புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!

இந்துத்துவப் பாசிச பா.ஜ.க-வின் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்தம் 2016-இன் மூலம் இந்தியா முழுமைக்கும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility -cum-EntranceTest-NEET) நடத்தி முடித்துவிட்டது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது; நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்கள் நடத்தும் தரமற்ற, நம்பத்தகாத பல்வேறு நுழைவுத் தேர்வுகளை ஒழித்து ஒரே சீரான தேர்வை நடத்துவது; மருத்துவக் கல்விக்கான கட்டணத்தைக் குறைப்பது என்று கூறி மோடி கும்பல் நீட் தேர்வை நியாயப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்ன? தகுதிபெற்ற கிராமப்புற மாணவி அனிதாவை மருத்துவக் கல்வியிலிருந்து விரட்டி மரணக்குழியில் தள்ளிவிட்டது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த கிராமப்புற ஏழைமாணவி அனிதா +2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை எடுத்து மருத்துவக் கல்விக்குத் தகுதி பெற்றவர், நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனது மருத்துவர் கனவு கலைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரைப் போலவே பல மாணவர்கள் +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் கூட ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தரம் என்ற பேரில் மோடி அரசும் உச்சநீதிமன்றமும் அரசியல் சட்டத்தில் வழங்கியுள்ள சமூகநீதியை மறுத்து ‘நீட்’ தேர்வை திணித்து மாணவி அனிதாவை கொலை செய்துள்ளன. எனவே, அனிதாவின் கொலைக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை அடியோடு நீக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் +2 மதிப்பெண் அடிப்படையிலான ஒற்றைச் சாளர முறையையே தொடர்ந்து பின்பற்ற தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக சட்டமியற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் மோடி அரசாங்கம் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்து அவசர அவசரமாக நீட் தேர்வைத் திணித்தது.

நாடாளுமன்றம் 04.08.2016 அன்று, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் 10D என்ற பிரிவைச் சேர்த்து சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி, இந்தியா முழுமைக்கும் மத்தியப் பாடத்திட்டத்தின் (CBSE) கீழ் நடைபெறும் நீட் தேர்வின் மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்று அந்தத் திருத்தம் கூறுகிறது. எனவே, 2017-18 ஆம் ஆண்டு முதல், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை தமிழகத்திலும் நீட் தேர்வின் அடிப்படையில்தான் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதனை எதிர்த்து அனிதா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் 2016-17ஆம் ஆண்டில் அனைத்து மருத்துவக் கல்விக்கும் நீட் தேர்வு வாயிலாகமட்டுமே சேர்க்கை இருக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அனிதா வழக்கிலும் அது உறுதிபடுத்தியது. எனவே மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் தகுதி தரம் என்ற பேரில் சமூக நீதியை ஒழித்து, மாநில உரிமையைப் பறித்து மருத்துவக் கல்வியை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கியதோடு மாணவி அனிதாவையும் படுகொலை செய்தது.

நீட் தேர்வுமுறையை மோடி அரசாங்கம் புகுத்தினாலும் அச்சட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம்தான் கொண்டுவந்தது. நீட் தேர்வுமுறையைப் பார்ப்பனியம் திணிக்கவில்லை. மாறாக உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் (General Agreement in Trade and Service - GATS) அமைப்பும், அமெரிக்க ஏகாதிபத்தியமும்தான் திணித்தன. ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசு அமல்படுத்திவரும் புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் நோக்கத்தில்தான் நீட் தேர்வை மோடி கும்பல் திணித்துள்ளது.

ஒரு நாடு, ஒரே தேர்வு என்ற பேரால் நீட் தேர்வைத் திணித்து புதிய காலனிய உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்துவது எப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கிறது என்பதையும், எப்படி இந்திய நாட்டின் உயர்கல்வியை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுக்கள் ஆட்டிப்படைக்கின்றன என்பதையும் பேராசிரியர் அனில் சடகோபால் பின்வருமாறு கூறுகிறார்:

“இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி (WB), சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித்துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும். அந்த மூலதனத்தின் பிள்ளைதான் நீட்” என்கிறார். “உண்மையில் உயர்கல்வியில் அந்நிய ஆதிக்கம் இந்திய நாட்டிற்கும் மக்களுக்கும் கடும் பாதிப்புகளை கொண்டுவரும்”என்று கூறுகிறார்.

அதாவது இந்தியாவின் உயர்கல்வியை முழுவதுமாக ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்கு திறந்துவிடும் மோடி அரசின் தேசத் துரோக “தேசிய கல்விக் கொள்கையின்” ஒரு பகுதியாகவே நீட் தேர்வுமுறை திணிக்கப்பட்டுள்ளது. அந்த ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்யும் கொள்கைகள்தான் அரசியல்சட்டம் வழங்கியுள்ள சமூக நீதியையும், மாநிலங்களின் உரிமையையும் பறித்து கூட்டாட்சி முறைகளை ஒழிப்பதற்கு காரணமாக உள்ளது.

எனவே நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதல்ல, மாறாக ‘நீட்’ தேர்வு முழுமையாக ஒழிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அத்துடன் ‘நீட்’ தேர்வை ஒழிப்பது மட்டுமே ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவைத் தீர்த்துவிடாது. இந்திய அரசு கள்ளத்தனமாக அமல்படுத்திவரும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கு சேவைசெய்யும் “தேசிய கல்விக் கொள்கையை” முறியடிப்பதன் மூலமே அதற்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும். எனவே உயர்கல்வியை அந்நிய நிதிமூலதன கும்பல்களுக்கு திறந்துவிடுவது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்.

I

உலகமயமாக்கலும் - உயர்கல்வியில் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமும்

உலகமயமாக்கலுக்கு முன்பு உயர்கல்வி என்பது பொது நலன்களுக்கான, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகப் பார்க்கப்பட்டது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உயர்கல்வி என்பது அந்நாடுகளின் நலிவுகளுக்கெல்லாம் தீர்வாகப் பார்க்கப்பட்டது. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆதாரமாக உயர்கல்வி கருதப்பட்டது. ஆனால் இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் உயர்கல்வி என்பது வருவாய் ஈட்டக்கூடிய, இலாபம் கொழிக்கக் கூடிய ஒரு தொழிலாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உலகமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தி சமூக நல அரசு கோட்பாடுகளை ஒழித்துக் கட்டி சந்தை நலனை முதன்மைப்படுத்தியதால் ஏற்பட்ட விளைவு இது.

இன்று உலக அளவில் சுகாதாரத்துறைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மிகப் பெரும் துறையாக கல்வித் தொழிற்துறை (Educational Industry) திகழ்கிறது. உலக அளவில் ஏகாதிபத்திய கொள்ளைக்கார கார்ப்பரேட் முதலாளிகள் இத்துறையின் சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்ற போட்டிப் போடுகின்றனர்.

உலகளாவிய உயர்கல்வியின் சந்தை மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது. (ஒரு டிரில்லியன் = ரூ.65,00,000 கோடி). ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உயர்கல்வியில் 150.6 மில்லியன் பேர் புதிதாக சேருகின்றனர். 2014 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலக அளவில் நாடுகடந்து வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் ஆகும். அது ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. அது 2025இல் 8 மில்லியன் பேர்களாக உயரும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் (OECD) ஆய்வு கூறுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியில் பல தொழில் பிரிவுகள் வீழ்ச்சியைச் சந்தித்த போதிலும் உயர்கல்வித்துறை சந்தை விரிவடைந்து வருகிறது.

 உலக அளவில் உயர்கல்வி வர்த்தகத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகள் பெருமளவில் ஈடுபடுகின்றன. உயர்கல்வி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு அமெரிக்கா 15.5 பில்லியன் டாலர், ஆஸ்திரேலியா 15 பில்லியன் டாலர், பிரிட்டன் 14.1 பில்லியன் டாலர், கனடா 6 பில்லியன் டாலர், நியூசிலாந்து 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானத்தை ஈட்டுகின்றன. இன்று உயர்கல்வி வர்த்தகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமே கோலோச்சுகிறது.

உயர்கல்வி வர்த்தகம் இன்று அமெரிக்கப் பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ளது. அமெரிக்காவில் 1970-ஆம் ஆண்டுகளுக்குப்பின், உலக அளவில் நிலவிய கடும் போட்டியின் காரணமாக மோட்டார் வாகனத்துறை போன்ற பழைய தொழிற் துறை வீழ்சியைச் சந்தித்தது. ஆனால் உயர்கல்வித் துறை பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் அச்சாணியாக உயர்கல்வித் துறை திகழ்கிறது. 2017இல் அமெரிக்காவின் உயர்கல்வித் துறை வர்த்தகம் 550 பில்லியன் டாலர்களை எட்டியது. அது 2020இல் 700-பில்லியன் டாலர்களைத் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் படிக்கும் ஆசிய மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 7,50,693 பேர்களாகும். அதில் இந்தியாவிலிருந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,12,714 ஆகும். வெளிநாட்டிலிருந்து படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 30,000 டாலர்கள் செலவழிக்கின்றனர். அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 35.8 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை 5-மில்லியனாக உயர்த்தி அமெரிக்காவின் வருமானத்தை 150 பில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டுக்கு 560 பில்லியன் டாலர்களாகும். அதை ஈடுகட்ட, வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்து கல்வியை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்த 150 பில்லியன் டாலர்களை ஈட்டமுடியும் என்று கருதுகிறது. இதை அமெரிக்க பொருளாதாரத்தின் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்கிறது.

ஆனால், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்பு அமெரிக்காவின் உயர்கல்வித்துறை ஒரு கடும் நெருக்கடியைச் சந்திக்கிறது. உயர் கல்விக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவிகள் குறைக்கப்பட்டுவிட்டன. அரசு வழங்கும் உதவி 1975இல் 60.3 சதவீதமாக இருந்தது. அது 2010இல் 34.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. ஒரு புறம் அதிகரித்துவரும் நிர்வாகச் செலவினங்கள். மறுபுறம் அரசாங்கத்தின் உதவி குறைந்து கொண்டே போவதன் காரணமாக கல்விக்கட்டணம், டியூஷன் கட்டணங்கள் உயர்ந்து அமெரிக்காவின் உயர்கல்வி ஒரு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது குறைகிறது. ஆசிரியர்கள், ஊழியர்கள் சம்பளக்குறைப்பு, லே-ஆப், ஆட்குறைப்பு என கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய நெருக்கடியிலிருந்து மீள உயர்கல்வி ஏற்றுமதியைத்தான் அமெரிக்கா நம்பியுள்ளது.

