாக நடமாட அனுமதி அளிக்க வேண்டும்.

வழக்கம்போல, இலங்கை அரசு இக்கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது. பின்வருவனவற்றை அதற்கான காரணங்களாகக் கூறுகிறது.

இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படக் கூடிய சில பொருட்களை, தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இருந்து நீக்க முடியாது.

இனச்சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு ஏற்படும்வரை இராணுவ முகாமைத் திரும்பப்பெற முடியாது. ஆயினும் மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கு வகை செய்யும் பொருட்டு, இராணுவம் 500 மீட்டர் தூரம் விலகிச் சென்றிருக்கின்றது.

மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. சூழ்நிலை அபிவிருத்தி அடைந்த பிறகு, எஞ்சியுள்ள தடைகள் நீக்கப்படும்.

புனர்நிர்மாணத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒருபிரதேச ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கைக்கு மாறாக, இலங்கை அரசாங்கம் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்திருக்கிறது. அதில் பங்கு கொள்வதற்கு இருவரைப் புலிகள் அமைப்பு நியமிக்க வேண்டும்.

அரசாங்கம் அமைத்திருக்கின்ற போர் ஓய்வுக் கண்காணிப்புக் குழுவில் விடுதலைப்புலிகள் அமைப்பு பங்கு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே ஒரு நிரந்தரமான போர் ஓய்வு குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும்.

ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அவர்களின் இன்னல்களை நீக்குவதற்கு மாறாக, இலங்கை அரசு, புலிகளைச் சுற்றி வளைத்து நசுக்குவதில் கவனமாக இருக்கிறது என்பதைத்தான், புலிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் சந்திரிகா அரசாங்கம் கூறும் காரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

சீர்திருத்தவாதத் தீர்வு இனச்சிக்கலைத் தீர்க்காது!

ஈழத் தமிழினச் சிக்கலை, இராணுவ வழியில் அல்லாமல், அரசியல் வழியில் தீர்க்க வேண்டுமானால், இலங்கையில் இனங்களுக்கிடையில் யுத்தத்தை தவிர்த்து, அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால், அந்த யுத்தம் தோன்றியதற்கான காரணங்களை அகற்றியாக வேண்டும். உண்மையில், யுத்தம் என்பது, அரசியலின் வேறுவழித் தொடர்ச்சிதான். தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும்போர், இலங்கை ஆளும் வர்க்கத்தினர், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட ஒரு பாசிசத் தேசிய ஒடுக்க முறைப்போரேயாகும். இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில், ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் சுதந்திர, ஜனநாயகம் என்ற கோரிக்கை, அந்த ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டது. அப்படியானால், ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் இனத்தின், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதன் அடிப்படையில் நடத்தும் பேச்சுவார்த்தைதான் அமைதியை நிலைநாட்ட உதவுமேயொழிய, வேறு எந்த வழியிலும், ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியாது.

சந்திரிகா அரசோ, ஈழத்தமிழ் இனத்திற்கு, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமலேயே, அதற்கு அதிக அதிகாரம் சுயாட்சி வழங்குவதன் மூலம், அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, பேரம்பேசக்கூடிய ஒன்றல்ல ஏனெனில், சுயாட்சியோ அல்லது அதிகாரங்களைக் கீழ்மட்டங்களுக்குப் பகிர்ந்து அளிக்கும் வேறு எந்தவிதமான முறையோ, அந்த நாட்டை ஆளுகின்ற வர்க்கங்களின், அதிகாரத்தின் அஸ்திவாரங்களைச் சிதைக்காமல், அப்படியே வைத்துக் கொள்வது ஆகும். அது பழுதுபடாமல், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கு, சில்லறைச் சலுகைகளை வழங்கும் ஒரு முறையேயாகும். இச்சீர்திருத்த முறை, எல்லா வடிவங்களிலும் நிலவும் தேசிய ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டுவது அல்ல. ஒடு சுயாட்சியைப் (autonomy) பெற்றிருக்கும் ஒரு இனம், ஆளுகின்ற இனத்துடன் சம உரிமையைப் பெற்றுவிட முடியாது. ஒடுக்கும் இனமும், ஒடுக்கப்பட்ட இனமும் சம உரிமை பெற வேண்டுமானால், இரு இனங்களுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டுமானால், அதை நிலைநாட்டுவதற்கான ஒரு புரட்சிகரமான முறை - ஒடுக்கப்பட்ட தேசிய இனம், பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமையைப் பெறுவதே ஆகும். இம்முறையினால் தான், இன ஒடுக்கு முறைக்கு முடிவுகட்ட முடியும். இனவிடுதலையையும் வழங்க முடியும்.

