அரசியல் சட்டவாதமும் தேசிய இன சுயநிர்ணய உரிமையும்

ஏஎம்கே

அரசியல் சட்டவாதமும் தேசிய இன சுயநிர்ணய உரிமையும்

கடந்த  பத்தாண்டுகளுக்கும்  மேலாக  இந்தியாவின் பல பகுதிகளில்-குறிப்பாக அசாமிலும், பஞ்சாபிலும், தமிழகத்திலும்-தேசிய  இன  சுயநிர்ணய  உரிமைக்கான குரல்கள் பலத்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா பல தேசிய இனங்களின் நாடு என்ற விதத்தில் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம மதிப்பு இல்லாத சூழலில் தேசிய இனங்கள் தத்தம் உரிமையைக் கோருதல் ஜனநாயக அம்சமாகும். இத்தகைய அடிப்படையான ஜனநாயக அம்சத்தை அனைத்து இந்தியக் கட்சிகளும் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே வருகின்றன. இந்திய தேசியக் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக்கட்சி ஆகியவை தேசிய இனங்களின் உரிமையை நிராகரிப்பதோடு மட்டுமின்றி இத்தகைய குரல்களைப் 'பிரிவினை வாதம்' என முத்திரை குத்துகின்றன. தெலுங்கு தேசம், திமுக, அசாம் கண தந்திர பரிசத் போன்ற மாநிலக்கட்சிகள், தேசிய இனச் சிக்கல்களை முன் வைத்தாலும் தமக்கு ஆளும் வர்க்கத்துடனான நெருக்கமான உறவினாலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முதலாளிகளின் செல்வாக்கினாலும் மத்திய அரசோடு சில அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்தலோடு நிறைவுப் பெற்றுக் கொள்கின்றன. மாநில சுயாட்சி என உரத்த குரலில் முழங்கத் தொடங்கி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதாக இழிந்து போய் நிற்கின்றன இத்தகைய சூழலில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை பலத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்பது அரசியல் யதார்த்தமாகும். இருநூறு ஆண்டு கால அரசியல் வாழ்க்கை உடைய இந்தியாவில் தேசிய இனங்கள் தமக்கு இடையில் பரஸ்பர சமத்துவம் கோருவதும், தேசிய இனங்கள் தம் அரசியல் பொருளாதார பண்பாட்டு நலன்களை நிர்ணயித்துக் கொள்ள உரிமை கோருவதும் ஜனநாயக அம்சங்களாகும். இந்த சமத்துவத்தின் அடிப்படையில்தான் தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ முடியும். சமத்துவத்தை மறந்து விட்டு ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கோர இயலாது. அது இயக்க மறுப்பியல் கண்ணோட்டம் என்பதோடு மட்டுமின்றி ஜனநாயக விரோத அம்சமும் ஆகும். தேசிய இனங்களுக்கு சமத்துவத்தை வழங்காமல் தேசிய ஒருமைப்பாட்டை வலுக்கட்டாயமாக அரசு அதிகாரத்தின் மூலமும், ஆளும் வர்க்கக் கருத்தியல் சாதனங்களின் மூலமும் திணிக்க நினைக்கும் இத்தகைய கட்சிகளோடு அவ்வப்போது சந்தர்ப்பவாதத் தன்மையில் கூட்டு வைத்துள்ள திமுக, அதிமுக, தெலுங்கு தேசம் போன்ற மாநிலக் கட்சிகள் தன் சுய லாப நோக்கில் முன்வைக்கும் தேசிய இனப் பிரச்சனையில் தொடர்ந்து முனைப்பாக இல்லாததோடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசிய இனங்களுக்குத் துரோகம் இழைத்து விடுகின்றன. சொல்லில் விசுவாசமும் செயலளவில் துரோகமும் என்ற இரட்டை நிலைபாட்டை இவை மேற்கொண்டுள்ளன. இந்தக் கட்சிகளுக்கு அப்பால் பஞ்சாப், அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள வேறு சில கட்சிகள் தத்தம் தேசிய இனப்பிரச்சனைகளை வன்மையான முறையில் எடுத்துச் செல்கின்றன.