நிதி அடிப்படையிலும், கல்வி அடிப்படையிலும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு மாணவர்களின் வருகை அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. உலக அளவில் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களில் 5 சதவீதம் பேர்கள்தான் அமெரிக்காவில் படிக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் 25 சதவீதம் படிக்கிறார்கள். எனவே அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவிற்கு ஈர்ப்பதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதற்கு திறன்படைத்த ஊழியர்களின் பற்றாக்குறையும் ஒரு காரணம் ஆகும். அந்நாட்டின் 46 சதவீத அமெரிக்க நிறுவனங்கள் திறன் மிகு ஊழியர்கள் இல்லை என்று அறிவித்துள்ளன. உலகின் தலைசிறந்த மாணவர்கள் அமெரிக்காவிற்கு தேவைப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லவும், அமெரிக்காவின் உயர்கல்வித் துறையைப் பாதுகாக்கவும், அதன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் வெளிநாட்டு மாணவர்களை வெளியிலேயே நிறுத்துவதோ அல்லது படிப்பு முடிந்தவுடன் திறன்படைத்த மாணவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதோ கூடாது என அமெரிக்காவின் கார்ப்பரேட்டுக்கள் கூறுகின்றன. அத்தகைய வெளிநாட்டு மாணவர்களின் பங்களிப்பின் காரணமாகத்தான் டெஸ்லா, கூகிள், மைக்ரோசாஃட், ஆராக்கிள் போன்ற உலகம் முழுவதும் கோலோச்சும் பெரும் பகாசுர நிறுவனங்களைக் கட்டியமைக்க முடிந்தது என கார்ப்பரேட்டுக்கள் கருதுகின்றன. 

அதிக அளவில் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவிற்கு ஈர்ப்பதன் மூலம் அமெரிக்காவில் வலிமைமிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை உருவாக்குவது, திறன் மிகுந்த தொழிலாளர்களை உருவாக்குவது, அமெரிக்காவில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஏற்றுமதியைப் பெருக்கி வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவது உட்பட அனைத்திற்கும் உயர்கல்வித் துறை ஒரு வாய்ப்பாக உள்ளது. எனவே அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலக அளவில் தங்களது மேலாதிக்கத்தை திணிக்க கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் நாட்டின் பொருளாதார மந்த நிலையிலிருந்தும், ஐரோப்பிய பொருளாதாரச் சந்தையிலிருந்து வெளியேறியபின் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்தும் மீள்வதற்கு உயர்கல்வித் துறையில் தங்களது கவனத்தை கூடுதலாக திருப்பியுள்ளனர். பிரிட்டனின் உயர்கல்வி ஏற்றுமதி என்பது பிரிட்டனுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும், தொழிற்துறை வளர்ச்சிக்கும் ஒரு கொடையாக உள்ளது.

2011-12ஆம் ஆண்டு பிரிட்டன் பல்கலைக் கழங்கள் 73 பில்லியன் பவுண்டுகளை வருமானமாக ஈட்டியுள்ளன. அதில் வெளிநாட்டிற்கு உயர்கல்வியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 10.71 பில்லியன் பவுண்டுகளை ஈட்டியுள்ளது. அதனால் பிரிட்டனின் வேலை வாய்ப்பு கூடுதலாக 2.7-சதவீதம் அதிகரித்துள்ளது. பல்கலைக் கழகங்கள் கேம்பசுக்கு அப்பாற்பட்ட (இணையம் தொலைதூரக் கல்வி) முறைகள் மூலம் ஈட்டிய வருமானத்தையும் சேர்த்தால் மொத்தம் 39.9 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. அதாவது பிரிட்டனின் மொத்த உயர்கல்வி வர்த்தகத்தில் சரிபாதியை ஏற்றுமதி மூலம் ஈட்டியுள்ளது. ஆகவேதான் பிரிட்டனின் பல்கலைக் கழக அமைச்சர் ஜோ. ஜான்சன் என்பவர் “மாணவர்களை இறக்குமதி செய்வதன் மூலம் கல்வியை ஏற்றுமதி செய்கிறோம். அதற்காகத்தான் புதிய தொழிற்நுட்பங்களைக் கொண்டு நிறுவன ரீதியான கட்டமைப்புகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டி அமைக்கிறோம்” என்று கூறுகிறார்.

இவ்வாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், தங்கள் நாட்டின் உயர்கல்வித் துறையைப் பாதுகாக்கவும் உலகளாவிய உயர்கல்விச் சந்தையைக் கைப்பற்றக் கடும் முயற்சிகளை எடுக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளின் சந்தை அவர்களுக்கு அட்சயப் பாத்திரமாகத் திகழ்கிறது.

II

ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுக்களின் கொள்ளைக்கு உயர்கல்வியைத் திறந்துவிடும் இந்திய அரசு

1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி, அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகளின் கைப்பாவைகளான சர்வதேச நாணயச் சங்கம் (IMF), உலக வங்கியின் ஆணைகளுக்கு அடிபணிந்து டங்கல் திட்டத்தில் கையப்பமிட்டது. அதுமுதல் இந்தியா உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகள் எனும் புதியகாலனிய, புதியதாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இவ்வாறு அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றப்பட்டு வருகிறது.

இத்தகைய நிலைமைகளில் உலக வங்கியும், சர்வதேச நாணயச் சங்கமும் இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன. கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மானியங்கள் என அனைத்து செலவினங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தும் வகையில் கட்டமைப்பு மறுசீரமைப்பைச் செய்தால் மட்டுமே இந்திய அரசுக்கு கடன் வழங்கமுடியும் என்று உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் நிபந்தனை விதித்தன. இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளும் அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து உயர்கல்வியை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவங்கிவிட்டன. 

இந்தியாவின் உயர்கல்விச் சந்தை வளர்ந்து கொண்டே செல்கிறது. மாணவர்கள் சேர்க்கை, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உட்பட கல்வித்துறை கட்டமைப்பில் இந்தியாவானது அமெரிக்கா, சீனாவை அடுத்து உலகின் மூன்றாவது நாடாகத் திகழ்கிறது. இந்தியாவில் 799 பல்கலைக்கழகங்கள், 39,071 கல்லூரிகள் மற்றும் 11,923 டிப்ளமோ படிப்பு வழங்கும் பாலிடெக்கனிக் நிறுவனங்கள் உள்ளன. உயர்கல்வியில் 34.6 மில்லியன் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தம் 15,18,813 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். உயர்கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 சதவீத மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பெரும் சந்தை வாய்ப்பை வழங்கியுள்ளது. 15 வயதுமுதல் 24 வயது வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் 234 மில்லியன் பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்திய உயர்கல்விச் சந்தையானது ஏகாதிபத்திய கார்ப்பரேட்டு களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக விளங்குகிறது.

எனினும் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம், மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.606 (2015ஆம் ஆண்டு கணக்கின்படி) செலவு செய்வது என்பது பிற மூன்றாம் உலக நாடுகளைவிட மிகவும் குறைவேயாகும். ஆனால், 2020ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டு மொத்தக் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதற்கு 190-பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என இந்திய அறிவுசார் கழகம் (knowledge commission) கூறுகிறது. 

இந்திய ஆளும் வர்க்கங்களோ கல்வித்துறைக்கு 6-சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும் என்ற கோத்தாரி கமிஷன் அறிக்கையின் பரிந்துரையைக் கூட அமல்படுத்த மறுக்கின்றன. கல்வித்துறைக்கு 3 சதவீதம் ஒதுக்குவதோடு அதில் உயர் கல்விக்கு 0.37 சதவீதம் (GDP) மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்திய ஆட்சியாளர்கள் உயர்கல்வியை அந்நிய மூலதனத்திற்கு திறந்துவிடுவதை நியாயப்படுத்தி காட்ஸ் அமைப்பில் இந்தியாவின் உயர் கல்வியை ஒப்படைத்து வணிகமயமாக்கிவிட்டனர்.

‘காட்ஸ்’ ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு நாடும் எந்தெந்த சேவைகளை தாம் அர்ப்பணிப்பது என்பதை தேர்வு செய்துகொள்ளுவதற்கான சுதந்திரம் அதற்கு உண்டு. அதன்படி ‘காட்ஸ்’-இல் அங்கம் வகிக்கும் 162-நாடுகளில் 44-நாடுகள் மட்டுமே உயர்கல்வியை வர்த்தகத்திற்கு திறந்து விடுவதற்கு ஒத்துக்கொண்டன. ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்திய அரசு இந்திய நாட்டின் உயர்கல்வித் துறை முழுவதையும் ’காட்ஸ்’ அமைப்பிற்கு அர்ப்பணிக்கும் பணியை படிப்படியாக செய்து முடித்தது.

1. வாஜ்பாய் ஆட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உயர்கல்வியைத் திறந்துவிட்டது

பா.ஜ.க-வின் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தான் முதன் முதலில் உயர்கல்வித் துறையை அந்நிய முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடுவதை தொடங்கி வைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும், யு.ஜி.சி-யும் உலக வங்கியின் ஆணைகளை ஏற்று எப்போதுமில்லா வேகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. கட்டணங்களை உயர்த்துவது, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்கான அனுமதி, நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் உருவாக்குவதற்கு இருந்துவரும் தடைகளை தளர்த்துதல், அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவது பற்றிய ஒப்பந்த விதிகளை தளர்த்துவது போன்ற முடிவுகளை எடுத்தது.

வாஜ்பாய் அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி தனியார் மயத்துக்கு ஆதரவாக 1998இல் பாரிசில் நடந்த கல்வி, பண்பாடு, அறிவியல் முதலான துறைகளுக்கான ‘யுனெஸ்கோ’ மாநாட்டில் பேசுகையில், “உயர்கல்வி என்பது படிக்கிற அந்தந்தத் தனி நபருக்குத்தான் பயனளிக்கிறது. சமூகத்திற்கு எந்தப் பயனுமில்லை. எனவே அதற்கு செலவாகும் தொகையை அந்த தனிநபரே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால் உயர் கல்வியைப் பொது நலன்களுக்கான சேவையாகக் கொள்ளமுடியாது. அதை ஒரு பொதுநலன் சாராத பொருளாகவே கொள்ளவேண்டும்” என்றார். உயர் கல்வியை ஒரு சரக்காக வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார்.

இந்திய மக்களுக்கு பச்சைத் துரோகமிழைத்த இந்தப்பேச்சின் உட்பொருள் மிகவும் ஆபத்தானது. கல்வி முதலிய சேவைகள் பொதுநலன் சார்ந்த பொருள் என இதுகாறும் வரையறுக்கப்பட்டிருந்தது. அதாவது ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி என்பது அவருக்கு மட்டும் பயனளிப்பதோடு நின்றுவிடுவதில்லை. சமூகத்தையே மேம்படுத்த உதவும் ஒரு பொருளாகத் திகழ்கிறது. அந்தவகையில் அதற்கான செலவிற்கு சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என்ற வரையறை பொதுவாக ஏற்கப்பட்டிருந்தது. ஆனால், இது குறித்த எந்த விவாதமும் இல்லாமல் வாஜ்பாய் அரசாங்கம் கல்வி பொதுநலன்சாரா சரக்கு என்று கூறி உயர் கல்வியை ஏகாதிபத்திய நிதி மூலதன கார்ப்பரேட்டுகளின் காலடியில் அர்ப்பணித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஆனால் உலக வங்கி தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்தது. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் உலகமயக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டிய அவசியத்தையும், புதிய நிலைமைகளில் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்றவாறு தனியார்மயம், தாராளமயம் எனும் உலக வங்கியின் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நிர்ப்பந்தித்து வந்தது. 

