ஒடுக்கப்பட்ட, சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து...

ஜே.வி.ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட, சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து...

பதிப்புரை

             அந்நிய முதலீடுகளின் உதவியின்றி அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடுகள் இன்றி எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாட்டிலும் தொழிற்துறை வளர்ச்சியை உருவாக்கவே முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் இது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் தாசர்களான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். தீவிர வலதுசாரிப் பிரிவினர் முதல், திருத்தல் வாதப் போலிக்கம்யூனிஸ்டுகள் வரை அந்நிய முதலீடுகளின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். பத்திரிக் கைகளும், ஊடகங்களும் இக்கருத்தையே ஓயாமல் பரப்பி வருகின்றன. ஆனால் சோவியத் யூனியனின் தலைவரும், தலை சிறந்த மார்க்சியவாதிகளுள் ஒருவருமான தோழர் ஸ்டாலின் சோசலிச ரசியா உள்ளிட்டு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய முதலீடுகளின் உதவியின்றி சுயேச்சையான தொழிற்துறை வளர்ச்சிக்கான ஒரு புதிய மாற்றுப் பாதையை முன்வைத்தார். 1925ஆம் ஆண்டு ஜூன் - 9ல் ஸ்லெர்ட்லாவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பாதையை முன்வைத்துள்ளார். இந்தப்பாதைதான் இரண்டாம் உலக யுத்தத் திற்கு முன்பு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளெல் லாம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்ட போது, சோவியத் ரசியாவை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற ஒரு புதிய பாதையாகும்.

தொழிற்துறையில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகள் மூலதனத்தை எப்படி சேர்த்தன என்பதை வரலாற்று வழியில் தோழர் ஸ்டாலின் அதில் எடுத்துக் காட்டுகிறார். உலகத்தின் “தொழிற்கூடம்” என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலிருந்து “உபரி மூலத னத்தை” உறிஞ்சுவதன் மூலம் வலிமை மிக்க தொழிற்துறையை கட்டி அமைத்தது. ஜெர்மனி பிரான்ஸ் மீது போர்தொடுத்து, அந்நாட்டை தோற்கடித்து அதன் மீது அபராதம் விதித்து பெரும் தொகையை திரட்டியது. அதைக் கொண்டு தனது நாட்டின் தொழிற்துறையில் முதலீடு செய்தது. ஜார்கால ரசியா, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து, அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று கடும் நிபந்தனைகளின் கீழ் மூலதனத்தை பெற்று தொழிற்துறை வளர்ச்சிக்குத் திட்டமிட்டது. மேற்கண்ட அனைத்து வழிகளும் பின்னிப்பிணைந்த வழியில்தான் அமெரிக்கா தொழில்வள நாடாக மாறியது என்பதை தோழர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். அத்துடன் மேற்கண்ட எந்த ஒரு பாதையும் சோசலிச ரசியாவிற்கு பொருந்தாது, அந்த வழிகளை ஏற்கவும் முடியாது என்று கூறி சுயேச்சையாக உள்நாட்டிலேயே மூலதனத்தைத் திரட்டிக் கொள்வதற்கும், அடிமைத்தனமான நிபந்தனைகள் இன்றி அந்நிய முதலீடுகள் பெற்று தொழிற்துறையை வளர்க்கவும் ஒரு புதிய பாதையை அவர் முன்வைத்துள்ளார்.

இன்று அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் செயல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார் மயக் கொள்கைகள் அந்நிய மூலதனத்திற்கான தடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஆசிய ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தடையின்றி நுழைவதால் அந்நாடுகளில் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக தொழிற்துறை சீரழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக அந்நிய முதலீட்டிற்கான கதவை முழுவதுமாக திறந்துவிட்டதால் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி மைனஸ் 2 சதவீதமாகவும், விவசாயம் கடும் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. அந்நிய முதலீட்டிற்கு கதவை அகலத் திறந்ததால் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி என நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிட்டது. அந்நிய முதலீடுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை. மாறாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியைச் சீரழிப்பதோடு நாட்டின் இறையாண்மையையும் அழித்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக்கி வருகிறது. அந்நிய முதலீடுகள் மற்றும் உலகமய தாராளமயக் கொள்கைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளை மட்டும் சீரழிக்கவில்லை. முத லாளித்துவ மையங்களான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்கூட இக்கொள்கைகளால் பொருளாதார நெருக்கடிகளையும் தேக்க நிலையையும் சந்தித்து வருகின்றன. இன்று ஏகாதிபத்திய நிதி மூலதனம் 98 சதவீதம் உற்பத்தியல்லாத ஊக வாணிபத்திலும், பங்குச் சந்தை மற்றும் லேவாதேவி மூலதனமானகவே செயல்படுகிறது. நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் போக்கு என்ற பாட்டாளிவர்க்க ஆசான் லெனினின் கூற்று சரி என்றே நிருபணம் ஆகியுள்ளது. வளர்ச்சி என்பதே ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் இனி சாத்தியமில்லை என்ற நிலையை உலக முதலாளித்துவத் தலைவர்களே ஒத்துக்கொள்கின்றனர்.