குறிப்பாகத் தமிழ் நாட்டில் உள்ள தமிழர் தேசியக் கட்சி (நெடுமாறன் தலைமையிலானது), தமிழகப் பொதுவுடைமைக் கட்சி (மணியரசன் தலைமையிலானது), பாட்டாளி மக்கள் கட்சி (டாக்டர் இராமதாசை நிறுவனராகக் கொண்டது) ஆகிய கட்சிகளும் பஞ்சாபில் சில அகாலிதளப் பிரிவுகளும் மேலே குறிப்பிட்ட மாநிலக் கட்சிகளைப்போல அல்லாமல் வலிமையான முறையில் தேசிய இனப் பிரச்சனையை முன் வைக்கின்றன. குறிப்பாக இவை தேசிய இன சுயநிர்ணய உரிமை என்பதையே முன்வைக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான தேர்தல் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைக் காணும் பொழுது அவை தேசிய இன சுயநிர்ணய உரிமையை வேண்டுகின்றன. இது சட்டவாத எல்லைக்குள்ளே தேசிய சுயநிர்ணய உரிமையை சட்ட அமைப்பிற்குள்ளே பெற்றுவிட முடியும் என்பதையும் நம் முன் நம்பிக்கைகளாக வைக்கின்றன. இத்தகைய நம்பிக்கைகளை மக்கள் முன் வைத்து வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்த திராவிட இயக்கக் கட்சிகள் கருத்தியல் அளவில் தேய்ந்து போனதை நாம் வரலாற்றில் காண்கிறோம். பிரிவினை கோரி, பின்னர் 1963 இல் இந்திய ஒருமைப்பாட்டை ஒப்புக் கொண்டு பின்னர் 1967இல் மாநில ஆட்சிப் பொறுப்பேற்று மாநில சுயாட்சி கோரி பின்னர் 1971 இல் மத்திய அரசுடன் உறவுக்குக் கைகொடுப்போம்  என்ற  கோஷத்தின்  அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதாகத் தேய்ந்து போனதை நாம் காண்கிறோம்.

இத்தேய்வு    திராவிட    இயக்கத்    தலைமையின் சுயலாபமிக்க, பிழைப்புவாதத் தன்மையிலிருந்து மட்டும் ஏற்பட்டுவிடவில்லை. சட்டவாத எல்லைக்குள் நின்று கொண்டு இயங்கிய ஓர் எதிர்க்கட்சி, மாநில ஆளும் கட்சியாக மாறியபின் இந்திய ஒருமைத் தன்மையைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட பிரதியை செயல்படுத்தும் அவசியத்தில் ஏற்பட்டதாகும். நமது நாட்டின் அரசியல் சட்டத்தின் இறுக்கம் அத்தகையதாகும். அரசியல் சட்டவாத எல்லைக்குள் நின்று கொண்டு தேசிய பிரச்சனைகளை-  தேசிய  இன  சுயநிர்ணய  உரிமையை நேர்மையாகத் தொடர்ந்து முன்வைக்க இயலாது.