மேலும், 2000-ஆம் ஆண்டு உயர்கல்வி குறித்த அம்பானி-பிர்லா அறிக்கையானது பிரதமர் தலைமையிலான பொருளாதார அலுவல் கமிட்டியில் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கை உயர்கல்வி மற்றும் தொழிற்சார் கல்வி தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறியது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கு நிதி உதவி செய்வது, மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியது.

வாஜ்பாய் அரசாங்கம் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கான உலகவங்கி நிர்ப்பந்தத்திற்கும், அம்பானி-பிர்லா போன்ற உள்நாட்டு கார்ப்பரேட்டுக்களின் கோரிக்கைகளுக்கும் அடிபணிந்து “21-ஆம் நூற்றாண்டின் உயர்கல்விக்கான ஒரு சட்ட வரைவை” முன்வைத்தது. இதன் மூலம் பல்கலைக்கழகம், கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி வழங்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டது. பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுக்களின் அடிவருடியாக செயல்பட்டு உயர்கல்வியைத் தனியார்மயம், வணிகமயமாக்கும் துரோகத்தைத் துவக்கிவைத்தது.

2. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் உயர்கல்வியை ‘காட்ஸ்’ அமைப்பிடம் ஒப்படைத்தது

2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரசின் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், வாஜ்பாய் ஆட்சியின் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்தது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக வர்த்தகக் கழகத்தின் “காட்ஸ்” அமைப்பில் இந்திய நாட்டின் உயர்கல்வித் துறையை திறந்து விடுவதற்கான ஒப்புதலை (Offer) வழங்கியது. 2007ஆம் ஆண்டு அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான சட்டம் - 2007 என்ற சட்டத்தை கொண்டுவந்தது. பெருமளவில் தனியார் கல்வி நிறுவனங்களை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் உயர்கல்வியில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு ‘இடது’சாரிக் கட்சிகளின் எதிர்ப்பால் அச்சட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஆனாலும் உலக வர்த்தகக் கழகத்துடன் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தது.

இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம், அயல்நாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதன் மூலம் வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் செலவு குறையும், பல லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கூறி அதை நியாயப்படுத்தியது. காட்ஸ் அமைப்பின் கோரிக்கைகளுக்கும் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கிடையில் ஒரு சம நிலையை உருவாக்குவது என்று கூறி காட்ஸ் அமைப்பின் திட்டங்களை அமல்படுத்துகிறது.

“காட்ஸ்” அமைப்பு முன்வைத்த அம்சங்கள் பின்வருமாறு:

1. அயல்நாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கல்விக் கடைகளைத் திறந்துகொள்ளலாம்.

2. இந்திய அரசாங்கம் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கும் அயல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் சமமாக மானியங்கள் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும்.

3. மானியங்கள் ஒழிக்கப்பட்டால் பல்கலைக் கழகங்கள் சொந்தமாக நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.

4. அதற்கானத் தொகையை மாணவர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்;

மேற்கண்டவாறு உயர்கல்வியைத் தனியார்மயம், தாராள மயமாக்குவதற்குத் தடைகளாகப் பின்வருவனவற்றை உலக வர்த்தகக் கழகம் முன்வைத்தது:

“மாணவர்கள், ஆசிரியர்கள் இடம் மாறுவதற்கான கட்டுப்பாடுகள், தேசிய இன அடிப்படையிலான தடைகள்; ஊதியத்தை அனுப்புவதில் உள்ள பிரச்சினைகள், பாடத்திட்டங்கள், உள்ளூர் வளங்களை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், நேரடி முதலீடு மற்றும் பங்குகளைக் கைப்பற்றுவதற்கான தடைகள், அந்நிய செலாவணிக் கட்டுப்பாடுகள்” போன்ற தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரியது. மன்மோகன் சிங் அரசாங்கம் இக்கோரிக்கைகளை ஏற்று உள்நாட்டு சட்டங்களைத் திருத்தி ஒரு சமநிலைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக 2009இல் பொறுப்புக்கு வந்தவுடன் உலக வர்த்தகக் கழகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நூறு நாள் வேலைத்திட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி இந்திய நாட்டுச் சட்டங்களைத் திருத்தி அமைத்தது. அவ்வாறு 6 புதிய சட்டத் திருத்தங்களை 2010ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அவை பின்வருமாறு:

i) அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான சட்டம், 2010; 

ii) தொழிற்நுட்ப கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஒழுங்கீனங்களை தடைசெய்யும் சட்டம், 2010;

iii) கல்வித்துறை தீர்ப்பாயச் சட்டம், 2010;

iv) உயர்கல்வித் துறைக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட தேசிய ஒழுங்காற்று வாரியச் சட்டம், 2010;

v) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம், 2010;

vi) புதிய கண்டுபிடிப்புகளுக்கான பல்கலைக்கழகம்.

கடைசியாக உள்ள இரண்டு சட்டங்கள் நகல் வடிவத்திலேயே இருந்தது.

இவ்வாறு மன்மோகன் சிங் அரசாங்கம், உயர்கல்வித் துறையை அடியோடு மாற்றியமைக்கும் துரோகத்தை எந்தவிதமான ஆலோசனைகளோ, விவாதமோ இல்லாமல் அமல்படுத்தத் துவங்கியது. அன்றைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வியாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் எதிர்ப்புகளைக் கூட பொருட்படுத்தாமல் “சீர்திருத்தம்” என்ற பேரில் உயர்கல்வித் துறையை “சீர்குலைக்கும்” புதிய தாராளக் கொள்கைகளை தீவிரப்படுத்தியது. இவ்வாறு மன்மோகன் கும்பல் அவசர அவசரமாக விவாதம் இன்றி அமல்படுத்துவதற்கான காரணம் என்ன? உண்மையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே மன்மோகன் கும்பல் அத்தகைய சீர்குலைவுக் கொள்கைகளை அமல்படுத்தியது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தம்

2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பேரழிவின் விளைவாக அந்நாடுகளில் உயர்கல்வி கடும் நெருக்கடியை சந்தித்தது. உயர்கல்விக்கு அரசாங்கம் வழங்கி வந்த மானியங்களும் உதவிகளும் குறைக்கப்பட்டன. அந்நாடுகளின் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் மிகப்பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டன.எனவே கல்வி நிறுவனங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஊழியர்களுக்கு லே ஆப் வழங்குவது, ஊதியம் இல்லாத விடுப்பு, வேலைச் சுமைகளைச் சுமத்துவது, மாணவர்களின் கட்டணங்களை உயர்த்துவது, வகுப்புகளில் அதிக மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது, கல்வி உதவித் தொகையை நிறுத்துவது, கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் உயர்கல்வியில் சேரமுடியாமல் வீதியில் நிறுத்தப்படுவது என சுமைகள் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது.

உயர்கல்வியைத் தனியார்மயம், வணிகமயமாக்குவதால் ஏழை மாணவிகள் விபச்சாரம் செய்து படிக்க வேண்டிய நிலைமைகளை ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கியுள்ளனர். ஏழை மாணவிகளை விபச்சாரத்திற்குள் தள்ளி கட்டணத்தைக் கட்டலாம் என்று அந்நாடுகளில் விளம்பரம் செய்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் கல்வியைத் தனியார்மயமாக்கியதன் விளைவாக, ஏழைகள் படிக்க முடியாத அளவிற்கு கல்விக் கட்டணம் உயர்ந்து வருகின்றது. எல்லோருக்கும் கல்விக் கடன் கிடைப்பதுமில்லை. சில நிறுவனங்கள் இதைச் சாக்காக வைத்து, மாணவிகளைப் பணக்கார ஆண்களுடன் பாலியல் தொழில் செய்வதற்கு அழைக்கிறது.

இத்தகைய கொடுமைகளை எதிர்த்து, கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கடுமையான போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்கல்வியைத் தனியார்மயம், வணிகமயமாக்கும் கொள்கைகளும், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகளும், சமூக ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கடுமையானப் பாதிப்புகளைக் கொண்டுவந்து பாரபட்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சிறுபான்மையினரான கருப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளும், ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் வெளிநாட்டிலிருந்து குடிபெயர்ந்து வாழும் சிறுபான்மையினர் மற்றும் அகதிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அந்நாடுகளில் உருவான உயர்கல்வித்துறை நெருக்கடிகளை இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் மீது திணித்தன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் உலக வர்த்தகக் கழகத்திற்கும் வெளியே இந்தியாவின் மீது கடுமையான நிர்ப்பந்தங்களைக் கொடுத்து தங்களது நெருக்கடிகளைத் திணித்தனர்.

2009ஆம் ஆண்டு இந்திய நாட்டு மனிதவள அமைச்சர் கபில்சிபலும் அன்றைய அமெரிக்க அரசியல் விவகாரத்துறைச் செயலாளர் வில்லியம் பர்ன் என்பவரும் டெல்லியில் சந்தித்தனர். அச்சந்திப்பின்போது இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இந்திய-அமெரிக்க கல்விக்கழகம் (Indo - US Education Council) என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த கழகத்தில் தொழிற்துறை மற்றும் கல்வித்துறைப் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கழகம் இரண்டு நாடுகளுக்கிடையில் கல்வித்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்ற பேரில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு கதவு திறக்கப்பட்டது. 

அதனடிப்படையில்தான் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வாண்டு (2009) நவம்பரில் இந்திய, அமெரிக்க நாடுகளுக்கிடையில் பல்கலைக்கழகத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் சேர்ந்து “ஒபாமா-சிங் 21ஆம் நூற்றாண்டிற்கான அறிவுசார் முன்முயற்சிகள்” என்ற திட்டத்தை அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து 2010 ஜூலையில் வாஷிங்டனில் கபில் சிபலும் அமெரிக்காவின் அரசுதுறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனும் ஒபாமா-சிங் அறிவுசார் முன்முயற்சிகளை முன்னெடுப்பது பற்றி பேசி முடிவு செய்தனர். இந்திய-அமெரிக்க கல்விக் கழகத்தில் கல்வியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளைக் கொண்டு இரு நாடுகளுக்கிடையிலான பங்காளி உறவைப் பலப்படுத்துவது என்று அறிவித்தனர். 21ஆம் நூற்றாண்டிற்கான அறிவுசார் முன்முயற்சிகள் மூலம் இந்திய-அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கிடையில் பங்காளி உறவை மேம்படுத்துவது என்ற பேரில் இந்தியாவின் உயர்கல்வி மீது அமெரிக்காவின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது.

