ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போகும் பிரச்சினையில் பு.ஜ. வின் நடுநிலைவாதம்

ஏஎம்கே

ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போகும் பிரச்சினையில் பு.ஜ. வின் நடுநிலைவாதம்

ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு தடை!

விடுதலைப்  புலிகள்  இயக்கத்தின்  மீதும்,  மக்கள்  யுத்தக்குழுவின் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் நாட்டு மக்கள்மீது இந்திய அரசாங்கம் பாசிசத் தாக்குதலை தொடுக்கத் துவங்குவதற்கு ஒரு வௌ்ளோட்டம்தான். ஆகையால் இந்தத் தடைச் சட்டங்களை எதிர்த்துப் போரிட புரட்சியாளர் ஜனநாயகவாதிகளுடன் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை ஏற்பது இவ்விரு தடைகளும் ஒரு வௌ்ளோட்டம் என்பதை உணர்வதில் அடங்கியிருக்கிறது.

ஆனால், தேசிய இன பிரச்சினை குறித்து பாட்டாளிவர்க்கப் புரட்சிகர அமைப்பு மேற்கொள்ள வேண்டிய மார்க்சிய -லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த நிலைபாடுபற்றி புதிய ஜனநாயகம் குழுவின் கருத்துகள் புரட்சிகர சக்திகளும், ஜனநாயக சக்திகளும், ஓரணியில் திரள்வதற்குத் தடையாக இருக்கின்றன.

1. "தேசிய  இன  பிரச்சனை  என்பது  தேசிய முதலாளித்துவத்தின் முழக்கம் தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல." (16-31, ஜனவரி - 90, புதிய ஜனநாயகம். பக்கம் - 11)

2. ஒரு தேசத்துக்கோ, நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியம் 'நேரடி' ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையாக எடுத்துக் கொள்கிறோம். (16 - 31, ஜனவரி 90, புதிய ஜனநாயகம் பக்கம் - 11)

3. ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (16 - 31 ஜனவரி - 90, புதிய ஜனநாயகம் பக்கம் - 10) என்பன அத்தகைய கருத்துகளாகும்.

அதைப் போலவே,

1. இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பிரேமதாச அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது குறித்து பு.ஜ.வின் நிலைப்பாடும்... (16-31 ஜனவரி 90, புதிய ஜனநாயகம்)

2. ஈழத்தில் பிரேமதாச அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மீண்டும் போர் தொடங்கியபோது தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்க வெறியை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும் பாசிச, அராஜக வழிமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்த வளர்ச்சிப் பாதையில்தான் தமிழீழ மக்கள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கும், ஆதிக்கத்திற்கும் முடிவுகட்ட முடியும்." என்ற பு.ஜ. வின் நிலைபாடும்.... (1-15 ஜூலை 90, புதிய ஜனநாயகம், பக்கம் - 19).

புரட்சிகர சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதற்கு தடையாக இருக்கின்றது.

புரட்சிகர சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதை சாத்தியமாக்கும் பொருட்டு மேற்கூறப்பட்ட கருத்துகளை  விமர்சனம்  செய்வது  அவசியம் எனக் கருதுகிறோம்.

தேசிய இனப் பிரச்சினை பாட்டாளிவர்க்கத்தின் பிரச்சினை இல்லையா?

முதலாவதாக, தேசிய இனச்சிக்கல் குறித்து அரசியல் கோட்பாட்டு பிரச்சினைகளை எடுத்துக் கொள்வோம். தேசிய இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்று கூறுவது சரியா? சரியல்ல. அவ்வாறு கூறுவது மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைக்கு உடன்பட்டதல்ல. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தேசங்களில் தோன்றும் தேசிய இன பிரச்சினையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய வேண்டும் என லெனினியம் கூறுகிறது. முதலாளித்துவம் எழுச்சியுறும் நிலைகளில் தேசியப் போராட்டம் முதலாளிகள் தங்களுக்கிடையில் நடத்தும் ஒரு போராட்டமாகவே இருந்தது என ஸ்டாலின் கூறினார். 1912 ஆம் ஆண்டு இறுதியில் 'மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்' என்ற நூலில் 'முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருக்கும் போது நடைபெறும் தேசியப் போராட்டம் பூர்ஷ்வா வர்க்கங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டம்' என்று அவர் சொன்னார். ஆனால் அதற்குப் பிறகு சர்வதேசிய நிலைமைகளில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்பட்டது. ஒரு புறத்தில் உலகப் போரும், மறுபுறத்தில் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியின் வெற்றியும், இதுவரை பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே இருந்து வந்த தேசிய இனப் பிரச்சினையை உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாற்றிவிட்டது. 1916 ஆம் ஆண்டில் "சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத்தின் சாராம்சம்" என்ற தனது நூலில் லெனின் தேசிய பிரச்சினையின் முக்கிய அம்சமும், சுயநிர்ணய உரிமையும் பொதுவாக ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக இதுவரை இருந்து வந்தது முற்றுப் பெற்றுவிட்டது என்றும், அது பொதுவாக பாட்டாளிவர்க்க சோசலிசப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக ஏற்கெனவே மாறிவிட்டது என்றும் கூறினார். இவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்று இடைநிலைக் காலகட்டத்தின் மூலமாகத்தான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதேபோல் எல்லா தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற - அதாவது பிரிந்து போவதற்கு சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் கட்டத்தின் மூலம்தான் தவிர்க்க முடியாத வகையில் ஒருமைப்படுத்துவது என்ற நிலையை அடைய முடியும்" என அவர் எடுத்துரைத்தார் அதற்குப் பிறகு தேசிய இயக்கத்தின் முக்கியத்துவம், தேசிய இனப் பிரச்சினையின் சாராம்சம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆகையால் ஸ்டாலின் 1912ஆம் ஆண்டில் கூறிய சூத்திரம் பொருந்தாததாக ஆகிவிட்டது. ஒரு நாட்டின் உள்நாட்டு அரசின் பிரச்சினையாக இருந்து வந்த தேசிய இனப் பிரச்சினையை ஒரு பொதுவான பிரச்சினையாக சர்வதேசப் பிரச்சினையாக, ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியிலிருந்து காலனி நாடுகளை, ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்கும் உலகப் பிரச்சினையாக லெனினியம் மாற்றிவிட்டது என்று ஸ்டாலின் கூறினார்.

யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செமிச் என்பவர் தேசிய இனப்பிரச்சினை அந்நாட்டிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களின் பூர்ஷ்வாக்களுக்கிடையில் நடைபெறும் போராட்டம் என்று சொன்னார். இந்த தவறான கருத்துகளை ஸ்டாலின் "மீண்டும் ஒரு முறை தேசிய இனப்பிரச்சினை பற்றி" என்ற நூலில் விமர்சனம் செய்தார். ஒரு சார்பு நாட்டின் தேசிய இனப் பிரச்சினையை அந்நாட்டிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களின் பூர்சுவாக்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமாக மட்டுமே குறுக்கிவிடக்கூடாது என்றும், தேசியப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகள் பிரச்சினையாகும் என்றும் எடுத்துக் காட்டினார்.

எனவே, நவகாலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் உள்ள அரைக் காலனிய சார்பு நாடுகளில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை, அந்நாடுகளில் உள்ள தரகு முதலாளித்துவ, பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. அத்துடன் இந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்த கோரிக்கையாகவும் இருக்கிறது. ஆகையால் இந்நாடுகளிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளுக்கு இடையிலான போராட்டமாக மட்டுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைக் குறுக்கிவிட முடியாது.

ஏகாதிபத்தியவாதிகளும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் தேசிய இனங்களை அடிமைப்படுத்துதல் மற்றும் பண்பாட்டுத் துறையில் சீரழித்தலை எதிர்த்தும், ஏகாதிபத்தியவாதிகளின் நிதி மூலதனச் சுரண்டலை எதிர்த்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பரந்துபட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில்தான் தேசிய இனப்பிரச்சினையின் சாரம் அடங்கியுள்ளது. இந்நாடுகளிலும், அவற்றின் பல்வேறு தேசிய இனங்களிலும் உள்ள பரந்துபட்ட மக்களை, எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளை ஏகாதிபத்தியவாதிகள் ஒடுக்கிச் சுரண்டுவதின் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் அவர்கள் இழுத்து வரப்படுகிறார்கள்; இதன் மூலம் அவர்கள் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கூட்டாளிகளாக மாறிவிடுகிறார்கள். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை, இந்நாடுகளில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் முதலாளிகளுக்கிடையிலே நடைபெறும் போராட்டமாக மட்டுமே நாம் குறுக்கிவிடுவோமானால், தேசிய இனப்பிரச்சினையை சாராம்சத்தில் ஒரு விவசாயப் பிரச்சினையாக (Peasent Question) கருத முடியாது. தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினை என கருதாமல், அதை வெவ்வேறு தேசிய இனங்களின் முதலாளிகளுக்கிடையிலான ஒரு போராட்டமாக மட்டுமே கருதுவதற்குக் காரணம் தேசிய இனப்பிரச்சினையின் உள்ளார்ந்த வலிமையை குறைத்து மதிப்பிடுவதே ஆகும்.

தேசிய இனப் பிரச்சினையும், விவசாயிகள் பிரச்சினையும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்பதும் உண்மையே. ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையில் விவசாயிகள் பிரச்சினைக்கு கூடுதலான தேசிய பண்பாடு தேசிய அரசு என்பன போன்ற பிற பிரச்சினைகளும் அடங்கியுள்ளன. எனினும் விவசாயிகள் பிரச்சினைதான் தேசிய இனப் பிரச்சினைக்கு அடிப்படையும், அதன் சாராம்சமும் ஆகும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. விவசாயிகள்தான் தேசிய இயக்கத்தின் படையாக அமைகின்றனர். விவசாயிகளின் படையின்றி சக்தி வாய்ந்த ஒரு தேசிய இயக்கம் தோன்றவே முடியாது என்ற உண்மை இதைத் தெளிவுபடுத்தும். தேசிய இனப் பிரச்சினை சாராம்சத்தில் ஒரு விவசாயிகளின் பிரச்சினையாகும் என்று சொல்லும்போது இந்தப் பொருளில்தான் சொல்லப்படுகிறது.

சீனாவில் தேசிய இனப் பிரச்சினை குறித்து 1924-ல் டாக்டர் சன்யாட்சன் கோமிங்டாங்கின் முதலாவது தேசிய மாநாட்டின் கொள்கை அறிக்கையில் முன்வைத்த கருத்துகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முழு உடன்பாடு கொண்டுள்ளது என மாவோ கூறினார். அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.

"கோமிங்டாங்கின் தேசியக் கோட்பாட்டிற்கு இரட்டை அர்த்தம் உண்டு. முதலாவது, சீன தேசத்தின் விடுதலை. இரண்டாவது, சீனாவில் எல்லா தேசிய இனங்களுக்கும் சமத்துவம்."

அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையில் இரண்டு கோட்பாடுகள் இருப்பதைக் காணலாம். ஒன்று, தேசிய சுயநிர்ணய உரிமை உலகப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாறிவிட்ட பிறகு, இந்நாடுகளின் சுயநிர்ணய உரிமையும் உலக சோசலிசப் புரட்சியின் பகுதியாக மாறி விட்டது ஆகையால் இந்நாடுகளின் சுயநிர்ணய உரிமை புதிய ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக ஆகிவிட்டது. இரண்டாவது, அந்நாடுகளின் தேசியக் கோட்பாட்டுக்கு இரட்டை அர்த்தங்கள் உண்டு. ஒன்று, இந்நாடுகளின் தேசிய விடுதலை; மற்றொன்று, இந்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்குச் சமத்துவம் - அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

ஆகையால், தேசிய இனப்பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கம்தானே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்று கூறுவது மார்க்சிய லெனினியத்திற்கு உடன்பாடானது அல்ல.

ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போகும் பிரச்சினை எழும்போது பாட்டாளி வர்க்கம் நடுநிலைதான் வகிக்க வேண்டுமா?

அடுத்ததாக, ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போகும் பிரச்சினை குறித்து புதிய ஜனநாயகம் பின்வருமாறு கூறுகிறது:

"ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து போவது சரியா, இல்லையா என்ற விவகாரத்தில் நாம் நடுநிலை வகிக்கிறோம். ஒரு தேசத்துக்கோ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியத்தின் 'நேரடி' ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையானதாக எடுத்துக் கொள்வோம்."

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் சரியானவைதானா என பரிசீலிப்போம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரச்சினையையும் ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து ஒரு தனிநாடு - தனி அரசு அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற பிரச்சினையையும் பற்றி லெனினியம் என்ன கூறுகிறது என பார்ப்போம்.

தேசங்களின்  சுயநிர்ணய  உரிமை  என்பது  ஒடுக்கும் தேசத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசம் அரசியல் ரீதியில் பிரிந்து போவதற்கான உரிமையைக் குறிக்கிறது - அதாவது அரசியல் சுதந்திரம் பெறும் உரிமையைக் குறிக்கிறது. ஒடுக்கப்படும் தேசம் பிரிந்துபோவதற்கு கிளர்ச்சி செய்ய முழு சுதந்திரம் வேண்டும், பிரிந்து போவது பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்துவதற்கு சுதந்திரம் வேண்டும் என்பது மேற்கூறப்பட்டதின் உட்பொருளாகும். இவ்வாறுதான் சுயநிர்ணய உரிமை பற்றி லெனினியம் தரும் விளக்கம் இருக்கிறது.

அடுத்தது, ஒரு தேசிய இனம் பிரிந்து போவது பற்றி முதலாளித்துவ வர்க்கம் எவ்வாறு அணுகுகிறது? லெனினியம் எவ்வாறு அணுகுகிறது? ஒவ்வொரு தேசிய இன விசயத்திலும் பிரிந்து போவது சரி அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டும் என்பது முதலாளித்து வர்க்கத்தினரின் வாதமாகும். அவ்வாறு பதில் சொல்வதுதான் ஆக்கப் பூர்வமானது நேர்படித்தானது என்று அவர்கள் கூறுகின்றனர். லெனினியம் அவ்வாறு கருதவில்லை.

முதலாளித்துவம் எப்பொழுதும் தேசியக் கோரிக்கையை முதன்மைப்படுத்துகிறது, அதை நிபந்தனையற்ற முறையில் முற்றான ஒன்றாக முன் வைக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்கம் தேசிய இனப்பிரச்சினையை வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்படுத்தியே அதைப் பார்க்கிறது. ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதன் மூலம் ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறுமா? அல்லது அனைத்து தேசிய இனங்களும் சமத்துவம் பெறுவதில் ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெறுமா என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. இந்த இரண்டு முடிவுகளில் எதுவொன்றாய் இருப்பினும் பாட்டாளி வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்திற்கு முக்கியமானது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்திற்கோ அதனுடைய தேசிய இனத்தின் குறிக்கோளுக்கு பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோளை கீழ்ப்படுத்தி, பாட்டாளி வர்க்கத்தின் அபிவிருத்தியை தடை செய்வதே அதன் நோக்கமாக இருக்கிறது.

 

எனவே ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து போவதைக் குறித்து இரண்டு விதமான நிலைபாடுகள் உள்ளன. ஒன்று, முதலாளித்துவ நிலைபாடு, மற்றொன்று பாட்டாளி வர்க்க நிலைபாடு - லெனினிய நிலைபாடு இவ்விரு வர்க்கங்களின் நலன்களிலிருந்தே இவ்விரு நிலைபாடுகள் தோன்றுகின்றன.

தங்களின் சொந்த தேசிய இனத்துக்கு விசேஷமான உரிமைகளையும், விசேஷமான ஆதாயங்களையும் முதலாளித்துவ வர்க்கத்தினர் அடைய விரும்புகின்றனர். முதலாளித்துவ நலன்களிலிருந்து அவர்கள் ஒரு தேசிய இனம் பிரிந்து போகும் பிரச்சினையை அணுகுகின்றனர்.

தங்களின் தேசிய இனத்துக்கு விசேஷ உரிமைகளும் விசேஷ ஆதாயங்களும் அளிக்கப்படவேண்டும் என்பதை பாட்டாளிவர்க்கம் எதிர்க்கிறது. தேசிய அமைதியையும், சம உரிமையையும் பெறுவதற்காகவும், வர்க்கப் போராட்டத்திற்கு சிறந்த நிலைமைகளை தோற்றுவிப்பதற்காகவும்தான் தொழிலாளி வர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் பூர்ஷ்வாக்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிக்கிறது.

எந்த தேசிய இனத்திற்கும் உத்தரவாதம் செய்யாமலும், இன்னொரு தேசிய இனத்துக்கு எதையும் செய்வோம் என்ற உத்தரவாதம் அளிக்காமலும், சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்மறை கோரிக்கையுடன் தன்னை நிறுத்திக்கொள்கிறது என்றார் லெனின்.

ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன? மார்க்சிய லெனினியவாதிகளிடமிருந்து பின்வருவன கோரப்படுகின்றன என்பது அதன் பொருளாகும்.

அ) அரசியல் ரீதியில் பிரிந்து போக விரும்புகின்ற ஒரு தேசிய இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற இனமோ அல்லது அரசோ எந்த வடிவத்தில் பலாத்காரத்தை பிரயோகித்தாலும் அதை மார்க்சிய- லெனினியவாதிகள் நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும். நடுநிலை வகிப்பது அல்ல இரு தரப்பினரையும் சமப்படுத்துவதல்ல.

ஆ) ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து போக வேண்டும் என்ற பிரச்சினை எழும்போது அப்பிரச்சினை ஒரு வெகுஜன, நேரடி சமவாக்கு என்ற அடிப்படையில் அப்பிரதேச மக்களிடம் ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என மார்க்சிய லெனினியவாதிகள் கோர வேண்டும்.

இ) பிற்போக்கான தேசியவாதிகள் தேசிய இனங்கள்மீது கொண்டு வருகிற ஒடுக்குமுறையை அல்லது ஒரு ஒடுக்கு முறைக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவை எதிர்த்து மார்க்சிய-லெனினியவாதிகள் போராட வேண்டும். குறிப்பாக பிற்போக்கு தேசியவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை எதிர்த்து தளாராமல் தொடர்ந்து போராட வேண்டும்.

அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறை கோரிக்கையுடன் பாட்டாளி வர்க்க இயக்கம் தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவதன் பொருள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவது - தனிநாடு (தனிஅரசு) அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை எல்லா விசயங்களிலும், விதிவிலக்கின்றி, நிபந்தனை இன்றி எதிர்க்க வேண்டும் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது நடுநிலை என்று கொள்ள வேண்டுமென்றோ, ஆதரிக்கவே கூடாது என்றோ பொருள் கொள்ளலாமா? இதைப் பற்றி மார்க்சிய லெனினியம் என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.

ஏதாவது ஒரு தேசிய இனம் பிரிந்து போவது பற்றி பிரச்சினை எழும்போது, பாட்டாளி வர்க்க இயக்கம் தேசிய இனங்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளையும், எல்லா விதமான விசேஷ உரிமைகளையும், எல்லாத் தனித்துவ போக்குகளையும் அகற்றிவிடும் நோக்கத்துடன் அப்பிரச்சினையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என லெனினியம் கோருகிறது.

ஒவ்வொரு தனி வழக்காக எடுத்துக் கொண்டு, ஒரு தேசிய இனம் பிரிந்து போவது பொருத்தமானதுதானா என்பதை பாட்டாளி வர்க்க இயக்கம் ஒரு சுயேச்சையான மதிப்பீட்டை செய்ய வேண்டும் என லெனினியம் கோருகிறது.

ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போவது என பாட்டாளிவர்க்க இயக்கம் தனது சுயேச்சையான மதிப்பிட்டின் அடிப்படையில் தீர்மானிக்கும்பட்சத்தில், அத்தேசிய இனம் அரசியல் ரீதியில் பிரிந்து போவதை ஆதரிக்க வேண்டும்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினை ஒரு தனித்து இயங்கும், தன்னோடு நின்று கொள்ளும் ஒரு பிரச்சினை அல்லவென்றும், அது தொழிலாளி வர்க்க புரட்சி என்ற பொதுப் பிரச்சினையின் ஒரு பகுதியே ஆகும் என மார்க்சிய லெனினியம் கூறுகிறது. பகுதி முழுமைக்கு கீழ்படிந்துதான் இருக்க வேண்டும் என்பதால், பொது பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே இப்பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும். அரசியல் சுதந்திரம், அரசியல் ஜனநாயகம் என்பதற்கு ஒரு தேசத்தின் பிரிவினை சேவை செய்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும் என மார்க்சிய லெனினியம் கூறுகிறது. சான்றாக சென்ற நூற்றாண்டில் மார்க்ஸ் ஹங்கேரி, போலந்து தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்தார். செக், தெற்கு ஸ்லாவியர்கள் தேசிய இயக்கங்களை எதிர்த்தார். ஏனெனில் ஐரோப்பிய புரட்சி இயக்கத்திற்கு ஜாரிய எதேச்சதிகாரம் பரம எதிரியாக இருந்தது. முன்னர் கூறப்பட்ட இரண்டு தேசிய இயக்கங்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடின. பின்னர் கூறப்பட்ட இரண்டும் ஜாரிய எதேச்சதிகாரத்தின் புறக்காவல் நிலையங்களாக இருந்தன. அயர்லாந்து பிரிந்து போவதை மார்க்ஸ் ஆதரித்தார். அதற்கான காரணத்தை அவர் பின்வருமாறு கூறினார்.

"அயர்லாந்தை விட்டுத் தொலைக்கும்வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது... இங்கிலாந்தில் பிற்போக்கு வாதத்துக்கு மூலகாரணம் அது அயர்லாந்தை அடிமைப்படுத்தியதுதான்."

ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து போனதைப்பற்றி லெனின் பின்வருமாறு கூறினார்; "நவீன பொருளாதார அரசியல் உறவுகளின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் பிரிந்து போதல் நடைமுறைச் சாத்தியமாகிறது. உண்மையில் ஏற்படுகிறது என்பதையும், அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்கிற நிலைமைகளில் சில சமயங்களில் பிரிவினை எந்த வடிவத்தைக் கொடுக்கிறது என்பதையும் இந்த உதாரணம் நமக்குக் காண்பிக்கிறது."

