பாசிசத்தை எதிர்த்தப் போரில் சோவியத் யூனியன் வெற்றியும் அடுத்த அறுபது ஆண்டுகள் அனுபவமும்
(மார்ச்’5 - ஸ்டாலின் நினைவுநாளையொட்டி மீள்பதிவு)
இரண்டாம் உலகப் போரின்போது, பாசிசத்தையும் ஜெர்மன், ஜப்பான், இத்தாலி பாசிசக் கூட்டணியையும் வீழ்த்தி சோவியத் யூனியன் வெற்றிகொண்ட 60ஆவது ஆண்டு விழா 2005 மே 9 அன்று உலகம் முமுவதும் கொண்டாடப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில் பாசிச எதிர்ப்பு முன்னணி வெற்றியையும் அதையடுத்த 60ஆம் ஆண்டுகால வரலாற்று அனுபவத்தையும் ஆய்வு செய்வது இன்றைய தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த நீண்ட வரலாற்றுக் காலத்தை மூன்று தனித்தனி காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது காலப்பகுதி: உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஏறுமுகம். இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் வெற்றி; சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் ஜனநாயகக் குடியரசுகள் உதயம்; சோசலிச முகாம் உருவாகுதல்; காலனிய- அரைக் காலனிய நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்களின் முன்னேற்றம்.
இரண்டாவது காலப்பகுதி: ஏகாதிபத்திய முகாமில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்கம் பெறுதலும், பனிப்போரும்; குருசேவ்- டெங்கு திரிபுவாதம் மற்றும் கோர்பச்சேவ் கலைப்புவாதத்தின் துரோகத்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகார நாடுகளில் (சோசலிச நாடுகளில்) முதலாளித்துவ மீட்சியும் சர்வதேச பாட்டாளி வர்க்க
மூன்றாவது காலப்பகுதி: மூன்றாவது, உலக முதலாளித்துவ நெருக்கடி- யிலிருந்து மீள்வதற்காக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் உலக யுத்தத்திற்கான தயாரிப்பும்; அதற்கு எதிராக உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் கிளர்ந்தெழுதல்.
பாசிசம் என்பது ஏகபோக முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம்; பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும் என டிமிட்ரோவ் விளக்கம் அளித்தார்.
ஓட்டோ பவர் என்பவர் குறிப்பிடுவதைப் போல், பாசிசம் என்பது "இரு வர்க்கங்களுக்கும் அதாவது பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கம் ஆகிய இரு வர்க்கங்களுக்கு அப்பால் தனித்து நிற்கும்" அரசாங்க அதிகாரத்தின் வடிவமல்ல.
பிரிட்டிஷ் சோசலிஸ்ட் பிரெயில்ஸ் போர் பிரகடனப்படுத்துவதைப் போல் பாசிசம் என்பது, குட்டி பூர்ஷ்வா வர்க்கம் எழுச்சி பெற்று கலகம் செய்து அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதல்ல.
பாசிசம் என்பது வர்க்கங்களுக்கு அப்பால் உள்ள அரசல்ல, குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் அரசாங்கமுமல்ல, அல்லது நிதி மூலதனத்தின் மீது மேல் நிற்கும் கழிசடைப் பாட்டாளி பகுதியின் சர்க்காருமல்ல. பாசிசம் நிதிமூலதனம் தன்னின் அதிகாரமாகும். அது தொழிலாளி வர்க்கத்திற்கும் புரட்சிகரத் தன்மை கொண்ட விசுவாசிகள், படிப்பாளிகள் பகுதிக்கும் எதிரான பயங்கரமான வன்முறைமிக்க பழிதீர்க்கும் ஸ்தாபனமாகும். ஆளும் பூர்ஷ்வா வர்க்கங்கள், உழைக்கும் மக்களின் மீது மிகவும் படுமோசமான தாக்குதல் நடவடிக்கைகள் எடுக்கவும், ஏகாதிபத்திய யுத்தத்தைத் தயாரிக்கவும், சோவியத் யூனியனைத் தாக்கவும், சீனாவைப் பிரிவினை செய்து அடிமைப்படுத்தவும், இத்தகைய எல்லாவிதமான முயற்சிகள் மூலம் புரட்சியைத் தடுக்கவும், பாசிசத்தை உருவாக்கி அதன்மூலம் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள எத்தனித்தார்கள்.
ஏகாதிபத்திய வட்டாரங்கள் நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைப்பாளர்களின் முதுகிலேயே சுமத்திவிடவும்; பலவீனமான நாடுகளை அடிமைப்படுத்துவதன் மூலம், ஒரு யுத்தத்தின் மூலம் உலகத்தை மீண்டும் புதிதாக பங்குபோட்டுக் கொள்வதின் மூலம் தங்கள் சந்தைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும்; புரட்சிகரமான தொழிலாளர்கள், விவசாயிகள் இயக்கத்தை அடித்து வீழ்த்துவதன் மூலம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலானான சோவியத் யூனியனுக்கு எதிராக ஒரு இராணுவத் தாக்குதல் நடவடிக்கை எடுப்பதன் மூலம் - புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியை முன்கூட்டியே தடுப்பதற்கும் ஏகபோக மூலதனத்தின் மிகப் பிற்போக்கான பகுதிக்கு பாசிசம் தேவைப்பட்டது. பாசிசம் அதிகாரத்துக்கு வரும்பொழுது பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராக, 'தேசம் முழுவதின்' சார்பாக தேசத்தின் மீட்சிற்காக ஒரு "புரட்சிகரமான" இயக்கம் என்று கூறிக்கொண்டுதான் ஆட்சிக்கு வருகிறது.
பாசிசம் அதிகாரத்துக்கு வருவது என்பது சாதாரணமான முறையில் ஒரு பூர்ஷ்வா சர்க்கார் போய் அடுத்து ஒரு பூர்ஷ்வா சர்க்கார் வருவதைப் போல் அல்ல. பூர்ஷ்வா வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து அதாவது பூர்ஷ்வா ஜனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சர்வாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும்.
நாம் முதன்முதலாக கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையானது முதலாளித்துவத்தின் உள்கட்டமைப்பு தான் ஜனநாயக விரோதப் போக்கிற்கு வழிபிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்கு தான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்கு தீனிபோடுகிறது என்பதாகும். முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சரிவுகட்டத்தில் பிற்போக்கான கொள்கைகளை நோக்கிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில் தலைதூக்கும் என்று டோக்ளியாட்டி கூறுகிறார்.
ஏகபோக முதலாளித்துவம் அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் மிக உச்சபட்ச தொழில் லாபமடையும் கொள்கைகளை பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கெதிராக மக்கள் தலையிடும் படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதில் இறங்கும். அது ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாக பிற்போக்கான இராணுவ ஆட்சிகளைக் கொண்டுவருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான நாசகரமான வளர்ச்சியடைந்த வடிவமாகும்.
