நேபாளப் புரட்சி தோல்வியைத் தழுவியது ஏன்?
ஏஎம்கே
நேபாளப் புரட்சி : பிரசண்டா கும்பலின் நவீன - திரிபுவாத, கலைப்புவாத துரோகத்தால் வீழ்ந்தது
முன்னுரை
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில், நேபாளப் புரட்சி வெற்றிவாகை சூடி இமயத்தின் உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்ற நம்பிக்கையை நேபாளப் புரட்சி உருவாக்கியது. சோவியத் சமூக ஏகாதிபத்தியம் சிதறுண்ட ஒரு சூழலில், சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டுவிட்ட சூழலில், உலகில் எங்குமே சோஷலிச நாடு இல்லாத நிலையில் உலகம் முழுவதும் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று ஏகாதிபத்தியவாதிகளின் பிரச்சாரம் பலமாக இருந்த சூழலில் உலக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் அப்புரட்சி தோல்வியைத் தழுவியது. அவ்வாறு நேபாளப் புரட்சி தோல்வியைத் தழுவியது ஏன்?
1990ஆம் ஆண்டு, நேபாளத்தில் எதேச்சதிகார மன்னராட்சிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாகப், புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டியமைப்பதற்கான பணியை புரட்சியாளார்கள் பிரச்சண்டா தலைமையில் துவங்கினர். 1991ஆம் ஆண்டு நேபாள மாவோயிஸ்டுக் கட்சி உருவாக்கப்பட்டது. மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படையில், நேபாள நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தை முன்வைத்தனர், நீண்ட மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்தனர். 1996ஆம் ஆண்டு பிப்ரவரி, 13ஆம் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் யுத்தத்தைத் துவங்கினர். நேபாள மக்கள் யுத்தம் விரைவாக வளர்ச்சியடைந்தது.
நேபாள மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி 25,000 பேர்களைக் கொண்ட ஒரு மக்கள் படையையும், தளப் பிரதேசங்களையும், ஐக்கிய முன்னணி மற்றும் புதிய அதிகார அமைப்புகளையும் நிறுவியது. புரட்சி விரைவாக முன்னேறியதைக் கண்டு துரிதப் புரட்சி கனவில் காத்மாண்டைக் கைப்பற்றிவிட முடியும் என்று மாவோயிஸ்ட் கட்சி கருதியது. ஏகாதிபத்தியம் மற்றும் விஸ்தரிப்புவாதிகளின் தலையீடு பற்றி குறைத்து மதிப்பீடு செய்தது. நாட்டின் மைய அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய போர்த்தந்திர ரீதியான தாக்குதலைத் தொடங்கியது.
2005-ஆம் ஆண்டு நேபாள மக்கள் படை எதிரியின் மீது நடத்திய முழு அளவிலான போரில் எதிரியின் கோட்டைகளைத் தகர்ப்பதில் தோல்வியைத் தழுவியது. அத்தோல்விக்கான காரணத்தை 2005-ஆம் ஆண்டில் கூடிய மாவோயிஸ்டுக் கட்சியின் மத்தியக் கமிட்டியின் பிளீனக் கூட்டம் பின்வருமாறு கூறியது.
"பல பத்தாண்டுகளாக நாம் பார்க்கும் போது, நீண்ட மக்கள் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நாடுகளில், மக்கள் யுத்தம் போர்த்தந்திர ரீதியான தாக்குதல் கட்டத்தை எட்டியவுடன், ஒன்று புரட்சி தடைபட்டுப் போகிறது அல்லது ஒடுக்கப்பட்டுவிடுகிறது. அந்தக் கட்டத்தில் மக்கள் யுத்தம் ஐயத்திற்கிடமின்றி உலக ஏகாதிபத்தியத்துடன் மோதலுக்குள்ளாகிறது. ஏகாதிபத்தியவாதிகள் தலையிட்டு எதிர்ப்புரட்சிகர யுத்தத்தை ஒரு 'நீண்ட யுத்தமாக' நடத்துகின்றனர். இத்தகைய சூழலில், புரட்சியாளர்கள் எந்த விலை கொடுத்தாவது மக்கள் யுத்தத்தின் 'நீண்டகாலத் தன்மையை' எந்திரகதியாகப் பிடித்துக்கொண்டு தொங்குவது என்பது, ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கு சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாவதாகும்"
என்று கூறி மக்கள் யுத்தத்தைக் கைவிட்டது.