எனவே, ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவது என்ற பிரச்சினை வரும்போது ஒரு பாட்டாளி வர்க்க இயக்கம் நடுநிலை வகிக்கும் பிரச்சினைக்கே இடமில்லை. அப்பிரச்சினை பற்றிய சுயேச்சையான மதிப்பீட்டிலிருந்து அதை எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று மார்க்சிய லெனினியம் கோருகிறது.

ஒரு தேசத்துக்கோ நாட்டுக்கோ எதிராக ஏகாதிபத்தியத்தின் 'நேரடி' ஆதிக்கம் என்று வரும்போதுதான் அந்த முழக்கத்தை முதன்மையானதாக எடுத்துக் கொள்வோம் என்று சொல்வதும் சரியானதல்ல. ஏனெனில் அரைக்காலனித்துவ, சார்பு நாடுகளில் தேசிய சுயநிர்ணய உரிமை கோரிக்கை உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானது ஆகும்.

மேற்கூறப்பட்ட தவறான கருத்துகள் வறட்டுவாதத்துக்கும், குதர்க்க வாதத்துக்கும் இட்டுச் செல்கிறது. தேசிய இன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் புரட்சிகர சக்திகளையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவதற்கு தடையாக இருக்கின்றது.

சிங்கள இனவெறி அரசையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் சமப்படுத்துவது சரியா?

1989ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றியும், 1990 ஜூன் மாதத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் துவங்கிய பிறகு தமிழீழப் பாட்டாளிவர்க்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் வழியைக் குறித்தும் பு.ஜ.வின் நிலைபாடுகள் நாம் விமர்சனம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளில் இரண்டாவது பிரச்சினையாகும். அவை இரண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இரண்டு இடைக் கட்டங்களின் அரசியல் செயல்தந்திரங்களை பற்றியதாகும்.

இந்திய "அமைதிப் படைக்கும்" விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, இந்திய "அமைதிப் படைக்கு" எதிராக (இந்திய மேலாதிக்க வாதிகளுக்கு எதிராக) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிரேமதாச அரசாங்கத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை பு.ஜ.விமர்சனம் செய்கிறது. அந்த ஒப்பந்தம் செய்து கொண்டது சரியானது என்பது நமது நிலைபாடு. ஆகையால் பு.ஜ. நம்மைச் சாடுகிறது. இது முதலாவது பிரச்சனை.

இலங்கையில் பிரேமதாச அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் 1990 ஜூன் மாதத்தில் போர் தொடங்கிய போது, தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்குச் சற்றும் குறைவில்லாமல், புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும், பாசிச, அராஜகவழி முறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்த வளர்ச்சியில்தான், இந்தப் பாதையில்தான் தமிழீழ மக்கள் சிங்கள இன ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் முடிவுகட்ட முடியும் என்பது பு.ஜ.வின் நிலைபாடு. நாம் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கிறோம். இது இரண்டாவது பிரச்சினை.

இவ்விரண்டு பிரச்சினைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதலாவது, விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பிரச்சினையாகும். அந்த ஒப்பந்தத்தைப் பற்றி பு. ஜ.வின் விமர்சனம் பின்வருமாறு உள்ளது.

"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் எதிராக விடுதலைப்புலிகள் இராணுவ வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெ.வி.பி.யை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசும் - இராணுவமும் பெற்றுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்கு பலமளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் புலிகளை நிராயுதபாணியாக்கமலே அதன் ஆயுதத்தை அங்கீகரித்தே ஈழத்துக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன் வரலாம். இதை ஏற்பது ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத்தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது." (புதிய ஜனநாயகம் 1631 – ஜனவரி 1990)

எடுத்துக் காட்டப்பட்டுள்ள மேற்கோளிலிருந்து பு.ஜ. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது பின்வரும் விமர்சனங்கள் (குற்றச்சாட்டுகள்) செய்திருப்பதைக் காணலாம்.

1. அ) இலங்கை அரசு விடுதலைப்புலிகளை நிராயுத பாணியாக்கமலே, அதன் ஆயுத பலத்தை அங்கீகரித்து, ஈழத்தமிழ் மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசினார்கள்.

ஆ) இலங்கை அரசு விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறது.

அதை ஏற்றுக்கொள்வது சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதாகும். அநேகமாக புலிகளும் அதற்குத் தயாராய் இருப்பதாகத் தெரிகிறது.

இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் இந்த ஒப்பந்தத்தை செய்துக் கொண்டதால், இலங்கை அரசு தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டு ஜெ.வி.பி அமைப்பை அடக்குவதில் வெற்றிபெற முடிந்தது. அல்லது, இதை மிகவும் வெளிப்படையாகவும், கொச்சையாகவும் சொன்னால் ஜெ.வி.பி.யை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் பேரம் பேசி, போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இந்திய  அரசாங்கம்  விடுதலைப்புலிகள்  இயக்கத்தைத்  தடை  செய்வதற்காக  கூறும்  குற்றச்சாட்டுகளைவிட, பு.ஜ., விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது சுமத்தும் இக்குற்றச்சாட்டுகள் கடுமையானதும், கேவலமானதும் ஆகும். எனவே அழுத்தம் திருத்தமாக மறுத்துரைக்க வேண்டியவையாகும், கண்டனத்துக்குரியதுமாகும்.

இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையின் மீது விடுதலைப்புலிகளுக்கும், பிரேமதாச அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேறியது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஓர் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பு.ஜ. மேலே எடுத்துக்காட்டப்பட்டது போல விமர்சனம் செய்கிறது. பல நேரங்களில் விடுதலைப் புலிகள் பற்றி பு.ஜ. வெளியிடும் கருத்துக்களும், சோ, 'ரா' வெளியிடும் கருத்துக்களும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் செய்துக் கொண்ட இந்த ஒப்பந்தம், இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் நடந்த காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் இலங்கை இந்தியாவின் நவ காலனியாகிவிட்டது என்றும், இந்திய ராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது பிரதானப் பணி என்றும் பு.ஜ. வரையறை செய்தது. இக்காரணத்தால் இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாசிஸ்டு புலிகள், பாசிஸ்ட் ஜெ.வி.பி. அமைப்பு முடியுமானால் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கக் கூடிய இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஒரு புகுதியினர் உட்பட, இன்னும் பலருடன் ஒரு பரந்த அணியை உருவாக்கும் பொருட்டு, "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக்கொண்டு, ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லோருடனும் இணைந்து போராடுவது" என்ற முழக்கத்தை முன்வைக்கவேண்டும் என பு.ஜ. கூறிற்று.

ஆகையால், இந்தியப் படை வெளியேற வேண்டும் என்பதின் அடிப்படையில் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துக் கொள்வதை ஒரு துரோகச் செயல் என்று பு.ஜ. குற்றம் சாட்ட முடியாது. விடுதலைப்புலிகளின் அமைப்பு துரோகம் செய்து விட்டது என்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்க முடியாது. வழக்கமாக பு.ஜ. சொல்லும் ஒரு குற்றச்சாட்டு இருக்கவே இருக்கிறது. அதுதான் புலிகள் பேரம் பேசுகிறார்கள் என்பது. தேசிய இனப்பிரச்சினை என்பது முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினது அல்ல என்று கூறும் பு.ஜ.வால், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்கள் சக்தியின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முடியாதது இயல்பானதுதான். எனவே பேரம் செய்துக் கொள்கிறார்கள் என்ற ஆயுதத்தை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது வீசுகிறது. "இந்த நிலையில் புலிகளை நிராயுத பாணியாக்கமலே அதன் ஆயுத பலத்தை அங்கீகரித்தே ஈழ மக்களுக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க இலங்கை அரசு முன்வரலாம். இதை ஏற்பது ஈழ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை விட்டுத் தருவதுதான். அநேகமாக புலிகள் அதற்குத் தயாராய் இருப்பதாகவே தெரிகிறது" என பு.ஜ.கூறுகிறது.

ஈழ மக்களுக்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை அளிக்க சிங்கள இனவெறி அரசு தயாராக இருந்ததாம். ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ள விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக பு.ஜ.வுக்கு தெரிகிறதாம்.

பு.ஜ. இந்த ஆரூடத்தைக் கூறிய சில நாட்களுக்குள் சிங்கள பேரினவாத அரசு தமிழீழத்தின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஒரு கொடிய யுத்தத்தைத் தொடுத்து விட்டது. பிரேமதாச தொடுத்த தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்து தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தை தொடுத்ததன் மூலம் பு.ஜ.வின் பொய்யையும், புனைசுருட்டையும் அவர்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள். பு.ஜ.ஏன் 'பேரம், பேரம்' என்று புலம்புகிறது.

இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வதை துரோகம் என்று கண்டனம் செய்ய முடியாது. ஆனால் அதே சமயம், விடுதலைப்புலிகளின் பாசிசத்தை அம்பலப்படுத்த வேண்டியதைத் தனது 'புனிதமான' கடமையாக பு.ஜ. நினைக்கிறது. ஆகையால் எப்படியாவது புலிகளை அமபலப்படுத்திவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறது. ஏனெனில், புலிகள் தனிநாட்டுக்காகப் போராடும் இனவாதிகள். அவர்களை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும். அப்போதுதான் சுயநிர்ணய உரிமையை பகுதியாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னுக்கு கொண்டு செல்ல முடியும் என பு.ஜ. எண்ணுகிறது. ஆனால் இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட தமிழீழ தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டது என்பதை பு.ஜ. பார்க்க மறுக்கிறது. ஆகையால் புலிகளை பேரம் பேசுகிறார்கள் என்று சொல்லி அவர்களை அம்பலப்படுத்துவது தொலை நோக்குப் பார்வையுடன் செய்யக்கூடிய நடவடிக்கையாக அது கருதுகிறது. அதாவது அடுத்தக் கட்டத்திற்காக இந்தக் கட்டத்திலேயே தயாரிக்கப்பட வேண்டியவையாக புலிகளை அம்பலப்படுத்துதலைக் கருதுகிறது. ஆகையால், அமபலப்படுத்தியே ஆகவேண்டும் என்ற அகவிருப்பங்களிலிருந்து (Subjective) நிகழ்வுப் போக்குகளை மதிப்பீடு செய்யும் முறையை பு.ஜ கையாள்கிறது. இதனால் எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஆரூடம் கூறுவது பு.ஜ.வுக்கு ஒரு வழக்கமாகி விட்டது. அவ்வாறு செய்வதற்கு அதன் கைவசம் எப்போதும் தயாராக இருக்கும் ஒரு கைச் சரக்கு "பேரம் பேசுகிறார்கள்" என்று கூறுவதுதான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் புலிகளின் 'பேரம்' பற்றிய ஆருடம் கூறுவதைப்பார்க்கும்போது, இவ்வாறு கூறுவது பு.ஜ வுக்கு ஒரு வழக்கமாகி விட்டது என்று சொல்வதைவிட, அது ஒரு வழியாகவே ஆகிவிட்டது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என கருத வேண்டியுள்ளது. இவ்வாறு சொல்வதற்கு சான்றுகள் பல தர முடியும். ஆயினும், இடப் பற்றாக்குறையை கருதி ஒரு சான்று தருகிறோம். இப்போது இந்திய அரசாங்கம் புலிகள் மீது விதித்துள்ள தடைக்கான காரணத்தை பு.ஜ. கூறுவதை பாருங்கள்.