வெளிநாட்டுக் கொள்கையில் பாசிசம் மிகவும் கொடூரமான வடிவத்திலான இன வெறிகொண்டதும் இதர நாடுகளின் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பைத் தூண்டிவிட்டு தூபம் போடுவதுமான சக்தியாகும்.
பாசிசம் தீவிரமான கடைகோடி ஏகாதிபத்தியவாதிகளின் நலவுரிமைகளுக்காகச் செயல்படுகிறது. ஆனால் அது புறக்கணிக்கப்பட்ட, கேவலமாக நடத்தப்பட்ட ஒரு தேசத்தின் கவுரவத்தை காப்பாற்ற முன் நிற்பதைப் போல் தன்னை காட்டிக் கொள்கிறது. அழிசெயலால் அவமதிக்கப்பட்ட தேசிய உணர்வுகளுக்கு வேண்டுகோள் விடுகிறது. ஜெர்மன் பாசிசம் அவ்வாறுதான் செய்தது. உதாரணமாக அது 'வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து' என்னும் கோஷத்தை வைத்துத்தான் ஜெர்மன் மக்களின் பேராதரவைப் பெற்றது.
யுத்தங்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகள்
முதல் உலகயுத்தத்துக்கும் இரண்டாவது உலகயுத்தத்திற்கும் இடைப்பட்ட ஆண்டுகளை கம்யூனிஸ்டு அகிலத்தின் ஆறாவது மாநாடு மூன்று தனித்தனியான காலப் பகுதிகளாக பிரித்தது.
முதலாவது: யுத்தத்தை தொடர்ந்த புரட்சிகர எழுச்சிகள்; இது 1922ஆம் ஆண்டுவரை நீடித்தது.
இரண்டாவது: முதலாளித்துவம் ஒப்புநோக்கு அளவில் ஸ்திரமாக இருந்தது; இது 1923ஆம் ஆண்டிலிருந்து 1929ஆம் ஆண்டு வரை நீடித்தது;
மூன்றாவது காலப்பகுதி பெரும் புரட்சிகளின் காலம். இது 1929ஆம் ஆண்டிலிருந்து இரண்டாம் உலகயுத்தம் வரை.
முதலாளித்துவம் ஒப்புநோக்கு அளவில் ஸ்திரத் தன்மையுடன் இருந்த இரண்டாவது காலப் பகுதியை ஒரு தற்காலிகமான அல்லது மாறும் நிலையில் உள்ள ஒரு காலகட்டமாக கருதுவதற்கு மாறாக, சமூக ஜனநாயகவாதிகளும் முதலாளித்துவவாதிகளும் முதலாளித்துவம் நித்தியமானது என்ற மாயையைப் பரப்புவதற்காக, முதல் உலக யுத்தத்திற்குப் பிந்திய முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை நித்தியமானதாக சித்தரித்தார்கள். சமூக ஜனநாயக இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மையை பிரகாசமான நிறங்களில் சித்தரித்துக் காட்டினார்கள் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் நித்திய, வளமான சகாப்தம் தோன்றிவிட்டதாக அறிவித்தார்கள்; சமூக ஜனநாயகவாதிகள் 'ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ' சகாப்தம் குறித்துப் பேசினார்கள். கம்யூனிஸ்டுகள் இந்த கருத்துகளுடன் உடன்படவில்லை, மேலும் முதலாம் உலகயுத்தத்திலிருந்து (1914-18லிருந்து) முதலாளித்துவ உலகம் ஒரு பொது நெருக்கடிக்குள் நுழைத்துவிட்டது என கூறினார்கள். கம்யூனிஸ்டுகள் சொன்னது சரியானது என தகவல்கள் நிரூபித்துள்ளது.
முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை என்றென்றைக்குமானது என்பது நிலை நாட்டப்பட்டது என முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகவாத அறிவாளிகள் உறுதியாகக் கூறினார்கள்.
ஸ்திரத்தன்மை ஒப்புநோக்கு ரீதியானது; முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை தற்காலிகமானது மற்றும் மாறும் நிலையில் உள்ளது என கம்யூனிஸ்டுகள் மறுத்துரைத்தார்கள்.
கம்யூனினிஸ்டுகளின் கூற்று சரியானது என்பது தகவல்கள் நிரூபித்துள்ளது.
இனிமேல் நெருக்கடிகள் இல்லை, முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகள் இல்லாத ஒரு கட்டத்திற்குள் நுழைந்து விட்டது என முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகவாத அறிவாளிகள் ஆரூடம் கூறின. முதலாளித்துவத்தின் கீழ் நெருக்கடிகள் தவிர்க்க இயலாதது என கூறி கம்யூனிஸ்டுகள் அதை மறுத்துரைத்தார்கள்.
1929இல் வெடித்த உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி கம்யூனிஸ்டுகள் சொல்வது சரியானது என நிரூபித்துவிட்டது.
வர்க்கப் பகைமைகள் தணிந்து போகின்ற; பொருளியல் வாழ்நிலைமைகள் படிப்படியாக அபிவிருத்தி அடைகின்ற; பூர்ஷ்வா ஜனநாயகம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் 'சோசலிசம்' நிறுவப்படும் ஒரு காலகட்டத்துக்குள் முதலாளித்துவ உலகம் நுழைகின்றது - இவ்வாறுதான் தாராளவாத பூர்ஷ்வாக்களும், எல்லா நிற சீர்திருத்தவாதிகளும் சிந்தித்தார்கள். கம்யூனிஸ்டுகள் வேறுவிதமாக சிந்தித்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: உலகம் வர்க்க முரண்பாடுகள் தணிவதை நோக்கிச் செல்லவில்லை;
அதற்கு மாறாக, வர்க்க முரண்பாடுகள் என்றுமில்லாத அளவு ஆழப்படுவதை நோக்கி முதலாளித்துவ உலகம் செல்கிறது. தொழிலாளி வர்க்கம் சீர்த்திருத்தவாதத்தின் செல்வாக்கிலிருந்து தன்னைத் (துண்டித்துக் கொண்டு) விடுவித்துக் கொண்டு வர்க்கப் போராட்ட நிலைக்கு வராவிட்டால், தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகளும் மற்றும் எல்லா உழைப்பாளர்களின் நிலைமைகளும் முதலாளித்துவத்தின் கீழ் மேலும் மோசமடையும். முதலாளித்துவ ஜனநாயகம் சோசலிசத்துக்கு வழிவகுக்கவில்லை; அதற்கு மாறாக பாசிசத்துக்குத்தான் வழிவகுக்கிறது; பல ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற எல்லா சமூக ஆதாயங்களையும் அது ஒழிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் கம்யூனிஸ்டுகள் சொல்வது சரியென நிரூபித்துள்ளது.