இந்த முடிவுக்கு வந்த பிறகு தோல்விக்கான சர்வதேசச் சூழ்நிலையை ஆய்வு செய்து லெனினியம் மாவோவியத்தின் மீது கேள்வி எழுப்பியது.
"இன்றைய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான குறிப்பண்பு என்பது உலகம் முழுவதுமுள்ள பரந்துபட்ட மக்களைப் பொருளாதார, அரசியல், பண்பாடு மற்றும் இராணுவ ரீதியில் ஒற்றை உலக அரசின் மூலம் ஒடுக்கிச் சுரண்டுவது என்பதேயாகும். தற்போது உலகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றை மேலாதிக்கத்தின் கீழ் சிக்குண்டுள்ளது. ஏகாதிபத்தியதிற்கு இடையிலான முரண்பாடுகள் தீர்மானகரமானப் பங்காற்றவில்லை, எனவே, லெனினும் மாவோவும் ஏகாதிபத்தியம் பற்றியும், பாட்டாளிவர்க்கப் போர்த்தந்திரங்கள் பற்றியும் வகுத்தளித்த பல அடிப்படையான கருத்தாக்கங்கள் அனைத்தும் பின்னடைந்து காலாவதியாகிவிட்டன. என்னும் 20-ஆம் நூற்றாண்டில் லெனினும் மாவோவும் ஏகாதிபத்தியம் பற்றி முன்வைத்த ஆய்வுகள், 21ஆம் நூற்றாண்டின் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் சரியான போர்த் தந்திரங்களை உருவாக்குவதற்கு விஞ்ஞான ரீதியாக வழிகாட்டாது"
என்று கூறியது.
"முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகளும், போர்த்தந்திரங்களும் புரட்சி முதன்மையாக ஒரே நேரத்தில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் வெடிக்கும் என்று கூறியிருந்த நிலையில், லெனின் காலத்தில் உருவாகியிருந்த ஏகாதிபத்தியம் எவ்வாறு மார்க்சின் முடிவுகளைப் பின் தள்ளியதோ அதேபோல், உலகளாவிய அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் வளர்ச்சிப் போக்கானது லெனின் மற்றும் மாவோவின் ஆய்வுகளைப் பின்னுக்குத் தள்ளி அவற்றைக் காலாவதியாக்கிவிட்டது"
என்று கூறி லெனினிய மாவோவிய புரட்சிக் கோட்பாடுகள் பொருந்தாது என்று கூறித் தனிநாட்டில் புரட்சி என்ற லெனினிய புரட்சிக் கோட்பாட்டை நிராகரித்தது. இனித் தனிநாட்டில் புரட்சி சாத்தியமல்ல என்றும், அமெரிக்காவின் ஒற்றை உலக அரசை எதிர்த்து உலகளாவிய சோஷலிசக் கூட்டமைப்பே மாற்று என்றும், ஒவ்வொரு நாட்டின் புரட்சியும் ஒரு நாட்டிற்குள் மாநிலத்தில் நடக்கும் புரட்சி போன்று உலகப் புரட்சியின் பகுதியாக ஒவ்வொரு நாட்டின் புரட்சியும் அமையும் என்று கூறிப் பிரச்சண்டா கும்பல் கூறியது. ஏகாதிபத்தியம் பற்றிய காவுட்ஸ்கிவாதத்தை முன்வைத்தது.