"புலிகளுடன் பிரேமதாச கும்பல் அவ்வப்போது நடத்தும் பேரம் - சமரச முயற்சிக்கு, பாதகமாக இத்தடை விதிப்பு அமைந்தது. அதனால் இலங்கை அரசு இதை மதிக்காமல் போகலாம். தானே புலிகளுடன் பேரம்-சமரசம் பேசும் வாய்ப்பு வரலாம் என்பது போன்ற காரணங்களால் இந்திய அரசு இதுவரை தடை விதிக்காமல் இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் தனது தெற்கு ஆசியப் பிராந்திய ஆதிக்கத்துக்கு புலிகள் அமைப்பை இனி மேலும் நம்பமுடியாது என்கிற முடிவுக்கு இப்போது இந்திய அரசு வந்து விட்டது. ஆகவே புலிகளுடன் இனி எவ்வித பேரமும் நடத்துவதைத் தடுக்கவும், ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கவும் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளது" (புதிய ஜனநாயகம் 1-15 ஜூன் 1992)

பு.ஜ. சொல்வதைப் பாருங்கள், 'பேரம், பேரம்' இதுதான். ஆனால் பு.ஜ.வின் கண்களுக்கு இந்திய அரசு புலிகள் மீது தடை விதிப்பதற்கான நோக்கங்களில் முக்கியமான ஒன்று, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதும், தமிழீழ தேசிய விடுதலை இயக்கத்தை நசுக்குவதும், இதனால் இலங்கையின் மீது இந்திய அரசு தனது மேலாதிக்கத்தை திணிக்க முயல்வதுமாகும் என்பது மட்டும் ஏன் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, இவ்வாறு பு.ஜ. ஆரூடம் கூறிய சில நாட்களில் இலங்கை அரசு இதற்கு முன் எப்போதுமில்லாத அளவிற்கு ஒரு பெரும் இராணுவத் தாக்குதலை விடுதலைப்புலிகள் மீது தொடுத்துவிட்டது. வழக்கம் போல் இப்போது பு.ஜ. கூறிய ஆருடம் பொய்த்துவிட்டது.

முதலாளித்துவ வாதிகள் தேசிய நலன்களுக்கு விரோதமாக பேரமே பேச மாட்டார்கள் என்பதல்ல நமது வாதம். அதை அம்பலப்படுத்த வேண்டியது பாட்டாளிவர்க்க இயக்கத்தின் முக்கியமான பணி என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். பு.ஜ.வின் மீது நமது விமர்சனம், இலங்கையில் இன்றுள்ள வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகக் கோரிக்கை, தமிழீழ இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டது என்பதைப் பார்க்க தவறுவதன் காரணமாக, புலிகளை எப்படியாவது அம்பலப்படுத்திவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், புலிகள் பேரம் பேசுகிறார்கள் என்று சொல்வதை ஒரு வழியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டது; ஒரு அக விருப்பங்களிலிருந்து மதிப்பீடு செய்யும் முறையை (Subjective method) கையாள்கிறது என்பதே ஆகும். இதை புரிந்து கொண்டால், இலங்கை அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு, ஈழத்தமிழ் மாகாணத்திற்கு மாகாண சுயாட்சியுடன் கூடிய அதிகாரத்தை தங்களுக்குத் தரவேண்டும் என பேரம் பேசினார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பு.ஜ.வின் அடுத்த குற்றச்சாட்டைப் பார்ப்போம். ஜெ.வி.பி.யை அடக்குவதில் இலங்கை அரசு - இராணுவம் பெற்றுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுடனான பேரத்தில் அதற்கு பலமளிப்பதாக உள்ளது என பு.ஜ.கூறுகிறது. இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதால், ஜெ.வி.பி.யை அடக்குவதற்காக இலங்கை அரசுக்கு பலம் சேர்ந்ததாகி விட்டது என்று பு.ஜ. கூறுவதன் பொருள் - இதை இன்னும் வெளிப்படையாகவும், கொச்சையாகவும் கூறுவதென்றால் ஜெ.வி.பி.யை அடக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு புலிகள் இயக்கம் துணைபோனது அல்லது ஜெ.வி.பி.யை அது காட்டிக் கொடுத்து விட்டது என்பது பு.ஜ. கூறவதின் பொருளாகும். ஜெ.வி.பி. அடக்கப்பட்டு விட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு ஜெ.வி.பி. ஒரு சிங்களப் பேரினவாத அமைப்பு. அது என்றுமே தமிழீழ மக்களுடன் சேர்ந்தது இல்லை. 1971-ல் அது ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை நடத்தியபோதும், தமிழர்களை நம்பக் கூடாது என்று சொல்லி, சிங்கள மக்களைத்தான் திரட்டியது. அதற்குப் பிறகும் அதன் கொள்கைகளை மாற்றிக் கொண்டதில்லை.

இந்திய "அமைதிப்படை" தமிழீழ மக்களை ஒடுக்கியபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்ததா? இல்லை. இந்திய - இலங்கை துரோக ஒப்பந்தத்தில் ஈழத் தமிழருக்கு அளிக்கப்பட்ட கேடுகெட்ட சலுகைகளைக் கூட அது எதிர்த்தது. இத்தகைய சிங்கள பேரினவாதக் கொள்கைகள் அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இரண்டாவது, இராணுவத் துறையில் செகுவாரா வாதத்தைக் கடைப்பிடித்தது. மக்கள் பாதையை அது ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே அதன் தோல்விகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழி சுமத்துவதில் பயனில்லை.

இந்தியாவின் மேலாதிக்கத்தையும், இந்திய "அமைதிப்படை" யின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் இரண்டு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டுப் போராட முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? இந்தியப் படை இலங்கையை விட்டு (என்று சொல்வதைவிட ஈழத்தைவிட்டு என்று சொல்லலாம்) வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் ஒரு போர் ஓய்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலை ஏன் ஏற்பட்டது?

சிங்கள பேரினவாத இலங்கை அரசு பல ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுத்து வருகின்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஜெ.வி.பி. அமைப்போ அல்லது வேறு எந்த முதலாளித்துவ அரசியல் கட்சிகளோ போராடியது உண்டா? அல்லது வேறு எந்த சிங்கள உழைக்கும் இயக்கமாவது நடத்தப்பட்டதுண்டா? இல்லையே. ஜெ.வி.பி இலங்கையில் இந்திய 'அமைதிப் படை'யின் தலையீட்டை எதிர்த்தது. ஆனால் இந்திய 'அமைதிப் படை' ஈழத் தமிழ் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஜெ.வி.பி எதிர்த்ததுண்டா? இல்லையே. இந்திய "அமைதிப்படை" ஈழத் தமிழ்மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பை மற்ற எந்த சிங்களக் கட்சியும் எதிர்க்கவில்லை. லட்சோப லட்சம் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள கடல் கடந்து உலக நாடுகளிலெல்லாம் தஞ்சம் புகுகிறார்கள்! நீங்கள் ஏன் அந்நிய நாடுகளுக்குச் சென்று அவதியுற வேண்டும்? சிங்களமும் உங்களுக்குச் சொந்தமானது தான். இங்கே வாருங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று எந்த ஒரு சிங்கள அமைப்பாவது சொன்னதுண்டா? ஒடுக்கப்படும் தமிழீழ தேசிய இனத்தின் மீது ஒடுக்கும் சிங்கள தேசிய இனமும், அத்தேசிய இன ஒடுக்கு முறையாளர்களின் அரசும் அடக்குமுறை தொடுப்பதை எதிர்த்து ஒடுக்கும் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவதோ அல்லது அவர்களை ஓர் அணிக்குள் கொண்டு வருவதோ சாத்தியமானது அல்ல.

எனவே, இந்திய மேலாதிக்கத்தையும் – இந்திய "அமைதிப்படை" யின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து இரு தேசிய இன மக்கள் சேர்ந்து போராட முடியாதத்திற்கு காரணம், சிங்களப் பெரும் தேசிய இன மக்கள் ஈழத் தமிழ் மக்களின் மீது இந்திய ஆக்கிரமிப்பு படைதொடுத்த யுத்தத்தை எதிர்காததுதான். எனவே, பு.ஜ. விடுதலைப்புலிகள் இயக்கத்தைப்  பற்றி  செய்யும்  விமர்சனம்  சிங்களப்  பேரினவாதத்துக்கு சேவை செய்வதாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது சரியானதுதான். அவ்வாறு செய்யாதிருந்தால் தமிழீழத்தின் விடுதலை இயக்கம் நசுக்கப்பட்டிருக்கும். இந்திய அரசு இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி இருக்கக் கூடும். ஆகையால் விடுதலைப்புலிகள் அமைப்பு, இந்த கட்டத்தில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டைச் சரியாகத்தான் கையாண்டுள்ளது. இந்த கட்டத்தில் அது இலங்கை அரசுடன் போர் ஓய்வு ஒப்பந்தம் செய்து கொண்டது ஒரு சரியான செயல்தந்திரமாகும்.

நாம் இவ்வாறு சொல்வதற்காக பு.ஜ. நம்மீது புழுதிவாரி தூற்றுகிறது. உண்மையில் பு.ஜ.வின் நிலைபாடுதான் வறட்டுத்தனமானது, சந்தர்ப்பவாதமானது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதுதான் பிரதானப்பணி என்று வரையறை செய்வதும் அதே சமயம், இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்காக விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாடு செய்து கொண்டதற்காக விமர்சிப்பதும் குதர்க்கவாதமே ஆகும்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஒரு யுத்தம் துவங்கியது. இந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழ் பாட்டாளிவர்க்க இயக்கம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் செயல்தந்திரம் குறித்து பு.ஜ.வின் நிலைபாட்டிற்கும் நமக்கும் இடையில் உள்ள முரண்பாடு பற்றிய பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் போரின் இக்கட்டத்தில் பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் தந்திரம் பற்றி பு.ஜ பின்வருமாறு கூறுகிறது:

"தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்க வெறியை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்குச் சற்றுக் குறைவில்லாமல் புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும், பாசிச அராஜக வழிமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். தமிழீழ ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் தோள் கொடுக்க வேண்டும். இந்த வளர்ச்சியில்தான், இந்தப் பாதையில்தான் தமிழீழ மக்கள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் முடிவுகட்ட முடியும்" என்பது பு.ஜ வின் அரசியல் செயல்தந்திரம்.

நாம் பு.ஜ.வின் இந்த அரசியல் செயல்தந்திரம் தவறானது எனக் கருதுகிறோம். இதற்கு மாறாக, ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில் ஈழத்தமிழ் பாட்டாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் செயல்தந்திரம் பின்வருமாறு இருக்கவேண்டும் என்பது நமது நிலைபாடு.

ஈழத்தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளிவர்க்க இயக்கத்தினரும், ஜனநாயக சக்திகளும் பிரேமதாச அரசின் பாசிச இன ஒடுக்கு முறையை எதிர்த்து, இந்த நீதியான போரில் ஊக்கமாகப் பங்கு கொள்வதுடன் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பது அவர்கள் கடமையாகும்.

