வெள்ளம், வறட்சியினால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து சென்னை மாநகரம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை, தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களையும் சீரழித்துவிட்டது. சென்னையில் அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்ததால் 18 லட்சம் பேர் அகதிகளாக குடிசைகள் இழந்து, வீட்டில் நீர்புகுந்து அரசு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் வீடிழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சமாகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 என அரசாங்கம் கூறுகிறது.
வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் அவர்களின் வீடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களும் வெள்ளத்தில் வீணாகியோ, அடித்துச் செல்லப்பட்டோ விட்டன. இவர்களின் பொருள் இழப்பு பல நூறு கோடிகளைத் தாண்டும்.
கிண்டி, அம்பத்தூர், வியாசர்பாடி, வில்லிவாக்கம், மாதவரம், திருவான்மியூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சிறு மற்றும் குறுந் தொழில்களை எல்லாம் வெள்ளம் அடியோடு சூறையாடிவிட்டது. அத்துடன் சிறு வணிகர்களின் கடைகளும் வெள்ளத்தில் பாழாகிவிட்டது. இவை அனைத்தையும் சீர் செய்வதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும். மேலும் இங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏழை எளிய விவசாயிகளின் குடிசைகள் அழிந்ததோடு பல இலட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, சவுக்கு என பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கை பெரும் துயரத்தில் மூழ்கிவிட்டது. ஊழி வெள்ளம் தமிழகத்தை சொல்லொண்ணா பேரிடரில் ஆழ்த்திவிட்டது. கடலூர் மாவட்டம், சுனாமி தானே புயல் என பெரும் பாதிப்புகளை சந்தித்ததுடன் இவ்வாண்டு வெள்ளத்திலும் உயிர் இழப்பு உள்ளிட்டு கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
சென்னையை மூழ்கடித்தது கொட்டித்தீர்த்த பெருமழை மட்டுமல்ல.
ஜெயலலிதா அரசின் எதேச்சாதிகார போக்கால் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் திட்டமிடாமல் ஒரே நாளில் திடீரென்று அதிக நீரை திறந்துவிட்டதும் இந்த அளவு பேரழிவிற்குக் காரணமாகிவிட்டது.
சென்னையை வெள்ளம் சீரழித்தது டிசம்பர்-1ஆம் தேதி. டிசம்பர் - 1ஆம் தேதி இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி அடையாற்றிற்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்குமேல் உபரி நீர் வந்துகொண்டிருந்தது. அந்தநேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென்று வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி திறந்துவிட்டதுதான் பெரும் வெள்ளத்திற்கும் பேரழிவிற்கும் காரணமாகி விட்டது. அத்துடன் பூண்டி ஏரியில் 2-ஆம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகம். அதாவது சென்னையில் மழை கொட்டியபோது ஆந்திராவிலும் மழைகொட்டியது. அந்த நீரும் பூண்டிக்கு வந்தது. எனவே 2-ஆம் தேதி 30 ஆயிரம் கன அடி திறந்துவிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் பூண்டியிலிருந்து திறந்து விடப்பட்டது அதைவிட அதிகமாக 36,484 கன அடி. செம்பரம்பாக்கமும், பூண்டியும் சேர்த்து டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் திறந்துவிடப்பட்டது. அதிகாரப்பூர்வ மொத்த நீரின் அளவுமட்டும் வினாடிக்கு 1,06,684 கன அடி. இந்தத் தண்ணீர்தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டு மந்தைகளாக நடத்திவரும் ஆணவ ஆட்சியின் அலங்கோலம்தான் சென்னை மக்களின் பெரும் துயரத்திற்குக் காரணமாகிவிட்டது. டிசம்பர்-1ஆம் தேதியிலிருந்து கனமழை பெய்யும் என நவம்பர் 25-ஆம் தேதியே எச்சரிக்கை செய்தது சென்னை வானிலை மையம். இது தவிர பிறநாட்டு வானிலை ஆய்வு மையங்களும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை செய்திருந்தன. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்துவிட அனுமதி கோரிய கோப்புகள் தலைமை செயலாளரிடம் காத்திருந்தது. இவை எதையும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை. அக்கறை காட்டவும் இல்லை. உரிய நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கவில்லை. எல்லா முடிவுகளையும் தானே எடுக்கும் ஜெயலலிதாவின் அதிகார வெறிதான் சென்னை மக்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போனதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தையெல்லாம் தான் சுமப்பதாகக் கூறுகிறார். உண்மையில் ஜெயலலிதாவின் ஆணவ ஆட்சியே மக்களுக்கு சுமையாய் மாறிவிட்டது.
மேலும் தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர்களுக்கு ஜெயலலிதா அரசாங்கத்தின் செயல்பாடுகள் மட்டுமே பொறுப்பல்ல. சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். எனவே சென்னை வெள்ள பாதிப்புக்கு கருணாநிதி ஆட்சியும் பொறுப்பாகும். அத்துடன் வெள்ளம் வறட்சி இரண்டுமே ஏற்படுவதற்கான வரலாற்று ரீதியான காரணங்களும் உண்டு.
ஏகாதிபத்திய காலனியாதிக்கமும் வெள்ளம் வறட்சியும்
இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளத்திற்கும், வறட்சிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமே பொறுப்பல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. காலனிய ஆட்சி காலத்திலிருந்தே இத்தகைய வெள்ளம், வறட்சியால் ஏற்படும் பேரிடர்கள் தொடர்கின்றன. கடந்த 150 ஆண்டுகளாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் பின்னர் வந்த அமெரிக்க எகாதிபத்தியமும் தங்கள் நாடுகளை தொழில் மயமாக்குவதற்காக நடத்திய சூறையாடல்களின் விளைவுதான் இன்றைய சென்னை வெள்ளம். ஏகாதிபத்தியவாதிகள் மூலப் பொருள்களுக்காகவும், மனித உழைப்பை கொள்ளையடிப்பதற்காகவும் காலனிகளை கைப்பற்றுவதற்காகவும் நடத்திய போர்கள் மனித உயிரையும், நாடுகளின் கட்டமைப்புகளையும் தகர்த்துவிட்டன.