ஏகாதிபத்திய நிதி மூலதனம் நாடுகளுக்கிடையிலும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்த வண்ணம் உள்ளது. காலனிய நாட்டு மக்களும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் கடுமையாகச் சூறையாடப் படுவதால் வறுமை வேலையின்மை பெருகிவருகிறது. அதன் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து மீள முடியாத மிகு உற்பத்தி நெருக்கடியில் ஏகாதிபத்திய நாடுகள் சிக்கியுள்ளன. இந்தப் பொருளாதார முறைகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையை தோழர் ஸ்டாலின் முன் வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை நோக்கிய, மானுடத்தை முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து மீட்க வல்ல பாதைதான் அது. அப்பாதையை கடைப் பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர ஆட்சியை உருவாக்கும் திசையை நோக்கி அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டிய தருணம் இது. அதற்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.

_________________________________________________________

அந்நிய உதவியின்றி பெருவீதத் தொழிற்சாலை களைப் புதுப்பித்தலையும் அவற்றின் நிலையான மூலதனத்தைக் கணிசமாக அதிகரித்தலையும் நம்மால் உண்மையில் முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

- ஜே.வி.ஸ்டாலின்

இந்தக் கேள்வியை இரண்டு வழிகளில் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்தக் கேள்வியாளர் முதலாளித்துவ அரசுகள் கடன்கள் என்ற வடிவத்தில், சோவியத் அரசுக்கு அளிக்கக் கூடிய உடனடி உதவிகள்தான், சோவியத்துக்களின் தொழிற்துறை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான முன்நிபந்தனையாக இருக்கிறது என்பதை தன் மனதில் கொண்டிருப்பாரேயானால் - அவர் கேள்வியை முன்வைக்கும் முறையை பொறுத்து ஒரு வகையில் பதிலளிக்க வேண்டும்.

அல்லது, இந்தக் கேள்வியாளர் - மேற்குலகின் பாட்டாளி வர்க்கம் எதிர்காலத்தில் வெற்றியை ஈட்டிய பிறகு, சோவியத் அரசாங்கத்திற்கு சோசலிசப் பொருளாதாரத்தைக் கட்டி அமைப்பதற்குத் தரும் உதவிகள்தான் மிகவும் அவசியமான முன் நிபந்தனை என்று மனதில் கொண்டிருப்பாரேயானால் அப்போது அதற்கு வேறு ஒரு வகையில் பதிலளிக்க வேண்டும்.

யாரையும் குறைகூறுவதைத் தவிர்த்து, சாத்தியமான விளக்கங்களுடன் இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க முயற்சிக் கிறேன்.

  நாம் முதல் விளக்கத்திலிருந்து துவங்குவோம். முதலாளித்துவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் நிலைமைகளின் கீழ், அந்நியக் கடன்களின்றி சோவியத்துக்களின் பெருவீதத் தொழிற்துறையை வளர்த்தெடுப்பது என்பது சாத்தியம்தானா?

ஆமாம். அது சாத்தியம்தான். பெரும் இடர்ப்பாடுகள் கூடவே வரும். நாம் கடினமான சோதனைகளின் ஊடே செல்ல வேண்டியிருக்கும். எனினும், அந்த இடர்ப்பாடுகளையெல்லாம் கடந்து நம்முடைய நாட்டை அந்நியக் கடன்களின்றி நம்மால் தொழில் மயமாக்கமுடியும். 

வலிமைமிக்க தொழிற்துறை அரசுகள் தோன்றி வளர்ந்தது பற்றிய தற்போதைய வரையிலான வரலாறு மூன்றுவழிகளைக் கண்டுள்ளது.

முதலாவது வழி: காலனிகளைக் கைப்பற்றுவதும் கொள்ளையடிப்பதுமாகும். உதாரணமாக, இங்கிலாந்து வளர்ச்சி பெற்றது இந்த வழியில்தான். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காலனிகளைக் கைப்பற்றிய பிறகு, தமது நாட்டின் தொழிற்துறையை வலிமையாக்கிக் கொள்வதற்கு அந்நாடுகளை இருநூறு ஆண்டுகள் கசக்கிப் பிழிந்து “உபரிமூலதனத்தை” அங்கிருந்து கொண்டுவந்தது. அதன் விளைவாக அது உலகின் “தொழிற்கூடமாக” உருப்பெற்றது. காலனிகளைக் கைப்பற்றுவதும், கொள்ளையடிப்பதும் சோவியத் அமைப்போடு ஒத்துப்போகாது என்பதையும், அத்தகைய வளர்ச்சிப் பாதையை நம்மால் ஏற்கமுடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இரண்டாவது வழி: ஒரு நாட்டை மற்றொரு நாடு படை பலத்தால் தோற்கடித்து, தோல்வியடைந்த நாட்டின் மீது அபராதம் விதிப்பது. உதாரணமாக ஜெர்மனியின் வழி இதுதான். பிராங்கோ-பிரஷ்யன் போரில் பிரான்சை தோற்கடித்த பின், ஜெர்மனி 5000 மில்லியன் பிராங்குகளை பிரான்ஸ் மீது அபராதம் விதித்தது. அந்தப் பணத்தைக் கொண்டு தமது நாட்டின் தொழிற் துறையை வளர்த்தது. சாராம்சத்தில் இந்தப்பாதை முதலாவது பாதையிலிருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டது அல்ல என்பதையும், இத்தகைய பாதை சோவியத் அமைப்போடு ஒத்துப் போகாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