அதே   நேரத்தில்,   சமரசப்   போக்குகளைத் தோற்கடிப்பதற்காகவும், ஈழ தேசிய இனத்தின் அரசியல் முன்னேற்றத்திற்காகவும் புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்தல், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபடுதல், தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவருக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை வேண்டும் என போராடுதல், மக்கள் கமிட்டிகளுக்கு அதிகாரம் என்ற கோட்பாட்டிற்கு ஆதரவாகத் திரட்டுதல், இலங்கை அரசின் பாசிச ஒடுக்குமுறையால் அவதியுறும் மலையகத் தமிழர்கள், சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஆகியோரின் சிங்கள இனவெறி அரசை எதிர்த்த போராட்டத்தை ஆதரித்தல்; ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள பாசிச அரசை எதிர்த்த மக்களின் போராட்டத்தையும் ஒன்றுபடுத்துதல்; தமிழீழ விடுதலைப் போராளிச் சக்திகளின் ஒற்றுமையையும் ஆதரவையும் ஈழத்தமிழ் நாட்டின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பெறுதல் என்ற கொள்கைக்குப் போரிடுதல் போன்றவையே அவர்களின் கடமையாக இருக்கிறது.

ஒரு குறிப்பான திட்டத்தை முன் வைத்து, விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஒரு ஐக்கிய முன்னணியை நிறுவுவதற்கான போராட்டத்தை நடத்துவது புரட்சியாளர்களினதும் ஜனநாயகவாதிகளினதும் கடமையாக உள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஊன்றி நிற்கும்வரை "பிரேமதாச அரசு தொடுத்துள்ள தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு யுத்தத்தை ஆதரிப்போம். தேசிய இன போராட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஒன்றுபடுவோம்;  ஜனநாயகத்திற்காக  அதனுடன் போராடுவோம்" என்பதே அனைத்து ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டச் சக்திகளின் முழக்கமாக அமைய வேண்டும்.

நாம், ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் ஈழத்தமிழ் தேசிய இனம் பிரிந்து சென்று தனிநாடு அமைத்துக்கொள்வதை ஆதரிக்கிறோம்.

பு.ஜ. தமிழ் ஈழம் பிரிந்து போகும் உரிமையை மட்டுமே ஆதரிக்கிறது. தனிநாடு அமைத்துக் கொள்வதை ஆதரிக்கவில்லை. சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது, தனிநாடு அமைத்துக்கொள்வதை ஆதரிப்பது என்ற இரண்டு வேறுபட்ட முழக்கங்களின் அடிப்படையில் இரண்டு வேறுபட்ட யுத்தத்தந்திரங்கள் அமைகின்றன. இரு அமைப்புகளும் தத்தம் யுத்ததந்திரம் வெற்றி பெறச்செய்யும் பொருட்டு தத்தம் செயல்தந்திரங்களை வகுத்து வந்திருக்கின்றன.

1983 இல் இருந்து 1990 ஜூனில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் யுத்தம் துவங்கும் வரையில் பு.ஜ.வும் நாமும் எவ்வாறு செயல்தந்திரங்கள் வகுத்து வந்திருக்கிறோம் என்பதைப் பார்ப்போம்.

ஈழத் தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் 1984-ல் ஒரு தேசிய விடுதலை யுத்தம் என்ற வடிவத்தை எடுத்துக் கொண்டது. அதிலிருந்து அது பல்வேறு இடைக் கட்டங்களைக் கடந்து, 1990 ஜூனில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஓர் உள்நாட்டு யுத்தம் என்ற வடிவத்தை எடுத்துக் கொண்டது. விடுதலைப் போராட்டத்தின் 1990 ஜூனில் துவங்கிய உள்நாட்டு யுத்தம் என்ற கட்டம் இதற்கு முன்கட்டமான இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்ப்பதிலிருந்து மாறுபட்டது. 1990 ஜூனிலிருந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் 1983-ல் இருந்து 1987-ல் இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் தலையிடும் வரையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திலிருந்து வேறுபட்டது. இந்த விடுதலைப் போரில் ஒவ்வொரு காலகட்டமும் அதன் அரசியல் சக்திகளின் அணி சேர்க்கையில் உள்ள வேறுபாட்டின் காரணமாகவும், அதன் இராணுவ நடவடிக்கைகளில் உள்ள வேறுபாட்டின் காரணமாகவும் வேறுபட்டன. எனவே இப்போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல் குறிக்கோளும் முழக்கங்களும் வேறுபட்டவையாக இருந்தன. இதன் காரணமாக பு.ஜ.வும் நாமும் இந்த இடைக் கட்டங்களில் அவரவர் அரசியல் குறிக்கோள் - யுத்த தந்திரங்களுக்கு ஏற்ப அரசியல் செயல் தந்திரங்களை முன் வைத்திருக்கிறோம்.

ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை தனது ஒரு அங்கமாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் ஜனநாயக புரட்சி என்ற திட்டத்தை ஆதரிப்பதாக பு.ஜ சொல்கிறது. ஆனால் அது அகில இலங்கை பாட்டாளிவர்க்க இயக்கத்தின் செயல்தந்திரங்களின் அடிப்படையில் ஈழத் தமிழ் தேசிய இன சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு செயல்தந்திரங்கள் வகுத்தது இல்லை. ஒடுக்கும் சிங்கள இனத்திலிருந்து ஒடுக்கப்படும் தமிழீழ தேசிய இனம் பிரிந்துபோவது பொதுப் பிரச்சினைக்கு முரணானது - அரசியல் சுதந்திரம் அரசியல் ஜனநாயகம் என்பதற்கு ஈழத் தமிழினத்தின் பிரிவினை சேவை செய்யாது - என்பதே பு.ஜ வின் முடிவானால், அது ஈழத் தமிழினத்தின் பிரிவினையை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஆனால் பு.ஜ அவ்வாறு செய்யவில்லை. ஈழத்தமிழ் இனம் பிரிந்து போவதை ஆதரிக்கிறதா அல்லது இல்லையா என்று வெளிப்படையாக அறிவிக்காமலே, ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகச் சொல்லி, பு.ஜ. தனது செயல் தந்திரங்களை முன் வைக்கிறது.

இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம் ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்டது என்பது நமது நிலைபாடாகும். ஆகையால் தமிழீழம் தனிநாடு அமைத்துக் கொள்வதை ஆதரித்து ஒவ்வொரு இடைக் கட்டத்திற்கும் அரசியல் செயல்தந்திரங்களை முன் வைக்கிறோம்.

சிங்கள இராணுவத்திற்கு எதிரான போர்; இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிரான போர்; இந்திய கைக்கூலியான துரோகிகளான தமிழ் தேசிய இராணுவத்துக்கு எதிரான போர்; 1990 ஜூனில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் ஆகிய இடைக் கட்டங்களில், செயல்தந்திரங்களை பு.ஜ.முன் வைத்திருக்கிறது. 1983 லிருந்து 1987 வரை சிங்கள இராணுவத்திற்கு எதிரான போர்க் காலப் பகுதியில் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்தது. ஈழத் தமிழ் தேசிய இனம் பிரிந்து போவதை எதிர்த்துப் போராடவில்லை. ஈழத் தமிழ் போராளிக் குழுக்கள் பிரிவினைக்காகப் போராடுகின்றன. ஆனால் அப்போராளிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லி போராடவும் இல்லை, பிரச்சாரமும் செய்யவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப்., பிளாட், டெலோ, ஆகிய அமைப்புகள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி கும்பலிடம் பேரம் பேசுகின்றனர், ஆயுத உதவியும் பயிற்சியும் பெறுகின்றனர் என்று சொல்லி வந்ததே தவிர அவர்கள் தனி நாட்டுக்காக பிரிவினைக்காக போராடுகிறார்கள் என்று அவற்றை விமர்சனம் செய்ததில்லை. அதேபோல் விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆரிடம் பெரும் தொகையாக பணத்தைப் பெற்றுக்கொண்டனர்; ராஜீவ் காந்தியிடம் பேரம் பேசுகின்றார்கள்; பாசிஸ்டுகள் என்றுதான் பிரச்சாரம் செய்து வந்தது. விடுதலைப்புலிகள் பிரிவினைவாதிகள் ஆகவே அவர்களை எதிர்க்கிறோம் என்று சொன்னதில்லை. ஈழத்தமிழ் குழுக்கள் பிரிவினைவாதக் குழுக்கள். ஆகவே இக்குழுக்களை ஆதரிக்கக் கூடாது என்று தமிழக மக்களுக்குச் சொன்னதில்லை. அவர்களுக்கு இந்நாட்டில் தஞ்சம் புகுவதற்கு உரிமையுண்டு என்ற அரசியல் ஜனநாயக உரிமையை ஆதரிப்பதென்றால், அவர்களுக்கு அந்த அடிப்படையில் ஆதரவு தர வேண்டும். அவர்களின் பிரிவினை வாதத்துக்கு ஆதரவு தரக்கூடாது என்று தமிழக மக்களுக்கு பு.ஜ. சொல்லியிருக்க வேண்டும். தமிழீழம் பிரிந்து தனி நாடு அமைத்து கொள்வதை ஆதரிக்கிறதா? இல்லையா? என்று சொல்லாமலே, ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம் என்று சொல்லி, ஈழத் தமிழ்நாடு பிரிவினையை - ஈழத் தமிழர் தனிநாடு அமைத்துக் கொள்வதை தாமும் ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை பு.ஜ. உருவாக்கி வந்தது. இத்தகைய ஒரு சந்தர்ப்பவாத செயல்தந்திரத்தை இக்காலத்தில் பு.ஜ. செயல்படுத்தி வந்தது.

1983 ஜூன் கலவரத்திற்குப் பிறகு, நாம் தமிழ் ஈழ தனிநாடு என்ற முழக்கத்தை ஆதரித்தோம். இந்திய அரசு தனது மேலாதிக்க நோக்கத்தை அடையும் பொருட்டு திம்புவில் இலங்கை அரசுக்கும் ஈழப் போராளி குழுக்களுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இலங்கை அரசிலிருந்து - ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனம் பிரிந்து செல்லாமலும், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இராணுவ வழியில் அல்லாமல் அரசியல் வழியில் தீர்வுகாண வேண்டும் என்று இந்திய அரசாங்கம் திம்பு பேச்சுவார்த்தையின்போது கூறிற்று. மேலும் ஈழத் தமிழரின் இனச்சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு சுயநிர்ணய உரிமைக்கு மாற்றாக, இந்தியாவில் மாநிலங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்தைப் போன்ற சுயாட்சியும், அதிகாரத்தை கீழ் மட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் முறையும் ஈழத்தமிழர்களுக்குத் தரவேண்டும் என்ற ஓர் தீர்வை இந்திய அரசு முன் வைத்தது. திம்பு பேச்சுவார்த்தையின் போது "ஈழத் தமிழர்கள் தனிநாடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களும் அவசியமும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன" என்று நாம் எடுத்துக் காட்டினோம். அதே நேரத்தில் ஈழத்தமிழர் விடுதலை இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்தந்திரத்தை பின்வருமாறு எடுத்துக் காட்டினோம்.