எனவேதான், ஈழத்தமிழர்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பேரம் பேசுவதற்குரிய ஒன்றல்ல எனக் கூறுகிறோம். இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகள் மற்றும் பிற ஈழத்தமிழர் பிரதிநிதிகளுக்கும் இடையில் இப்போது நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை மூலம், சுயாட்சி என்ற நிலையையோ, வேறு எந்த அதிகார பகிர்வு முறையையோ ஏற்றுக் கொண்டு இலங்கை ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டாலும், அது பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதாக இருக்காது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடியசுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு, இலங்கை ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொண்டு, ஆயுதங்களைக் கீழேபோட்டாலும், மீண்டும் ஒரு முறை, ஈழத்தமிழர்கள் தங்களது, விடுதலைப் போரை நடத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இத்தகைய சமரசங்கள், ஒடுக்கு முறைக்கு முடிவுகட்டப் போவது இல்லை. ஆனால் அவர்களது விடுதலை தவிர்க்க இயலாதது.

இலங்கையில் வாழும் இரு இனங்கள் ஓர் அரசுக்குள் இணக்கமாக வாழவேண்டுமானால், உண்மையில் இரு இனங்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால், ஈழத்தமிழரின் இனச்சிக்கல் பின்வரும் முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

அ) ஈழத்தமிழ்இனம் தனித் தேசிய இனம் என்பதை அங்கீகரிக்கவேண்டும்.

ஆ) ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிரதேசக் கட்டுக்கோப்புக்கு, உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இ) ஈழத்தமிழ் இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.ஈழத்தமிழ் மக்கள், இவ்வரசுக்குள் இணைந்து வாழ்வது சகிக்க முடியாது எனக் கருதி, பிரிந்து போக விரும்பினால், அவர்களுக்கிடையில் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையில், தீர்வுகாண, இலங்கை அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

ஈ) இலங்கையைத் தமது தாயகமாகக் கருதும் தமிழருக்கு, குடியுரிமையும், இதர அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.

உ) சிங்கள இனத்திற்கு மட்டும் வழங்கப்படும் தனிச்சலுகைகளும், உரிமைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஊ) சுயநிர்ணய உரிமை பெற்ற ஈழத்தமிழ் இன அரசாங்கம், தனிப்படைவைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்டவற்றை,பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக ஏற்கும்போதுதான், சந்திரிகா அரசாங்கம் அமைதியை நிலைநாட்ட உண்மையாகவே விரும்புகிறது என நம்பலாம்.

அமைதிவாதம் - ஒரு மோசடியே!

ஆனால் சந்திரிகா அரசாங்கமோ, இனச்சிக்கலைத் தீர்ப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு, மேற்கூறப்பட்ட ஜனநாயக முறையை அடிப்படையாகக் கொள்வதற்குத் தயாராக இல்லை. அதேசமயம், அனைவரும் ஏற்கக்கூடிய, ஒரு கௌரவமான, நீதியான மற்றும் நேர்மையான அமைதியை அடைவதற்கு உறுதி பூண்டிருப்பதாக சந்திரிகா அரசாங்கம் கூறுகிறது.

பல ஆண்டுகளாக, இன ஒடுக்குமுறை யுத்தக் கொடுமைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இந்த யுத்தக் கொடுமைகளிலிருந்து விடுபட ஒரு வழி பிறக்காதா என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பானதே ஆகும். இத்தகைய சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஈழத்தமிழ் இனத்தைத் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தை, நயவஞ்சகமாக அவர்கள் மீது திணித்துவிடுவது என்பதுதான் சந்திரிகா அரசாங்கம் பேசும் அமைதிவாதத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.