"நேபாள மக்கள் யுத்தம் தனது போர்த்தந்திர ரீதியான சமநிலையிலிருந்து தாக்குதல் கட்டத்திற்கு எட்டியுள்ள இன்றைய சூழலில் ஏகாதிபத்தியவாதிகள் விஷமந்தனமான தாக்குதலுக்குத் தயாரிக்கிறார்கள். நேபாளத்தில் புரட்சியானது மிக விரைவாகப் போர்த்தந்திரக் கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதோடு எந்த ஒரு நாட்டிலும் சோஷலிச அரசு இல்லாது போனது, புறவயமான நிலைமை புரட்சிக்குச் சாதகமாக மாறிவரும் அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத் தலைமையில் வலிமையான புரட்சி இயக்கம் இல்லாது போனது, அத்துடன் உலக ஏகாதிபத்தியம் அடிபட்ட புலியைப்போல உலகெங்கிலும் உள்ள மக்களின் மீது பாய்ந்து தாக்குகின்ற இத்தகைய ஒரு சூழலில் பூகோள ரீதியாகக் குறிப்பிட்ட நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகியுள்ள நேபாளம் போன்ற சின்னஞ் சிறு நாட்டில், மைய ஆட்சி அதிகாரத்தைப் புரட்சியின் மூலம் கைப்பற்றுவதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கமுடியுமா? அதுவும் "பெரு" நாட்டின் மக்கள் யுத்தமானது பாதகமான சர்வதேசச் சூழலில் தோல்வியைச் சந்தித்துள்ளதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும் போது, அமெரிக்கா தலையிட்டால் நேபாளப் புரட்சி அழிக்கப்பட்டுவிடும், நாட்டின் 80 சதவீதம் விடுதலை செய்யப்பட்டிருப்பினும் புரட்சி வெற்றியடையாது"
என்று கூறி ஏகாதிபத்தியம் பற்றி மிகை மதிப்பீடு செய்து, நேபாளப் புரட்சியைக் கைவிட்டது. நீண்ட மக்கள்யுத்தத்தையும், ஆயுத எழுச்சிப் பாதையையும் ஒன்றிணைத்த "இணைப்புப் பாதை" என்ற பேரில் மாவோவிய நீண்ட மக்கள் யுத்தப் புரட்சிப் பாதையைக் கைவிட்டது.
இவ்வாறு மார்க்சிய லெனினியத்தைக் கைவிட்டுக் காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியக் கோட்பாட்டை முன்வைத்துக், கலைப்புவாத கொள்கைகளை அமல்படுத்தியது. ஏகாதிபத்தியம் பற்றி மிகை மதிப்பீடு செய்து, மக்கள் சக்தியைக் குறைத்து மதிப்பீடு செய்து, நீண்ட மக்கள் யுத்தப் பாதையைக் கைவிட்டுப் பிரசண்டா கும்பல் பாராளுமன்றவாத அமைதி வழிப்பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதனடிப்படையில் புதிய செயல் தந்திரத்தை உருவாக்கினர்.
அனைத்துக்கட்சி மாநாடு, தற்காலிகப் புரட்சி அரசாங்கம், அரசியல் நிர்ணயச் சட்டம் என்று கூறிப் படிப்படியாக அமைதிவழிப் பாதைக்கும், பாராளுமன்றப் பாதைக்கும் மாறினர். அரசாங்கம் பாராளுமன்றவாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். 2001, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது நாடாளுமன்றவாதக் கட்சிகளுடன் எந்தவிதமான உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை.
ஆனால், 2005-ஆம் ஆண்டு சர்வதேச மற்றும் நாட்டின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நாடாளுமன்றவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம் என்பதைப் பின்வருமாறு பிரசண்டா கும்பல் கூறியது:
"மன்னராட்சி கும்பல் மூர்க்கத்தனம் வாய்ந்தது, தாராளவாதத் தன்மை வாய்ந்தது என இரண்டாகப் பிரிந்துள்ளது என்றும் மதிப்பீடு செய்தது. அரண்மனைப் படுகொலைகள் முந்தைய ஆட்சிகளில் பங்கு பெற்ற பாராளுமன்றவாத சக்திகளையும் எதிர்த்துக் குறிவைக்கப்பட்டதுதான். பாராளுமன்றவாத அரசியல் கட்சிகள் மன்னராட்சியின் முன் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அறிவாளித்தனத்துடன் நியாயம் கற்பிக்கப்பட்டன. நமது கட்சி உடனடியாக நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கும், முன்னணி அமைப்பதற்கும் முன்வருமாறு பாராளுமன்றவாதக் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று 7 பாராளுமன்றவாத கட்சிகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியுடன் 12 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் 2005 நவம்பர், 22இல் மன்னராட்சிக்கு முடிவுகட்டும் உடன்படிக்கையை எட்டியதாக"
என்று கூறியது. ஆனால் இது உண்மையல்ல. நேபாள மாவோயிஸ்டு கட்சி தமது 2003 செயல்தந்திரத்தை மாற்றிக்கொண்டு, அடிப்படை நிலைப்பாடுகளை விட்டு கொடுத்து தான் இந்த ஒப்பந்தம் செய்தது.