"இலங்கைவாழ் இரு தேசிய இனங்களும் ஒரே அரசுக்குள் இணைந்து வாழ வேண்டும் என்றால், ஈழத் தமிழினத்துக்கு பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்குவதைத் தவிர வழியில்லை." அத்துடன் இப்பேச்சுவார்த்தையின் போது, போராளி அமைப்புகள் பின்வரும் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினோம். "ஈழத் தமிழரின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் இவ்வரசிற்குள் வாழ்வது சகிக்க முடியாதது எனக்கருதி பிரிந்து போக விரும்பினால் அவர்களிடையில் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்" இது, இந்திய ஆளும் வர்க்கத்தினர் முன் வைத்த தீர்வை அம்பலப்படுத்துவதற்காக நாம் முன்வைத்த தீர்வாகும். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த பிறகு, தனிநாடு முழக்கம் இக்கால கட்டம் முழுவதும் நமது முழக்கமாக இருந்தது.

இந்தக் கட்டத்தில் பு.ஜ.வின் முழக்கம் ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்பதாக இருந்தது. நமது முழக்கம் ஈழத் தமிழ்நாடு - தனிநாடு என்பதை ஆதரிக்கும் முழக்கமாக இருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் தலையிட்டபோது, பு.ஜ முன்வைத்த அரசியல் செயல்தந்திரம் பின்வருமாறு இருந்தது. இந்திய ஆக்கிரமிப்புப்படை இலங்கையில் தலையிட்ட  பிறகு  இலங்கை  இந்தியாவின்  நவீன காலனியாகிவிட்டது என்றும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது என்றும் பு.ஜ வரையறை செய்தது. "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக் கொண்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லோருடன் இணைந்து போரிடுவது" என்கிற முழக்கம் பு.ஜ.வின் செயல்தந்திர முழக்கமாக இருந்தது.

இந்தக் கட்டத்தில் நாம் முன் வைத்த செயல்தந்திரம், இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதும், ஈழத் தமிழ் தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை, இக்கட்டத்தில் மேலாதிக்கத்தை எதிர்ப்போர் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக, ஈழத் தமிழரின் கோரிக்கை தடையாக இல்லாமல் இருக்கும் பொருட்டு ஈழத்தமிழ் தனிநாடு கோரிக்கைக்கு மாறாக சுயநிர்ணய கோரிக்கை என மாற்றி வைத்துக் கொள்வது நமது நிலையாக இருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்தப் போராட்டத்தில் இரு அமைப்புகளின் செயல் தந்திரங்களில் ஒற்றுமை இருந்த போதிலும், இவ்விரண்டு செயல்தந்திரங்களும் இரண்டு வேறுபட்ட யுத்ததந்திரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை ஆகும். தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பது, சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது என்ற இரண்டு வேறுபட்ட யுத்த தந்திர நோக்கங்களின் காரணமாக 1990 ஜூன் மாதம் சிங்களப் பேரினவாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் பொருட்டு, விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மீது மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தத்தைத் துவங்கியதும், அந்த யுத்தத்தின் தன்மையைப் பற்றி வரையறை செய்வதிலும், அரசியல் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், அந்த யுத்தத்தில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பிரதானப் பணியைத் தீர்மானிப்பதிலும் பு.ஜ.வுக்கும் நமக்கும் கருத்து வித்தியாசங்கள் தோன்றிவிடுகின்றன. அதிலிருந்து இரண்டு முரண்பட்ட செயல் தந்திரங்களை பு.ஜ.வும், நாமும் வகுத்துக்கொள்கிறோம். ஆனால் பு.ஜ. எந்த யுத்ததந்திரத்தை வெற்றிபெறச் செய்வதற்காக இந்த கட்டத்தின் செயல்தந்திரம் வகுக்கப்பட்டிருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதைத் தெளிவாக எடுத்துக் காட்டவே முன் இரண்டு கட்டங்களில் இரண்டு அமைப்புகளும் எவ்வாறு செயல்தந்திரங்களை வகுத்துக் கொண்டன என்பதை எடுத்துக் காட்டினோம். இலங்கையரசுடன் விடுதலைப்புலிகள் செய்து கொண்ட போர் ஓய்வு ஒப்பந்தம் குறித்து பு.ஜ. செய்த விமர்சனம் பற்றிய விவாதத்தை நினைவில் கொண்டால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

"ஈழப்போர் இப்போது மூன்றாவது கட்டத்தை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். சிங்கள ராணுவத்திற்கு எதிரான போர், இந்திய ராணுவ ஆக்கிரமிப்புப் போர் ஆகிய முதலிரு கட்டங்கள் என்றும், இந்திய கைக் கூலியான, துரோகிகள் தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான போர்" என்று பு.ஜ. குறிப்பிடுகிறது. (பு.ஜ 16 - 31 ஜனவரி 90) ஆனால் 1990 ஜூனில் துவங்கிய போர் யாருக்கு எதிரான போர் என்றும், ஈழப்போர் இப்போது நான்காவது கட்டத்தை அடைந்திருக்கிறதா என்றும் இந்தப் போரைப் பற்றி குறிப்பிடவில்லை. வேறு விதமாகச் சொன்னால், ஈழ மக்களின் விடுதலைப் போரின் நான்காவது கட்டம் என்று கருதுகிறதா? இல்லையா? எனத் தெரியவில்லை, முன் மூன்று கட்டங்களிலும் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்று சொல்லி வந்தது. "ஈழம் மீண்டும் போர்" ஈழ தமிழருக்கு தீர்வு எப்போது? (பு.ஜ 1-15 ஜூலை 90) என்ற தலைப்பிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறது:

"தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதிலும், தோள் கொடுப்பதிலும் நாம் எவருக்கும் சளைத்தவர் அல்ல. தமிழீழத்தின் விடுதலையை சாதிக்கப் போவதாக ஆயுதம் தாங்கிய அமைப்புகள் துரோகிகளாகவும் ஆதிக்கத்தின் சின்னங்களாகவும் மாறுவதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கம் என்பதை எச்சரிப்பது போராடும் தமிழீழ மக்களுக்கு நாம் செய்யும் கடமையாகும். தமிழீழ மக்கள் தொடர்ந்து ரத்தம் சிந்துவதும், உயிர்த்தியாகம் செய்வதும் இன ஒடுக்கு முறையிலிருந்து மீள்வதற்குத்தானே அன்றி மீண்டும் ஆதிக்கத்தளையில் வீழ்வதற்கல்ல."

இதிலிருந்து பார்க்கும் போது, ஈழப்போரின் முதல் மூன்றுகட்டங்களோடு சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் என்ற முழக்கத்தை முடித்துக் கொண்டு விட்டது என்பதும் இந்தக் கட்டத்தில் சுயநிர்ணய உரிமையை முன் வைக்கவில்லை என்பதும் மேலே எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோளிலிருந்து தெரிகிறது. இந்தக் கட்டத்தில் அந்த முழக்கத்தை முன் வைக்காததற்கு அது கூறும் காரணம் என்ன? துரோகிகளும் அதிகாரத்தின் சின்னங்களும் ஒன்றுதான், அதாவது இந்திய மேலாதிக்கவாதிகளின் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்குக் கைக்கூலிகளாகி விட்ட தமிழ் தேசிய இராணுவத்தினரும், இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி வெளியேற்றிவிட்டு இன்று தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்காக யுத்தம் தொடுத்துள்ள, சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடும் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஒன்றுதான். ஆகையால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக யுத்தம் தொடுத்துள்ள சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடாதீர்! ரத்தம் சிந்தாதீர்! இவ்வாறு பு.ஜ. சிங்கள அரசு தொடுத்திருக்கின்ற யுத்தத்தைப் பற்றிய தனது அணுகுமுறையை தீர்மானித்திருக்கிறது. யுத்தத்தைக் குறித்த அணுகுமுறையிலிருந்து, தமிழீழ மக்கள் சிங்கள அரசின் ஆதிக்க வெறியை எதிர்த்துப் போராடுவதன் கூடவே, அதற்கு சற்றும் குறைவில்லாமல் புலிகளின் சந்தர்ப்பவாதத்தையும், அராஜக வழிமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறது. இதன் மூலம் புலிகளையும், சிங்கள இனவெறி அரசையும் சமப்படுத்துகிறது. இப்போது சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடுவதுடன் கூடவே, அதற்கு சற்றும் குறைவில்லாமல் புலிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறுகிற பு.ஜ. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியபோது அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று சொன்னது ஏன்? இலங்கை இந்தியாவின் நவகாலனியாக ஆகிவிட்டதென்றும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது பிரதானப் பணி என்றும் கூறி, இக்காரணத்தால், இந்திய ராணுவத்திற்கு எதிராக, பாசிஸ்ட் விடுதலைப்புலிகள், பாசிஸ்ட் ஜெ.வி.பி முடியுமானால் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்க கூடிய இலங்கை ஆளும் வர்க்கங்களின் ஒருபகுதியினர் உள்ளிட்டு, இன்னும் பலருடன் ஒரு பரந்த அணியை உருவாக்கும் பொருட்டு, "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக் கொண்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லோருடன் இணைந்து போராடுவது" என்ற முழக்கத்தை முன் வைக்கவேண்டும் எனப் பு.ஜ.கூறிற்று.

இந்திய  'அமைதிப்படை'  இலங்கைக்குச் செல்லும் வரையில் அதாவது இந்திய ஆக்கிரமிப்பு வரையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி பு.ஜ என்ன சொல்லி வந்தது? விட்டெறிந்த காசுக்கு விலை போனவர்கள் என்றும், பாசிஸ்டுகள் என்றும், இனவெறியர்கள் என்றும், இன்னும் பலவற்றையும்தானே பு.ஜ. சொல்லி வந்தது? அப்படியிருக்கும் போது, பாசிஸ்ட் புலிகளுடன் இணைந்து போராட வேண்டும் என்று கூறியதற்குக் காரணம் என்ன? இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவது பிரதானப் பணி என அது கருதியதுதான் காரணமாகும். சிங்கள இனவெறி அரசு தமிழீழ தேசிய இனத்தின் மீது ஒரு உள்நாட்டு யுத்தத்தை தொடுத்து விட்டபோது, சிங்கள இனவெறி அரசையும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் சமப்படுத்துவதற்கும், ஒரு தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை நடத்தும் சிங்கள இனவெறி அரசை எதிர்த்தும் போராடுவதுடன் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலிகளை, எதிர்த்துப் போராட வேண்டும் என்று பு.ஜ. சொல்வதற்குக் காரணம், தேசிய இன ஒடுக்கு முறையை எதிர்ப்பதும், தமிழீழத்தின் அரசியல் சுதந்திரம் - அதாவது தனித் தமிழீழம் அமைத்துக் கொள்வதும் பிரதான பணி என பு.ஜ கருதவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

எனவே சிங்கள ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் ஈழத்தமிழினம் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழீழம் பிரிந்து போவதை ஆதரிக்க கூடாது. அதை ஆதரிப்பது இனவாதம். ஆகையால் பாசிச பேரினவாத இலங்கை அரசை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் 'ஜனநாயகத்தை முன் நிபந்தனையாக கொண்டு' இணைந்து போராடக் கூடாது என்பது பு.ஜ.வின் தர்க்கம். இதனால்தான் இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்திற்கு எதிராக விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையுடன் இணைந்து போராடக்கூடாது என்றும் இலங்கை அரசையும் புலிகளையும் சமப்படுத்த வேண்டும் என்றும், பு.ஜ. செயல்தந்திரம் வகுத்துக் கொள்வதற்கு உண்மையான காரணம், தமிழீழம் பிரிவதை ஆதரிக்கக் கூடாது என்கிற அவர்களின் நிலைபாடே தவிர அவர்கள் சொல்வதுபோல் புலிகள் பாசிஸ்டுகள் என்று கருதுவதால் அல்ல.