ஆறாவது மாநாடு வரவிருக்கும் உலகயுத்த அபாயம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. ஏகாதிபத்தியவாதிகள் உலகை வன்முறையில் மறுபங்கீடு செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். இந்த முறை அவர்களின் பிரதான குறிக்கோள் ரசிய புரட்சியையும் அத்துடன் சீனப்புரட்சியையும் ஒழித்துக்கட்டுவது; இந்நாடுகளை துண்டாடுவது யுத்த தயாரிப்புக்கு உதவி செய்வதற்காக ஏகாதிபத்தியவாதிகள் ஐரோப்பாவின் பல பகுதிகளில் பாசிசப் பிற்போக்கை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்; எல்லா இடங்களிலும் சோவியத் எதிர்ப்பு வெறியைக் கிளறிவிட்டார்கள்.
ஆறாவது மாநாடு, "யுத்தத்தை முதலாளித்துவத்திலிருந்து பிரிக்க முடியாதென்று" சுட்டிக் காட்டியது. இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், முதலாளித்துவத்தை ஒழிப்பதன் மூலமாக மாத்திரமே யுத்ததை ஒழிப்பது சாத்தியமானதாகும் என்பதே.
ஆறாவது மாநாட்டு தீர்மானம், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டோர் நடத்தும் நீதி யுத்தத்துக்கும், ஏகாதிபத்திய அரசுகளால் அல்லது ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையில் நடைபெறும் அநீதி யுத்தங்களுக்கும் இடையில் பாகுபாடு செய்தது. அப்போது அச்சுறுத்திக் கொண்டிருந்த யுத்தத்தைப் பொறுத்த மட்டில், ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையிலான யுத்தத்தை, பூர்ஷ்வாக்களை எதிர்த்து பாட்டாளிவர்க்க உள்நாட்டு யுத்தமாக மாற்றவேண்டும் என மாநாடு தொழிலாளர்களை வற்புறுத்தியது.
உலகப் பொருளாதார நெருக்கடியும் யுத்த அபாயமும்
1929ஆம் ஆண்டு இறுதியில், முன்கண்டிராத அளவில் நாசகரமானதொரு உலகப் பொருளாதார நெருக்கடி எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் வெடித்தது. இந்த நெருக்கடி ஒரு விவசாய நெருக்கடியோடு பின்னிக்கிடந்தது. மேலும் உற்பத்தியால் ஏற்பட்ட நெருக்கடி வியாபாரத்திலும், நிதியிலும் பொருளாதார நிலைமையை மிகவும் கடுமையாக்கிற்று. தொழில் உற்பத்தி விழுந்தது. 1932ஆம் ஆண்டு இறுதி வாக்கில் அமெரிக்காவில் தொழில் உற்பத்தி 1929ஆம் ஆண்டிலிருந்ததில் 53.8 சதவீதத்திற்கு விழுந்துவிட்டது. பிரிட்டனின் தொழில் உற்பத்தி 83.8 சதவீதத்திற்கு விழுந்துவிட்டது. பிரான்சின் தொழில் உற்பத்தி 69.1 சதவீதத்திற்கு விழுந்துவிட்டது. இக்காலகட்டத்தில், சோவியத் யூனியன் சோசலிச நிர்மாணத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் தொழிலும் விவசாயமும் முன்னேறிக் கொண்டிருந்தது.
இந்த காலகட்டம், உலகின் எல்லா நாடுகளின் பொருளாதார வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. சோவியத் யூனியனிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் சோவியத் யூனியனில் மாற்றம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தியிருந்தது; அதே சமயத்தில் முதலாளித்துவ நாடுகளில் அது கடுமையானதொரு பொருளாதார நெருக்கடிக்கு வழி நடத்திச் சென்றது.
உலக பொருளாதார நெருக்கடி உலகின் எல்லா அடிப்படை முரண்பாடுகளையும் தீவிரமடையச் செய்தது. 1929-33ஆம் ஆண்டுகளின் பொருளாதார நெருக்கடியின் காலம், வர்க்கப் போராட்டம் தீவிரமடைதல், பாசிசம் வளர்தல் மற்றும் யுத்தத் தயாரிப்புகளின் காலமாக இருந்தது. இந்த எல்லா சமூக பதட்டநிலை மற்றும் முதலாளித்துவ முரண்பாடுகளும் கூர்மையடைதலுக்கு அடிப்படையாயிருந்தது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடி ஆழப்பட்டதே ஆகும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுவதற்கும் பூர்ஷ்வா வர்க்கம் பின்வருமாறு முயற்சி செய்யுமென்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்:
"இரண்டு திசை வழியில், மிகப்பிற்போக்கான பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதின் மூலம், தங்களுடைய சொந்த நாட்டிலுள்ள பாட்டாளி வர்க்கத்தையும் இதர உழைப்பாளிகளையும் ஒடுக்குவது மற்றும் பாதுகாப்பு பலகீனமாக இருக்கும் நாடுகளின் செலவில் காலனிகளையும், செல்வாக்கு மண்டலங்களையும் மறுபங்கீடு செய்வதற்காக யுத்தத்தை தூண்டி விடுவதாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு பூர்ஷ்வா வர்க்கம் முயற்சிக்கும்".
பாட்டாளி வர்க்கத்திற்கான பரிகாரத்தை குறித்து ஸ்டாலின் பின்வருமாறு கூறினார்:
"முதலாளித்துவ சுரண்டலையும் யுத்த அபாயத்தையும் எதிர்த்துப் போராடுவதில், பாட்டாளிவர்க்கம் புரட்சியின் மூலமாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்".
ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளால் தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, சீனப் பாட்டாளிவர்க்கமும் அதனுடைய அரசியல் கட்சியும் யுத்தத்தின் மூலம் அவர்கள் தங்களுக்கானதொரு வழியைத் தேடிக்கொண்டார்கள்.
ஒரு புதிய ஏகாதிபத்திய யுத்தத்தின் ஆரம்பம்
1933லிருந்து 1935 வரையில் முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைகிறது. முதலாளித்துவ நாடுகளுக்குள்ளேயும் அவற்றிற்கு இடையேயும் முரண்பாடுகளை நெருக்கடி மேலும் தீவிரப்படுத்துகிறது.
தங்களது அயல் நாட்டுக் கொள்கையை இனவெறி வாதத்தின் மீதும் யுத்த தயாரிப்பின் மீதும் அடிப்படையாகக் கொண்டிருந்த அதே சமயத்தில், ஏகாதிபத்தியங்கள் அவற்றின் உள்நாட்டு நிர்வாகத்தில், வரக்கூடிய யுத்தத்தில் பின்னணி தளத்தைக் கெட்டிப் படுத்துவதற்கான சாதனங்களாக தொழிலாளி மற்றும் விவசாய வெகுஜனங்களின் மீது ஒடுக்குமுறையும் எதிர்ப்புரட்சி பயங்கரத்தையும் நிறைவேற்றின.
நிலவிக்கொண்டிருந்த நிலைமைக்கு ஒரு பரிகாரம் காண, ஒரு புதிய ஏகாதிபத்திய யுத்தத்தை ஆரம்பிப்பது என்பது தெட்டத் தெளிவாக இது காட்டுகிறது.