அமெரிக்காவைத் தொடர்ந்து 2010இல் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பெரும் வர்த்தகக் குழுவோடு இந்தியாவுக்கு வருகைபுரிந்து உயர்கல்வித் துறையில் பல ஒப்பந்தங்களைப் போட்டார். அப்போது உயர்கல்வி பற்றி அவர் கூறியதாவது: “கல்வி என்பது வெறுமனே நாடுகளின் (Nations) உயர்வாகப் பார்க்கக் கூடாது, அது 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வர்த்தக வளர்ச்சிக்கான துறையாகப் பார்க்க வேண்டும்” என்றார். அவருடன் வந்திருந்த பிரிட்டனின் உயர்கல்வி மற்றும் அறிவியல் துறை அமைச்சர் டேவிட் வில்லெட்ஸ் பின்வரும் ஒப்பந்தங்களுக்கான வாய்ப்பு பற்றி பேசினார்: “ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், இம்பீரியல், பிரிமிங்காம், நியூ கேஸ்டில், எக்சிட்டர் அண்டு தி ஓப்பன் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்கள் வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான துறைகளில் ஈடு படுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக உடன்பாடு கண்டுள்ளதாகக் கூறினார்.

இவ்வாறு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மன்மோகன் சிங் அரசாங்கம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து உயர்கல்வியை அந்நிய நிதிமூலதன கார்ப்பரேட் கும்பலின் வேட்டைக்கு திறந்துவிடுவதற்கு இணங்கியது. காட் ஒப்பந்தத்தை அமல்படுத்த உள்நாட்டு சட்டங்களை மாற்றுவதற்கு முயற்சித்தது.ஆனால் இச்சட்டங்கள் எதுவுமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிட்டாததால் நிறைவேறாமல் காலாவதியாகிவிட்டன. அடுத்த தேர்தலில் காங்கிரசின் மன்மோகன் சிங் ஆட்சி மண்ணைக் கவ்வியது.

3. புதிய காலனியத்திற்குச் சேவை செய்யும் மோடி அரசின் “தேசிய கல்விக் கொள்கை”

மோடி கும்பல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தவுடன் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் மூர்க்கத்தனமாக செயல்படுகிறது. 2015 டிசம்பர் மாதம் கென்யா தலைநகர் நைரோபியில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் அந்த ஒப்புதலை (offer), கடப்பாடுகளாக (commitment) ஏற்று அமல்படுத்த வேண்டும் என, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் நிர்ப்பந்தித்தன. இந்தியாவில் அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இருந்துவரும் தடைகளை அகற்றுவது; அயல்நாடுகளிலிருந்து நடத்தப்படும் தொலைதூரக் கல்வி மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றத்திற்கு அனுமதி அளிப்பது; அயல்நாட்டுப் பாடப் புத்தகங்களுக்கும், தேர்வு நடத்தும் கம்பெனிகளுக்கும் தடைகளை அகற்றுவது என்று அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அக்கூட்டத்தில் இது பற்றி எத்தகைய முடிவுகளும் எடுக்கமுடியாமல் கலைந்துவிட்டது. 

ஆனால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை நிர்ப்பந்தித்து இருதரப்பு உடன் படிக்கைகள் மூலம் பணியவைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்தனர். மோடி அரசாங்கம் அந்த நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து அம்முன்வைப்புகளைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதற்குச் சேவை செய்யும் வகையில்தான் தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy) 

அறிவித்துள்ளது. நீட் தேர்வையும் நடத்தி முடித்துள்ளது.

மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உயர் கல்வியை தனியார்மயமாக்கும் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துகிறது.

- மோடி அரசாங்கம் உயர்கல்வியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வசதியாக தனது முழு நிதிநிலை அறிக்கையை 2015இல் தாக்கல் செய்தபோதே உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 3,900 கோடி குறைத்தது.

- 2006ஆம் ஆண்டு முதல் ‘நெட்’ தேர்வு எழுதாத உயர்கல்வி பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை உதவித் தொகை வழங்கப்பட்டு வந்ததை, இனி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் என உதவித் தொகையை நிறுத்தியது.

எல்லாவற்றுக்கும் மேலாக மோடி அரசாங்கம் ‘காட்ஸ்’ அமைப்பின் ஆணைப்படி திறந்துவிடுவதற்கும், உயர்கல்வித்துறை உள்ளிட்டு கல்வித்துறை முழுவதையும் தனியார்மயத்திற்கு திறந்து விடுவதோடு மட்டுமல்ல அத்துடன் சுகாதாரத் துறையையும் முழுமையாக தனியார்மயமாக்கி பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை - 2016 என்ற சட்ட வரைவை முன்வைத்துள்ளது. 

அச்சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அது பின்வருமாறு கூறுகிறது: இன்றைய உலகமயமாக்கல் சூழலில் உயர்கல்வி மற்றும் நவீன அறிவு அதன் பயன்பாடுகள் சர்வதேசமயமாவது தவிர்க்க முடியாதது. ஆசிரியர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உலக அளவில் இடம்பெயர்ந்து செல்வது தவிர்க்க முடியாதது. கல்வித்துறை முறைமைகள் மற்றும் செயல்முறைகள் ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை அகற்றுவது; அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு மேம்பாடு; பாடத்திட்டங்கள் மற்றும் கற்றலின் பலன்களை சர்வதேசமயமாக்குவது; கல்வித் திட்டங்களை நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து கொண்டுவருவது ஆகியவையாகும். இவை அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்தும் திட்டமேயாகும்.

இந்த உள்ளடக்கத்திலிருந்து தேசிய கல்விக் கொள்கை, 2016 வரைவுச் சட்டத்தின் 4-வது பிரிவின் 18-வது உட்பிரிவு பின்வரும் திட்டங்களை முன்வைக்கிறது.

1. உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்கள் இந்தியப் பல்கலைக் கழகங்களோடு கூட்டாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும். 

2. பரஸ்பரம் இந்திய நாட்டுப் பல்கலைக் கழகங்களும் வெளிநாடுகளில் தங்கள் நிறுவனங்களைத் துவங்கலாம்.

3. வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து பயிலும் அளவுக்கு தரம் உயர்த்தப்படுவதோடு அதற்கான தடைகள் நீக்கப்படும்.

4. உயர்கல்விப் பாடத்திட்டத்தில் ஆங்கில மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் பாலம் அமைத்தல்.

5. வெளிநாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் இங்குவந்து நம் பல்கலைக் கழகங்களில் பணியாற்றுவதற்கு வசதியாக விசா, தங்கும் காலம் நீட்டிப்பு, வரிவிதிப்பு போன்ற பழைய சட்டங்கள் விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்.

6. உலகமயமாக்கலின் ஒப்பந்தப்படி அரசுத் துறை நிறுவனங்களுக்கு நிதி வழங்குவது முறைப்படுத்தப்படும்.

7. தரம் மற்றும் கல்வித்திட்டங்கள் பற்றி அங்கீகாரம் வழங்குவது, சான்றிதழ் வழங்குதலில் கட்டுப்பாடுகளை அகற்றி நவீனப்படுத்துவது.

8. கல்வித் தகுதியை ஆண்டுகள் அடிப்படையில் அல்லாமல் மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானிப்பது.

இவ்வாறு ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுக்கள் இந்தியக் கல்வித்துறையை கபளீகரம் செய்வதற்கு வசதியாக மோடி கும்பல் தேசிய கல்விக் கொள்கையை முன்வைத்துள்ளது. இது காட்ஸ் அமைப்பின் ஆணைகளை ஏற்று அமல்படுத்துவதற்கான சட்ட முன் வரைவுதான். 

அதனடிப்படையில்தான் அண்மையில் பல்கலைக் கழக மானிய கமிஷன் (UGC) இரண்டு அதிகாரபூர்வ ஆணைகளை வெளியிட்டுள்ளது.

i) பல்கலைக்கழக மானிய கமிஷன் சுயநிதி பல்கலைக் கழகங்களை ஒழுங்குபடுத்தும் ஆணை;

ii) பல்கலைக்கழக மானிய கமிஷன் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிகாட்டும் ஆணை.

இதன் மூலம் முதலில் அரசு மற்றும் தனியார்த் துறையைச் சேர்ந்த 20 பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது என்ற பேரில் அயல் நாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் மோடி அரசாங்கம் உயர்கல்விக்கு நிதியைத் திரட்டுவதற்கு அரசு தனியார் பங்கேற்பின் அடிப்படையில் உயர்கல்விக்கான நிதி அமைப்பு (Higher Education Finance Agency) என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்பு திட்டத்தின் (PPP) அடிப்படையில் நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனியார் கார்ப்பரேட்டுக்கள் ஆராய்ச்சி போன்ற பணிகளுக்கு அரசாங்க பல்கலைக் கழகங்களைப் பயன்படுத்திக் கொள்ளும். அத்துடன் அரசு கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறது. இனி மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக்கடனும் கூட நிறுத்தப்படும்.

குருகுலக் கல்வியின் மேன்மைபற்றியும், வேத காலத்திலேயே இந்தியர்கள் விஞ்ஞானத்திலும் முன்னேறி குளோனிங், பிளாஸ்டிக் சர்ஜரியை அக்காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டோம் என்று மூட நம்பிக்கையையே விஞ்ஞானமாகக் காட்டி இந்து தேசியம் பேசும் மோடி கும்பல், தரத்தை உயர்த்துவது என்றபேரில் விதேசியத்தைக் கடைபிடிக்கிறது. அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் உயர்கல்வியைத் திறந்து விட்டு புதிய காலனியக் கல்வியாக மாற்றியமைக்கிறது. படிப்பதோ இராமாயணம். இடிப்பதோ பெருமாள் கோவில். இதுதான் மோடி கும்பல் பேசும் சுதேசியம்.

4. உயர்கல்விக்கான அதிகாரம் சுயேச்சையானஅமைப்பிடம் ஒப்படைத்தல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் AICTE, UGC போன்ற உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் அந்நிய மூலதனத்திற்கு இருந்துவந்த தடைகளை அகற்றி புதிய சட்டவிதிகளைக் கொண்டுவரப்பட்டது. அதாவது அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதற்கான அயல்நாட்டு பல்கலைக் கழகங்கள் ஒழுங்கபடுத்தும் (Foreign Universities Regulation) விதிகளை 2005ஆம் ஆண்டு AICTE கொண்டு வந்தது. இதன்படி உள்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அயல் நாட்டு கல்வி நிறுவனங்கள் டிப்ளமோ, பட்டயப் படிப்பு போன்ற துறைகளில் நுழைந்தன. அதே போன்று 2012ஆம் ஆண்டு – UGC இரண்டு சட்டவிதிகளை கொண்டு வந்தது. UGC தரம் உயர்த்தல் மற்றும் பராமரிப்பு விதி-2012, உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய தரமதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கும் சட்ட விதி-2012 போன்ற ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டுவந்தது. இதன் மூலம் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான தடைகள் தளர்த்தப்பட்டன. மேலும் இத்தகைய சட்டவிதிகள் மூலம் அயல்நாட்டு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் விதிகளுக்குட்பட்டுச் செயல்பட வேண்டும். பின்தங்கிய சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதற்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வழங்குவதற்கான உத்திரவாதம் இருந்தது. ஆனால் மோடி அரசாங்கமோ இத்தகைய அரைகுறையான கட்டுப்பாடுகளையும் தகர்த்து ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுக்களின் உயர்கல்வி வேட்டைக்கு முழுமையாக ஒப்படைத்துவிட்டது. 