2003 செயல்தந்திரம் கூறுவதாவது: இன்றைய சர்வதேசிய சூழலில் உலகில் நிலவும் அனைத்து முரண்பாடுகளும் கூர்மையடைந்து வருவதை நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் மக்களுக்கும் இடையிலான முதன்மை முரண்பாடு மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளும் கூர்மையடைந்து வருகின்றன என்றும்; அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய விஸ்தரிப்புவாதிகளும் மன்னராட்சிக்கு ஆதரவாக இருப்பதால் அக்கூட்டணியை எதிர்த்துச் செயல்தந்திர ரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அவர்களின் நேபாள அடிவருடிகளுக்கு எதிராகப் பிற ஏகாதிபத்தியவாதிகளுடனும், அந்நியப் பிற்போக்கு சக்திகளுடனும், உள்நாட்டில் பிரதானப் பாராளுமன்றவாத கட்சிகளுடனும் செயல் தந்திர ரீதியான ஒற்றுமை காணவேண்டும். அது ஒன்றுதான் பிரதான எதிரிக்கு எதிராக வலிமையான தாக்குதலைத் தொடுப்பதற்கான சரியான வழியாகும் என்றும் கூறிய மாவோயிஸ்டுகள் தங்களது இந்த நிலைப்பாட்டை 2005இல் மாற்றிக் கொண்டனர்.
2005 செப்டம்பர், மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் இன்றைய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான குறிப்பண்பு என்பது உலகம் முழுவதுமுள்ள பரந்துபட்ட மக்களைப் பொருளாதார, அரசியல், பண்பாடு மற்றும் இராணுவ ரீதியில் "ஒற்றை உலக அரசின்" மூலம் ஒடுக்கிச் சுரண்டுவது என்பதேயாகும் என்றும்; ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு தீர்மானகரமான பங்கு வகிக்கவில்லை என்றும், இத்தகைய சூழலில் நேபாளம் போன்ற ஒரு சின்னஞ்சிறு நாட்டில் புரட்சி சாத்தியமல்ல என்றும் முடிவுக்கு வந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், விரிவாதிக்க அரசுடனும் சமரசம் செய்து கொண்டு 12 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் 7 பாராளுமன்றவாத கட்சிகளுடன் சேர்ந்து 8 கட்சி கூட்டணியை உருவாக்கியது பிரச்சண்டா கும்பல்.
அரசியல் நிர்ணயச் சபையை உருவாக்குவதற்காக மாவோயிஸ்டுகளின் மக்கள் படைகளையும், ஆயுதங்களையும் ஐக்கிய நாட்டுச் சபையிடம் ஒப்படைப்பது என்ற பேரில் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைத்தல்; பல கட்சி ஆட்சிமுறை என்று கூறி வர்க்கப் போராட்டதைக் கைவிடுதல்; புரட்சியின் காலத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களையும் சொத்துகளையும் நியாயமற்ற முறையில் கைப்பற்றப்பட்டது என்று கூறி நிலங்களையும் சொத்துகளையும் அவர்களிடமே திருப்பி ஒப்படைப்பது. கிராமப்புற அதிகாரங்களையும், தளங்களைக் கலைத்தல் என்ற 12 அம்சத் திட்டத்தின் அடிப்படையில்தான் எட்டுக் கட்சி கூட்டணி அமைந்தது. மக்கள் யுத்தம் சாதித்த சாதனைகளையெல்லாம் பிரச்சண்டா கும்பல் அமைதிப் பேச்சு வார்த்தை, தற்காலிக அரசாங்கம், அரசியல் நிர்ணயச் சபை என்ற பேரில் 12 அம்சத் திட்ட உடன்பாட்டின்படி ஆளும் வர்க்கங்களிடம் தாரைவார்த்துவிட்டது. மக்கள் யுத்தத்தைக் கைவிட்டு வலது சந்தர்ப்பவாதப் புதிய செயல்தந்திரத்தின் அதனடிப்படையில்தான் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் சார்ந்த தேசியம், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழ்நிலைப் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய எந்த ஒரு கோரிக்கையையும் அமல்படுத்த முடியவில்லை. ஆனால், பிரச்சண்டா ஆட்சி 12 அம்சத் திட்டத்தை அமல்படுத்தத் துவங்கியதும் ஆளும் கூட்டணிக்குள் முரண்பாடுகளும் மோதல்களும் வெடிக்கத் துவங்கின. நிலப்பிரபுத்துவ மன்னராட்சி முடிவுக்கு வந்தவுடன், நேபாள மன்னராட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான முதன்மை முரண்பாடு முடிவுக்கு வந்தது. தற்போது, தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று கூறுகின்ற தரகுமுதலாளித்துவ, அதிகாரவர்க்க மற்றும் நிலப்பிரபுத்துவச் சக்திகள் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டன. பிற்போக்கு ஆட்சியே தொடர வேண்டும் என்று நிலையெடுத்த எட்டுக் கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு கட்சிகளே எந்த ஒரு மாற்றத்தையும் செய்யத் தடையாக நின்றன. தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு ஆளும் கூட்டணிக் கட்சிகள் எந்த ஒரு ஜனநாயகச் சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தடையாக இருந்தன. பிற்போக்கு இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்தனர்.