யுத்தத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளால் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, ஒரு பாசிச சர்வாதிகாரத்தை அமல் நடத்துவதற்கு பயங்கரமான முறைகள் கையாளப்பட்டன.
அவற்றின் அயல்நாட்டுக் கொள்கையில், இந்த மூன்று நாடுகளும் ஒன்பது அரசு உடன்படிக்கையோடும் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையோடும் அதிருப்தி கொண்டிருந்தன. இந்த முறையில் மூன்று ஆக்கிரமிப்பு நாடுகளும் ஒரு புதிய யுத்தத்தின் தோற்றுவாயாக மாறின.
இத்தாலி, எத்தியோப்பியாவை ஆக்கிரமித்துக் கொண்டது; அப்படிச் செய்வதின் மூலம் பிரிட்டனுக்கும், இத்தாலிக்கும் இடையே முரண்பாடுகள் விரிவடைந்தன.
ஜெர்மனி அண்டை நாடுகளோடு எல்லைக் கோடுகளை திருத்தி அமைக்க விரும்பிற்று; மேலும் ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளை ஆகிரமிப்பதற்கு தயாரிப்புகளைச் செய்தது.
வடகிழக்குச் சீனாவை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு, வட சீனா மீதும் சீனாவின் இதர பகுதிகளின் மீதும் ஜப்பான் புதியதொரு தாக்குதலைத் தொடுத்தது.
ஜெர்மனியும் இத்தாலியும் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை கிழித்தெரிந்தன; ஜப்பான் 9 அரசு உடன்படிக்கையைக் கிழித்தெரிந்தது; இந்த மூன்று நாடுகளும் சர்வதேச சங்கத்தை (லீக் ஆஃப் நேசன்ஸ்) விட்டு வெளியேறின.
யுத்தத்தின் மூலம் உலகத்தைப் புதியதொரு மறுபங்கீடு செய்தது உடனடியாக வெளிப்பட்டது. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் பல்வேறு இடங்களில் புதிய யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அது தேசிய விடுதலை இயக்கங்களுக்கு எதிரான ஒரு யுத்தமாகவும் மற்றும் பிரிட்டிஷ், பிரான்சு, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்களுக்கு எதிரானதொரு யுத்தமாகவும் இருந்தது; உலகம் முழுவதிலும் பிரதேசங்களை மறுபங்கீடு செய்வதையும் மற்றும் செல்வாக்கு மண்டலங்களை மறுபங்கீடு செய்வதையும் அந்த
ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு எதிராக சோவியத் யூனியன் சமாதானத்தைப் பாதுகாக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தியது:
1934இல் லீக் ஆஃப் நேசன்ஸ் - சர்வதேச சங்கத்திலிருந்து ஜெர்மனும், ஜப்பானும் வெளியேறிய பிறகு, சோவியத் யூனியன் அதில் சேர்ந்தது.
1935இல் பிரான்சுடனும், செக்கோஸ்லோவாக்கியாவுடனும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.
1936இல் மங்கோலிய குடியரசுடனும், 1937இல் சீனாவுடனும் பரஸ்பர உதவி மற்றும் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.
இரண்டாவது உலகயுத்த ஆரம்பம்
முதலாளித்துவ நாடுகளில் புதிய பொருளாதார நெருக்கடியின் வெடிப்பு, உலகச் சந்தை, மூலப்பொருட்களின் மூலாதாரங்கள், செல்வாக்கு பிரதேசங்கள் மற்றும் மண்டலங்கள் ஆகியவற்றை இராணுவ நடவடிக்கைகளால் அவர்கள் புணர் பங்கீடு செய்வதை வேகப்படுத்தின.
ஜப்பான் 1937இல் வடசீனா படையெடுப்பு
ஜெர்மனி 1937இல் ஆஸ்திரியா படையெடுப்பு
ஜெர்மனி 1939இல் செக்கோஸ்லோவாகியா படையெடுப்பு
இத்தாலி 1939இல் அல்பேனியா படையெடுப்பு
இதைத் தொடர்ந்து ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்து. பின்னர் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மன் மீது யுத்த பிரகடனம் செய்தது. இந்த முறையில் இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாயிற்று.
ஜெர்மன், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பல சந்தர்ப்பங்களில் பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க நலன்கள் மீது தாக்கியுள்ளன. ஆனால் இம்மூன்று நாடுகளும் பின்வாங்கி உள்ளன.
இம்மூன்று நாடுகளும் ஒரு தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியும்; ஆக்கிரமிப்பாளர்களைக் கூட்டாக எதிர்ப்பதற்கும் அவர்களுக்கு எதிராக கூட்டுப் பாதுகாப்பை நிராகரிக்கும் கொள்கையைப் பின்பற்றியும் இருந்தார்கள். அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்கள். ஜெர்மனிக்கு - இராணுவ உதவி; கனரகயந்திர தொழிலையும் யுத்தத் தொழிலையும் புணரமைக்க உதவி.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் ஹிட்லரின்பால் திருப்திபடுத்தும் ஒரு கொள்கையை அனுசரித்தார்கள்.
அவர்கள் சோவியத் யூனியனுக்கு எதிராக கிழக்கு நோக்கி பாசிச ஆக்கிரமிப்பை திசைத் திருப்பி விடுவதற்கும் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
சோவியத் யூனியனின் சோசலிச வெற்றியையும், ஐரோப்பிய தொழிலாளி வர்க்க எழுச்சியையும் மற்றும் ஆசியாவில் தேசிய விடுதலை இயக்கத்தின் எழுச்சியையும் கண்டு அவர்கள் பயந்திருந்தார்கள். எனவே, அவர்களுக்கு உலகப் புரட்சிக்கு எதிராக பாசிசம் சக்திவாய்ந்ததொரு ஆயுதமாக இருந்தது. அவர்கள் "மதில் மேல் பூனை" போன்ற ஒரு கொள்கையைக் கையாண்டார்கள்.
யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சளைக்கும் வரையிலும் போராடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு வெளியே வந்து இரண்டு தரப்பினருக்கும் நிபந்தனைகளைக் கட்டளையிடலாம் என்றும் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். (அமெரிக்காவின் கொள்கை என இதைச் சொல்லலாம்).
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளில் பின்பற்றப்பட்ட "தலையிடாக் கொள்கை" சாராம்சத்தில் தங்களுடைய சொந்த லாபத்திற்காக ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை மறைமுகமாக தூண்டும் ஒரு கொள்கையாக இருந்தது.
ஆனால் பாசிஸ்டு நாடுகளின் பேராசைக்கு எல்லையே கிடையா. இந்த கொள்கைக்கு முதலில் இறையாக விழுந்தது ஸ்பெயின்; ஆஸ்திரியாவும் செக்கோஸ்லோவாக்கியாவும் அதனை பின்தொடர்ந்தன.