மூன்றாவது வழி: மூலதனத்தில் பின்தங்கிய நாடுகள், மூலதனம் அதிகமுள்ள நாடுகளின் அடிமைத்தனமான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, சலுகைகளை அளித்து அந்நாடுகளிலிருந்து கடன் பெற்றுக்கொள்வதாகும். உதாரணமாக, ஜார்கால ரசியாவின் நிலை இதுவாகும். ஜாரின் ரசியா சலுகைகளை அளித்து மேற்கத்திய வல்லரசுகளிடமிருந்து அரைக்காலனிய நுகத்தடியைத் தன்மீது தானே சுமத்திக்கொள்ளும் வகையிலான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு கடன்களைப் பெற்றது. இருப்பினும் தொழில் வளர்ச்சிக்கான சுதந்திரமான பாதையில் செல்வதற்கான சாத்தியப்பாடுகளுக்கு அவைகள் தடைகளாக இல்லை. ஏறக்குறைய “வெற்றிகரமான போர்களின்” உதவி இல்லாமலும், அண்டை நாடுகளை கொள்ளையடிக்காமலும் அந்தப் பாதை அமையவில்லை என்பதும் உண்மையே. இந்தப்பாதையையும் சோவியத் நாட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த ஒரு நிரூபணமும் தேவை இல்லை. எல்லா நாடுகளையும் சார்ந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாம் மூன்று ஆண்டுகள் இரத்தம் சிந்தியது, உள்நாட்டுப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்த மறுநாளே நாமே முன்வந்து ஏகாதிபத்திய அடிமை விலங்கை பூட்டிக் கொள்வதற்காக அல்ல.

நடைமுறை வாழ்வில் இந்த வளர்ச்சிப்பாதைகள் ஒவ்வொன்றும் மேற்கூறிய வடிவத்தில் தூய்மையாக பயணித்திருக்க வேண்டும், முழுமையாக பிறவற்றிலிருந்து ஒவ்வொன்றும் தனித்தே இருக்கவேண்டும் என்று கருதுவது தவறானதாகும். நடைமுறையில் தனித்தனி நாடுகளின் வரலாற்றில் இந்தப் பாதைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டுக் கொண்டும், ஒன்றையொன்று குறை நிறை செய்து கொண்டும், ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து கொண்டும் காணப்படுகின்றன. இத்தகைய பின்னிப்பிணைந்த பாதைக்கு அமெரிக்க ஐக்கிய குடியரசின் வரலாறு நமக்கு ஒரு உதாரணமாக உள்ளது. வளர்ச்சி பற்றிய இத்தகைய வேறுபட்ட பாதைகள் தங்களுக்குள்ள வேறுபாடுகளைக் கடந்து சில பொதுவான குணாம்சங்களையும் கொண்டுள்ளன. அது அவைகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவந்து பின்னிப்பிணைவதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்குகின்றன. முதலாவதாக, எல்லாவழிகளும் முதலாளித்துவத் தொழிற்துறை அரசுகள் உருவாவதை நோக்கியே செல்கின்றன. இரண்டாவதாக, மேற்கண்ட வழிகளில் ஏதாவதொரு வழிமூலம் “உபரிமூலதனம்” உள்நோக்கிப் பாய்வது என்ற சார்பு நிலைதான் இத்தகைய அரசுகள் அமைவதற்கு ஒரு அத்யாவசியமான நிபந்தனையாக இருந்தது. எப்படியிருப்பினும், இத்தகைய மூன்று வளர்ச்சிப்பாதைகள் மூன்றுவகையான முதலாளித்துவத் தொழிற்துறை அரசுகள் உருவாவதில் தாக்கம் செலுத்தின என்பதையும் அந்த ஒவ்வொரு பாதையும் தமது சொந்த தனித்துவம் வாய்ந்த முத்திரைகளை அந்த அரசுகள் மீது பதித்தன என்பதையும் குழப்பிக் கொள்வதோ, சிக்கலாக்கிக் கொள்வதோ, புரிந்து கொள்ளத் தவறுவதோ மேலே சொன்ன தவறைவிட மிக மோசமான தவறாகவே அமையும்.

பழைய வழியிலான தொழில் மயமாக்கப் பாதைகள் எதுவும் தமக்கு ஏற்புடையது அல்ல என்ற நிலையில், அடிமைத் தனமான நிபந்தனைகள் ஏதுமின்றி புதிய முதலீடுகள் உள் வரவு என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் சோவியத் அரசு என்ன செய்யும்?

சோவியத் அரசாங்கம் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத் துக்கொள்ளும். வேறு எந்த நாடுகளாலும் பரிசோதிக்கப்படாத ஒரு பாதை; அந்நியக் கடன்களின்றி பெருவீதத் தொழிற் துறையை வளர்ச்சியடையச் செய்யும் பாதை; அந்நிய முதலீடுகளின் உள்வரவு அவசியமின்றி நாட்டைத் தொழில்மயமாக்கும் பாதை; லெனின் தன்னுடைய “மிகச் சிலது ஆனால் சிறந்தது” என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ள பாதை.