உயர்கல்வி குறித்து அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஏற்கனவே அரசின் கட்டுப்பாட்டில் உள்ள UGC, AICTE, NCTE, MCI  போன்ற நிறுவனங்களிடம் இருந்து பறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய பாராளுமன்றத்திற்குப் பொறுப்பற்ற ஒரு சுயேச்சையான ஒழுங்காற்று அமைப்பிடம் (Independent Regulatary Authority - IRA) ஒப்படைக்கும் துரோகத்தை மோடி கும்பல் துவங்கிவிட்டது. அத்தகைய ஒரு அமைப்பு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு ஏற்றவாறு அரசாங்கத்தின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் பாராளுமன்றமும் அமைச்சர்களும் இந்திய மக்களுக்கு அல்ல, ஏகாதிபத்தியவாதிகளின் “காட்ஸ்” அமைப்பிற்கு பதில் சொல்லவேண்டியவர்களாக மாற்றப்பட்டுவிட்டது. இவ்வாறு உயர்கல்வியில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த மோடி கும்பல் வழி செய்துவிட்டது. இந்தியாவின் உயர்கல்வி முழுமையாக புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கல்வியாக மாற்றப்பட்டு வருகிறது.

5. இந்திய உயர்கல்வியில் அந்நிய ஆதிக்கம்

அந்நிய ஏகாதிபத்திய கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் ஆரம்பத்தில் உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு உயர்கல்வியில் நுழைந்தன. இவை நான்கு வழிகளில் நுழைகின்றன. 1. நாடுகடந்து தொலைதூர கல்வி மற்றும் இணைய வழி கல்வி, 2. மாணவர்கள் பிற நாடுகளுக்கு சென்று படித்தல், 3. பிற நாடுகளில் கூட்டாகக் கிளைகளை உருவாக்குதல் மற்றும் முதலீடுகள் செய்தல், 4. ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் பிற நாடுகளுக்கு இடம் பெயர்வது போன்ற முறைகளில் அந்நிய முதலீடுகள் உயர்கல்வியில் நுழைகின்றன.

இந்தியாவில் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கம்ப்யூட்டர் மற்றும் பொறியியல் கணிதம் பற்றிய ஆராய்ச்சி, பாடத் திட்டங்களுக்கான உடன்படிக்கை செய்திருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மொழியியல் குறித்த பாடதிட்டங்களுக்கு 200 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மகிந்திரா டெக் நிறுவனம், அமெரிக்காவின் விச்சிட்டா அரசு பல்கலைக் கழகம் (Wichita, Kansas, United States) என்ற நிறுவனத்துடன் விமானப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உடன்படிக்கை செய்துள்ளது. நீட் (NIIT) பல்கலைக்கழகம் மிசௌரி கன்சாங் பல்கலைக் கழகத்துடன் கம்ப்யூட்டர் அறிவியல் முதுகலைப் பட்டயப் படிப்பிற்கும், பி.டெக் படிப்பிற்கும் ஒப்பந்தம் போட்டுள்ளது. அஸ்படா (ASPDA) என்ற முதலீட்டு நிறுவனம் மதிப்பீட்டு முறை, தேர்வு முறை, ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வித் துறைக்கான பின்னூட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய 1.8 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

மேலும் இந்திய அரசு உயர்கல்வியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதித்ததால் 2000-2014ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.4,961.8 கோடி (US $ 960 மில்லியன்) அந்நிய முதலீடுகள் நுழைந்துள்ளன. சுமார் 631 அயல் நாட்டு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதில் 441 நிறுவனங்கள் அவற்றின் தாய்நாடுகளிலிருந்தே செயல்படுகின்றன. இனி மென்மேலும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் இந்திய நாட்டின் உயர்கல்வியை கபளீகரம் செய்யும்.

6. இந்திய ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி.யும் விதேசிகளே

உயர்கல்வியை புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் வகையில் தனியார்மயமாக்கும் வணிகமயமாக்கும் கொள்கைகளை இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகள் தாங்களே சொந்தமாக உருவாக்கி அமல்படுத்தவில்லை. உலக வர்த்தகக் கழகம், காட் அமைப்புகளின் ஆணைகளுக்கு அடிபணிந்துதான் அமல்படுத்துகின்றன. பாஜகவின் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உயர் கல்வியில் தனியார்மயத்தை துவக்கி வைத்தது. காங்கிரசின் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமோ உலக வர்த்தகக் கழக ‘காட்ஸ்’ அமைப்பிடம் இந்தியாவின் உயர்கல்வியை ஒப்படைத்தது (Offer). உள்நாட்டு சட்டங்களைத் திருத்தியது. தற்போது மோடி ஆட்சியோ அதனை மூர்க்கத்தனமாக அமல்படுத்துகிறது. காட்ஸ் அமைப்பில் மன்மோகன் சிங் ஒப்படைத்ததைக் கடப்பாடாகக் (Commitment) கொண்டு அமல்படுத்துகிறது.

இவ்வாறு தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களும் அவர்களின் கட்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளின் தாளத்துக்கு ஏற்றவாறு ஆடும் ஏகாதிபத்திய தாசர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். சின்னஞ்சிறு ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் கூட உயர்கல்வியைத் திறந்துவிட மறுக்கின்றன. ஆனால் இந்திய ஆளும்வர்க்கங்களோ, ஏகாதிபத்தியவாதிகள் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கின்றனர். இந்திய நாட்டின் உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்கு திறந்துவிட்டு அமெரிக்காவின் புதிய காலனியாக இந்தியாவை மாற்றி வருகிறது. இவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கொல்லைப்புற வழியாக கள்ளத்தனமாக அமல்படுத்தப்படுகிறது. நாடு மெல்ல மெல்ல அமெரிக்காவின் மறைமுகமான காலனியாதிக்கத்திற்கு நாடாளுமன்ற திரைமறைவில் கட்டியமைக்கப் படுகின்றது. இவ்வாறு இந்திய ஆளும் வர்க்கங்கள் மானங்கெட்ட முறையில் சுதேசியத்தை விற்று விதேசியத்தை கடைபிடிக்கின்றனர். அதற்கேற்றவாறு இந்தியாவில் நடப்பில் இருந்த சட்டங்களைத் திருத்தி அமைத்து வருகின்றனர். அது நாட்டிற்கு பெரும் கேடுகளைக் கொண்டுவருகிறது.

III

உயர்கல்வியில் அந்நிய முதலீட்டால் ஏற்படும் விளைவுகள்

உலக வர்த்தகக் கழகம், காட்ஸ் ஒப்பந்தங்களின் காரணமாகவும், உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதன் காரணமாகவும் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் மிகவும் பின்தங்கிய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவிலும் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் கேடுகளைக் கொண்டுவருகின்றன.

முதலாவதாக, உலகமயமாக்கல் உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளைத் தீவிரப்படுத்திவிட்டது: தொழில்வள நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மென்மேலும் வளம் பெறுவதும், பின்தங்கிய நாடுகள் மென்மேலும் நலிவடைந்து திவாலாகி நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் ஆழம் காணமுடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற ஆங்கிலம் பேசுகின்ற வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஒரு புறம், பிற பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட நாடுகள் மறுபுறம் என இரண்டு மையங்களாக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. தரமதிப்பீடுகள், புதிய கண்டுபிடிப்புகள், அறிவுவளர்ச்சி போன்றவற்றில் ஆதிக்கம் செய்யும் நாடுகள் மற்ற நாடுகளின் அறிவுத்துறை நடவடிக்கைகளில் தலையிடுகின்றன. எனவே இன்றைய போட்டி நிறைந்த சூழலில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய நாடுகளின் கல்வித்துறை சுயேட்சையாக வளர்ச்சியடைவது என்பது குதிரைக் கொம்பேயாகும்.

இரண்டாவதாக, நாட்டிற்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து சமூக நீதியை அழிக்கிறது: காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கல்வி தனியார்மயம், வணிகமயமாவதால் உயர்கல்வியில் பணக்காரர்களுக்கும் ஏதுமற்ற ஏழை எளிய மக்களுக்குமான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களில் சேர்ந்து படிப்பார்கள். ஆனால் வரிய குடும்பங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் திறமையாகப் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் கட்டணம் கட்ட முடியாததால் உயர்கல்வியில் சேர முடியாமல் விரட்டப்படுகிறார்கள். இத்தகைய கார்ப்பரேட் கொள்கைகள்தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சமூக ரீதியாக சிறுபான்மை இனத்தினருக்கும், மதத்தினருக்கும் எதிரான சமூக ஒடுக்குமுறைகளுக்கும், பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதற்கும் காரணமாகும். அதுவே இந்தியாவில் ஏழைகளுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுவதற்கும் சமூகநீதி மற்றும் பிரதேச ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும், மாநில உரிமைகள் பறிப்பிற்கும் காரணமாக அமைந்துள்ளது.

மூன்றாவதாக, மூளைச்சுரண்டல் தீவிரமடைகிறது: உலகமயக் கொள்கைகள் புதிய சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் உலகளவில் கொண்டு செல்கிறது என்றபோதிலும், பின்தங்கிய மற்றும் மிகவும் பின் தங்கிய நாடுகளில் சிறந்த மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை ஏகாதிபத்திய நாடுகள் கொண்டு செல்கின்றன. சிறந்த மூளைச் சுரண்டலை ஏகாதிபத்திய நாடுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. ஏற்கனவே, ஏகாதிபத்தியவாதிகளின் நிதி உதவியோடு இயங்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களில் பயிலும் சிறந்த மாணவர்களை ஏகாதிபத்திய நாடுகள் கொண்டு போகின்றன. இனி இந்தப்போக்கு தீவிரமடையும். அதன் எதிர்விளைவாக ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து கருத்துக்கள் மற்றும் தகவல்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளின் பிற்போக்கான சீரழிவு கலாச்சாரம் புகுத்தப்படும். சிறந்த அறிவாளிகள் வெளியேறிவிடுவதால் இந்நாடுகளில் (ஒடுக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளில்) கல்வி நிறுவனங்களின் திறன் அழியும். 

அன்று காலனியக் கட்டத்தில் மெக்காலே கல்வியின் மூலம் பிரிட்டிஷாருக்கு சேவை செய்யும் குமாஸ்தா கல்விமுறை புகுத்தப்பட்டது. இன்று புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கல்விக் கொள்கைகள் மூலம் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் “ரோபோ”-க்களை உருவாக்குவதாக மாறிவிட்டது.