மியூனிச் ஒப்பந்தம்: 1938 மார்ச்சில் ஆஸ்திரியாவை கபளீகரம் செய்த பிறகு நாஜி ஜெர்மனி செக்கோஸ்லோவாக்கியாவின் சடேற்றன் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடிற்று. ஆக்கிரமிப்பிற்கு கூட்டு முறையில் எதிர்ப்பு கொடுப்பதற்கு சோவியத் யூனியன் முன்வைத்த முன்மொழிவு பிரான்சும் செக்கும் நிராகரித்தன. 1938 செப்டம்பர் 30இல், மியூனிச் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று; சடேற்றன் பிரதேசத்தை ஜெர்மனிக்கு விட்டுக் கொடுப்பதற்கு செக் நிர்பந்திக்கப்பட்டது.
பாசிஸ்டு அரசுகளின் அச்சுறுத்தலுக்குட்பட்ட நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பிற்கான கூட்டணி அமைக்க சோவியத் யூனியன் பிரேரேபனை.
1939 மார்ச் 15 இல் ஜெர்மனி செக்கோஸ்லோவாக்கியா முழுவதையும் கைப்பற்றி, மேலும் கிழக்கே போலந்திற்கும் முண்டியடித்துச் செல்வதற்கு தயாராக இருந்தது. இந்த நெருக்கடியான நேரத்தில், பாசிஸ்டு அரசுகளால் பயமுறுத்தப்பட்ட நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பிற்காக பிரான்சோடும், பிரட்டனோடும் ஒரு மூன்று நாட்டு கூட்டணி வைத்துக் கொள்வதற்கு (அமைப்பதற்கு) சோவியத் யூனியன் பிரேரேபித்தது. மூன்று அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் 1939 மார்ச்சிலிருந்து ஆகஸ்ட் வரையில் தொடர்ந்து நடைபெற்றது. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் சமத்துவத்தின் அடிப்படையில் சோவியத் யூனியனோடு ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு அவர்களுக்கு இருந்த அலட்சியத்தை வெளிப்படுத்தின.
போலந்து, ருமேனியா, துருக்கி, கிரீஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் (இந்த நாடுகளைப் பாதுகாப்பதில் பிரிட்டனும் பிரான்சும் அக்கறை கொண்டிருந்தன) பாதுகாப்பிற்கு சோவியத் யூனியன் பொறுப்பேற்க வேண்டுமென்று அவர்கள் கோரினார்கள். ஆனால் சோவியத் யூனியனுடைய அண்டை நாடுகளின் - அதாவது லாட்வியா, எஸ்டோனியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க மறுத்தார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த பாதுகாப்பை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் சோவியத் யூனியனைப் பாதுகாக்க விரும்பவில்லை. ஆகவே பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது இயல்பானதே.
ஜெர்மனியோடு ஒரு பரஸ்பர அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் ஒன்றை சோவியத் யூனியன் செய்து கொண்டது.
சோவியத் யூனியனோடு பிரிட்டிஷ் மற்றும் பிரான்சு அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையினை நடத்திக் கொண்டிருந்த அதேசமயத்தில், பிரிட்டிஷ் மற்றும் பிரான்சு அரசாங்கங்கள் நாஜி ஜெர்மனியுடன் ராஜதந்திர பேச்சுகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். உலகம் முழுவதும் செல்வாக்கு மண்டலங்களை மறுபங்கீடு செய்வதற்காக ஜெர்மனியோடு ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்காக அவர்கள் தயார் செய்து கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டதொரு உடன்பாடு வெற்றிகரமாக ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் போலந்தின் பந்தோஸ்பத்தை உத்திரவாதம் செய்வதற்கு பிரிட்டன் மறுத்திருக்கும். இந்த முறையில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பைக் கிழக்கு நோக்கி திருப்பியிருக்கும். இத்தகைய சூழ்நிலைமையின் கீழ், தனக்கு எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கும் ஒரு யுத்தத்தில் பிணைக்கப்படும் ஒரு அபாயத்- திலிருந்து சோவியத் யூனியன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே, ஜெர்மனியின் பிரேரேபனையை ஏற்றுக் கொண்டு 1939 ஆகஸ்டு 23இல் ஜெர்மனியோடு ஒரு பரஸ்பர அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் செய்து கொண்டது. (அப்படிச் செய்து கொண்டதின் மூலம் 1941 ஜூன் 21ஆம் தேதி வரையிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு அது தனக்கு சமாதானத்தை வென்று பெற முடிந்தது)
இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாயிற்று. 1939 செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்தது. 1939 செப்டம்பர் 3ஆம் தேதி பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனியின் மீது யுத்தப் பிரகடனம் செய்தது.
ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையிலான யுத்தம்
இப்போது ஆங்கில - பிரெஞ்சு அணிக்கும் ஜெர்மனிக்கும் இடையில் மூண்டுள்ள யுத்தத்தில், எந்த ஒரு தரப்பு நடத்தும் யுத்தமும் ஒரு அநீதியான, கொள்ளையடிக்கும் மற்றும் ஏகாதிபத்திய யுத்தமாகும். ஜெர்மனி இந்த யுத்தத்தை போலந்து மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் ஆங்கில பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய முன்னணியின் ஒரு போர்முனையை நெருக்குவதற்காகவும் துவக்கியிருக்கிறது. அதன் இயல்பிலேயே, ஜெர்மனியின் யுத்தம் ஏகாதிபத்திய யுத்தமாகும், அது எதிர்க்கப்பட வேண்டியது; அங்கீகரிக்கத் தக்கதல்ல. பிரிட்டன் மற்றும் பிரான்சைப் பொருத்தமட்டில், அவர்கள் போலந்தை தங்களின் நிதி மூலதனத்தின் கொள்ளைக்கான ஒரு இலக்காக கருதுகிறார்கள்; உலகை மறுபங்கீடு செய்வதற்காக ஜெர்மனியின் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக போலந்தை பயன்படுத்துகிறார்கள்; போலந்தை தங்களுக்குச் சொந்தமான ஏகாதிபத்திய முன்னணியின் ஓர் போர்முனையாக (திறீணீஸீளீ) ஆக்குகிறார்கள். எனவே இவர்களின் யுத்தமும் ஒரு ஏகாதிபத்திய யுத்தமாகும். அவர்கள் போலாந்துக்குச் செய்யும் உதவி போலந்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஜெர்மனியுடன் போட்டியிடும் நோக்கத்திற்காக செய்யபடுவதாகும். இவர்களின் இந்த யுத்தமும் கூட எதிர்க்கப்பட வேண்டும்; அங்கீகரிக்கத்தக்கதல்ல.