அரசியல் சட்டவாதத்தின் எல்லைக்குள் நின்று குரல் கொடுக்கும் எந்தவொரு முயற்சியின் விளைவும் அரசியல் சட்டத்தைப் புனிதப்படுத்துவதில்தான் போய் முடிந்துவிடுகிறது; இந்த அரசியல் சட்டமே தேசிய நலன்களுக்கு விரோதமாகவும் உள்ளது என்பதை மூடி மறைத்துவிடுகிறது. இதை உருவாக்கிய நிர்ணய சபை பரந்துபட்ட இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. இது அந்நியராட்சி உருவாக்கிய மத்திய பாராளுமன்ற அவையின் விரிவாக்கமாகும். 1946 இல் நில உடைமையாளர்கள், வரி செலுத்துவோர் ஆகியோரிடமிருந்து சமய அடிப்படையில் மறைமுகத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சபையில் மன்னராட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 1945 இல் உருவாக்கப்பட்ட பிரிட்டன் அமைச்சரவைத் தூதுக்குழுவின் (Cabinet Mission) திட்டத்தை அமுல்படுத்தவே இந்த சபை அந்நிய ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டது. எனவே இந்த சபை தேசியத் தன்மையையும் இறைமையையும் கொண்டிருக்கவில்லை. 1947 ஆகஸ்டுக்குப் பின்னரும் கூட இந்த சபை கலைக்கப்பட்டு இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணயசபை புதிதாக உருவாக்கப்படவில்லை. ஆகஸ்டு ஒப்பந்தத்தையோ இந்தியாவுடன் இணைவதையோ ஏற்றுக்கொள்ளாத மன்னராட்சிப் பகுதிகளுக்கும் கூட தொடர்ந்து இந்த சபையில் பிரதிநிதித்துவம் இருந்தது. தொடர்ந்து தேசியமற்ற தன்மையிலும் ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாகவும் இருப்பதை இது வெளிப்படுத்துவதோடு, மக்களுக்கு எவ்விதத்தும் பொறுப்பற்ற தன்மையையும் இது சுட்டிக் காட்டுகிறது. இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின் இது இந்திய மக்களால் பொதுக்குடி ஒப்பம் (Refrendum) பெற்று அரசியல் சட்டத்திற்குரிய ஏற்பைப் பெறவில்லை. இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பை நமக்கு நாமே வழங்கிகொண்டது என்று அரசியல் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பது மகத்தான மோசடியாகும்.

பிரிட்டன் ஏகாதிபத்திய விசுவாசிகளும் இந்திய சமஸ்தானங்களின் பிரதிநிதிகளும் பெரும்பான்மையாக இருந்த ஒரு சபை, இந்திய மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டத் தொகுப்பே இன்றைய அரசியல் சட்டம், அடிப்படையிலே மக்கள் விரோதமானது. இந்த விதத்தில் இந்திய அரசியல் சட்டம் தேசிய தன்மையற்ற, இறைமை அற்ற, மக்களுக்கு எவ்விதப் பொறுப்புமற்ற, மற்றும் மக்கள் விரோதமான இந்திய அரசியல் சட்டம் அனைத்து விதங்களிலும் ஜனநாயக விரோதத் தன்மையைக் கொண்டு இருப்பதைப் போல, தேசிய இனங்களின் பிரச்சனைகளின் மீதும் ஜனநாயக விரோதத் தன்மையைக் கொண்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டம், இந்தியாவைப் பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு என எங்கும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா என்ற பாரத மாநிலங்களின் ஒன்றியம் என்றே வரையறுக்கப்படுகிறது. அதாவது பல மாநிலங்கள் ஒன்றிணைத்துப் பிரிக்க முடியாமல் ஒன்றாகக் கலந்த தன்மையை இது குறிக்கிறது. இதற்கான விளக்கத்தை அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

"இந்தக் கூட்டாட்சி பல நாடுகள் இணைந்ததால் ஏற்பட்ட ஒரு நாடல்ல. ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக பல நாடுகள் இணையப் பெற்று இந்தியக் கூட்டாட்சி உருவாகததால் இந்தியாவிலிருந்து பிரிந்து போகக் கூடிய உரிமை எந்த மாநிலத்துக்கும் இல்லை. அது அழிக்க முடியாத ஒரு கூட்டாட்சி என்பதால் அது ஒன்றியம் எனப்படுகிறது. நிர்வாக வசதியை உத்தேசித்து இந்த நாடும் அதன் மக்களும் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்திய நாடு ஒன்றறக் கலந்து விட்ட முழுமையான ஒரு நாடு. அதன் மக்கள் ஒரே மூலத்திலிருந்து பிறந்த தனித்தவோர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்ந்து வருகிற ஒரே மக்கள் தொகுப்பினர்... பின்னால் அதை ஊகத்திற்குரிய மற்றும் விவாதத்துக்கு உரிய பிரச்சனையாக இதை விட்டு வைக்காமல், அதை இப்போதே தெளிவாக்கி விடுவதுதான் சிறந்தது என நம் சட்ட வரைவுக்குழு கருதுகிறது.

