கண்ட தேவியில் தேரின் மீது நிலப்பிரபுத்துவ, அம்பல ஆதிக்கம்
தேர் சக்கரத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமை! - ஏஎம்கே
தேவக்கோட்டைக்கு அருகில் உள்ள கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் திருவிழாவையும் தேர் இழுப்பதையும் இப்பகுதியில் உள்ள சுரண்டல் ஆதிக்கக்காரர்களும், அம்பலங்களும் சட்டவிரோதமான முறையில் சாதிமுறையில் (மரபுவழியில்) நடத்துவது என்று முடிவு எடுத்துள்ளனர். சாதிவெறியைத் தூண்டி அப்பாவி மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும், குடியுரிமைகளையும் சாகடிப்பதையே தங்களின் நோக்கமாகக் கொண்டுள்ளனர். திராவிட பாரம்பரிய கருணாநிதி அரசும், அதிகாரிகள் கூட்டமும் சட்டத்தை மீறிய இந்த ஜனநாயக படுகொலைக்குத் துணை போகிறது. சாதிவாத, மனு தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
சொர்ணமூர்த்தீஸ்வரர் தோளின் மீது ஓட்டுக்கட்சிகளும் சாதிசங்கங்களும்
தமிழகத்தில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஜெயா, சசி கும்பல் மீண்டும் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறது. இதற்காக கலவரத்தைத் தூண்டி கருணாநிதி ஆட்சியைக் கலைப்பதையே தனது ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதற்காக மக்களிடையில் நிலவுகின்ற நிலப்பிரபுத்துவ சாதி உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் சாதி வெறியாக மாற்றி அப்பாவி மக்களின் அறிவை அழித்து, சாதிக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது. இந்த பொதுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தேவகோட்டைப் பகுதியில் கண்டதேவி தேர் இழுக்கும் பிரச்சினையைப் பயன்படுத்திக் காங்கிரசிடம் உள்ள எம்.எல்.ஏ. பதவியை அ.தி.மு.க. கைப்பற்றத் திட்டமிட்டு அதற்காக இப்பகுதி அ.தி.மு.க. தலைவர்கள் சாதி மோதலைத் தூண்டியுள்ளனர். மேல் சாதிக்குத் தலைமைக் கொடுக்கின்றனர்.
அதுபோலவே டாக்டர். கிருஷ்ணசாமியும் சாதி உணர்வுகளைப் பயன்படுத்தி சாதி ஒழிப்புக்கான விஞ்ஞானப் பூர்வமான திட்டமேதுமின்றி தாழ்த்தப்பட்ட மக்களை திரட்டி அடுத்த தேர்தலில் அதிக எம்.எல்.ஏ. சீட்டுகளை பெறுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்.
இந்த அம்பல முறைக்கு போட்டியாக தோன்றியுள்ள தேவர் பேரவை நாடு சேர்க்கை ஊர் அம்பல முறையை செயலற்றதாக்கி, இந்த அம்பலங்களை தஞ்சாவூர் பொம்மைகளாக்கி தேவர் பேரவையைச் சேர்ந்தப் புதிய ஆதிக்கக்காரர்கள் தங்களது ஆதிக்கத்தை நிறுவவும், தங்களின் தலைமையில் சாதியைத் திரட்டிக் கொள்வது ஆகிய நோக்கமும் இந்த சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆயுதம் இங்கு சுழற்றப்படுவதற்கு மற்றொருக் காரணமாகும்.