இது ஒரு அநீதியான, கொள்ளைக்கார, ஏகாதிபத்திய யுத்தமாகும்
எல்லா நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களும் இந்த யுத்தத்தை எதிர்த்து எழ வேண்டும் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரின் ஏகாதிபத்திய தன்மையை அம்பலப்படுத்த வேண்டும்; ஏனேனில் இந்த ஏகாதிபத்திய யுத்தம் உலக மக்களுக்கு தீங்கை மட்டுமே கொண்டுவருகிறது; இந்த யுத்தத்தால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மேலும் சமூக ஜனநாயகக் கட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் பாட்டாளி வர்க்க நலன்களுக்குத் துரோகம் செய்வது ஆகிய அவர்களின் குற்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும்.
இரண்டாம் உலகயுத்தத்தில் இது ஏகாதிபத்திய யுத்த கட்டமாகும்
இது உலக முதலாளித்துவ பொது நெருக்கடியின் விளைபொருளாகும்; முதலாளித்துவ (ஏகாதிபத்திய) வல்லரசுகளின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியால் முதலாளித்துவ அமைப்பின் உள்முரண்பாடுகள் கூர்மையடைந்ததின் நாசகரமான வெடிப்பு ஆகும். குறிப்பாக, அது உலகை வன்முறையில் ஏகாதிபத்தியம் மறுபங்கீடு செய்வது ஆகும். ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஏகாதிபத்திய அரசுகளே உலக யுத்தத்திற்கு பிரதான பொறுப்பாளிகளாவர். பாசிஸ்டுகளை திருப்திபடுத்துவது, சோவியத்துக்கு எதிரான நிலை எடுத்தல் காரணமாக பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்காவுக்கு இக்குற்றத்தில் பெரும்பங்குண்டு. இந்த யுத்தத்தில் முரண்பட்ட நலன்கள் கொண்ட பல்வேறு சக்திகள் செயல்பட்டன - எல்லா ஏகாதிபத்திய அரசுகளும் சோவியத் யூனியன் அரசினை அழிக்க முயற்சித்தன; பெருமுதலாளி அரசுகளின் இரண்டு சமூகங்களுமே உலகின் மீது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவ முயற்சித்தன; மற்றும் பாசிசம் உலகை அடிமைப்படுத்துவதற்கு எதிராக உலக ஜனநாயக மக்கள் திரளின் (சக்திகளின்) போராட்டம் ஆகியவனவாகும்.
ஏகாதிபத்திய யுத்தகட்டம்
1939ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதியன்று, அதிகாரப்பூர்வமாக பிரட்டனும் பிரான்சும் ஜெர்மனிக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தபிறகு, ஆறுமாத காலம் சண்டைகள் ஏதும் நடைபெறவில்லை. ஜெர்மனியால் தாக்கப்பட்ட போலந்துக்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. ஜெர்மனிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் பிரிட்டன், பிரான்சு நாடுகளின் பிற்போக்கான ஆட்சித் தலைவர்கள் நாஜி ஜெர்மனிக்கு எதிராகப் போராடத் தயாராக இருக்கவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் இந்த "தவறான யுத்தத்தை" "சரியான யுத்தமாக" - ஜெர்மனிக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒரு யுத்தமாக மாற்றிவிடவேண்டும் என்பதுதான். இதற்கிடையில், செப்டம்பர் 5ஆம் தேதியன்று அமெரிக்கா தனது 'நடு நிலையை' (Neutrality) பிரகடனம் செய்தது. அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் கொள்கை, முதல் உலக யுத்தத்தில் அவர்கள் கடைபிடித்ததைப் போலவே, மோதல்களுக்கு வெளியே நின்று கொண்டு, போரில் ஈடுபடும் மேற்கத்திய அரசுகளுக்கு ஆயுத தளவாடங்களை விற்பதின் மூலம் பணக்காரர்களாக ஆகிவிடுவது; அதற்கு பிறகு, யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சளைக்கும் வரையிலும் போராடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, யுத்தத்தால் போராடும் அரசுகள் பலவீனமடையும் போது, இரண்டு தரப்பினருக்கும் நிபந்தனைகளைக் கட்டளையிட்டு, தனது தீர்மானகரமான அதிகாரத்தை உறுதி செய்துகொள்வது என்பதே ஆகும்.
ஹிட்லர் மேற்கு ஏகாதிபத்திய ஜனநாயக நாடுகளின் இச்சகமான பேச்சுகளுக்கு செவிசாய்க்கவில்லை. ஹிட்லரின் திட்டம், முதலில் உறுதியில்லாத, தளர்ந்துபோன மேற்கத்திய அரசுகளை முதலில் ஒழித்துவிடுவது, பிறகு அந்நாடுகளின் தொழில்கள் மற்றும் மனித சக்தியையும் திரட்டிக்கொண்டு இறுதியாக சோவியத் யூனியன் மீது பெரும் தாக்குதல் தொடுப்பது; இதற்கிடையில் ஜப்பான் மேற்கு நாடுகளின் - பிரிட்டன், ஹாலந்து மற்றும் பிரான்சின் - கிழக்கிலுள்ள காலனி அமைப்புகளைக் கைப்பற்றிக் கொள்வது என்பதே ஆகும். அத்துடன், ஹிட்லர் தனது பின்புறத்தில் பிரிட்டனையும் பிரான்சையும் வைத்துக்கொண்டு, சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் இருமுனைகளில் போராடுவதற்கான அபாயகரமான வாய்ப்பை ஏற்கத் தயாராக இல்லை. எனவே, ஆரம்பத் தாக்குதல்கள் மேற்குக்கு எதிராக தொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் ஹிட்லரின் திட்டம். பிரிட்டன் மற்றும் பிரான்சு ஏகாதிபத்திய வாதிகளுக்கு பாசிஸ்டுகளின் இந்த தொலைநோக்கு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. அவர்களால் ஒரு பாசிச உலகில் ஜெர்மன் ஏகாதிபத்தியங்களுக்கு முற்றிலும் கீழ்படியும் ஒரு நிலைமையை ஏற்க முடியவில்லை. எனவே, அவர்களின் மீது ஹிட்லரின் தாக்குதல் வந்தபோது அதை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.
1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், கம்யூனிஸ்டு அகிலம் ஒரு கொள்கைப் பிரகடனம் வெளியிட்டது:
'இந்த யுத்தம் முதலாளித்துவ முகாமில் பல்லாண்டுகளாக உள்ள ஏகாதிபத்திய தகராறுகளின் தொடர்ச்சியே ஆகும்'. 'இது இந்த யுத்தத்தின் உண்மையான பொருளாகும், இது ஒரு அநீதியான, பிற்போக்கான, ஏகாதிபத்திய யுத்தமாகும்; இந்த யுத்தத்தில் எல்லா முதலாளித்துவ அரசுகளும், போரிடும் அரசுகளின் ஆளும் வர்க்கங்களும் பிரதான குற்றவாளிகள் ஆவர். தொழிலாளிவர்க்கம் இத்தகைய ஒரு யுத்தத்தை ஆதரிக்க முடியாது'.