ஐரோப்பிய நாடுகள் தங்க வேட்டைக்காக அமெரிக்காவில் நடத்திய போர்களும், ஆப்பிரிக்க கண்டத்தை சூறையாடுவதற்கு நடத்திய போர்களும், இன அழிப்புகளோடு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகள் அனைத்தையும் தகர்த்தன. அதுவே காலனிய நாடுகளின் வெள்ளம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தின.
உதாரணத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்தியாவில் கடைபிடித்தக் கொள்கைகள் இந்திய நாட்டின் சமூக பொருளாதாரக் கட்டமைப்புகளை அழித்தது. 1851-52 ஆம் ஆண்டு மொத்த வருவாய் 19.8 மில்லிஒன் பௌண்ட். இதில் 0.17 மில்லிஒன் பௌண்ட் அளவுக்கு அதாவது மொத்த வருவாயில் அரை சதவீதம் மட்டுமே சாலைகள்,கால்வாய்கள் வெட்டுதல்.பாலங்கள் மற்றும் பிற மராமத்து பணிகளுக்காக செலவழிக்கப்பட்டது.
பொதுவாக ஆசியாவில் அனாதிகாலந்தொட்டு மூன்று அரசாங்கத்துறைகள் இருந்து வந்திருக்கின்றன.
1. நிதித்துறை, அதாவது உள்நாட்டை கொள்ளையடிக்கும் துறை;
2. போர் துறை, அதாவது வெளிநாடுகளை கொள்ளையடிக்கும் துறை;
3. பொது மராமத்து துறை, அதாவது ஆறுகளை கட்டுப்படுத்தி வாய்கால்கள் அமைத்து நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்குதல். வெள்ள வறட்சிக்கு தாக்குப் பிடிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களுக்கு முந்தைய இந்திய ஆட்சியாளர்களிடமிருந்து முதல் இரண்டுத் துறைகளான நிதித் துறையினையும், போர் துறையினையும் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நீர்ப்பாசனத் துறையை அறவே புறக்கணித்துவிட்டார்கள். எனவே இந்திய விவசாயம் மோசமான அழிவுகளை சந்தித்தது. தாயகத்தைச் சார்ந்த நிறுவனங்கள் (பிரிட்டன்) இந்திய நாட்டின் மொத்த வருமானத்தில் 3 சதவீதத்தை விழுங்கின. தாயகத்திடமிருந்து வாங்கிய கடனுக்காக செலுத்திய வட்டி 14 சதவீதத்தையும் சேர்த்தால் மொத்த வருமானத்தில் 17 சதவீதத்தை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து உறிஞ்சிக் கொண்டார்கள். இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஒரு வருடத்தில் உறிஞ்சிய இந்தத் தொகையை கழித்துவிட்டால், இந்தியாவின் மொத்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பகுதி ராணுவத்திற்காக செலவிடப்பட்டது. அதாவது 66 சதவீதம் இராணுவத்திற்காக செலவிட்டனர். ஆனால் பொதுப்பணித்துறைக்கு மொத்த வருமானத்திலிருந்து 2.3/4 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியும் கூட சாலைகள், கால்வாய்கள், பாலங்கள் போன்ற பொதுமக்களுக்கான மராமத்து வேலைகளுக்காக முழுமையாக செலவிடப்படவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவின் விவசாயத்தை அழித்து சுதேசி சமூகங்களை உடைத்தெறிந்ததன் மூலமாகவும், சுதேசி கைத்தொழில்களை கெல்லியெறிந்ததன் மூலமாகவும் சுதேசி சமுதாயத்தில் இருந்த மகத்தான அம்சங்களை எல்லாம் உடைத்தெறிந்து தரை மட்டமாக்கியதன் மூலமாகவும் இந்திய நாகரிகத்தை அழித்தார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியது பற்றிய வரலாற்றின் ஏடுகள் இந்த அழித்தல் நடவடிக்கைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிடவில்லை. இந்த சர்வநாச குவியலுக்கு இடையில் புனரமைப்புப் பணி எதுவும் துவங்கப்படவில்லை.
1900-ஆம் ஆண்டுகளில் உருவான பிறகு ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பல்கள் மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்கும், காலனிகளை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டியில் இறங்கின. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் இத்தாலி போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இரண்டு உலகப் போர்களையும், எண்ணற்ற பிரதேச யுத்தங்களையும் நடத்தி மனித குலத்தை நாசமாக்கினர். பல இலட்சம் மனித உயிர்கள் பலிவாங்கப்பட்டன. சமூக பொருளாதாரக் கட்டமைப்புகள் தகர்க்கப் பட்டன.