உண்மையில், சந்திரிகா அரசாங்கம் ஒரு நிலையான நீதியான, மற்றும் நேர்மையான அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அது ஈழத்தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய அதனால் முடியாது. ஏனெனில், அரைக்காலனிய இலங்கை அரசுக்குத் தேசியம், ஜனநாயகம், மற்றும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் ஆகியன ஒத்துப் போகக்கூடியவை அல்ல. இலங்கையில் நிலவும் அரைக்காலனிய அரசமைப்பிற்குள், ஒரு அரசாங்கத்திற்கு மாறாக, தேர்தல் மூலமாக வரும் வேறு எந்த ஒரு அரசாங்கமும், இலங்கை அரசின் வர்க்கத்தன்மைக்கும், அதன் அடிப்ப்டையான நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவிட முடியாது வேறுவிதமாகச் சொன்னால், சந்திரிகா அரசாங்கம், இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாதத் தரகு முதலாளிகள் மற்றும் அரைநிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களுக்கும் அவற்றினுடைய அரசின் அடிப்படையான நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவிட முடியாது. ஆகையால்தான், சந்திரிகா அரசாங்கம் பேசும் அமைதி ஒரு நிலையான, நியாயமான மற்றும் நேர்மையான அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இல்லாமல் ஒரு சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்தக்கூடிய அமைதிவாதமாக இருக்கிறது.

சந்திரிகா அரசாங்கம், ஒருபுறம் மக்களை அமைதிவாதத்திற்குள் மூழ்கடிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது. மறுபுறம் இராணுவ வலிமையைப் பெருக்குவதிலும், மீண்டும் ஒரு இராணுவத் தாக்குதல் தொடுப்பதற்கான தயாரிப்பிலும் கவனம் செலுத்துகிறது. இதுவே, சந்திரிகா அரசாங்கம், சிங்களப் பேரினவாத வெறிபிடித்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலனகளுக்கு, வேறுவழியில் சேவை செய்ய முயல்கிறது என்பதையே காட்டுகிறது. அதன் அமைதிவாத மோசடிகள் தோற்கடிக்கப்படுமானால், அதன் உண்மையான பாசிச முகம் வெளிப்பட்டுவிடும்.

ஈழத்தமிழ் இனத்தின் விடுதலை, ஒரு நீண்ட மக்கள் யுத்தப் பாதையைப் பின்பற்றுவதன் மூலமே வென்றெடுக்கக் கூடியது எனக் கடந்த கால அனுபவங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இந்தநீண்ட யுத்தகாலத்தின் போது, விடுதலை புலிகள் இயக்கம் தனது எதிரியுடன் ஓரிரு முறைகள் அல்ல; பலமுறை பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. இத்தகைய ஒரு நிலைமையில், விடுதலைப்புலிகள் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஆனால், சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத சீர்திருத்தவாதச் செயல் தந்திரத்திற்கு எதிராக, ஒரு சரியான கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒரு செயல்தந்திரத்துடன் இப்பேச்சுவார்த்தையில் பங்கு கொண்டால்தான், விடுதலைப்புலிகளால் நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்பது சாத்தியம் ஆகும்.

ஈழத்தமிழர்கள், ஒரு பேரப் பொருளாகக் கொள்ளக் கூடாத கோரிக்கையான சுயநிர்ணய உரிமையை விடுதலை புலிகள் உறுதியாகப் பற்றி நின்று, இப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள வேண்டும். போர் ஓய்வும், பேச்சுவார்த்தையும் இறுதியானது எனக் கருதி விடாமல், ஈழத்தமிழினத்தின் விடுதலையை அடைவதற்கான போரில், இறுதி வெற்றி கிட்டும்வரை, ஆயுதப் போராட்டத்தில் ஊன்றி நிற்க வேண்டும். 'அமைதி', 'அதிக அதிகாரம்', 'சுயாட்சி' என்று ஆளும் வர்க்கங்கள் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தி பரந்துபட்ட மக்களைப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டத் தவறினால், அவர்கள் இதுவரை செய்த தியாகங்கள் வீணாகிவிடும். ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம், ஒரு பின்னடைவைச் சந்திக்க நேரிடும். சந்திரிகா அரசாங்கமோ, இலங்கை ஆளும் வர்க்கத்தினரோ, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பார்கள் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே, ஈழத்தமிழ் மக்களும், விடுதலை புலிகளும் தேசிய இன விடுதலைப் போர் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு உத்தரவாதம் செய்து கொண்டேதான் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளவேண்டும்.

விடுதலைப் புலிகளின் இன்றைய பணி சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்பதே

ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில், சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத சீர்திருத்தவாத செயல்தந்திரத்திற்கு எதிராக, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தின் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டுவது விடுதலைபுலிகள் அமைப்பின் தவிர்க்க முடியாத உடனடிப் பணியாக இருக்கிறது.

ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் சுதந்திரம் மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில் அமைந்த அரசியல், பொருளாதார இராணுவக் கொள்கைகளை உள்ளடக்கமாகக்கொண்ட ஒரு குறிப்பான திட்டத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு முன்வைக்க வேண்டும். இலங்கை, இந்திய அரசுகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளின் அடிவருடிகளாகச் செயல்படும் சிறுகும்பலைத் தவிர, பரந்துப்பட்ட ஈழத்தமிழர்கள் அனைவரையும் மேற்கூறப்பட்ட குறிப்பான திட்டத்திற்கு ஆதரவாகத் திரட்டுவதே இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பு தனது குறிக்கோளை அடைவதற்கும், விடுதலைப் போரில் ஊன்றி நிற்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும்.

விடுதலை புலிகள் அமைப்புடன் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் கொண்டிருப்போர் கூட, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பார்களானால், விடுதலைப் போரை ஆதரித்தால், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் புலிகள் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு, அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கும், ஆயுதம் ஏந்துவதற்கும் உரிமை அளிக்கவேண்டும்.

தங்களது அரசியல் அதிகாரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட பகுதிகளில் மக்கள் கமிட்டிகளை அமைத்து, அவற்றிற்கு, அதிகாரம் வழங்குவதின் மூலமாக, ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழினத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்காகப் போராட வேண்டியது அவசியம்தான். என்றாலும், ஈழத்தமிழ் இனத்தின் தற்சார்புப் பொருளாதாரத்திற்குத் திட்டமிட வேண்டும். அப்போதுதான், நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்க முடியும். மக்களின் வாழ்நிலையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்து, அவற்றை அமல்படுத்த வேண்டும்.

பாரம்பரியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் மத உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில், அவர்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டும்.

இலங்கைப் பொருளாதாரத்தை, ஏகாதிபத்திய வாதிகளுக்கு அகலத் திறந்துவிடும் இலங்கை அரசின் பொருளாதாரக் கொள்கைக்கும், அதன் பாசிச ஒடுக்கு முறைக்கும் எதிராக, சிங்களத் தேசிய இன மக்கள் நடத்தும் போராட்டத்தை விடுதலை புலிகள் அமைப்பு ஆதரிக்க வேண்டும். சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத, சீர்திருத்தவாத மோசடிகளைச் சிங்கள மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் இன ஒடுக்குமுறை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், இரு இனங்களும் ஒரே அரசமைப்புக்குள் வாழவேண்டுமானால், ஈழத்தமிழ் இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுதான் ஒரே வழி என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் அமைப்பு எடுத்துரைக்க வேண்டும். இதற்கு ஆதரவாகச் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த, ஜனநாயகவாதிகளின் ஆதரவைத் திரட்ட முற்பட வேண்டும்.

போர் ஓய்வுக் கண்காணிப்புக் குழு, செஞ்சிலுவைச் சங்கம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்தல் என்ற பேரிலும் இன்னும் பிற வடிவங்களிலும், ஏகாதிபத்திய நாடுகளின் இராஜதந்திரிகள் இலங்கயிலும் யாழ்ப்பாணத்திலும் வலம் வருகிறார்கள். இலங்கைப் பேரினவாத அரசுடன் ஒத்துப்போகச் சொல்லி, நயமாகவும், மிரட்டியும் விடுதலை புலிகள் அமைப்பை நிர்ப்பந்தம் செய்யும் இராஜதந்திரங்களைத் திரைமறைவில் செய்ய முனைந்துள்ளனர். இந்த நிர்ப்பந்தங்களை எதிர்த்து உறுதியாக நிற்பதுடன், அவற்றிற்கு எதிராகப் பரந்துப்பட்ட மக்களைப் புலிகள் அமைப்பு திரட்டவேண்டும்.

மேற்கூறப்பட்டவற்றைச் சாதிப்பதன் மூலமே, ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவதும் நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்பதும் உறுதிப்படுத்தப்படும்.

மேலாதிக்க நாட்டம் கொண்ட இந்திய அரசு, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, இப்பேச்சு வார்த்தையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, இப்பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்திய அரசின் இந்த இழிவான இராஜதந்திரத்தை முறியடிப்பது, ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப் புலிகளின் பணி மட்டும் அல்ல. இது இந்திய ஜனநாயகவாதிகள், குறிப்பாகத் தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டிய பணியும் ஆகும்.

பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதே இந்திய அரசின் இராஜதந்திரம்

இலங்கையில், சந்திரிகா அரசுக்கும், புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான முயற்சிகள் தொடங்கி இருப்பதைக்கண்டு பொருமுகிறது இந்திய அரசுதான் இல்லாமல் பேச்சுவார்த்தை எப்படி நடக்கலாம் என இறுமாப்புடன் கேட்கிறது. தான் பங்கேற்கக்கூடிய பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டுமென விரும்புகிறது. எனவேதான், பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட எல்லா முயற்சிகளும் செய்து வருகிறது.

இராஜீவ் - ஜெ.ஆர் ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி, இலங்கை விஷயத்தில் தலையிடத் தனக்கு அதிகாரம் உண்டு என டெல்லிசர்க்கார் உரிமை கோருகிறது. முன்பு இரு மேல்நிலை வல்லரசுகளின் அனுமதி பெற்றுத்தான், இந்திய அரசால் இலங்கையில் தலையிட முடிந்தது. இப்போதோ, சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தகர்ந்துவிட்டது. அமெரிக்காவுடன் இப்போது இராணுவ ஒப்பந்தம் வேறு போட்டுக்கொண்டுள்ளது இந்திய அரசு. தென்னாசிய மண்டலத்தில், அமெரிக்க மேலாதிக்கத்தை, நிலைநாட்டும் ஒரு அடியாளாக உருமாறிவரும் இந்திய அரசு, இன்று இறுமாப்புடன் இலங்கை விஷயத்தில் தலையிட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த இலங்கையையும், தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம் ஆகும். அதன் அடிப்படையில்தான், இராஜீவ் கொலையைக் காரணங்காட்டி, பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரித்து, அவர்களைப் பிடித்துக் கொடுக்கும்படி இலங்கை அரசை வற்புறுத்தி வருகிறது. இதன்மூலம், பேச்சுவார்த்தக்கு முட்டுக்கட்டை போடவும், முயற்சிக்கிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது, அதன் உள்நாட்டு விஷயமாகும். இதில், இந்தியா தலையிடுவது என்பது, அதன் மேலாதிக்கக் கொள்கையின் வெளிப்பாடாகும். இதன் விளைவு, இந்திய மக்களாகிய நம்மீதான விலங்குகளை இறுக்குவதில் போய் முடியும். நம் நாட்டுப் பிரச்சினையில் இன்னொரு அந்நிய நாடு தலையிடுவது எப்படிச் சகிக்க முடியாததோ, அதுபோல்தான், நம் நாடு பிற நாட்டு விசயத்தில் தலையிடுவதும் சகிக்கமுடியாததே.

ஆகையால், மேலாதிக்க நாட்டத்துடன், இந்திய அரசு இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை எதிர்ப்பது தமது கடமையாகும்.

இன்று உலகில் எண்ணற்ற தேசங்கள் நாடுகள், தங்கள் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வருகின்றன பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்தும், தம் மீதான இராணுவத் தாக்குதல்களை எதிர்த்தும், இன விடுதலைப் போராளிகள் ஆயுதமேந்திப் போராடுகின்றார்கள். இது கிரிமினல் குற்றம் அல்ல. இது விடுதலைப் போர். அதேபோல்தான், ஈழத்தமிழ் இனமும் தனது இன விடுதலைக்காக ஆயுதமேந்தி, சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்துப் போராடி வருகிறது.