ஒரு இனம் என்ற முறையில் ஈழத் தமிழினத்தைச் சிதைத்துவிட வேண்டும் என்பது இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. 1983 ஆம் ஆண்டிலேயே இலங்கை அரசு தமிழீழ விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்காக அந்த இனத்தின்மீது யுத்தத்தைத் தொடுத்துவிட்டது. இலங்கையின் இன்றைய வரலாற்று நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினைக்கான போராட்டம் - தனி தமிழீழம் அமைத்துக் கொள்வதற்கான போராட்டம் ஒரு நீண்ட யுத்தம் என்கிற வடிவத்தை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு  ஒடுக்கும்  சிங்கள  இன  அரசுக்கும்  ஈழத் தமிழிழனத்திற்கும் யுத்தம் துவங்கிவிட்ட பிறகும்கூட பு.ஜ குழு ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை - பிரிந்து போகும் உரிமையைத்தான் அங்கீகரிக்கிறது, பிரிவினையை - தனிநாடு அமைத்துக் கொள்வதை ஆதரிக்கவில்லை. அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை பிரிவினை வடிவத்தை - தமிழீழம் தனிநாடு அமைப்பது என்ற வடிவத்தை எடுத்துக்கொண்ட பிறகும்கூட பிரிவினயை ஆதரிக்க மறுப்பது-தமிழீழம் தனிநாடு அமைத்துக்கொள்வதை ஆதரிக்க மறுப்பது தமிழீழத்தின் அரசியல் சுதந்திரம் என்ற கோரிக்கையை கைவிடுவதாக ஆகி விடுகிறது. அரசியல் சுதந்திரத்தை கைவிட்டு, பிற ஜனநாயக கோரிக்கைகளுக்கு மட்டுமே போராடுவதை தனது நோக்கமாகக் கொள்வதாக ஆகிவிடுகிறது. இவ்வாறு அரசியல் சுதந்திரம் என்ற குறிக்கோளை இழந்து விடுவதன் விளைவாக சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதுடன் அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று கூறுகிறது. ஒடுக்குவோரையும், ஒடுக்கப்படுவோரையும் சமப்படுத்தும் அளவிற்கு தாழ்ந்து விடுகிறது. எங்கே மக்கள் விடுதலை உணர்வு பெற்று ஒடுக்கப்படுவோனை எதிர்த்துப் போராடாமல் இருந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 'அதற்கு சற்றும் குறைவில்லாமல்' என்று சொல்லி அதற்கு அழுத்தம் தருகிறது.

இந்த யுத்தத்தில் போரிடும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் சமப்படுத்தும் முடிவுக்கு பு.ஜ. எப்படி வந்து சேர்ந்தது?

1. தேசிய  இனப்  பிரச்சினை  என்பது  தேசிய முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்ற வறட்டுத்தனமான கோட்பாட்டை அது கடைபிடிப்பதாலும்;

2. ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போகும் பிரச்சினை எழும்போது பாட்டாளிவர்க்க இயக்கம் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பவாத கோட்பாட்டை அது வகுத்துக் கொண்டதாலும்;

3. இலங்கையில் தற்போதுள்ள நிலைமைகளில் அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற கோரிக்கை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிவினை வடிவத்தை எடுத்துக் கொண்ட பிறகுகூட, சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது என்ற அளவிற்கு தனது குறிக்கோளை குறுக்கிக் கொண்டு விட்டதாலும்,

4. சிங்கள பேரினவாத அரசின் கொள்கைகளால் சிங்கள இனத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் இடையில் பூசல்களும், மோதல்களும் இருந்து வந்ததின் தொடர்ச்சிதான், இப்போது இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடைபெறுகின்ற யுத்தம் என்பதைப் பார்க்க மறுப்பதாலும்;

5. அரசியல்  சுதந்திரத்திற்கு  எதிராக  ஜனநாயக கோரிக்கைகளை எதிர்நிலைப்படுத்தும் அதன் குதர்க்க வாதத்தினாலும்;

6. விடுதலை இயக்கத்தைவிட சிங்கள பேரினவாத அரசு ஒரு படுகேவலமான பாசிஸ்ட் அரசு என்பதை பு.ஜ. சௌகர்யமாக மறந்து விடுவதாலும், அது இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சமப்படுத்துகிறது.

எனவே இரண்டு வெவ்வேறு யுத்ததந்திரங்களும், அவற்றின் அடிப்படையில் வகுக்கப்படும் வெவ்வேறு செயல்தந்திரங்களும்தான், நமக்கும் பு.ஜ.வுக்கும் இடையில் உள்ள உண்மையான முரண்பாடாகும். தமிழீழம் தனிநாடு அமைப்பதை நாம் அரசியல் யுத்ததந்திரம் செயல்தந்திரங்கள் வகுப்பதற்கு அடிப்படையாகக் கொள்கிறோம். பு.ஜ. தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே ஆதரிப்பதையும் - பிரிந்து போகும் உரிமையை மட்டும் ஆதரிப்பதையும் - தமிழீழம் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொள்வதை எதிர்ப்பதையும் தனது அரசியல் யுத்ததந்திரம் மற்றும் செயல்தந்திரங்களை வகுப்பதற்கு அடிப்படையாகக் கொள்கிறது. இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு நாம் புலிகளின் பாசிசத்திற்கு துணை போகிறோம் என்றும், பிற புரட்சிகர குழுக்கள் புலிகளை விமர்சனமே செய்யக்கூடாது என்கிறார்கள் என்றும் பு.ஜ. கூறுவது உண்மை அல்ல. உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக்காட்டுகிறோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு யுத்தத்தில் ஊன்றி நிற்பதில் அதன் பலமும், பலவீனமும் பற்றி நாம் என்ன சொன்னோம்.

"ஈழத் தமிழினம், தேசிய இன விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதிலுள்ள பிரச்சினை, விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே யுத்தத்தை தனியாக நடத்துகின்றது. இதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும். இந்திய மேலாதிக்கத்திற்கு - இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு சேவை செய்த அமைப்புகள் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, பிளாட் ஆகியவையாகும். இவைகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்த்த பிற அமைப்புகள் இன்றைய உள்நாட்டு யுத்தத்திலும் பிரேமதாச அரசுடன் சேர்ந்து கொண்டு ஈழ தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப் ஐப் பொறுத்தவரையில் இப்போது நடக்கும் யுத்தத்தை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான தனிப்பட்ட யுத்தமாகப் பார்க்கிறது. தனது அமைப்பு இந்த யுத்தத்தில் நடுநிலை வகிப்பதாகக் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பு இன்றைய யுத்தத்தில் தனித்து நின்று போரிடுவதற்கு இது ஒரு காரணமாகும். பிற அமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு சிதறுண்டு போய் விட்டன. இதன் காரணமாக விடுதலைப்புலிகள் தனித்து நின்று போரிடுவது ஈழத்தமிழின விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குச் சாதகமானதே தவிர பாதகமானதல்ல. விடுதலைப்புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் அவ்வமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார போக்கும், அதன் ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிச கொள்கையும் ஆகும்.

இதன் விளைவாகவே இன்றைய விடுதலைப் போரில் பங்காற்ற வேண்டிய பிற புரட்சிகர சக்திகளும், ஜனநாயகவாதிகளும் இதில் பங்கு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பரந்துபட்ட மக்களும் கூட ஜனநாயக மறுப்பின் காரணமாக (அமைப்பு ரீதியாக போராட முடியாமல்) அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டு, அவ்வமைப்புகளின் பலத்தை சார்ந்து போரிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தங்களின் விடுதலைக்காகப் போரிட முடியாமல், வெறும் பார்வையாளர் நிலையில் வைக்கப்படுகின்றனர். எந்தவொரு தேசிய விடுதலை யுத்தமும் ஒரு மக்கள் யுத்தமாகும். எனவே இக்கொள்கை ஈழத் தமிழினம் தேசிய விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குப் பாதகமான ஒன்றாகவும், சமரசத்திற்குப் பணிந்து போவதற்கு வாய்ப்பை உருவாக்கும் ஒன்றாகவும் இருக்கிறது."

மேலும் புலிகள் தனிநாடு கோரிக்கைக்காக ஊன்றி நிற்கிறார்கள் என்பதை எந்தப் பொருளில் கூறுகிறோம் பாருங்கள்.

"முன் கூறப்பட்ட காலப் பகுதியில், இலங்கை அரசை எதிர்த்த தமிழீழத் தேசிய இன உரிமைப் போராட்டத்தில் சமரசப் போக்குடைய, பாராளுமன்றவாத டி.யூ.எல்.எப் முதல் எல்.டி.டி.இ வரையிலான பல்வேறு வகைப்பட்ட அரசியல் சக்திகள் பங்குகொண்டன. ஆனால் இப்போது இலங்கை அரசை எதிர்த்து நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை எல்.டி.டி.இ (விடுதலைப்புலிகள் அமைப்பு) மட்டுமே தனியாக நடத்துகிறது. அன்று 1983 - 87 போராட்டத்தின் போது அதில் பங்கு கொண்ட அரசியல் சக்திகள் மற்றும் குழுக்கள் அனைத்தும் தனிநாடு கோரிக்கையை உறுதியாக ஆதரித்தவை அல்ல. டி.யூ.எல்.எப் அமைப்பு 1983 ஜூன் கலவரத்திற்கு முன்பே தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டது. எல்.டி.டி.இ யைத் தவிர பிற போராளி அமைப்புகள் தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பதில் ஊசலாட்டம் அல்லது கைவிடும் நிலையில் இருந்தவைதான்."

பு.ஜ. இதை எவ்வாறு திரித்துக் கூறுகிறது என்பதைப் பாருங்கள்.

"தேசிய இன விடுதலை யுத்தத்தில் புலிகள் மட்டுமே ஊன்றி நிற்கிறார்கள்" என்பது அப்பட்டமான பொய் - இரண்டு வகையில். முதலாவதாக, அதற்காக ஊன்றி நின்ற குழுக்களுக்கு, அவை சிறியவையானாலும், தடை விதித்து, அவற்றிலிருந்த போராளிகளை புலிகள் கொன்றதன் மூலமே, "புலிகள் மட்டுமே" என்கிற நிலைமை உருவாக்கப்பட்டது.

இரண்டாவதாக, இந்தக்காரியத்தை செய்ததன் மூலம் "தேசிய இன விடுதலை" யுத்தத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி சிங்களப் பேரின ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக துணை போனார்கள் புலிகள்.