முதல் உலகப் போரின் போது 1,25,000 டன் இரசாயன பொருட்களை பயன்படுத்தி பெரும் நாசத்தை உருவாக்கியதுடன் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் “முழுமையான” உலகு தழுவிய போர் என்ற அளவில் மனித குலத்தை பெருமளவில் கொன்றொழிக்கவும், பெரும் நாசங்களுக்கும் ஆட்படுத்தியது. போரில் ஈடுபட்டவர்கள் மட்டும் 11 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, மக்கள் அதிகம் வசித்த தொழில் நகரங்களில் குண்டு வீசப்பட்டதால் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். உடைமைகளும் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் உயிரிழந்தவர்கள் உட்பட இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 மில்லியன் முதல் 85 மில்லியன் ஆகும். இன அழிப்பு, கொன்று குவிப்பு, குண்டு வீச்சு, நோய் மற்றும் பஞ்சத்தால் பலகோடி மக்கள் செத்து மடிந்தனர்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் ஏடர் மற்றும் சோர்ப்பி ஆறுகளில் கட்டப்பட்டிருந்த அணைகள் குண்டுபோட்டு தகர்க்கப்பட்டன. இதன் மூலம் ஜெர்மனியின் தொழில் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. சீனா மீது ஜப்பானின் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது ஜப்பான் படைகளின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக மஞ்சள் நதி மற்றும் யாங்ஷி நதியின் அணைகள் உடைக்கப்பட்டன. இவ்வாறு ஏகாதிபத்தியவாதிகளின் நாடுபிடிக்கும் போர்கள் கோடிக்கணக்கான மக்களை படுகொலை செய்தது மட்டுமல்ல, உடைமைகளை அழித்தது மட்டுமல்ல, மனித சமுதாயம் உருவாக்கியிருந்த அனைத்து கட்டமைப்புகளையும் தகர்த்துவிட்டன. அதன் தொடர்ச்சியாகவே பருவநிலைமாற்றமும் வெள்ளமும், வறட்சியும் மக்களின் வாழ்க்கையை பாழடித்து வருகிறது.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு காலனிய ஒழிப்பு என்ற பேரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் புதியகாலனி ஆதிக்கத்தை திணித்தது. இத்தகைய புதிய காலனியாதிக்கத்தின் கீழ் ஏகாதிபத்திய காலனியாதிக்க சுரண்டலும், நாடுபிடிப்பதற்கான போர்களும் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கிவருகிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஏகாதிபத்திய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகான “கீன்சிய கொள்கைகள்” அதாவது சமூக நல அரசு கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1970களில் அத்தகைய முதலாளித்துவ சீர்த்திருத்தக் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டன. 1980ஆம் ஆண்டுகளில் ரீகன், தாட்சர் கொண்டு வந்த புதியதாராளக் கொள்கைகளை அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் உலகம் முழுவதும் திணித்தனர். உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் இந்தப் புதியதாராளக் கொள்கைகள் இயற்கை வளங்களை சூறையாடி உலகத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.
உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற அமெரிக்காவின் நியுயார்க் நிதிமூலதனக் கும்பல்களும் அவர்களின் ஐரோப்பிய கூட்டாளிகளும் புவிக்கோளத்தை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்கான கதவுகளை பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு திறந்துவிட்டனர். “மக்கள் நலன்”, “வளர்ச்சி” என்ற பேரால் ஏகாதிபத்தியவாதிகள் மூலப்பொருட்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையிடுவதற்கான தடைகள் அனைத்தும் அகற்றுப்பட்டுவிட்டன. சுதந்திர வர்த்தகம் என்ற பேரில் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களும், கனிம வளங்களும் உலகம் முழுவதும் சூறையாடப்படுகின்றன. இத்தகைய ஏகாதிபத்திய காலனியாதிக்க சுரண்டலும், போர்களும் கட்டமைப்புகளைத் தகர்த்து சுற்றுச் சூழலை அழித்து புவிவெப்பம் அடைவதற்கும், பருவநிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்வது தீவிரமாகிறது. அதன் விளைவாகவே உலக மக்கள் புயல், வெள்ளம், வறட்சி, பஞ்சம், பசியால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இன்றைய உலகம் வெப்பமடைவதற்கும், பருவநிலை மாற்றத்திற்கும் ஏகாதிபத்தியங்களே குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியமே முதன்மையான காரணமாக உள்ளது. ஆனால் பசுமை குடில் வாயுக்களை குறைத்து புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான செலவுகளை ஏற்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மறுக்கிறது. அதை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கிறது.
பூமியின் இருப்பையே அச்சுறுத்தக்கூடிய பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பசுமை குடில் வாயுக்கள் வெளியிடுவதை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட முயற்சிகளை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தோற்கடித்தன. கியாட்டோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பருவநிலை மாற்றத்துக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களை அதிகமாக வெளியிட்டு வரும் அமெரிக்கா உள்ளிட்ட செல்வந்த நாடுகளே பொறுப்பேற்க வேண்டும். வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் அல்ல என்ற அடிப்படையான விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இதனை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது.
அண்மையில் நடந்த பாரீஸ் மாநாட்டில் பசுமை குடில் வாயுக்களை அதிகமாக வெளியிட்டு வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள், தீவு நாடுகளி ஏற்பட்ட பேரழிவுகளுக்கும், பெரும் நாசங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகள் பொறுப்பேற்று இழப்பீடு வழங்கவேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டு விட்டது. அத்துடன் பசுமை குடில் வாயுக்கள் வெளியிடுவதை தடுப்பதற்காக ஏழை நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அந்நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர்கள் கடன் வழங்கி அந்த சுமைகளை ஏழை நாடுகள் மீது சுமத்திவிட்டன.
இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், ஏகாதிபத்திய நாடுகளின் இத்தகைய போக்குகளை எதிர்த்துப் போராட மறுக்கின்றன. அத்துடன் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் இத்தகைய ஆதிக்கத்திற்கு துணைபோகின்றன. எனவே இந்திய ஆளும் வர்க்கங்களின் இத்தகைய துரோகத்தை எதிர்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தையும், புதிய காலனியாதிக்கத்தையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே புவி வெப்பம் ஆவதை தடுத்து நிறுத்தவும், வெள்ளம், வறட்சியற்ற ஒரு புதிய உலகத்தை படைக்கவும் முடியும்.