நடுத்தர சாதியை (பேக்வேர்டு கேஸ்ட்) தனது அடித்தளமாகக் கொண்டுள்ள தி.மு.கவும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து, சாதியைப் பயன்படுத்தியே இப்பகுதியில் எம்.எல்.ஏ. பதவியைத் தொடர்ந்து பிடித்துவரும் காங்கிரசும், மேல் சாதியைச் சார்ந்து சாதிக் கலவரத்தைத் தூண்டும் அ.தி.மு.க. மற்றும் ஆதிக்க கூட்டத்தையும், எதிர்க்கத் தயாரில்லை, எதிர்க்காது. (சமூக நீதி பேசும் அனைத்து கட்சிகளும் இந்த நிலைக்குத்தான் இறுதியில் வந்தாக வேண்டும்) இன்று நாட்டில் பெரிய அளவில் நடக்கும் சாதி, மத மோதல்கள் அனைத்தும் ஒரு சிறு பிரிவினரின் ஆதிக்கப்போட்டிக்கும், பதவிப்போட்டிக்கும், நிலவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான போட்டியாகவே உள்ளது. அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கிருஷ்ணசாமிக்கும், கருணாநிதிக்கும் இடையில் வரப்போகும் தேர்தலில் கூட்டணிக்கான வாய்ப்புண்டு என உணர்ந்த அ.தி.மு.க. வினர் கிருஷ்ணசாமிக்குத் தாழ்த்தப்பட்டோரிடம் உண்டாகும் செல்வாக்கு தி.மு.க.வுக்கே பயன்படும் என்பதால், கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்திற்குத் தாழ்த்தப்பட்டவர்கள் போகாமல் தடுக்க அ.தி.மு.க. ஆதிக்கக்காரர்கள் மற்றும் அம்பலங்கள் சிலர் தலைமையில் நூற்றுக்கணக்கா மேல்சாதியினர் திரட்டப்பட்டு நகருக்கு வெளியே சிவகங்கை, கல்லல் போன்ற ரோடுகளிலும், இதர சாலைகளிலும் நின்று அனைத்துப் பஸ்களையும் மறித்து அதில் பயணம் செய்த அடையாளங்காணப்பட்ட அனைத்துத் தாழ்த்தப்ப்பட்ட மக்களையும் கீழே இழுத்துப்போட்டு அடித்து, துணிகளைப் பறித்துக் கொண்டு அவமானப்படுத்தி விரட்டினர். இது காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடந்தது. இத்தாக்குதல் நடப்பது போலீசுக்குத் தெரிந்தும் போலீஸ் சாவகாசமாகப் போய் பார்த்துவிட்டு, அமைதியாக திரும்பிவிட்டது. (இத்தகைய சூழ்நிலையில் கலைஞரின் போலீஸ் காந்தியின் அகிம்சை வழியில் கவனமாக செயல்படுவதில் கைதேர்ந்தது)
எனவே கண்டதேவி தேர் வடம் பிடிக்கும் பிரச்சனை என்பது ஒரு சில ஆதிக்கக்காரர்கள் பணம் பதவியும் அடைய துடிப்பவர்கள அதிகாரத்திற்கு அலைபவர்கள் பிரச்சனையாகும். இவர்கள் பக்திப் பேச்செல்லாம் வெறும் பம்மாத்து. இதில் மேல் சாதி, கீழ் சாதி உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. மாறாக அமைதி கெடும், வீண் பகைவரும், அதைப் பயன்படுத்தி ஏழைகளை பலியிட்டு ஆதிக்கக்காரர்களே பலனடைவர்.
இப்பகுதியில் இத்தகைய சாதி கலவரங்களை ஆதிக்கச் சக்திகள் மிக சுலபமாக நடத்துவதற்கான சில தனித் தன்மையான அம்சங்களையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இப்பகுதியில் செயல்படும் சட்டவிரோத நாடு, சேர்க்கை, ஊர் மற்றும் அம்பல முறைகள்:
இப்பகுதியில் மொத்தம் பதினான்கு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் பல சேர்க்கைகள், ஒவ்வொரு சேர்க்கையிலும் பல ஊர்களும் உண்டு. இவற்றில் நாட்டு அம்பலம், சேர்க்கை அம்பலம், ஊர் அம்பலம் போன்ற தேர்ந்தெடுக்கப்படாத பாரம்பரிய பதவிகளில் அமர்ந்து குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கக்காரர்கள் நாட்டாமைப் புரிந்து வருகின்றனர்.