“தொழிலாளர்கள் தங்களின் சமூக உறவுகளில் மட்டு மீறிய செலவினங்களைக் குறைத்து, சிறந்த முறையில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு அரசை, தொழிலாளர்கள் விவசாயிகள் மீதான தங்களது தலைமையைத் தக்கவைத்ததுக் கொண்டுள்ள ஒரு அரசை உருவாக்குவதற்கு” “நாம் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்” என்று லெனின் கூறுகிறார்.

“நாம் நம்முடைய அரசு எந்திரத்தை மிக அதிகபட்சமான சிக்கனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.பொருளாதார வாழ்வில் சாத்தியமான அளவிற்கு அதிகபட்ச சிக்கனத்தைக் கடைபிடித்து, தொழிலாளி வர்க்கம் விவசாயிகள் மீதான தன்னுடைய தலைமையைத் தக்கவைத்துக் கொள்ள இயலுமானால், நாம் சேமிக்கும் ஒவ்வொரு கோபெக்கையும் (ரசிய நாணயப் பெயர்) நம்முடைய பெருவீதத் தொழிற்துறை வளர்ச்சிக்கும், மின்மயமாக்கலை மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும்.” மேலும் லெனின் கூறும்போது “நாம் இதை செய்து முடித்தால் மட்டுமே” கலை நயத்துடன் சொல்வதென்றால் “குதிரைகளை மாற்றிக் கொள்ளமுடியும்”. விவசாயிகள், முஷிக்குகளின் வறுமை என்ற குதிரைகுப் பதிலாக, நாட்டுப்புற விவசாயிகளின் சீரழிவிற்குக் காரணமான பொருளாதாரம் என்ற குதிரைக்குப் - பதிலாக - பாட்டாளிவர்க்கம் தேடிக்கொண்டிருகிற, தேடாமல் இருக்கவியலாத பெருவீதத் தொழிற்துறை என்றக் குதிரையை, மின்மயமாக்கல், வோல்கோவிஸ்டிராய் போன்ற குதிரைகளை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த ஒரு பாதையைத்தான் நம் நாடு ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. நம்முடைய பெருவீதத் தொழிற்சாலைகள் வளர்ச்சி பெறவேண்டும் என்றாலும், நம் நாடு தன்னை ஒரு பலம் வாய்ந்த, தொழில்வளமிக்க, பாட்டாளிவர்க்க அரசாக மலரச் செய்ய வேண்டுமானாலும் அது இந்தப் பாதையில்தான் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

  நான் ஏற்கெனவே கூறியவாறு, இந்தப்பாதை முதலாளித்துவ அரசுகளால் பரிசோதிக்கப்படாமலேயே உள்ளது. ஆனால் பாட்டாளிவர்க்க அரசு இந்தப்பாதையைக் கடைப்பிடிக்க முடியாது என்று இதற்கு எந்தவிதத்திலும் பொருள்கொள்ளக் கூடாது. இந்தப் பிரச்சினையில் முதலாளித்துவ அரசுகளால் எது முழுமையாக முடியாததோ அது பாட்டாளி வர்க்க அரசுக்கு எளிதில் முடியக் கூடியதுதான். இந்தப் பிரச்சினையில் உண்மை என்னவென்றால் பாட்டாளி வர்க்க அரசுக்கு இந்த வழியில் அனுகூலங்கள் உண்டு. ஆனால் இத்தகைய வாய்ப்புகள் முதலாளித்துவ அரசுகளுக்குக் கிடையாது அல்லது அவற்றால் முடியாது. தேசியமயமாக்கப்பட்ட நிலம், தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறை, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து, கடன்கள், அந்நிய வர்த்தகத்தில் ஏகபோகம், அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட உள்நாட்டு வர்த்தகம் இவை அனைத்தும் “உபரி” மூலதனத்திற்கான புதிய ஆதாரங்களாக உள்ளன. இவற்றை நம் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆதாரங்களை இது வரையில் எந்த முதலாளித்துவ அரசும் பெற்றிருக்கவில்ல. பாட்டாளிவர்க்க அரசு ஏற்கெனவே இதைப் பயன்படுத்துவதோடு இது போன்ற புதிய ஆதாரங்களை நமது தொழிற்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தியும் வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வழியின் மூலம் நாம் ஏற்கெனவே சில வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என்பது சாதாரண முக்கியத்துவம் உடையது அல்ல.

அதனால்தான் முதலாளித்துவ அரசுகளுக்கு எந்த வளர்ச் சிப்பாதை சாத்தியமற்றதோ “அது”, பாட்டாளிவர்க்க அரசுக்கு எவ்வளவுதான் இடர்ப்பாடுகளையும் சோதனைகளையும் உண்டாக்கினாலும் அது முழுவதும் சாத்தியமானதே. அடிமைத் தனமான நிபந்தனைகளின்கீழ் அன்றி அந்நிய மூலதனத்தின் வரவு வேறுவழிகளில் கிடைக்காது என்ற இன்றைய நிலை என்றென்றைக்கும் தொடரும் என்றோ, சாசுவதமானது என்றோ ஆகிவிடாது என்பதை நாம் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு மூலதன வரவு என்பது ஏற்கெனவே சிறிய அளவில் வரத் துவங்கிவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்முடைய தேசியப் பொருளாதாரம் வளர்ச்சியடையவும், உறுதிப்படவும் செய்யும் அளவிற்கு தகுந்த விகிதத்தில் இந்த மூலதன வரவும் அதிகரிக்கச்செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை.