புதிய காலனியாதிக்கத்தின் கீழ் இந்திய நாட்டின் கட்டமைப்புகள் தகர்க்கப்படுகின்றன
1947 அதிகாரமாற்றத்திற்குப் பிறகு இந்திய ஆளும் வர்க்கங்கள் காலனிய ஆட்சியாளர்களின் கொள்கைகளையே தொடர்கின்றனர். இந்திய அரசு காலனியாதிக்க ஆட்சியாளர்களைப் போலவே இராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு பொது மராமத்துப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கிறது. பொது மராமத்துப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் நாட்டின் கட்டமைப்பு தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய அரசு கடந்த கால் நூற்றாண்டுகளாக அமல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகள் மராமத்துப் பணிகளை சுத்தமாக முடக்கிப் போட்டுவிட்டது.
இவ்வாண்டு மோடி ஆட்சியின் நிதிநிலை (2015-16) அறிக்கையில் அநியாய அந்நியக் கடன் ரூ.29,78,666 கோடிக்கு வட்டியும் அசலும் திருப்பி செலுத்துவதற்காக 20 சதவீதத்தை ஒதுக்கிய பிறகு, மீதமுள்ள மொத்த வருமானத்தில் ரூ. 3.1 லட்சம் கோடியை இராணுவத்திற்காக ஒதுக்கியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கும், தென் ஆசிய மேலாதிக்கத்திற்கும் சேவை செய்ய அண்டை நாடுகளுடன் போரிடுவதற்கும், உள்நாட்டு மக்களை நர வேட்டையாடுவதற்கும் இராணுவத்திற்கும், துணை ராணுவப் படைகள், ரிசர்வ் போலீசுக்கும் சேர்த்து மொத்த வருமானத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் நிதி ஒதுக்கிவிட்டு மராமத்து பணிகளுக்கு 3 சதவீதத்திற்கும் குறைவாகவே நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் ரூ. 5 லட்சம் கோடி ஊக்கத்தொகை, வரிச் சலுகையை வாரி வழங்குகிறது.
அநியாய அந்நியக் கடனுக்கு வட்டி மற்றும் அசல் திருப்பி செலுத்துதல்,
ஏற்றுமதி இறக்குமதி விலைகளை மோசடியாக தீர்மானிப்பது மூலம் பல இலட்சம் கோடி இந்தியாவின் செல்வம் ஏகாதிபத்திய நாடுகளால் உறிஞ்சப்படுவதோடு கருப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குவதன் மூலமும் இந்தியாவின் செல்வம் உறிஞ்சப்படுகிறது. கருப்புப் பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. 2004-ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை இந்தியாவிலிருந்து ஆண்டிற்கு ரூ. 3.4 லட்சம் கோடி (5100 கோடி டாலர்) வரி ஏய்ப்பின் மூலம் வெளியேறியிருக்கிறது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 34 லட்சம் கோடி இந்திய நாட்டின் கஜானாவிற்கு வரவேண்டிய பணம் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியுள்ளது. அதன் விளைவாக கஜானா காலியாகி பொது மராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுவருகின்றன.
எனவே அநியாய அந்நியக் கடன் இரத்துச் செய்யப்பட வேண்டும். அத்துடன் சேர்த்து கருப்புப் பணத்தையும் முழுதுமாக கைப்பற்றி அந்தத் தொகை முழுதும் வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருப்பி விடப்பட வேண்டும். அவ்வாறு செயவதன் மூலம்தான் நிவாரணப் பணிகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் செவ்வனே செய்து முடிக்க முடியும். இன்று சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தால் நாசமாகிய நிலையில், வட இந்தியா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி உதவி கோரிக்கையும் நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்டுள்ளது. எனவே இத்தகைய ஒரு சூழலில் வெள்ளம், வறட்சி பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு நிதி திரட்டுவதற்கு அது ஒன்றுதான் வழியாகும்.
இயற்கை வளங்கள் சூறையாடப்படலும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பும்
“வளர்ச்சி”, “மக்கள் நலன்” என்ற பேரில் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு மூலப் பொருட்கள் மற்றும் இயற்கை வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் சூறையாடுவதற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுவிட்டன. மோடி ஆட்சியோ இந்திய நாட்டின் சுற்றுச் சூழல் சட்டங்கள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சட்டங்களை ஒழித்துக் கட்டிவிட்டது. சுரங்கங்கள் அமைப்பது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, ஆறுவழிச் சாலைகள் அமைப்பது, போன்ற நடவடிக்கைகளுக்காக பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் கைப்பற்றுவிட்டன. மறுபுறம் உள்ளூர் மக்களுக்கான சாலைகள், கழிவறை வசதிகள் மறுக்கப்படுகின்றன. சுரங்கங்கள் அமைப்பதற்காக 5 கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். அத்துடன் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளும் நீர்வழிப் பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
சென்னையை பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் ஏரிகள், ஆறுகள், நீர்வழிப் பாதைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், பல்கலைக் கழகங்கள், மருத்துவ மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், குப்பைக் கிடங்குகள், பறக்கும் இரயில் திட்டம், பெட்ரோலிய பங்குகள் என நீர்நிலைகள் நீர்வழிப் பாதைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. நீர் நிலைகள் மட்டுமல்ல. ஆற்று நீரையே கொக்ககோலா, பெப்சி போன்ற பன்னாடுக் கம்பெனைகளுக்கு தாரைவார்க்கிறனர். காலனியாதிக்கக் கொளகைகளும், உள் நாட்டு கொள்ளைக் கூட்டங்களின் பொதுச் சொத்துக்களை சூறையாடல்களும் நாட்டின் பொது மராமத்து கட்டமைப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டன.
ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், கல்விக் கொள்ளையர்கள், மணல் கிரானைட் கொள்ளையர்கள் மற்றும் அரசு அதிகார வர்க்க மாஃபியாக்கள் போன்றவர்கள்தான் ஏரிகள், ஆறுகள், நீர்வழிப் பாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இத்தகைய ஆக்கிரமிப்புக்கெல்லாம் ஜெயலலிதா ஆட்சி மட்டுமல்ல, கருணாநிதி ஆட்சியும் பொறுப்பாகும். போரூர் ஏரியை எம்.ஜி.ஆர்` ராமசாமி உடையாருக்கு தாரைவார்த்ததன் எதிர் விளைவுதான் இன்று அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துப் போகவும் காரணமாகியது. இந்நிலை தொடருமானால் போயஸ் கார்டனும் கோபாலபுரமும் வெள்ளத்தால் அழிவது நிச்சயம்.
சென்னை மட்டுமல்ல திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாநகரங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகள் அபாயகரமானதாக இருந்தது என்பதை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வாயம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டு 6-ஆம் தேதியன்றே எச்சரித்தது.
“பொதுப்பணித் துறை நீர்நிலை அமைப்பின் பொறியாளர்களின் தலைவர் தற்போதுள்ள நிலை குறித்து அளித்த அறிக்கையின் புள்ளி விவரப்படி மாநிலத்தில் 17 பெரிய ஆறுகள், 127 சிறிய ஆறுகள் இருந்ததாக அமர்வு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்த மொத்த நீர்நிலைகளின் எண்ணிக்கை 39,202. ஆனால் அவற்றில் 3,701 மட்டுமே முழுமையாக பாதுகாக்கப்பட்டு வந்தன. சுமார் 10,000 நீர்நிலைகள் பாதுகாக்கப்படாத நிலையில் இருந்தன. இதனை அரசு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல பாதுகாக்கப்படாத இந்த நீர்நிலைகளுக்கு பல கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டதை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்”. டிவிஷன் நீதிபதி ராம சுப்பிரமணியன் அதில் கூறியதவாது: ”மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் மதிப்பீட்டை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பணம் தண்ணீரைவிட வேகமாக ஓடியிருக்கிறது. அதிகாரிகள் தற்போதைய நிலைகுறித்து தாக்கல் செய்துள்ள அறிக்கையை பரிசீலிப்போமானால், அந்தத் தொகையெல்லாம் உண்மையிலேயே குறிப்பிட்ட திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டிருந்தால் மாநிலம் முழுமையும் பசுமைப் புரட்சி ஏற்பட்டிருக்கும்.
ஆனால் எங்கே, எந்த அளவிற்கு நீரில் மட்டுமல்ல பணத்திலும் கசிவு ஏற்பட்டிருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
பராமரிக்கப்படாத நீர்நிலைகளை பாதுகாப்பது என்ற பேரில் அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் பல கோடிகளை கொள்ளையடிப்பது ஒருபுறம், மறுபுறம் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க நிதியின்றி திட்டப் பணிகள் தொடராமல் இருப்பது மறுபுறம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி 1055 கி.மீ. வெள்ளநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணியை திட்டமிட்டிருந்தது. அதற்குத் தேவையான ரூ. 4,000 கோடி நிதி இல்லாததால் அந்தத் திட்டங்கள் துவங்கப்படவே இல்லை.
உலகவங்கி நிதி உதவியுடன் கூவத்தையும், அடையாறையும் இணைத்து அம்பத்தூர், வளர்சரவாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதிகளை அவற்றுடன் இணைக்கும் திட்டம்; கொசஸ்தலை ஆற்றுப் பகுதிகளான திருவெற்றியூர், மணலி, மாதாவரம் பகுதிகளின் வெள்ளநீர் வடிகால் அமைப்பதற்கு ஜெர்மனியின் KFW என்ற நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்துவது என்ற திட்டமும் துவக்கப்படவே இல்லை. கோவளம் பகுதியில் சோழிங்க நல்லூர் மற்றும் பெருங்குடி வடிகால் திட்டம் நிதிநிறுவனங்களின் உதவிக்காக காத்திருக்கிறது. ஏன் இந்த நிலை. உலகவங்கி மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் உதவியை நம்பி திட்டமிட்டதால்தான் இத்திட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. எனவேதான் சென்னை மாநகரம் வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இவையெல்லாவற்றிற்கும் மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.
வெள்ளம் வறட்சியை தடுக்கும் நீர்வழிச் சாலைகள்
வெள்ளம் வறட்சியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி இமயம் முதல் குமரி வரை மழை அதிகமாக உள்ள இடங்களிலிருந்து குறைவாக இடங்களுக்கு வெள்ள நீரை பகிர்ந்து கொள்வதுதான். இதனால் மழை நீர் வீணாகாது. விவசாயம் வளர்ச்சியடையும். குடிநீர் பிரச்சினை ஒழிந்து தொடர்ந்து கிடைக்கும். நீர்வழிச் சாலைகள் உருவாகும். மேலும் புவிவெப்பம் அடைந்து பருவநிலை மாறிவரும் சூழலில் மழைநீர் என்பது உயிர் நாடியாகும். இத்தகைய உயிர் நாடியை பாதுகாக்க நதிகள் இணைப்பு இன்றியமையாததாகும். இல்லையேல் வருங்காலத்தில் வெள்ளம் வறட்சி பேரிடரால் மக்கள் மடிவது மட்டுமல்ல உடைமைகளும் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளோம்.
இத்தகைய நதிகளை இணைத்து வெள்ளம் வறட்சி ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் திட்டத்தை இந்தியாவின் ஆளும் வர்க்கங்களால் இன்றைய புதியகாலனிய ஆட்சி முறையின் கீழ் நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை. இன்றைய ஏகாதிபத்திய ஆதரவு பிற்போக்கு ஆட்சியை தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே அதனை செயல்படுத்தமுடியும். அதற்கு அன்றைய சோஷலிச சீனாவே ஒரு முன்னுதாரணமாகும்.