சோவியத் யூனியனின் நுழைவு யுத்தத்தின் தன்மையை மாற்றிவிட்டது
ஒரு புதிய யுத்தத்தைத் தடுப்பதற்கு பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா மற்றும் இதர முதலாளித்துவ நாடுகளை ஒன்று சேரும்படி சோவியத் யூனியன் அறைகூவி இருந்தது. ஆனால், சோவியத் யூனியனுடைய யோசனையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இத்தகைய நாடுகள் சோவியத் யூனியனைத் தாக்கும்படி பாசிச அரசுகளைத் தூண்டுவதற்கு முயற்சித்தன. அப்பொழுது நிலவியிருந்த ஒரு சோசலிச நாடு என்ற முறையில் சோவியத் யூனியன், இதர நாடுகளில் உள்ள சமாதானத்தை விரும்பும் மக்களின் ஆதரவோடு கூட, ஒரு ஏகாதிபத்திய யுத்தத்தை தடுத்த நிறுத்துவதற்கு போதுமான அளவிற்கு பலமுடையதாக இருக்கவில்லை.
1940இல் இருந்து 1941 வரையிலும், நாஜி ஜெர்மனி வெற்றிகரமாக டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம், பிரான்சு, கிரீஸ் மற்றும் யூகோஸ்லாவிய ஆகிய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரும்பாலானவற்றை நாசிகளின் இரும்புக் கால்களுக்கு கீழே போட்டுவைத்துக் கொண்டு ஹிட்லர் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒரு யுத்ததை நடத்த தயார் செய்ய ஆரம்பித்தான். 1941 ஜூன் 22இல் ஜெர்மனியின் பாசிச ஆட்சியாளர்கள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.
முதலில் நிலைமைகள் சோவியத் யூனியனுக்கு சாதகமற்றதாகத் தான் இருந்தன. யுத்தத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஜெர்மன் துருப்புகள் சோவியத் யூனியனுடைய பிரதேசங்களின் கணிசமான பகுதியைக் கைப்பற்றிவிட்டது. உக்ரேனின் மிகப்பெரிய பகுதியைக் கைப்பற்றிய பிறகு மற்றும் பைலோ ரஷ்யா, மால்டோவியா, லித்துவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு எதிரி டோம்பாசின் மீது படை எடுத்து லெனின்கிராடை முற்றுகையிட்டு மாஸ்கோவின் மீது பயங்கரமாகத் தாக்கினான்.
யுத்த நிலைமைகள் இவ்வளவு கடினமாக இருப்பினும் சோவியத் யூனியனின் நுழைவு, யுத்தத்தின் தன்மையை அடிப்படையிலேயே மாற்றிவிட்டது. சோவியத் யூனியனின் நுழைவே அந்த யுத்தத்தை முற்போக்கான, ஜனநாயக ரீதியான மற்றும் பாசிச எதிர்ப்புத் தன்மை கொண்ட யுத்தமாக மாற்றிவிட்டது. இக்காலத்திற்கு முன்னர் இந்த யுத்தம் மேற்கத்திய ஜனநாயக அரசுகள் உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் இருந்தது; மற்றும் அவர்களின் வர்க்க நலன்கள் மேம்படுத்துவதற்காக மட்டுமே இயக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலைமைகளில், இந்த யுத்தம் பாசிச எதிர்ப்பு யுத்தமாக இல்லை; இருந்திருக்கவும் முடியாது. சோவியத் யூனியனின் நுழைவு யுத்தத்தின் தன்மையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கு ஒரு திட்டவட்டமான பாசிச எதிர்ப்பு தன்மையை மட்டுமே வழங்கவில்லை. அத்துடன் மேற்கு ஜனநாயக நாடுகளுக்கு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் கொடுத்தது.
பாசிஸ்டு ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றோடு பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருந்த முரண்பாடுகளின் காரணமாகவும் மற்றும் அவர்களுடைய சொந்த மக்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் பிரிட்டனும் அமெரிக்காவும் சோவியத் யூனியனோடு ஒரு கூட்டணி வைத்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டன. ஜெர்மனிக்கு எதிராக குவிந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு உடன்படிக்கையை 1941 ஜூலையில், பிரிட்டனுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டது. ஜெர்மனிக்கு எதிரான யுத்தத்தில் பரஸ்பர உதவிக்கான ஒரு உடன்பாடு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 1942 ஜூனில் செய்து கொள்ளப்பட்டது.
1930ஆவது ஆண்டுகளின் இடைப் பகுதியில் சோவியத் அரசாங்கம் பாசிச எதிர்ப்பு முன்னணி அமைக்க வேண்டுமென அறைகூவல் விட்டது. அதை ஏற்று ஒரு சமாதான முன்னணி அமைக்கப் பட்டிருந்தால் யுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்;
பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதைகுழியில் சிக்கிக் கொண்ட பிறகுதான், பயங்கரமான இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தங்களை வெளியே கொண்டுவருவதற்கு கம்யூனிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்துக் கொள்ள முன்வந்தார்கள். ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில் முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சி, காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் திட்டத்திற்குக் குறைவான பாசிச எதிர்ப்பு ஜனநாயகம், தேசிய விடுதலைத் திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணி என்ற அரசியல் வழியை முன்வைத்துப் போராடியது சரியான மார்க்சிய லெனினிய நிலைபாடாகும். பாசிசத்தை எதிர்த்து முழுசக்தியுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச முன்னணி அமைப்பது என்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் (கமின்டர்ன்) ஏழாவது மாநாட்டின் அரசியல்வழி இரண்டாம் உலகயுத்ததின் பொது யுத்ததந்திரமாக ஆகிவிட்டது. இது உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமை முறையின் சிறப்புக்கு உதாரணமாகும்.