கேள்விக்கான முதலாவது விளக்கத்தை பொறுத்தவரை விஷயம் இந்த அளவில்தான் உள்ளது.

தற்போது கேள்விக்கான இரண்டாவது விளக்கத்துக்குச் செல்வோம்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசம் வெற்றியடையாமல், வெற்றிபெற்ற பாட்டாளிவர்க்கத்தின் நேரடியான - இயந்திரங்கள், உபகரணங்கள் போன்ற - உதவிகளின்றி நம்முடைய நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைப்பது சாத்தியம்தானா?

இந்தக் கேள்வியை எடுத்துக்கொள்ளும் முன்பாக நான் முன்பே எனது பதிலில் குறிப்பிட்டதைப் போல இது குறித்து பரவலாகக் காணப்படுகின்ற தவறான கருத்தாக்கத்தைப் போக்கிட விரும்புகிறேன்.

உற்பத்திச் சாதனங்களைத் தொடர்ந்து நவீனப்படுத்துவது, பெருந்தொழிற்சாலைகளின் மாறா மூலதனத்தை கணிசமாக விரிவுபடுத்துவது தொடர்பான கேள்வியை நம்முடைய நாட்டில் ஒரு சோஷலிசப் பொருளாதரத்தைக் கட்டியமைப்பது தொடர்பான கேள்வியுடன் சில தோழர்கள் அடையாளப்படுத்திக் கொள்வதுதான் அந்தத் தவறான கருத்தாக்கமாகும். இவையிரண்டும் ஒன்றுதான் என்று கருதிக் கொள்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? இல்லை. நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன்? ஏனென்றால் முதலாவது கேள்வியின் எல்லைப் பரப்பு இரண்டாவதின் எல்லையைவிடக் குறுகியது. ஏனென்றால் தொழிற்சாலைகளின் மாறா மூலதனத்தை விரிவுபடுத்துவது பற்றிய முதலாவது கேள்வி தேசிய பொருளாதரத்தின் ஒரு பகுதியையே அதாவது தொழிற்துறையை மட்டுமே தழுவியது. ஆனால் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டி யமைப்பது பற்றிய கேள்வி தேசியப் பொருளாதாரம் முழுவதையும் தழுவி நிற்பது. அதாவது தொழிற்துறை மற்றும் விவசாயம் இரண்டையும் தழுவியது. எனவேதான் ஏன் ஏற்றுக் கொள்ளமுடியாது என்கிறபோது சோஷலிசத் தைக் கட்டியெழுப்புவது பற்றிய பிரச்சினை தேசிய பொருளாதாரத்தை ஒரு ஒட்டு மொத்த முழுமையாக ஒழுங்கமைப்பது பற்றிய பிரச்சினையாகும் என்கிறோம். அதாவது தொழிற்துறையையும் விவசாயத்தையும் சரியான முறையில் ஒன்றிணைப்பது பற்றிய பிரச்சினை ஆகும். ஆனால் மிகச் சரியாகக் கூறினால் தொழிற்துறையின் மாறா மூலதனத்தை விரிவுபடுத்துவது நாம் மேலே குறிப்பிட்ட பிரச்சினையைத் தொட்டும் பார்ப்பதில்லை. தொழிற்துறையின் மாறா மூலதனம் ஏற்கனவே முழுமையாக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு விட்டது என்று நாம் கருதிக் கொண்டாலும், சோஷலிசப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது என்று இதற்கு எந்த விதத்திலும் பொருள் இல்லை. சோஷலிச சமூகம் என்பது தொழிற் துறையிலும் விவசாயத் துறையிலும் பங்குபெற்றுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் கூட்டமைப்பு ஆகும். ஆனால் இந்தக் கூட்டில், தொழிற்துறையுடன் அதற்கு மூலப் பொருள்களையும் உணவையும் கொடுத்து அதனுடைய உற்பத்திப் பொருட்களை உள்வாங்கிக் கொள்ளும் விவசாயத்துறையை இணைக்காவிட்டால், தொழிற்துறையும் விவசாயமும் இப்படி ஒரே முழுமையாக மாறாவிட்டால் எந்த விதமான சோஷலிசத்திற்கும் வாய்ப்பில்லை.

இதனால்தான் தொழிற்துறைக்கும் விவசாயத்திற்கும் இடையேயான உறவு பற்றிய கேள்வி - பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாய வர்க்கத்துக்கும் இடையேயான உறவு பற்றிய கேள்வி - சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது பற்றிய பிரச்சினையின் அடிப்படைக் கேள்வியாகிறது.

அதனால்தான் பெருவீதத் தொழிற்துறையின் மாறா மூலத னத்தை விரிவாக்குவது, தேவையான உற்பத்தி சாதனங்களை நவீனப்படுத்துவது என்கிற கேள்வியும் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது பற்றிய கேள்வியும் ஒன்றேயென அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது.

(எனவே இரண்டாவது கேள்விக்கு வருவோம்)

நம் நாட்டில் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டி யமைப்பது மற்ற நாடுகளில் சோஷலிசம் வெற்றி பெறுவதற்கு முன்பே சாத்தியமா? வெற்றி பெற்ற மேற்குலகப் பாட்டாளி வர்க்கத்தின் நேரடி உதவியின்றி அதாவது அவர்களின் இயந்திரத் தளவாடங்கள் உபகரணங்கள் இன்றி நாம் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?

