யூத இன அழிப்பு குறித்து லெனின் உரை- 8

கிராமபோனில் (இசைத்தட்டு) பதிவு செய்யப்பட்ட ஆண்டு: மார்ச் 1919 இறுதியில்

யூத இன அழிப்பு குறித்து லெனின் உரை- 8

யூதர்களுக்கு எதிரான பகைமை உணர்ச்சி பரப்பப்படுவதையே யூத-எதிர்ப்பு என்கிறோம். கேடுகெட்ட கொடுங்கோலன் ஜார் மன்னின் ஆட்சி தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அப்பாவித் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் யூதர்களுக்கு எதிராக தூண்டிவிட்டது. ஜார் மன்னனின் காவல்துறை நிலவுடைமையாளர்களுடனும், முதலாளிகளுடனும் கூட்டு சேர்ந்துகொண்டு யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நடத்தி வந்தது. வறுமையின் கொடுமை தாழாத தொழிலாளர்களும், விவசாயிகளும் கொதித்து போயிருந்த சமயத்தில், இவர்களின் எதிர்ப்பை மடைமாற்றுவதற்காகவே யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும் கட்டவிழ்த்துவிட்டனர். உழைக்கும் மக்களின் உண்மையான எதிரியான மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை மடைமாற்றுவதற்காகவே யூத எதிர்ப்பு முதலாளிகளால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நம்மால் பிற நாடுகளிலும்கூட அடிக்கடி காண முடிகிறது. எந்தெந்த நாடுகளிலெல்லாம் பண்ணையடிமை முறையும், கொத்தடிமை முறையும் படுமோசமாக இருக்கிறதோ அங்கெல்லாம்தான் படுமோசமான அறியாமையும் (பாமரத்தனமும்) விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. அந்த மாதிரியான நாடுகளில் மட்டும்தான் யூத எதிர்ப்பும் தூண்டப்படுகிறது.  யூதர்களுக்கு எதிரான அவதூறுகளையும், பொய்யுரைகளையும் அதிகம் ஒடுக்கப்பட்ட, பாமர மக்கள் மட்டுமே நம்புவார்கள். கடந்தகால நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் தொடர்ச்சிதான் இது. மாற்றுக் கருத்துடையவர்களை, கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் வழக்கம் அன்று நிலவியது. பண்ணையடிமை முறை கோலாச்சிய காலத்தில் மக்களும் ஒடுக்கப்பட்டனர், அவர்களின் கருத்துகளும் ஒடுக்கப்பட்டது. பண்டைய காலத்திலும், நிலப்பிரபுத்துவ காலத்திலும் நிலவி வந்த மூடத்தனம் இப்போது மறைந்து கொண்டே வருகிறது; இக்காலத்தில் மக்கள் அறிவொளி பெற்று வருகிறார்கள்.

உழைக்கும் மக்களின் எதிரி யூதர்கள் அல்ல. எல்லா நாடுகளிலும் உள்ள முதலாளிகளே உழைக்கும் மக்களின் எதிரிகளாவர்.  யூதர்கள் மத்தியிலும் உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். அவர்களே பெரும்பான்மையினராகவும் உள்ளனர். அவர்கள் நமக்கு சதோதரர்களே, நம்மைப் போல அவர்களும் மூலதனத்தால் ஒடுக்கப்படுகிறார்கள்; சோசலிசத்தை படைப்பதற்கான போராட்டத்தில் அவர்கள் நமது தோழர்களே. ருஷ்யர்களில் இருப்பது போல, எல்லா நாட்டு மக்கள் மத்தியிலும் இருப்பது போல யூதர்கள் மத்தியிலும், குலாக்குகள்(ருஷ்யாவிலிருந்த பணக்கார பெருவிவசாயிகள்), சுரண்டல்காரர்கள், முதலாளிகள் இருக்கின்றனர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இடையில் பகைமையை விதைப்பதற்காகவும், விரோதத்தை வளர்ப்பதற்காகவும் முதலாளிகள் கடுமையாக முயன்று வருகிறார்கள். மூலதனத்தின் பலமும், அதிகாரமும்தான் உழைக்காதவர்களை அதிகாரத்தில் உட்கார வைத்துள்ளது. பணக்கார ருஷ்யர்கள் மட்டுமல்லாது எல்லா நாடுகளிலும் உள்ள பணக்காரர்களைப் போல பணக்கார யூதர்களும் உழைக்கும் மக்களை ஒடுக்குவது, சுரண்டுவது, உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற விஷயத்தில் ஒற்றுமையுடனே செயல்படுகிறார்கள்.

யூதர்களை துன்புறுத்தி, படுகொலை செய்த கேடுகெட்ட ஜாரின் கொடுங்கோல் ஆட்சி வெட்கக் கேடானது மட்டுமல்ல, ஒழிக்கப்பட வேண்டியது. அதேபோல, யாரெல்லாம் யூதர்களுக்கு எதிரான, பிற நாடுகளுக்கு எதிரான வெறுப்பை வளர்த்தார்களோ அவர்களின் செயலும் வெட்கக்கேடானது, தண்டிக்கப்பட வேண்டியது.

மூலதனத்தை தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் அனைத்து நாட்டு உழைக்கும் மக்களின் ஒற்றுமையும், தோழமை உறவும் நீடூழி வாழட்டும்.

(முதல் பதிப்பு: கிராமபோன் பதிவுகளில் உள்ளபடியே பதிப்பிக்கப்பட்டது; 1919க்கும் 1921க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பத்திரிகைகள் தயாரிப்பது மற்றும்விநியோகம் செய்வதற்கான அகில ரஷ்ய மத்திய செயற்குழுவின் மைய நிறுவனமான Tsentropechat ஆல் இந்த உரைகள் தொகுக்கப்பட்டது.

ஆதாரம்: லெனினின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், 4வது ஆங்கில பதிப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1972 தொகுதி 29, பக்கங்கள் 252-253

ஆங்கில மொழியாக்கம்: ஜார்ஜ் ஹன்னா

வரிவடிவாக்கம்/HTML மார்க்அப்: டேவிட் வால்டர்ஸ் & ராபர்ட் சிம்பாலா)

- விஜயன் (தமிழில்)