நான்காவதாக, கலை, அறிவியல் துறையில் சுயேட்சைத் தன்மைக்குத் தடை: உயர்கல்வியில் காட்ஸ் ஒப்பந்தத்தை ஏற்று அந்நிய முதலீட்டை அனுமதித்து தனியார்மயம், தாராளமயமாக்குவது என்பது நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கும் மக்களின் நலன்களுக்கும் பெரும் அபாயத்தைக் கொண்டுவருவதாகும். வேலைவாய்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட, வணிகமயமாக்கலை பிரதானமாகக் கொண்ட கல்வி முறையின் விளைவாக கலை மற்றும் அடிப்படை அறிவியல் புறக்கணிக்கப்பட்டு அடிமைப் புத்தியையே உருவாக்கும். கலையும், வரலாறும் விசாலமானப் பார்வையையும், அறிவுக் கூர்மையையும், தர்க்க ரீதியான விமர்சன பூர்வமான அறிவையும் சமூகத்துக்கு வழங்கும். அது மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. சுய சிந்தனை அழிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல அடிப்படை அறிவியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வர்த்தக ரீதியில் பொறியியல் துறை அதிகமாக விலை போகலாம். ஆனால், அடிப்படை அறிவியலை பயில்வதும் அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் மூன்றாம் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு மிக மிக அவசியமாகும். உயிரியல் ரீதியான ஆராய்ச்சி, இயற்பியல் ரீதியான அணுக்களின் ஆராய்ச்சி, மருத்துவ மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாறில்லை என்றால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். ஏற்கனவே அறிவுசார் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் சுயேச்சையான கண்டுபிடிப்புகளைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செய்ய விரும்பும் ஏகாதிபத்தியவாதிகளின் சதிகளுக்கு உட்பட்டு அதிக விலையை நாடு கொடுக்க வேண்டிவரும். 

இவ்வாறு ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கு சேவை செய்யும் புதிய காலனியக் கல்வி முறைதான் ஏழைஎளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக மாற்றுவதுடன், கிராமப்புற சுகாதார சீரழிவிற்கும், சமூக நீதி ஒழிப்பிற்கும், மாநிலங்களின் உரிமைகள் பறிப்பிற்கும் காரணங்களாக அமைகின்றன. இத்தகைய புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைகளுக்கு செவை செய்யும் விதத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

IV

ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கான அநீதியான சட்ட விரோதமான நீட் தேர்வுமுறை

நீட் தேர்வு முறையை மோடி அரசாங்கம் புகுத்தினாலும் அச்சட்டத்தைக் கொண்டு வந்தது மோடி அரசாங்கம் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம்தான் அதைக் கொண்டு வந்தது. உண்மையில் நீட் தேர்வு உலக வர்த்தகக்கழகத்திற்கு தேவை. இந்திய மக்களுக்கு அல்ல. 

நீட் தேர்வின் தேவைப் பற்றி உலக வர்த்தகக்கழகம் (WTO) சொல்வதாவது: “நாங்கள் நிதி மூலதனத்தை ஒரு நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அந்த நாட்டின் எந்தவொரு சட்டமும் தடையாக இருக்கக் கூடாது. இந்தியா போன்ற பல்தேசிய இனம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் (Federal) பின்பற்றக் கூடிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலமும், தனித்தனியான பாடத்திட்டமும், வெவ்வேறு தேர்ச்சி முறைகளும் வைத்திருப்பது எங்களுக்கு சரிபட்டுவராதுஞ். பொதுவான வரையறைகளைக் கொண்டு வந்தால் மட்டுமே எங்களது வேட்டைக்கு உதவியாக இருக்கும்” என்கின்றனர். எனவே ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு ஏதுவாக உலக வர்த்தகச் சந்தையின் கீழ் இந்தியாவின் உயர்கல்வியை மாற்றிக் கொடுப்பதுதான் இந்த நீட் தேர்வு முறையாகும்.

நீட் தேர்வு திணிக்கப்பட்டு மருத்துவக் கல்வியின் கழுத்தை அறுத்துள்ளதானது அது ஏழைகளுக்கு எதிரானது, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு எதிரானது, அரசியல் சட்டத்திற்கு எதிரானதுமாகும். இந்தியாவில் நிலவும் பன்முகத் தன்மையாலும், அதன் கூட்டாட்சி முறைகளாலும் அரசியல் சட்டமானது மாநிலங்கள் தங்களின் அரசாங்க ஒதுக்கீட்டிற்கான தேர்வுகளைத் தாங்களே நடத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் சொந்தமாக நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்வதற்கும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் தேர்வை நடத்திக் கொள்ளவும் சட்ட ரீதியான பாதுகாப்பு உண்டு. 

இது போன்ற தேர்வுகளில் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. தனியார் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சேர்ப்பது, கல்விக் கட்டணங்களை அதிகமாக வசூலிப்பது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன என்பது உண்மையே. அதற்கெல்லாம் 2002ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு சரியான முறையில் தீர்வுகண்டது. ஆனால் இந்திய மருத்துவக் கழகமோ இத்தீர்ப்பையெல்லாம் குழிதோண்டி புதைத்துவிட்டு நீட் தேர்வை இந்தியா முழுவதும் திணித்துள்ளது.

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு இத்தகைய ஒரு சட்டம் பொருந்தாததும் அவசியமற்றதுமாகும். அதற்கான காரணங்களை பின்வருமாறு கூறலாம்.

1. பல்வேறு தரத்தில் உள்ள மாணவர்களுக்கு ஒரே தேர்வு ஒரு மோசடி: 

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதற்கே உரிய, அம்மாநில தேவைகளுக்கும் தகவமைப்பிற்கும் ஏற்ற சிறப்பு அம்சங்களை அதாவது பாடத்திட்டம், பாட உள்ளடக்கம், தரம் போன்றவைகளைக் கொண்டுள்ளன. “ஒருநாடு”, “ஒரே தரப்பட்டியல்” என்பதெல்லாம் எட்டமுடியாதது என்பது மட்டுமல்ல. அது ஒருதலைப்பட்சமானதாகும். கர்நாடகா (KCET), ஆந்திரா மற்றும் தெலுங்கானா (EAMCAT) கல்வி என்று அவரவர்களுக்கு ஏற்ற கல்வி முறைகளைக் கொண்டுள்ளன. எனவே ஒரே தரத்தில் தேர்வு என்பது மோசடியேயாகும். மாநிலங்களின் கல்வித்திட்டம் என்பது முதல் தலைமுறை கற்பவர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ளன. எனவே அவர்களுக்கு ஏற்றவாறு கல்வித்திட்டம் உருவாக்க வேண்டியுள்ளது. தமிழ் நாடு ஐ.எஸ்.சி அல்லது சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றுக்குள் இருக்கும் தர வேறுபாடுகள் மிகவும் அதிகம். 

2. தேவைக்கு அதிகமான தர நிர்ணயம்: 

அடுத்து நுழைவுத் தேர்வில் உள்ள “நேர்மையற்ற எதிர்மறை விளைவுகள்”. ஜே.இ.இ. (JEE) போன்ற நமது பல நுழைவுத் தேர்வுகள் பொறியியல் படிப்பிற்கு தேவையானதைவிட அதிக தரத்தில் நடத்தப்படுகின்றன. பி.டெக் பட்டப் படிப்பில் சேர்வதற்கு மாநிலப் பாடத்திட்டத்தின்படியான இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்கள் போதுமானது. IITக்கு நடத்தும் தேர்வு போன்று அதிக தரம் தேவையில்லை. எனவே பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் ஒரு நாட்டில் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நுழைவுத் தேர்வுக்கான குறைந்தபட்ச பொது வரையறையைக் கொண்டிருக்க வேண்டும்.

3. மத்திய அரசு நடத்தும் பொதுத் தேர்வில் பாரபட்சம்: 

மையப்படுத்தப்பட்டத் திட்டம் படுதோல்வியில்தான் முடியும். இந்தியாவில் மையப்படுத்தப்பட்டத் தேர்வு நியாயமான முறையில் நடத்த முடியவில்லை. உதாரணமாக சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.இ தேர்வுகளில் மதிப்பெண்கள் ரகசியமாக திருத்தப்பட்டு (Rigging) 10-12 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துள்ளது என்பது பலமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள செல்வாக்கு மிகுந்த கல்வி நிறுவனங்களுக்கு ஒரு தலைபட்சமாக சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு படிப்பவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் ஆங்கிலப் பாடத்தில் வழங்கப்பட்டதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அம்பலப்படுத்தியது. சி.பி.எஸ்.இ தேசிய பாடத் திட்டத்தின் கீழ் உள்ள டெல்லி மற்றும் வட இந்திய கல்வி நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செய்கிறன. டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு பாரபட்சமான முறைகளில்தான் பிரதிநிதித்துவ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

4. நீட் தேர்வு முறையில் கார்ப்பரேட்டுக்களின் கொள்ளை: 

தரம் என்ற பேரில் லாபம் ஈட்டும் தேர்வுத் தொழில் இந்தியா முழுவதும் ஒரே தேர்வு நடத்துவதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறி தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்குக் கொடுக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. இதற்குப் பின்னால் தேர்வுகளையே லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றும் கார்ப்பரேட்டுக்களின் நலன்கள் ஒளிந்துள்ளது. ஆண்டுதோறும், இந்தியாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இத்தேர்வைத் தனியார் பெரும் நிறுவனங்களே நடத்தப்போகின்றன. நீட் தேர்வை புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்தியது. மாணவர்கள் செலுத்திய கட்டணம் இந் நிறுவனத்துக்குத்தான் சென்றது. நுழைவுத் தேர்வால் வரும் வருவாய் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் நீட்டிலிருந்து விலக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது.

இந் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திடவே, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா போன்ற படிப்புகளுக்கும், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் போய் மருத்துவம் படிக்க விரும்புகிறவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறது. மருத்துவப் படிப்பை முடித்து, பயிற்சி மருத்துவத்தையும் முடித்த உடன் ‘நெக்ஸட்’ என்ற ‘எக்ஸிட்’ தேர்வை எழுத வேண்டும் எனக் கூறுகிறது. நீதிபதி நியமனத்துக்கும் தேர்வு கொண்டுவரப்படும் என்கிறது. போட்டித் தேர்வுகளை நடத்துவதற்காகவே, ‘தேசியத் தேர்வு முகமை’ என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களே போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளன. மோடியின் ‘மேக் இன் இந்தியா’ வின் லட்சணம் இதுதான்.

5. கிராமப்புற சுகாதாரம் சீர்குலைவு: 

பேராசிரியர் அனில் சடகோபால் கூறுவதாவது: “உலக வர்த்தக அமைப்பிற்கு சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில் ஒன்று இந்திய சுகாதாரத்துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குதடையில்லாமல் அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால் இந்திய நாட்டின் பொதுத்துறையைச் சிதைக்க வேண்டும். அதை சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு. இப்போதுள்ள இந்த மருத்துவக் கல்விமுறையில் மாணவர்கள் சிலகாலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடுஉள்ளது. அத்துடன் அத்தகைய மாணவர்கள் உயர் படிப்பில் சேர வேண்டுமானாலும் அவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றும் காலத்தைக் கணக்கில் கொண்டு கூடுதல் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் இனி நீட் தேர்வினால் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவ மனைகள் வரும்” என்று கூறுகிறார். இதனை நிரூபிக்கும் விதமாகத்தான் அண்மையில் மோடி அரசு, அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை துவக்கிவிட்டது. ஏற்கனவே அரசு மருத்துவ மனைகளில் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லுதல், பிணத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் கூட இல்லாதது, தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் போன்ற ஒரு சூழலில் மருத்துவ மனைகளே மயானங்களாக மாறும். மோடி கும்பலின் இந்த நடவடிக்கை பெருமளவிலான ஏழை எளிய மக்களின் உயிர் பலிக்குத்தான் வழிவகுக்கும்.