ஆம். இது சாத்தியமானதுதான். இது நடைபெறக் கூடியது மட்டுமல்ல, மாறாக அவசியமானதும், தவிர்க்க இயலாததும் ஆகும். தேசிய மயமாக்கப்பட்ட தொழிற்துறையை விவசாயத் துடன் இணைப்பதன் மூலமும், கிராமப் புறங்களில் கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதன் மூலமும், விவசாயப் பொருளாதாரத்தை சோவியத் வளர்ச்சி முறையின் பொதுவான அமைப்பு முறைக்குள் கொண்டு வருவதன் மூலமும், சோவியத்துக்களை புத்துணர்ச்சி பெறச் செய்து அரசு அமைப்பை பெருந்திரள் மக்களுடன் கலக்கச் செய்வதன் மூலமும், புதிய பண்பாட்டை உருவாக்குவதன் மூலமும், ஒரு புதிய சமூக வாழ்வை மலரச் செய்வதன் மூலமும் நாம் ஏற்கனவே சோஷலிசத்தைக் கட்டியமைத்து வருகிறோம். சந்தேகமில்லாமல் இந்த வழியில் நாம் ஏராளமான இடர்ப்பாடுகளை முகங்கொள்ள வேண்டியிருக்கும். எண்ணிலடங்காத சோதனைகளின் வழியே நாம் செல்ல வேண்டியிருக்கும். மேற்கு நாடுகளில் சோஷலிசம் வெற்றி பெற்று நம் உதவிக்கு வருமானால் நிகழ்வுகள் பெரிதும் சுலபமாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை. முதலாவதாக மேற்கு நாடுகளில் சோஷலிசத்தின் வெற்றி நாம் விரும்பிய வண்ணம் விரைவான “நிகழ்வை” கொண்டிருக்கவில்லை. இரண்டாவதாக இந்த இடர்ப்பாடுகள் நம்மால் எதிர்த்து சமாளிக்கப்படக் கூடியவையே. அவற்றை நாம் ஏற்கனவே எதிர்த்துச் சமாளித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவையெல்லாவற்றைப் பற்றியும் என் உரையின் ஆரம்பத்தில் நான் பேசி உள்ளேன். இதற்கு முன்பும் இதைப் பற்றி மாஸ்கோ அமைப்பிற்கு அளித்த அறிக்கையில் நான் கூறியுள்ளேன். அதற்கும் முன்னதாக “அக்டோபர் பாதை பற்றி” என்ற நூலுக்கான என்னுடைய முன்னுரையில் நான் இதைப் பற்றிக் கூறியுள்ளேன். நம்முடைய நாட்டில் சோஷலிசத்தைக் கட்டும் சாத்தியக் கூறை மறுப்பது என்பது கலைப்புவாதமே என்றும் இந்நிலைப்பாடு கட்சியைச் சீரழிந்து போகச் செய்யும் என்றும் நான் கூறினேன். ஏற்கனவே பலமுறைகள் சொல்லியுள்ள ஒன்றை மீண்டும் திரும்பக் கூறுவதில் சிறிதும் பயனில்லை. எனவே லெனினின் கட்டுரைகளை படிக்குமாறு நான் உங்களுக்கு கூறுவேன். அங்கே இந்த விஷயம் பற்றிப் போதுமான விபரங்களை முன்மொழிதல்களை நீங்கள் காணலாம்.

ஆயினும், நான் இந்தக் கேள்வியின் வரலாறு பற்றி சில வார்த்தைகளையும் இன்றைய கட்டத்தில் கட்சிக்கு அதன் முக்கியத்துவம் குறித்தும் கட்டாயம் சொல்ல விரும்புகிறேன். 

நாம் 1905-06ஆம் ஆண்டுகளில் நடந்த விவாதங்களிலி ருந்து மீண்ட பிறகு ஒரு நாட்டில் சோஷலிசம் கட்டியமைப்பதின் சாத்தியம் பற்றிய கேள்வி ஏகாதிபத்திய யுத்தத்தின் காலக் கட்டத்தில், 1915ல் முதன்முறையாக நம் கட்சியினுள் எழுப்பப்பட்டது என்று கூறமுடியும். இந்தச் சமயத்தில்தான் லெனின் முதன் முறையாக “தனி ஒரு முதலாளித்துவ நாட்டில் சோஷலிசத்தின் வெற்றி பற்றிய சாத்தியப்பாடு” குறித்து தன்னுடையக் கருத்துக்களை உருவாக்குகிறார். அது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோஷலிசப் புரட்சிக்கு மாறுகின்ற காலக்கட்டம். ஏற்கனவே நமக்குத் தெரிந்தவாறு டிராட்ஸ்கி அந்த நேரத்திலேயே லெனினுடைய கருத்துக்களுக்கு மாறுபட்ட “புரட்சிகர ரஷ்யா பிற்போக்குத் தனமான ஐரோப்பாவிற்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியும் என்று நினைப்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை” என்று அறிவித்தார்.