அம்பேத்கரின் மூலமாக உணர்வுபூர்வமாகவே வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கருத்து இந்திய ஒன்றியம் குறித்த ஆளும் வர்க்கத்தின் இறுக்கமடைந்த தன்மையை அப்பட்டமாக்குகிறது. இன்றைய ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் எந்தவொரு தேசிய இனப்பிரச்சனையிலும் இந்திய அரசியல் சட்ட வடையறைக்குள் தீர்வு காணவேண்டும் என்பதற்கான கருத்தியல் அடித்தளம் இந்தக் கருத்துரையில் அடங்கியுள்ளது, அவை:

  • இந்திய  மாநிலங்கள்  வெறும்  நிர்வாக  வசதியை உத்தேசித்து அமைக்கப்பட்டவை. அவற்றுக்கென தேசிய இனத் தன்மையோ அரசியல் வகையினமோ இல்லை.
  • பிரிந்து போகும் உரிமை எந்தவொரு மாநிலத்துக்கும் இல்லை.
  • இந்திய மக்கள் தனித்த ஒரே மூலத்திலிருந்து பிறந்த தனித்ததோர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்கின்ற ஒரே மக்கள்.

இவை மூன்றுமே வரலாற்றுக்கு முரணானவையாகவும் அரசியல் யதார்த்தத்தை பிரதிபலிக்காதவையாகவும் உள்ளன. 

இந்திய மக்கள் தனித்ததோர் ஆட்சி பீடத்தின் கீழ் வாழ்கின்ற, ஒரே மூலத்திலிருந்து பிறந்த மக்கள் என்பது இந்தியாவில் உள்ள தேசிய இன மக்களையும், தேசிய இன அரசுகளையும் விளங்கிக் கொள்ள மறுத்து ஏகாதிபத்திய நோக்கிலான வலுக்கட்டாயமான இந்தியத்தின் திணிப்பாகும். அதுவரை ஏகாதிபத்தியம் மக்கள் மீது திணித்ததாகும். அதை இந்திய ஆளும் வர்க்கம் அப்படியே சுவீகரித்துக் கொள்கிறது. இது இந்தியப் பகுதிகளில் உள்ள வரலாற்றோடு முழுமையாக முரண் கொண்டதாகும். அதே நேரத்தில் பிரிந்துபோகும் உரிமை எதுவும் எந்த மாநிலத்துக்கும் இல்லை என்பதை அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ள அரசியல் சட்டம், விவாத சுதந்திரத்தைக்கூட அனுமதிக்காதது ஜனநாயக விரோதமாகும். மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாகப் பிரிவுகளாக மட்டுமே கருதப்பட்டு அவற்றுக்கு உரிய அரசியல் வகையினத் தன்மையும் மறுக்கப்படுதல், தேசிய இனம் என்ற சமுதாய வகையினத்தையே (Social Category) மறுப்பதாகும். இதன் அடிப்படையில்தான் இந்தியர் என்பதே தேசிய இனம் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. எனவே இந்திய அரசியல் சட்டம்:

  • தேசிய  இனங்களை  சமுதாய  வகையினமாகக் கொள்ளவில்லை.
  • தேசிய இனத்தின் அரசியல் பிரதேசமான மாநிலத்தை, வெறும் நிர்வாக மண்டலமாகக் காண்கிறது.
  • பல மாநிலங்களின் கூட்டு என இந்தியாவைக் காணாமல் இந்தியாவின் நிர்வாகப் பிரிவுகளாக மாநிலங்களைக் காண்கிறது.
  • மாநிலங்களுக்குப் பிரிந்து போகும் உரிமையை முற்றாக நிராகரிக்கிறது.
  • பல தேசிய இன மக்களில் தனித்தனிப் பண்பாட்டு வாழ்க்கையையும் கலவை குணத்தையும் முற்றாக நிராகரித்து இவற்றுக்கு உரிய பிறப்பிடமாக ஒரே மூலத்தை மட்டுமே காண்கிறது.

இவை அனைத்தும் தேசிய இனங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் கருத்தியல் அம்சங்களாகும். இவை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் ஆகும். இந்த அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்த்து:

  • இந்தியா, பல தேசிய இனங்கள் தம் விருப்பத்தின்படி ஒர் ஒப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட கூட்டாட்சி.
  • மாநிலங்கள்  என்பவை  நிர்வாக  மண்டலங்கள் என்றில்லாமல் தேசிய இனங்களின் அரசு அதிகாரப் பகுதிகள்.
  • மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து செல்லக்கூடிய உரிமை உண்டு.
  • ஒவ்வொரு தேசிய இன மக்களுகும் ஒவ்வொரு தனித்த மூலமும் முறையான வரலாறும் உண்டு.