6. தூக்கில் தொங்கிய சமூகநீதி: 

‘நீட்’ தேர்வினால் மருத்துவக் கல்விக்கான கட்டாயக் கட்டணத்தை ஒழிப்பதுடன் கட்டணம் குறையும் என்று மோடி கும்பல் கூறுகிறது. ஆனால் நுழைவுத் தேர்வு மூலம்தான் இனி மாணவர் சேர்க்கை என்ற நிலை ஏற்பட்டதும், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நடத்தும் கல்வி வியாபாரிகள் கட்டாய நன்கொடை என்ற பேரில் மறைமுகமாக வசூலித்து வந்த தொகையை மருத்துவக் கல்வி கட்டணமாக மிகவும் உயர்த்தியதன் மூலம் லாப வேட்டையைத் தொடர்கின்றனர். வருடத்திற்கு சுமார் ரூ.2 லட்சம் கல்விக் கட்டணம் என்று இருந்ததை ரூ.15 லட்சம், ரூ.20 லட்சம் என்று உயர்த்திவிட்டனர். வெளியில் தெரியாமல் இன்று மருத்துவ இடம் ஒன்று 1 கோடிக்கும் மேல் விலை போகிறது. கட்டணக் கொள்ளையை நீட் தேர்வால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதற்கு 2016-17 ‘நீட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திய தனியார் மருத்துவ மனைகள் வசூலித்த தொகைகளே சாட்சி.

‘நீட்’ தேர்வு உயர்கல்வியில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வேறுபாடுகளை கணிசமாக அதிகரித்துவிட்டது. நீட் தேர்வுக்கு தயாரிக்க டியூஷன் படிப்பதற்கே ரூ.3,00,000 செலவாகும் என்று கூறப்படுகிறது. இனி பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் பணத்தைக் கொண்டு இடங்களைக் கைப்பற்றிக் கொள்வர். ஆனால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று திறன் பெற்றிருந்தாலும் கூட தெருவில் வீசி எறியப்படுவர். ஆனால், பள்ளிக்கே போகாமல் டியூஷன் படித்துவிட்டு பணக்காரவீட்டுப் பிள்ளைகள் மருத்துவராகலாம்.

அத்துடன் நீட் தேர்வு என்பது இந்திய அளவிலான இந்திய மாணவர்களுக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வல்ல. மாறாக, அயல்நாட்டு மாணவர்களுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கும் நீட் தேர்வை நடத்தியுள்ளனர். இவ்வாண்டு அயல் நாட்டு மாணவர்கள் - 245 பேர்களும்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) - 1106 பேர்களும், இந்திய வம்சாவழியினரின் வாரிசுகள் (PIO)-47 பேர்களும், கடல்கடந்த இந்தியர்கள் (OSI)-321 பேர்கள் என மொத்தம் 1474 மேட்டுக்குடியினர் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு இடமும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 3 மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. நீட் தேர்வால் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பாருங்கள். சென்ற ஆண்டில் (2016-17) எம்.பி.பி.எஸ்-இல் சேர்ந்தோர் பட்டியல் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் - 3546, சி.பி.எஸ்.இ மத்திய பாடத்திட்ட மாணவர்கள் - 62 பேர் மட்டுமே! 2017-18 இவ்வாண்டு எம்.பி.பி.எஸ்-இல் சேர்ந்தோர் பட்டியல் மாநில பாடத்திட்ட மாணவர்கள் - 2314, சி.பி.எஸ்.இ. மத்திய பாடத்திட்ட மாணவர்கள் - 1220 பேர்! இதில் இவ்வாண்டு பிளஸ் 2-வில் படித்து எம்.பி.பி.எஸ்-இல் இடம் பெற்றவர்கள் 1310 பேர் மட்டுமே. மற்ற 1004 பேர் முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று பல லட்சம் ரூபாய் செலவழித்து பயிற்சி பெற்று வெற்றிபெற்றவர்கள். இதில் பெரும்பாலும் பார்ப்பனச் சாதியினரே பலனடைந்துள்ளனர். பிற உயர்சாதிகளைச் சேர்ந்தோர் குறைவே. சென்ற ஆண்டு முன்னேறிய சாதி - பார்ப்பனர் - 108 பேர் அதாவது 3 சதவீதம். ஆனால் இவ்வாண்டு நீட்டினால் சேர்ந்தவர்கள் - 353 பேர், அதாவது கிட்டதட்ட 10 சதவீதம். இதனால் பெரிதும் மருத்துவ இடங்களை இழந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்டவர்களே ஆகும். இவ்வாறு போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை நீட் தேர்வுமுறை ஒழித்து விட்டது. சமூகநீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது.

ஆனால், தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கட்டணங்களைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கேரளம் போன்ற மாநிலங்களில் இடங்களைத் திரும்ப ஒப்படைக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 5,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் 3.09.2017 வரை காலியாக இருந்தன. ஒருபுறம், மருத்துவ இடம் கிடைக்காததால் தற்கொலை. மறுபுறம், மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும் நிலை. கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே, குறைவாக உள்ள அரசு மருத்துவக் கல்வி இடங்களில் சேர, மிக அதிகமானோர் போட்டிபோடுகின்றனர். இதனால், நீட் போன்ற தேர்வுகள் புகுத்தப்பட்டு, அனிதா போன்ற திறமையான மாணவர்கள் வடிகட்டப்படுகின்றனர்.

எனவே நீட் தேர்வு என்பது தகுதிப்படுத்துவதற்கான தேர்வல்ல; பணமே தகுதிக்கு அடிப்படையாக மாறிவிட்டது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் என விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளை வடிகட்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் பார்க்க முடியும். இத்தகைய தனியார், தாராளமயக் கொள்கைகள்தான் இன்று சமூக நீதியைப் பறிப்பதாக உள்ளன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழித்து மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றும் ஒரு திட்டமாகத்தான் இந்த நீட் தேர்வுமுறை உள்ளது. தேசிய தகுதித் தேர்வு எனும் இத்தகைய மோசடி தேர்வுதான் அனிதா-க்களை படுகொலை செய்துள்ளது. எனவே கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் நீட் தேர்வு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஒரு தேர்வுமுறையாகும்.

7. மாநிலங்களின் உரிமைப் பறிப்பு: 

பிராந்திய, பொருளாதார, பண்பாடு ரீதியாக ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே தேர்வு என்பது மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் குவித்துக் கொள்ளும் ஒரு எதேச்சதிகாரப் போக்காகும். இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக அரசு கல்லூரிகளை உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசாங்கத்திற்கு தான் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூட மாணவர்கள் சேர்க்கையை நடத்த அதிகாரம் இல்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.

கல்வி என்பது முதலில் மாநில அரசிற்குரிய பட்டியலாகத்தான் இருந்தது. நெருக்கடி நிலை காலகட்டத்தின் போது இந்திராகாந்தி அரசியல் சாசனத்தில் 42-வது திருத்தத்தைக் கொண்டுவந்து கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றினார். கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாறியதால்தான் கல்வியின் மீதான ஆதிக்கம் மத்திய அரசுக்கு கிடைத்துவிட்டது. தற்போது மோடி அரசாங்கமோ ஏகாதிபத்திய கார்ப்பரேட் கம்பெனிகள் கல்வித் துறையைக் கபளீகரம் செய்வதற்கு உயர்கல்வி அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டது. அது இந்துத்துவக் கும்பலின் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற ஒற்றை ஆட்சி முறைக்கு சேவை செய்வதுமாகும். எனவே கல்வி முழுவதையும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதன் மூலம் நீட் தேர்வுக்கு முடிவுகட்ட முடியும். மாறாக ஒராண்டிற்கு விலக்கு அல்லது மூன்றாண்டுக்கு விலக்கு என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் மோசடியாகும். 

மேலும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 15(A)-க்கு 1952ஆம் ஆண்டு கொண்டுவந்த திருத்தத்தின்படி சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பழங்குடியினரது முன்னேற்றத்திற்காகச் செயல்படும் மாநில அரசின் சிறப்பு ஏற்பாடு எதனையும் யாராலும் தடுக்க முடியாது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநில அரசுகள் மேற்கண்ட உரிமைகளைக் காப்பதற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையுமில்லை. தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டையும் கூட அப்போதுதான் காப்பாற்ற முடியும். எனவெ கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுவதுமாக மாற்றுவதுதான் தீர்வாகும். ஆனால், எத்தகைய அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பினும் தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையின்றி அதை அது பயன்படுத்த முடியாது. எனவே அதற்காகப் போராடுவது அவசியம் என்ற அதே வேளையில் உடனடியாகக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் போராடுவது உடனடி தேவையாகும்.

8. நீட் தேர்வில் லஞ்ச ஊழல்: 

அமெரிக்காவின் புரோமெட்ரிக் நிறுவனம் முதன் முதலாக இவ்வாண்டு நடத்தி முடித்த நீட் தேர்வில் நடந்த ஊழலும் வினாத்தாள் வெளியாகி தகுதி இல்லாதவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துவிட்டதை நாடே அதிர்ச்சியுடன் பார்க்கிறது. நீட் தேர்வு நடத்துவதற்கான அமைப்பில் முக்கிய முடிவு எடுக்கும் இடத்தில் மாபெரும் ஊழல் சக்கரவர்த்தியான முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேட்டன் தேசாய் என்றால், அந்த அமைப்பின் யோக்கியதை எந்தளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஊழலை திட்டமிட்டுத் நடத்தி தகுதி உள்ள மாணவர்கள் சேரமுடியாமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஊழலே இல்லாத அதிகாரிகளாக இருந்தாலும் ஏழைஎளிய மக்களை ஏமாற்றும் தேர்வுதான் இந்த நீட் தேர்வு முறை. 

தொகுத்துக் கூறினால், மோடி அரசாங்கம் இந்திய நாட்டின் உயர்கல்வியை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு அர்ப்பணிக்கும் புதிய கல்விக் கொள்கையும், நீட் தேர்வும் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டதல்ல; அது இந்தியமயமாக்குவதற்காகக் கொண்டுவரப் பட்டதுமல்ல; ஏகாதிபத்திய உலகமயமாக்கலால் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்டதாகும். எப்படி ஏகாதிபத்திய நாடுகளிலேயே கார்ப்பரேட் மயம் என்பது எப்படி உயர் கல்வியை வணிகமயமாக்கி சமூக ரீதியான பாகுபாடுகளுக்கும், பிரதேச ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்கும் இக்கொள்கைகள் இட்டுச் சென்றதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் இக்கொள்கைகள் ஏழைஎளிய மாணவர்களுக்கு கல்வி உரிமையை மறுத்து சமூக நீதிக் கொள்கைகளுக்கு சவக்குழி வெட்டுகிறது. மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கிறது. 