1921ல் அக்டோபர் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போருக்குப் பின் நாட்டின் நிர்மானம் பற்றிய கேள்வி முன்னுக்கு வரும்போது சோஷலிசத்தைக் கட்டுவது பற்றிய பிரச்சினை மீண்டும் கட்சிக்குள் எழுகிறது. அது புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கிய நம்முடைய திருப்பத்தை சில தோழர்கள், சோஷலிசக் குறிக்கோள்களை கைவிட்டு விடுவதாகவும், சோஷலிசத்தைக் கட்டியமைப்பதை கைவிடுவதாகவும் கருதிய காலம். நமக்கு நன்கு தெரிந்தபடி, லெனின், தன்னுடைய துண்டறிக்கையான ‘பொருள் வடிவிலான வரி’ என்ற பிரசுரத்தில் “புதிய பொருளாதாரக் கொள்கையை” நோக்கிய திருப்பத்தை, தொழிற்துறையையும் விவசாயப் பொருளாதாரத்தையும் இணைப்பதற்கான ஒரு அவசியமான நிபந்தனை என்றும், சோஷலிசப் பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கட்டியமைப்பதற்கான முன்நிபந்தனை என்றும், சோஷலிசத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்புவதற்கான பாதை என்றும் வரையறுத்தார். அது 1921 ஏப்ரலில். இதற்கு பதிலளிப்பது போன்று 1922 ஜனவரியில் டிராட்ஸ்கி தன்னுடைய நூலான ‘1905ஆம் வருடம்’ என்பதன் முன்னுரையில் நம்முடைய நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியமைப்பது பற்றிய பிரச்சினைக்கு முற்றிலும் எதிர்மறையான ஒரு கருத்தை முன்வைத்தார். “விவசாயிகள் அதிகமாக உள்ள ஒரு பின்தங்கிய நாட்டில் அமைகின்ற ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தின் முரண்பாடுகள் சர்வதேச அளவில் மட்டுமே, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் களத்தில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்” என்று அறிக்கை வெளியிட்டார்.

ஒரு ஆண்டு கழிந்த பின், 1922ல், நாம் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு அறிக்கைகளைக் கண்டோம். மாஸ்கோ சோவியத்தின் பிளீனக் கூட்டத்தில் லெனின் தந்த அறிக்கை “புதிய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் ரஷ்யா சோஷலிச ரஷ்யாவாக மாறும் என்று கூறியதையும், டிராட்ஸ்கி தன்னுடைய ‘அமைதித் திட்டத்திற்கான’ பின்னுரையில் ரஷ்யாவில் சோஷலிசப் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சி, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பிறகே சாத்தியமாகும்” என்று கூறியதையும் கண்டோம்.

இறுதியாக, மேலும் ஒரு ஆண்டுக்குப் பின், அவர் இறப்பதற்கு சற்று முன்னால் லெனின், “கூட்டுறவு பற்றி” என்னும் தன்னுடைய கட்டுரையில் இந்தக் கேள்விக்கு மீண்டும் வந்தார். இங்கே சோவியத் ஒன்றியத்தில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டியமைப்பதற்குத் தேவையான அனைத் தையும் நாம் பெற்றிருப்பதாக அவர் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதான் இந்தக் கேள்வி பற்றிய சுருக்கமான வரலாறு.

  வரலாற்றைப் பற்றிய இந்தக் குறிப்பு ஒன்றே நம்முடைய நாட்டில் சோஷலிசத்தைக் கட்டும் பிரச்சினை நம்முடைய கட்சியின் நடைமுறை வேலைகளில் ஒரு பெரிய கேள்விக் குறியாக இருந்தது என்பதைக் காட்டப் போதுமானது. நம்முடைய நடைமுறைப் பணிகளில் ஒரு பெரிய பிரச்சினையாக  இந்த விஷயத்தை லெனின் கருதியிருக்காவிட்டால் இந்த விஷயத்திற்கு அவர் மீண்டும் திரும்பியிருக்க மாட்டார் என்பதற்கு பெரிய ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. 

அதன் தொடர்ச்சியாக நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியில், நம்முடைய பொருளாதார அமைப்பினுள் முதலாளித்துவச் சக்திகளுக்கும் சோஷலிசச் சக்திகளுக்கும் இடையேயான போராட்டம் கூர்மையடைந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் முதலாளித்துவம் தற்காலிகமாக உறுதிப்பட்டதானது, நம்முடைய நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியமைப்பது சாத்தியமா என்ற கேள்வியை மேலும் கூர்மையாக்கியது அதனுடைய முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்தியது.

நம்முடைய கட்சியின் நடைமுறைப் பணிகளைப் பொறுத்த வரையில் இந்தக் கேள்வி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது?