சோவியத் யூனியனுக்கும். பாசிஸ்ட் ஜெர்மனிக்கும் இடையிலான நான்கு ஆண்டு யுத்தத்தில் செம்படை நாஜிக்களை சோவியத் யூனியனிலிருந்து அடித்து விரட்டி பெர்லின் வரை துரத்திச் சென்றது, மாஸ்கோ, ஸ்டாலின் கிராட், குரஸ்க் மற்றும் லெனின் கிராட் போர்க்களங்கள் சோவியத் படைவீரர்கள் மற்றும் மக்களின் வீரத்தை பறைசாற்றும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. செம்படையும் சோவியத் மக்களும் நாஜிக்களை எதிர்த்துப் போராடி தோற்கடித்ததின் மூலம் மனிதகுலத்தை நாஜிக்களின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தார்கள்,
1942 நவம்பரில் 256 ஜெர்மன் படைப் பிரிவுகளில் 179 பிரிவுகள் சோவியத் படையை எதிர்த்துப் போராடின. எஞ்சியவை பிரதானமாக ஐரோப்பாவில் ஜெர்மன் கைப்பற்றியிருந்த பிரதேசங்களில் பாதுகாப்பு வேலைகளைச் செய்துவந்தன. அதே சமயம் வட ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் படைகள் ஜெர்மனியின் நான்கு படைப்பிரிவுகளையும், இத்தாலியின் 11 படை பிரிவுகளையே சந்தித்தன. எனவே பாசிஸ்டு ஜெர்மனியை எதிர்த்தப் போரில் சோவியத் படைகளே பிரதானப் பங்கை வகித்தன; பிரிட்டிஷ், பிரான்சு மற்றும் அமெரிக்கப் படைகள் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட தகவலில் இருந்தே அறியலாம், ஜெர்மனிக்கு எதிராக இரண்டாவது போர்முனை துவக்குவதாகத் திரும்பத் திரும்ப வாக்களித்து வந்த பிரட்டனும் அமெரிக்காவும் 1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவ்வாறு செய்யவில்லை. சோவியத் யூனியன் தனது சொந்த பலத்தால் ஜெர்மனியைத் தோற்கடித்துவிடும் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகே அவை தங்களது படைகளை அனுப்பின. அதுவும் செம்படை மேற்கு ஐரோப்பாவை விடுதலை செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக அனுப்பியதே தவிர நாஜிக்களைத் தோற்கடிக்கும் நோக்கத்திற்காக அல்ல 1945 ஏப்ரலில் சோவியத் இராணுவம் பெர்லினைப் பிரிப்பதற்கான இயக்கத்தை ஆரம்பித்தது. ஜெர்மனியை எதிர்த்தப் போரில் 7.5 மில்லியன் படைவீரர்கள் உள்ளிட்ட 27 மில்லியன் சோவியத் மக்கள் தங்களது இன்னுயிரை ஈந்தார்கள். பாசிச மிருகத்தை அதனுடைய சொந்த குகையிலேயே ஒழித்துக்கட்டும் படியும் மற்றும் வெற்றிக் கொடியை பெர்லின் மீது பறக்க விடும்படியும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் படைக்கு அறைகூவல் விடுத்தது. மே 2 இல் சோவியத் இராணுவம் பெர்லினைக் கைப்பற்றி ஹிட்லரின் பாராளுமன்றத்தின் மீது செங்கொடியை ஏற்றியது, ஜெர்மன் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தது. ஜெர்மனியின் சரணாகதிக்கான உடன்பாடு மே 7இல் ரெய்யிம்ஸில் கையெழுத்தாயிற்று. ஜெர்மன் பாசிசத்தின் மீது சோவியத் மக்கள் முழுமையான வெற்றிபெற்ற நாளாக, ஸ்டாலின் "மக்களுக்கு அளித்த பிரகடனத்தில்" மே 9 ஆம் நாள்
ஹிட்லருடைய ஜெர்மனியின் படுதோல்விக்குப் பிறகு, சோவியத் யூனியனுடைய பாதுக்காப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், சீன மக்களின் விடுதலை இயக்கத்திற்கு உதவி செய்வதற்காகவும், இந்த கிழக்கத்திய ஆக்கிரமிப்புத் தளத்தை ஒழிப்பது கட்டாயமாக இருந்தது.
ஜெர்மனியின் முழுமையான தோல்வியும் அதனுடைய நிபந்தனையற்ற சரணாகதியும் ஜப்பானை முழுமையாக தனிமையில் வைத்தது. ஆனால் ஜப்பானிய ஏகாதிபத்தியம் அதனுடைய தலைவிதியை ஒப்புக்கொள்வதற்கு விருப்பமில்லாமல், ஆக்கிரமிப்பு யுத்தத்தை இன்னும் தொடர்ந்து நடத்துவதற்கு கனவு கண்டது.
1945 ஆரம்பத்தில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள், பசிபிக்கில் ஜப்பானைத் தோற்கடிப்பதற்கு முயற்சிப்பதில் அவர்கள் எதிர்நோக்கவிருக்கும் கஷ்டங்களை உணர்ந்துகொண்டு, ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில், பிரிட்டிஷ் மற்றும் சோவியத் அரசாங்கங்கள் பங்கு கொள்வதைப் பற்றி யால்டா மாநாட்டில் சோவியத் யூனியனோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
கிழக்கில் யுத்தத்தின் இந்த ஆதாரத்தை ஒழித்துக்கட்டும் பொருட்டும் மற்றும் உலகத்தை மேலும் அழிவினின்றும், தியாகத்தினின்றும் காப்பாற்றும் பொருட்டும் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு சோவியத் யூனியன் ஜப்பான் மீது யுத்தப் பிரகடனம் செய்ய தீர்மானித்தது. 1945 செப்டம்பர் 2இல் ஜப்பானின் நிபந்தனையற்ற சரணாகதி ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீனாவின் எதிர்ப்பு யுத்தத்தின் முடிவையும் இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவையும் குறித்தது. சீனாவிற்கும் உலகத்தின் இதர பகுதிகளுக்கும் இது புதியதொரு சகாப்தத்தை அறிமுகப்படுத்திற்று.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு சர்வதேச நிலைமை
உலக நிலைமையில் மாபெரும் மாற்றங்கள் நடைபெற்றன. ஒரு புறத்தில், ஜெர்மன், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன; பிரட்டனும், பிரான்சும் பலவீனப் பட்டிருந்தன; மற்றும் ஏகாதிபத்திய முகாம் முழுவதிலும் அமெரிக்கா மேலாதிக்கம் பெற்றிருந்தது. மறுபுறத்தில், சோவியத் யூனியன் பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் மகத்தானதொரு வெற்றியைப் பெற்று முன் எப்போதைக்காட்டிலும் மிகவும் அதிக பலம்வாய்ந்ததாக மாறி இருந்தது; ஐரோப்பாவில் பல மக்கள் ஜனநாயக நாடுகள் தோன்றின. அவை முதலாளித்துவ அமைப்பிலிருந்து முறித்துக் கொண்டு, சோவியத் யூனியனோடு ஒரு ஒன்றுபட்ட சக்தி வாய்ந்த சோசலிச முகாமை அமைத்தன. காலனி நாடுகளிலும் சார்பு நாடுகளிலும் தேசிய விடுதலை இயக்கங்கள் புதியதொரு உச்சியை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தன. முதலாளித்துவ உலகம் முழுவதற்கும் கடுமையானதொரு அடி கொடுக்கப்பட்டிருந்தது; சோசலிச முகாமிற்கும் முதலாளித்துவ முகாமிற்கும் இடையே இருந்த பலாபலத்தில், சோசலிச முகாமிற்கு சாதகமாக பிரம்மாண்டமான ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், யுத்த பிற்கால கட்டத்தில் உலக முதலாளித்துவம் மேலும் பலவீனமடைந்து சோசலிசம் படிப்படியாக பலப்பட்டிருந்தது. நிலைமை முழுவதும் பிற்போக்கு சக்திகளுக்குப் பாதகமாக இருந்தது. ஆனால் உலகமக்களுக்கு சாதகமாக இருந்தது.
ஏஎம்கே
(மக்கள் புரட்சி, ஜூன், ஜூலை 2005)