ஒரு நாடு, ஒரே தேர்வு என்பது இந்துத்துவப் பாசிசத்திற்கு சேவை செய்யும் என்பது உண்மையே. இச்சட்டம் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளால் திணிக்கப்பட்டு, இந்துத்துவ பாசிச சக்திகளால் அமல்படுத்ததப்பட்டதாகும். மேலும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற இந்து மதவாத பாசிச கொள்கைகள் கூட ஜெர்மனியின் இட்லரிடமும், பாசிச அமைப்பு வடிவங்களை இத்தாலியின் முசோலினியிடமிருந்தும் எடுத்துக் கொண்டதுதான். இந்துத்துவப் பாசிச சக்திகள் பாசிசத்திற்கான தத்துவம் மற்றும் அரசியலை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தே கற்றனர். அதன் தொடர்ச்சிதான் இன்றைய இந்துத்துவப் பாசிசம். இன்று சமூக நீதியை அழிக்கும், மாநில உரிமைகளைப் பறிக்கும் கொள்கைகளும் கூட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து அப்படியே எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு இந்துத்துவப் பாசிசம் என்பது ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதாகும்.எனவேதான் இந்துத்துவப் பாசிசத்தை கார்ப்பரேட் பாசிசம் என்கிறோம். அதை வெறும் பார்ப்பனப் பாசிசமாகக் குறுக்க முடியாது. எனவே நீட் தேர்வை முறியடிப்பதற்கான போராட்டம் என்பது ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தப் போராட்டமாக அமைய வேண்டும். அதுவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வாகும். ஆனால் நாடாளுமன்றவாத எதிர்க்கட்சிகளோ நீட் எதிர்ப்பில் ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டை மேற்கொள்ளுகின்றன.

V

நாடாளுமன்றவாத எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாதம்

ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு குறிப்பாக அமெரிக்க நிதி மூலதன கும்பல்களுக்கு இந்திய நாட்டின் உயர்கல்வியைத் தாரைவார்ப்பதிலும், நீட் தேர்வைத் திணித்து சமூக நீதியை ஒழித்து, மாநிலங்களின் உரிமையைப் பறித்து ஏழைஎளிய மாணவர்களை வதைப்பதிலும் காங்கிரசும் பாஜகவும் ஒன்றுதான். உண்மையில் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் சேவை செய்வதில் இக்கட்சிகள் இரண்டும் போட்டிப் போடும் கட்சிகளாகும். இக்கட்சிகள் இரண்டையும் எதிர்த்துப் போராடிதான் உயர்கல்வியை மீட்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் முடியும். 

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதேச ரீதியான தரகுமுதலாளித்துவக் கட்சிகளும், சமூக நீதி பேசுகின்ற கட்சிகளும் பெரும்பாலும் உயர்கல்வியை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதையும், நீட் தேர்வையும் ஆதரிக்கின்றன. சில கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறினாலும் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில்லை. எனவே இக்கட்சிகளின் எதிர்ப்பு போலித்தனமானதே.

சமூகநீதி பேசும் திராவிடக் கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறுகின்றன. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வை அனுமதிக்க முடியாது என்று சவால் விட்டார். ஆனால் அம்மாவின் ஆட்சியை அமைத்துள்ளதாகக் கூறிக்கோண்டிருக்கும் எடப்பாடி, பன்னீர்செல்வம் கும்பலோ மோடி ஆட்சியிடம் சரணடைந்து தங்களின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் காத்துக்கொள்ள தமிழகத்தின் உரிமைகளைக் காட்டிக்கொடுத்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்களைச் சிறையில் தள்ளுகிறது.

திமுகவோ நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு உயர்கல்வியைத் தாரைவார்த்ததையும், நீட் தேர்வுமுறைக்கும் மன்மோகன் ஆட்சியின்போது ஆதரவளித்து வாக்களித்தது. திராவிடக் கட்சிகள் ஒரு புறம் சமூக நீதி பேசிக் கொண்டே மறுபுறம் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை தனியார்மயமாக்கி வணிகமயமாக்கி கொள்ளையைடிப்பதில் உச்ச நிலையை எட்டிவிட்டன. எனவே இக்கட்சிகளின் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது வெறும் வாக்குவங்கி அரசியல் மட்டுமல்ல; இது ஒரு மாபெரும் மோசடியுமாகும்.

சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற திருத்தல்வாதக் கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து கடுமையாகப் போராடுகின்றன. கல்வி வணிகமயமாவதையும் எதிர்க்கின்றன. மன்மோகன் தலைமையிலான UPA-I ஆட்சியின்போது உயர்கல்வி குறித்து கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்தன. ஆனால் தற்போது இக்கட்சிகள் மாநிலங்களவையில் நீட் தேர்வை எதிர்த்து வாக்களிக்கவில்லை. மேலும் உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை (There is no alternative) என்று கூறி புதிய தாராளக் கொள்கைகளை ஆதரிக்கின்றன. ஏகாதிபத்திய புதிய தாராளக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. கல்வியில் தனியார்மயத்தை எதிர்க்கவும் இல்லை. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்று பேசுகின்றன. அத்துடன் அக்கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதில் கூட மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு நிலை எடுக்கின்றன. அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தை அக்கட்சி மேற்கொள்ளத் தயாரில்லை. இவ்வாறு அக்கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாத நிலைபாட்டை மேற்கொள்கின்றன.

தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் உலகமயக் கொள்கைகளையும், உயர்கல்வியை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் காட் ஒப்பந்தத்தையும் மூடி மறைக்கின்றன. இந்தியமயமாக்கல், பார்ப்பன சதி என்று பேசுகின்றன. நீட் தேர்வு பார்ப்பனர்களால் கொண்டுவரப்படவில்லை. காட் அமைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்தான் திணித்தன. நீட் தேர்வை நடத்தியதும் கூட ஒரு அமெரிக்க கார்ப்பரேட்தான். அதுதான் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வியை எட்டாக் கனியாக்கி சமூக நீதியை ஒழிக்கிறது என்பதை மூடி மறைத்து வெறும் பார்ப்பன எதிர்ப்பாகக் காட்டி மாணவர்களையும் மக்களையும் திசை திருப்புகின்றன. அதன் அடிப்படையில் அரசியல் சக்திகளை முன்னிறுத்துகின்றன. அதுபற்றி பின்வரும் நிலைபாட்டை அவர்கள் முன்வைக்கின்றனர்.

“நீட் ஆதரவு என்பது இந்தியமய ஆதரவு. இந்தியமய ஆதரவு என்பது பார்ப்பன முதன்மைக்கும் பார்ப்பனியத்துக்குமான ஆதரவு. ‘நீட்’ எதிர்ப்பு என்பது இந்தியமயத்துக்கான எதிர்ப்பு, மாநில உரிமை எனப்படும் தேசிய இன உரிமைக்கான ஆதரவு. ஒருபுறம் இந்தியமயமும் பார்ப்பன, பார்ப்பனிய நலனும் கைகோர்த்து நிற்கின்றன. மறுபுறம் மாநில உரிமை எனப்படும் தேசிய இனவுரிமையும் சமூக நீதியும் கைகோர்த்து நிற்கின்றன. நீட் போராட்டக் களத்தில் இதுதான் சமூக ஆற்றல்களின் அணிவகுப்பு” என்று மதிப்பிடுகின்றன. ஆனால் உண்மை என்ன?

உண்மையில் இன்று களத்தில் ஒருபுறம் ஏகாதிபத்திய பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும், இந்திய ஆளும் வர்க்கங்களும் மறுபுறம் சாதி, மதம், இனம் கடந்த பரந்துபட்ட தேசபக்த புரட்சிகர ஜனநாயக ஆற்றல்கள் அணிவகுக்கின்றன. இந்தப் போக்குதான் வளரும் போக்காகும். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பிரச்சினையின் முழுமையைக் காண மறுத்து பகுதியை முன்னிறுத்துவது என்ற பின் நவீனத்துவ அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். அது பார்ப்பதற்குப் புரட்சிகரமானத் தோற்றமளித்தாலும் உண்மையில் குட்டி முதலாளித்துவ வர்க்கங்களின் ஏகாதிபத்திய பிற்போக்கு சீர்திருத்த வாதமேயாகும்.

VI

பாட்டாளி வர்க்க இயக்க நிலைப்பாடு

பாட்டாளி வர்க்க இயக்கத்தைப் பொறுத்தவரை இந்திய அரசு அமல்படுத்தி வரும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் காட் ஒப்பந்தத்தை அமல்படுத்தி உயர் கல்வியைத் தனியார் மயமாக்கும், வணிகமயமாக்கும் கொள்கைகளை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கோருகிறது. அத்துடன் அதற்கு சேவை செய்யும் நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழித்துக்கட்ட வேண்டும் என கோருகிறது. இதையெல்லாம் இந்திய அரசு காட் அமைப்பிலிருந்து வெளியேறும் போது மட்டுமே சாத்தியம். 

அத்துடன் நாட்டின் கல்விமுறை முழுவதையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியம், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகக் கல்விமுறையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசியம் என்பதன் பொருள் மொழிவழி தேசியமேயாகும். இந்தியாவில் தேசிய விடுதலை என்பது இரண்டு கடமைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, இந்தியா முழுவதும் உள்ள தேசிய இனங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை அடைவது. இரண்டு, இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் பிரிந்துசென்று தனி அரசு அமைத்துக்கொள்வதற்கான சுதந்திரத்துடன் கூடிய சுயநிர்ணய உரிமையைப் பெறுவதாகும். அது போலவே நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சியும் இரண்டு கடைமைகளைக் கொண்டது ஆகும். அதாவது நிலவுடைமை முறையை ஒழித்து நிலச்சீர்திருத்தம் மற்றும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலான வேலைப் பிரிவினையின் அடிப்படையிலான சாதி முறைகளுக்கும், தீண்டாமைக்கும் முடிவு கட்டுவது. அடுத்து கல்வித்துறையை மதத்திலிருந்து விடுவித்து மதச்சார்பற்றக் கல்வியையும், விஞ்ஞானக் கல்வியையும் வழங்குவது, பெண் அடிமைத்தனத்தை எதிர்த்த ஜனநாயகக் கல்வியை வழங்குவது என்ற புதிய ஜனநாயகக் கல்வித் திட்டமே பாட்டாளி வர்க்கத்தின் திட்டமாகும். அது மக்கள் ஜனநாயகப் புரட்சி மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும். 

எனினும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும், கிராமப்புற சுகாதாரத்தை அழிக்கும், சமுகநீதிக்கு சவக்குழி வெட்டும், மாநில உரிமைகளைப் பறிக்கும் புதிய காலனிய உயர் கல்விக் கொள்கைகளை எதிர்த்தும், நீட் தேர்வை ஒழிக்கவும் இந்திய அரசை உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறக் கோரி பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் மாணவர்களும் அனைத்து உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு மோடி அரசை எதிர்த்துப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

  • கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும், சமூக நீதியை ஒழிக்கும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வைத் திரும்பப் பெறு!
  • புதிய காலனிய உயர்கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
  • இந்திய அரசே! உலக வர்த்தகக் கழகத்தை (WTO) விட்டு வெளியேறு

- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

2017