ஏனெனில், கட்டமைப்புத் துறையை (Basic structure) வளர்த்தெடுப்பது பற்றிய பிரச்சினை, அந்தப் பணியின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் பற்றிய பிரச்சினைகள் மீது அது கேள்வியெழுப்புகிறது. எதற்காக அதை செய்கிறீர்கள் என்பதை, எதற்காக நீங்கள் ஒன்றை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை, நீங்கள் அறியாவிட்டால் உங்களால் அதைச் சிறப்பாகக் கட்டியமைக்க முடியாது. எந்தத் திசையில் செல்வது என்பதை நீங்கள் அறிந்திராவிட்டால் உங்களால் ஒரு அடிகூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது. எதிர்கால வளர்ச்சி பற்றிய கேள்விகள் தெளிவான வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களுக்குப் பழகிவிட்ட கட்சிக்கு மிகவும் அடிப்படையான கேள்வி. சோஷலிசத்தைக் கட்டியமைப்பதில் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்புடன் நாம் சோஷலிசத்தைக் கட்டியமைக்கப் போகிறோமா? அல்லது வெறும் தற்செயல் நிகழ்ச்சிகள் மூலம் குருட்டுத் தனமான முறையில், அதாவது ‘உலகம் முழுவதும் நடைபெறப்போகிற சோஷலிசப் புரட்சியை எதிர்பார்த்து’ நம் கட்டமைப்புப் பணிகளை முதலாளித்துவ ஜனநாயகம் என்ற மண்ணிற்கு எருவாக்கப் போகிறோமா? இன்று இது மிக அடிப்படையான கேள்வி. தெளிவான இந்தக் கேள்விக்கு நம்மிடம் தெளிவான பதில் இல்லையென்றால் நம்மால் சிறப்பான முறையில் வேலை செய்யவும் கட்டியமைக்கவும் முடியாது. நூறாயிரக் கணக்கான கட்சி ஊழியர்களும், தொழிற்சங்க உறுப்பினர்களும், கூட்டுறவுத் துறையினரும், வணிக நிர்வாகிகளும், கலாச்சார ஊழியர்களும், இராணுவ வீரர்களும், இளம் கம்யூனிஸ்ட் லீக்கினரும் நம்மை நோக்கி திரும்பியுள்ளனர். நம்மைப் பார்த்து, நம்முடைய கட்சியைப் பார்த்து கேட்கின்றனர் “நம்முடைய பணியின் குறிக்கோள் என்ன? நாம் கட்டியெழுப்புவது எதற்காக? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான கறாரான பதிலைத் தர முடியாத, தர விருப்பமில்லாத குழப்பம் விளைவிக்கும் தலைவர்களுக்கும், நம்முடைய சோஷலிச எதிர்காலத்திற்கான நிர்மாணப் பணிகளை புத்திஜீவிகளின் அவநம்பிக்கை வாதத்தில் மூழ்கடிப்பவர்களுக்கும் கடும் துன்பம் வரத்தான் செய்யும்.

மற்றவற்றைக் காட்டிலும் லெனினியத்தின் சிறப்பம்சம் எதில் அடங்கியிருக்கிறது என்றால், அது தற்செயல் நிகழ்ச்சிகளைச் சார்ந்தும், குருட்டுத்தனமாகவும் எதையும் கட்டி யெழுப்புவதை அங்கீகரிப்பதில்லை என்பதிலும்; எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் எதையும் கட்டியமைப்பதை அதனால் எண்ணிப் பார்க்க முடியாது என்பதிலும்; எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு அது தெளிவாக வரையறுக்கப்பட்ட பதிலைக் கொடுக்கிறது என்பதிலும்; நம்முடைய நாட்டில் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதற்குத் தேவையானது அனைத்தையும் நாம் பெற்றிருக்கிறோம், ஒரு முழுமையான சோஷலிச சமுதாயத்தை நம்மால் கட்டியெழுப்ப முடியும், கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்று பகிரங்கமாக அறிவிப்பதிலும்தான் அதன் சிறப்பு அடங்கியுள்ளது.

ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் சாத்தியம் பற்றிய கேள்விகள் தொடர்பாக விஷயங்கள் இவ்வாறுதான் உள்ளன.

நாம் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதில் வெற்றி பெறுவோமா என்பது வேறு கேள்வி. அது நம்மை மட்டுமே சார்ந்தது அல்ல. அது நம்முடைய நாட்டிற்கு வெளியே உள்ள நம் எதிரிகளுடையதும் நம் நண்பர்களுடையதுமான பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. “தற்காலிக அமைதிக்” கால கட்டத்தை நீட்டிப்பதில் நாம் வெற்றி பெற்றால், மூர்க்கத்தனமானதும் மோசமானதுமான தலையீடுகள் எதுவும் இல்லாமலிருந்தால், தலையீடுகள் வெற்றிபெறாமல் போனால், புரட்சிகர இயக்கம் சர்வதேச அளவில் ஒரு புறமும் நம் நாட்டில் மறுபுறமும் போதிய பலம் பெற்றதாகவும் வலிமை வாய்ந்ததாகவும் இருந்து மோசமான தலையீட்டு முயற்சிகளை முறியடித்தால் நாம் கட்டியெழுப்புவதில் வெற்றி பெறுவோம். இதற்கு மாறாக தலையீடுகள் வெற்றி பெற்று நாம் நசுக்கப்பட்டுப் போவோமானால் நம்மால் சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

கேள்வி பதில் : ஸ்வர்ட்லோவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியது, ஜூன் 9, 1925

ஸ்டாலின் தேர்வு நூல்கள் (ஆங்கிலம்) தொகுதி 7 -  பக்கம் 198-208

QUESTIONS AND ANSWERS

Speech Delivered at the Sverdlov University, June 9, 1925

(Stalin Selected Works Volume 7 - 

Pages 198-208)

சமரன், 2012