என்பனவற்றை அடிப்படை கட்டுமானங்களாக வைத்து இன்னொரு அரசியல் சட்ட அமைப்பு தோன்றும் பொழுதே தேசிய இனங்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்குரிய வரலாறு தொடங்குகிறது என்பது பொருளாகும். இன்றைய அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்க்காமல் இது  சாத்தியமே  இல்லை.  மேலும்  தேசிய  இனங்கள் குறித்ததன் அடிப்படைப் புரிதல் மீது எதிர்காலத்தில் எந்த ஊகமோ, விவாதமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசியல் சட்ட நிர்ணய சபை மிகவும் தெளிவாக (அதாவது இறுக்கமாக) இருந்தது என்பதை அம்பேத்கர் உரையின் இறுதிப் பகுதி அம்பலமாக்குகிறது. பிரச்சினை என்னவெனில் இந்த அடிப்படைக் கட்டுமானத்தை எப்படித் தகர்ப்பது என்பதே ஆகும். அரசியல் சட்டவாதத்தின் மூலமாக இதை நிச்சயம் தகர்க்க இயலாது. அடிப்படையில் தேசிய இனங்களுக்கு விரோதமாக உள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் தேர்தல்களில் பங்கேற்று வெற்றி பெற்று இந்திய அரசியல் சட்டத்துக்கும் தேசத்தின் இறையாண்மைக்கும் விசுவாசமாக இருப்பதாக பிரஞஞை மேற்கொண்டு அரசியல் வாழ்க்கை நடத்த நினைக்கும்பொழுது இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீது மாயையை உருவாக்கப் பயன்படுமேயொழிய அதன் மீது கடுமையான தாக்குதலை எற்படுத்தாது.

தேசிய இன விரோத அடிப்படைக் கட்டுமானத்தின் மீதுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் இன்னொரு அம்சமாக இருப்பது வலிமையான மத்திய அரசு எனற கருத்தியல் ஆகும். இது தேசிய இனங்களின் மீது மற்றுமொரு பலமான தாக்குதலாகும். இந்த விதத்தில் இன்றைய அரசியலமைப்புச் சட்டம் 1935 ம் ஆண்டுச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாகும். இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய மாநில உறவுகள் குறித்த சட்ட விதிகளுக்கு வலிமையான மத்திய அரசு என்ற கருத்தே அடிப்படை அம்சமாகும். மத்திய அரசிற்குப் மாநில அரசிற்கும் இடையே உள்ள அதிகாரப் பகிர்வைக் காணும் பொழுது 'உன் வீட்டு அரிசியை என் வீட்டு உமியோடு கலந்து என் வீட்டு திண்ணையில் ஊதிச் சாப்பிடலாம்' என ஒருநாள் கூப்பிட்ட கதையே நினைவுக்கு வருகிறது. 1935 ம் ஆண்டுச் சட்டத்தில் உள்ளதைப் போன்றே 1949-ம் ஆண்டுச் சட்டத்திலும் மத்தியப்பட்டியல், மாநிலப் பட்டியல் என மூவகையுண்டு.

  • மத்தியப் பட்டியலில் உள்ள இனங்கள் (97) குறித்து மத்திய அரசே சட்டமியற்ற முடியும்.
  • பொது பட்டியலில் உள்ள இனங்கள் மீது (47) மாநில அரசுகள் சட்டமியற்றலாம். எனினும் அவை குறித்து மத்திய அரசு பின்னர் ஏதேனும் சட்டம் இயற்றினால் அது மாநில அரசின் சட்டத்துக்கு முரணாக இருப்பின் மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்.
  • மாநிலப் பட்டியலில் உள்ள இனங்கள் மீது (66) மாநிலங்கள் சட்டமியற்றும்; எனினும் மத்திய அரசு விரும்பினால் சட்டமியற்றலாம்.