சக போராளிகளை கொன்றதன் மூலம் போரில் ஊன்றி நிற்பவர்கள் புலிகள்தான் என்பதும், அதுவே புலிகளின் பலம் என்றும் சொல்வது (பார்க்க சமரன் வெளியீடு) எவ்வளவு கொடூரமும், வக்கிரமும் நிறைந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அடுத்து, தேசிய இன விடுதலை யுத்தத்தில் புலிகள் ஊன்றி நிற்பதாகக் கூறுவதும் அப்பட்டமான பொய். புலிகள் போடும் சொந்த குழு ஆதாயத்துக்கான நிபந்தனைகளை இந்திய, இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்கவில்லையே தவிர, மற்றபடி அவை ஏற்கப்படுமானால் தேசிய இன விடுதலைக்குத் துரோகமிழைக்கப் புலிகள் எப்போதுமே தயார்தான்! புலிகளின் வாக்குமூலப்படியே இந்திய உளவுப்படையான "ரா" விடம் இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பதில் மற்ற ஈழத் துரோகி அமைப்புகளுடன் புலிகளும் கலந்து கொண்டனர். ஈழ விடுதலை இயக்கத்தார் மீது பலவீனம் ஏற்படும் வகையில் "ரா" வின் போதனைகளைக் கேட்டு சிங்கள சிவிலியன் மக்களைக் கொன்றனர். சக போராளிகளைக் கொன்றனர். ஈழ தேசிய இன விடுதலை - சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு, தமது குழு உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கைக்காக ஈட்டுத் தொகை பேரம் நடத்தி, பலகோடி ரூபாய்க்கு எதிரிகளிடம் ஒப்பந்தம் போட்டு, முதல் தவணை கையூட்டும் பெற்றனர். இது போன்றதொரு பேரத்துக்குப் புலிகள் எப்போதுமே தயார் என்ற நிலையில் இன விடுதலை யுத்தத்திற்கு அவர்கள் ஊன்றி நிற்பதாக எப்படி ஏற்பது? இந்த விவரங்களை எல்லாம் மூடி மறைத்து விட்டுத்தான் மேற்படிக் கேள்விகள் எழுப்புபவர்கள் பிரசுரம் போடுகிறார்கள்." (பு.ஜ. 16 - 28 பிப்ரவரி 91, பக்கம் 10)

ஒன்று, நாம் விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டும் யுத்தத்தை தனியாக நடத்துகின்றது. இதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் பு.ஜ. பலம் என்பதை மட்டுமே சொல்வதாகச் சொல்லி பித்தலாட்டமாக திரித்துக் கூறுகிறது. பிற ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவதை நாம் விமர்சனம் செய்திருந்தும், அதை மூடி மறைத்துவிட்டு நாம் விமர்சனம் செய்யாதது போல் திரித்துக் கூறுகிறது.

இரண்டு, தனிநாடு கோரிக்கையை மேற் சொன்ன அமைப்புகள் கை விட்டுவிட்டன. இப்போதும் விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்லுகிறோம். தனி நாட்டு கோரிக்கையைப் பற்றி பு.ஜ. நிலை என்ன? அதைப் பற்றி சொல்லாமல் பு.ஜ. தேள் கொட்டிய திருடனைப்போல் மௌனம் சாதிப்பது ஏன்?

மூன்றாவது, "தேசிய இன விடுதலைக்குத் துரோகமிழைக்கப் புலிகள் எப்போதும் தயார்தான்" என்பது பு.ஜ வழக்கமாகக் கூறிவரும் ஆரூடம்தான். ஆனால் சிங்கள இனவெறி அரசுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும், இடையில் இப்போதும் ஈழ தனிநாடு கோரிக்கைக்காகத்தான் யுத்தம் நடக்கிறது என்பது உண்மை. பேரம் நடத்தி பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றனர் என்று பு.ஜ சொன்ன பிறகுதான் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து விடுதலைப்புலிகள் யுத்தம் நடத்தினர். அந்த யுத்தத்தில் "ஜனநாயகத்தை முன் நிபந்தனையாகக் கொண்டு" இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்களுடன் இணைந்து போராடலாம் என்று பு.ஜ. சொன்னது. இந்த யுத்தத்திற்கு முன்னாலும் விட்டெறிந்த காசுக்கு விலைபோனார்கள் என்றுதான் விடுதலைப்புலிகளைப் பற்றி பு.ஜ சொன்னது. இப்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அதைப்போல்தான் சொல்கிறது. இப்போது சொல்லுங்கள். உண்மைகளை மூடி மறைப்பது யார்? நாமா? பு.ஜ.வா?

அரசியல் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்நிலைப்படுத்தும் குதர்க்கவாதமும் பு.ஜ.விடம் தலை விரித்தாடுகிறது. தமிழீழம் தனிநாட்டுக்காக - தமிழீழத்தின் அரசியல் சுதந்திரத்துக்காக போராடுவோரை ஜனநாயகத்தின் பெயரில் கொச்சைப்படுத்தும் நிலைக்கு பு.ஜ தான் சென்றுவிடுகிறது.

தடைகளைக் கடப்போம்! ஒன்றுபட்டுப் போராடுவோம்!

பு.ஜ.வின் விமர்சனங்களுக்கு நமது நிலை பற்றிய விளக்கம் அளிப்பதும், பு.ஜவை விமர்சனம் செய்வதும் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஒன்றுப்பட்ட நடவடிக்கைக்கு அவசியமானது எனக் கருதியே இதை எழுதுகிறோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும், மக்கள் யுத்தக் குழுவின் ஆந்திர மாநில கமிட்டியின் மீதும், அதன் தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் திரள் அமைப்புகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை திரும்பப் பெறச்செய்வது புரட்சிகர சக்திகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையைக் கோருகிறது. மேலும் இது நம் அனைவரின் தவிர்க்க முடியாத கடமையாகவும் இருக்கிறது. எனவே தடைகளைக் கடந்து ஒன்றுபட்டு மக்களிடம் செல்வது அவசர அவசியமானதாகும். மக்கள் நம்மிடம் இதைத்தான் கோருகிறார்கள். தடைகளைக் கடந்து ஒன்றுபட்டு போராடுவோம். புலிகள் மீதும் மக்கள் யுத்தக் குழுவின் மீதும் நரசிம்மராவ் கும்பல் விதித்துள்ள தடைகளை திரும்பப் பெறச் செய்ய உறுதி கொள்வோம்.

மக்கள் யுத்தக் குழுவின் மீது தடை ஏன்?

ஆந்திர  மாநில அரசாங்கம் இ.க.க (மா.லெ)  யின் ஒரு பிரிவான மக்கள் யுத்தக் குழுவின் மீதும், அதன் தலைமையின் கீழ் இயங்கும் மக்கள் திரள் அமைப்புகள் மீதும் தடை விதித்திருக்கிறது. அவ்வமைப்பு இரயில் கவிழ்ப்பு நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும், அரசு அதிகாரிகளை கடத்திச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் காரணம் காட்டி அதை தடை செய்திருப்பதாக நரசிம்மராவ் கும்பல் கூறுகிறது. ஆந்திர மாநில அரசாங்கம் அவ்வமைப்பின் போராளிகளை மோதலில் ஈடுபட்டதாகச் சொல்லி கொன்று குவித்து வந்தது. தடா மற்றும் கருப்புச் சட்டங்களின் கீழ் அவ்வமைப்பின் எண்ணிலடங்கா செயல் வீரர்களைக் கைது செய்து வைத்துள்ளது. இதனால் மக்கள் திரள் அமைப்புகளின் அடிப்படை உரிமைகளை பறித்திருக்கிறது. மனித உரிமைக்காகப் போராடுவோரையும், பண்பாட்டுத் துறையில் பணியாற்றுவோர் மற்றும் பாடல் கலைஞர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது. மிகச் சாதாரணமாக ஜனநாயக முறையில் செயல்படக் கூடியவற்றையெல்லாம் கருப்புச் சட்டங்கள் மூலமும், அரசாங்க நடவடிக்கைகள் மூலமும் சட்ட விரோதமாக்கி விடுகிறது. பிறகு அச்செயல்கள் எல்லாம் சட்டவிரோதமானது என்று சொல்லி அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. இதுவரை அரசு செய்து வந்த சட்ட விரோதமான செயல்களுக்கெல்லாம் சட்ட வடிவம் தருவதற்காக இப்போது அந்த அமைப்புகளின் மீது தடை விதித்திருக்கிறது.

பெருகி வரும் பட்டினிச் சாவுகள், சமூக ஒடுக்குமுறைகள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நிலப்பிரபுத்துவ சாதி வெறியர்கள் தொடுத்துவரும் தாக்குதல், கந்து வட்டிக்காரர்களின் கொடுமை, முதலாளித்துவத்துக்கு முந்தைய பொருளாதார ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் காரணமாக கிராமப்புற உழைக்கும் மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுகின்றனர். அவர்களை எல்லாம் அமைப்பு ரீதியாக திரட்டுவதை தடுத்து நிறுத்தும் பொருட்டு ஆந்திர மாநில அரசாங்கம் இந்த தடையை ஒரு ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஒரு புரட்சிகர அமைப்பை தடை செய்திருப்பது ஏதோ  ஒரு  தீவிரவாத  அமைப்பின்  மீது தடையாக பார்ப்பது நாட்டில் நிலவும் சூழ்நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டதாக ஆகாது. தான் அமல்படுத்தி வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகள், பிற்போக்கு அரசியல்கொள்கைகள், இன ஒடுக்குமுறைக் கொள்கைகள், விஸ்தரிப்புவாதக் கொள்கைகளின் விளைவாக அரசியல் பொருளாதார நெருக்கடி ஆழப்படும் என்பதை நரசிம்மராவ் கும்பல் உணர்ந்திருக்கிறது. ஆகவே அது பாசிச ஆட்சி முறையை நோக்கி பயணம் செய்ய தயாராகி வருகிறது. அதற்கான வெள்ளோட்டம்தான் ஆந்திர மாநில மக்கள் யுத்தக் குழுவின் மீதும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும் நரசிம்மராவ் கும்பல் விதித்துள்ள தடைகள். இத்தடைகளை திரும்பப் பெறச்செய்வது அனைத்து ஜனநாயகவாதிகளின் கடமையாகும். அனைத்து ஜனநாயக சக்திகளும், ஆளும் வர்க்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்குகளை எதிர்த்துப் போராடுவதில் மக்கள்யுத்தக் குழுவின் செயல்தந்திரங்களும், நடைமுறைப் பணிகளும் அனைத்து புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதே அது புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும். இதை மக்கள்யுத்தக் குழு உணர்ந்து அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒன்றுபடுவதற்கு முன்வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இத்தடைகளை அனுமதிப்பது அரசு பயங்கரவாதச் செயல்களை அது மேலும், மேலும் நாடுவதற்கு இடமளிப்பதாகும், ஆகையால் விடுதலைப்புலிகள், ஆந்திர மக்கள் யுத்தக் குழுவின் மீதான தடைகளை திரும்பப்பெறு என குரல் கொடுக்கும்படி அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

* விடுதலைப்புலிகள், மக்கள் யுத்தக்குழு மீதான தடை பாசிசத்திற்கான பயணமே!

* விடுதலைப்புலிகள் மீதான தடையை திரும்பப் பெறு!

* ஈழ விடுதலைப் போரை ஆதரிப்போம்!

* ஆந்திர மக்கள் யுத்தக் குழுவின் மீதான தடையைத் திரும்பப் பெறு!

* விவசாயப் புரட்சி இயக்கம் வெல்க!

- ஏஎம்கே

ஜூலை -1992

(ஏஎம்கே தேர்வு நூல்கள் – தொகுதி 2 – தேசிய இனப் பிரச்சனை & மொழி - நூலிலிருந்து)