நேபாளக் காங்கிரஸ் உள்ளிட்ட எட்டுக் கட்சி கூட்டணிக் கட்சிகள் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் நலன்களைக் காத்துக் கொள்வதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய விரிவாதிக்க அந்நியப் பிற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து கொண்டு பொம்மை ஆட்சியை நிறுவச் சதி செய்தன.
மக்கள் படையைச் சேர்ந்த போராளிகளை இராணுவத்தில் சேர்ப்பது பற்றிய பிரச்சினையில் நேபாள இராணுவத் தளபதி ருக்மாங்கத் கடுவாலுக்கும், பிரச்சண்டா அரசாங்கத்துக்கும் மோதல் வெடித்தது. தளபதியைப் பிரச்சண்டா அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது. உடனடியாகப் பிரச்சண்டா ஆட்சி கலைக்கப்பட்டது. உண்மையில் இராணுவத் தளபதி பதவிநீக்கம் செய்யப்பட்டதால் மட்டும் பிரச்சண்டா ஆட்சி கலைக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கிடையில் நிலவிய முரண்பாடுகள் காரணமாகவே ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு, அரசியல் சட்டம் எழுத முடியாததாலேயே பிரச்சண்டா ஆட்சி கலைக்கப்பட்டது.
ஆனால் இத்தகைய சக்திகளுக்கு எதிராகத் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் மேலிருந்தும், கீழிருந்தும் புரட்சியின் நலன்களைப் பாதுகாக்கப் பிரசண்டா கும்பல் போராடவில்லை. காரணம் அந்த அரசாங்கம் புரட்சி எழுச்சியின் உறுப்பாக உருவாகவில்லை. மக்கள் படையையும், ஆயுதங்களையும் எதிரியிடம் ஒப்படைத்துவிட்டுத், தளங்களைக் கலைத்துவிட்டு மக்களை நிராயுதபாணி ஆக்கிவிட்டுத் தான் தற்காலிக அரசாங்கம் அமைக்கப் பட்டது. மேலும், அது அரசியல் நிர்ணயச் சபையைக் கூட்டும் கருவியாகவோ, அரசியல் நிர்ணயச் சபையைக் கூட்டும் அதிகாரப் பலம் வாய்ந்த அமைப்பாகவும் உருவாகவில்லை. மேலும் அத்தகைய அரசாங்கத்தில் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மேலிருந்தும் கீழிருந்தும் போராட வேண்டும் என்பதற்குப் பதிலாக பல கட்சி ஆட்சி முறை என்ற பேரில் வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளைத்தான் பிரச்சண்டா கும்பல் கடைபிடித்தது.
இரண்டு கட்டப் புரட்சி பேசி முதலாளித்துவ ஜனநாயகத் திட்டத்தை அமல்படுத்தியும், பலகட்சி ஆட்சிமுறையை முன்வைத்து வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு, ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் சமாதானச் சகவாழ்வு கண்டது. இணைப்புப் பாதை பேசி மக்கள் யுத்தத்தைக் கைவிட்டு பாராளுமன்றவாதக் கட்சியாகச் சீரழிந்தது எனவே எட்டுமாத ஆட்சி கலைக்கப்பட்டது. பிரச்சண்டா உருவாக்கிய கூட்டணியே பிரச்சண்டா ஆட்சியைக் கலைத்தது.