மேற்கண்ட இந்த முறைகளை ஒரு காலத்தில் நிலப்பிரபுத்துவ அரசர்கள் தங்களின் அதிகாரத்தை அனைத்து மக்களின் மீதும் கீழ்வரை (கிராமங்கள் வரை) நிறுவவும், மேலும் படைக்கு ஆள் திரட்டவும், அடிமை வேலைக்கு ஆள் திரட்டவும், தானியங்களை வசூலிக்கவும் மற்றும் தேவையானபோது மக்களிடம் இருந்து தானியங்களை வசூலிக்கவும் மேற்கண்ட சுரண்டல் ஆதிக்கக்காரர்களான அம்பலங்களைச் சார்ந்து நின்றனர். இதற்காக இவர்களுக்கு உம்பலஞ்செய் என்ற (மானிய) நிலமும் வழங்கப்பட்டுளளது.
இந்த அம்பலங்கள் ஊர் பொதுச்சொத்துக்கள், கோவில் சொத்துக்கள் மற்றும் நிர்வாகம், கட்டைப்பஞ்சாயத்து, சாதி ஆதிக்கம், ஊர் ஆதிக்கம் (தனது சொந்த சாதி உழைக்கும் மக்கள் மீதான ஆதிக்கம் உட்பட) போன்றவற்றை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் கூட்டும் நாடு, சேர்க்கைப் போன்ற கூட்டங்களில் பங்கு கொள்ளும் உரிமை தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடையாது (அழைக்கப்படவும் மாட்டார்கள்). அம்பலங்களின் சொந்த சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள உழைக்கும் மக்களுக்கு இக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் பேசும் உரிமை உண்டு என்றாலும், நடைமுறையில் யாரும் தங்களின் கருத்தைக் கூறவோ அதற்காக வாதாடவோ முடியாது. எனவே கூட்டங்கள் கூடுவது என்பதே அம்பலங்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டுச் செல்லத்தான்.
மேலும் கோவில் திருவிழாக்களில் இந்த அம்பலங்களுக்குதான் முதல் மரியாதைத் தரப்பட வேண்டும் (முதல் மரியாதை என்பது அம்பலங்களின் தலையையை, ஆதிக்கத்தை ஒப்புக் கொள்வதாக மக்கள் கொடுக்கும் உறுதிமொழியாகும்). இப்பகுதியில் வாழும் வணிகர்களான நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்ட கோயில்களிலும் கூட இந்த அம்பலங்களுக்கே முதல் மரியாதைக் கிடையாது.
இந்தக் கொடூரமான ஆதிக்கக்காரர்களான அம்பலங்கள் தங்களின் ஆதிக்கத்திற்காக இவர்கள் கூறும் நாடுகளுக்கிடையே கூட குட்டி போர்களையே நடத்தி தனது சாதி மக்களையே மாய்த்துள்ளனர்.
எனவே, அரசர்கள் காலத்து ஆதிக்கத்திற்கான நாடு, சேர்க்கை, ஊர் போன்ற பிரிவினைகளும் இவற்றில் நடக்கும் சாதி அடிப்படையிலான அம்பல ஆதிக்கங்களும் சட்ட விரோதமானதும், ஜனநாயக விரோதமானது, அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் எதிரானதும் ஆகும். வன்கொடுமைச் சட்டப் படி ஜாமீனில் வெளிவர முடியாத தண்டனைக்குரிய குற்றமாகும்.
எதிரிகளை இனம் காண்போம்! ஆதிக்கத்தை அகற்றுவோம்!
ஒடுக்கப்பட்டோர் உரிமையை உத்திரவாதப்படுத்துவோம்!
சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள பதினான்கு நாடுகளில் உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, இரவுச்சேரி நாடு, தென்னிலை நாடு, ஆகியவற்றைச் சேர்ந்த அம்பலங்கள் மற்றும் ஆதிக்கக்காரர்கள் தங்களின் தலைமையில் கண்டதேவி திருவிழாவை நடத்தி வருகின்றனர். சாதி, இனம் போன்ற எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் சமமாகத் தேர் இழுக்க வேண்டும் என உயர்நீதிமனறம் உத்திரவிட்டுள்ளது. ஆனால் அம்பலங்களும் ஆதிக்கக்காரர்களும் உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி காலாவதியாகிப்போன அரசர்கள் காலத்து பாரம்பரிய முறையில் (மரபு வழியில்) அதாவது சாதி அடிப்படையில் ஜனநாயக விரோதமான முறையில் தேரோட்டத்தை நடத்துவது எனத் தீர்மானித்துள்ளனர். அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதி உழைக்கும் மக்களின் மீது இந்த முடிவை திணித்து வருகின்றனர். இவர்களின் முடிவு வன்கொடுமைச் சட்டப்படி தண்டனைக்குரியக் குற்றமாகும். (இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸ், ரெவின்யூ, அறங்காவல் துறை அதிகாரிகளும் இச்சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்களே) எனவே இம்முடிவினை எடுத்து அறிவித்த அம்பலங்களை வன்கொடுமைச் சட்டப்படிக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
ஆனால் 'பொடா' போன்ற புதிய பாசிச ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரும் கருணாநிதி அரசு ஏற்கனவே இருக்கும் வன்கொடுமைச் சட்டத்தை சாதி ஆதிக்கக்காரர்களுக்கு எதிராகப் பயனபடுத்தத் தயங்குகிறது. ஆதிக்கக்காரர்களை கலவரத்தைத் தூண்டுபவர்களை வெளியில் விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது. எனவே நாளை எது நடந்தாலும், அம்பலங்களையும் ஆதிக்கக்காரர்களையும் திரட்டிக் கொண்டு சாதி கொலைவெறித் தாக்குதலுக்குத் தலைமைத் தாங்கும் அ.தி.மு.க. பகுதி தலைவர்களும் அதனை வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசுமே முழுப்பொறுப்பாகும்.
சாதிமோதலைத் தூண்டும் கட்சிகளும் அதனை எதிர்த்த அனைத்து சாதி மக்களின் கடமையும்
திருவிழாவில் குறிப்பிட்ட சாதி, குறிப்பிட்ட குடும்ப பரம்பரை உரிமையான முதல் மரியாதை முறை ஒழிக்கப்பட வேண்டும். விழாவை நடத்துவதில் நாடு, சேர்க்கைப் போன்ற சாதியடிப்படையிலான ஆதிக்கக்காரர்கள் மற்றும் அம்பலங்களின் உரிமைகள் நீக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேர்வடம் பிடிக்கும் உரிமை மட்டுமின்றி, அர்ச்சகர் உரிமை, வழிபடும் உரிமை, கோவில் நிர்வாகம் உட்பட அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வுரிமைகள் அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இவற்றை மறுப்பது உழைக்கும் மக்களின் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமையை, குடியுரிமையை மறுப்பதாகும்.
நீண்ட காலமாக இந்த ஆதிக்கக்காரர்களின் தலைமையில் கிராமங்கள் பட்ட அவதிகளை அனைத்து சாதி உழைக்கும் மக்களும் உணர வேண்டும். அத்துடன் நாடு சேர்க்கை அம்பலமுறைகள் நாட்டை சுடுகாடாக்கும் முறைகள் என்பதை உணர்ந்து இவற்றை ஒதுக்கவேண்டும். உழைப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு சுமையாக உள்ள இந்த சாதிமுறையை, சாதி உணர்வுகளை ஒதுக்கித் தள்ளி, வர்க்க அடிப்படையில் ஒன்றுதிரண்டு உரிமைக்கும் வாழ்வுக்கும் விடுதலைக்கும் போராட முன்வர வேண்டும். மாறாக நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் தலைமையில் சென்றால் உழைக்கும் மக்களின் வாழ்வை அழிவில் இருந்து யாரும் காப்பற்ற முடியாது.