சீனாவில் ஓடும் மிக நீளமான மஞ்சள் ஆற்றின் கரையில்தான் சீன நாகரிகம் தோன்றியது. சீனர்களின் பெருமிதத்திற்கு இந்த ஆறு உரியதானாலும், சீனாவின் துயரம் என்று அது அழைக்கப்பட்டது. ஏனென்றால் கடந்த 3000-4000 ஆண்டுகளில் இந்த ஆற்றில் 1593-முறை பெரு வெள்ளங்கள் ஏற்பட்டு பேரழிவுகள் தொடர்ந்தன. 1887-மற்றும் 1931-ஆம் ஆண்டில் இந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர் என்பதிலிருந்து அது சீனாவின் துயரம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பழைய பிற்போக்கு ஆட்சியாளர்கள் இந்த இயற்கை பேரிடர்களை வெல்ல முடியும் என்பதை மறுத்து மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வந்ததனர். வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் சொர்க்கம், நரகம் என்றும் ஆண்டவனையும் காரணம் காட்டினார்கள். அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்கள் மீது பேரிடர் போக்க வரியை விதித்தனர். இங்கேயும் கூட ஜெயலலிதா ஆட்சியின் அதிகாரிகள் நவம்பர் மாத மத்தியில் செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் வரவில்லை என்பதற்காக மழை வேண்டி வருண பகவானுக்கு பூஜை செய்ததை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஆனால் சீனாவில் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் விடுதலைப் பெற்றவுடன், நிலச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் கட்சியின் வெகுஜன அமைப்புகளின் உதவியோடு சிறிய, நடுத்தர விவசாயிகள் சாதாரண உபகரணங்களைக் கொண்டு மஞ்சள் நதியின் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தினர். மூட நம்பிக்கைகள் விலகி இயற்கையைக் கட்டுப் படுத்த முடியும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்தனர். சோஷலிச சீனா ஆறுகளில் 12 அணைகள் கட்டியது. 7 புனல் மின் நிலையங்களை அமைக்கப்பட்டு 5618-மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. வெள்ளம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதோடு 74-ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலம் பாசன வசதி பெற்றது. 14-கோடி மக்கள் பயனடைந்தனர்.
4000-ஆம் ஆண்டுகளாக யாருக்கும் கட்டுப்படாமல் பொங்கியெழுந்து பெருக்கெடுத்து ஓடி மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய இந்த ஆற்றினை மக்களின் உதவியோடு செஞ்சீனம் கட்டுப்படுத்தியது. சீனாவின் துயரம் சீனாவின் சொர்க்கமாக மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் நடந்த விடுதலைப் புரட்சியே காரணமாக அமைந்தது.
எனவே இந்தியாவின் பிற்போக்கு தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சர்வாதிகார ஆட்சியை தூக்கியெறிந்து மக்கள் ஜனநாயக குடியரசு அமைப்பது ஒன்றுதான் நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைக்கவும், வெள்ளம் வறட்சியற்ற ஒரு புது உலகை படைப்பதற்குமான வழியாகும்.
தமிழக வெள்ள பேரிடரிலிருந்து மீள நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களுக்காக போராடுவோம்!
சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் கடுமையான பாதிப்புகளாகும். உயிர் சேதம், பயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. சிறு தொழில்கள், பதிப்பகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அவ்வாறு போதுமான நிதியை பெறவேண்டுமானால் தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அவ்வாறு அறிவித்தால் மத்திய அரசு மொத்த செலவில் 75 சதவீத பங்கை ஏற்கவேண்டும். எனவே தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவித்து பின்வரும் அடிப்படையில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துவக்கப்பட வேண்டும்.
* வெள்ளம் வறட்சியால் உருவாகும் பேரிடர்களைப் போக்க நதிகள் இணைப்பு, நீர்வழிச் சாலைகள் அமைத்தல், நீர்ப்பாசனம், வெள்ள நீர் வடிகால் வாய்க்கால்கள் போன்ற பொது மராமத்துப் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க இராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை குறைக்க வேண்டும். அத்துடன் அநியாய அந்நியக் கடனை முழுமையாக ஒழிக்க வேண்டும். அந்த நிதியையும் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தையும் கைப்பற்றி இப் பணிகளுக்காக திருப்பிவிட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நிலச் சீர்திருத்தம் செய்து சிறு, நடுத்தர விவசாயிகளின் உணர்வு பூர்வமான பங்கேற்பு மூலம் மேற்கண்ட பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
* வெள்ளத்தால் உடைமைகள் இழந்த மக்களின் மறுவாழ்விற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை மற்றும் வரிச் சலுகைகளை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும். மத்திய அரசு மட்டும் பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ. 5,00,000 லட்சம் கோடி வரிச் சலுகையும், ஊக்கத் தொகயும் வழங்கியிருக்கிறது. இந்தத் தொகை முழுவதையும் வெள்ள வறட்சி பாதிப்புகளுக்கு திருப்பிவிடவேண்டும். அத்துடன் அவர்கள் மீது வெள்ள நிவாரண வரிபோட்டு நிதி திரட்ட வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டிய பணிகள்
* சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், கல்விக் கொள்ளையர்கள், மணல் மற்றும் கிரானைட் கொள்ளையர்களிடமிருந்து ஏரி, ஆறுகள் ஆக்கிரமிப்புகளை மீட்டு அரசுடைமையாக்கப்பட வேண்டும்.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குத்தகை, வாரத்தை உடனே இரத்து செய்யவேண்டும். கோவில், மடங்கள் மற்றும் நிலச்சுவாந்தாரர்களின் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு குத்தகை வாரத்து இரத்து செய்வது மட்டுமல்ல கந்து வட்டியை ஒழித்து அவர்களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கவேண்டும்.
* தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பல இலட்சம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. தமிழக அரசு அதுபற்றி ஆய்வு செய்து முறையாக கணக்கெடுக்காதது மட்டுமல்ல பயிற் சேதாரங்களுக்கு ஒதுக்கியுள்ள ஹெக்டேருக்கு ரூ. 12,400 என்பது மிகமிகக் குறைவாகும். அது அதில் ஈடுபடுத்திய கூலி உழைப்புக்குக் கூட ஈடாகாது. எனவே தமிழக அரசு பயிர் பாதிப்புகளை முறையாக கணக்கிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து இழப்புகளையும் சேதாரத்திற்கு ஏற்றவாறு ஈடு செய்யவேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும்.
* மேலும் வெள்ளத்தால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை விவசாயிகள் மீது சுமத்துவதை நிறுத்த வேண்டும். அந்த சுமைகள் முழுவதையும் பன்னாட்டு வேளாண் கார்ப்பரேட்டுகளான மான்சாண்டோ, கார்கில் போன்ற நிறுவனங்களின் மீது சுமத்த வேண்டும். அண்மையில் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 10வது மாநாட்டில் நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான தீர்மானங்களை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது. நைரோபி மாநாட்டு தீர்மானத்தின் இரு அம்சங்கள் இந்தியாவின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் அழித்துவிடும் ஆபத்துள்ளது.
முதலாவதாக “இந்தியாவின் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் வழங்கப்படும் கொள்முதல் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதோடு - விதைகள், மின்சாரம், பூச்சிமருந்து போன்றவைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை இப்பொதுள்ள அளவுக்குமேல் அதிகரிக்கக்கூடாது.
இரண்டாவதாக இந்தியா 2018 முதல் உணவு தானியங்களை எதிர்கால தேவைக்காக சேமித்து வைக்கக்கூடாது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு விளைபொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் விவசாயத்திற்கு அளித்துவரும் மானியத்தை முழுவதுமாக இரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மானியம் வழங்கப்படும் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறுகிறது.
ஆனால் ஏகாதிபத்திய நாடுகளில் ஏராளமாக மானியம் பெற்ற அந்நாடுகளின் வேளாண் பொருட்கள் இந்தியச் சந்தையில் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. இந்திய விவசாயத்தை அழிக்கின்றன. எனவே காட் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறுவதோடு பிரிட்டன் உட்ஸ் நிறுவனங்களான ஐ.எம்.எப்., உலகவங்கி போன்ற நிதிநிறுவன ஆதிக்கத்திலிருந்தும் வெளியேற வேண்டும்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள பாதிக்கப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
- தமிழகத்தில் பெய்துள்ள பெருமழை காரணமாக சென்னையில் அம்பத்தூர், கிண்டி, பெருங்குடி போன்ற தொழிற்பேட்டைகளில் சிறு, குறுந் தொழில்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கின்றன. மழையின் காரணமாக எந்திரங்கள் பழுதடைந்துவிட்டன. மூலப்பொருட்கள் அழிந்துவிட்டன. உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறுந் தொழில் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல லட்சம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
இன்று நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த சிறு, குறுந் தொழில்கள்தான் திகழ்கின்றன. விவசாயத்திற்கான கருவிகள் தயாரிப்பதிலும், தொழில் துறைக்காக உதிரி பாகங்கள் தயாரிப்பதிலும், ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணி ஈட்டுவதிலும், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதிலும் இத்தகைய நிறுவனங்கள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. சுமார் 1 லட்சம் கோடி நட்டத்தை இந்நிறுவனங்கள் சந்திக்கின்றன~. இத்தொழில்கள் இன்று வெள்ளத்தால் முழுமையாக மூழ்கிவிடும் அபாயத்தையும் சந்திக்கின்றன.
பாதிக்கபப்ட்ட சிறு, குறுந் தொழில்களை மீண்டும் புனரமைக்க மத்திய, மாநில அரசுகள் பெருமளவு உதவவேண்டும். மின்கட்டண தள்ளுபடி, வரிச் சலுகை, விற்பனை வரி, சேவை வரி, கலால் வரி போன்றவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். வங்கியில் பெற்றக் கடனுக்கு வட்டி மற்றும் தவணையை தள்ளிப்போட வேண்டும். வட்டியில்லாத நீண்டகால தவணையில் வங்கிகள் கடனுதவி வழங்கவேண்டும். காப்பீட்டு உரிம அடிப்படையில் இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும். பழுதடைந்த சாலைகள், சாக்கடை இணைப்புகள், குடிநீர் வசதி உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும். இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
மேலும், சிறு, குறுந் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற இலட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியத்தை அரசாங்கமே குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்காவது வழங்கவேண்டும்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வணிகர்கள் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வியாபாரிகளுக்கும் நட்ட ஈடு வழங்குவதோடு வட்டியில்லாத கடனை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். அத்துடன் வால்மார்ட் போன்ற பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதற்கான ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.
- சென்னையிலும், தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் குடிசைகள் வெள்ளத்தால் அழிந்துள்ளது. இந்த 2 லட்சம் வீடுகளையும் கல்வீடாக மாற்றுகின்ற வீடுகட்டும் திட்டத்தை உடனடியாக துவங்கவேண்டும். அவ்வாறு வீடுகட்டும் திட்டத்தையும் மறுசீரமைப்புப் பணிகளையும் வேலையற்றோர் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு வருடம் 365 நாளும் வேலை வாய்ப்புத் திட்டம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அத்துடன் நகர்புறங்களில் குடிசைவாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நகருக்குள்ளேயே வீடுகட்டித் தரவேண்டும். அதற்கு கிண்டி குதிரை ரேஸ், கவர்னர் மாளிகை, பின்னிமில் போன்ற இடங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- வெள்ளத்தால் ஏற்படும் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ முகாம் அமைப்பதன் மூலம் தீர்க்க முடியாது. தனியார் மயமாக்கல் மூலமும் தீர்க்க முடியாது. மருத்துவம் தனியார் மயமாக்கல் மக்களின் நல்வாழ்விற்கு தீர்வல்ல என்பதை இந்த வெள்ளம் வெளிப்படுத்திவிட்டது. மியாட் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்தது மட்டுமல்ல சென்னையை சுற்றியுள்ள பல தனியார் மருத்துவமனைகள் இயங்காமல் போனது. ஆனால் அரசு மருத்துவமனைகள் பெருவெள்ளத்திலும் சிறப்பான சேவை செய்ததை நாம் அனைவரும் கண்டோம். எனவே கல்வி மருத்துவம் சுகாதாரம் அனைத்திலும் தனியார்மயத்தை ஒழித்து அரசே ஏற்று நடத்தவேண்டும். அதன் மூலம் சுகாதாரத்துறை கட்டமைப்புகளை பலப்படுத்துவதன் மூலம் அரசுத்துறையை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே தொற்று நோய்களை ஒழிக்கவும் சுகாதாரத்தை பாதுகாக்கவும் முடியும்.