மூன்று பட்டியல்கள் எனத் தோற்றம் அளித்தாலும் சாரம்சத்தில் ஒரே பட்டியலே. அது மத்தியப் பட்டியலே ஆகும். மத்திய அரசு விரும்பினால் பொதுப் பட்டியலில் மட்டுமின்றி மாநிலப்பட்டியலிலும் சட்டம் இயற்றிவிடலாம், மத்திய அரசின் நீண்ட கூர்மையான அதிகார நகங்களால் எப்பொழுதும் கிழிபடுவதற்காகவே மாநிலப் பட்டியலும், பொதுப்படியலும் காத்திருக்கும் படியாகவே அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. மாநிலங்களுக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் உண்மையில் அதிகாரமற்றவையாகும். மாநிலப் பட்டியலில் உள்ள அதிகார இனங்கள் பல பொதுப் பட்டியலில் உள்ளவையாகும், (இனங்கள் 26,27,57 போன்றவை) சாதாரண அன்றாட நிர்வாகப் பணிகளே பெரும்பான்மையாக உள்ளன. இந்த நிர்வாகப் பணிகளின் தலைமை அதிகாரிகள், மத்திய அரசினால் நியமிக்கப்படும் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் மாநில அரசின் கட்டளைப்படி இயங்குவதாகப் பாவ்லா காட்டினாலும் (தோன்றினாலும்) உண்மையில் மாநில அரசின் கட்டளையை மீறி மத்திய அரசின் கட்டளைக்கேற்ப செயல்படுவதற்குரிய அரசியலமைப்புச் சட்ட உத்திரவாதம் பெற்றுள்ளனர். மாநில அரசுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள், மத்திய அரசின் ஏஜெண்டுகள் (பெரும்பாலும் மத்திய அரசாங்கக் கட்சியின் ஏஜெண்டுகள்) என்பதே உண்மை. இதற்கு ஏற்பவே அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மாநில மக்களின் விருப்பததிற்கு ஏற்ப இவர்களின் நியமனம் அமையாததோடு மட்டுமின்றி மாநில மக்களுக்கு இவர்கள் விசுவாசமாகவும் பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டியதில்லை. அரசியல் சட்டத்தில் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விருப்ப அதிகாரங்கள், மாநில மக்கள் மீது தொடுக்கப்படும் கடுமையான தாக்குதலாகும்; ஜனநாயகத்தின் சாவு மணியாகும். மாநிலத்தில் நெருக்கடி நிலையை எப்பொழுதும் வேண்டுமானாலும் அறிமுகப் படுத்தும் உரிமையை மத்திய அரசும், அரசின் கையாளாகவுள்ள ஆளுநர்களும் பெற்றுள்ளனர். ஒரு மாநிலம் அரசியலமைப்புச் சட்ட விதிகளின் படி செயல்பட இயலாத அளவிற்கு நிர்வாகச் சீர்குலைவு ஏற்படும் பொழுது மத்திய அரசே மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பை மேற்கொள்ளலாம்.

மாநில அரசுகள் இவ்வாறு ஏறத்தாழ 90 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இதுவரையில் கலைக்கப்பட்டு இருக்கின்றன. இது ஜனநாயக விரோதம் எனக் குறிப்பிடும் பொழுது இது அரசியலமைப்புச்  சட்டத்தின்  முதன்மையான  அம்சம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மத்திய அரசு தம் கையாளான ஆளுநரின் அறிக்கைகூட இல்லாமல் வேறு வகையில் (otherwise) கூட உணர்ந்து மாநில அரசுகளைக் கலைத்து நிர்வாகத்தை மேற்கொள்ளலாம். வேறு வகையில் என்றால் என்ன? என்பதற்குரிய விளக்கம் அரசியலமைப்புச் சட்டத்தின் எதேச்சதிகாரப் போக்கை நிரூபிக்கின்றது. இத்தகைய சட்ட விதிகள் 'எதிர்காலத்தில் நடைமுறைக்கு வராத உயிரற்ற சொற்களாக இருக்கும்' என்ற அம்பேத்கரின் தவறான நம்பிக்கையை, வரலாறு சாகடித்து விட்டது. ஆனால் இத்தகைய நம்பிக்கையை அவர் தலைமையிலான வரைவுக்குழு வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டம் கொடுக்கவில்லை. அது அடிப்படையில் வலிமையான மத்திய அரசு என்பதைக் கோட்பாடாக கொண்டிருந்தது. இந்தக் கோட்பாடுகூட இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் நடைமுறையில் இன்றைக்கு மாற்றம் பெற்று இந்தியாவில் இருப்பது ஒரே அரசு - அதுவே மத்திய அரசு என்கிற நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. மத்திய அரசின் சட்டங்களை நிறைவேற்றுகிற கிளை நிறுவனங்களாக மாநில அரசுகள் இழிந்து போயுள்ளன. இவ்வாறு மாநில அரசுகளை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்காமல் தேசிய இனங்களுக்குரிய சுயமரியாதையைப் பெற இயலாது.