இலங்கையின் உள்நாட்டு விசயத்தில் தலையிட்டு, ஈழத்தமிழ் இனத்தின் மீது ஒரு அநீதியான யுத்தம் தொடுத்தது இந்தியப் படையே. எண்ணற்ற கற்பழிப்புகளையும், கொலைகளையும், கொள்ளைகளையும் இந்தியப்படை செய்ததை உலகே அறியும். இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் போர்க்காலக் குற்றங்கள் ஆகும். அந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு? உண்மையான குற்றவாளிகள் இந்திய ஆளும்வர்க்கங்களும், அவர்கள் அரசின் தலைவர் ராஜீவும்தான், அவர்களே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். அந்தப் போர்க்காலக் குற்றங்களுக்கு இந்திய அரசுதான் நஷ்டஈடு வழங்க வேண்டும். அதைவிட்டுப் பழியைப் புலிகள் மீது போடுவது, இந்திய அரசின் மேலாதிக்க வெறியையும், ஆணவத்தையுமே காட்டுகிறது. பிரபாகரன் ஒரு கிரிமினல் குற்றவாளி அல்ல. தன் சொந்த இனவிடுதலைக்காக, ஆயுதமேந்திப் போராடுகின்ற, ஒரு தேசிய விடுதலைப் போராளியே. மேலும், இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில், பேச்சுவார்த்தை நடை பெறாமல் முட்டுக்கட்டை போடும் நோக்கத் தோடுதான், இந்திய அரசு, பிரபாகரனைப் பிடித்துத்தருமாறு, இலங்கை அரசிடம் கோருகிறது. இந்திய அரசின் இந்த இராஜதந்திரம் முறியடிக்கப்பட வேண்டும். சந்திரிகா!

அடுத்த மாதத்தில், சந்திரிகா இந்தியா வரப் போகிறார். அவருக்கு நெருக்கடிகள் கொடுத்து, இந்தியா இலங்கை விசயத்தில் தலையிட வாய்ப்புக் கோரப்போகிறது. உண்மையில், இனச் சிக்கலைத் தீர்க்க, சரியான தீர்வுடன் சந்திரிகா இருந்தால்தான், இந்தியாவின் மேலாதிக்க முயற்சிகளை முறியடிக்க முடியும். இல்லை யெனில், பிரபாகரனைத் தேடும் சாக்கிலோ, அல்லது புலிகளை எதிர்த்துப் போராடுவதில் உதவும் சாக்கிலோ, இலங்கைக்குள் நுழைய, இந்திய அரசுக்கு இடம் கொடுத்தால், அது ஒட்டு மொத்த இலங்கைக்கே பேராபத்தாக முடியும் என்பதில் அய்யம் இல்லை.

நமதுபணி

இந்திய அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதியே, இலங்கையின் உள்நாட்டு விசயத்தில், இந்தியா தலையிடுவதை எதிர்ப்பதாகும். இந்திய மக்களை பெருந்தேசிய வெறியில் மூழ்கடித்துத் தனது மேலாதிக்கத் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, இந்திய ஆளும் வர்க்கங்கள் முயற்சிப்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். புதியபொருளாதாரக் கொள்கைகள் மூலம், ஏகாதிபத்தியங்களிடம், குறிப்பாக, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடகு வைத்துக் கொண்டிருக்கும் ராவ் அரசு, நம்மை மட்டுமல்ல, தெற்காசியா முழுவது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி, அமெரிக்காவின் சிறந்த ஏவல்நாயகச் செயல்பட முயற்சித்துக்கொண்டிருப்பதை எதிர்த்துப் போராடவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தமிழகக் கட்சிகள்

தமிழரின் நலன்களைப் பேணிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும், தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க முதலிய கட்சிகள், மேலாதிக்க நோக்கத்துடன், இந்திய அரசு கடைப்பிடிக்கும் இராஜதந்திரத்தைக் கண்டும் காணாதது போல் மௌனம் சாதிக்கின்றன. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில், பேச்சுவார்த்தை நடைபெறாமல் முட்டுக்கட்டை போடும் இந்திய அரசின் இராஜதந்திரத்தை எதிர்த்து இக்கட்சிகள் ஏதும் செய்யவில்லை. பிரபாகரனைப் பிடித்துத் தருமாறு, இந்திய அரசு கோருவதைக் கூட இக்கட்சிகள் கண்டிக்கவில்லை. தமது நாடாளுமன்ற, சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாதகமாக, ஓட்டுப் பொறுக்குவதற்காகத் தமிழக மக்களின் இன உணர்வைப் பயன்படுத்துவது இக்கட்சிகளின் வழக்கமாகி விட்டது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், பாசிச ராவ் அரசு மேற்கொள்ளும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, ஜனநாயக வாதிகளின் கடமையாகும்.

இந்திய அரசே!

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாதே

இந்திய அமைதிப்படையின் போர்க்காலக் குற்றங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்கு!

பிரபாகரன் ஒரு தேசிய விடுதலை போராளியே! கிரிமினல் குற்றவாளி அல்ல!

இலங்கை சந்திரிகா அரசே!

ஈழத்தமிழினத்தின், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!

- ஏஎம்கே

மார்ச்-1995