அதற்குப் பின்னர் நேபாளத்தில் பலமுறை ஆட்சி மாறியது. ஆனால், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகும் பிரசண்டா கும்பல் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள மறுத்தது. தொடர்ந்து அரசியல் நிர்ணயச் சட்டம், பலகட்சி ஆட்சிமுறை, சமாதானப் போட்டி என்று கூறி அந்நியச் சக்திகளின் உதவியோடு, பொம்மை ஆட்சி உருவாக்கச் சதியில் ஈடுபடும் ஆளும் தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளோடு சேர்ந்துகொண்டு சந்தர்ப்பவாதமான முறையில் ஆட்சி அமைப்பதிலேயே குறியாக இருந்தது. பாராளுமன்றவாத சந்தர்ப்பவாதத்தில் மூழ்கியது. பிற்போக்கு அரசியல் கட்சிகளுடன் பேரம் நடத்திச் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து மீண்டும் 2011-இல் மாவோயிஸ்டுக் கட்சி பட்டாராய்த் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆட்சியில் அமர்ந்து அந்நிய ஏகாதிபத்திய மற்றும் விரிவாதிக்கச் சக்திகள், மற்றும் உள்நாட்டு பிற்போக்கு சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து, மக்கள் யுத்தம் மற்றும் மக்கள் எழுச்சியின் பயன்களையெல்லாம் ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து கொண்டது.
புரட்சியின் நலன்களை ஒவ்வொன்றாகப் பலியிட்டது. அந்த ஆட்சி, நடைமுறையில் மக்கள் படை, ஆயுதங்களை ஒப்படைத்துத், தளங்களைக் கலைத்து, நிலப்பிரபுக்களின் நிலங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைத்தது. முதலாளித்துவப் பாதையை முன்வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளுடனும் கூடிக் குலாவியது. இதன் மூலம் மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுக் கட்சியின் செல்வாக்கு சரிந்தது. அரசியல் சட்டத்தைக் குறிப்பிட்ட காலத்தில் எழுத முடியாமல் அரசியல் நிர்ணயச் சபைக்கான இரண்டாவது தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் நேபாள மாவோயிஸ்டுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. நேபாளப் புரட்சி பிரச்சண்டா கும்பலின் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது. எனவே இன்று எட்டுக் கட்சிக் கூட்டணியும், அதன் அரசாங்கமும் நேபாள மக்களுக்கு முதல் எதிரியாக மாறிவிட்டது. இக்கூட்டணியை எதிர்த்துப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பது ஒன்றுதான் நேபாள மக்களின் விடுதலையையும், ஜனநாயகத்தையும் உத்தரவாதப்படுத்தும்.
பிரச்சண்டா கும்பலின் நவீன திரிபுவாதம் மற்றும் கலைப்புவாத நிலைப்பாடுகள் நேபாளப் புரட்சியின் தோல்விக்கும், அக்கட்சி பல கட்சிகளாகப் பிளவுபடுவதற்கும் காரணமாக அமைந்தது மட்டுமல்ல. அத்தகைய திரிபுவாதப் போக்குகள் உலகம் முழுவதிலுமுள்ள புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளிலும், குழுக்களிலும் செல்வாக்கு செலுத்திப் புரட்சிக்குச் சேதாரத்தைக் கொண்டுவருகிறது. இந்தியாவிலும் பல மா.லெ.குழுக்களில் அது தாக்கம் செலுத்துகிறது. தமிழகத்தில் எஸ்.ஓ.சி. அமைப்பிலும் அது கடுமையான தாக்கத்தைச் செலுத்துகிறது.
இன்று உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சண்டா கும்பலின் நவீன திரிபுவாத மற்றும் கலைப்புவாத கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு எல்லாவிதமான வலது சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது என்பதே முதன்மையான பணியாக மாறிவிட்டது. அது ஒன்றுதான் புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டியமைப்பதற்கான வழியாகும். பிரச்சண்டா கும்பலின் நவீன-திரிபுவாதம் மற்றும் கலைப்புவாதத்தை எதிர்த்து, மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்பதன் மூலம் புரட்சியாளர்களின் ஐக்கியத்திற்காகப் போராடுவோம்.
- ஏஎம்கே
அக்டோபர், 2016
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்
90953 65292
96003 49295