இந்தியாவில் ஆங்காங்கு ஏற்பட்ட தேசிய இன எழுச்சிகளைப் பயன்படுத்திய இயக்கங்கள் தேர்தல் பாதையை மேற்கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது விசுவாசம் கொண்டு இயங்கி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆளும் வர்க்கத்தில் மையப்படுத்தப்பட்ட அரசியலில் வெகுவாக ஈர்க்கப்பட்டு படிப்படியாகத் தங்கள் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து தேசிய இன மக்களுக்குத் துரோகம் இழைத்தன என்பதை நம் இந்திய வரலாற்றில் அறியலாம். தேசிய இன சுயநிர்ணய உரிமை, பிரிவினை என்ற முழக்கங்கள் பின்னர் மங்கி மறந்து அதிக அதிகாரங்கள் என்றும், மாநில சுயாட்சி என்றும், இருக்கும் அதிகாரங்களை பறிக்காதே என்றும் தேய்ந்து இத்தகைய கட்சிகளின் முழக்கங்கள் பலவீனப்பட்டு விடுகின்றன. இத்தகைய கட்சிகளுக்கு அரசியலமைப்பின் மீது இருக்கும் நம்பிக்கையே இத்தகைய பலவீனத்தின் முதற்படியாகும். இன்றைய கட்சிகள் இந்த வரலாற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரித்தல் என்பது இன்றைய ஜனநாயகத்தின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்று என்பதைக் குறிப்பிடும் நேரத்தில் இத்தகைய சமத்துவத்தை இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கி விட முடியாது என்பதையும் அவ்வாறு வழங்க முடியும் என்ற அரசியல் நிலைபாட்டை எடுப்பது மாயை என்பதையும் நாம் மீண்டும் எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது. இத்தகைய மாநிலக் கட்சிகள் சொந்த தேசிய இனத் தரகு முதலாளிகளையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்க்க மறுக்கின்றன. இது பிற தேசிய இனத் தரகு முதலாளிகளுடன் சமரசம் பேசுவதில் போய் முடிகிறதோடு, தேசிய இனப் பிரச்சனையை சொந்த தேசிய இன முதலாளிகளின் பிரச்சனையாகவே காண்கிறது. இத்தகைய தத்துவப் பலவீனத்தைக் கொண்டுள்ளதால் இவை அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றன. அல்லது தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் அதிகாரத்தைத் தகர்க்காமல் புதிய அரசியல் சட்ட நிர்ணய சபையை அமைக்க வேண்டுமெனக் கோருக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தை அம்பலப்படுத்தாமலும் தகர்க்காமலும் செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் ஆளும் வர்க்கங்களைப் பலப்படுத்தவே செய்யும். அரசியல் அதிகாரத்தை தேசிய இனங்களின் பரந்தபட்ட அடிப்படை மக்கள் பயன்படுத்தும் பொழுதே தேசிய இனங்களுக்குரிய சமத்துவம் ஏற்படுத்த முடியும்.  இது புரட்சிகரப் போராட்டங்களின் மூலமே நிகழ்த்த முடியுமே அன்றி இன்றைய அரசியலமைப்பு ஊடாகவோ அதன் மீது நம்பிக்கை கொண்டோ நிகழ்த்த முடியாது.

- ஏஎம்கே

செப்டம்பர், 1992