இன்று நாட்டிலுள்ள பாராளுமன்றவாத ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் ஒவ்வொரு சாதியிலும் உள்ள ஆதிக்கக்காரர்களின், சாதிவாதக் கட்சிகள் தலைமையில் அல்லது சாதி அமைப்புகளில், உழைக்கும் மக்களைத் திரட்டிப் பின்பு அத்தலைவர்களுடன் அல்லது அமைப்புகளுடன் பேரம் பேசி சாதி ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமரத் துடிப்பதால், இச்சாதிவாத அமைப்புகளும் கட்சிகளும் சாதிவெறியை தூண்டி விடுகின்றனர்.
நிலவும் மக்கள் விரோத தேச விரோத மத்திய, மாநில அரசுகள் அந்நிய ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் நாட்டை அகலத் திறந்து விட்டுள்ளனர். தேசிய முதலாளித்துவ வளர்ச்சியை நசுக்கி வருகின்றனர். அரை நிலப்பிரபுத்துவத்தை பாதுகாக்கின்றனர். இதன் மூலம் நாட்டை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் காரணமான இன்றைய ஆட்சியாளர்களின் புதிய பொருளாதரக் கொள்கை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்குத் திரளாமல் தடுக்கும் பொருட்டு ஏகாதிபத்தியங்களும், இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சாதிவாத அறிவாளிகள், ஆதிக்கக்காரர்களின் மூலம் சாதி அமைப்புகளைக் கட்டி, சாதி வெறியைத் தூண்ட எல்லா உதவிகளையும் செய்து வருகின்றனர்.
எனவே, அனைத்து சாதிகளிலும் உள்ள உழைக்கும் வர்க்கம் இந்த தேசவிரோத கட்சிகளின் தலைவர்களின் சதிகளில் விழாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சாதியின் பெயரால் மக்களைத் திரட்டிப் பணத்துக்கும் பதவிக்கும் ஏலம் போட்டு விற்கும் ஈனர்களை இனங்கண்டுத் தனிமைப்படுத்த வேண்டும்.
சாதியின் தோற்றமும் ஒழிப்பிற்கான வழியும்
சாதி என்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தியின் வேலைப் பிரிவினையாகும். இது பரம்பரைத் தொழில் பிரிவினை (சோசியல் டிவிசன் ஆப் லேபர்) தனது நிலைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது. எனவே சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் இந்நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியுள்ளது. அதன் பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம், எனவே பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி ஒரு புதிய வேலைபிரிவினை முறையையும் மற்றும் புதிய ஜனநாயக பண்பாட்டையும் உருவாக்குவதன் மூலம் நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்கும் ஆட்சிமுறையும் பண்பாடும் ஒழிக்கப்பட்டு சாதியும் தீண்டாமை முறையும் ஒழிக்கப்படும்.
ஆனால் இந்திய அரசு இதுவரைக் கடைப்பிடித்து வந்ததும் அதன் இன்றைய வளர்ச்சியுமான புதிய பொருளாதரக் கொள்கை, தனியார்மயம், தாரளமயம், உலகமயக் கொள்கைகள், சாதி தீண்டாமை முறை நிலைத்திருப்பதற்கும் இதர அரசியல் பொருளாதார கொடுமைகளுக்குமான அடிப்படையைக் கொண்டதாகும் இதை ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும் ஆதரிக்கின்றது. பாராளுமன்றக் கட்சிகள் இதற்குப் பல்லக்குத் தூக்குகிறது.