அனைத்துக் கட்சிக் கமிட்டிகள் மூலம் நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப் போராடுவோம்
சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளத்தின் போது மீட்புப் பணிகளில் தமிழகத்தின் அரசு இயந்திரம் முழுவதுமாக முடங்கிப் போனதை அனைவரும் கண்டோம். பேரிடர் பணிகளை ஆற்றுவதற்கான கட்டமைப்பு நொறுங்கியிருந்தது. தமிழகத்திற்கு மீட்பு பணிக்கு வந்த ஒரு இராணுவ அதிகாரி “எங்களுக்கு என்னபணி செய்வது என்பதற்கு வழிகாட்டுதலே கிடைக்கவில்லை. மாறாக வி.ஐ.பி.களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத்தான் சொன்னார்கள்” என்று கூறுகிறார்.
பொதுமக்கள் சார்பாகவும், அரசாங்க சார்பாகவும் வழங்கிய நிவாரணப் பொருட்கள் அம்மாதி.மு.க. குண்டர்களால் சூறையாடப்பட்டது. பல்வேறு மக்கள் பிரிவினர் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மீது அம்மா படத்தை (ஸ்டிக்கர்) ஒட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.
அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுமே இந்த வெள்ளப் பிரச்சினையிலும் லாவணி பாடுவதிலேயே குறியாக உள்ளன. அத்துடன் வெள்ள மீட்புப் பணியில் தொண்டு நிறுவனங்கள் பெருமளவில் ஈடுபட்டிருப்பினும் கடந்த சுனாமியின் போது அவர்களும் பெருமளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மேலும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார். ஆனால் தற்போது தமிழக வெள்ளத்திற்கு மத்திய அரசு ரூ. 25,912 கோடி வழங்கினால் போதும் என்று தான்தோன்றித்தனமாக கோரிக்கை வைத்துள்ளார். அவர் கோரிய தொகை பாதிக்கப்பட்ட குடிசை வாசிகளுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கே போதாது. அத்துடன் இன்றைய நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை தமிழக அரசு மட்டுமோ அல்லது அதிமுக மட்டுமோ அல்லது வேறு எந்த ஒரு கட்சி மட்டுமோ தனித்து செய்துவிட முடியாது.
எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தமிழக வெள்ள பாதிப்புகளை பற்றி மதிப்பீடு செய்யவும் தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசு பெரும் பகுதி பொறுப்பை ஏற்கச் செய்யவும், அனைத்துக் கட்சி கமிட்டிகள் மூலம் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போராட அறைகூவி அழைக்கிறோம்.
இந்திய அரசே!
- தமிழக வெள்ள இழப்புகளை தேசிய பேரிடராக அறிவி!
- இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை! நீர்ப்பாசனம் மராமத்து, நதிகள் இணைப்பு, நீர்வழிச் சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரி!
- மக்களின் மறுவாழ்விற்காக நிதி ஒதுக்கீடு செய்ய, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் அளித்துவரும் ஊக்கத் தொகை, வரிச்சலுகையை ரத்துச் செய்! அவர்கள் மீது வெள்ள நிவாரண வரி போடு!
தமிழக அரசே!
- ரியல் எஸ்டேட், மணல், கிரானைட், கல்விக் கொள்ளையர்களின் ஆறு, ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்று! அரசுடைமையாக்கு!
- கோவில், மடங்கள், நிலப்பிரபுக்களின் நிலங்களில் பயிரிடும் விவசாயிகளுக்கு, குத்தகை வாரத்தை ரத்து செய்! கந்து வட்டியை ஒழி! விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கு!
- வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை விவசாயிகள் மீது சுமத்துவதை எதிர்ப்போம்! பன்னாட்டு வேளாண் கார்ப்பரேட்டுகள் மீது சுமத்தப் போராடுவோம்!
- விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகப்படுத்து; இழப்பிற்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கு!
- பெரும்பான்மை வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய தேசிய முதலாளிகள், சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் வழங்கு! வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடனுக்கு உத்தரவாதம் வழங்கு!
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு! வட்டியில்லா கடன் வழங்கு! ஆன்-லைன் வர்த்தகத்தைத் தடை செய்!
- வீடற்றவர்கள் மற்றும் குடிசைவாழ் மக்களுக்கு கல் வீடு கட்டிக் கொடு!
- வேலையற்றோர் மற்றும் ஏழை, எளிய விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கு!
- தனியார் நிறுவனங்களால் தொற்று நோயை ஒழிக்க முடியாது! கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்து!
- அரசு, தனியார், அரசுசாரா நிறுவனங்கள் வழங்கும் அனைத்து நிவாரணப் பொருட்கள் விநியோகத்தையும், மறு சீரமைப்புப் பணிகளையும் அனைத்துக் கட்சிக் கமிட்டிகள் மூலம் அமல்படுத்து!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி 2016