இவற்றிற்கு முடிவுகட்ட பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சியே வழியாகும். இது சாதி தீண்டாமை முறையை ஒழிப்பதற்கும் மற்றும் இன ஒடுக்குமுறை, சிறுபான்மை மதத்தினர் மீதான ஒடுக்குமுறை, அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பு, மேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற அனைத்துக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டுவதற்கான ஒரே வழியேயாகும். எனவே சாதி தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனை என்பது வர்க்கப் போராட்ட பிரச்சனையாகும். இதிலிருந்து பிரித்துப் பேசுவது மக்களை ஏமாற்றுவதாகும்.
ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரள வேண்டும்
ஒருவர் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உள்ளவராக வாழ்வதா அல்லது நாத்திகராக வாழ்வதா என்பது அவரவர் (தனி நபர்) உரிமையாகும். கடவுளின் பெயரைக் கற்கண்டாய் நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டால், மலைபோல் வரும் துன்பமெல்லாம் பனிபோல் போய்விடுமா? போகாதா? என்பதெல்லாம் வேறு விசயம். இங்கு முன்னிற்பதெல்லாம் கடவுளின் பெயரால் நிலப்பிரபுத்துவ ஆதிக்க, சாதி, தீண்டாமைப் பிரச்சனையாகும். இப்பிரச்சனை ஒரு ஜனநாயக பிரச்சனை, நிலப்பிரபுத்துவ ஒழிப்புப் பிரச்சனை, புதிய பொருளாதாரக் கொள்கையை முறியடிக்கும் பிரச்சனை. ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துதுவத்தைத் தூக்கியெறியும் பிரச்சனை. எனவே இவைகளையெல்லாம் ஆதரித்துப் பாதுக்காக்கும் பாராளுமன்ற கட்சிகளும் மற்றும் சாதி சங்கங்களும் சாதி ஒழிப்பிற்கு நிற்பதாகக் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் பித்தலாட்டமும் மோசடியுமாகும். எனவே உழைக்கும் மக்கள் இவர்களை நிராகரிக்கவேண்டும்.
சாதி, தீண்டாமை கொடுமைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இது ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனை மட்டுமல்ல நாட்டின் ஜனநாயகப் பிரச்சனையும் ஆகும். எனவே தேசப்பற்று, ஜனநாயக உணர்வு கொண்டோர் அனைவரும் இக்கொடுமைக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்.
தமிழக அரசே!
* முதல் மரியாதை, அம்பல முறை, நாடு சேர்க்கை வடிவங்களைத் தடைசெய்!
* தேர் இழுப்பதில் சாதி ஆதிக்க முறையையும், சாதி மோதலையும் தூண்டிவிடும் அம்பலங்களையும் ஆதிக்கக்காரர்களையும் வன்கொடுமைச் சட்டப்படி உடனே கைதுசெய்!
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வடம்பிடிக்கும் உரிமை மட்டுமின்றி, கோயில் நிர்வாகம், அர்ச்சகர் உரிமை, வழிபடும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் உத்திரவாதம் செய்!
உழைத்திடும் மக்களே!
* மக்களை சாதியாகத் திரட்டி, பணத்திற்கும் பதவிக்கும் ஏலம்போட்டு விற்கும் ஈனர்களை, கட்சிகளை இனங்கண்டுத் தனிமைப்படுத்துவோம்!
* சாதி தீண்டாமைக்குத் தீர்வு, உழைக்கும் மக்கள் பாட்டாளிவர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக புரட்சிக்கு ஒன்றுதிரள்வதே!
தேவகோட்டைப் பகுதிவாழ் மக்களே!
* சாதி மோதலைத் தூண்டுவோரின் சதியை முறியடிப்போம்!
* நாட்டு முறை, அம்பல முறை, சாதி முறைகளை ஒதுக்கி, உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு, கண்டதேவி தேரை இழுப்போம்!
- ஏஎம்கே
(மக்கள் புரட்சி, ஜூலை 2005)